திராவிட நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அத்தனைப்பேரும் பித்தலாட்டக்காரர்கள், வஞ்சனைக்காரர்கள்; தமிழுக்கு, தாய்நாட்டு மொழிக்குத் துரோகிகள் என்பதற்கு அவர்கள் சுதந்திரம் வருமுன்பே இந்தியை ஆதரித்ததும், வரவேற்றதும், இந்த நாட்டில் பள்ளிகள் வைத்துப் பரப்பியதும் - அரசியலின் மூலம் இந்திக்கு ஆக்கமும் ஆதரிப்பும் செய்ததான காரியங்களின் மூலமே விளங்கவில்லையா? ஆச்சாரியார் தன்னைத் தமிழர் லிஸ்டில் சேர்த்துக்கொள்கிறார். அவர் கோஷ்டி பத்திரிகாசிரியர்கள் தங்களைத் தமிழர் கோஷ்டியில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஒருகாலத்தில், இப்போது அய்க்கோர்ட் ஜட்ஜுகளில் பச்சைப் பார்ப்பனராக இருக்கும் ஜஸ்டிஸ் ஏ.எஸ். பஞ்சாபகேச அய்யர் அவர்கள் என்னைப் பார்த்து, நாயக்கரே! நான் ஆரியனா? திராவிடனா? என்னைப் பார்த்துச் சொல்லுங்கள். நீர் என்னையும் ஆரியனில் சேர்த்துக் கொள்ளுகிறீரே! என்று கேட்டார். காலஞ்சென்ற ஸ்ரீனிவாசய்யங்கார் அவர்களும் அப்படியே கேட்டார். கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலிய பார்ப்பன ஆசிரியர்களும் தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று கிளர்ச்சி துவக்கி, தமிழர் மாநாடு கூட்டினார்கள். இந்தக் கூட்டத்தார்தானே இன்று இந்தியைத் தேசிய (தேச) மொழியாக்கவும், இந்திய அரசியல் (ஆட்சி) மொழி ஆக்கவும் பாடுபடுகின்றனர்; சூழ்ச்சிகள் பல புரிகின்றனர்; எதிர்ப்புக் கிளர்ச்சியை அடக்க அண்டர் கிரவுண்ட் வேலை செய்கின்றனர்.
கம்யூனிஸ்டு கட்சியில் பார்ப்பனர் இருந்தாலும், சோஷியலிஸ்ட் கட்சியில் பார்ப்பனர் இருந்தாலும், தமிழ் இலக்கியக் கட்சியில் பார்ப்பனர் இருந்தாலும் இன்னும் எந்தக் கட்சியில் - எந்தக் கூட்டத்தில் - எந்த வேடத்தில் பார்ப்பனர் இருந்தாலும் எல்லோரும், இந்தியைத் தேசமொழியாக, ஆட்சி மொழியாக இருக்க வரவேற்பார்களே ஒழிய, -வரவேற்கிறவர்களாக இருக்கிறார்களே ஒழிய எதிர்ப்பவர்களைக் காண்பது அரிது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானாலும், பார்ப்பானுக்குச் சென்னை இராஜ்யம் - திராவிட தேசம் சொந்த நாடல்ல, தாய் நாடல்ல என்பதோடு - தமிழ் மொழி சொந்த மொழியல்ல, தாய்மொழியும் அல்ல. அது மாத்திரமல்ல; தமிழை நீச பாஷை என்று சொல்லும் மகா பாவிகளும் பார்ப்பனர்களில் இன்றும் உண்டு; அதற்கேற்ற ஆதாரங்களும் உண்டு என்று சொல்லவும் கூசமாட்டேன். ஆகவே, இந்தி எதிர்ப்பு ஒரு தேசிய(தேச)ப் போராட்டம்; ஒரு தேச மொழி(தமிழர்)ப் போராட்டம் என்பதைச் சுத்த (கலப்படமற்ற) தமிழ் (திராவிட) மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து தமது கடமையைச் செய்வார்களாக! (விடுதலை, தலையங்கம், 24.7.1952)
- உண்மை இதழ், 1-15.2.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக