பக்கங்கள்

வியாழன், 19 ஏப்ரல், 2018

ஆங்கிலம் அவசியம் ஏன்?

நேயன்

 

தனித் தமிழ் இயக்கம் நடத்திய தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தன் நூல்களுக்கான முன்னுரையை ஆங்கிலத்திலே எழுதினார். தனது நாட்குறிப்பையும் ஆங்கிலத்தில் எழுதினார். இவர் சமஸ்கிருதத்தை எதிர்த்தாரே தவிர ஆங்கிலத்தை எதிர்க்க வில்லை.

ஆங்கிலத்தின் அவசியம் கருதி இவர்கள் சொன்னதும் செய்ததும் குற்றமா? இவர்கள் தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரிகளா? இவர்களைக் குறை சொல்லாத குணாக்கள் பெரியாரையும் அண்ணாவையும் குற்றம் சாட்டுவது உள்நோக்க உந்துதலால் அல்லவா?

அன்றைய அறிஞர்களை விடுங்கள். இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்ப் பயிற்று மொழியாகவும் ஆங்கிலம் பாட மொழியாகவும் இருக்க  வேண்டும். ஆங்கில அறிவு கட்டாயத் தேவை என்பதை ஏற்கின்றனர்.

தாய்மொழிக்கு அப்பால் இன்னொரு

மொழியைக் கற்றுக்கொள்வது, அறிவு

வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்

என்கிறது தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி.

இந்தியாவின் ஓர் அங்கமாக, ஒரு மாநிலமாக தமிழ்நாடு உள்ளவரை தொடர்பு மொழியாக ஆங்கிலம் கட்டாயம் தேவை. இல்லையென்றால் அந்த இடத்தை இந்திதானே நிரப்ப முயலும்? ஆங்கிலமா? இந்தியா? ஆங்கிலம் என்பதுதானே அறிவுடைமை. ஆங்கிலம் தொடர்பு மொழியானால் இந்தியாவிலும் பயன்படும் இதர நாடுகளிலும் பயன்படும்.

இன்றைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அயல்நாடுகளில் பணிபுரிந்து வருவாய் ஈட்டவும், வாழ்வில் வளம்பெறவும் ஆங்கிலம்தான் உதவுகிறது என்பதை சிந்தித்தால் பெரியாரின் உள்ளமும் உயர்வான நோக்கும் விளங்கும்!

தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு

முதல் நாள் (15.01.1949) நிகழ்வுகள்

இன்று (15.01.1949) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தலைமை தாங்கினார். நாவலர் எஸ்.சோமசுந்தர பாரதியார் துவக்கவிழா உரையாற்றினார். தமிழ்ப்பெரியார் திரு.வி.க. தனது வரவேற்புரை ஆற்றினார்.

மாநாட்டில் கட்சி, கருத்து வேற்றுமையின்றி தமிழ் அறிஞர்களும் உயர்தர அதிகாரிகளும், புலவர் பெருமக்களும், நடிப்புக் கலைஞர்களும், வழக்கறிஞர்களும் பங்கு கொண்டுள்ளனர். மக்கள் கடல் எனக் கூடியுள்ளனர்.

காலை 8 மணி முதற்கொண்டே மக்கள் மாநாட்டுப் பந்தலில் குழும ஆரம்பித்து விட்டனர். பெரியார் அவர்களும் 8.15 மணிக்குள்ளாகவே வந்து பந்தலின் ஒரு பகுதியில் அமர்ந்து தோழர்களை வரவேற்று மகிழ்வுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

9.45 மணிக்கு நகைச்சுவை அரசு தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தம் சகாக்களுடன் வந்து சேரவும், பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கையளித்து உபசரித்தார்கள்.

சரியாக 10.15 மணிக்கு பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எம்.ஏ.பி.எல்., எம்.ஓ.எல்., அவர்கள் மாநாட்டுப் பந்தலையடையவும், பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கையில் அமர்த்தினார்கள்.

சரியாக 10.30 மணிக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், தோழர் டி.எஸ்.கந்தசாமி முதலியார் அவர்களும் மாநாட்டுப் பந்தலடையவே மாநாடு கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன் அவர்களை வரவேற்று மேடையின்கண் அழைத்து வந்தார்.

மாநாட்டுச் செயலாளர் தோழர் சி.டி.டி. அரசு அவர்கள் மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கத்தை எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்று, திரு. சோமசுந்தர பாரதியார் அவர்களை மாநாட்டைத் திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பிறகு, நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் துவக்கவிழா ஆற்றும் வகையில் கம்பீரமாக எழுந்து நின்று தமிழர்களின் தனிச்சிறப்பு விழாவான பொங்கல் விழாவிற்குப் பிறகு இம்மாநாடு கூட்டப்பட்டது சாலச் சிறப்பானது என்று எடுத்துக் கூறி, ஆரியக் கலாச்சாரத் திரட்டு என்று பலராலும் கருதப்பட்டு மனப்பாடம் செய்யப்பட்டு வரும் வள்ளுவர் குறளை, பண்டைத்தமிழனின் சிறந்த பண்புகளை எடுத்துக் கூறும் நூல் என்பதை விளக்கிக் காட்டுவதே இம்மாநாட்டின் நோக்கமென்று எடுத்துக்கூறினார். அவர் மேலும் பேசுகையில், திருக்குறள் தொன்மைத் தமிழ் நூல் என்பதற்கு ஆதாரமாக தொன்மை நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இலக்கணப்படி வாழ்த்தியல் வகை நான்கும் முதல் நான்கு அதிகாரங்களாக அதாவது கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்று நான்கு அதிகாரங்களாகப் பாடப் பெற்றிருக்கிறது. அதோடு தொல்காப்பிய இலக்கணப்படி அறம், பொருள், இன்பம் என்ற மூன்றைப்பற்றி மட்டுமே பாடப் பெற்றிருக்கிறது. மேலும், திருக்குறள் இன்று சங்க நூல்கள் என்று வழங்கப்பட்டுவரும் யாவற்றிலும் கையாளப் பட்டும் இருக்கிறது.

இப்படியான தமிழர் சால்பை விளக்கி எழுதப்பெற்ற இந்நூலை இடைக்காலத் தமிழ்ப் புலவர் ஏதும் தெரியாமல், எல்லாம் தெரிந்தவர் போல் பாசாங்கு செய்து குறளை மனு முதலான வல்லுநர் வடமொழியில் கூறியிருப்பதைத் தமிழில் சாரமாகத் திரட்டித் தரும் நூல் என்று கூறி ஆரிய நூலாக்கி விட்டனர் என்று கூறி, இடைக்காலத் தமிழ்ப் புலவர்களின் போக்கை வெகுவாகக் கண்டித்தார். மேலும் பேசுகையில், திருக்குறளைப் பாராட்டுவது தமிழைப் பாராட்டுவதாகும், தமிழர் பண்பைப் பாராட்டுவதாகும், தமிழ் சால்பைப் பாராட்டுவதாகும் என்று கூறி தனக்கு இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தந்தருளிய பெரியாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, கடன் என்ப நல்லவையெல்லாம் செய்தல் என்ற தமிழ்ப்பண்பை ஒட்டி நாடு வாழட்டும், மக்கள் வாழட்டும், நல்லதெல்லாம் வாழட்டும் என்று வாழ்த்துக் கூறி, எல்லோரும் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழன் பெருமையுணர்ந்து அதன்படி நடக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொண்டு மாநாட்டைத் திறந்து வைத்தார்கள். பாரதியார் பேசிக் கொண்டிருக்கையிலேயே தமிழ் பெரியார் திரு.வி.க. அவர்களும், திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்களும் வந்து சேரவும், நாவலர் பாரதியார் அவர்கள், மாநாட்டில் கலந்து கொண்டு தமிழை கவுரவம் செய்யும் அளவுக்காவது உடல் நலம் இடம் கொடுத்ததற்காக மகிழ்வடைவதாகத் தமிழ்ப் பெரியாரிடம் தெரிவித்து, தமது வணக்கத்தைத் தெரிவித்தார்.

நாவலர் பாரதியாரின் திறப்பு விழா சொற்பொழிவைத் தொடர்ந்து வரவேற்புக் கமிட்டித் தலைவர் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் தம் வரவேற்புச் சொற்பொழிவைத் துவங்கினார்.

                                                                (தொடரும்)

- உண்மை இதழ், 16-31.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக