புலவர்
செ. இராசு எம். ஏ., பி.எச்.டி
சங்க இலக்கியங்களில் மேலை, கீழை நாடுகள் தொடர்பான சில செய்திகள் இடம்பெற்றுள்ளன.
“யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” (அகநானூறு 149) “யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்” (புறநா னூறு 56) "யவனர் ஓதிம விளக்கு” (பெரும் பாணாற்றுப்படை 315) “யவனர் இயற்றிய வினைமாண் பாவை” (நெடுநல்வாடை 101) “வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்” (முல்லைப்பாட்டு 61)
என்பன சங்க இலக்கியத் தொடர்கள். “யவனர் இருக்கை” “யவனத் தச்சர்” போன்ற தொடர்களும் உள்ளன. யவனர் என்பது ரோம் நாட்டவரையும், அரேபி யரையும் குறிக்கும் பொதுச்சொல்.
தமிழ்நாட்டில் ரோமானியர் பொன், வெள்ளி நாணயங்களும், ரோமரின் அரிட்டைன் வகை ஓடுகளும், அம் போரா மதுக்குடமும் , சுடுமண் பொம் மைகளும் பல கிடைத்துள்ளன.
குதிரைகளும் கடல் வழியாக வந்துள்ளன.
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்” என்பது பட்டினப்பாலைத் தொடர் (185) இவை மேலை நாட்டுத் தொடர்பு.
கீழை நாட்டுத் தொடர்பு குறித்து “காழகத்து ஆக்கம்''
“குணகடல் துகிர்” (பட்டினப்பாலை (190, 192) என்ற தொடர்கள் கூறுகின்றன.
அதியமான் மரபினர் கீழை நாட்டிலிருந்து கொண்டுவந்து கரும் பைத் தமிழகத்தில் அறிமுகம் செய்தனர் என்பர்.
“அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்” என்பது புறநானூற்றுத் தொடர் (99).
மேலை, கீழை நாட்டுச் சான்றுகன் தமிழகத்தில் கிடைப்பன போன்று அந் நாடுகளில் தமிழ்ச் சான்றுகள் இருத்தல் வேண்டும்.
தொல்காப்பியத்திலேயே கடல் பயணம் குறிக்கப்படுகிறது. “கலத்தில் சேரல்” “முந்நீர் வழக்கம்” என்பன கடல் பயணம் தொடர்பான தொல்காப்பியத் தொடர்கள், பிற நாட்டார் கடல்கரை ஓரமே பயணம் செய்தபோது அலை கடல் நடுவுள் பலகலம் செலுத்தியவர்கள் தமிழர். காற்றின் போக்கு அறிந்து கடலில் பயணம் செய்த முதல் இனம் தமிழ் இனம்.
“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” மக்கள் தமிழர்
இதை உறுதிப்படுத்தும் வண்ணம் அண்மைக் காலத்தில் மேலை, கீழை நாடுகளில் பல தமிழ்ச் சான்றுகள் 20 கிடைத்துள்ளன.
தமிழர்கள் படகு, தோணி, ஓடம், அம்பி, திமில், கலம், மரக்கலம், புணை, கட்டுமரம், கப்பல், நாவாய், வங்கம் என பலவற்றில் கடல் பயணம் மேற்கொண் டுள்ளனர்.
கீழே மேலை, கீழை நாடுகளில் கிடைத்த பல தமிழ்ச் சான்றுகள் கொடுக் கப்பட்டுள்ளன.
1. எகிப்து நாட்டுச் செங்கடற் கரையில் உள்ள பழம்பெரும் ஊர் குவாசிர்
அல் காதிம் (QUSEIR AL QADIM) என்ற ஊர், அங்கு அமெரிக்க நாட்டுத் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய அகழாய்வில் பழந்தமிழில் “கணன்” “சாதன்” என்று பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது, அச்சொற்களைக் கண்ணன் “சாத்தன்” என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது தொல்லியல் அறிஞர்கள் கருத்தாகும்.
2. அதே ஊரில் இங்கிலாந்து நாட்டுத் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய
அகழாய்வில் “பனை ஓறி” என்று இரு முறை பழந்தமிழில் எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.
3. அதே செங்கடற்கரையில் உள்ள பெறனிகே (BERENIKE) என்னும் ஊரில் நடைபெற்ற அகழாய் வில் பழந்தமிழ் எழுத்தில் “கொறபூமான் “ என்று எழுதப் பட்ட பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது, அய்ராவதம் மகாதேவன் “கொற” என்ற சொல் பிடிக்காததினாலோ என்னவோ வலிந்து இப்பொறிப்பை “கொ(ற்)ற பூமான்” என்று படிக்க வேண்டும் என்று கூறினார்.
4. ஓமன் நாட்டில் கோர் ரோரி (KHOR RORI) என்னும் ஊரில் நடைபெற்ற
அகழாய்வில் பழந்தமிழில் “ணந்தை கீரன்” என்று எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.
5. தாய்லாந்து நாட்டில் குவான் லுக் பாப் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வில் வசந்தமிழில் “பெரும் பத்தன் கல்” என்று பழந்தமிழ்ப் பொறிப் புடன் பொன் மாற்றுக் காணும் உரைகல் ஒன்று கிடைத்துள்ளது.
6. தாய்லாந்து நாட்டில் பூ கா தாங் (PHU KHAU THONG) என்ற இடத்தில் “தூதோன்” என்று பழந்தமிழில் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத் துள்ளது. அய்ராவதம் மகாதேவன் “துறவோன்’’ என்று தவறாகப் படித் துள்ளார். “தூ” முதல் எழுத்து நெடிலாகத் தெளிவாக உள்ளது. இரண்டாம் எழுத்து ற என்று படிக்க இயலாமல் த என்று தெளிவாக உள்ளது.
7. வியன்னா தேசிய நூலகத்தில் சேரநாட்டு முசிறி வணிகனுக்கும் அலெக் சாண்டிரிய வணிகனுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்த ஒரு அரிய காகித ஆவணம் கிடைத்துள்ளது. கிரேக்க மொழியிலும் பிராமியிலும் அது எழுதப்பட்டுள்ளது. தமிழக வணி கர்கள் கொண்டு சென்ற பொருள்கள் பல குறிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலிருந்து வண்ணக் கல் மணிகள் (குறிப்பாக பச்சை, நீலக்கற்கள் பெரில், அக்குவா மெரினா), தேக்கு அகில், சந்தனம், மிளகு, ஏலம், இரும்பு, தந்தம் போன்றவற்றை கொண்டு செல்லப்பட்டன. மிளகு யவனர்கள் மிக விரும்பிய பொருள். மிளகு யவனப் பிரியா என்று கூறப்படும்.
-விடுதலை நாளேடு, 4.1.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக