பக்கங்கள்

செவ்வாய், 14 ஜனவரி, 2020

வாழ்வோடு பிணைந்த வண்டமிழர் விழா


தமிழர் தம் விழாக்கள் ஒளியுள்ள நாள்களில் கொண்டாடப்பெற்றன. தமிழர் மங்கல நிகழ்ச்சிகளாகிய திருமணங்கள், திருவிழாக்கள் ஆகியவையும் முழுமதி நாளில்தான் அயரப் (கொண்டாடப்) பெற்று வருகின்றன.

இதற்கு அகநானூறு இரண்டாம் பாட்டும், 86, 136 ஆம் எண் பாடல்களும் தக்க சங்க இலக்கிய அகச் சான்றுகளாகும். புத்தருடைய பிறந்த நாளும் மகாவீரர் பிறந்த நாளும் முழு நிலவு நாளில் கொண் டாடப் பெறுவது, இக்கருத்திற்கு அரண் பயப்பதாகும். - பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனள் - என்ற அகப் பொருட் கூற்று, தைமதிய (திங்கள்) உயரிய நிலையினைப் பொருந்திய நிலையினை எடுத்துக் காட்டும்.

தேமதியத் திருநாள் அறுவடை நாள். இது ஆண்டு முழுமைக்கும் வேண்டிய உணவு, உடை போன்ற வாழ்வின் அடிப்படைத் தேவைகளையும் வழங்கும் பொருளியல் விழாவாகவும் பொலிகிறது உலக முழுவதும்.

தை முதல் நாள் விழாவினை அடுத்து மறுநாள் மஞ்சு விரட்டு என்ற வீர விளை யாட்டுவிழா நடைபெறுகிறது. இதனை ஏறுதழுவுதல் என்று கலித்தொகை கூறுகிறது.

*கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவனை

எழுமையும் புல்லாளே ஆயமகள்....*

இந்த ஏறு தழுவுதல், தை முதல் நாளை அஃதாவது, பொங்கல் விழாவினை யொட்டி மறுநாள் நடைபெறும் தமிழர் வீர விளையாட்டாகும். இது புறத்தின் பாற்படும்.

தை முதல் நாள் நிகழ்ச்சி அக நிகழ்ச்சி மஞ்சு விரட்டு என்ற ஏறுதழுவுதல் புறத் தினை நிகழ்ச்சி.

இங்ஙனம்  அகமும் புறமும் கைகோத்துக் களிநடனம் புரியும் கன்னித் தமிழ்த் திருநாள் நிகழ்ச்சிகள். இவற்றிற்குத் தை முதல் நாள் ஆற்றுப்படை பாடுகிறது. மார் கழிக் கடுங்குளிரும் பனியும் நீங்கிக் கதிர வன் தோன்றிக் களிப்பு நல்கும் நான்கை முதல் நாள் தை பொங்கலிட்டுப் புத்தாடை. புனைந்து ஒளியூட்டு வழி நாட்டும் கதிரவனை வழிபட்டுக் கடமையாற்றும் பணி தொடங்கும் நாள் தை முதல் நாள்.

இத் தை மதியம் பற்றிச் சங்கக் காலத்தில் பரிபாடலிலும், இடைக்காலத் தமிழ் இலக்கி யங்களிலும் பேசப்படுகிறது. மக்களின் அன்றாட நடப்பியல் வாழ்வோடு ஒன்றித் திளைக்கும் செயல்களுக்குப் பாயிரம் பாடுவது தை முதல் நாள். இயற்கை யோடு இயைந்து வாழ்வு நடத்தும் தமிழர்களின் இயற்கைத் திருவிழா பொங்கல் விழா.

“கை புனைந்து இயற்றாக் கவின்பெரு வனப்பு" என்று திருமுருகாற்றுப்படை பாடும் அடிகளுக்கு அகச் சான்று நல்கும் விழா தைப் பொங்கல் விழா.

இங்ஙணம் மக்கள் வாழ்வோடு மின்னிக் கொண்டும், பின்னிக் கொண்டும் விளங்கும் வாழ்வியல் நிலைக்குப் பாயிரம் பாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்பது தெள்ளிதின் புலனாகும். அறிவியல்  அடிப்படையில் இது ஏற்றத் தக்கதுமாகும்.

- விடுதலை ஞாயிறு மலர், 11.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக