பக்கங்கள்

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பிழை இன்றி எழுதுவீர்(7)

கவிஞர் நினைவிற்கு


எந்தன், உந்தன் என்று தமிழில் சொற்களே இல்லை. இதை முன் ஒருமுறை விளக்கியுள்ளோம். இவ்வாறு உள்ள பிழைச் சொற்களைப் படித்தவர்களே எழுதுவ தென்றால், இராஜகோபாலாச்சாரியாருக்கும் இவர் களுக்கும் என்ன வேறுபாடு?

எம் என்பது பன்மைச் சொல். அதனோடு பன்மைக் குரிய தம் என்பதுதான் சேரும். எனவே எந்தம் என்று எழுத வேண்டும். உந்தம் என்பதும் அப்படியே.

என் என்பதும் உன் என்பதும் ஒருமைக்குரியவை. இவற்றோடு ஒருமைக்குரிய தன் சேர வேண்டும். எனவே என்றன், உன்றன் என எழுத வேண்டும்.

போக, வர, இருக்க என இவ்வாறு வரும் சொற் களுக்குச் செய் என்னும் வாய்பாட்டு வினையெச்சம் அல்லது (சுருக்கமாய்) செயவெனெச்சம் என்பார்கள். இவற்றிற்கு முன் வல்லெழுத்துக்கள் அவையாவன க, ச, த, ப என்பவை வந்தால் மிக வேண்டும். எப்படி?

போக + கண்டான் = போகக் கண்டான். வரச் சொன்னான், இருக்கின்றான், எனப் பகிர்ந்தான் என.

க, ச, த, ப என்று கூறினால் (க) கா, கி முதலிய வற்றையும் (ச) சா, சி முதலிய வற்றையும் (த) தா, தி முதலியவற்றையும் குறிக்கும். கவிதை எழுதக் கசடறக் கற்க.

என்பது அகவலடி. இதில் எழுத என்னும் செயவெனெச் சத்தின் முன் க என்ற வல்லெழுத்து வந்ததால் எழுதக் கசடற என மிகுந்தது. அறக்கற்க என்பதில் அற என்பது செயவெனெச்சம்! அதன் முன் ‘க்‘ என்னும் வல்லெழுத்து : வந்ததால் அறக்கற்க என மிகுந்தது.

அழகுக் கழகு கூட்டுவார் போலக் குழந்தைக்குப் பன்மணி இழைகள் கூட்டினர்.

என்பது அகவலின் இரண்டடி. முதலடியின் கடைசியில் உள்ள போல என்பது செயவெனெச்சம். அதன்முன் இரண்டாம் அடியின் முதலிலுள்ள வல்லெழுத்து வந்தது. அதனால் போல + குழந்தை, போலக் குழந்தை என மிகுந்தது.

கவிஞர்கள் சிலர் - பாட்டில் வரும் ஓரடிக் கடைசிச் சொல்லையும் அடுத்த அடியில் வரும் முதற் சொல்லையும் தொடர்புபடுத்திப் பார்ப்பதே இல்லை. அப்படியானால் இவர்கட்கும் சுதேசமித்திரன், தினமணிக்கும் என்ன வேறுபாடு?

அகரத்தை, அதாவது ‘அ’ என்பதை ஈற்றிலுடைய சில சொற்களின் முன் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் இயல்பாகும் என்பதற்கு நன்னூற் பாட்டு ஒன்றுண்டு.

“செய்யிய என்னும் வினையெச்சம் பல்வகைப்

பெயரின் எச்சம் முற்று, ஆறனுருபே

ஆஃறிணைப் பன்மை அம்ம - முன் இயல்பே”

செய்யிய சென்றான் என்பதில் செய்யிய என்பது வினையெச்சம், உண்ணிய, காணிய என்பன முதலியனவும், அவ்வினை யெச் சங்களே! செய்யிய சென்றான், உண்ணிய போனான், காணிய சென்றான் என இயல்பாகும்.

வந்த குதிரை, வருகின்ற குதிரை என்பனவற்றில் உள்ள வந்த, வருகின்ற என்பன குதிரை என்ற பெயரைக் கொண்டு முடிவதால் வந்த, வருகின்ற என்பன பெய ரெச்சங்கள். இவற்றின் முன் வல்லினம் வந்தால் வந்த குதிரை என இயல்பாகும். வந்த, வருகின்ற, போகின்ற, போன என்பன போன்றவையும் பெயரெச்சங்களே.

வந்தன குதிரைகள், வருகின்ற குதிரைகள் என்பன வற்றில் வந்தன, வருகின்ற என்பவை முற்று. வந்தாள், வந்தான், வந்தார், வந்தது எனப் பலமுற்றுக்கள் உள்ளன. அவைகளைப் பற்றி இங்கே பேச்சில்லை.

அகரத்தை இறுதியாக உடைய வந்தன முதலியவை களைப் பற்றித்தானே இங்கே கூற வந்தது.

வந்தன குதிரை இடையில் ஒற்று மிகாது. வந்தன குதிரை என்றே எழுத வேண்டும்.

செய்தன, செய்கின்றன, உண்டன, உண்ணுகின்றன அனைத்தும் முற்றுக்களே!

தன கைகள் என்றது தன்னுடைய நகைகள் என்ற பொருளுடையது. தன என்பதன் இறுதியில் உள்ள ‘அ’ ஆறாம் வேற்றுமையின் பன்மை யுருபு. இதன் முன் வல்லினம் வந்தால் இடையில் ஒற்று மிகாது. தன கைகள் என்று இயல்பாகும். என, உன என்பன அனைத்தும் ஆறாம் உருபைக் கொண்டனவே.

அம்ம கொற்றா என்பது இடைச்சொற் றொடர். அம்ம என்பது வியப்பைக் குறிக்க வரும் இடைச்சொல். இடை யில் ஒற்று மிகாது.

க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று இவைகளைக் கடைசியில் வைத்துக் கொண்டு வருகின்ற சொற்கள் அனைத்தும் வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களே யாகும். சுக்கு, பாக்கு, உப்பு, காப்பு, தச்சு, நீச்சு, பட்டு, பாட்டு, முத்து, கூத்து, புற்று, நேற்று என்பனவும் இவைபோன்ற பிறவும் வன்றொடர்க் குற்றியலுகரச் சொற் களே. இவற்றின் முன் வரும் வல்லெழுத்து மிகும் - எப்படி. - சுக்குத் தின்றான். பாக்குப் போட்டுக் கொண்டான். தச்சுப் பொருள், நீச்சுப் பந்தயம் என. சுக்கு தின்றான் என வரவே வராது. போயிற்றுக் குதிரை என்பதில் போயிற்று என்பதும் வன்றொடர்க் குற்றியலுகரமே. ஆயிற்று, கூவிற்று என்பனவும் அவையே.

ஆயினும் கூப்புகை, நாட்டுபுகழ் என்பன மேற்சொல்லி யதுபோல் மிகாது. கூப்பு கை, நாட்டு புகழ் என இயல் பாகவே இருக்கும். ஏன் எனில்,

கூப்பு கை, நாட்டு புகழ் என்பன வினைத் தொகை நிலைத் தொடர்கள். கூப்புகை என்பது கூப்புகின்ற கை, கூப்பிய கை, கூப்பும் கை என மூன்று காலத்திற்கும் ஒத்து வருவதால் வினைத் தொகை. நாட்டு புகழ் என்பனவும் அப்படியே.

கூப்புக்கை, நாட்டுப்புகழ் என்று போடவே கூடாது.

அங்கு, இங்கு, உங்கு, ஆங்கு, ஈங்கு, ஊங்கு, எங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்பன இடைப்பொரு ளில் வரும், மென்றொடர்க் குற்றியலுகரங்கள். இவை களின் முன் வரும் வல்லினம் மிகும். எப்படி? அங்குக் கண்டான், இங்குச் சேர்ந்தான், ஆண்டுச் சென்றான், ஈண்டுப் போந்தான் என.

“ஆங்கு அவன்தான் அழகு அழித்தான்”

ஒருவர் எழுதிய அகவல் அடி இது.

அகவல் அடியில் நான்கு சீர்கள் வரவேண்டும். இதில் வந்துள்ளனவா எனில் இல்லை. ஏன்?

ஆங்கு + அவன் = ஆங்கவன் என்று புணர வேண்டும். இப்படிப் புணர்த்தவே இரண்டு சீரும் ஒரு சீராகின்றது. அழகு அழித்தான் என்பது அழகழித்தான் எனப் புணரும்.

“ஆங்கவன் தான் அழ கழித்தான்” என்ற மூன்று சீர்தாம் உள்ளன. இன்னும் ஒரு சீர் வேண்டும். எங்கே போவது! பிழைதானே! இந்த அடியை எப்படித் திருத்தி னால் பிழையிராது எனில்,

“ஆங்கே அவன்தான் அழகை அழித்தான்” எனில் பிழை இல்லை .

சொற்களைப் பிரித்து எளிதில் பொருள் விளங்கு வதற்காக எழுதுவதாய் நினைக் கின்றார்கள். பிரித்து எழுதலாம். அதைப் புணர்த்திப் பார்க்கும்போது அளவு குறையக் கூடாது.

இந்தப் பிழைகளைப் புகழ் பெற்றவர் என்று கருதப்படும் கவிஞர்களும் செய்கின் றார்கள்.

மரத்தில் அதோ பார் பறவைக் கூடு

அதுமிக அழகாய் இல்லையா அண்ணே

என்பன அகவல் அடிகள். இவற்றில் முதலடியில் கடைசிச் சொல் கூடு என்பது. அது குற்றியலுகரம். அடுத்த அடியின் முதலிலுள்ள அது என்பதில் உள்ள அகரத்தோடு புணர வேண்டும் கூடு + அது = கூடது என்று. எனவே கூடு என்பதன் - டு இல்லாமற் போகின்றது. கூ மட்டும் மிஞ்சுகிறது.

மரத்தில் அதோ பார் பறவைக் கூ என்றால், கூ மட்டும் ஒரு சீரல்ல. இன்னும் ஓரெழுத்தாவது வேண்டும். மரத்தில் அதோ பார் பறவைக் கூடே என்று திருத்திக் கொண்டால் பிழை நேராது.

- குயில். குரல்: 1. இசை: 43. 31-3-1959

பிழைஇன்றி எழுதுவீர்! (6)

பாட்டு எழுதுவார்க்குச்

சில குறிப்புக்கள்

தன், தான் ஒருமைக்குரியவை.

தம், தாம் பன்மைக்குரியவை.

ஆதலால்,

அவன் என்பதனோடு தன் வரும் (அவன்றன்)

அவர் என்பதனோடு தாம் வரும் (அவர்தாம்)

கீழே தரப்படும் அப்பர் செய்யுளை நோக்குக.

“ஒன்றி யிருந்து நினைமின்கள்

உந்தமக் கூனமில்லை”

“என்றுவந்தாய் என்னும் எம்பெருமான்றன்”

உம் பன்மை, தம் பன்மையாதலால் உடன் வந்தது.

உம் + தம் = உந்தம்.

பெருமான்றன் என்பதில் பெருமான் ஒருமை. தன் ஒருமையாதலின் உடன் வந்தது. பெருமான் + தன் = பெருமான்றன்.

பாட்டு எழுதுவோர் பலர் உந்தன் என்றும் எந்தன் என்றும் எழுதுகின்றார்கள். உன்றன் என்றல்லவா எழுத வேண்டும். என்றன் என்றல்லவா எழுத வேண்டும்?

உந்தம் என்றால் பிழையில்லை. எந்தம் என்றால் பிழையில்லை. எம் பன்மை தம் பன்மை ஆதலின்.

சுக்கு, பேச்சு, பட்டு, முத்து, காப்பு, புற்று என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் வன்றொடர்க் குற்றியலுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்தைப் பாருங்கள். அனைத்தும் வல்லெழுத்தே.

சங்கு, பஞ்சு, பண்பு, பந்து, பாம்பு, அன்பு என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள். ஏன்? ஈற்றயல் எழுத்து மெல் லெழுத்து!

செய்து, சார்பு, சால்பு, போழ்து, தெள்கு என்பன போன்று வரும். சொற்கள் எல்லாம் இடைத் தொடர்க் குற்றியலுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்து இடையெழுத்து.

அஃது, இஃது, எஃது, இருபஃது என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்து ஆய்த எழுத்து.

சகடு, பிகடு, படகு, மதகு, ஒப்பாது, விறகு, பொழுது, பெரிது, சிறிது என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் உயிர்த் தொடர்க் குற்றியலுகரச் சொற்கள், ஏன்? ஈற்றயலில் உயிர் எழுத்து.

காசு, சாறு, நாடு, ஏது, ஈபு, ஆறு என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் நெடிற்றொடர்க் குற்றிய லுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்.

ஈற்றயலெழுத்தென்றால் என்ன? சுக்கு என்பதன் ஈற்றெழுத்து கு அதன் அயலெழுத்து க்,

வல்லெழுத்து எவை? க், ச், ட், த், ப், ற் என்ற ஆறும். மெல்லெழுத்தென்றால் எவை? ங், ஞ், ண், ந், ம், ன் என்ற ஆறும். இடையெழுத்தென்றால் எவை? ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறும். ஆய்த எழுத்து ஃ.

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் என்பதில் உயிர் என்றது எதை? சகடு என்பதன் ஈற்றயல் எழுத்தாகிய க என்பதை. ஏன் எனில் க் என்றதன்மேல் அ இருக்கிறதே அதைக் குறித்து.

நெடில் எவை? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ அன்றியும் இவை ஏறியதால் உண்டான கா, கீ, கூ, கே, கௌ முதலிய அனைத்தும் கொள்க.

இதுவரைக்கும் சொல்லியவற்றால் குற்றியலுகரம் இன்னதென்று புரிந்தது.

இனி, அக் குற்றியலுகரச் சொல்லின் முன்வரும் உயிரெழுத்து எப்படியாகும் என்பது கூறப்படும்.

சுக்கு + அரிது = சுக்காது. என்றாகும். சுக்கு என்றதன் ஈற்றிலுள்ளது கு. அதன்மேல் ஏறிய உ மறைந்து விட்டது. சுக், க் மீந்தது. அதன் கடைசி க் மேல் வரும் அ ஏறிக் கொள்ளும். சுக்கரிது என்று ஆனது காண்க..

இதைத்தான் நன்னூல் “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டு ஓடும் என்றது! எனவே,

சுக்கு + அரிது = சுக்கரிது

சுக்கு + ஆணம் = சுக்காணம்

சுக்கு + இனிது = சுக்கினிது

சுக்கு + ஈவாய் = சுக்கீவாய்

சங்கு + ஒலி = சங்கொலி

சங்கு + ஊதல் = சங்கூதல்

செய்து + அளித்தார் = செய்தளித்தார்

நாடு + அழகு = நாடழகு

நாடு + ஆண்டான் = நாடாண்டான்

அஃது + ஏது = அஃதேது

என்று புணரும்.

பாட்டெழுதுவார் பாட்டெழுதும்போது, சுக்கரிது என்று புணர்த்தே எழுத வேண்டும்; சங்கொலி என்று கூட்டியே எழுத வேண்டும்.

இதை விளக்குவோம். அகவல் எழுத - ஓர் அடிக்கு நான்கு சீர் வேண்டும்.

“திங்கள் எழுந்தது செங்கதிர் மறைந்தது”

பட என்பது நாற்சீர் வந்த அகவலடி. இதுபோன்ற அகவலடி எழுதவரும் பாவாணர் “சங்கு ஒலியும் சாறு ஊற்றம்“ என்று எழுதினால் பிழையாகும். ஏன்? இப்படிப் பிரித்தெழுதலாகாதன்றோ?

சங்கு ஒலியும் என்பன சங்கொலியும் என்றுதான் புணரும்.

“சங்கொ”  ஈரசைச் சொல் போக மீதி “லியும்” என்ற ஓரசைச் சொல்லே இருக்கின்றது. ஓரசைச் சொல் அகவலில் வராதன்றோ ? அதுபோலவே சாறு ஊற்றம் என்பன சானூற் றம் எனப் பிரிதலால் கூறும் ஓரசையாக வந்து அகவலைக் கெடுக்குமன்றோ?

என்று அவர் தாம் வருவார் என்று

அரசி நினைந்து அழுதாள்

அரசன் வரக் கண்டு அகமகிழ்ந்தாளே!

என்பது,

என்றோ அவர்தாம் வருவார் என்றே

அரசி நினைந்தே அழுதாள் அரசன் வரக்கண் டகமகிழ்ந் தாளே! என்றாவது திருத்தப்பட்டால் பிழையறும்.

- குயில்: 9-9-’58

- விடுதலை ஞாயிறு மலர்,7.7.18

பிழைஇன்றி எழுதுவீர்! (13)

இலக்கியப் போட்டி - 4


கட்டமை வில்லாக் காங்கிரஸ் கட்சிச்

சட்டமன் றுறுப்பின் தலைவர் ________

பைத்தியங் கொண்ட ________ ரான

வைத்திய நாதரின் வஞ்சச் சூழ்ச்சி

பலிக்க வில்லை! பச்சைத் திராவிடப்

________ வெற்றி போந்தது. வைத்திய

நாதர் கண்டார் நாண வில்லை.

தோதுறு திராவிடர், சுப்பரா யனையும்

தீமை யில்லாக் ________ ________

ஓமந் தூர்இ ராமசா மிக்குப்

________ ஆக்கப் பார்த்தார்

வகையிலாச் சூழ்ச்சியும் ________ ________

கோடிட்ட இடத்தில் ஏற்ற சொற்களை அமைக்க!

கட்டமை வில்லாக் காங்கிரஸ் கட்சிச்

சட்டமன் றுறுப்பின் தலைவர் தேர்தலில்

பைத்தியங் கொண்ட பார்ப்பன ரான

வைத்திய நாதரின் வஞ்சச் சூழ்ச்சி

பலிக்க வில்லை! பச்சைத் திராவிடப்

புலிக்கே வெற்றி போந்தது. வைத்திய

நாதர் கண்டார் நாண வில்லை.

தோதுறு திராவிடர், சுப்பரா யனையும்

தீமை யில்லாக் காமரா சரையும்

ஓமந் தூர்இ ராமசாமிக்குப்

பகைவர் ஆக்கப் பார்த்தார்

வகையிலாச் சூழ்ச்சியும் மண்ணா யிற்றே.

இலக்கியப் போட்டி - 5

எதுகை

‘முதலெழுத்து ஒன்றி வருவது மோனை’ என்பது முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது எதுகையைப் பற்றி அறிவிப்போம்,

எந்தப் பாவிற்கும் எதுகை அமைந்தி ருப்பது அழகும் சிறப்புமாகும்.

‘அண்ணல் காந்தியார் நுண்ணிய அறிவினர்’ என்பது அகவலடி, இதில் அண் ணல், நுண்ணிய என்பவற்றின் இரண்டாம் எழுத்தாக ண் என்பது ஒன்றி வந்துள்ளது.

இங்ஙனம் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதற்கே எதுகை என்று பெயர். “போந்த காந்தி ஈந்த உரிமை” என ஒரேயடியில் பல எதுகைவரின் மிகச் சிறப்பு.

‘காந்தி தமது கட்டுரை வழியே

மாந்தர் நடப்பது மாபெருஞ் சிறப்பு’

எனும் இரண்டடிகளின் முதலிலுள்ள காந்தியார், மாந்தர் என்பவற்றின் இரண் டாம் எழுத்தாக ‘ந்’ என்பது ஒன்றி வந்துள்ளது. இங்ஙனம் இரண்டு முதலிய பல அடிகளிலும் எதுகை ஒன்றி வரும். அடிதோறும் ஒன்றிவரின் மிக மிகச் சிறப்பு.

‘வடவரின் வருகையால் வண்டமிழ் மக்களின்

நடைமுறை மாற்றம் நண்ணிய திங்கே’

இதில் வட, நடை என இரண்டாம் எழுத்தாக, ட, டை என்னும் டகர வரிசை ஒன்றி வந்துள்ளது. இங்ஙனம் ட, டா, டி, டீ - ம, மா, மி, மீ என வரும் ஒரு வரிசை எழுத்துக்குள்ளேயே எதுவும் வந்து ஒன்றலாம். இதற்கு ‘வருக்க எதுகை’ என்று பெயர்.

‘நுண்ணிய ஆரியம் நலிவு செய்ததால்

மன்னிய நந்தமிழ் மாண்பு குறைந்தது’

இதில் நண், மண் என இரண்டாம் எழுத்தாக ண், ன் என்னும் மெல்லின எழுத் துக்கள் ஒன்றி வந்துள்ளன. இங்ஙனம் வெவ்வேறு மெல்லின எழுத்துக்களோ அல்லது வெவ்வேறு வல்லின எழுத்துக்களோ, வெவ்வேறு இடையின எழுத்துக்களோ தம்முள் ஒன்றி வருதலும் உண்டு. இதற்கு ‘இன எதுகை’ என்று பெயர்.

மேலும் ‘பாட்டு’ என்பதற்கு எதுகையாகக் ‘கட்டு’ என வருதல் கூடாது. காட்டு எனவே வரவேண்டும். இம் முறையில் எதுகைய மைத்துக் கீழ்வரும் ஆசிரியப்பாவில் கோடிட்ட இடங்களை நிறைக்க.

இந்திவேண்டாம்! வித்வான் ________ சண்முகன்

ஆரியம் வந்தது! ஆங்கிலம் வந்தது!

________ நந்தமிழ் நிலைமை குறைந்தது

கோயிலில் ஆரியர் ________ புக்கனர்

________ மணத்திலும் துன்னினர் அவரே!

வழுத்தும் தமிழின் ________ குன்ற

எழுத்திலும் பேச்சிலும் ________ பிறமொழி

________ ஆண்டதால் அலுவல் களிலெலாம்

நுண்ணிய தாங்கில நாட்டு மொழியே

________ ________ இதேநிலை!

வந்து காப்பீர் வளர்திரா விடரே!

இந்திவேண்டாம்! வித்வான் சுந்தர சண்முகன்

ஆரியம் வந்தது! ஆங்கிலம் வந்தது!

நேரிய நந்தமிழ் நிலைமை குலைந்தது

கோயிலில் ஆரியர் வாயிலாய்ப் புக்கனர்

தூய மணத்திலும் துன்னினர் அவரே!

வழுத்தும் தமிழின் வளப்பம் குன்ற

எழுத்திலும் பேச்சிலும் நுழைத்தனர் பிறமொழி

அன்னியர் ஆண்டதால் அலுவல் களிலெலாம்

நுண்ணிய தாங்கில நாட்டு மொழியே

இந்திவந் தாலும் இதேநிலை!

வந்து காப்பீர் வளர்திரா விடரே!

(நிறைவு)


- விடுதலை ஞாயிறு மலர், 1.9.18

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

தமிழைப் பற்றி தமிழர் - பார்ப்பனர் கருத்துகள்

06-11--1943, குடிஅரசிலிருந்து...


மனோன்மணியம் ஆசிரியர் பி. சுந்தரம் பிள்ளை தமிழைப் பார்த்து சொல்லுகிறார். ஆரியம் போலுலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே. என்று சொல்லுகிறார். இது ஒரு தமிழ் மகனால் சொல்லப்பட்டது.

இனி சுப்பிரமணியபாரதி தமிழ்த்தாயே சொல்லுவதாக சொல்லுவதைப் பாருங்கள்.

உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் என்று சொல்லுகிறார். இது ஒரு ஆரிய மகன் - பார்ப்பனரால் சொல்லப்பட்டது.

என்ன செய்தாலும் ஜாதிப்புத்தி போகா தய்யா ராஜகோபால மாலே என்று பெரியார் கூறிய அனுபவமொழியை உறுதிப்படுத்த இவை உதவுகின்றன போலும்.

சுந்தரம் பிள்ளை அவர்கள், பேச்சு வழக்கில் இல்லாமல் அழிந்துபட்ட வட மொழிபோல் உன் (தமிழின்) கதி ஏற்பட்டு விடாமல் என்றும் ஒன்றுபோல் இளமைத் தன்மையுடன் விளங்குகிறாய் என்று போற்றுகிறார்.

பாரதியோ போற்றாவிட்டாலும், தமிழ்த் தாய், உயர்ந்த மொழியான ஆரிய (வட) மொழிக்கு சமானமாக ஒரு காலத்தில் வாழ்ந்தேன். இப்போது சீரழிந்து கெட்டுப் போய்விட்டேன் என்பது ஆக புலம்பு வதாகத் தாழ்வுபடுத்திக் காட்டுவதோடு, ஆரியம் இன்றும் மேன்மையாக இருப்ப தாகவும் தமிழ்த்தாயைக் கொண்டே சொல்லச் செய்கிறார்.

ஆகவே சுப்பிரமணிய பாரதியின் தமிழ்ப்பற்றை அவரது நாளைக் கொண் டாடும் பண்டித முண்டங்கள் இதிலிருந் தாவது உணர்வார்களாக.

இனத்தின் பேரால் பார்ப்பனரும், மதத்தின் பேரால் இஸ்லாமியரும், வகுப்பின் பேரால் சட்டக்காரர்களும் ஆகிய இவர்களுக்கு எவ்வளவுதான் இரத்தக்கலப்பு ஏற்பட்டாலும் புத்திக் கலப்பு மாத்திரம் ஏற்படவே ஏற்படாது. ஒரே புத்திதான். அதாவது முறையே தங்கள் இனம், மதம், வகுப்பு ஆகியவைகளை சிறிதுகூட விட்டுக் கொடுக்காமலும் அவைகளையே உயர் வென்று பேசும் அபிமானமும் வேறு எவனாவது தாழ்த்திச் சொன்னால் ரோஷப்படும் குணமும் கொண்ட உயர்ந்த புத்தி மாறவே மாறாது. தமிழனுக்கு அவைமாத்திரம் கிடையாது. கம்பனைப் போல் ஒரு கை கூழுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதனால்தான் அவர்கள் மேன்மையாய் வாழுகிறார்கள். இவர்கள் கீழ்மையாய் (சூத்திரர்களாய்) வாழுகிறார்கள். தமிழைக் குறைகூற வேண்டாம் என்று எந்த சமஸ்கிருதப் பண்டிதர்கள் வாயிலிருந்தாவது ஒரு வார்த்தையாவது வந்திருப்பதாக ஒரு பண்டிதராவது காட்ட முடியுமா?

ஆனால் எத்தனை தமிழ்ப் பண்டிதன் சமஸ்கிருதத்தின் திருவடிகளே தஞ்சம் என்று சகஸ்ரநாம அர்ச்சனை செய்கிறார்கள். கணக்குச் சொல்ல வேண்டுமா? இதைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இனி அதைச் சொல்ல என்னமாயிருக்கும்? தயவு செய்து மன்னியுங்கள்.

-  விடுதலை நாளேடு, 14.9.18

புதன், 12 செப்டம்பர், 2018

பிழைஇன்றி எழுதுவீர்! -12

கேள்வி - 1


தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் இவைகள் போன்ற சொற்களைக் கொண்டு அகவல் எழுத வேண்டும். இவற்றிற்கு ஈரசைச் சொற்கள் என்று பெயர்.

இந்த ஈரசைச் சொற்கள் நான்கு கொண்டது. அகவலின் ஓர் அடி. அப்படி எத்தனை அடிகள் வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் கடைசி அடி (வந்தே, வாழ் கவே, எனஏ) என்று முடிய வேண்டும். அன்றியும் ஈற்றடிக்கு முன் அடியில் மூன்று ஈரசைச் சொற்கள் மட்டும் இருக்க வேண்டும்.

நம்பி வந்தான் தந்தையார் வந்தனர்

செம்பு நிறையத் தேன்கொ ணர்ந்தார்

தினைமா வோடு சேர்த்தோம்

அனைவரும் உண்டோம் அகம கிழ்ந்தே .

- இது நேரிசை அகவற்பா.

தேமா போன்ற ஈரசைச் சொற்கள்:-

தேர்பார், தென்பால், போனாய் முதலியவை.

புளிமா போன்ற ஈரசைச் சொற்கள்:-

புதுத்தேர், நுணாக்காய், வராரோ முதலியவை

கூவிளம் போன்ற ஈரசைச் சொற்கள்:-

பார் அவர், என் அவா, ஏன்நடார் முதலியவை.

கருவிளம் போன்ற ஈரசைச் சொற்கள்:-

கடற்புனல், கடாநிறை, அடாதடா முதலியவை.

மேற்சொன்ன நேரிசை அகவற்பாவில் உள்ள ஒவ்வொரு ஈரசைச் சொற்களுக்கும், கீழே ஏற்ற தேமா முதலியவை களை எழுத வேண்டும்.

(தம்பி                வந்தான்         தந்தையார்   வந்தனர்.

தேமா                தேமா                கூவிளம்        கூவிளம்)

செம்பு                நிறையத்       தேன்கொ       ணர்ந்தான்

___        புளிமா              தேமா                  தேமா

தினைமா       வோடு              சேர்த்தோம்

___        ___        தேமா

அனைவரும்              உண்டோம்  அகம கிழ்ந்தே

___        ___        புளிமா              தேமா

விட்ட இடத்தை நிறைவு செய்க.

கேள்வி - 2

தந்தை

சாதி என்பதைத் தகர்க்க _______

தேமா

மதம் எனும் நினைவே _______ வேண்டும்

தேமா

இவைகள் இருக்கும் _______

புளிமா

எவர் பொதுத் தொண்டும் ____ இலையே

கருவிளம்

இந்த நேரிசை அகவற்பாவில் கோட்டுக்கு மேல் ஏற்ற சொல் அமைக்க.

கேள்வி - 3

தந்தை

தூயார் _______ சூட்டுக் கொன்ற “கை”

கூவிளம்

_______ மனிதனின் _______ அன்று

தேமா                         தேமா

மதமெனும் _______ வலக்கை

தேமா

அதனால் _______ _______ கடனே

புளிமா      புளிமா

கோட்டின் மேல் ஏற்ற சொல்லை எழுதுக.

தேர்தல் பெற்ற முதல் மூன்று வகையார்க்கும் முறையே 100க்கு 50, 100க்கு 30, 100க்கு 20 எனச் சேரும் தொகை பிரிக்கப்படும்.

முன்பு நாம் காட்டிய நேரிசை யாசிரியப் பாவைக் கண்டீர்கள். ஆசிரியப்பா என்பதும் அகவற்பா என்பதும் ஒன்றே. நேரிசை ஆசிரியப்பா அல்லது நேரிசை அகவற்பா என்பதும் என்னவெனில், கடைசி அடிக்கு முதலடி முச்சீராய் வருவது.

இனி, அகவற் பாவுக்கோ மற்றும் எந்தப் பாவுக்கோ, மோனை என்பது கருதப்பட வேண்டும்.

‘அண்ணல் காந்தியை அழித்தான் தீயோன்’

என்பது அகவலடி. இதில் மோனை என்பது என்னவெனில் - அண்ணல் என்பதிலுள்ள ‘அ’ என்ற எழுத்துக்கு மோனையாக அழித்தான் என்பதிலுள்ள ‘அ’ வந்தது.

‘அண்ணல் காந்தியார் ஆய்ந்து ணர்ந்தவர்’

இந்த அடியில், முதற்சீர் ‘அ’வுக்கு மூன்றாஞ்சீர் ‘ஆ’ மோனையாக அமைந்தது.

‘அண்ணல் காந்தியார் ஐயம் அகன்றவர்’

இந்த அடியில் முதற்சீர் ‘அ’வுக்கு மூன்றாஞ்சீர் ‘ஐ’ மோனையாக வந்துள்ளது.

‘அண்ணல் காந்தியார் ஔவியங் கொள்ளார்’

இந்த அடியில் முதற்சீர் ‘அ’வுக்கு மூன்றாஞ்சீர் ‘ஔ’ மோனையாக வந்துள்ளது.

எனவே, ஒவ்வோரடியிலும் முதற்சீர் ‘அ’வில் தொடங்கினால் மூன்றாஞ் சீரில் அதற்கு மோனையாக அ, ஆ, ஐ, ஔ உடைய சொற்களில் ஒன்று வர வேண்டும். முதற் சீருக்கு மூன்றாம் சீரில்தான் மோனை அமைய வேண்டும் என்பது சிறப்பு. இரண்டாஞ் சீரிலும் நான்காஞ் சீரிலும்கூட மோனை வைக்கலாம்.

கீழே, இன்னின்ன எழுத்துக்களுக்கு இன்னின்ன எழுத்துக்கள் மோனை என்பது குறிப்பிடப்படுகிறது.

எழுத்து            மோனைகள்               எழுத்து

மோனைகள்

அ - அ                 ஆ, ஐ, ஔ     ஊ - உ                ஊ, ஒ, ஓ

ஆ - அ                ஆ, ஐ, ஔ     ஒ - உ                 ஊ, ஒ, ஓ

ஐ - அ ஆ, ஐ, ஒள்     ஓ - உ                 ஊ, ஒ, ஓ

ஔ - அ            ஆ, ஐ, ஔ     ச - ச     த

இ - இ ஈ, எ, ஏ               த - ச    த

எ - இ   ஈ, எ, ஏ               ஞ - ஞ                ந

ஏ - இ   ஈ, எ, ஏ               ந - ஞ ந

உ - உ ஊ, ஒ, ஓ         ம - ம வ

வ - ம  வ

மற்ற உயிர்மெய் எழுத்துக்களுக்கெல் லாம் உயிர் எழுத்துக்களுக்குச் சொன்ன படியே.

கீழ்வரும் செய்யுளில், கோடிட்ட இடங்களை ஏற்ற சொல்லால் நிறைவு செய்க.

“காந்தியைக் கொன்றவன் ________ வழியே.

சாய்ந்திடு கின்றனர் ________ யாவரும்

என்று நடுங்க ________ திராவிடர்

வன்மனங் கொண்ட ________ நாதரின்

குதிப்பால் எம்திறல் குறையா ________

கொதிப்பால் இயக்கம் ________ அன்றோ

சேய்மையில் இல்லை ________ வெற்றி

அண்மையில் என்று ________

திண்மையில் முழங்குக ________ திடவே”.

 

“காந்தியைக் கொன்றவன் கருத்தின் வழியே.

சாய்ந்திடு கின்றனர் தலைவர் யாவரும்

என்று நடுங்க வில்லை திராவிடர்

வன்மனங் கொண்ட வைத்திய நாதரின்

குதிப்பால் எம்திறல் குறையா துள்ளக்

கொதிப்பால் இயக்கம் கொழுக்கும் அன்றோ

சேய்மையில் இல்லை திராவிடர் வெற்றி

அண்மையில் என்று முரசே

திண்மையில் முழங்குக திசையதிர்ந் திடவே”.

- ‘குயில்’ சென்னை

(தொடரும்)

- விடுதலை ஞா.ம., 25.8.18

திங்கள், 3 செப்டம்பர், 2018

தமிழ் போராளி இலக்குவனார்


செப்டம்பர் 3ஆம் தேதி) இலக்குவனார் நினைவு தினம்



பேராசிரியர் சி.இலக்குவனார் தமி ழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையா னவர்.


தான் படித்த படிப்பை, சம்பாத்தியம் - குடும்பம் - வளமைக்கு மட்டுமே என் னும் கண்ணோட்டம் மட்டுமே அவருக்கு இருந்திருந்தால் அவர் வாழ்கை என்பது இவ்வளவுத் தொடர் தொல்லைகளுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி இருக்காது.


இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் கிராமத்தில் சிங்கார வேலர் - இரத்தினம் அம்மையார் ஆகி யோரை பெற்றோராக கொண்டு எளிய குடும்பத்தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் பி.ஓ.எல் மற்றும் முதுகலை பட்டங் களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கற்றுத்துறை போகியவர் ஆவார்.


‘தமிழர் தலைவர்' நூலை எழுதிய சாமி.சிதம்பரனாரின் மாணாக்கர் ஆவார்.


தொல்காப்பியத்தை அவர் ஆங்கிலத் தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதா ரணமானது. முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் போப்பைச் சந்தித்த போதும், யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற போதும், அந்நூலை நினைவுப் பரிசாக அளித்தார்.


எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்க் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்கைப்போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள்.


திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம்  - தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும்.


தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்கள் வாழும்வரை பேராசிரியர் இலக்குவனார் அவர்களும் நாட்டு மக்களின் இதயங்களில் கோல லோச்சுவார்.


சங்க இலக்கியம், குறள் நெறி, திரா விடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியர், திராவிடன் ஃபெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார்.


இவற்றையெல்லாம் அவர் நடத்தி னார் என்றாலும் பொருளாதாரக் கண் ணோட்டத்தில், தன் கையைச் சுட்டுக் கொண்டார் என்றே கூற வேண்டும்.


ஆனாலும் இனம், மொழி மேம்பாட் டுக்கான மேட்டிமை அவரை ஆட் கொண்டது.


அவர் தமிழாசிரியராக, விரிவுரையா ளராக, பேராசிரியராக, துறைத்தலைவரா கப் பரிணமித்தவர்.


திருவாரூரில் தமிழாசிரியராய் பணி யாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் மு.கருணாநிதி (பிற்காலத் தில் முதல் அமைச்சர் கலைஞர்)




தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக் குவனார் என்று ‘நெஞ்சுக்கு நீதி' நூலில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.


திருவாரூரிலிருந்து தொடங்கி குல சேகரன்பட்டினம், நெல்லை ம.தி.தா இந்துக்கல்லூரி, விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி, ஈரோடு மகாஜனக் கல்லூரி (தந்தை பெரியாரின் சிபாரிசின் பேரில்), மதுரை தியாகராயர் கல்லூரி, நாகர் கோயில், சென்னை மாநிலக் கல் லூரி, ஆந்திராவின் உஸ்மானிய பல் கலைக்கழகம் வரை (1936 - 1968 இடை வெளியில்) பந்தாடப்பட்டவர்.


அந்த வகையில் தமிழ்நாட்டின் மண்ணை அளந்த மணவாளர் அவர்! என்ன கார ணம்?


பணியில் தொய்வா? திறமைக் குறைவா? அல்ல அல்ல. சென்ற இடங்களில் எல் லாம் அவர் வகித்த துறையில் முத்திரை பதித்தவர் - தமிழ் உணர்வோடு மாண வர்களை வார்த்தெடுத்தவர். அவருடைய மாணவர்களுள் ஒருவர்தான் தோழர் ஆர்.நல்லகண்ணு; பின் ஏனிந்தப் பந்தாட் டம்? அவர் தமிழ் உணர்வாளர், இன உணர்வாளர், தந்தை பெரியார் வழி சுய மரியாதைக்காரர் - இவைதான் இவர் மீது ஏவப்பட்ட அம்புகள்.


ஒரு கல்லூரியிலிருந்து அவர் வெளி யேற்றப்பட்டதற்கு சொல்லப்பட்ட கார ணம் தெரியுமா?


பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட் டிலும், இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும் பங்கு கொண்டார். இலக்குவனார் கருஞ்சட்டை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வரு கிறார் என்று பொதுக்கல்வி இயக்குநர், ஆட்சிக்குழுவுக்கு தாக்கீது - ஆட்சி மன் றக்குழுவின் கருத்து இதற்கு எதிராக இருந்தாலும் வேறு வழியின்றி இலக்கு வனாரை வெளியேற்ற நேர்ந்தது.


அந்த கல்லூரியில் அவருக்கு இழைத்த அநீதி கண்டு ‘துரத்தப்பட்டேன்' என்று கவிதை வரிகளில் குமுறினார்!


கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகாட மிக் கவுன்சில் உறுப்பினராகவும், சென் னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழு வின் துணைத் தலைவராகவும், தமிழகப் புலவர்க்குழு செயலாளராகவும் பொறுப் பேற்று செயப்பேரிகை கொட்டியவர்.


இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெரு நடைப் பயணத்தாலும் சிறைவாசமும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தனிமைச் சிறையும் பதவி இழப்பும் தான் அவர் பெற்ற பரிசுகள்.


தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத் திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியா கவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக் கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.


பணிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் திமுக பிரிந்தபோது தந்தை பெரியார் மேற் கொண்ட நீண்ட சுற்றுப்பயணம் முழுவதி லும் திராவிடர் கழக கூட்டங்களில் இலக் குவனாரும் அவருடன் பயணித்து உரை யாற்றினார்.


புதுக்கோட்டையில் நடைபெற்ற திரா விடர் கழக மாநாட்டில் (9.4.1950) புலவர் இலக்குவனார் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.


"ஆரியத்தை முதலாவது எதிர்த்த புரட்சிப் புலவர் திருவள்ளுவர். மக்களின் வாழ்வுக்கேற்ற அறம், பொருள், இல்லறம் பற்றித்தான் வள்ளுவர் எழுதினாரே ஒழிய, ஆரியக் கருத்துப்படி இருக்கும் வீட்டைப்பற்றி (மோட்சம் பற்றி) எழுத வில்லை" என்று பேசினார்.


இலக்குவனார் பெயரில் அவர் பிறந்த வாய்மேடு உயர்நிலைப் பள்ளிக்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.


தன்மானப் புலவர் பேராசிரியர் இலக் குவனாருக்கு ஆறு மகன்களும். அய்ந்து மகள்களும் உண்டு.


‘தமிழகத்தின் உரிமை உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப் பதே எனது உறு கடனாம் என்று உறுதி கொள்ளச்செய்தது; தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பயன் இதுவே யாகும்' - இதுவே இலக்குவனார் இலக்கு.


அந்தத் தமிழ்ச்சிங்கம் 3.9.1973 இல் கண் மூடிற்று.


என்றாலும் வரலாற்றில் வாழுகிறது!


- நன்றி, 'தினத்தந்தி', 2.9.2018

- விடுதலை நாளேடு, 2.9.2018