பக்கங்கள்

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும்: ஆட்சியர்

கிருஷ்ணகிரி, டிச.9  கிருஷ்ணகிரியில் ஆட்சியர் அலுவல கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கு நிறைவு விழா நடந்தது. இதற்கு ஆட்சியர் பிரபாகர் தலைமை தாங்கினார். அகரமுதலி திட்ட இயக்குனர் செழியன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜெயஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-


தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என தமிழ் அறிஞர்களும், தலைவர்களும், பல போராட்டங்ளை நடத்தி 1956ஆம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்டது. அதிக அளவில் மக்களுக்கும், அரசிற்கும் இடையே நிர்வாக நடைமுறைகள் ஒளிவுமறைவின்றி நடைபெறவும், பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையொப்பம் இட வேண்டும் என 1978ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே அரசு துறையில் பணியாற்றும் அலுவலர்கள் பணி யாளர்கள், தமிழில் மட்டுமே கை யொப்பம் இட வேண்டும்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும். அலுவலர்கள் கோப்புகளை பராமரிக்கும் போது தவறு இல்லாமல் அலுவலக குறிப்பு கடித போக்குவரத்து பதிவேடுகள், சிறப்பாக கையாண்டு புதிதாக உள்ள சொற்களை தமிழில் சிறப்பாக எழுதி கோப்புகளை கையாள வேண்டும். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும், பயன்பாட்டை பொருத்தே அமையும் என்பதால் எங்கும், எதிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்ந்து அலுவலக கோப்புகளை தமிழில் சிறப்பாக கையாண்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கருக்கு கலெக்டர் பிரபாகர் கேடயம் வழங்கி பாராட்டினார்.


-  விடுதலை நாளேடு, 9.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக