பக்கங்கள்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு!-6.8.16

சென்னை பெரியார் திடலில் மொழி இனவுணர்வின் சங்கமம்
கலாச்சாரம் என்று சொல்லி நாட்டைப் பிளவுபடுத்துவதா?

மனுதர்மம் மீண்டும் ஆள அனுமதியோம் - எச்சரிக்கை!

கொட்டு முரசு கொட்டினர் கொள்கைச் சீலர்கள்
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். உடன் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.), இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், எழுத்தாளர் பழ.கருப்பையா, பேரா.சுப.வீரபாண்டியன்,  பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், உ.பலராமன் (காங்), புலவர் பா.வீரமணி, திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் டாக்டர் சு. பிறைநுதல் செல்வி உள்ளனர். (6.8.2016).


சென்னை, ஆக.7 புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி சமஸ்கிருதத்தையும், இந்துக் கலாச்சாரத்தையும் திணிக்கும் மத்திய பிஜேபி அரசின் திட்டத்தை எதிர்த்து முறியடிப்போம் என்று சூளுரைத்தனர் கல்வியாளர்களும், கொள் கையாளர்களும்.
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய கல்வித் திட்டம் மற்றும் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று மாலை கருத்தரங்கமும் மற்றும் மாநாடும் நடைபெற்றன-.

புதிய கல்விக்கொள்கை ஒரு பார்வை எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (6.8.2016) மாலை 4.30 மணியளவில் தொடங்கியது. சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை வரவேற்றார்.
திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சாதிக் தலைமை வகித்தார்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி, எழுத்தாளர் வே.மதிமாறன்,  அருட்சகோதரி ஆர்த்தி ஆகியோரின் உரையைத் தொடர்ந்து திமுக மாநில மாணவரணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கின் முடிவில் திராவிடர் கழக மாநில மாணவரணி துணை செயலாளர் நா.பார்த்திபன் நன்றி கூறினார்.
சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு
தொடர் நிகழ்வாக சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இணைப்புரையை மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்கினார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

மறைமலையடிகள்
படம் திறப்பு

தமிழ்க்கடல் மறைமலையடிகள் படத்தைத் திறந்துவைத்து மேனாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் உரையாற்றினார்.

சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் உரை வீச்சாக பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பேசினார்கள்.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் உ.பல ராமன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன், எழுத்தாளர் பழ.கருப்பையா, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், புலவர் பா.வீரமணி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி உரைவீச்சுடன் நன்றி தெரிவித்தார்.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரசு கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகம்,  கிறிஸ்தவ நல அமைப்புகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு,தனித்தமிழ் ஆர்வலர்கள், தமிழறி ஞர்கள் என அரசியல் கட்சிகள், மதங்கள் பேதங் களின்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டோம் என்று பெருந்திரளாகத் திரண்டு நிகழ்ச்சிகள் முடியும்வரை அறிஞர் பெருமக்களின் கருத்து வீச்சுகளை செவிமடுத்து உணர்ச்சிப் பிழம்பாயினர். மன்றம் நிறைந்து வெளியிலும் ஏராளமானவர்கள் நின்று கருத்துரைகளை செவிமடுத்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்களின் தலைமையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழர்களாக ஒன்றுபட்டு சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும், புதிய கல்வித்திட்டத்தை எதிர்த்தும் தலைவர்கள் அறிஞர்பெருமக்கள் போர் முரசம் கொட்டி, வென்றே தீருவோம் என்று சூளுரைத்தார்கள்.
இந்திய மத்திய அரசு இந்தியைத் திணித்தபோது தந்தை பெரியார் தலைமையில் தமிழகம் திரண்டு எதிர்த்துப்போராடி இந்தித்திணிப்பை முறியடித்தது.
ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை தந்தை பெரியார் கட்டளையின்பேரில் ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்த்து களம் கண்டு அத்திட்டத்தை முறியடித்தனர்.
தந்தை பெரியாருக்குப் பின்னர் இப்போது மீண்டும் இந்தி, சமஸ்கிருதம் திணிப்புகள், நவீன குலக்கல்வித் திட்டமாக இந்துத்துவாக் கல்வித் திட்டம் ஆகியவற்றை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கட்சிகள், ஜாதி, மத பேதங்களின்றி முறியடித்து வெற்றி பெறுவோம் என்று தமிழர்கள் ஒன்றுபட்டு போர் முரசம் கொட்டி உணர்ச்சிப்பிழம்பாக திரண்டுவிட்டார்கள்.
அதன் ஒரு கட்டமாக அனைத்துக்கட்சிக்கூட்டம் 28.7.2016 அன்று சென்னை பெரியார் திடலில் கூடியது. 

அனைத்துகட்சிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை (8.8.2016) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டின் தலைமையுரையில் தமிழர் தலைவர் அவர்கள் பல்வேறு தகவல்களுடன் சிறப்புரையாற்றினார். அவர் உரையில்: மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக சமஸ்கிருதத் திணிப்பு, புதிய கல்வித்திட்டம் என்பதன்பெயரால் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது நாட்டின் ஒருமைப்பாட்டைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்றார். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் திணிக்கப்படும் ஒன்றை, இந்துக் கலாச்சாரத்தை ஒருபோதும் அனுமதியோம் என்றும் எச்சரித்தார்.
நூல்கள் வெளியீடு

இந்தி ஆதிக்க எதிர்ப்பு வரலாற்றை விளக்கும் நூல்கள் மற்றும் சமஸ்கிருத ஆதிக்கத்தை, பண்பாட்டுப் படையெடுப்பை விளக்கும் நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன.  திமுக அமைப்புச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட எழுத்தாளர் பழ.கருப்பையா பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பார்வையாளர்கள் பகுதியிலிருந்து பலரும் மேடையில் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.

1937ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் வரலாற்றை விளக்கும் நூலான தமிழன் தொடுத்தப் போர், 1948ஆம் ஆண்டு இரண்டாம் இந்தி எதிர்ப்புப்போரின்போது நடைபெற்ற மாநாட்டில் அறிஞர்பெருமக்களின் சொற்பொழிவு திரட்டு நூலான இந்திப் போர்முரசு, இந்தி ஆட்சிமொழியாக ஆதிக்கம் செலுத்தினால் ஏற்படும் ஆபத்துகளை விவரிப்பதுடன், இந்தி ஆதிக்க எதிர்ப்பு வரலாற்றை விளக்கும் நூலான   மொழி உரிமை ஆகிய நூல்களும், மொழிக்கலப்பு, பண்பாட்டுப்படையெடுப்பு, தமிழர் வாழ்வியல், விழாக்களில் சமஸ்கிருத ஆதிக்கம் ஆகியவற்றை விளக்கும் நூலான சமஸ்கிருத ஆதிக்கம், செத்த மொழியான சமற்கிருதம் இல்லாமல் தமிழ்மொழிக்கு தனித்து இயங்கும் ஆற்றல் உண்டு, இணைப்பு மொழிக்கான தகுதி சமஸ்கிருதத்துக்கிடையாது என்பதை விளக்கும் நூலான சமஸ்கிருதம் இணைப்பு மொழியா? சமஸ்கிருதம்பற்றி தந்தை பெரியாரின் ஆய்வுக்கட்டுரை தாங்கிய ஒரு சிறு நூல் உள்ளிட்ட நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன. ரூபாய் 300 மதிப்புள்ள நூல்கள் ரூபாய் 250க்கு மாநாட்டில்  வழங்கப்பட்டன.
நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்
மேனாள் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் ப.அரங்கசாமி, பகுத்தறிவாளர் கழகம் தங்க.தனலட்சுமி, மருத்துவர் தேனருவி, தமிழறிஞர் திவாகரன்,  மேனாள் மேயர் சா.கணேசன், சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம், புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி உள்ளிட்ட தமிழக மாநில பகுத்தறிவாளர் கழக  செயலாளர் மு.ந.நடராசன், கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், சேரலாதன், பசும்பொன் செந்தில்குமாரி, தாம்பரம் இலட்சுமிபதி, காஞ்சி கதிரவன், வி.வளர்மதி, தாம்பரம் மோகன்ராஜ், விழுப்புரம் மண்டல தலைவர் க.மு.தாஸ், மேனாள் நீதிபதி பரஞ்சோதி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, வடசென்னைமாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் உள்பட ஏராளமானவர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட நூல்களை வாங்கி பயன்பெற்றனர்.

கலந்துகொண்டவர்கள்

திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் வேழவேந்தன், கவிஞர் காசி மாணிக்கம், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, பெண்ணியலாளர் ஓவியா, ஊடகவியலாளர் கோவி.லெனின், கழக மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, மேற்கு மண்டல அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மருத்துவர் கவுதமன், பேராசிரியர் ப.காளிமுத்து, திராவிட இயக்க தமி£ர் பேரவை மாறன், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞர்கள் ஆ.வீரமர்த்தினி,  சு.குமாரதேவன், ந.விவேகானந்தன், வேலூர் மண்டல செயலாளர் கு.பஞ்சாட்சரம், வேலூர் மாவட்டத் தலைவர் சிவக்குமார், போளூர் பன்னீர்செல்வம்,  பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.வீரபத்திரன், எம்.பி.பாலு, தி.வே.சு.திருவள்ளுவன், வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தய்யன், தென்சென்னை இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, தே.ஒளிவண்ணன், கும்மிடிப்பூண்டி செ.உதயக்குமார், திண்டிவனம் கழக மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி, செயலாளர் நவா.ஏழுமலை, பா.தென்னரசு, என்னாரெசு பிராட்லா உள்பட தென்சென்னை, வட சென்னை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு கழக மாவட்டங்களிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

மலையாள மொழியில் இயக்க நூல்கள்

இயக்க வெளியீடுகளான தந்தை பெரியார் சுயசரிதை (ஆத்ம கதா) மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய புட்டபர்த்தி சாய்பாபா...? பெரியாரும் அம்பேத்கரும் ஆகிய நூல்களை மைத்ரி பதிப்பகத்தின் சார்பில் மலையாளத்தில் வெளியிட்ட லால்சலாம் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளித்து லால்சலாம் மகிழ்ந்தார்.
மாநாட்டில் கலந்து கொண்டோரின் ஒரு பகுதி
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் படத்தினை  தமிழர் தலைவர் தலைமையில் முனைவர் அவ்வை நடராசன் திறந்து வைத்தார். உடன் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.), பேரா. சுப. வீரபாண்டியன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், எழுத்தாளர் பழ. கருப்பையா, உ. பலராமன் (காங்), புலவர் பா. வீரமணி, திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கவிஞர் கலி. பூங்குன்றன்,  கழகப் பொருளாளர் டாக்டர் சு. பிறைநுதல் செல்வி உள்ளனர். (6.8.2016).
சமஸ்கிருதம் எதிர்ப்புத் தொடர்பான இயக்க நூல்களை டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. வெளியிட எழுத்தாளர் பழ. கருப்பையா பெற்றுக் கொண்டார். (6.8.2016)
திராவிடர் கழகத்தின் வெளியீடுகளான 'புட்டபர்த்தி சாய்பாபா'..?, பெரியார் எழுதிய சுயசரிதை மற்றும் பெரியார் பற்றி பெரியார், பெரியாரும் -- அம்பேத்கரும் ஆகிய மூன்று நூல்களை கேரள மாநிலத்தில் உள்ள மைத்ரி பப்ளிகேசன் சார்பில் லால்சலாம் அவர்கள் மலையாளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நூல்களை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை -6.8.2016)
-விடுதலை,7.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக