பாட்டு எழுதுவார்க்குச்
சில குறிப்புக்கள்
தன், தான் ஒருமைக்குரியவை.
தம், தாம் பன்மைக்குரியவை.
ஆதலால்,
அவன் என்பதனோடு தன் வரும் (அவன்றன்)
அவர் என்பதனோடு தாம் வரும் (அவர்தாம்)
கீழே தரப்படும் அப்பர் செய்யுளை நோக்குக.
“ஒன்றி யிருந்து நினைமின்கள்
உந்தமக் கூனமில்லை”
“என்றுவந்தாய் என்னும் எம்பெருமான்றன்”
உம் பன்மை, தம் பன்மையாதலால் உடன் வந்தது.
உம் + தம் = உந்தம்.
பெருமான்றன் என்பதில் பெருமான் ஒருமை. தன் ஒருமையாதலின் உடன் வந்தது. பெருமான் + தன் = பெருமான்றன்.
பாட்டு எழுதுவோர் பலர் உந்தன் என்றும் எந்தன் என்றும் எழுதுகின்றார்கள். உன்றன் என்றல்லவா எழுத வேண்டும். என்றன் என்றல்லவா எழுத வேண்டும்?
உந்தம் என்றால் பிழையில்லை. எந்தம் என்றால் பிழையில்லை. எம் பன்மை தம் பன்மை ஆதலின்.
சுக்கு, பேச்சு, பட்டு, முத்து, காப்பு, புற்று என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் வன்றொடர்க் குற்றியலுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்தைப் பாருங்கள். அனைத்தும் வல்லெழுத்தே.
சங்கு, பஞ்சு, பண்பு, பந்து, பாம்பு, அன்பு என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள். ஏன்? ஈற்றயல் எழுத்து மெல் லெழுத்து!
செய்து, சார்பு, சால்பு, போழ்து, தெள்கு என்பன போன்று வரும். சொற்கள் எல்லாம் இடைத் தொடர்க் குற்றியலுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்து இடையெழுத்து.
அஃது, இஃது, எஃது, இருபஃது என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்து ஆய்த எழுத்து.
சகடு, பிகடு, படகு, மதகு, ஒப்பாது, விறகு, பொழுது, பெரிது, சிறிது என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் உயிர்த் தொடர்க் குற்றியலுகரச் சொற்கள், ஏன்? ஈற்றயலில் உயிர் எழுத்து.
காசு, சாறு, நாடு, ஏது, ஈபு, ஆறு என்பன போன்று வரும் சொற்கள் எல்லாம் நெடிற்றொடர்க் குற்றிய லுகரங்கள். ஏன்? ஈற்றயலெழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்.
ஈற்றயலெழுத்தென்றால் என்ன? சுக்கு என்பதன் ஈற்றெழுத்து கு அதன் அயலெழுத்து க்,
வல்லெழுத்து எவை? க், ச், ட், த், ப், ற் என்ற ஆறும். மெல்லெழுத்தென்றால் எவை? ங், ஞ், ண், ந், ம், ன் என்ற ஆறும். இடையெழுத்தென்றால் எவை? ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறும். ஆய்த எழுத்து ஃ.
உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் என்பதில் உயிர் என்றது எதை? சகடு என்பதன் ஈற்றயல் எழுத்தாகிய க என்பதை. ஏன் எனில் க் என்றதன்மேல் அ இருக்கிறதே அதைக் குறித்து.
நெடில் எவை? ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ அன்றியும் இவை ஏறியதால் உண்டான கா, கீ, கூ, கே, கௌ முதலிய அனைத்தும் கொள்க.
இதுவரைக்கும் சொல்லியவற்றால் குற்றியலுகரம் இன்னதென்று புரிந்தது.
இனி, அக் குற்றியலுகரச் சொல்லின் முன்வரும் உயிரெழுத்து எப்படியாகும் என்பது கூறப்படும்.
சுக்கு + அரிது = சுக்காது. என்றாகும். சுக்கு என்றதன் ஈற்றிலுள்ளது கு. அதன்மேல் ஏறிய உ மறைந்து விட்டது. சுக், க் மீந்தது. அதன் கடைசி க் மேல் வரும் அ ஏறிக் கொள்ளும். சுக்கரிது என்று ஆனது காண்க..
இதைத்தான் நன்னூல் “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டு ஓடும் என்றது! எனவே,
சுக்கு + அரிது = சுக்கரிது
சுக்கு + ஆணம் = சுக்காணம்
சுக்கு + இனிது = சுக்கினிது
சுக்கு + ஈவாய் = சுக்கீவாய்
சங்கு + ஒலி = சங்கொலி
சங்கு + ஊதல் = சங்கூதல்
செய்து + அளித்தார் = செய்தளித்தார்
நாடு + அழகு = நாடழகு
நாடு + ஆண்டான் = நாடாண்டான்
அஃது + ஏது = அஃதேது
என்று புணரும்.
பாட்டெழுதுவார் பாட்டெழுதும்போது, சுக்கரிது என்று புணர்த்தே எழுத வேண்டும்; சங்கொலி என்று கூட்டியே எழுத வேண்டும்.
இதை விளக்குவோம். அகவல் எழுத - ஓர் அடிக்கு நான்கு சீர் வேண்டும்.
“திங்கள் எழுந்தது செங்கதிர் மறைந்தது”
பட என்பது நாற்சீர் வந்த அகவலடி. இதுபோன்ற அகவலடி எழுதவரும் பாவாணர் “சங்கு ஒலியும் சாறு ஊற்றம்“ என்று எழுதினால் பிழையாகும். ஏன்? இப்படிப் பிரித்தெழுதலாகாதன்றோ?
சங்கு ஒலியும் என்பன சங்கொலியும் என்றுதான் புணரும்.
“சங்கொ” ஈரசைச் சொல் போக மீதி “லியும்” என்ற ஓரசைச் சொல்லே இருக்கின்றது. ஓரசைச் சொல் அகவலில் வராதன்றோ ? அதுபோலவே சாறு ஊற்றம் என்பன சானூற் றம் எனப் பிரிதலால் கூறும் ஓரசையாக வந்து அகவலைக் கெடுக்குமன்றோ?
என்று அவர் தாம் வருவார் என்று
அரசி நினைந்து அழுதாள்
அரசன் வரக் கண்டு அகமகிழ்ந்தாளே!
என்பது,
என்றோ அவர்தாம் வருவார் என்றே
அரசி நினைந்தே அழுதாள் அரசன் வரக்கண் டகமகிழ்ந் தாளே! என்றாவது திருத்தப்பட்டால் பிழையறும்.
- குயில்: 9-9-’58
- விடுதலை ஞாயிறு மலர்,7.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக