பக்கங்கள்

புதன், 4 செப்டம்பர், 2019

சென்னை: திருக்குறள் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

எதை எதிர்த்து அழிக்க முடியாதோ, அதை அணைத்து அழிக்கலாம் என்பதற்கு ஆதாரமாகத்தான், இன்றைக்கும் திருக்குறளை பார்ப்பனியம், ஆரியம் பயன்படுத்துகின்றது

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சரியான நேரத்தில் "திருக்குறள் மாநாட்டினை'' நடத்துகிறது!


நாங்கள் உருவத்தால் பலராக இருந்தாலும், உள்ளத்தால் ஒருவரே!


சென்னை: திருக்குறள் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை




சென்னை, ஆக.14  எதை எதிர்த்து அழிக்க முடியாதோ, அதை அணைத்து அழிக்கலாம் என்பதற்கு ஆதார மாகத்தான் இன்றைக்கும் திருக்குறளை பார்ப்பனியம், ஆரியம் பயன்படுத்துகின்றது; பெரியாரிய உணர்வா ளர்கள் கூட்டமைப்பு சரியான நேரத்தில் திருக்குறள் மாநாட்டினை'' நடத்துகிறது; நாங்கள் உருவத்தால் பலராக இருந்தாலும், உள்ளத்தால் ஒருவரே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

12.8.2019 அன்று மாலை சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு


மிகுந்த எழுச்சியோடு, கொக்கக்க கூம்பும் பருவத்து என்ற நிலையில், சிறப்பான நேரத்தில், வினைத்திட்பம், காலமறிதல், எல்லாவற்றையுமே கணக்கிட்டு, அதற்கு சிறப்பான இன்றைய சூழலில், என்ன விடை - பல கேள்விகளுக்கு, பல சூழல்களுக்கு என்று சொன்னால், அதிலிருந்து விடுதலை பெற, விடியல் பெற ஒரே வாய்ப்பு திருக்குறள்தான், திருவள்ளுவர்தான் என்பதை உணர்ந்த வர்கள்தான் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப் பைச் சார்ந்தவர்கள் என்பதை உலகத்திற்கே பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற மாநாடு - இந்த மாநாடு.

இந்தத் திருக்குறள் மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய ஒருங்கிணைப்பாளர், பெரியாரிய உணர்வாளர்களுடைய கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் அன்புத் தோழர் பொழிலன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய வாலாசா வல்லவன் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய நாகை.திருவள்ளுவன் அவர்களே, டைசன் அவர்களே, தொடக்கவுரையாற்றிய குடந்தை அரசன் அவர்களே, ஆவண நூல் பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய தோழர் கோவை இராமகிருட்டி ணன் அவர்களே, தீர்மானங்களை முன்மொழிந்து  சிறப்பான இந்த மாநாட்டிற்குத் திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய முன்னணி தோழர்களில் ஒரு வரான தோழர் திருமுருகன் காந்தி அவர்களே,

நிகழ்ச்சி நெறியாளர் எங்கள் தயாரிப்பு அன்பிற்குரிய சீனி.விடுதலையரசு அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அடுத்து சிறப்பாக முழக்கமிடப் போகின்ற திராவிடர் இயக்கத்தின் போர் வாள் அன்புசகோதரர் வைகோ அவர்களே,

அதேபோல, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை யாற்ற இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியைச் சார்ந்த ஜவாஹிருல்லா அவர்களே, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

பகுத்தறிவாளரும், அன்பிற்குரியவருமான அருமைத் தோழர் இனமுரசு சத்தியராஜ் அவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அரங்க.குணசேகரன் அவர்களே, குடந்தையார் அவர் களே, தெகலான் பாகவி அவர்களே, மலேசியாவில் இருந்து வந்து சிறப்பாக உரையாற்றிய எனது அருமை சகோதரர் அவர்களே  மற்றும் மேடையில் வீற்றிருக் கக்கூடிய அருமைத் தோழர்களே, நம்முடைய குடும்பத் தைச் சார்ந்த இயக்கத் தோழர்களே, பட்டியல் நீண்டி ருக்கின்ற காரணத்தால், விடுபட்டவர்களை விளித்ததாக எடுத்துக்கொள்ளவும். மற்றும் எதிரிலே அமர்ந்திருக் கக்கூடிய தோழர்களே, நண்பர்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சரியான நேரத்தில், சரியான தலைப்பு!


சரியான நேரத்தில், சரியான தலைப்பு. சரியான நோய்க்கு, சரியான மருந்து - அதுதான் மிகவும் முக்கியமானது.


இங்கே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வைகோ எழுந்து வேகமாக போனரே என்று யாரும் நினைக்கவேண்டிய அவசியமில்லை. பின்னால் வருகின்ற தீர்மானத்தை, முன்னாலேயே வலியுறுத்திச் சொல்வதற்காக எழுந்து சென்றிருக்கிறார். எனவே, அவர் எதைச் சொன்னாரே, அதுதான் தீர்மானமாக சிறப்பாக இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது. இதுதான் பொதுவாழ்க்கை.


திருக்குறளில் அதற்கும் இடமிருக்கிறது.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்


மெய்ப்பொருள் காண்ப தறிவு.


அவ்வளவுதானே தவிர, வேறொன்றுமில்லை.


நாம் யார்மீதும், எந்தக் கருத்தையும் திணிப்ப தில்லை. அதிக நேரம் பேச வாய்ப்பில்லை எனக்கு. எனவே, ஒரு சில கருத்துகளை மட்டும் சொல்கிறேன்.


 

"திருக்குறள் நெறி''


தந்தை பெரியார் அவர்களுடைய சிறப்பான கருத்தை -  உங்கள் மதம் குறள் மதம், உங்கள் நெறி குறள் நெறி என்று சொல்லுங்கள்'',  ஆரியப் பித்தலாட்டங்களுக்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான்'' என்பதை எடுத்து இந்த மாநாட்டு அழைப்பிதழில் போட்டிருக்கிறார்கள்.

உங்கள் மதம் என்ன? உங்கள் நெறி என்ன? உங்களுடைய தத்துவம் என்ன? என்று கேட்டால்,

ஒரே ஒரு வரியில் பதில் சொல்லுங்கள், திருக்குறள் நெறி'' என்று! தந்தை பெரியார் 70 ஆண்டுகளுக்கு முன் சொன்னார்.

தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!


1949 ஆம் ஆண்டில், இதே சென்னை மாநகரில் தந்தை பெரியார் அவர்கள், புலவர்கள் வீட்டு அலமாரிக்குள் இருந்த திருக்குறளை பொதுமக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினார். அந்தப் பணியினுடைய வேகம் குறையக்கூடாது என்பதற்காக, 70 ஆண்டு களுக்குப் பிறகு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு மிக அருமையான பணியை செய்திருக்கிறது. அவர்களுக்குத் தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்; உலகத் தமிழர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

ஆய்வாளர் பேராசிரியர் ஜோஷியின் "புத்தரை உற்றுப் பார்க்கிறேன்!''


ஏனென்றால், பெரியார்தான் அந்த உணர்வை ஊட்டி னார். பாதுகாக்கவேண்டும் - திருக்குறளை இனிமேல் பரப்பவேண்டியதில்லை; பாதுகாக்கவேண்டும், எதிரி களிடமிருந்து பாதுகாக்கவேண்டும், அதுதான் மிகவும் முக்கியம். ஏனென்றால், திரிபுவாதத்தினாலேயே அழித் தவர்கள். பவுத்தத்தைப்பற்றி இங்கே பேசினார்கள். அமெ ரிக்காவில் இருக்கின்ற ஜோஷி என்ற ஒரு பேராசிரியர், ஒரு ஆய்வை செய்திருக்கிறார். அந்த ஆய்வினுடைய தலைப்பு, புத்தரை உற்றுப்பார்க்கிறேன்'' என்பதாகும்.

அழிக்க முடியாததை அணைத்து அழிக்கும் ஆரியம்!


அதில், பவுத்த நெறி எதற்கு இந்த நாட்டில் வந்ததோ, அந்த புத்த நெறியை இந்த நாட்டைவிட்டே ஒழித்தது ஆரியம், பார்ப்பனியம் என்று அவர் சொல்கின்ற நேரத்தில், மூன்று சொற்களை சொல்லியிருக்கிறார்.

எதிர்த்து அழிக்க முடியாத எதையும், எப்படி பார்ப்பனியம், ஆரியம் அழிக்கும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார். அதைத்தான் பொழிலன் அவர்கள், தன்னுடைய தலைமை உரையில் மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

Appreciate -  Accept -  Annihilate


மூன்று வரிகளை அவர் பயன்படுத்தினார்; பவுத்தம் அப்படித்தான் அழிந்தது.

1.  Appreciate  -   முதலில், அழிக்க வேண்டியதைப் பாராட்டுவதாகப் புகழ்ந்து சொல். நேரிடையாக அழிக்க முடியவில்லையானால், அதைப் பாராட்டி புகழ்ந்து சொல்.

2.  Accept - அதை ஏற்றுக்கொண்டதாகக் காட்டிக் கொள்.

3. Annihilate -  அதை அழித்துவிடு,  ஒழித்துவிடு.

எதை எதிர்த்து அழிக்க முடியாதோ, அதை அணைத்து அழிக்கலாம் என்பதற்கு ஆதாரமாகத்தான், இன்றைக்கும் திருக்குறளை பார்ப்பனியம், ஆரியம் பயன்படுத்துகின்ற நேரத்தில், பெரியாரிய உணர்வா ளர்கள் கூட்டமைப்பு இருக்கிறதே, சரியான ஒரு மாற்றத்தை எடுத்துக்காட்டியிருக்கிறது.

நாங்கள் உருவத்தால் பலராக இருந்தாலும், உள்ளத்தால் ஒருவரே!


என்னிடம்கூட சில நண்பர்கள் கேட்டார்கள், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு எப் பொழுது உருவாயிற்று? என்று. எப்பொழுது எதிரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தார்களோ, அப்பொழுது உருவாயிற்று. அதற்கு தேதி, நேரம் என்று கிடையாது.


இது எப்பொழுதெல்லாம் தொடரும்?


நீங்கள் எப்பொழுதெல்லாம் விஷமம் செய்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் தொடரும். அப்பொழுதெல்லாம் இதற்கு வேலை உண்டு.


ஆக, நாங்கள் உருவத்தால் பலராக இருந்தாலும், உள்ளத்தால் ஒருவரே. எங்களுக்குக் கள்ளம் தெரி யாது; எங்கள் உள்ளத்தில் பள்ளம் கிடையாது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.


நாகசாமிகளின் புரட்டு!


எவ்வளவு கொச்சைப்படுத்தியிருக்கிறான் அணைத்து என்பதற்கு அடையாளம் - சங்கராச்சாரியாரிகள் மட்டு மல்ல, அண்மைக்கால நாகசாமிகள்வரை - சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வேறொரு நிகழ்ச்சியில், வைகோ அவர்களும், நானும் பங்கேற்றோம். வைகோ வேகமாக பேசினார்.

திருவள்ளுவருடைய திருக்குறள் என்பது மனுதர் மத்தைப் பார்த்து எழுதப்பட்டது. மனுதர்மத்திலிருந்து திருக்குறள் காப்பியடிக்கப்பட்டது.

இதை ஒரு பெரிய ஆராய்ச்சி நூல் போன்று ஆங்கிலத்தில் எழுதி, அதை பெரிய அளவில் பரப்பவேண்டும் என்று அவர்கள் நினைத்தபொழுது, அதனை மிகப்பெரிய அளவிற்கு எதிர்த்தோம்.

இதோ என்னுடைய கைகளில் இருப்பது பெரியார் களஞ்சியம்'' தந்தை பெரியார் அவர்கள், திருக்குறள் பற்றிய பேச்சுகள் எல்லாம், ஆய்வுரைகள், அவர் நடத்திய மாநாடு உள்பட புத்தகமாக, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

அதில், தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டுகிற ஒரு செய்தியை உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன். அந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படித்தீர்களேயானால், அந்தக் கருத்துதான் இந்த மாநாட்டினுடைய மய்யம் - தீர்மானத்தினுடைய மய்யக் கருத்தாகும்.

திருக்குறள்பற்றி தந்தை பெரியார்!


திருக்குறள் ஆரியக் கருத்துகளை மறுக்க, அவை களை மடியச் செய்ய அக்கொள்கைகளிலிருந்து மக்க ளைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்று நான் கருதுகிறேன்'' என்று மிகத் தெளிவாகவே சொன்னார்.

திருக்குறளைப்பற்றி மனோன்மணியம் சுந்தரனார் அழகாகச் சொல்லியிருக்கிறார், வள்ளுவர் செய் திருக்குறளை

மறவற நன்குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி

ஒரு குலத்துக் கொருநீதி

எந்த அளவிற்கு அவர்கள் நம்மைக் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் சொல்லவேண் டுமானால், இரண்டு செய்திகளை சொல்கிறேன். இது அறிவார்ந்த அரங்கம்,  நிறைய பேசுவதற்கும் ஏராளமான அறிஞர் பெருமக்கள் இருக்கிறார்கள். நான் விடை பெறலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு செய்தி,

வள்ளுவரைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில்,  இன் றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும்.

வள்ளுவரைப்பற்றி பார்ப்பனப் புரட்டு!


திருவள்ளுவர், பார்ப்பனர்களுக்குப் பிறந்ததால்தான், திருக்குறளை இயற்ற முடிந்தது என்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை, இன்றைக்கல்ல - உங்களில் பலருக்கு இந்தச் செய்தி தெரியாது. இது தெரியவேண்டிய செய்தி, பதிவாக வேண்டிய செய்தி இந்த அரங்கத்தில்.

ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை, திரு.க.அயோத் திதாச பண்டிதர் கேள்வி கேட்டு, மடக்கிய நிகழ்ச்சியை, அவர் எழுதிய நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை'' என்ற சிறு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் இராயப்பேட்டைச் சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து தொண்டாற் றியவர். தமிழன்' என்ற வார இதழை 1907 இல் தொடக்கி, ஆரியப் பார்ப்பன புரட்டுகளை அம்பலப்படுத்தியவர்.

இவர் பார்ப்பன வேதாந்த விவரம்'', வேடப் பார்ப்பனர் வேதாந்த விவரம்'', நந்தன் சரித்திர விளக்கம்'', திருவள்ளுவ நாயனார் பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரெனும் பொய்க்கதை விவரம்'' ஆகிய புத்தகங் களை எழுதியுள்ளார்.

அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு.வி.க. அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று'' என்று போற்றுகிறார்.

1892 இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது, வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கில-சுரோனிதம் கலப்பறியாது'' என்று குறிப்பிடும் போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் கஅயோத்திதாச பண்டிதர் எழுந்து, நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு படுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ.', பி.ஏ.' படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக் கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப் பார்களென்று எண்ணுகிறீர்'' என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் க. அயோத்திதாச பண்டிதர், தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர்'' என்று கேட்டார்.

திரு.சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல், திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதர், ஏன்? பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக் கும்பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபிள், பி.அரங்கைய நாயுடுவும், எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத்தினார்கள்.

சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவிவிட்டார்.

இன்றைக்கு சிவநாம சாஸ்திரிகள் வேறு உருவத்தில் வருகிறார்கள்; எச்சரிக்கை!


இது 1892 இல் நடந்தது என்று நினைக்காதீர்கள்; இப்பொழுது சிவநாம சாஸ்திரிகள் வேறு உருவத்தில் வருகிறார்கள்; எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அணைத்து அழித்துக் கொண்டிருக்கிறார்கள்; எப்படி அணைத்து அழித்துக் கொண்டிருக்கிறார்கள்? அதையும் இந்த அரங்கத்தின் தலைவர் பொழிலன் அவர்கள் அழ காக அவருடைய தலைமையுரையில் எடுத்துச் சொன் னார்கள்.

திருவள்ளுவருடைய திருக்குறளை இந்து நூல் என்று சொல்லி, பல நாடுகளில் இதை வைத்தே, நாமெல்லாம் இந்துக்கள்; எனவே இந்து மதம் என்று சொன்னார்கள்.

நாங்கள் யாரையும் தரக்குறைவாகப் பேசிப் பழக்கப்பட்டவர்கள் அல்ல


முதலில் விந்துவைப்பற்றி பேசினோம்; இப்பொழுது இந்துவைப்பற்றி பேசவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். இது நம்மால் உருவாக்கப்பட்டதல்ல; அவர்களுடைய ஆதாரத்தில் இருந்துதான் பேசுகிறேன். நாங்கள் யாரையும் தரக்குறைவாகப் பேசிப் பழக்கப்பட்டவர்கள் அல்ல.

இதோ என்னுடைய கைகளில் இருப்பது, இன்றைய அரசின், அரசியல் சட்டத்தைவிட மிக முக்கியமாகப் பின்பற்றக்கூடிய வேத புத்தகம் - அரசியல் சட்டத்தைவிட அவர்கள் மேலாக மதிக்கின்ற புத்தகம்.

'கோல்வால்கரின் ஞானகங்கை!'


குருஜி கோல்வால்கருடைய ஞானகங்கை' - இதில், திருவள்ளுவருடைய திருக்குறளைப்பற்றியும் பாராட்டி இருக்கிறார்.

ஞானகங்கை' என்ற நூலில், கங்கையே சுத்தப்படுத்த வேண்டிய ஒன்று. அதற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்தும் பயனில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்கள். இந்த ஞானகங்கை' எப்படிப்பட்டது என்பதை உங்கள் முடிவிற்கே விடுகிறேன்; அதில் உள்ளவற்றைப் படித்த பிற்பாடு.

தற்காலத்தில் தமிழைப்பற்றி நாம் அதிகம் கேள்விப் படுகிறோம். தமிழன்பர்கள் சிலர், தமிழ் என்பது தனக்கென வேறான கலாச்சாரமுடைய தனிப்பட்ட மொழி என்று கூறுகின்றனர். அவர்கள் வேதத்தில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். திருக்குறளை அவர்களது மறையாகக் கருதுகின்றனர். திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட ஒரு பழைமையான அறநூல்தான். திருவள்ளுவ முனிவர் அதன் ஆசிரியர் ஆவார். அவரை நாம் நமது ப்ராதஸ்மரணத்தில் நினைவுகூர்கிறோம். மிகப் புகழ் பெற்ற புரட்சிவாதியான வ.வே.சு.அய்யர் திருக்குறளை (ஆங்கிலத்தில்) மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளில் நாம் காண்பது என்ன? நாடெங்கும் அறிமுகமான நான்குவித வாழ்க்கை முறை (சதுர்வித புருஷார்த்தம்) அதில் விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. மோட்சத்தைப் பற்றிய அத்தியாயம் மட்டும் முன்னால் வைக்கப்பட் டுள்ளது. அது எந்தக் கடவுளையும் அல்லது எந்த வழிபாட்டு முறையையும் பின்பற்றுமாறு கூறவில்லை. மோட்சம் என்ற உயர்ந்த விஷயத்தைப்பற்றியே கூறுகின்றது. எனவே, அது எந்த ஒரு சாரரின் நூலும் அல்ல. மகாபாரதம்கூட திருக்குறள் கூறுவது போன்ற வாழ்க்கை முறைகளையே புகழ்ந்து கூறுகின்றது. ஹிந்துக்களிடம் அல்லாது மற்ற எந்த மதத்தவரிடமும் இவ்வாறான சிறந்த வாழ்க்கை முறை நோக்கு காணப்படவில்லை. எனவே, திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல் ஆகும்.'' (ஞானகங்கை', பக்கம் 168).

இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள், இந்த மாநாட்டினுடைய தேவை என்ன? ஏன் இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார்?

நேற்றும் தேவைப்பட்டார் -

இன்றும் தேவைப்படுகிறார் -

நாளைக்கும் தேவைப்படுவார் -

நோய் எப்பொழுதெல்லாம் வருகிறதோ, அப் பொழு தெல்லாம் மருந்துகள் தேவைப்படுவதைப்போல.

எனவேதான், இதனை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், எல்லோரும் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.

தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து - மனுதர்மக் கருத்துக்கு நேர் எதிரானது.

எனவேதான், தெளிவாகச் சொன்னார், எல்லோருக்கும் கல்வி கூடாது என்பது மனுதர்மம்.

சிந்திக்காதே என்பது மனுதர்மம்

பெண்ணடிமை என்பது மனுதர்மம்

ஜாதி தர்மம் என்பதுதானே மனுதர்மம்.

"பாரதிதாசன் திருக்குறள் உரை''


திருவள்ளுவர் என்ற பெயர் இருக்கிறதே, அதில் வள்ளுவர் என்பது ஒரு ஜாதி என்பதைப்போலக் காட்டி, ஆதிபகவன் இவை அத்தனையும் சொல்லி, இழிவு படுத்துவது அல்லவா? வள்ளுவர் என்றால், அந்தக் காலத்தில் இலக்கியத்தில் ஆதாரத்தோடு,  புரட்சிக்கவிஞர் அருமையாகச் சொல்லியிருக்கிறார்; அவர்களுடைய பாரதிதாசன் திருக்குறள் உரை'' நூலைப் படியுங்கள்.

தமிழர்கள் ஆண்ட நாளில் அரசியல் ஆறு துறையாய் வகுத்து ஆட்சி நடத்தப்பட்டது , அவை, உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு, வரைவு என்பன.

உழவும் தொழில் என்னும் துறையில் அடங்குமேனும், சிறப்புக் கருதி உழவுத் தொழிலைத் தனித்துறையாக வைத்துத் கருத்தூன்றிக் காத்து வந்தார்கள், உழவும் தச்சும் (சிற்பம்) நீங்கிய பிற வேலை அனைத்தும் தொழிற்றுறையில் அடங்கியவை.

எழுத்து, சொல், பொருள் என்பனவும், கோள் நிலை யறிதல், மருத்துவம் முதலியனவும், போர்ப் பயிற்சியும் கல்வி என்ற துறையில் அடங்கும்.

வரைவு என்னும் துறையாவது யாது? - எல்லைப் பிரிவை உறுதி செய்தல், கோட்டை கட்டுதல் முதல் குளம் வெட்டுதல் வரைக்குமுள்ள இடங்களை வரையறுத்தலும், அளவு செய்தலும் முதலியவை.

இந்த ஆறு துறைக்கும் அக்காலத்தில் ஆறு அமைச் சர்களை அமைத்துத் திறம்பட நாட்டைக் காத்து வந்தான் தமிழரசன்!

ஆறு துறையே அன்றிப் போர்த்துறை ஒன்று தனியே. இருந்து வந்ததோ எனில் அவ்வாறில்லை. கல்வி என்னும் துறையில் போர்ப்பயிற்சியும் அடங்கியது என்று முன்னமே சொன்னேன். ஒரு துறைக்கு ஓர் அமைச்சனே அன்றிப் பல அமைச்சரை அமைத்தலும் உண்டு.

இந்த ஆறு துறையின் ஆறு அமைச்சர்களுக்கும் அலுவலகம் ஒன்றே; அது இந்நாளைய செக்ரடேரியேட் போன்றது. அந்த அலுவலகத்தில் கருமத் தலைவன் ஒருவனிருப்பான். அவன் எல்லாத் துறையிலும் வல்லவன். அவனுடைய அலுவற் பெயர் வள்ளுவன் என்பது.

வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு

உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்

என்னும் பிங்கலந்தைச் செய்யுள் இங்குக் கருதத்தக்கது. உள்படு கருமத் தலைமை என்பது வள்ளுவன் என்ற அலுவற் பெயரையே குறித்து நின்றது காண்க.''

எனவேதான், நம்முடைய பழைமையையெல்லாம் எடுத்து தலைகீழாக்கி, இழிவைச் சுமந்து கொள்ள வைத்திருக்கக்கூடிய நிலையை,  பெரியார் என்ற மாபெரும் அந்தப் பகுத்தறிவுப் பகலவன் வெளியாக்கினார்கள்; இன்றைக்கு அந்த வழியைப் பின்பற்றி நாம் வள்ளுவர் குறளைத் தூக்கிப் பிடிக்கவேண்டும்.

தந்தை பெரியாருக்குப் பிடித்த குறள்!


இதில் நமக்குள்ளே கருத்து வேறுபாடு என்னவென்று பார்க்கக்கூடாது. பொது வாழ்க்கையில் பெரியாருக்குப் பிடித்த குறளை சொல்லி என்னுரையை முடிக்கின்றேன்.

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்

எனவே, மானம் போயிற்று என்று யாரும் இங்கே பேசக்கூடாது. நம்முடைய மானத்தைக்கூட இழக்கத் தயாராக இருக்கவேண்டும்; இனமானத்தைக் காப்பாற்றுவதற்காக. இதுதான் செய்தி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 14 .8. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக