பக்கங்கள்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு!-6.8.16

சென்னை பெரியார் திடலில் மொழி இனவுணர்வின் சங்கமம்
கலாச்சாரம் என்று சொல்லி நாட்டைப் பிளவுபடுத்துவதா?

மனுதர்மம் மீண்டும் ஆள அனுமதியோம் - எச்சரிக்கை!

கொட்டு முரசு கொட்டினர் கொள்கைச் சீலர்கள்
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். உடன் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.), இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், எழுத்தாளர் பழ.கருப்பையா, பேரா.சுப.வீரபாண்டியன்,  பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், உ.பலராமன் (காங்), புலவர் பா.வீரமணி, திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் டாக்டர் சு. பிறைநுதல் செல்வி உள்ளனர். (6.8.2016).


சென்னை, ஆக.7 புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி சமஸ்கிருதத்தையும், இந்துக் கலாச்சாரத்தையும் திணிக்கும் மத்திய பிஜேபி அரசின் திட்டத்தை எதிர்த்து முறியடிப்போம் என்று சூளுரைத்தனர் கல்வியாளர்களும், கொள் கையாளர்களும்.
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய கல்வித் திட்டம் மற்றும் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று மாலை கருத்தரங்கமும் மற்றும் மாநாடும் நடைபெற்றன-.

புதிய கல்விக்கொள்கை ஒரு பார்வை எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (6.8.2016) மாலை 4.30 மணியளவில் தொடங்கியது. சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை வரவேற்றார்.
திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சாதிக் தலைமை வகித்தார்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி, எழுத்தாளர் வே.மதிமாறன்,  அருட்சகோதரி ஆர்த்தி ஆகியோரின் உரையைத் தொடர்ந்து திமுக மாநில மாணவரணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கின் முடிவில் திராவிடர் கழக மாநில மாணவரணி துணை செயலாளர் நா.பார்த்திபன் நன்றி கூறினார்.
சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு
தொடர் நிகழ்வாக சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இணைப்புரையை மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்கினார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

மறைமலையடிகள்
படம் திறப்பு

தமிழ்க்கடல் மறைமலையடிகள் படத்தைத் திறந்துவைத்து மேனாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் உரையாற்றினார்.

சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் உரை வீச்சாக பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பேசினார்கள்.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் உ.பல ராமன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன், எழுத்தாளர் பழ.கருப்பையா, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், புலவர் பா.வீரமணி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி உரைவீச்சுடன் நன்றி தெரிவித்தார்.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரசு கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகம்,  கிறிஸ்தவ நல அமைப்புகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு,தனித்தமிழ் ஆர்வலர்கள், தமிழறி ஞர்கள் என அரசியல் கட்சிகள், மதங்கள் பேதங் களின்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டோம் என்று பெருந்திரளாகத் திரண்டு நிகழ்ச்சிகள் முடியும்வரை அறிஞர் பெருமக்களின் கருத்து வீச்சுகளை செவிமடுத்து உணர்ச்சிப் பிழம்பாயினர். மன்றம் நிறைந்து வெளியிலும் ஏராளமானவர்கள் நின்று கருத்துரைகளை செவிமடுத்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்களின் தலைமையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழர்களாக ஒன்றுபட்டு சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும், புதிய கல்வித்திட்டத்தை எதிர்த்தும் தலைவர்கள் அறிஞர்பெருமக்கள் போர் முரசம் கொட்டி, வென்றே தீருவோம் என்று சூளுரைத்தார்கள்.
இந்திய மத்திய அரசு இந்தியைத் திணித்தபோது தந்தை பெரியார் தலைமையில் தமிழகம் திரண்டு எதிர்த்துப்போராடி இந்தித்திணிப்பை முறியடித்தது.
ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை தந்தை பெரியார் கட்டளையின்பேரில் ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்த்து களம் கண்டு அத்திட்டத்தை முறியடித்தனர்.
தந்தை பெரியாருக்குப் பின்னர் இப்போது மீண்டும் இந்தி, சமஸ்கிருதம் திணிப்புகள், நவீன குலக்கல்வித் திட்டமாக இந்துத்துவாக் கல்வித் திட்டம் ஆகியவற்றை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கட்சிகள், ஜாதி, மத பேதங்களின்றி முறியடித்து வெற்றி பெறுவோம் என்று தமிழர்கள் ஒன்றுபட்டு போர் முரசம் கொட்டி உணர்ச்சிப்பிழம்பாக திரண்டுவிட்டார்கள்.
அதன் ஒரு கட்டமாக அனைத்துக்கட்சிக்கூட்டம் 28.7.2016 அன்று சென்னை பெரியார் திடலில் கூடியது. 

அனைத்துகட்சிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை (8.8.2016) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டின் தலைமையுரையில் தமிழர் தலைவர் அவர்கள் பல்வேறு தகவல்களுடன் சிறப்புரையாற்றினார். அவர் உரையில்: மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக சமஸ்கிருதத் திணிப்பு, புதிய கல்வித்திட்டம் என்பதன்பெயரால் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது நாட்டின் ஒருமைப்பாட்டைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்றார். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் திணிக்கப்படும் ஒன்றை, இந்துக் கலாச்சாரத்தை ஒருபோதும் அனுமதியோம் என்றும் எச்சரித்தார்.
நூல்கள் வெளியீடு

இந்தி ஆதிக்க எதிர்ப்பு வரலாற்றை விளக்கும் நூல்கள் மற்றும் சமஸ்கிருத ஆதிக்கத்தை, பண்பாட்டுப் படையெடுப்பை விளக்கும் நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன.  திமுக அமைப்புச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட எழுத்தாளர் பழ.கருப்பையா பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பார்வையாளர்கள் பகுதியிலிருந்து பலரும் மேடையில் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.

1937ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் வரலாற்றை விளக்கும் நூலான தமிழன் தொடுத்தப் போர், 1948ஆம் ஆண்டு இரண்டாம் இந்தி எதிர்ப்புப்போரின்போது நடைபெற்ற மாநாட்டில் அறிஞர்பெருமக்களின் சொற்பொழிவு திரட்டு நூலான இந்திப் போர்முரசு, இந்தி ஆட்சிமொழியாக ஆதிக்கம் செலுத்தினால் ஏற்படும் ஆபத்துகளை விவரிப்பதுடன், இந்தி ஆதிக்க எதிர்ப்பு வரலாற்றை விளக்கும் நூலான   மொழி உரிமை ஆகிய நூல்களும், மொழிக்கலப்பு, பண்பாட்டுப்படையெடுப்பு, தமிழர் வாழ்வியல், விழாக்களில் சமஸ்கிருத ஆதிக்கம் ஆகியவற்றை விளக்கும் நூலான சமஸ்கிருத ஆதிக்கம், செத்த மொழியான சமற்கிருதம் இல்லாமல் தமிழ்மொழிக்கு தனித்து இயங்கும் ஆற்றல் உண்டு, இணைப்பு மொழிக்கான தகுதி சமஸ்கிருதத்துக்கிடையாது என்பதை விளக்கும் நூலான சமஸ்கிருதம் இணைப்பு மொழியா? சமஸ்கிருதம்பற்றி தந்தை பெரியாரின் ஆய்வுக்கட்டுரை தாங்கிய ஒரு சிறு நூல் உள்ளிட்ட நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன. ரூபாய் 300 மதிப்புள்ள நூல்கள் ரூபாய் 250க்கு மாநாட்டில்  வழங்கப்பட்டன.
நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்
மேனாள் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் ப.அரங்கசாமி, பகுத்தறிவாளர் கழகம் தங்க.தனலட்சுமி, மருத்துவர் தேனருவி, தமிழறிஞர் திவாகரன்,  மேனாள் மேயர் சா.கணேசன், சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம், புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி உள்ளிட்ட தமிழக மாநில பகுத்தறிவாளர் கழக  செயலாளர் மு.ந.நடராசன், கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், சேரலாதன், பசும்பொன் செந்தில்குமாரி, தாம்பரம் இலட்சுமிபதி, காஞ்சி கதிரவன், வி.வளர்மதி, தாம்பரம் மோகன்ராஜ், விழுப்புரம் மண்டல தலைவர் க.மு.தாஸ், மேனாள் நீதிபதி பரஞ்சோதி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, வடசென்னைமாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் உள்பட ஏராளமானவர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட நூல்களை வாங்கி பயன்பெற்றனர்.

கலந்துகொண்டவர்கள்

திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் வேழவேந்தன், கவிஞர் காசி மாணிக்கம், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, பெண்ணியலாளர் ஓவியா, ஊடகவியலாளர் கோவி.லெனின், கழக மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, மேற்கு மண்டல அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மருத்துவர் கவுதமன், பேராசிரியர் ப.காளிமுத்து, திராவிட இயக்க தமி£ர் பேரவை மாறன், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞர்கள் ஆ.வீரமர்த்தினி,  சு.குமாரதேவன், ந.விவேகானந்தன், வேலூர் மண்டல செயலாளர் கு.பஞ்சாட்சரம், வேலூர் மாவட்டத் தலைவர் சிவக்குமார், போளூர் பன்னீர்செல்வம்,  பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.வீரபத்திரன், எம்.பி.பாலு, தி.வே.சு.திருவள்ளுவன், வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தய்யன், தென்சென்னை இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, தே.ஒளிவண்ணன், கும்மிடிப்பூண்டி செ.உதயக்குமார், திண்டிவனம் கழக மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி, செயலாளர் நவா.ஏழுமலை, பா.தென்னரசு, என்னாரெசு பிராட்லா உள்பட தென்சென்னை, வட சென்னை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு கழக மாவட்டங்களிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

மலையாள மொழியில் இயக்க நூல்கள்

இயக்க வெளியீடுகளான தந்தை பெரியார் சுயசரிதை (ஆத்ம கதா) மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய புட்டபர்த்தி சாய்பாபா...? பெரியாரும் அம்பேத்கரும் ஆகிய நூல்களை மைத்ரி பதிப்பகத்தின் சார்பில் மலையாளத்தில் வெளியிட்ட லால்சலாம் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளித்து லால்சலாம் மகிழ்ந்தார்.
மாநாட்டில் கலந்து கொண்டோரின் ஒரு பகுதி
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் படத்தினை  தமிழர் தலைவர் தலைமையில் முனைவர் அவ்வை நடராசன் திறந்து வைத்தார். உடன் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.), பேரா. சுப. வீரபாண்டியன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், எழுத்தாளர் பழ. கருப்பையா, உ. பலராமன் (காங்), புலவர் பா. வீரமணி, திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கவிஞர் கலி. பூங்குன்றன்,  கழகப் பொருளாளர் டாக்டர் சு. பிறைநுதல் செல்வி உள்ளனர். (6.8.2016).
சமஸ்கிருதம் எதிர்ப்புத் தொடர்பான இயக்க நூல்களை டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. வெளியிட எழுத்தாளர் பழ. கருப்பையா பெற்றுக் கொண்டார். (6.8.2016)
திராவிடர் கழகத்தின் வெளியீடுகளான 'புட்டபர்த்தி சாய்பாபா'..?, பெரியார் எழுதிய சுயசரிதை மற்றும் பெரியார் பற்றி பெரியார், பெரியாரும் -- அம்பேத்கரும் ஆகிய மூன்று நூல்களை கேரள மாநிலத்தில் உள்ள மைத்ரி பப்ளிகேசன் சார்பில் லால்சலாம் அவர்கள் மலையாளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நூல்களை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை -6.8.2016)
-விடுதலை,7.8.16

சனி, 15 அக்டோபர், 2016

திருக்குறள் தொடர்பான செய்திகள்:





திருக்குறள் தொடர்பான செய்திகள்:
-------------------------------------
1. திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள்.
2. திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள்.
3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக்கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.
4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.
5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.
6. திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.
7. திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.
8. திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.
9. திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.
10. திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.
11. திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.
12. குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.
13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.
14. நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.
15. சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.
16. திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.
17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளது.
18. திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.
19. திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.
20. திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.
21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு சிரோன்மணி.
22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக்கனி என்பர்.
24. திருக்குறளை 1812 ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.
25. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.
26. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதிதாசன்.
27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.
28. திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.
29. திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.
30. திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.
31. திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுது ஔ
32. திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.
33. திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.(மனிதப் பண்பை குறிப்பிடுகிறார். கடவுளை அல்ல!-செ.ர.பார்த்தசாரதி)
34. திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை.
35. திருக்குறளில் உயிரினும் மேலானதாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.
36. காலமும் இடமும் கருதிச் செயலாற்றினால் உலகை வெல்லலாம்.
37. திருக்குறளை அனைத்துச் சமயங்களும் ஏற்றுப் போற்றுகின்றன.
38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.
39. திருவள்ளுவமாலை திருக்குறளுக்கு எழுந்த புகழ்மாலை.
40. திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப்படுகிறது.
41. திருக்குறளை முதலில் பயிற்றுவித்தவர் வள்ளலார் இராமலிங்கம்.




திங்கள், 10 அக்டோபர், 2016

போடியில் கற்திட்டைகள் கண்டுபிடிப்பு 2,500 ஆண்டு பழைமையானவை


போடி, ஜூலை 14 போடி அருகே அணைக்கரைப்பட்டி மரக்காமலை மலைப்பகுதியில் 2,500 ஆண்டு களுக்கு முந்தைய கற்திட்டைகள் எனப்படும் கல்லறைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம், போடி சி.பி.ஏ., கல்லுரி வரலாற்றுத் துறையின் கீழ் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மய்யத்தின் மூலம் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் பேராசிரியர்கள் ஞானசேகரன், மாணிக்க ராஜ், கபேஷ், கருப்பசாமி , அணைக் கரைப்பட்டி அருகே மரக்கா மலை சுற்றுப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு முடிவு குறித்து தொல் லியல் ஆய்வாளர் மாணிக்கராஜ் கூறுகையில்: தமிழகத்தில் அரிதாக கிடைக்கக் கூடிய 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற் திட்டைகள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இப்பகு தியினர் இதனை பாண்டியர் திட்டு, பாண்டியர் குகை, பாண்டியர் வீடு என பாண்டிய மன்னர்களோடும், பாண்டவர் களோடும் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். கற்திட்டை என் பது பெருங்கற்காலத்தை சேர்ந்த ஈமப்புதை குழி அல்லது கல் லறையாகும். பெருங்கற்காலத் தில் மலைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல் களை அடக்கம் செய்ய சிறிய, பெரிய பாறை கற்களை வட்ட மாகவோ, சதுரமாகவோ அடுக்கி, மய்யப்பகுதியில் உடலோடு, ஈமப்பொருட்கள் (இறுதிச் சடங்கு பொருட்கள்), அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து, நான்கு புறமும் கற் பலகைகளை செங்குத்தாக நிறுத்தி மேல்பகுதியில் பலகை கற்களை கொண்டு மூடிவிடு வர். ஒரு புறம் மட்டும் நுழைவு வாயில் போன்று உள்ள அமைப்பு கற்திட்டையாகும். இது போன்று நான்கு கற்திட் டைகள் ஒரே இடத்தில் காணப் படுகின்றன.
மூன்று கற்திட்டைகள் சேதம் அடைந்துள்ளன. இவை 4 அடி நீளமும், 3 அடி அகல மும் கொண்டுள்ளன. மழை, காற்று, மனிதர்கள், விலங்குக ளிடம் இருந்து உடல்களை பாதுகாக்க 8 அடி அகலத்தில் கற்கள் வட்ட வடிவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை எதிரிகளுடன் நடந்த போரில் வீரமரணம் அடைந்த நான்கு வீரர்களுக்காகவோ அல்லது சமூகத்தின் தலைவர் இறந்த பின் அவர் நினைவாகவோ அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது. பெருங்கற் கால கற்திட்டையாக அமைந் துள்ளதால் இப்பகுதியில் மக் கள் வாழ்ந்துள்ளதும், அவர்களது கட்டடக் கலை, கட்டுமான நாக ரிகத்தையும் வெளிக் காட்டி தேனி மாவட்டத்தின் வரலாற்று சான்றாகவும் இவை உள்ளன.
-விடுதலை,14.7.16

வடமொழி என்ற சமஸ்கிருதம் என்றும் பேசப்படாத மொழி - திணிக்க வேண்டாம்

ஆரிய பிராமணர்கள் எந்த மாநிலத்தில் குடியேறி னாலும் அம்மாநில மொழிகளையே தாய்மொழியாக வீட்டிலும் வெளியிலும் பேசியும், எழுதியும் வருகின்றனர். சமஸ்கிருத மொழி இலக்கிய, இலக்கண அறிஞர்களின் மொழியாகும். கிரேக்கம், இலத்தீன், பாரசீகம் போன்ற மொழிக் குடும் பத்தை சார்ந்ததாகும். பாரசீக மொழியில் உள்ள புனித நூலான ஜந்த் அவஸ்தா நூலும் வட மொழியில் உள்ள ரிக்வேதமும் பல வகையில் ஒத்துப் போகின்றன. பாரசீகர் களின் மதமான ஜொராஷ்டிரம் ஜொராஷ்டிரர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் பாரசீகர்களின் மதமும், இந்து மதமும் அடிப்படையில் ஒன்றே என்று கூறுவர். பல வட மொழி சொற்கள் பார்சி மொழியில் உள் ளதை இன்றளவும் காணலாம். எடுத்துக்காட்டாக, புத்ரா, புத்ரி போன்ற சொற் களை கூறலாம். ஆக, வடமொழிக்கும், பார்சி மொழிக்கும் நெருங்கிய இரத்த உறவை ஆய்வு முடிவில் காணலாம்.
அதைப்போல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மன் மொழிகளில் உள்ள இலக்கணமும், சொற்களும் சமஸ்கிருத இலக்கண, சொற்களை ஒத்திருப்பதைக் காணலாம். அதாவது, சமஸ்கிருதம் என்பது செம்மைப் படுத்தப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மொழி என்பதே உண்மை. இம்மொழி எவராலும், எக்காலத்திலும் பேசப்பட வில்லை என்பது வரலாற்று உண்மை. இப்படி நடைமுறை வரலாறு இருக்கும்போது சமஸ்கிருத மொழியை ஆரிய-பிராமணர்களின் செல்வாக்கால், அரசியல் ஆளுமையால் இந்திய தேசிய மொழியாக சமஸ்கிருதத்தை அறிவிக்க எத்தனிப்பது மொழிவழி தேசிய இனத்தவர்களுக்கு எதிரிடையான செயலாகும். வடமொழி என்ற சமஸ்கிருதம் மக்களால் பேசப்பட்டிருந்தால் ஆரிய பிராமணர்கள் வேதத்தை இன்றுவரை மனப்பாடமாக பலநூறு ஆண்டுகளாக கொண்டு வந்திருப்பதைப்போல் தங்களது மொழியான வடமொழியை பேச்சு மொழியாக நடை முறைப்படுத்தி இன்றளவும் நிலைபெறச் செய்திருப்பார்கள். இம்மொழி பேசும் மொழியாக இல்லாததால்தான், இவர்கள் குடியேறிய மாநிலங்களில் நிலவிய மொழிகளை தங்களது பேசும் மொழியாக ஏற்றுக்கொண்டு இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். எனவே, மக்கள் நாவில் வாழும் மொழி களையே அதாவது அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 23 மொழிகளை இந்திய ஆட்சி மொழிகளாக அறிவிப்பதே இந்திய ஒருமைப்பாட்டிற்கும், மக்களின் அமைதிக்கும், ஜனநாயகத்திற்கும், சமய சார்பற்ற தன்மைக்கும், சமத்துவத்திற்கும் ஏற்புடைய செயலாகும்.
இந்தி மாநிலங்களில் மறைக்கப்பட்டுள்ள மொழிகளின் மகத்துவம் 
வட இந்தியாவில் பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஆகிய மாநிலங்கள் இந்தி மாநிலங்கள் என்று ஒட்டுமொத்தமாக கூறப்படுவது தவறு என்பதை அங்கு நிலவி வரும் பல்வேறு மொழிகள் உணர்த்துகின்றன.
எப்படி தென்னிந்திய திராவிட மொழிகள் வடமொழி களிலிருந்து வேறுபட்டு உள்ளனவோ அதைப்போல் வடமாநிலங்களிலிருந்தும் பல்வேறு இன மொழிகள் நின்று நிலவி வருகின்றன.
கிருத்து பிறப்பு கி.பி.1900-க்கு முன்னும், பின்னும் அய்ரோப்பாவின் கிழக்கிலும், மேற்கிலும் பல்வேறு மொழிவழி தேசிய இன நாடுகள் தோன்றின. ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, ஸ்பெயின், ஹங்கேரி, போலந்து தோன்றின. அதேநேரத்தில் பல்வேறு இனங்களைக் கொண்ட அய்க்கிய சோவியத் நாடு, யூகோஸ்லேவியா, இந்தியா போன்ற நாடுகள் தோன்றின. சோவியத் நாடு பின்னர் பல தேசங்களாக சிதறியது. அதைப்போல் யூகோஸ்லேவியாவும் பிரிந்து விட்டது. இவ்வாறு உலகில் பல்வேறு நாடுகள் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளாக விடுதலை பெற்றுள்ளன.
இந்நிலையில் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, மொழிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த நாடாக இந்தியா இன்று விளங்குகின்றது. இந்நிலையில் இந்தி ஒன்றே ஒரே தேசிய மொழி என்றோ, ஒரே ஆட்சி மொழி என்றோ கூறுவது இந்திய ஒருமைப்பாட்டிற்கு பொருந்தாது. இங்கு பல்வேறு தேசிய இனமொழிகளை ஆராயும்போது பல புதிய தகவல்கள் வருகின்றன.
போஜ்புரி மொழி
இம்மொழியை பதினைந்து கோடி மக்கள் பேசுகின்றனர். அதாவது, பீகார் மாநிலத்தில் 8 கோடி பேரும், உத்திரப் பிரதேசத்தில் 7 கோடி பேரும் பேசுகின்றனர். ஆக, பீகாரிலும், உத்திரப் பிரதேசத்திலும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் இம்மொழி பெரும் பாலான மக்களால் பேசப்பட்டு வருகின்றது. ஜார்கண்ட் வடக்குப் பகுதியிலும், நேப்பாளத்தின் தெற்கு பகுதியிலும், தேரை என்ற பகுதியிலும் இம்மொழி பேசப்படுகிறது. இம்மொழியின் எழுத்து இந்திமொழியின் எழுத்து அல்ல. இவை இந்தி மொழியின் உட்பிரிவு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மொழி 8-ஆவது அட்டவணையில் சேர்க்கப் படவில்லை. என்றாலும், இம்மொழி தனித்த இலக்கியத்தையும், மொழி வரலாற் றையும் கொண்டுள்ளது. இம்மொழி கைத்தி என்ற எழுத்து வடிவத்தைக் கொண்டுள்ளது. 16-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை இந்த எழுத்து வடிவம் பயன்படுத்தப் பட்டுள்ளது. போஜ்புரி மொழி கைத்தி, நாஸ்தாலிக் போன்ற எழுத்து வடிவங்கள் இம்மொழிக்கு உண்டு. இம்மொழியின் எழுத்து வடிவம் பாரசீக எழுத்து வடிவத்தை மாற்றிவிட்டது. நீதித் துறையிலும், அலுவலகங் களிலும் 1880-க்குப் பிறகு கெய்த்தி எழுத்து வடிவமே மேற் கொள்ளப்பட்டுள்ளது. இம்மொழிக்கே வடக்கு எல்லை தலைமை மாநில மொழி என்று பெயர் (North-East Frontier Presidency Languages).
ஆங்கில ஆட்சி போஜ்புரி எழுத்து வடிவத்தை செம்மைப்படுத்தியது. இம்மொழிதான் தொடக்கப் பள்ளிகளில் பயிற்று மொழியாக வழங்கப்பட்டது. இந்த மொழி எழுத்து 1960 வரை பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1994-இல் அதன் இடம் தேவநாகரி எழுத்திற்கு கொடுக்கப் பட்டது.
பாபுராம் ஸ்வரன்லால் 1898-ல் கெய்த்தி எழுத்தில் கதைகள் எழுதினார். பத்மசிறீ சாரதா சின்ஹா பழங்குடிப் பாடல்களைப் பாடினார். பீகாரி தாக்கோர் என்பவர் போஜ்புரி நாடக உலகில் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப் பட்டார். ராகுல் சாங்கிருத்தியாயன் தனது சில கருத்துக்களை போஜ்புரி மொழியில் எழுதினார். ஸ்வாமி சதானந்தா சரஸ்வதி போஜ்புரியில் மிக உயர்ந்த கிசான் தலைவராகவும், தலைசிறந்த பேச்சாளராகவும் விளங் கினார். மேலும் இந்தி அல்லாத அய்ந்து செய்தித்தாள்களை கொண்டிருந்தது. சன்டே இந்தியன் என்ற இதழ் போஜ்புரி மொழியில் வெளிவந்தது. மகுவா, ஹமார் போன்ற தொலைக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. வெப்சைடு விக்கிபிடியா இம் மொழியில் உள்ளன. போஜ்புரியில் திரைப்படங்கள் உள்ளன. நவீன இந்தி மொழி போஜ்புரி மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட் டுள்ளது. உண்மையில் இந்த இந்தி எழுத்துக்கள் போஜ்புரி மொழியிலிருந்து பெறப்பட்டவை.
மகதி பீகாரி மொழியாகும். இதனை இரண்டு கோடி மக்கள் பேசுகின்றனர். அதாவது, பீகாரி மொழிகள் 3 ஆகும். அதாவது, போஜ்புரி, மகதி, மைதிலி. இம்மூன்று மொழிகளும் மிகப்பெரிய மொழிகளாகும். ஜார்கண்ட் மாநிலம் பிரிந்த பின்னர் இம்மொழிகள் எல்லா பகுதிகளிலும் பேசப்பட்டு வருகின்றன.
மைதிலி மொழி
இராமயண கதைப்படி மைதிலி அல்லது சீதை மிதிலா நகரத்தில் அதாவது பீகார் மாநிலத்தில் பிறந்தார் என்பது செய்தி. இம்மொழியை 4.5 கோடி மக்கள் பேசுகின்றனர். மக்கள்தொகை 2001-இன் கணக்குப்படி 1.22 கோடி என்றா லும் அம்மொழியை பெரும்பாலான மக்கள் பேசி வருகின் றனர். மக்களின் கோரிக்கைப்படி 2003-இல் இம்மொழி 8-ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இம்மொழி தனித்த எழுத்து வடிவம் கொண்டுள்ளது. இம்மொழிக்கு மிதிலக்சர், திர்குதா, கைத்தி போன்ற எழுத்து வடிவங்கள் உள்ளன. சில மொழிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்து வடிவங்களைக் கொண்டுள்ளன. எப்படி பொங்கனி மொழி கன்னடம், மராத்தி, தேவநாகரியில் எழுதப்படுகிறதோ, அதைப்போல் மைதிலி மொழியும் பல்வேறு எழுத்து வடிவங்களில் எழுதப்படுகின்றன. நவீன இலக்கணத்தை ஜார்ஜ் ஆப்ரகாம் கிரயர்சன் எழுதியுள்ளார். இது தொடர்பு மொழிக்கு பயன்படுகிறது. சாகித்ய அகாடமி மைதிலி மொழிக்கு சன்மானம் கொடுத்துள்ளது. இது இந்தியில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இம்மொழி தனக்கே உரிய வளத்தையும், பழைமையும் கொண்டுள்ளது. இம்மொழியில் வர்ண ரத்தின கரம் (1824 கி.பி.) எழுதிய ஜோதிஸ்வர் தாக்கூர், வித்யாபதி போன்ற புலவர்கள் புகழ் பெற்றவர்கள்.  இன்றும் அவர்களுக்கு பாடல்கள் பாடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வித்யாபதி சமோரோ விழா கொண் டாடப்படுகிறது. இவரது புகழ் பீகார், மேற்கு வங்காளம் போன்றவற்றில் பரவியுள்ளது.
1911-12-இல் பீகார் மாநிலம் வங்காளத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இப்பிரிவு மொழிவழி தேசிய இன அடிப் படையில் ஏற்பட்டது. பீகாரை வங்காளத்தில் இருந்து பிரிப்பதற்கு அடிப்படைக் காரணம் இநதி மொழி பேசுபவர் களுக்கு தனி மாநிலம், நிர்வாகம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். மொழி அடிப்படையில் அதாவது இந்தி மொழி அடிப்படையில் இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்ட (1911) மாநிலம் பீகார் ஆகும். இப்பிரிவினை லார்டு ஹார்டின்ஸ் காலத்தில் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் தோன்றிய பின்னர் பீகார் மாநிலம் தோன்றுவதற்கு இந்தி மொழி காரணமாகும். தர்பங்கா பகுதியின் ராஜாவாக இருந்த நிர்வாகத்தின் கீழ் சமஸ்கிருதத் திற்குப் பதிலாக இந்தியை அலுவல் மொழியாக ஆக்கினர். இதற்கு வித்யாபதி (1350-1450) காரணமாக இருந்தார்.
(தொடரும்)
நேற்றையத் தொடர்ச்சி...
பேரா.முனைவர் வெ.சிவபிரகாசம்
உத்திரப்பிரதேசத்தில் அவதி என்ற மொழி 2 கோடி மக்களாலும், கனோஜ் என்ற மொழி ஒரு கோடி மக்களாலும் பேசப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் கடைக்கோடி கிழக்கு பகுதியில் போஜ் புரியும், மேற்குப் பகுதியில் அவதியும், பிறகு உத்தரப்பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் கனோஜ் மொழியும் பேசப் படுகின்றன. உத்திரப்பிரதேசத்தின் தொலைதூர மேற்குப் பகுதியில் பிராஜ் பாஷா, பிராஜ், அவதி போன்ற இலக்கிய மொழிகள் பேசப்படுகின்றன. இம் மொழிகள் இலக்கிய வரலாறு கொண்ட பலமிக்க மொழிகளாகும். பல சுய இலக் கியப் படைப்புகளை கொண்டுள்ளன.
வட இந்தியாவில் இம்மொழிகள் சிறப்புமிக்க மொழிகளாகும். இம்மொழி கள் இந்தி மொழிக்கு முன்னோடி மொழிகளாகும். அதாவது, போஜ்புரி, மைதிலி போன்ற மொழிகள் இல்லாமல் இந்தி மொழி இல்லை என்பதே உண்மை. உண்மையில் இந்தி மொழி, உருது போன்ற மொழிகளுக்கு போஜ் புரி, மைதிலி போன்ற மொழிகளின் எழுத்துக்கள் இந்தி மொழி வடிவில் தொடர்பு மொழியாக உருவெடுத்துள் ளது. துளசிதாஸ், சூர்தாஸ், குருதாஸ் போன்றவர்களுடைய பக்திப்பாடல் களும், அமிர் குஸ்ரு அவர்களின் சுஃபி பாடல்களும் இம்மொழியில் எழுதப் பட்டுள்ளன. இவைகள் இந்தி மொழி யில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் கிருஷ்ண பராத்மாவின் மாமா கம்சா இருந்த பகுதியை பிராஜ் பூமி என்று தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை உள்ளது. அதைப்போல் பாரத்பூர், தவல்பூர் ஆகியவைகளைக் கொண்ட தெற்கு அரியானா, டில்லி மதுரா சாலை இவற்றை உள்ளடக்கியதே பிராஜ் பூமியாகும்.
மாயாவதியினுடைய கட்சி பண் டல்கன்ட் மாநிலப்பிரிவை ஆதரிக்கிறது. தெற்கு உத்தரப்பிரதேசம் அதாவது ஜான்சி முதல் பாண்டா வரை அதை யொட்டிய மத்தியப்பிரதேச பகுதிகள் அதாவது பண்டரி மொழி பேசும் பகுதியைக் கொண்டு தனி இந்தி மாநிலம் என்ற கோரிக்கையும் உள்ளது. இறுதியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவையில் அம்மாநிலத்தை நான்கு மாநிலங்களாக பிரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளும் மொழியின் அடிப்படையில் என்பதை மறக்க இயலாது.
உத்தர்காண்ட் மாநிலம்
இந்தி பேசும் 3 மாநிலங்களை 6 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. எப்படி ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக் கப்பட்டதோ அதைப்போலவே மற்ற மாநிலங்களையும் பிரிக்க வேண்டுகின் றனர். எடுத்துக்காட்டாக, உத்தர்காண்ட் உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரிக்கப் பட்டது. 2001-இன் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 85 லட்சம் மக்கள் தொகையில் 40 லட்சம் மக்கள் கார்வாலி மொழி பேசுகின்றனர். இவர்கள் பெரும் பாலும் அம்மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ளனர். 1998 புள்ளி விவ ரப்படி 24 லட்சம் மக்கள் குமானி மொழியை பேசுகின்றனர். இவர்கள் இம்மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளனர். இதர மக்கள் பகாடி மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளைப் பேசுகின்றனர். அவை ஒவ்வொன்றும் தனி மொழிகளாகும். எடுத்துக்காட்டாக, குமானி மொழி தனி எழுத்தைக் கொண் டுள்ளது. இது இரண்டாவது அலுவல் மொழியாக உள்ளது. இவர்களிடையே கல்வி அறிவு 58 விழுக்காடு உள்ளது. இவர்களது எழுத்து வடிவம் இந்தி மொழி அல்ல.
சத்திஸ்கர் மாநிலம்
2000 ஆம் ஆண்டில் சத்திஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இம் மாநிலம் மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதில் இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த சத் திஸ்கார்கி மொழி பேசப்படுகிறது. இம்மாநிலம் முழுவதும் இம்மொழி உள்ளது. இதன் மக்கள்தொகை 2 கோடி ஆகும். 1.15 கோடி மக்கள் சத்திஸ்கார்கி மொழியைப் பேசுகின்றனர். இந்தியுடன் இம்மொழி அலுவல் மொழியாக உள் ளது. இதை தனிமொழியாக மொழி யாளர்கள் கூறுகின்றனர். இம்மொழி 8 வகை எழுத்து வடிவங்களைக் கொண் டுள்ளது. ஏனைய மக்கள் பழங்குடி மொழிகளைப் பேசுகின்றனர். இதில் சில மொழிகள் திராவிட மொழிகளாகும்.
அதாவது, தெலுங்கு, முண்டா போன்ற மொழிகளின் கலப்படம் உள்ளது. ஆக மொத்தம் 90 வகைப்பட்ட எழுத்துக்களைக் காணலாம். இந்த மாநிலம் பழங்குடி பாடல்களை மிகச் சிறப்பாகக் கொண்டுள்ளன. இதில் ஹபிப் தன்வீர் புகழ்பெற்ற பாடகராவார்.
ஜார்கண்ட் மாநிலம்
இம்மாநிலம் பல்வேறு பழங்குடி களின் மொழிகளையும், ஆதிவாசி களின் போராட்டங்களையும் கொண் டுள்ளது. ஜார்கண்ட் என்றால் காடு களைக் கொண்டது என்று பொருள். இம்மாநிலம் 2000-த்தில் பீகாரிலிருந்துப் பிரிக்கப்பட்டது. இம்மாநிலத்தில் மலை சாதியினர் 28 விழுக்காடும், தாழ்த் தப்பட்டோர் 12 விழுக் காடும் உள்ளனர். இதில் எஸ்.டி. பிரிவினர் 32 விழுக் காடாகும். 1200 ஆம் ஆண்டு முதல் மலைசாதியினர் தனக்கென்ற ஆட்சிக் கொண்டுள்ள வரலாறு இருந்துள்ளது. சாந்தாலி, முண்டா மலைஜாதியினரின் ராஜாக்கள் உள்ளனர். 1765 ஆம் ஆண்டு முதல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியரால் இவர்கள் கட்டுப் படுத்தப்பட்டனர். 2.7 கோடி மக்களின் 70 விழுக்காட்டினர் ஜார்கண்டி மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளைப் பேசுகின்றனர்.
அதாவது, சாந்தாரி, முண்டாரி, ஹோ போன்றவற்றுடன் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஓரன், கோர்வா போன்ற மொழிகளும் அடங்கும். இதில் சாந்தாரி மொழி நவீன ஒல்சிக்கி எழுத்து வடிவத்தை தற்காலத்தில் பயன்படுத் துகிறது. அதைப்போல ஹோ மொழி வாரன்சிட்டி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது. ஓரன் மொழியானது தோரன்சிக்கி எழுத்து வடிவத்தை தயாரித்துள்ளது. ஆனால் இது அதிக பயன்பாட்டில் இல்லை. இவர்களில் 10 விழுக்காடு மக்கள், வங்காளம் அருகில் இருப்பதால் வங்காள மொழி பேசுகின் றனர்.
எனவே, இந்தியாவில் பல்வேறு இனங்கள், மொழிகள், எழுத்து வடிவங் கள், பண்பாடுகள் இருக்கும்போது ஒரே மொழி தேசிய மொழி சமஸ்கிருதம் அல்லது இந்தி மொழி என்று கூறுவது எதிர்காலத்தில் தீராத தொல்லையை கொடுக்கும் என்பதே இந்திய மொழி களின் வரலாறு காட்டும் உண்மை யாகும்.
இந்தி மொழியும்,  பிற மொழிகளும்
இந்தியாவில் இந்தி பேசும் மாநி லங்கள் அனைத்தையும் இந்தி மாநி லங்கள் என்று கூறுவது உண்மைக்கு புறம்பாகும். அதாவது, தற்சமயம் உத்திரகாண்ட், ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள் ளன. அதேநேரத்தில் ஒவ்வொரு மாநி லங்களும் தனித்தனியே மொழிகளை யும், இலக்கியங்களையும் கொண்டுள் ளன. தனி எழுத்துக்களும் உள்ளன.
மைதிலி என்ற மொழி நான்கு கோடி மக்கள் பேசுகின்றனர். சாந்தலி என்ற மொழியை இந்திமொழி பேசும் மாநி லங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அம்மொழிக்கு அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 2003 இல் தனிமொழி அந்தஸ்து கொடுக்கப்பட் டுள்ளது. இன்னும்பிற மொழிகள் அந்த இடத்தைக் கோரி வரிசையில் உள்ளனர்.
போஜ்புரி என்ற மொழி வடக்கில் 15 கோடி மக்களால் அதாவது, உத்திரப் பிரதேசத்திலும், பீகாரிலும் பெரும் பாலும் பேசப்படுகின்றன. இம் மொழிக்கும் தனிமொழி அந்தஸ்து உள் ளது. முற்காலத்தில் உத்தரப்பிரதேசம் அய்க்கிய மாநிலங்கள் என்று கூறப் பட்டது. மத்தியப்பிரதேசம் மய்ய மாநி லங்கள் என்று கூறப்பட்டது. இதில் மாநிலங்கள் என்று கூறப்பட்டதன் பின் னணி என்னவென்றால் பலமொழிகள் உள்ளன என்பதை அறிவிக்கும் பண் மைதான் மாநிலங்கள் என்ற சொல் குறிக்கிறது. கிழக்கிந்திய ஆங்கில கம் பெனி இந்தியாவில் நுழைந்தபொழுது இன்று நாம் அறியும் இந்தி என்ற மொழி அப்பொழுது இல்லை. பீகாரை அக் காலத்தில் வடக்கு எல்லை மாநிலம் என்பர். அம்மாநிலத்தில் குறைந்தது நான்கு மொழிகள் பேசப்பட்டன.
அதாவது, இன்றைய இந்திமொழி தோன்றுவதற்கு முன்பு அப்பழைய மொழிகளில் சில எழுத்துக்களை கொண் டுள்ளன. அதுமட்டுமல்ல, அரசியல் அலுவல் அந்தஸ்தையும் பெற்றிருந்தன. அரியானாவில் 2.1 கோடி மக்கள் (2001) அதாவது 70 விழுக்காடு ஹரியான்வி என்ற மொழியை பேசினர். இது இரண்டாவது மொழியாக உள்ளது. இதில் 68 விழுக்காடு இந்தி மொழியினர் என்று கூறுவதில் உண்மையில்லை. இதில் 55 விழுக்காடு இந்தி இல்லாத ஹரியான்வி பேசுவராவர்.
ராஜஸ்தானை அய்க்கிய மாநிலங் கள் என்று 1948 இல் கூறினர். இதன் இன்றைய மக்கள்தொகை 5.64 கோடி யாகும். இதில் 1.6 கோடி மக்கள் மார்வாரி மொழி பேசுகின்றனர். இது தனி எழுத்து வடிவம் கொண்டுள்ளது. மேவாரி என்ற மொழியை 52 இலட்சம் மக்கள் பேசுகின்றனர். பக்ரி என்ற மொழியை 20 இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.
மேலும், மேவாத்தி, செக்காவத்தி, ஹடோத்தி, துந்தரி இன்னும் பல மொழிகள் உள்ளன. இவைகள் தனித் தனி மாவட்ட அளவில் எல்லைகளைக் கொண்டு இம்மொழி பேசுவோர் உள் ளனர். பிராஜ் என்ற மொழி கிழக்கு இராஜஸ்தானிலும், கொண்டி, சவாரா, கோயா போன்ற மொழிகள் மலை வாசிகளால் பேசப்படுகின்றன. இமாச் சல் பிரதேசத்தில் பகாடி என்ற மொழிக் குழுவில் பல மொழிகள் உள்ளன. கன் னாரி என்ற மொழி ஒரு தனிப்பகுதியில் பேசப்படுகின்றது.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிர தேசம், பீகார், இமாச்சல், டில்லி, அரியானா, இராஜஸ்தான் ஆகியவை இந்தி மாநிலங்கள் என்பர். இவற்றுடன் 2000-த்தில் உத்திராஞ்சல் அதாவது உத்திரகாண்ட், ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் புதிய பெயர் களைப் பெற்றுள்ளன. இம்மாநிலங்கள் அனைத்தையும் ஒன்றுகூட்டி கூறும் பொழுது 2001-இல் அதன் மக்கள் தொகை 46 கோடி ஆகும்.  மேலும், 2001 மக்கள்தொகை கணக்குப்படி இந்தி மொழியை தாய்மொழியாக கொண் டவர்களின் தொகை 42 கோடி ஆகும். அப்படியென்றால், மீதமுள்ள மக்களின் தாய்மொழி என்ன? எனவே, அனைத்து மாநிலங்களையும் இந்தி பேசும் மாநி லங்கள் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பாகும்.
அதாவது, அரசாங்க வெளியீட்டின் படி இந்தியாவில் 1652 தாய்மொழிகள் உள்ளன. இந்திய அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் சில மொழிகள் சேர்க்கப்பட உள்ளன. இதுகுறித்து மேலும் பல தகவல்கள் உள்ளன. அவற்றை தனியே ஒரு கட்டுரை மூலம் வெளிப்படுத்தலாம். ஆக, இந்தி மொழியை தேசியமொழி என்று அறிவிக்க தமிழ்மக்கள் ஒரு போதும் அனுமதிக்க வரலாற்று உண் மைகள் சான்றளிக்கவில்லை.
(நிறைவு)
-விடுதலை,5,6.7.16

2500 ஆண்டு தொன்மை வாய்ந்த சின்னங்கள் கண்டுபிடிப்பு


மதுரை, ஜூலை 3 -மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சூலபுரம் கிராமத்தின் மேற்குப்பகுதியில் மலையடிவாரத்தில் சுமார் 2500ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத் தொல் பொருட்கள் மேற்பரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
பாண்டிய நாட்டு வரலாற்றுஆய்வு மய்யத்தின் ஆய் வாளர் ரா.உதயகுமார், தி.முத்துப்பாண்டி, மதுரை காம ராசர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் சி.பாண்டீஸ்வரன் மற்றும் பால்ராஜ் ஆகியோர் இவ்வாய்வை மேற்கொண்டனர்.
இவ்வூரின் மேற்குப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப் பளவில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் ட்டம் என்னும் ஈமச் சின்னங்களும், முதுமக்கள் தாழிகளும் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றின் அருகிலேயே நன்கு மெருகேற்றப்பட்ட கருப்பு, கருப்புசிவப்புப் பானைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
குறிப்பிடத்தக்கனவாக சிறிய கருப்பு நிற கிண்ணங்கள், குடுவைகள், மூக்கு கெண்டிகள்,மண்கலயங்கள், தாங்கிகள் (பிரிமனைபோல), தட்டுகள் போன்றவை சேகரிக்கப்பட்டுள்ளன.தொல்லியல் ஆய்வாளர்கள் இவற்றின் காலத்தை சுமார்2,500 ஆண்டு கட்கு முற்பட்டவைஎன்றும் இரும்புக் காலம் (அ) பெருங்கற்காலம் என்றும் அழைக்கப்படும் காலத்தவை என்றும் கருதுகின்றனர்.


மதுரைக்கு அருகில் கீழடியில் மேற்கொள்ளப்படும் அகழாய்விலும் இத்தகைய பானைகள் கிடைப்பதால் சூலபுரம் கிராமமும் அதேபோன்ற பழைமையான நாகரி கத்தைக் கொண்டது எனக் கொள்ளலாம் என்றுபாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் முனைவர் சி.சாந்தலிங்கம் கூறியுள்ளார்.
-விடுதலை,3.7.16

திங்கள், 5 செப்டம்பர், 2016

ஆதி மனிதன் பேசிய தமிழ்


மனிதன் முதலில் பேசிய மொழி தமிழ் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். 70ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அங்கிருந்து மனித இனம் நகர்ந்து, அடுத்த ஆயிரம் ஆண்டில் இப்போ தைய ஆஸ்திரேலியா சென்றடைந்தது. இவ்வாறு மனித இனம் நகர்ந்து வந்து தங்கி, இனம் அதிகரித்த இடங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையும் ஒன்று.
அந்த ஆதிமனிதனின் மரபணுத் தொடர்ச்சி ஒன்று இன்றைய தமிழர்கள் சிலருக்கும் இருக்கிறது. முதலில் மரபணு என்கிற டி.என்.ஏ. குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன் பட்டது. குழந்தை யாருடையது? கொல்லப்பட்டது யார்? என்பதற்கும், பாலியல்வன்புணர்வு வழக் குகள் போன்றவற்றுக்கும் உதவி வந்தன.
இன்று.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னால்சென்று,மனிதசரித்திரத்தைதெரிந் துகொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கிறது. மனித இனத்தின் இடப்பெயர்ச்சிப் பற்றி உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி உலகத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் ஆண்களிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் திரட்டப்பட்டன.
இந்தியாவில் மட்டும் 9 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வு “ஒய் குரோமோசோம் அடிப்படை யில் நடத்தப்பட்டதாகும். அதன்படி ஜாதி என்பது ஒரு சமூக கலாசார அமைப்பு ஆய்வுப்படி, எந்த ஒரு ஜாதியும் மரபணு ரீதியில் தூய்மையானது அல்ல. எல்லாவற் றிலும் பல்வேறு காலகட்டங்களில் பலவித கலப்பு ஏற்பட்டிருக்கிறது..
இன்று ஒரு ஜாதியில் பிறந்த ஒருவர், ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பு வேறொரு ஜாதியில் இருந்து இருக்கிறார். அதனால் சாதிக்காக மனிதர்கள் அடித்துக் கொள்வது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் நகைச்சுவையான விஷயமாக இருக்கிறது. இந்த ஜாதி, . என்பதெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட் டதே. அதற்கு முன்பு அமைப்பு இருந்தது இல்லை.
70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆதிமனிதன் விட்டுச்சென்ற மர பணுக்களின் மிச்சம் இன்னும் தொடர் கிறது. இந்தியாவிலேயே ஏன் உலகி லேயே மிகவும் ஆதிகுடிகளில் முதன் மையானவன் தமிழன் என்பதும், அவன் பேசிய தமிழ் மொழியே, ஆதி மனிதன் பேசிய முதல் மொழி என்பதும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், பழம்பெருமை பேசுவதில் யாருக்கும் சளைக்காத நாம், இதை ஏனோ கொண் டாடத் தவறிவிட்டோம்.
விடுதலை ஞாயிறு மலர், 16.7.16

அரசியல் வகையின் அயல்மொழிப் பெயர்கள்


புரட்சிக் கவிஞர்
சோசலிசம்: இரண்டு கறவைகள் உன்னிடம் இருந்தால் அண்டை வீட்டானுக்கொன்று அளித்தல் சோசலிசம்’
காப்டலிசம்: கறவைகள் இரண்டில் கடிதொன்றை விற்றுக் காளை வாங்குவது காப்டலிசம்.
கம்யூனிசம்: ஆவிரண்டனையும் ஆள்வோர்க்கு விற்றுத் தேவைக்குப் பால் பெறச் செப்பல் ‘கம்யூனிசம்’
பாசிசம்: பகரிரு கறவையைப் பறித்த ஆள்வோரிடம் தொகைதந்து பால்பெறச் சொல்வது’ பாசிசம்’
நாசிசம்: உரியவன் தன்னை ஒழித்தே கறவை இரண்டையும் கைப்பற்றல் நாசிசம்
நியூடலிசம்: இரண்டு கறவையால் திரண்டபால் அனைத்தையும் சாக்கடைக்கு ஆக்குவது தான் ‘நியூ ட லிசமாம்’
விடுதலை ஞாயிறு மலர், 16.7.16