பக்கங்கள்

திங்கள், 19 மார்ச், 2018

தமிழை தந்தை பெரியார் இழிவாய்ப் பேசினாரா ?


“மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருந்து வருகிறது. மேலும், இச்சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும், பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும், சிலவித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன’’ என்று பெரியார் குறிப்பிடுகிறார்.

தமிழ் எழுத்துகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய தந்தை பெரியார் அதற்கான தேவைகளையும், காரணங்களையும் பற்றிக் குறிப்பிடும் போது, “தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகு வாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழி யாக்கப்பட வேண்டும். இன்றைய தமிழ் மிகவும் பழைய மொழி, வெகுகாலமாகச் சீர்திருத்தம் செய்யப்படாதது, மற்ற மொழிகளைப் போல திருத்தப்படாதது என்பதான இவைகள் ஒரு மொழிக்குக் குறையாகுமே தவிர, பெருமை யாகாது என்பேன். ஏன்? பழமை எல்லாம் அநேகமாக மாற்றமாகி இருக்கிறது; திருத்தப்பட்டிருக்கிறது. மாற்றுவதும், திருத்துவதும் யாருக்கும் எதற்கும் இழிவாகவோ, குற்றமாகவோ, ஆகிவிடாது. மேன்மை யடையவும், காலத்தோடு கலந்து செல்லவும், எதையும் மாற்றவும் திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய்ப் பாட்டி காலத்தில், பண்டைக் காலத்திய பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால், சுழிபட்டுப் போவோம். பின்தங்கிப் போவோம். மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க் கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். சுலபமாகத் தமிழ்மொழியைக் கற்றுக் கொள்வதற்காகவும், சுலபமாக அச்சுக் கோர்க்கவும், டைப் அடிக்கவும், தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்படுவது நலம் என்று நினைக்கிறேன்.

ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணம் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு எழுத்துகள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.



தமிழ் எழுத்துக்களின் வேறுபட்ட வடிவங்களை யுடைய எண்ணிக்கை நூறுக்கு மேலாக இருப்பதைக் குறைத்து 54 எழுத்துக்களுக்குள் அடக்கி விடலாம் என்பதை விளக்கிக் காட்டி, இன்றைய தமிழ் எழுத்துக்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப் பற்றிப் பலருக்கும் அபிப்பிராயம் இருந்தாலும் எவரும் தைரியமாய் முன்வராமலே இருக்கின்றார்கள். இவ்வளவு பெரிய காரியத்துக்கு பாஷை ஞானம், இலக்கண ஞானம், பொதுக் கல்வி இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும், பாஷா ஞானமும் இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்காவிட்டால் என்ன செய்வது? அதனால் நான் செய்கிறேன்’’ என்று தந்தை பெரியார் கூறுகின்றார்.



தந்தை பெரியார் அவர்கள் மேலும் விளக்குகையில், சாதாரணமாகத் தமிழ் உயிர் எழுத்துக்களில் ஐ, ஔ ஆகிய இரண்டு எழுத்துக்களைக் குறைத்து விடலாம். இந்த இரண்டும் தேவையில்லாத எழுத்துக்கள். மேலும், இவை சுட்டெழுத்துக்களே ஒழிய, தனி எழுத்துக்கள் அல்ல. எவ்வாறு எனில், ‘ஐ’ என்பதை அய் என்றும், ஔ என்பதை அவ் என்றும் எழுதலாம் என்று பெரியார் விளக்குகிறார்.





மேலும் நடைமுறையில் இருந்த

 முதலிய எழுத்துகளை ணா,ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ,னோ என்றவாறு மாற்றம் செய்து தனது பத்திரிகைகளான ‘விடுதலை’, ‘குடிஅரசு’, ‘உண்மை’ போன்ற இதழ்களில் 1935ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தினார். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினையொட்டி தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 19.10.1978 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாணை பிறப்பித்துப் பெருமை தேடிக் கொண்டார். ஆக, தமிழில் பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தது தமிழ் வளர்ச்சிக்காகவே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றது ஏன்?

“தமிழ் மொழியானது ஏன் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுகின்றேன்? எதனால் சொல்லுகிறேன் என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்று நினைத்து அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தைப் பற்றிக் கூடச் சிந்திக்காமல் பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் தமிழ் மொழி மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மொழி என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனையாய்ச் சொல்லிப் பேசுகிறார்கள்.

நானும் ‘தமிழ் காட்டுமிராண்டி’ மொழி என்று அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்லுகின்றேன். பிரிமிட்டிவ் (றிக்ஷீவீனீவீtவீஸ்மீ) என்றால் அதன் தத்துவம் என்ன? பார்பேரியன், பார்பேரியனிசம் என்றால் அதன் பொருள் என்ன? 3000, 4000 ஆண்டுகளுக்கு முன் என்பது பிரிமிட்டிவ், பார்பேர்யனிசம் என்பதற்கு அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பதற்கு என்ன பேதம் கற்பிக்க முடியும். ‘நாகரிகம் அடையாத கூட்டம் என்றுதானே பொருள்’ என்று விளக்குகிறார்.

தமிழ்ப்புத்தாண்டு கதை சொல்லுகிறார்கள். 60 ஆண்டுகள் என்று பிரபவ, விபவ, குரோதி, விரோதி ஆண்டுகள் என்று சொல்லுகின்றார்களே. இந்த 60 ஆண்டுகளை எடுத்துப் பார்த்தால் ஒரு ஆண்டாவது தமிழ்ச் சொல் பெயர் உண்டா? தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லுகிறார்கள். தமிழர் ஆண்டு என்று சொல்லுகிறார்கள் வெட்கப்பட வேண்டாமா? தமிழ் வருடங்கள் நாரதருக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தது என்று ஏற்பது காட்டுமிராண்டித்தனமல்லவா?
வெறும் புராணங்களும் இதிகாசங்களும் மட்டும் கொண்ட ஒரு மொழி வளர்ச்சி அடையாது, அறிவியல் கருத்துக்களை, உலக மாற்றங்களை, பொருளாதார நடைமுறைகளை உடனுக்குடன் அறிய முடிவெடுக்க ஆங்கில அறிவு கட்டாயம். ஆங்கிலத்திலுள்ள காலத்துக்கேற்ற, அறிவுள்ள உயரிய கருத்துகளை தமிழுக்குக் கொண்டு வரவேண்டும்’’ என்பதே பெரியார் கொள்கை. தமிழும், தமிழ்ப் புலவர்களும் எப்படி காலத்திற்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பெரியார் அளவுக்கு அதிக அக்கறையோடு கூறுகிறார்.

“இந்த நாட்டுத் தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள ஏதாவது சாதனமிருக்கிறதா?’’ 

பள்ளியில் படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம் என்றால் அங்கு தமிழர்களைப் பற்றி ஒரு சேதியும் இல்லை. எவ்வித பாடப் புத்தகமும் இல்லை. அய்யர்  பிராமணன் போன்ற வார்த்தைகள் காணப்படு கின்றனவே அன்றி, “தமிழர் - திராவிடர்’’ என்ற வார்த்தைகளுக்கு அங்கு இடம் கிடையவே கிடையாது. மேல் வகுப்புக்கு வந்தால் தமிழ்நாட்டு சரித்திரம் இல்லை. இராமாயணம், மகாபாரதம், அசோகன், முஸ்லீம், வெள்ளையர் ஆட்சியும்தான் விளக்கப்படுகிறதே தவிர திராவிடர் தமிழர் என்கிற ஆட்சியைப் பற்றி காண்பது மிகவும் அருமை. அப்படி ஏதாவது காணப் பட்டாலும் அது பெரும் பித்தலாட்டமும் மோசடியுமாய் இருக்கும்.

ஆகவே, நமது (தமிழ்) பிள்ளைகள் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள வழியில்லை. ஆரியருக்குமுன் தமிழன் என்ன சமயத்தவன் அவன் கடவுள் எப்படிப்பட்டது. அவன் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்ற சரித்திர ஆதாரம் ஏதும் இல்லை. தமிழர்கள் காட்டுமிராண்டியாக இருந்தார்கள் என்பதற்கே ஏராளமான ஆதாரங்கள் கற்பிக்கப் படுகின்றன. நம் பிள்ளைகளுக்கு நம்மைப் பற்றி கீழ் வகுப்பிலிருந்து தெரிந்து கொள்ள வழி செய்தால் ஒழிய, எப்படி அவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!


(தொடரும்...)
-  நேயன்


- உண்மை இதழ், 1-15.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக