*"விடுதலை" நாளிதழ் தலைப்புரை (18.12.2018)*
-------------------------------------------------------
*"தலைமைச் செயலகத்திலேயே தமிழ் கிடையாதா?"*
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழில் இடம்பெற வேண்டும். தேவையானால், தமிழின் எழுத்து அளவை விட சிறிதாக, ஆங்கிலத்தில் பெயர் இடம்பெறலாம் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, பல ஆண்டுகள் ஆகி விட்டன.
ஆனால் அதை, தனியார் நிறுவனங்கள் மீறி வந்த நிலையில், தற்போது தமிழக அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திலேயே, தமிழ் புறக்கணிக்கப் படும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதை, அறிய முடிகிறது. சென்னை, தமிழக அரசின் தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ளது, நாமக்கல் மாளிகை. இங்கு, அரசு துறை செயலர்களுக்கான அலுவலகங்கள் உள்ளன. 10 மாடி கட்டடத்தில், எங்கும் தமிழ் சொற்களே இல்லை எனும் அளவிற்கு, அனைத்திலும் ஆங்கிலமே இடம் பெற்று உள்ளது.
இதுகுறித்து, தமிழ் அறிஞர்கள் கூறியதாவது:
தமிழகத்தில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1947 - 15 மற்றும், 1958ஆம் ஆண்டு, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம், 42 பி ஆகியவற்றின் படி, நிறுவனத்தின் பெயர் பலகைகள், தமிழில் இருக்க வேண்டும்.ஆங்கிலத்திலோ, பிற மொழியிலோ, பெயர்ப்பலகை எழுதும் அவசியம் ஏற்பட்டால், தமிழ், ஆங்கிலம், பிறமொழி என, முறையே, 5 : 3 : 2 என்ற அளவில், எழுத்து அளவு இருக்க வேண்டும் என, விதி உள்ளது. இதை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை கண்டுகொள்வதில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள, 50 சதவீத வணிக நிறுவனங்களில், ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரிடம், நாங்கள் புகார் அளித்தோம். இந்நிலையில், தமிழக அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திலேயே, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதிர்ச்சியை அளிக்கிறது. மேலும், அங்கிருந்து அனுப்பப்படும் அறிக்கை மற்றும் கடிதங்களும், ஆங்கிலத்திலேயே உள்ளன. நம் தாய் மொழியை புறக்கணித்து, பிற மொழிக்கு, நம் அரசு அக்கறை காட்டுகிறதோ... என, சந்தேகம் எழுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள், அவர்களின் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்களிடம், சட்டத்தை எடுத்துக் கூறி, ஒரு மாதத்திற்குள், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.
தமிழில், பெயர்ப்பலகை வைத்த கடை உரிமை யாளருக்கு, பாராட்டுப் பத்திரங்களை வழங்கி வருகிறோம்.
தலைமைச் செயலகத்தில், தற்போது புதிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில், தமிழிலும் பெயர் பலகை வைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- (தினமலர், 06.12.2018)
தினமலரிலேயே இப்படியொரு செய்தி வெளி வந்துள்ளது.
தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடும்; ஏழை நெசவாளர் வீட்டுத்தறி நிற்காமல் இயங்கும்; ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவர்களுக்கு மூன்று வேளை மட்டன் பிரியாணி கிடைக்கும் ('தினமலர்' வார மலர் 13.6.2004) என்று கேலி செய்த தினமலரே சுட்டிக் காட்டும் அளவுக்குத் தமிழ் நாட்டில், அதுவும் அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழைக் காண முடியவில்லை என்று எழுதுகிறது என்றால் இந்த நிலை மிகவும் தலையிறக்கம் தான்! தமிழ் வளர்ச்சித்துறை என்ன செய்கிறது? செய்தி விளம்பரத்துறை என்னதான் செய்து கொண்டுள்ளது? நம் மக்களிடம் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ. மனப் பான்மைதான் கோலோச்சுகிறது!
தமிழ் வளர்ச்சிக்கென்று ஓர் அமைச்சர் இருக்கிறாரே - 'தினமலர்' செய்தி அவர் கவனத்துக்கு வரவில்லையா?
எது எதற்குத்தான் போராடுவது என்று தெரிய வில்லை....
ஒவ்வொன்றுக் காகவுமா போராட முடியும்? ஒட்டு மொத்த ஆட்சி மாற்றமே நிலையான தீர்வு.
*நன்றி : "விடுதலை" நாளிதழ் தலைப்புரை 18.12.2018*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக