பக்கங்கள்

திங்கள், 29 ஜூலை, 2019

பழநி அருகே 30,000 ஆண்டு பழைமையான கல்திட்டை கண்டுபிடிப்பு

பழநி அருகே நடந்த தொல்லியல் ஆய்வில் 30,000 ஆண்டு பழைமையான கல்திட்டை கண்டுபிடிப்பு ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழரே என நிரூபிக்கும் ஆதாரம்



பழநி, ஜூலை 29, பழநி அருகே ஆயக்குடியில் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள் ளது ஆயக்குடி. இந்த ஊரின் தென்புறம் உள் ளது பொன்னிமலை. இந்த மலையின் அடி வாரத்தில் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் ராஜா ரவிவர்மா, பழநியாண்டவர் கல்லூரி பேராசிரியர் அசோகன், ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், செல்வராஜ் அடங்கிய குழுவினர் கல்திட்டையை கண்ட றிந்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ஆயக்குடி எனும் ஊரின் தென் எல்லை யில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது பொன்னிமலை.

சங்ககால ஆய்வேளிர் என்ற குடியினர் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான தடயத்தை நாங்கள் கண்டறிந்தோம். இதன் தொடர்ச்சி யாக பொன்னிமலை அடிவாரத்திலும் அதன் சுற்றுப்பகுதியிலும் ஆய்வு மேற் கொண் டோம். ஆய்வில் பொன்னிமலை கரட்டின் தென்கிழக்கு மூலையில், அடிவார பகுதியில் ஒரு பெருங்கற்கால நினைவுச்சின்னம் இருப் பதை கண்டறிந்தோம். இது கல்திட்டை அல்லது கல்மேடை வகையைச் சேர்ந்தது. இந்த கல்மேடை தமிழ் ஆயுத எழுத்தான ‘ஃ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பெருங் கற்கால காலகட்டம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது. தமிழகத்தில் பெருங் கற்கால காலகட்டத்தை தீர்மானிப்பதில் தொல்லியல் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெருங்கற்காலத்தில் இறந்துபோன ஒருவரின் நினைவாக இந்த ஆயக்குடி சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. இயற்கையான ஒரு பாறையின் மீது 2 உருண்டையான பாறாங்கற்களை வைத்து அவற்றை இணைக்க அதன்மேல் ஒரு மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்து இந்த சின்னத்தை அமைத்துள்ளனர்.

அத்துடன் பாறாங்கற்களுக்கு இடையே சிறிய கற்களையும் பிடிமானத்திற்கு பொருத்தி உள்ளனர். சுமார் 5 டன் எடையுள்ள இந்த பாறாங்கற்களை அமைத்த விதம் வியப்பை யும், இதன் பிரமாண்டம் திகைப்பையும் ஏற்படுத்துகிறது.

இதேபோன்ற ஒரு சின்னம் ஆஸ்திரே லியாவில் உள்ள ‘ஊரு’’ என்ற இடத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. ஊர் என்பது தமிழ்ச்சொல். அங்கு வாழும் ஆஸ்திரேலிய பழங்குடிகள் பேசும் மொழியும் தமிழை ஒத் துள்ளது. அவர்களின் நிறம், உருவ அமைப்பு, பழக்கவழக்கங்கள் தமிழர்களையே ஒத்துள் ளன. குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியா வின் கிழக்குப்பகுதியே ஆஸ்திரேலியா என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஊரு நினைவுச் சின்னம் ஆயக்குடி பொன்னி மலை நினைவுச் சின்னத்தை அச்சு அசலாக ஒத்திருப்பதால் ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழர்களின் வழித்தோன்றலே என்று கணிக்கலாம். தமிழர்களின் பண்டைய ஆயுதமான ‘களரி’’ என்பதும், ஆஸ்திரேலிய பழங்குடிகளின் ‘பூமராங்’ என்பதும் ஒரே வடிவமானவை. ஆஸ்திரேலிய பழங்குடிகள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் குறிகள், தமிழக சங்ககால இரவிமங்கலப் புதை குழிகளில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் அமைக்கப்பட்டிருந்த குறியீடுகளுடன் 100 சதவீதம் பொருந்துகின்றன. அண்மையில் ஆஸ்திரேலிய பழங்குடியினரிடமும், தமிழர் களிடமும் மேற்கொள்ளப்பட்ட எம் 130 வகையிலான டிஎன்ஏ பரிசோதனைகள், இருவருக்குமிடையே ரத்த உறவுகளை உறுதி செய்துள்ளன.

ஆஸ்திரேலிய நினைவுச்சின்னத்தை அந்நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் 30 ஆயிரம் வருடங்கள் முதல் 50 ஆயிரம் வருடங்களாக கணக்கிட்டுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் காலம் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரு டங்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒப்பீட்டுக் காலக் கணிப்பு அடிப்படையில் ஆயக்குடி சின்னத்தின் காலத்தையும் இதை ஒட்டியே கணிக்கலாம். எதற்கெடுத்தாலும் 2 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் என்று கணித்துக் கொண்டிருக்காமல் அறிவியல் முறைப்படி இதைப்போன்ற சின்னங்களின் காலத்தை ஆய்வு செய்து உறுதிபடுத்த நம் அரசுகள் உதவ வேண்டும். இதன்மூலம் தமிழ் மொழி யின் தொன்மையை 80 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு எடுத்துச் செல்ல முடியும். அத்துடன் நிலவியலாளர்களின் கண்டங் களின் நகர்வு கொள்கைக்கும், லெமூரிய ஆய் விற்கும் இந்த ஆயக்குடி நினைவுச்சின்னம் உலகெங்கும் பயன்படும் என்பது குறிப்பிடத் தக்கது.இவ்வாறு கூறினார்.

-  விடுதலை நாளேடு, 29.7.19

ஞாயிறு, 28 ஜூலை, 2019

தமிழகத்தில் முதல் முறையாக பெரிய அளவிலான சங்க காலக் கிணறுகள் கண்டறிதல்

திருவள்ளூர், ஜூலை 28 திருவள்ளூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் சங்க காலத்தைச் சேர்ந்த, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, செங்கற் களால் கட்டப்பட்ட கிணறு மற்றும் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் தொல்பொருள் துறையினர் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் அருகே கொசஸ்சலை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பட்டரைப்பெரும்புதூர் கிராமத்தில் நடந்த அகழாய்வில் கற்கருவிகள் மட்டுமின்றி இரும்புக் காலம் மற்றும் வர லாற்றுத் தொடக்க கால தொல் லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு கடந்த 2015-16-இல் தமிழக அரசின் தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணி முதல் முறையாக நடத்தப்பட்டது. அப்போது ஆனை மேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய கிராமங்களில் 300 சதுர மீட்டர் பரப்பளவில் நடந்த அகழாய்வில் 12 குழிகள் தோண்டப்பட்டன. அங்கு 203 வகையான தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-18-ஆம் ஆண்டிலும் பட்டரைப்பெரும் புதூரில் அகழாய்வு மேற்கொள்ளப் பட்டது. அப்போது, 525 சதுர மீட்டர் பரப்பளவில் 21 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
அங்கு 1,201 வகையான தொல் பொருள்கள் கிடைத்தன. அதில் பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற் கருவிகள், இரும்புக் கருவிகள், எலும்பு மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட மணிகள், பவளம், பளிங்கு, செவ் வந்திக்கல் போன்ற அரிய வகைக் கற்களால் செய்யப்பட்ட மணிகள், கல்மணிகள், சங்கு வளை யல்கள், சுடுமண்ணாலான பொம் மைகள், விளையாட்டுப் பொருள்கள், காதணிகள், சில்லுகள், செம்பினால் செய்யப்பட்ட பொருள்கள், யானைத் தந்தத்தால் ஆன பொருள்கள், எலும்பினால் செய்த அம்பு முனைகள், அம்மிக்கல், தீட்டுக்கற்கள், தேய்ப்புக் கற்கள், சோழ மன்னன் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக் காசு, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கும். இவை அனைத்தும் பூண்டி தொல் பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
2 ஆயிரம் ஆண்டு தொன்மையான கிணறு:
இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்காத வகையில், பட்டரைப் பெரும்புதூரில் சுடு மண்ணாலான உறை கிணறும், செங்கற்களால் கட்டப் பட்ட வட்ட வடிவ கிணறும் அக ழாய் வில் கண்டறியப்பட்டது.
தரைப்பகுதியில் இருந்து 2.85 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப் பட்ட இக்கிணறு, பழங்காலத்தில் இருந்தது போல் செங்கற்கள் உடையாமல் அப்படியே உள்ளது. இதன் விட்டம் 2.60 மீட்டர் (வெளிப்புறம்) அளவில் உள்ளது. கிணற்றின் மொத்த ஆழம் 3.91 மீட்டர். செங்கற்களின் கட்டுமானம் 56 அடுக்குகளைக் கொண்டுள்ளது.
முதல் முறையாக...:
தமிழகத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த இதுபோன்ற பெரிய அள விலான கிணறு கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும். செங்கற்களால் கட்டப் பட்ட கிணறு கண்டறியப்பட்டுள்ளது அகழாய்வின் சிறப்பம்சம்.
இது பழந்தமிழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், நீர் மேலாண்மைக்கு உதாரணமாகவும் திகழ்கிறது. இதை பொதுக் கிணறாக மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதிலிருந்து அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது.
எனினும், உறைகிணற்றையும், செங்கற் களால் ஆன கிணற்றையும் பாதுகாப் பதற்கு இதுவரை நட வடிக்கை எடுக்கப்படவில்லை.
- விடுதலை நாளேடு, 28.7.19

புதன், 24 ஜூலை, 2019

தமிழ்நாடு பெயர் மாற்றம் சட்டமன்ற நடவடிக்கைகள்



"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ் நாடு சட்டசபையில் நிறைவேறியது. காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ் நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது.

"மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபை யில் 18-.7-.1967 அன்று முதல்_அமைச் சர் அண்ணா கொண்டு வந்தார்.

கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா. ஆதித்தனார் தலைமை தாங்கினார். "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். பாலசுப்பிரமணியம் (கம்யூனிஸ்டு) பேசுகையில், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக் கக் கூடாது" என்று கூறினார்.

ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், "தமிழ் நாடு" பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத் தால் அவர் உயிர் இழந்தார்" என்று குறிப்பிட்டார். தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:

"இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக உயிர்ப்பூர்வமாக ஆதரிக் கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்க லாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித் திருந்தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.

பாரதிக்கு தாய் நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக் கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக் காதா? முதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது.

அடக்கிக்கொண்டேன். "தமிழ் நாடு" என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை" என்று இருப்பதை "திருவள்ளுவர் கோட்டை" என்று மாற்ற வேண்டும்."

இவ்வாறு ம.பொ.சி. கூறினார்.

விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசுகையில் அண்ணா கூறியதாவது:

"இந்த நாள் ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.

இதை இந்த சபையில் நிறை வேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக் கொண்டு இருந்தபோது, "தமிழ் நாடு" என்ற பெயரை சட்டமன்றத் தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.

10 நாட்களுக்கு முன்னர் நாடா ளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட் ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துட னும் "டமில் நாட்" (தமிழ் நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல.

தமிழின் வெற்றி. தமிழரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ் நாட்டு வெற்றி. இந்த வெற் றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும்.

அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது. சங்கரலிங்கனாருக்கு நினை வுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.

நாம் இப்படி பெயர் மாற் றத்துக்குப் பேராதரவு அளித்ததற் காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோ சனை சொல்லாமல் இதற்கு பேரா தரவு அளிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அண்ணா கூறினார்.

பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப் பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானம் ஒருமன தாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்ட பமே அதிரும் வண்ணம் உறுப்பி னர்கள் கைதட்டி ஆரவாரம் செய் தார்கள். பின் அண்ணா எழுந்து, "தமிழ்நாடு" என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ் நாடு" என்று 3 முறை குரல் எழுப் பினார். எல்லா உறுப்பினர்களும் "வாழ்க"    என்று குரல் எழுப்பினார்கள்.

சபை முழுவதிலும் உணர்ச்சி மயமாக காட்சி அளித்தது.

-  விடுதலை நாளேடு, 18.7.19

செவ்வாய், 23 ஜூலை, 2019

நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 22- மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்ட தினமான நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன் தினத்துடன் நிறைவடைந்தது. கூட்டுறவு, பொதுப்பணித் துறை, செய்தி மற்றும் விளம் பரத்துறை சார்பில் பல அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

”ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில், ஆண்டு தோறும் நவம்பர் 1ஆ-ம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. ஏற்கெனவே, நவம்பர் முதல் தேதியை, கருநாடகா, ஆந் திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகிறது.

தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் இருக்கை அமைக் கப்படும் மற்றும் திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

 - விடுதலை நாளேடு, 22.7.19

கூடிய விரைவில் கம்போடியப் பள்ளிகளில் பாடத்திட்டமாகி ஒலிக்கவிருக்கிறது திருக்குறள்!



நாம்பென், ஜூலை 22- கடந்த மாதம் கம்போடிய அரசு உயரதிகாரிகள் சிலர் தமிழகம் வந்து சென்றனர். அவர்கள் தமிழகம் வந்ததன் நோக்கம், பல நூற் றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த பல்லவ மன்னர்களுக்கும், கம்போடிய மன்னர்களுக்கும் இருந்ததாகக் கருதப் படும் அரசியல் மற்றும் கலாச்சார ரீதி யிலான தோழமை உறவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் பொருட்டே! அப்படி அமைந்த பயணத்தில்  அன்றைய பல்லவ மன்னர்களுக்கும், கம்போடிய மன்னர்களுக்கும் இருந்த நட்புறவைப் பறைசாற்றும் வண்ணம் பல சான்று களை அவர்கள் நேரில் கண்டு சென் றிருந்தார்கள்.

அந்தப் பயணத்தின் எதிரொலியாகக் கூடியவிரைவில் கம்போடியாவில் ரூ 25 கோடி செலவில் சோழ மன்னன் முத லாம் ராஜேந்திர சோழனுக்கும், கம் போடியாவின் கெமர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சூர்யவர்மனுக்குமான நட்பைப் பறைசாற்றும் விதமாக இருவருக்குமாக சிலைகளை உருவாக்கி அந்தச் சிலைகளை 2022 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறப்புவிழா நடத்தவிருப்பதாக கம்போ டிய அரசு அறிவித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் கம்போடி யாவுக்குமான உறவுப்பாலத்தை மேலும் உறுதியாக்கும் விதத்தில் உலகப் பொது மறையாம் திருக்குறளை கம்போடிய அரசுப் பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்கவும் ஆணையிடப்பட்டிருப்பதா கத் தகவல். இந்தச் சீரிய பணியை அங்கோர் தமிழ்ச் சங்கமும், பன்னாட்டுத் தமிழர் நடுவமும் இணைந்து நடத்த விருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன. மன்னர்களின் சிலை திறப்பு விழா நிகழ்வை கம்போடிய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகமும் சீனு ஞானம் ட்ராவல்ஸும் ஏற்று நடத்தவிருப்பதாக  கம்போடிய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1330 குறள்களைத் தன்னகத்தே கொண்டுள்ள திருக்குறள் இதுவரை உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகின் எந்தப் பகுதியிலிருக்கும் மக்களுக்கும் பொருத்த மான வாழ்வியல் நீதிநெறிகளைத் தன்ன கத்தே கொண்டிருக்கும் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்வதில் வியப்பேதும் கொள்ளத் தேவையில்லை. கூடிய விரைவில் திருக்குறள் இன்பத்தை கம்போடியர்களும் அறியவிருக்கிறார் கள் என்பது அதன் பெருமைக்கு கிடைத்த மற்றொரு வெற்றி.

 - விடுதலை நாளேடு, 22.7.19

வியாழன், 18 ஜூலை, 2019

தந்தைபெரியாரின் மொழி குறித்த சிந்தனைகள்

#மணியரசம்_டோஸ்_நெ_10

"தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ப் படிக்காதீர்கள்; ஆங்கிலத்தைப் படியுங்கள், வீட்டில் மனைவியிடம் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள்” என்று 1968 – 1969 இல் கூட திரும்பத் திரும்ப எழுதியவர், பேசியவர் பெரியார்.
                                                -மணியரசன்

தந்தைபெரியார் பேசியதை, எழுதியதை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டியும் ஒட்டியும் அவர் மீது அவதூறு பரப்புவதற்கு கொஞ்சம் கூட கூச்சப்படுவதில்லை இவர்கள்.

தந்தைபெரியாரின் மொழி குறித்த சிந்தனைகளை மறுப்பதும், மாற்றுக் கருத்தை முன்வைப்பதும் கருத்துரிமை என்பதை மறுக்க இயலாது. ஆனால் பெரியாரின் முழுநேரத் தொண்டே மொழியை எதிர்ப்பதுதான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைத்தால் அது நடக்காது.

தந்தைபெரியார் மொழியை பற்றி பலமுறை பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவரது கருத்து அந்தந்த காலத்தின் அரசியல், அப்போது பார்ப்பனர்கள் கையாண்ட வழிமுறைகள், தமிழக ஆட்சியாளர்களின் போக்கு, தில்லி அரசின் செயல்பாடுகள்,மற்ற கட்சிகளின் நிலை என அனைத்து சூழல்களையும் கருத்தில் கொண்டு அதற்கான எதிர்வினைகளாக வெளிப்பட்ட சிந்தனைகளாகும்.

கடவுள் மத பக்தர்களுக்கு பெரியாரின் பகுத்தறிவு கருத்துகள் கசக்கும். பெண்களை அடக்கியாள்வதே ஆண்மை என்று கருதுவோர் பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளை ஏற்க இயலாது. ஜாதிப் பெருமை பேசுவோருக்கு பெரியாரின் ஜாதி ஒழிப்புக் குரல் இனிமையாக இருக்காது. அவ்வளவு ஏன்? தீவிரமாக காதலிப்பவர்களுக்கு காதல் குறித்த பெரியாரின் கருத்துகள் உவப்பாக இருக்காது. அதைப் போலவே மொழிப் பற்றாளர்கள் பெரியாரின் மொழி குறித்த கருத்துகளை ஏற்கத் தயங்குவது இயல்பு.

மொழிவழி தேசியம் பேசுவோர் இந்த இடத்தில் சறுக்கிடத்தான் செய்வார்கள். ஏனெனில் அவர்களின் அரசியல் அடித்தளமே மொழியில்தான் அமைந்துள்ளது.அளவற்ற மொழிப்பற்றே அவர்களின் இயங்கு விசையாக உள்ளது.எனவே அவர்கள் பற்றுதலற்ற நிலையிலும், பக்க சார்பற்ற முறையிலும் மொழியை அணுகுதல் இயலாது. இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். எந்த மொழியானாலும் அதன் மீது அளவு கடந்த பற்றுள்ளவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஆய்வியல் நோக்கில் செல்லமுடியாது. அதிலும் தமிழை பொறுத்தவரை மொழிப் பற்று என்ற நிலையையும் தாண்டி பலருக்கு மொழி பக்திதான் மேலோங்கி இருக்கிறது.

இந்த நிலையில், மொழிகுறித்தும், அதன் பயன்பாடு குறித்தும், வளர்ச்சி- மாறுதல் பற்றியும் பெரியார் உட்பட எவரும் சிந்திக்கவோ,பேசவோ,எழுதவோ கூடாதென்பதும், அப்படி சிந்திப்பவர்களை மொழிப் பகைவர்களாக சித்தரிப்பதும் வலதுசாரித் தன்மைக்கு உரம் சேர்க்குமேத் தவிர வருங்காலத் தலைமுறைக்கு ஒருபோதும் வளம் சேர்க்காது!

மனிதப் பற்று, வளர்ச்சிப் பற்று தவிர வேறெந்த பற்றுமற்ற தந்தைபெரியாரின் மொழிச் சிந்தனைகள் இன்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அடுத்ததடுத்த தலைமுறைகள் மொழியையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகும்போது இதெல்லாம் சாதரண சங்கதியாகி விடும்.

காட்டுமிராண்டி காலத்திலேயே இருக்காதே! காலத்திற்கேற்ப மொழியை திருத்து என்கிறார் பெரியார்.
இதில் என்ன தவறு? இதை தவறு என்று சொல்பவர்கள் அய்ந்தாம் தலைமுறை 5G     அலைபேசியைத்தானே பயன்படுத்துகிறார்கள்? மொழி மட்டும் முதல் தலைமுறையாகவே இருக்க வேண்டுமா? அப்படி இருக்கத்தான் முடியுமா?

இன்று ஆங்கிலப் பேச்சு பயிற்சி மய்யங்களில் (Spoken English) இங்கிலீஷ் பேசுவதற்கு எளிமையான வழியாக சொல்லித் தரப்படுவது முதலில் வீட்டில் எல்லோரிடமும் இங்கிலீசில் பேசுங்கள். தவறாக பேசினாலும் பரவாயில்லை. வீட்டில் பேசிப் பழகப் பழக பொதுவெளியில் பிழையின்றி உங்களால் இங்கிலீஷ் பேசமுடியும் என்பதுதான்.

பயிற்சிக்கு பணம்கட்டி இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு நடைமுறை படுத்துகிற நமக்கு வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பெரியார் தனக்கே உரிய நடையில் எளிமையாகச் சொல்வது கசக்கிறது!

தகவல் தொழில்நுட்பத் துறை, கணிணித் துறை, அயல்நாட்டு வேலைவாய்ப்புகள் என உயரம் தொடும் நம் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கை வசமானது எப்படி என்பதை சிந்தித்து பாருங்கள். அதைவிடுத்து பெரியாரை தமிழ்மொழியின் எதிரியாக சித்திரம் தீட்டுவது நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தமிழைப் புகழ்ந்து கொண்டே தமிழர்க்கு இரண்டகம் செய்வோரை நண்பர்களாகவும், தமிழ் மீது  விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டே தமிழ் காக்கவும், தமிழர் நலன் காக்கவும் தொடர்ந்து களத்தில் நிற்போரை எதிரிகளாகவும் கருதுகிற  நம் மக்களின் மொழி உணர்ச்சியை மிக இலாவகமாக மொழிப் பற்றாகவும், மொழி பக்தியாகவும் மாற்றி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் பார்ப்பனர்களே!
எப்போது தங்களுக்கு தமிழ்மொழி தேவை என்று கருதினார்களோ அப்போது தமிழுக்கு ஒப்பனை செய்து உலவ விட்டவர்களும் பார்ப்பனர்களே!
வரலாற்றை புரட்டிப் பாருங்கள். தமிழுக்கு இந்த தெய்வீகப் பெருமை வந்தது எப்போது? என்று தெரியும்.

ஆயிரக்கணக்கான சங்க இலக்கிய பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடிப் பொறுக்கியெடுக்கும் வகையில்தான் தமிழ் மொழி குறித்த சொற்றொடர்கள் வருகின்றன. திருக்குறளில், அறநெறி இலக்கியங்களில் தமிழ் குறித்து புளகாங்கித பெருமைகள் ஏதுமில்லை. மொழியென்பது தன் உணர்வுகளையும், தான் அறிந்தவைகளையும் பிறருக்கு வெளிப்படுத்தும் நுட்பமான ஒரு அழகியல் கருவி என்ற வகையில்தான் பழந்தமிழர்கள் மொழியை கையாண்டனர்.

அந்த தெளிவு அன்றைக்கு இருந்ததால்தான் அறிவுத் தேடலுக்கு வழிவகுத்த புத்தரின் சிந்தனைகள்
மொழி கடந்து இங்கு வேரூன்றி வளர்ந்தது. இன்றைய வரை தமிழகத்தில் ஊருக்கு ஊர் தோண்டத் தோண்ட புத்தர் சிலைகள் கிடைக்கிறது.

பவுத்தம்,சமணம் போன்ற வேத எதிர்ப்பு கொள்கைகள் நிலைபெற்று செழித்த போது அதை அறிவு வழியிலும், அறவழியிலும் எதிர் கொள்ள இயலாத பார்ப்பனர்கள் மொழியை கருவியாக கொண்டு வீழ்த்தினார்கள்.
ஆழ்வார்கள்- நாயன்மார்களின் பக்தி இலக்கிய காலத்தில்தான் தமிழுக்கு தெய்வீகப் பெருமை ஏற்றப்பட்டது.
"சங்கத்தமிழ்" "தெய்வத்தமிழ்" "தேமதுரத் தமிழ்" செத்தவரை பிழைக்க வைத்திடும் "சாகாவரம் பெற்றத் தமிழ்" சிவனிடமிருந்து பிறந்த "செந்தமிழ்"  என்ற புகழாரங்கள் அப்போதுதான்  மொழி மீது சூட்டப்( சுமத்தப்)பட்டது.

மக்களிடம் செல்வாக்கு பெற்ற
பவுத்த,சமண நெறிகளை வீழ்த்துவதற்கு தமிழ் மொழியையும், தமிழ் அரசர்களான சோழர்களையும்-பாண்டியர்களையும்
பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொண்டனர். பவத்தர்கள் சமணர்கள் தமிழறியாதவர்கள் என்பதுதான் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட முதன்மையான தாக்குதல்.

ஊன்றி கவனித்தால் ஒன்று புரியும்.
சோழர், பாண்டியர் ஆட்சி முடிவடைந்த பின்னர்., பவுத்தம்- சமணம் வீழ்ந்த பிறகு ஆழ்வார்கள் எவரும் அவதாரம் எடுக்கவில்லை.நாயன்மார்கள் ஊர்தோறும் நெஞ்சுருக பதிகம் பாடவில்லை.
கம்பராமாயணம், பிரபந்தங்கள், தேவாரம், திருவாசகம் போன்ற பெரும் இலக்கியங்கள் தோன்றவில்லை.

தமிழ் மண்ணில் விஜயநகர தெலுங்கர்கள் புதிய மன்னர்களாக எழுந்தார்கள்...
பார்ப்பனர்களின் வேத மதத்திற்கு இசுலாமியர்கள் புதிய எதிரிகளாக முளைத்தார்கள்.
நியாயமாக பார்த்தால் பிறமொழி ஆட்சி தமிழ்நாட்டில் நிலைபெறும்போதுதான் தமிழ் உணர்ச்சி பீறிட்டிருக்க வேண்டும்!
பக்தி இலக்கிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்க வேண்டும்!
அழகுதமிழ் பாமாலை கொண்டு அடியார்கள் ஆண்டவனை தொழுதிருக்க வேண்டும்! ஆனால் நடந்தது என்ன?

விஜயநகர பேரரசை அண்டிப் பிழைக்கவும், சுல்தான்களை எதிர்க்கவும் இப்போது பார்ப்பனர்களுக்கு தமிழ்மொழியும், அதன் பெருமைகளும் தேவைப்படவில்லை. எனவே
இந்த காலகட்டத்தில் எந்த மணிக்கதவும் தமிழ் பாடி திறக்கவில்லை!
தமிழ் பாடல் கேட்டு முதலைகள் வாய்பிளந்து நிற்கவில்லை!
சிவன் நேரடியாக வந்து எவருக்கும்
தமிழ் பாட முதல்அடி எடுத்துக் கொடுக்கவில்லை!
பைந்தமிழ் கேட்டு விஷ்ணு பைநாகப் பாயை சுருட்டிக்கொண்டு கிளம்பவில்லை!

இந்த காலகட்டத்தில் பார்ப்பனரல்லாத உழைக்கும் மக்களான ஏழை எளியவர்கள்தான் தமிழின் உயிரை இழுத்து பிடித்து காப்பாற்றி வந்தனர்.

அடுத்து வந்தது வெள்ளையர் ஆட்சி!
மிலேச்ச பாஷையை கற்று, கடல் கடந்து கல்வி பெற்று அரசு துறைகளை ஆக்ரமித்தனர் பார்ப்பனர்கள்.
தமிழைப் பற்றிக் கொண்டு ஆங்கிலம் அறியாமல் தடுமாறி வீழ்ந்து கிடந்தனர் தமிழர்கள்.

பார்ப்பனர்களுக்கு சிறுபருவம் முதல் இரண்டுவகையான வாழ்க்கை முறைகள் கற்பிக்கப் படுகிறது. ஒன்று வைதீகம், மற்றொன்று லவுகீகம்.

வேத பெருமை பேசு, உபநயனம் செய், பிராமண தர்மத்தை விடாதே, வர்ணாஸ்ரமமே உயர்ந்தது, கோவில்,கடவுள்,பூஜைகள், மதம்  எதையும் கேள்வி கேட்காதே. இது வைதீகம்.

இது எதுவும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லையெனில் அனைத்தையும் ஓரமாக வை. அது நமக்கு சொந்தமான முழு உரிமையுடையது.எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆங்கிலம் படி, கடல்கடந்து
அயல்நாடு செல், அண்டிப் பிழைத்தாலும் உயர் பதவிகளை கைப்பற்றத் தவறாதே.
ஜெர்மன், பிரஞ்சு, என எந்த மொழி உயர்விற்கு வழியோ முடிந்தால் அதையும் கற்றுக் கொள்,
பாம்புக்கறி தின்கிற ஊருக்கு சென்றால் நடுத் துண்டை எடுத்துக் கொள்! இது லவுகீகம்.

நம் மக்கள் வீழ்ந்த இடம் இதுதான்.
நமக்கு எதை பிடித்தாலும் உடும்பு பிடி!அது கடவுள்,மதம், மொழி எதுவானாலும் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்வது மலையை புரட்டுவது போன்ற மலைப்பு.
இந்த மலைப்பை உடைத்து
உலகியலுக்கு ( லவுகீகத்திற்கு) ஏற்றபடி
உயர்வை நோக்கி நம்மை உந்தி தள்ளியவைதான் தந்தை பெரியாரின் சிந்தனைகள்.

அப்படியானால் பெரியாருக்கும் அவரது தொண்டர்களுக்கும் மொழிப்பற்று இல்லையா? என்று கேட்டால் இருக்கிறது.
எப்போதெல்லாம் தமிழ்மொழிக்கு இன்னல் நேருகிறதோ அப்போதெல்லாம் போராட்டக் களத்தில் முன் வரிசையில் நிற்கிற அளவிற்கும், அரசியல் பண்பாட்டுத் தளத்தில் எந்த அளவிற்கு மொழியை பயன்படுத்திட வேண்டுமென்று அறிந்து கொள்கிற அளவிற்கும் மொழிப் பற்று இருக்கிறது.

ஏற்போரின் எண்ணிக்கையை கொண்டு தீர்மானிக்கப்படுபவை அல்ல பெரியாரின் கருத்துகள்!