ஆபாசப் புராணக்கதை பாரீர்!
அபிதான சிந்தாமணி நூலில், ‘வருஷம்‘ எனும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வருஷம்-1. ஒரு முறை நாரதமுநிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன, அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என, உடன்பட்டத் தான் (60,000) வீடுகளிலும் பார்த்து இவர் இல்லா வீடு கிடைக்காத காரணத்ததானால் கண்ணனிடம் வந்து அவர் திருமேனி மயல்கொண்டு அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணங்கொண்டேன் என்றனர். கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ்செய்ய ஏவ, முநிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர். இவளுடன் கண்ணன் அறுபது வருஷம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்.
2. (60). பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கிரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இருபதும் உத்தம வருஷங்கள். சர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள். பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன, அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம்.
சித்திரை அல்ல தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு
எந்த ஒரு கருத்தாக இருந்தாலும், கூறப்பட்டது எந்த காலகட்டமாக இருந்தாலும், அய்யத்துக்கு இடமில்லாமல் நிரூப்பிக்கப்பட்டால்தான் அது அறிவியல் ஆகிறது. எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் பகுத்தறிவின் துணைகொண்டு ஆராயும்போது, சரியென நிரூபணம் ஆனால்தான் எந்த காலக்கட்டத்துக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கும்.
ஒரு கருத்து ஏதோ ஒரு யுகத்தில் கூறப்பட்டது என்றும், அப்போது அப்படியே நடந்தது என்றும் கூறி, இப்போது கேள்வி கேட்டால் விளங்கிக்கொள்ளவே முடியாது, அப்படியே ஏற்று அதை நம்ப வேண்டும் என்று கூறுவது முட்டாள்தனம் மட்டுமல்லாமல் அயோக்கியத்தனமும் ஆகும்.
ஆகவே, நம்முடைய அன்றாட வாழ்வில் அறிவியலால் பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், பழைமை என்கிற பெயரால் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றை இன்றைய தலைமுறையினரால் ஏற்க முடியுமா?
முன்பே கூறியதைப்போல், மனிதன் பகுத்தறிவு, நாகரிகத்துடன் வாழத் தலைப்பட்டபோது காலத்தை உணர்ந்தான். அதுபோன்றே தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி, தமிழர்களின் பண்பாட்டை சிதைக்கின்ற கருத்துகள் அழிந்தொழிந்து, தமிழர்கள் மானத்துடன், அறிவு சார்ந்த பண்பாட்டுடன் எந்த ஒன்றையும் பின்பற்ற வேண்டும் என்பதற்கேற்ப, திருவள்ளுவர் ஆண்டையே தமிழ் ஆண்டாகவும், தை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாகவும் அறிவித்தனர்.
தமிழ் அறிஞர்கள் கூடி அறிவித்த தமிழ்ப்புத்தாண்டு
இந்த 60 ஆண்டு சுழற்சி முறையால் தமிழ்மொழி, மரபு, மாண்பு, பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும், இழிவும் எண்ணிப் பார்த்து, சிந்தித்து, உணர்ந்து, தெளிந்த தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலைஅடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.
இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்று முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களை வினவினேன். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும் என்று விளக்கம் தந்தார்.
இந்த முடிவு செய்தவர்கள் தலைமையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் கா. நமச்சிவாயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.
1921ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டில் எடுத்த முடிவை 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்துவ ஆண்டுடன் 31அய்க் கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். 1935+31 = 1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)
திருவள்ளுவர் ஆண்டுக்கு, முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். புதன் - அறிவன்; சனி - காரி.
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
புரட்சிக்கவிஞர்
தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டுமுதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு குறித்து விழிப்பைப் பெற்றிட குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் ஆணை
கலைஞர் முதல்வராக இருந்தபோது, 23.1.2008 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிப்பு வெளியானது. கலைஞர் அரசாணையையும் வெளியிட்டு, தமிழர்கள் தன்மானத்துடன், தமிழ்ப் பண்பாடு காத்து வாழ வழிவகை செய்தார். ஆகவே, தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதையே தமிழினம் என்றும் பின்பற்றிட வேண்டும் அல்லவா? கடவுள் என்று கூறப்படுகின்ற கிருஷ்ணமூர்த்திக்கு உல்லாசபுரிக்காக 60ஆயிரம் கோபிகைகளாம். நாரதன் சென்று பார்க்கும் 60ஆயிரம் வீடுகளிலும் கோபியருடன் கூடியிருந்தானாம்.
சாதாரண மனிதரைப் போன்று ஆசை, விருப்பு, வெறுப்புகளுக்கு கடவுளாகிய கிருஷ்ணமூர்த்தி இருக்கலாமா? நாரத முனிவன்(?)தான் அப்படி இருக்கலாமா? மனிதரைவிட பலமடங்கு கட்டுக்கடங்காத இச்சைக்கு ஆளானவன் 60ஆயிரம் கோபியர்களிடம் கூடியே இருந்தவனுக்கு பிள்ளைகள் தோன்றியதா? ஆனால், ஆணான நாரதனின் பெண் உருவத்துடன் 60 ஆண்டுகள் கூடி 60 வருஷங்களைப் பெற்றதெப்படி?
பற்றற்றவனாக கடவுளோ, கட்டுப்பாடான துறவுநிலை யிலும் முனிவர்கள், ரிஷிகள் இருந்தது கிடையாது. ஆக, கடவுள், முனிவர்கள், ரிஷிகள் என எவரும் சொல்லிக்கொள்ளும்படியான ஒழுக்கசீலர்கள் கிடையாது என்பது புராணங்களின்மூலமாக தெரிய வருகிறது.
மனிதனை விட பலமடங்கு ஆற்றல்(காம இன்பத்தில்?) மிக்கவன் கடவுள், முனிவன், ரிஷி என்று கூறுவதுதான் அதன் நோக்கமா?
சிற்றின்பம், பேரின்பம் என்கிற வியாக்கியானங்கள் எல்லாம் வெறும் ஹம்பக்தானா?
இதுபோன்ற கதைகளைக் கூறிக்கொண்டு, இன்னமும் இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறலாமோ?
கிருஷ்ணன் நாரதன் லீலையால் உருவானதாகக் கூறப்பட்ட 60 வருஷங்களின் பெயரில்தான் தமிழ்ப்பெயர் ஒன்றாவது உண்டா? இல்லையே. அதிலிருந்தே தமிழர்தம் கலாச்சாரத்துக்கும், பண்பாட்டுக்கும் தொடர்பில்லாததே இந்த 60 வருஷங்கள் என்பது தெளி வாகிறது அல்லவா?
அறிவுக்கு பொருத்தமற்ற கட்டுக்கதைகளையே பக்திமுலாம் பூசி விழாக்கள், பண்டிகைகள் என்று கூறிக்கொண்டு அதை தொடர அனுமதிக்கலாமா? சிந்திக்க வேண்டாமா?
இதுபோன்ற கட்டுக்கதைகள் யாவும் நாமே கூறுவதன்று. புராணங்களில் கூறப்பட்டவற்றை சுட்டிக்காட்டும்போது, ஆகா, எங்களை இப்படி இழிவு படுத்தலாமா? இதுபோல் மற்ற மதத்தாரை கூறுவார்களா? என்று கேட்டால் அதைவிட முட்டாள்தனமும், பச்சை அயோக்கியத்தனமும் வேறு உண்டா?
அதே அபிதான சிந்தாமணி நூலில் ‘வருஷம்‘ எனும் தலைப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
3. பூமி தன்னினும் பல மடங்கு பெரிய சூரியனை ஒரு முறை சுற்றிவருவதற்கு (365 1/4) நாட்கள் ஆகின்றன. அதுவே வருஷம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தேவை அறிவியல் சிந்தனை
மனிதன் பகுத்தறிவு, நாகரிகத்துடன் வாழத் தொடங்கிய போது காலத்தைக் கண்டறிந்தான். சூரியனை பூமியே சுற்றி வருகிறது. பூமி தட்டையானதல்ல, கோள வடிவில் உள்ளது.
“அண்டத்தில் எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன், நெருப்புக் கோளமாக ஆனது. இந்த நெருப்புப் பிழம்பு பல மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு விட்டம் கொண்டதாக அமைந்து, சில மில்லியன் டிகிரி வெப்பத்தைப் பரப்பியது. இவ்வளவு வெப்பத்தையும் தாங்க முடியாமல் பேரொலி யுடன் வெடித்துச் சிதறியது.
சிதறிய துண்டம்
நெருப்புக் கோளம் பற்றி எரியும்போது, அதில் வெடித்துச் சிதறிய துண்டங்கள் அண்டம் முழுவதும் தூக்கி எறியப் பட்டன. இத்துண்டங்கள் தொடர்ந்து எரிந்தன. பெருங் கோளத்திலிருந்து பிரிந்த பின்னரும் இவை தொடர்ந்து எரிந்ததோடு, அவை தங்களுக்கெனத் தனி மாறுதல்களையும், அச்சுகளையும் கொண்டன. வெடித்துச் சிதறிய பின்னர் ஒவ்வோர் எரியும் துண்டமும் நட்சத்திரங்களாகவும், நட்சத்திரக் கூட்டங்களாகவும் ஆயின. இவற்றுடன் நீங்கள் இரவில் காணும் நட்சத்திரங்கள் பல மில்லியன் சூரியன் களாகும்.
4.
6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடக்கக் காலச் சூழல்- நீராவி, மீத்தேன், ஹைட்ரஜன், அம்மோனியா ஆகிய வாயுக்கள் மிகுந்த அளவு பெற்று இருந்தது.
சி
ல மில்லியன் ஆண்டுகள் கடந்த பின் பூமி குளிரத் தொடங்கியது. நீராவி நீராக மாற்றம் பெற்று நீர்ப்பரப்பு கடலாக மாறியது. ஏராளமாக எரிமலையும், பலமான இடியுடன் கூடிய பெருங்காற்றும் இருந்தன-சூரியனது வெப்பத்தாலும், எரிமலையாலும் கடலின் நீர்ப்பரப்பு ஆவியாகி மேகங்களாகப் படிந்து, பின் மழையாகப் பொழிந்தது. (- கடவுள் படைப்பா? நூல்)
ஆ
க, பெரு வெடிப்பு ஏற்பட்ட போது சிதறிய நெருப்புத்துண்டமாக இருந்து, சில மில்லியன் ஆண்டு காலத்துக்குப் பிறகு குளிர்ந்து உயிர்கள் வாழ்வதற்கேற்ற தட்ப,வெப்பத்துடன், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை ஒருங்கே கொண்டுள்ளது. பூமி நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது என்று நிறுவியுள்ளது அறிவியல். அறிவின் துணைகொண்டு சிந்திப்பவர் எவரும் அறிவியல் கருத்தை ஏற்றே தீரவேண்டும். ஏனென்றால், அறிவியல் கருத்து உண்மையானது. அறிவியல் அறிஞர்களால் நிரூபிக்கப் பட்டதாகும்.
பு
ராணங்களின்படி, பூமி தட்டையானது, அசுரன் பாயாக சுருட்டிக்கொண்டு கடலில் போய் ஒளிந்துகொண்டான் என்று கட்டுக்கதை அவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதையும் மீட்பதற்கு பகவான் கிருஷ்ணன் அவதாரம் எடுத்தான் என்றும் கூறுகின்ற புராணக்கட்டுக்கதைகள் அளவிடற் கரியவையாக உள்ளன.
அறிவியல் கருத்தை ஏற்று வாழ்வில் முன்னேற வேண்டுமா? அல்லது பக்தி சாயமேற்றிய புராணங்கள் கூறுகின்ற கட்டுக்கதைகளை நம்பிக்கொண்டு பின்னோக்கி செல்வதா? என்பதை வளரும் இளைய தலைமுறையினரின் சிந்தனைக்கு விடுகிறோம்.
- விடுதலை நாளேடு, 12.4.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக