பக்கங்கள்

திங்கள், 13 ஜனவரி, 2020

5000 வருடங்களுக்கு முன் தமிழர் நாகரிகம் சிந்து நதி தீரத்தில் பண்டைத் தமிழர் வாழ்க்கைச் சிறப்பு

சர். ஜான்மார்ஷல் கூறும் விவரம் (சா.வே.தைரியம்)

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

பஞ்சாப் மாகாணத்தில் சிந்துநதி தீரத்திலே மகேஞ்சாதாரோ, ஹராப்பா என்னும் இடங்களிலே புராதன காலத்தில், பெரிய பட்டணங்கள் இருந்தன. பிறகு என்ன காரணத்தாலோ அவை அழிந்து மண்மேடுகளாக நேரிட்டு விட்டது. சிறிது காலத்துக்கு முன் இந்திய சர்க்காரின் புராதன ஆராய்ச்சி இலாக்கா அதிகாரிகள் அந்த மண் மேடுகளை தோண்டி பரிசோதனை செய்தார்கள். பழைய காலத்துப் பட்டணம் ஒன்று அங்கு பூமிக்குள் புதைந்து கிடப்பதாகக் காணப்பட்டது. பின்னும் ஆழமாகத் தோண்டி மண்ணை அப்புறப்படுத்திய போது பல பெரிய கட்டிடங்கள் வீடுகள் முதலியவற்றின் அடிப்பாகங்களும், அறைகளும், தெருக்க ளும் கட்டிடங்களுக்குள் பலவிதச் சாமான்களும் வெளிப் பட்டன. அந்தச் சாமான்களில் வீட்டுத் தட்டுமுட்டுகள், கத்தி, அரிவாள் தொழிற்கருவிகள், விளையாட்டுப் பொம்மைகள் முதலியன அதிக முக்கியமானவை.

ஆராய்ச்சியாளர் அவைகளைத் தற்கால முறைப்படி பரிசீலனை செய்ததில் அவை 5000 வருடங்களுக்கு முன் அங்கு பல நகரங்களைக் கட்டி நாகரிகத்துடன் வாழ்ந்து வந்த தமிழர்கள் அதாவது திராவிட மக்கள் உற்பத்தி செய்து கையாண்ட பொருள்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆரியத்தனம் இந்நாட்டில் தலையெடுப்பதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரிகம் இப்பொழுது இந்தியா வெனப்படும் பரத கண்டம் முழுவதும் சிறந்து விளங்கியது என்பதை இது நிரூபித்துக் காட்டுவதாகும்.

இந்தியப் புராதன ஆராய்ச்சி இலாக்காக்காரர் மகேஞ்சோதா ரோ, ஹாரப்பா ஆராய்ச்சிகளைப் பற்றி விரிவான அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள், அந்த அறிக்கை களின் முன்னுரையிலே தமிழர்களின் புராதன நாகரீகச் சிறப்பைப்பற்றி ஆராய்ச்சி வல்லுநர் சர்.ஜான் மார்ஷல் பின்வருமாறு கூறுகிறார்:

"இந்தியாவிலுள்ள ஆரியரல்லாத மக்கள் (அதாவது திராவிட மக்கள்) படையெடுத்து வந்து வெற்றிகொண்ட ஆரியரை விட நாகரிகத்தில் குறைந்தவர்கள் - கிரேக்க நாட்டு அடிமைகளைப் போன்றவர்கள். அதனால் தான் அவர்களுக்கு அடிமைகள் என்று பொருள் தரும் தாசர்கள் என்று பெயர் வந்தது என்று பலர் நம்பியிருந்தார்கள்.

திராவிடர்களைப்பற்றி அவதுறு

இந்த தாசர்கள் மொழியிலும் மத விஷயங்களிலும் ஆரியருக்கு மாறுபட்டவர்கள் - கறுப்பு நிறமும் தட்டை மூக்குமுள்ள காட்டுமிராண்டிகள். ஆனால் அவர்கள் போர் வீரர்களாயிருந்தார்கள். அவர்களுக்கு ஆடுமாடுகளும் கோட்டை கொத்தளங்களும் இருந்தன என்று இருக்கு வேதபாடல்களில் இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆரியர் பித்தலாட்டம்

இப்படி அந்த தாசர்கள் (திராவிடர்) கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தது உண்மைதானா என்று கேட்டால் "அவைகல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட வெறும் சுவர்களேயொழிய கோட்டையுமல்ல கொத்தளமுமல்ல. ஆரியர்கள் கிராம வாழ்க்கைப் பருவத்தில் பிற்போக்கான நிலைமையில் இருக்கும்போது தாசர்கள். (திராவிடர்) கோட்டை கொத்தளங்கள் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்க முடியாது" என்று வேதபுராண ஆசிரியர்கள் கருத்துச் சொல்லுவது உடல் தோற்றம், மத, சமூக நிலைமைகள் முதலிய எல்லாக் காரியங்களிலும் தாசர்கள் (திராவிடர்கள்) ஆரியர்களுக்குக் குறைந்தவர்களாகவே எண்ணப்பட்டு வந்தது. இந்தியாவின் நாகரீக உயர்வு சம்பந்தமாக அவர்க ளுக்கு (திராவிடர்களுக்கு) எவ்வித மதிப்பும் கொடுக்கப்பட வில்லை.

5000 வருடங்களுக்கு முன்பு

ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர் என்பவர்களைப் பற்றி ஒருவருக்குமே தெரியாத காலத்தில், சிந்து, பஞ்சாப்பிரதேசங்கள், மெசப்பட்டோமியா, எகிப்து தேசங் களை விட அதிக நாகரீகமுள்ளவைகளாய் விளங்கின.,

மகேஞ்சோதாரோ, ஹாரப்பா என்னுமிடங்களில் பூமி யைத் தோண்டி ஆராய்ந்தறிந்த உண்மைகள் இதை (அதா வது அக்காலத்தில் சிந்து, பஞ்சாப் பிரதேசங்களில் வாழ்ந்த திராவிட மக்களின் நாகரீகச் சிறப்பை) வெளிப்படுத்துகின்றன.

கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம், நாலாயிரம் வருடங் களுக்கு முன்பு சிந்து நதி தீரத்தில் வாழ்ந்த மக்கள் (திராவிட மக்கள்) - பெரிதும் அபிவிருத்தியடைந்த உயரிய நாகரீக முள்ளவர்களாயிருந்ததாகவும் அந்த நாகரீகத்துக்கும் ஆரி யருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாதென்றும் ஹாரப்பா, மகேஞ்சோதாரோ ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

திராவிட நாகரீகம்

சிந்து, பஞ்சாப் பிரதேசங்களின் புராதன மக்கள் (திராவி டர்) ஒழுங்கு படுத்தப்பெற்ற நாகரீகமான சமூகமாக நகரங் களில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அவர்களுடைய வாழ்க்கைக்கும் செல்வத்துக்கும் ஆதாரமான விவசாய வியாபாரத் தொழில்கள் பெரிதும் அபிவிருத்தி பெற்றிருந்தன. நாலா திசைகளிலும் வெகுதூரம் வரையில் பரவியிருந்தது அவர்களின் வியாபாரம். கோதுமை, பார்லி முதலிய தானியங்களை பயிரிட்டு வந்ததாகவும், ஈச்ச மரம் முதலிய பழ மரத்தோட்டங்கள் வைத்திருந்ததாகவும் தெரிகிறது.

எருமை, காளை, ஆடு, பன்றி, நாய், யானை, ஒட்டகம் முதலிய மிருகங்களை அவர்கள் பழக்கி நாட்டு மிருகங் களாக்கி உபயோகித்து வந்தனர்.

மாடுகள் பூட்டிய வண்டிகள் போக்குவரவு சாதனமாக உபயோகிக்கப்பட்டுவந்தன.

கைத்தொழில் சிறப்பு

அங்கு தங்கம், வெள்ளி செம்பு, ஈயம், தகரம் முதலிய உலோகங்கள் போதிய அளவு கிடைத்துவந்தன.

அவ்விடத்திய மக்களில் பலர் உலோக வேலைப்பாடு களில் மிகவும் வல்லவர்களாயிருந்தனர்.

நூல் நூற்றலும் நெசவுத் தொழிலும் பெரிதும் விருத்திய டைந்திருந்தன.

வில், அம்பு, வேல், மழு, கண்டகோடரி, கட்டாரி, கதை முதலியன அக்காலத்தில் உபயோகிக்கப்பட்டயுத்த ஆயுதங் களாகும்.

கோடரி, அரிவாள், மரம், அருக்கு வாள் உளி, சவரக்கத்தி முதலியன வெண்கலத்திலும், செம்பிலும் செய்யப்பட்டிருந் தன.  வீட்டு உபயோகத்துக்கான பாத்திரங்கள் மண்ணினால் செய்யப்பட்டு பலவித சித்திரங்கள் வரையப் பெற்றிருந்தன.

செம்பு, வெண்கலம், வெள்ளி முதலிய உலோகங்களில் செய்த பாத்திரங்களையும் உபயோகித்து வந்திருக்கிறார்கள். செம்பு, வெள்ளி, தங்கம் முதலிய உலோகங்களில் செய்து தந்தம் அல்லது இரத்தினக்கற்களில் செய்த ஆபரணங்களை பணக்காரர்கள் போட்டுக் கொள்வது வழக்கம்.

சாதாரண மக்கள் சிப்பியில் செய்த நகைகளை அணிந்து வந்ததாகத் தெரிகிறது.

மணலும் களிமண்ணும் சேர்ந்த சாந்து, சிப்பி முதலிய வைகளால் விளையாட்டுப் பொம்மைகள் செய்யப்பட்டன.

கல்விச் சிறப்பு

சிந்து, பஞ்சாப் பிரதேச புராதன (திராவிட) மக்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தது; அவர்களின் எழுத்து இந்தியாவில் தனிச்சிறப்புள்ளது.

பருத்தியைக் கொண்டு நூல் நூற்று, துணி நெய்வது முதல் முதலாக இந்த (திராவிட) மக்களுக்குத் தான் தெரிந் திருந்தது. அவர்களிடமிருந்து தான் மேற்குறித்த காலத்துக்கு 2000, 3000 வருடங்களுக்குப் பின் மேற்கு ஆசியாவிலுள்ள வேறு நாட்டினர் பருத்தியிலிருந்து துணி நெய்கிற வித்தையைக் கற்றுக் கொண்டார்கள். மகேஞ்சோதாரோவில், பொது மக்கள் வசிப்பதற்காகக் கட்டப்பெற்ற பெரிய பெரிய வீடுகளும் குளிப்பறைகளும் காணப்படுகின்றன. சலதாரை களும் உண்டு.

இவ்வாறே ஆலயம், அரண்மனை, சமாதி முதலியனவும் கட்டப்பட்டிருந்திருக்க வேண்டும்.

அந்தக்காலத்தில் நாகரீகமடைந்திருந்த மற்ற நாடுகளை விட மகேஞ்சோதாரோ பிரதேச (திராவிட) மக்கள் அதிக நாகரீகமும் வாழ்க்கை வசதிகளும் உள்ளவர்களாய் இருந் தார்கள் என்பதற்கு அங்கு காணப்படும் விசாலமான வீடுக ளும், குளிக்கிற அறைகளும் சலதாரைகளுமே போதிய சான்றாகும்.

மகேஞ்சோதாரோவில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் கீழ்த்திசை நாடுகளின் புராதன சரித்திரத்தி லேயே ஓர் புரட்சியை உண்டாக்கத் தக்கவை.

மகேஞ்சோதாரோ ஆராய்ச்சியினால் ஆச்சரியப்படத் தக்க இந்த நாகரீகத்தின் ஓர் பகுதி மாத்திரம் வெளிப் பட்டிருக்கிறது. மகேஞ்சோதாரோவில் இதுவரை வெட்டி ஆராய்ச்சி செய்யபட்ட நகரங்களுக்குக் கீழே அதிலும் புராதனமான நகரங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனால் அடியிலிருந்து வெள்ளம் பீரிட்டு வருவதால் அவற்றைத் தோண்டிப்பார்க்க முடியவில்லை. சிந்துவின் மற்றப்பாகங் களிலும், பலுச்சிஸ்தானிலும் தோண்டிப் பரிசோதித்தால் அவைகளைப்பற்றி விவரங்கள் வெளிப்படக்கூடும்.

இன்னொரு முக்கிய சிறப்பு என்னவென்றால் மகேஞ்சோதாரோ, ஹாரப்பாப் பிரதேச நாகரீகம் அப்பொழுதுதான் ஆரம்பித் ததல்ல. அதற்குமுன் பல்லாயிரம் வருடங்க ளுக்குமுன்பு இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்த நாகரீ கமாகும்.

மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் தமிழ் நாகரீகத்தின் தொன்மையையும் சிறப்பையும் தெளிவாக எடுத்துக் காட்டு கின்றன. இந்தியாவின் புராதன நாகரீகம் தமிழ் நாகரீகமே என்றும், தமிழ் நாகரிகமும் தமிழரும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வராமல் புராதன காலத்திலேயே இந்தியாவில் தமிழகத்திலே தோன்றி வளர்ந்தவர்களென்றும் ஏற்கனவே எடுத்துக்கூறியிருக்கிறோம். மகேஞ்சோதாரோ ஆராய்ச்சி அவ்வுண்மைகளையே வற்புறுத்துகிறது.

- விடுதலை: 19.3.1940

- விடுதலை நாளேடு, 13. 1. 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக