பக்கங்கள்

சனி, 10 மார்ச், 2018

தந்தை பெரியார் ஆங்கிலத்தை போற்றித் தமிழைத் தூற்றினாரா?


“ஓ, தமிழனே! தமிழன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள். ஆரியக் கொடுமையிலிருந்து தன்னை விடுவிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டிருக்கிறாள். தாய் நன்றி கொன்ற மகனும், தாய்ப் பணிக்கடமை கொன்ற மகனும் மனிதனாவானா?’’

 (குடிஅரசு  29.8.1937)

“தமிழன்னை மானபங்கம். தமிழ்த்தாயின் துகிலை (சேலையை) ஆச்சாரியார் உரிகிறார். தமிழர்கள் ஆதரவால் துகில் (துணி) வளர்ந்து கொண்டே போகிறது. உண்மை தமிழர்களே என்ன செய்யப் போகிறீர்கள்?’’
 (குடிஅரசு  19.12.1937)

“நம் தமிழ்த்தாய் தமிழுணர்வுக் குறைவால் வருந்திக்கொண்டிருக்கும்போது, அயல்நாட்டினனான இந்தி என்னும் பெண்ணை அழைத்து வந்து கட்டாயமாக நுழைப்பதைத் தமிழ்த் தாயின் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.’’
 (குடிஅரசு  30.11.1938)

மொழியை பெண்ணாக, தாயாக, சேலை உடுத்திக் கொண்டிருப்பதாக உருவகப்படுத்திப் பார்ப்பது பெரியாருக்கு உடன்பாடில்லாத செயல்கள் என்றாலும், தமிழ்மொழியின் பாதுகாப்புக்காக வேண்டி, தமிழரிடையே உணர்ச்சி ஊட்டுவதற்காக, இவற்றைக் ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியிட்டார். 
தமிழ் மொழிக்காக அவர் பகுத்தறிவு பார்வையைக்கூட சற்று தள்ளி வைத்தார் என்றால் இது பெரியாரிடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று. எதற்கும் சமரசம் செய்து கொள்ளாத பெரியார் தமிழுக்காக இதைச் செய்தார் என்னும்போது, அவர் தமிழ்மீது கொண்ட பற்றுக்கு வேறு என்ன சான்று வேண்டும்.

அவர் தமிழைப் பழித்தது, திட்டியது, கடுமையாக விமர்சித்தது எல்லாம் தமிழை வெறுத்ததல்ல. தமிழ் நன்றாக வர வேண்டும் என்பதற்காக. பாசமுள்ள பிள்ளையைத் தாய் திட்டுவதில்லையா? உன்னைப் பெற்றதுக்கு ஒரு கல்லைப் பெற்றிருக்கலாம், நீ ஏன் மண்ணுக்குப் பாரமாய் இருக்கிறாய்?, செத்துத் தொலையேன்! என்கிறாள் என்றால் பிள்ளை நன்றாக வர வேண்டும் என்ற பாசத்தால், பற்றால், வெறுப்பால் அல்ல.

தமிழில் காலத்திற்கேற்ற கருத்தேற்றம் இல்லை, ஆக்கங்கள் இல்லை, நடைமுறைக்கு வாழ்க்கைக்கு வேண்டிய, முன்னேற்றத்திற்கு, தொழில் வளர்ச்சிக்கு, அறிவியல் வளர்ச்சிக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு, வேலை வாய்ப்பிற்கு வேண்டியவை எழுதப்படவில்லை என்பதாலும், அது காலத்திற்கேற்ப பயன்படும் தகுதியுடை யதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான் தமிழை விமர்சித்தார்.

தன் நிலைப்பாட்டை தந்தை பெரியார் அவர்களே வெளிப் படையாக வெளியிட்டும் உள்ளார்.

“தாய் பாஷை (மொழி) என்பதற்காகவோ, நாட்டுப் பாஷை என்பதற்காகவோ, எனக்குத் தமிழ்ப் பாஷையின்மீது எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் தனிப் பாஷை என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை என்பதற்காகவோ, அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்றில்லை. குணத்தினாலும், குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.
எனது நாடு, எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால், உதவும்படி (பயன்படும்படி) செய்ய முடியாது என்று கருதினால், உடனே விட்டுவிட்டுப் போய் விடுவேன். அதுபோலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்திற்கு, எனது மக்கள் முற்போக் கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால், உடனே அதனை விட்டுவிட்டுப் பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்... அதேபோல் மற்றொரு பாஷை (இந்தி) நம் நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டம் அறிந்து, சகிக்க முடியாமல் எதிர்க்கிறேனே ஒழிய, புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.’’

தமிழ் இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும் சுதந்திரத்தை அளிக்கக் கூடியதும், மானத்துடனும், பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்வை அளிக்கக் கூடியதும் என்பது என் அபிப்பிராயம்.

ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழில் இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம். எல்லாம் இல்லையென்றாலும், அநேக இந்திய பாஷைகளைவிட அதிகமான முன்னேற்றத்தைத் தமிழ் மக்களுக்கு அளிக்கக்கூடிய கலைகள், பழக்கவழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன்.’’
(குடிஅரசு  06.08.1939)

இப்போது சொல்லுங்கள், இந்திய மொழிகளிலே உயர்ந்தது தமிழ் என்று கூறும் பெரியாரா தமிழைக் கேவலப்படுத்தியவர்? தமிழில் இன்னும் வேண்டும், காட்டுமிராண்டி கால மொழியாகவே அதைக் காப்பாற்றி வருவதால் பயனில்லை என்பதை உணர்த்தவும் தமிழ்மீதுள்ள பற்றாலுந்தான் அவர் தமிழை விமர்சித்தார் என்பதை இப்போதாவது தமிழ் மக்கள், இளைஞர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்!

ஆங்கிலத்தை ஏற்று தமிழைப் புறக்கணித்தாரா?

பெரியார் கருத்தை விமர்ச்சிக்கின்ற எவரும் அவர் உள்ளம் அறிந்து, அவர் விருப்பம், நோக்கு, ஆதங்கம் புரிந்து விமர்சித்தால் இந்தக் குற்றச்சாட்டுகள் வராது. ஆரியப் பார்ப்பனர்கள் ஆங்கிலம் சரளமாகக் கற்று உயர் பதவிகளில், அதிகாரப் பதவிகளில் இருக்கையில் தமிழர்கள் அப்படி இல்லையே! தமிழர்கள் உயரே வரத் தடையாக இருப்பது எது? ஆங்கில அறிவின்மைதானே. எனவே, எப்பாடுபட்டவாவது தமிழன் ஆங்கில அறிவு பெற்று பார்ப்பானுக்கு நிகராக உயர வேண்டும் என்ற வேட்கையில், வெறியில் பெரியார் சொன்ன உச்சக்கட்ட உணர்ச்சி வார்த்தைகள் அவை. இங்கு உணர்வுதான் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமேயன்றி, வார்த்தைகள் அல்ல.

தேவாரமும், திருவாசகமும், குமரேச சதகமும், விவேக சிந்தாமணியும் படித்துவிட்டால் தமிழன் எப்படி ஆரியப் பார்ப்பனர்களோடு போட்டியிட முடியும் என்ற நடைமுறைச் சிந்தனையின் விளைவே பெரியாரின் மேற்கண்ட கருத்துக்கள். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஆங்கிலம் அறிந்தவன் தான் மேல்நிலைக்கு வருகிறான். என்னதான் தகுதியும் திறமையும் இருந்தாலும், ஆங்கில அறிவு இல்லையென்றால் அன்றைக்கும் புறக்கணிக்கப்பட்டார்கள்; இன்றைக்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

ஆரியப் பார்ப்பன பெண் ஜெயலலிதா ஆங்கிலப் பள்ளியில் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தாலும், ஆங்கிலம் பேசத் தெரிந்ததால் அவர் அனைத்து இடங்களிலும் நிமிர்ந்து நிற்கிறார். ஆனால், தமிழ் உணர்வின் மேலீட்டால், தன் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைத்தார் கலைஞர். அதன் விளைவு மத்திய அமைச்சர் அழகிரி நாடாளுமன்றத்தில் கூனிக் குறுகுகிறார். ஸ்டாலின் டில்லி செல்லும்போது சிரமப்படுகிறார். ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிறது.
இந்த நிலை இருக்கக் கூடாது என்பதற்குப் பெரியார் சொன்ன கருத்துக்களே மேற் கண்டவை. இன்றைக்குத் தமிழ் இளைஞர்கள் உலகம் முழுவதும் சாதனை படைப்பது ஆங்கில அறிவுடன்கூடிய கணினி அறிவும், பொறியியல் அறிவுமேயாகும். அவர்கள் ஆங்கிலம் கற்க வில்லை என்றால் எதையும் சாதிக்க முடியாது.

ஆங்கிலம் அறிந்ததால், இன்றைக்குச் சாதனைப் படைத்து, உயர் பதவியில், உயர்நிலையில் தமிழர் வாழ்வது மட்டுமல்ல; ஆரியப் பார்ப்பனர்களை வீழ்த்தி அவர்களைத் தாண்டி மேலெழுந்து வருகின்றனர். இன்றைக்குச் சட்டத் துறையானாலும், மருத்துவம், பொறியியல் போன்ற மற்ற துறைகளிலும், திரைத்துறை, இசைத்துறை என்று எதை எடுத்தாலும் தமிழர்கள் உலக அளவில் சாதிப்பதற்கு ஆங்கில அறிவு மிகவும் உதவுகிறது. இதை பெரியாரும் நாமும் மட்டும் சொல்லவில்லை. பாவாணரும் பெருஞ்சித்திரனாரும் சொல்கிறார்கள்.

தனித்தமிழ் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்ட பெருஞ்சித்திரனார், 1970இல் தான் எழுதிய கோடரிக் காம்புகள் என்ற கவிதையில் ஆங்கிலம் கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்
தம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க!
தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும்
அமிழ்தெனக் கற்க ஆக்கம் பெறுகவே!
என்கிறார்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் இருமொழிக் கொள்கையை ஏற்றார். உலக அறிவு பெற, அறிவியல் அறிவு பெற, ஆங்கில அறிவு வேண்டும் என்றார். இந்தியா முழுமைக்குமே தாய்மொழியும் ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை ஏற்புடையது என்றார்.
            (தொடரும்)
-உண்மை இதழ்,1-15.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக