பக்கங்கள்

திங்கள், 10 அக்டோபர், 2016

வடமொழி என்ற சமஸ்கிருதம் என்றும் பேசப்படாத மொழி - திணிக்க வேண்டாம்

ஆரிய பிராமணர்கள் எந்த மாநிலத்தில் குடியேறி னாலும் அம்மாநில மொழிகளையே தாய்மொழியாக வீட்டிலும் வெளியிலும் பேசியும், எழுதியும் வருகின்றனர். சமஸ்கிருத மொழி இலக்கிய, இலக்கண அறிஞர்களின் மொழியாகும். கிரேக்கம், இலத்தீன், பாரசீகம் போன்ற மொழிக் குடும் பத்தை சார்ந்ததாகும். பாரசீக மொழியில் உள்ள புனித நூலான ஜந்த் அவஸ்தா நூலும் வட மொழியில் உள்ள ரிக்வேதமும் பல வகையில் ஒத்துப் போகின்றன. பாரசீகர் களின் மதமான ஜொராஷ்டிரம் ஜொராஷ்டிரர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் பாரசீகர்களின் மதமும், இந்து மதமும் அடிப்படையில் ஒன்றே என்று கூறுவர். பல வட மொழி சொற்கள் பார்சி மொழியில் உள் ளதை இன்றளவும் காணலாம். எடுத்துக்காட்டாக, புத்ரா, புத்ரி போன்ற சொற் களை கூறலாம். ஆக, வடமொழிக்கும், பார்சி மொழிக்கும் நெருங்கிய இரத்த உறவை ஆய்வு முடிவில் காணலாம்.
அதைப்போல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மன் மொழிகளில் உள்ள இலக்கணமும், சொற்களும் சமஸ்கிருத இலக்கண, சொற்களை ஒத்திருப்பதைக் காணலாம். அதாவது, சமஸ்கிருதம் என்பது செம்மைப் படுத்தப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மொழி என்பதே உண்மை. இம்மொழி எவராலும், எக்காலத்திலும் பேசப்பட வில்லை என்பது வரலாற்று உண்மை. இப்படி நடைமுறை வரலாறு இருக்கும்போது சமஸ்கிருத மொழியை ஆரிய-பிராமணர்களின் செல்வாக்கால், அரசியல் ஆளுமையால் இந்திய தேசிய மொழியாக சமஸ்கிருதத்தை அறிவிக்க எத்தனிப்பது மொழிவழி தேசிய இனத்தவர்களுக்கு எதிரிடையான செயலாகும். வடமொழி என்ற சமஸ்கிருதம் மக்களால் பேசப்பட்டிருந்தால் ஆரிய பிராமணர்கள் வேதத்தை இன்றுவரை மனப்பாடமாக பலநூறு ஆண்டுகளாக கொண்டு வந்திருப்பதைப்போல் தங்களது மொழியான வடமொழியை பேச்சு மொழியாக நடை முறைப்படுத்தி இன்றளவும் நிலைபெறச் செய்திருப்பார்கள். இம்மொழி பேசும் மொழியாக இல்லாததால்தான், இவர்கள் குடியேறிய மாநிலங்களில் நிலவிய மொழிகளை தங்களது பேசும் மொழியாக ஏற்றுக்கொண்டு இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். எனவே, மக்கள் நாவில் வாழும் மொழி களையே அதாவது அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 23 மொழிகளை இந்திய ஆட்சி மொழிகளாக அறிவிப்பதே இந்திய ஒருமைப்பாட்டிற்கும், மக்களின் அமைதிக்கும், ஜனநாயகத்திற்கும், சமய சார்பற்ற தன்மைக்கும், சமத்துவத்திற்கும் ஏற்புடைய செயலாகும்.
இந்தி மாநிலங்களில் மறைக்கப்பட்டுள்ள மொழிகளின் மகத்துவம் 
வட இந்தியாவில் பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஆகிய மாநிலங்கள் இந்தி மாநிலங்கள் என்று ஒட்டுமொத்தமாக கூறப்படுவது தவறு என்பதை அங்கு நிலவி வரும் பல்வேறு மொழிகள் உணர்த்துகின்றன.
எப்படி தென்னிந்திய திராவிட மொழிகள் வடமொழி களிலிருந்து வேறுபட்டு உள்ளனவோ அதைப்போல் வடமாநிலங்களிலிருந்தும் பல்வேறு இன மொழிகள் நின்று நிலவி வருகின்றன.
கிருத்து பிறப்பு கி.பி.1900-க்கு முன்னும், பின்னும் அய்ரோப்பாவின் கிழக்கிலும், மேற்கிலும் பல்வேறு மொழிவழி தேசிய இன நாடுகள் தோன்றின. ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, ஸ்பெயின், ஹங்கேரி, போலந்து தோன்றின. அதேநேரத்தில் பல்வேறு இனங்களைக் கொண்ட அய்க்கிய சோவியத் நாடு, யூகோஸ்லேவியா, இந்தியா போன்ற நாடுகள் தோன்றின. சோவியத் நாடு பின்னர் பல தேசங்களாக சிதறியது. அதைப்போல் யூகோஸ்லேவியாவும் பிரிந்து விட்டது. இவ்வாறு உலகில் பல்வேறு நாடுகள் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளாக விடுதலை பெற்றுள்ளன.
இந்நிலையில் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, மொழிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த நாடாக இந்தியா இன்று விளங்குகின்றது. இந்நிலையில் இந்தி ஒன்றே ஒரே தேசிய மொழி என்றோ, ஒரே ஆட்சி மொழி என்றோ கூறுவது இந்திய ஒருமைப்பாட்டிற்கு பொருந்தாது. இங்கு பல்வேறு தேசிய இனமொழிகளை ஆராயும்போது பல புதிய தகவல்கள் வருகின்றன.
போஜ்புரி மொழி
இம்மொழியை பதினைந்து கோடி மக்கள் பேசுகின்றனர். அதாவது, பீகார் மாநிலத்தில் 8 கோடி பேரும், உத்திரப் பிரதேசத்தில் 7 கோடி பேரும் பேசுகின்றனர். ஆக, பீகாரிலும், உத்திரப் பிரதேசத்திலும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் இம்மொழி பெரும் பாலான மக்களால் பேசப்பட்டு வருகின்றது. ஜார்கண்ட் வடக்குப் பகுதியிலும், நேப்பாளத்தின் தெற்கு பகுதியிலும், தேரை என்ற பகுதியிலும் இம்மொழி பேசப்படுகிறது. இம்மொழியின் எழுத்து இந்திமொழியின் எழுத்து அல்ல. இவை இந்தி மொழியின் உட்பிரிவு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மொழி 8-ஆவது அட்டவணையில் சேர்க்கப் படவில்லை. என்றாலும், இம்மொழி தனித்த இலக்கியத்தையும், மொழி வரலாற் றையும் கொண்டுள்ளது. இம்மொழி கைத்தி என்ற எழுத்து வடிவத்தைக் கொண்டுள்ளது. 16-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை இந்த எழுத்து வடிவம் பயன்படுத்தப் பட்டுள்ளது. போஜ்புரி மொழி கைத்தி, நாஸ்தாலிக் போன்ற எழுத்து வடிவங்கள் இம்மொழிக்கு உண்டு. இம்மொழியின் எழுத்து வடிவம் பாரசீக எழுத்து வடிவத்தை மாற்றிவிட்டது. நீதித் துறையிலும், அலுவலகங் களிலும் 1880-க்குப் பிறகு கெய்த்தி எழுத்து வடிவமே மேற் கொள்ளப்பட்டுள்ளது. இம்மொழிக்கே வடக்கு எல்லை தலைமை மாநில மொழி என்று பெயர் (North-East Frontier Presidency Languages).
ஆங்கில ஆட்சி போஜ்புரி எழுத்து வடிவத்தை செம்மைப்படுத்தியது. இம்மொழிதான் தொடக்கப் பள்ளிகளில் பயிற்று மொழியாக வழங்கப்பட்டது. இந்த மொழி எழுத்து 1960 வரை பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1994-இல் அதன் இடம் தேவநாகரி எழுத்திற்கு கொடுக்கப் பட்டது.
பாபுராம் ஸ்வரன்லால் 1898-ல் கெய்த்தி எழுத்தில் கதைகள் எழுதினார். பத்மசிறீ சாரதா சின்ஹா பழங்குடிப் பாடல்களைப் பாடினார். பீகாரி தாக்கோர் என்பவர் போஜ்புரி நாடக உலகில் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப் பட்டார். ராகுல் சாங்கிருத்தியாயன் தனது சில கருத்துக்களை போஜ்புரி மொழியில் எழுதினார். ஸ்வாமி சதானந்தா சரஸ்வதி போஜ்புரியில் மிக உயர்ந்த கிசான் தலைவராகவும், தலைசிறந்த பேச்சாளராகவும் விளங் கினார். மேலும் இந்தி அல்லாத அய்ந்து செய்தித்தாள்களை கொண்டிருந்தது. சன்டே இந்தியன் என்ற இதழ் போஜ்புரி மொழியில் வெளிவந்தது. மகுவா, ஹமார் போன்ற தொலைக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. வெப்சைடு விக்கிபிடியா இம் மொழியில் உள்ளன. போஜ்புரியில் திரைப்படங்கள் உள்ளன. நவீன இந்தி மொழி போஜ்புரி மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட் டுள்ளது. உண்மையில் இந்த இந்தி எழுத்துக்கள் போஜ்புரி மொழியிலிருந்து பெறப்பட்டவை.
மகதி பீகாரி மொழியாகும். இதனை இரண்டு கோடி மக்கள் பேசுகின்றனர். அதாவது, பீகாரி மொழிகள் 3 ஆகும். அதாவது, போஜ்புரி, மகதி, மைதிலி. இம்மூன்று மொழிகளும் மிகப்பெரிய மொழிகளாகும். ஜார்கண்ட் மாநிலம் பிரிந்த பின்னர் இம்மொழிகள் எல்லா பகுதிகளிலும் பேசப்பட்டு வருகின்றன.
மைதிலி மொழி
இராமயண கதைப்படி மைதிலி அல்லது சீதை மிதிலா நகரத்தில் அதாவது பீகார் மாநிலத்தில் பிறந்தார் என்பது செய்தி. இம்மொழியை 4.5 கோடி மக்கள் பேசுகின்றனர். மக்கள்தொகை 2001-இன் கணக்குப்படி 1.22 கோடி என்றா லும் அம்மொழியை பெரும்பாலான மக்கள் பேசி வருகின் றனர். மக்களின் கோரிக்கைப்படி 2003-இல் இம்மொழி 8-ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இம்மொழி தனித்த எழுத்து வடிவம் கொண்டுள்ளது. இம்மொழிக்கு மிதிலக்சர், திர்குதா, கைத்தி போன்ற எழுத்து வடிவங்கள் உள்ளன. சில மொழிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்து வடிவங்களைக் கொண்டுள்ளன. எப்படி பொங்கனி மொழி கன்னடம், மராத்தி, தேவநாகரியில் எழுதப்படுகிறதோ, அதைப்போல் மைதிலி மொழியும் பல்வேறு எழுத்து வடிவங்களில் எழுதப்படுகின்றன. நவீன இலக்கணத்தை ஜார்ஜ் ஆப்ரகாம் கிரயர்சன் எழுதியுள்ளார். இது தொடர்பு மொழிக்கு பயன்படுகிறது. சாகித்ய அகாடமி மைதிலி மொழிக்கு சன்மானம் கொடுத்துள்ளது. இது இந்தியில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இம்மொழி தனக்கே உரிய வளத்தையும், பழைமையும் கொண்டுள்ளது. இம்மொழியில் வர்ண ரத்தின கரம் (1824 கி.பி.) எழுதிய ஜோதிஸ்வர் தாக்கூர், வித்யாபதி போன்ற புலவர்கள் புகழ் பெற்றவர்கள்.  இன்றும் அவர்களுக்கு பாடல்கள் பாடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வித்யாபதி சமோரோ விழா கொண் டாடப்படுகிறது. இவரது புகழ் பீகார், மேற்கு வங்காளம் போன்றவற்றில் பரவியுள்ளது.
1911-12-இல் பீகார் மாநிலம் வங்காளத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இப்பிரிவு மொழிவழி தேசிய இன அடிப் படையில் ஏற்பட்டது. பீகாரை வங்காளத்தில் இருந்து பிரிப்பதற்கு அடிப்படைக் காரணம் இநதி மொழி பேசுபவர் களுக்கு தனி மாநிலம், நிர்வாகம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். மொழி அடிப்படையில் அதாவது இந்தி மொழி அடிப்படையில் இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்ட (1911) மாநிலம் பீகார் ஆகும். இப்பிரிவினை லார்டு ஹார்டின்ஸ் காலத்தில் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் தோன்றிய பின்னர் பீகார் மாநிலம் தோன்றுவதற்கு இந்தி மொழி காரணமாகும். தர்பங்கா பகுதியின் ராஜாவாக இருந்த நிர்வாகத்தின் கீழ் சமஸ்கிருதத் திற்குப் பதிலாக இந்தியை அலுவல் மொழியாக ஆக்கினர். இதற்கு வித்யாபதி (1350-1450) காரணமாக இருந்தார்.
(தொடரும்)
நேற்றையத் தொடர்ச்சி...
பேரா.முனைவர் வெ.சிவபிரகாசம்
உத்திரப்பிரதேசத்தில் அவதி என்ற மொழி 2 கோடி மக்களாலும், கனோஜ் என்ற மொழி ஒரு கோடி மக்களாலும் பேசப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் கடைக்கோடி கிழக்கு பகுதியில் போஜ் புரியும், மேற்குப் பகுதியில் அவதியும், பிறகு உத்தரப்பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் கனோஜ் மொழியும் பேசப் படுகின்றன. உத்திரப்பிரதேசத்தின் தொலைதூர மேற்குப் பகுதியில் பிராஜ் பாஷா, பிராஜ், அவதி போன்ற இலக்கிய மொழிகள் பேசப்படுகின்றன. இம் மொழிகள் இலக்கிய வரலாறு கொண்ட பலமிக்க மொழிகளாகும். பல சுய இலக் கியப் படைப்புகளை கொண்டுள்ளன.
வட இந்தியாவில் இம்மொழிகள் சிறப்புமிக்க மொழிகளாகும். இம்மொழி கள் இந்தி மொழிக்கு முன்னோடி மொழிகளாகும். அதாவது, போஜ்புரி, மைதிலி போன்ற மொழிகள் இல்லாமல் இந்தி மொழி இல்லை என்பதே உண்மை. உண்மையில் இந்தி மொழி, உருது போன்ற மொழிகளுக்கு போஜ் புரி, மைதிலி போன்ற மொழிகளின் எழுத்துக்கள் இந்தி மொழி வடிவில் தொடர்பு மொழியாக உருவெடுத்துள் ளது. துளசிதாஸ், சூர்தாஸ், குருதாஸ் போன்றவர்களுடைய பக்திப்பாடல் களும், அமிர் குஸ்ரு அவர்களின் சுஃபி பாடல்களும் இம்மொழியில் எழுதப் பட்டுள்ளன. இவைகள் இந்தி மொழி யில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் கிருஷ்ண பராத்மாவின் மாமா கம்சா இருந்த பகுதியை பிராஜ் பூமி என்று தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை உள்ளது. அதைப்போல் பாரத்பூர், தவல்பூர் ஆகியவைகளைக் கொண்ட தெற்கு அரியானா, டில்லி மதுரா சாலை இவற்றை உள்ளடக்கியதே பிராஜ் பூமியாகும்.
மாயாவதியினுடைய கட்சி பண் டல்கன்ட் மாநிலப்பிரிவை ஆதரிக்கிறது. தெற்கு உத்தரப்பிரதேசம் அதாவது ஜான்சி முதல் பாண்டா வரை அதை யொட்டிய மத்தியப்பிரதேச பகுதிகள் அதாவது பண்டரி மொழி பேசும் பகுதியைக் கொண்டு தனி இந்தி மாநிலம் என்ற கோரிக்கையும் உள்ளது. இறுதியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவையில் அம்மாநிலத்தை நான்கு மாநிலங்களாக பிரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளும் மொழியின் அடிப்படையில் என்பதை மறக்க இயலாது.
உத்தர்காண்ட் மாநிலம்
இந்தி பேசும் 3 மாநிலங்களை 6 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. எப்படி ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக் கப்பட்டதோ அதைப்போலவே மற்ற மாநிலங்களையும் பிரிக்க வேண்டுகின் றனர். எடுத்துக்காட்டாக, உத்தர்காண்ட் உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரிக்கப் பட்டது. 2001-இன் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 85 லட்சம் மக்கள் தொகையில் 40 லட்சம் மக்கள் கார்வாலி மொழி பேசுகின்றனர். இவர்கள் பெரும் பாலும் அம்மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ளனர். 1998 புள்ளி விவ ரப்படி 24 லட்சம் மக்கள் குமானி மொழியை பேசுகின்றனர். இவர்கள் இம்மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளனர். இதர மக்கள் பகாடி மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளைப் பேசுகின்றனர். அவை ஒவ்வொன்றும் தனி மொழிகளாகும். எடுத்துக்காட்டாக, குமானி மொழி தனி எழுத்தைக் கொண் டுள்ளது. இது இரண்டாவது அலுவல் மொழியாக உள்ளது. இவர்களிடையே கல்வி அறிவு 58 விழுக்காடு உள்ளது. இவர்களது எழுத்து வடிவம் இந்தி மொழி அல்ல.
சத்திஸ்கர் மாநிலம்
2000 ஆம் ஆண்டில் சத்திஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இம் மாநிலம் மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதில் இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த சத் திஸ்கார்கி மொழி பேசப்படுகிறது. இம்மாநிலம் முழுவதும் இம்மொழி உள்ளது. இதன் மக்கள்தொகை 2 கோடி ஆகும். 1.15 கோடி மக்கள் சத்திஸ்கார்கி மொழியைப் பேசுகின்றனர். இந்தியுடன் இம்மொழி அலுவல் மொழியாக உள் ளது. இதை தனிமொழியாக மொழி யாளர்கள் கூறுகின்றனர். இம்மொழி 8 வகை எழுத்து வடிவங்களைக் கொண் டுள்ளது. ஏனைய மக்கள் பழங்குடி மொழிகளைப் பேசுகின்றனர். இதில் சில மொழிகள் திராவிட மொழிகளாகும்.
அதாவது, தெலுங்கு, முண்டா போன்ற மொழிகளின் கலப்படம் உள்ளது. ஆக மொத்தம் 90 வகைப்பட்ட எழுத்துக்களைக் காணலாம். இந்த மாநிலம் பழங்குடி பாடல்களை மிகச் சிறப்பாகக் கொண்டுள்ளன. இதில் ஹபிப் தன்வீர் புகழ்பெற்ற பாடகராவார்.
ஜார்கண்ட் மாநிலம்
இம்மாநிலம் பல்வேறு பழங்குடி களின் மொழிகளையும், ஆதிவாசி களின் போராட்டங்களையும் கொண் டுள்ளது. ஜார்கண்ட் என்றால் காடு களைக் கொண்டது என்று பொருள். இம்மாநிலம் 2000-த்தில் பீகாரிலிருந்துப் பிரிக்கப்பட்டது. இம்மாநிலத்தில் மலை சாதியினர் 28 விழுக்காடும், தாழ்த் தப்பட்டோர் 12 விழுக் காடும் உள்ளனர். இதில் எஸ்.டி. பிரிவினர் 32 விழுக் காடாகும். 1200 ஆம் ஆண்டு முதல் மலைசாதியினர் தனக்கென்ற ஆட்சிக் கொண்டுள்ள வரலாறு இருந்துள்ளது. சாந்தாலி, முண்டா மலைஜாதியினரின் ராஜாக்கள் உள்ளனர். 1765 ஆம் ஆண்டு முதல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியரால் இவர்கள் கட்டுப் படுத்தப்பட்டனர். 2.7 கோடி மக்களின் 70 விழுக்காட்டினர் ஜார்கண்டி மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளைப் பேசுகின்றனர்.
அதாவது, சாந்தாரி, முண்டாரி, ஹோ போன்றவற்றுடன் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஓரன், கோர்வா போன்ற மொழிகளும் அடங்கும். இதில் சாந்தாரி மொழி நவீன ஒல்சிக்கி எழுத்து வடிவத்தை தற்காலத்தில் பயன்படுத் துகிறது. அதைப்போல ஹோ மொழி வாரன்சிட்டி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது. ஓரன் மொழியானது தோரன்சிக்கி எழுத்து வடிவத்தை தயாரித்துள்ளது. ஆனால் இது அதிக பயன்பாட்டில் இல்லை. இவர்களில் 10 விழுக்காடு மக்கள், வங்காளம் அருகில் இருப்பதால் வங்காள மொழி பேசுகின் றனர்.
எனவே, இந்தியாவில் பல்வேறு இனங்கள், மொழிகள், எழுத்து வடிவங் கள், பண்பாடுகள் இருக்கும்போது ஒரே மொழி தேசிய மொழி சமஸ்கிருதம் அல்லது இந்தி மொழி என்று கூறுவது எதிர்காலத்தில் தீராத தொல்லையை கொடுக்கும் என்பதே இந்திய மொழி களின் வரலாறு காட்டும் உண்மை யாகும்.
இந்தி மொழியும்,  பிற மொழிகளும்
இந்தியாவில் இந்தி பேசும் மாநி லங்கள் அனைத்தையும் இந்தி மாநி லங்கள் என்று கூறுவது உண்மைக்கு புறம்பாகும். அதாவது, தற்சமயம் உத்திரகாண்ட், ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள் ளன. அதேநேரத்தில் ஒவ்வொரு மாநி லங்களும் தனித்தனியே மொழிகளை யும், இலக்கியங்களையும் கொண்டுள் ளன. தனி எழுத்துக்களும் உள்ளன.
மைதிலி என்ற மொழி நான்கு கோடி மக்கள் பேசுகின்றனர். சாந்தலி என்ற மொழியை இந்திமொழி பேசும் மாநி லங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அம்மொழிக்கு அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 2003 இல் தனிமொழி அந்தஸ்து கொடுக்கப்பட் டுள்ளது. இன்னும்பிற மொழிகள் அந்த இடத்தைக் கோரி வரிசையில் உள்ளனர்.
போஜ்புரி என்ற மொழி வடக்கில் 15 கோடி மக்களால் அதாவது, உத்திரப் பிரதேசத்திலும், பீகாரிலும் பெரும் பாலும் பேசப்படுகின்றன. இம் மொழிக்கும் தனிமொழி அந்தஸ்து உள் ளது. முற்காலத்தில் உத்தரப்பிரதேசம் அய்க்கிய மாநிலங்கள் என்று கூறப் பட்டது. மத்தியப்பிரதேசம் மய்ய மாநி லங்கள் என்று கூறப்பட்டது. இதில் மாநிலங்கள் என்று கூறப்பட்டதன் பின் னணி என்னவென்றால் பலமொழிகள் உள்ளன என்பதை அறிவிக்கும் பண் மைதான் மாநிலங்கள் என்ற சொல் குறிக்கிறது. கிழக்கிந்திய ஆங்கில கம் பெனி இந்தியாவில் நுழைந்தபொழுது இன்று நாம் அறியும் இந்தி என்ற மொழி அப்பொழுது இல்லை. பீகாரை அக் காலத்தில் வடக்கு எல்லை மாநிலம் என்பர். அம்மாநிலத்தில் குறைந்தது நான்கு மொழிகள் பேசப்பட்டன.
அதாவது, இன்றைய இந்திமொழி தோன்றுவதற்கு முன்பு அப்பழைய மொழிகளில் சில எழுத்துக்களை கொண் டுள்ளன. அதுமட்டுமல்ல, அரசியல் அலுவல் அந்தஸ்தையும் பெற்றிருந்தன. அரியானாவில் 2.1 கோடி மக்கள் (2001) அதாவது 70 விழுக்காடு ஹரியான்வி என்ற மொழியை பேசினர். இது இரண்டாவது மொழியாக உள்ளது. இதில் 68 விழுக்காடு இந்தி மொழியினர் என்று கூறுவதில் உண்மையில்லை. இதில் 55 விழுக்காடு இந்தி இல்லாத ஹரியான்வி பேசுவராவர்.
ராஜஸ்தானை அய்க்கிய மாநிலங் கள் என்று 1948 இல் கூறினர். இதன் இன்றைய மக்கள்தொகை 5.64 கோடி யாகும். இதில் 1.6 கோடி மக்கள் மார்வாரி மொழி பேசுகின்றனர். இது தனி எழுத்து வடிவம் கொண்டுள்ளது. மேவாரி என்ற மொழியை 52 இலட்சம் மக்கள் பேசுகின்றனர். பக்ரி என்ற மொழியை 20 இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.
மேலும், மேவாத்தி, செக்காவத்தி, ஹடோத்தி, துந்தரி இன்னும் பல மொழிகள் உள்ளன. இவைகள் தனித் தனி மாவட்ட அளவில் எல்லைகளைக் கொண்டு இம்மொழி பேசுவோர் உள் ளனர். பிராஜ் என்ற மொழி கிழக்கு இராஜஸ்தானிலும், கொண்டி, சவாரா, கோயா போன்ற மொழிகள் மலை வாசிகளால் பேசப்படுகின்றன. இமாச் சல் பிரதேசத்தில் பகாடி என்ற மொழிக் குழுவில் பல மொழிகள் உள்ளன. கன் னாரி என்ற மொழி ஒரு தனிப்பகுதியில் பேசப்படுகின்றது.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிர தேசம், பீகார், இமாச்சல், டில்லி, அரியானா, இராஜஸ்தான் ஆகியவை இந்தி மாநிலங்கள் என்பர். இவற்றுடன் 2000-த்தில் உத்திராஞ்சல் அதாவது உத்திரகாண்ட், ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் புதிய பெயர் களைப் பெற்றுள்ளன. இம்மாநிலங்கள் அனைத்தையும் ஒன்றுகூட்டி கூறும் பொழுது 2001-இல் அதன் மக்கள் தொகை 46 கோடி ஆகும்.  மேலும், 2001 மக்கள்தொகை கணக்குப்படி இந்தி மொழியை தாய்மொழியாக கொண் டவர்களின் தொகை 42 கோடி ஆகும். அப்படியென்றால், மீதமுள்ள மக்களின் தாய்மொழி என்ன? எனவே, அனைத்து மாநிலங்களையும் இந்தி பேசும் மாநி லங்கள் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பாகும்.
அதாவது, அரசாங்க வெளியீட்டின் படி இந்தியாவில் 1652 தாய்மொழிகள் உள்ளன. இந்திய அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் சில மொழிகள் சேர்க்கப்பட உள்ளன. இதுகுறித்து மேலும் பல தகவல்கள் உள்ளன. அவற்றை தனியே ஒரு கட்டுரை மூலம் வெளிப்படுத்தலாம். ஆக, இந்தி மொழியை தேசியமொழி என்று அறிவிக்க தமிழ்மக்கள் ஒரு போதும் அனுமதிக்க வரலாற்று உண் மைகள் சான்றளிக்கவில்லை.
(நிறைவு)
-விடுதலை,5,6.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக