பக்கங்கள்

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பிழை இன்றி எழுதுவீர்(7)

கவிஞர் நினைவிற்கு


எந்தன், உந்தன் என்று தமிழில் சொற்களே இல்லை. இதை முன் ஒருமுறை விளக்கியுள்ளோம். இவ்வாறு உள்ள பிழைச் சொற்களைப் படித்தவர்களே எழுதுவ தென்றால், இராஜகோபாலாச்சாரியாருக்கும் இவர் களுக்கும் என்ன வேறுபாடு?

எம் என்பது பன்மைச் சொல். அதனோடு பன்மைக் குரிய தம் என்பதுதான் சேரும். எனவே எந்தம் என்று எழுத வேண்டும். உந்தம் என்பதும் அப்படியே.

என் என்பதும் உன் என்பதும் ஒருமைக்குரியவை. இவற்றோடு ஒருமைக்குரிய தன் சேர வேண்டும். எனவே என்றன், உன்றன் என எழுத வேண்டும்.

போக, வர, இருக்க என இவ்வாறு வரும் சொற் களுக்குச் செய் என்னும் வாய்பாட்டு வினையெச்சம் அல்லது (சுருக்கமாய்) செயவெனெச்சம் என்பார்கள். இவற்றிற்கு முன் வல்லெழுத்துக்கள் அவையாவன க, ச, த, ப என்பவை வந்தால் மிக வேண்டும். எப்படி?

போக + கண்டான் = போகக் கண்டான். வரச் சொன்னான், இருக்கின்றான், எனப் பகிர்ந்தான் என.

க, ச, த, ப என்று கூறினால் (க) கா, கி முதலிய வற்றையும் (ச) சா, சி முதலிய வற்றையும் (த) தா, தி முதலியவற்றையும் குறிக்கும். கவிதை எழுதக் கசடறக் கற்க.

என்பது அகவலடி. இதில் எழுத என்னும் செயவெனெச் சத்தின் முன் க என்ற வல்லெழுத்து வந்ததால் எழுதக் கசடற என மிகுந்தது. அறக்கற்க என்பதில் அற என்பது செயவெனெச்சம்! அதன் முன் ‘க்‘ என்னும் வல்லெழுத்து : வந்ததால் அறக்கற்க என மிகுந்தது.

அழகுக் கழகு கூட்டுவார் போலக் குழந்தைக்குப் பன்மணி இழைகள் கூட்டினர்.

என்பது அகவலின் இரண்டடி. முதலடியின் கடைசியில் உள்ள போல என்பது செயவெனெச்சம். அதன்முன் இரண்டாம் அடியின் முதலிலுள்ள வல்லெழுத்து வந்தது. அதனால் போல + குழந்தை, போலக் குழந்தை என மிகுந்தது.

கவிஞர்கள் சிலர் - பாட்டில் வரும் ஓரடிக் கடைசிச் சொல்லையும் அடுத்த அடியில் வரும் முதற் சொல்லையும் தொடர்புபடுத்திப் பார்ப்பதே இல்லை. அப்படியானால் இவர்கட்கும் சுதேசமித்திரன், தினமணிக்கும் என்ன வேறுபாடு?

அகரத்தை, அதாவது ‘அ’ என்பதை ஈற்றிலுடைய சில சொற்களின் முன் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் இயல்பாகும் என்பதற்கு நன்னூற் பாட்டு ஒன்றுண்டு.

“செய்யிய என்னும் வினையெச்சம் பல்வகைப்

பெயரின் எச்சம் முற்று, ஆறனுருபே

ஆஃறிணைப் பன்மை அம்ம - முன் இயல்பே”

செய்யிய சென்றான் என்பதில் செய்யிய என்பது வினையெச்சம், உண்ணிய, காணிய என்பன முதலியனவும், அவ்வினை யெச் சங்களே! செய்யிய சென்றான், உண்ணிய போனான், காணிய சென்றான் என இயல்பாகும்.

வந்த குதிரை, வருகின்ற குதிரை என்பனவற்றில் உள்ள வந்த, வருகின்ற என்பன குதிரை என்ற பெயரைக் கொண்டு முடிவதால் வந்த, வருகின்ற என்பன பெய ரெச்சங்கள். இவற்றின் முன் வல்லினம் வந்தால் வந்த குதிரை என இயல்பாகும். வந்த, வருகின்ற, போகின்ற, போன என்பன போன்றவையும் பெயரெச்சங்களே.

வந்தன குதிரைகள், வருகின்ற குதிரைகள் என்பன வற்றில் வந்தன, வருகின்ற என்பவை முற்று. வந்தாள், வந்தான், வந்தார், வந்தது எனப் பலமுற்றுக்கள் உள்ளன. அவைகளைப் பற்றி இங்கே பேச்சில்லை.

அகரத்தை இறுதியாக உடைய வந்தன முதலியவை களைப் பற்றித்தானே இங்கே கூற வந்தது.

வந்தன குதிரை இடையில் ஒற்று மிகாது. வந்தன குதிரை என்றே எழுத வேண்டும்.

செய்தன, செய்கின்றன, உண்டன, உண்ணுகின்றன அனைத்தும் முற்றுக்களே!

தன கைகள் என்றது தன்னுடைய நகைகள் என்ற பொருளுடையது. தன என்பதன் இறுதியில் உள்ள ‘அ’ ஆறாம் வேற்றுமையின் பன்மை யுருபு. இதன் முன் வல்லினம் வந்தால் இடையில் ஒற்று மிகாது. தன கைகள் என்று இயல்பாகும். என, உன என்பன அனைத்தும் ஆறாம் உருபைக் கொண்டனவே.

அம்ம கொற்றா என்பது இடைச்சொற் றொடர். அம்ம என்பது வியப்பைக் குறிக்க வரும் இடைச்சொல். இடை யில் ஒற்று மிகாது.

க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று இவைகளைக் கடைசியில் வைத்துக் கொண்டு வருகின்ற சொற்கள் அனைத்தும் வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களே யாகும். சுக்கு, பாக்கு, உப்பு, காப்பு, தச்சு, நீச்சு, பட்டு, பாட்டு, முத்து, கூத்து, புற்று, நேற்று என்பனவும் இவைபோன்ற பிறவும் வன்றொடர்க் குற்றியலுகரச் சொற் களே. இவற்றின் முன் வரும் வல்லெழுத்து மிகும் - எப்படி. - சுக்குத் தின்றான். பாக்குப் போட்டுக் கொண்டான். தச்சுப் பொருள், நீச்சுப் பந்தயம் என. சுக்கு தின்றான் என வரவே வராது. போயிற்றுக் குதிரை என்பதில் போயிற்று என்பதும் வன்றொடர்க் குற்றியலுகரமே. ஆயிற்று, கூவிற்று என்பனவும் அவையே.

ஆயினும் கூப்புகை, நாட்டுபுகழ் என்பன மேற்சொல்லி யதுபோல் மிகாது. கூப்பு கை, நாட்டு புகழ் என இயல் பாகவே இருக்கும். ஏன் எனில்,

கூப்பு கை, நாட்டு புகழ் என்பன வினைத் தொகை நிலைத் தொடர்கள். கூப்புகை என்பது கூப்புகின்ற கை, கூப்பிய கை, கூப்பும் கை என மூன்று காலத்திற்கும் ஒத்து வருவதால் வினைத் தொகை. நாட்டு புகழ் என்பனவும் அப்படியே.

கூப்புக்கை, நாட்டுப்புகழ் என்று போடவே கூடாது.

அங்கு, இங்கு, உங்கு, ஆங்கு, ஈங்கு, ஊங்கு, எங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்பன இடைப்பொரு ளில் வரும், மென்றொடர்க் குற்றியலுகரங்கள். இவை களின் முன் வரும் வல்லினம் மிகும். எப்படி? அங்குக் கண்டான், இங்குச் சேர்ந்தான், ஆண்டுச் சென்றான், ஈண்டுப் போந்தான் என.

“ஆங்கு அவன்தான் அழகு அழித்தான்”

ஒருவர் எழுதிய அகவல் அடி இது.

அகவல் அடியில் நான்கு சீர்கள் வரவேண்டும். இதில் வந்துள்ளனவா எனில் இல்லை. ஏன்?

ஆங்கு + அவன் = ஆங்கவன் என்று புணர வேண்டும். இப்படிப் புணர்த்தவே இரண்டு சீரும் ஒரு சீராகின்றது. அழகு அழித்தான் என்பது அழகழித்தான் எனப் புணரும்.

“ஆங்கவன் தான் அழ கழித்தான்” என்ற மூன்று சீர்தாம் உள்ளன. இன்னும் ஒரு சீர் வேண்டும். எங்கே போவது! பிழைதானே! இந்த அடியை எப்படித் திருத்தி னால் பிழையிராது எனில்,

“ஆங்கே அவன்தான் அழகை அழித்தான்” எனில் பிழை இல்லை .

சொற்களைப் பிரித்து எளிதில் பொருள் விளங்கு வதற்காக எழுதுவதாய் நினைக் கின்றார்கள். பிரித்து எழுதலாம். அதைப் புணர்த்திப் பார்க்கும்போது அளவு குறையக் கூடாது.

இந்தப் பிழைகளைப் புகழ் பெற்றவர் என்று கருதப்படும் கவிஞர்களும் செய்கின் றார்கள்.

மரத்தில் அதோ பார் பறவைக் கூடு

அதுமிக அழகாய் இல்லையா அண்ணே

என்பன அகவல் அடிகள். இவற்றில் முதலடியில் கடைசிச் சொல் கூடு என்பது. அது குற்றியலுகரம். அடுத்த அடியின் முதலிலுள்ள அது என்பதில் உள்ள அகரத்தோடு புணர வேண்டும் கூடு + அது = கூடது என்று. எனவே கூடு என்பதன் - டு இல்லாமற் போகின்றது. கூ மட்டும் மிஞ்சுகிறது.

மரத்தில் அதோ பார் பறவைக் கூ என்றால், கூ மட்டும் ஒரு சீரல்ல. இன்னும் ஓரெழுத்தாவது வேண்டும். மரத்தில் அதோ பார் பறவைக் கூடே என்று திருத்திக் கொண்டால் பிழை நேராது.

- குயில். குரல்: 1. இசை: 43. 31-3-1959

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக