பக்கங்கள்

சனி, 21 மே, 2016

தமிழர் விழாவிலும் மதச்சாயம்!


கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

ஆரியப் புராணங்களில் அநேகம் முத்தமிழ் கலை இலக் கியம் ஆகியவைகளுக்குள் புகுந்து நமக்குச் செய்திருக்கும் கேட்டை ஒழிக்க.. மானத்தில் கவலையுள்ள நாம் எதை பலி கொடுத்தாவது இந்த நிலையை மாற்றியாக வேண்டும்; அடியோடு ஒழித்தும் ஆக வேண்டும்.
ஏனெனில், இப்படிப்பட்ட முன்னேற்றமான காலத்திலும் கூட தமிழர்கள் மனிதத்தன்மை பெறாததற்கும், அதைப்பற்றி சரியான கவலை கொள்ளாததற்கும் இந்தப் புராண இதிகாசக் கதைகளின் உண்மை அறியாத மூடநம்பிக்கையே முதற் காரணம்.
கலையின் மூலம் புகுத்தப்பட்ட இந்த மூடநம்பிக்கைகளே தான் தமிழர்களாகிய நமக்கு மதமாகவும், பக்தியாகவும், கடவுளாகவும் இருப்பதோடு மாத்திரமல்லாமல், இவைகளே கலையாகவும், நாடகமாகவும், சங்கீதமாகவும், சினிமாவாகவும், இலக்கியங் களாகவும், மக்களை மேன்மையாகவும், கீழ்மை யாகவும் கருதவும், வாழ்க்கை நடப்பதற்கு நீதியாகவும், உப மான உபமேயமாக எடுத்துச் சொல்லுவதற்கு ஆதாரமாகவும் இருக்கின்றன.
அன்றியும் அறிவாளிகள், கவிகள், பண்டிதர்கள், மேதாவிகள், மகாத்மாக்கள், மகான்கள் என்பவர்களுக்கும் அவர்களது வாழ்வுக்கும், மேன்மைக்கும், விளம்பரத்துக்கும் மூலப் பொருள் பொக்கிஷங்களாகவும் இவைகளே இருக்கின்றன.
ஆதலால் மொழி, சமுதாயம் ஆகிய துறை-களிலும், அறிவு, கலை, இலக்கியம், சமயம் முதலாகிய துறைகளிலும், நம் மக்களுக்கு இன்று இருந்துவரும் இழிவுகள் ஒழிந்து மேன்மைகள் ஏற்பட வேண்டும் என்று உண்மையாய் கருதுகிறவர்கள் இதுபோன்ற பெருத்ததொரு புரட்சிகரமான முயற்சிகள் செய்ய வேண்டும்.
உண்மையாகச் சொல்லுகிறேன், வடமொழி சாஸ்திர புராண இதிகாசங்கள் (தமிழர்களாலேயே ஆனவை களானாலும்) அவை எந்த ரூபத்தில் நுழைக்கப்பட்டு இருந்தாலும், அல்லது தானாகவே நுழைந்திருந்தாலும் அவை அடியோடு ஒழிக்கப்பட்டால் ஒழிய, தமிழன் மனித உரிமையோடும் மானத்தோடும் வாழ்ந்து சமநிலை அடைய முடியவே முடியாது என்பதை உணருங்கள்.
மற்றும், அவை வடமொழியில் இருப்பதைவிட தமிழில் இருப்பவைகளே நமக்கு மிகுதியும் கேடு செய்யக் கூடியவையாகும். அன்றியும் அவை வெறும் கதை, காவியம் புராணம் ஆகிய உருவில் இருப்பவைகளைவிட கலை உருவில் இருப்பதும்; இலக்கியம், நாடகம், இசை (சங்கீதம்) ஆகியவற்றின் உருவில் இருப்பதும் மிக மிகக் கேடு செய்பவையாகும் என்பதே எனது அறிவுக்கு ஆராய்ச்சிக்கும் எட்டிய முடிந்த முடிவாகும்.
எப்படியாவது அந்தப் புராண, இதிகாச, தேவார, பிரபந்தம் ஆகியவை கூறும் இராமன், கிருஷ்ணன், சிவன், சுப்பிர மணியன், ஷண்முகன், காளி, கவுரி முதலிய கடவுள்களையும் அவர்களைப்பற்றிய கலை, இலக்கியம், நாடகம், சினிமா, சங்கீதம், பஜனைப் பாட்டுகள் முதலானவைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே நமது முக்கியமும் முதன் மையும் ஆன கடமையாகும் என்று உறுதி கொள்ளுங்கள்.
இந்தக் காரியங்களில் சமய, புராண, இதிகாச பண்டிதர் களையும் சமயாச்சாரிகளையும், கலை வாணர்களையும் துச்சமாகக் கருதுங்கள்.
உங்கள் மனோவேகம் கொண்ட மட்டும் அவர்களை வெறுத்துத் தள்ளுங்கள்.
இவர்களை, ஆரியர்களைவிட மோசமான உங்கள் விரோதிகளாகக் கருதுங்கள்.
29.1.1944 “குடிஅரசு” தலையங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளார்.
தமிழர்களின் வீழ்ச்சிக்கு கலைகளும், புராண, இதிகாசங்களும், இலக்கியங்களும், பண்டிகைகளும் எந்த வகையில் காரணமாக இருந்தன என்பதை தந்தை பெரியார் அவர்கள் ஆழமான அறிவியல் சிந்தனையோடும், எடுத்துக்காட்டுகளுடனும் இவ்வாறு விளக்கியிருக்கிறார்கள்.
அறிவுக்கும், மான உணர்ச்சிக்கும் பயன்படாததோடு மட்டுமல்ல, அவற்றிற்கு விரோதமாகவும் இவை பயன்படு மானால், மானமும், அறிவும் உள்ள எந்த மக்கள்தான் ஏற்றுக்கொள்வார்கள்?
இந்தக் கண்ணோட்டத் தோடு நம் மீது திணிக்கப் பட்டுள்ள இதிகாச புராண வகையறாக்களையும் மதப் பண்டிகைகளையும் பார்ப்பது தான் நமக்கு மானமும், அறிவும் இருக்கின்றன என்ப தற்கு அடையாளமாகும்.
கம்பராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீ மூட்டவேண்டும் என்று அறிஞர் அண்ணா, டாக்டர் சேதுபிள்ளையோடும், நாவலர் சோமசுந்தர பாரதியாரோடும் விவாதப் போர் புரிந்ததும் இந்த அடிப்படையில்தான்.
இலக்கிய நயத்துக்காகவாவது இவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாதா என்று வினா எழுப்பியது கூட உண்டு.
அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் அருமையான முறையில் விடையிறுத்தார்கள்.
‘நான் கலையுணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல கம்பராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூட நம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக்கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்? என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார்.
இசைக் கலையை எடுதுகதுக்கொண்டால்கூட தந்தை பெரியார் தமிழிசைக்காக அரும்பாடுபட்டார்கள். சுயமரியாதை இயக்க மாநாடுகளோடு தமிழிசை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து அதில் தேர்ச்சி பெற்ற தமிழர்களையெல்லாம் அழைத்து தமிழ்ப்பாடல்களைப் பாடச் செய்ததும் உண்டு.
1930 மே 10,11 ஆகிய நாள்களில் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாடு தந்தை பெரியாரால் கூட்டப்பட்டது. அதையொட்டி, மே 12, 13 (1930) நாள்களில் தமிழ் மாகாண சங்கீத மாநாடு கூட்டப்பட்டது. அம்மாநாட்டில் தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்து சுயமரியாதை விரும்பும் ஒவ்வொரு இனத்துக்கும் பொருந்தக்கூடியதாகும்.
“சங்கீதக் கலையிலும் நம்மவர்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி ஏற்படவேண்டுமென்று அந்தக் கலைகளை உடைய நம்மவர்கள் எந்தக் காரணத்தினாலும் தங்களுடைய சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். சங்கீத வித்தையிலும் நம்மவர்களுடைய சுயமரியாதை குறைக்கப்பட்டு இருப்பதனால் அதை நம்மவர்கள் தேடிக்கொள்ளவேண்டியது மிகவும் அவசிய மாகும். அதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது” என்று தந்தை பெரியார் கூறியுள்ளதை எந்த நிலையிலும் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.
தமிழ்நாட்டில் இசைக் கச்சேரிகளில் கலைஞர்கள் தமிழிலேயே பாடவேண்டும் என்ற உணர்ச்சி வலுத்து, தமிழில் பாடும் ஓர் நிலை உருவாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்பதில் அய்யமில்லை.
ஆனால், அதோடு தமிழர்கள் திருப்திபட்டுவிட முடியுமா என்றால், நிச்சயம் முடியாது.
பாடுபொருள் என்ன என்பதுதான் முக்கியம். வெறும் தமிழிசை என்று கண்மூடித்தனமாக வரவேற்றுவிடக் கூடாது என்பதிலே தெளிவாக தந்தை பெரியார் இருந்தார். என்ன காரணத்துக்காக இலக்கியச் சுவை ததும்பியிருந்தாலும், கம்பராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்று கூறி வந்தோமோ, அதே காரணம் தமிழிசைக்கும் பொருந்தும் தானே?
இதுபற்றியும் தந்தை பெரியார் அழுத்தமாகவும், கோபாவேசத்தோடும் பேசியிருக்கிறார்.
அது இதோ:
சென்னைத் தமிழ் இசை மாநாட்டில் இசைவாணர் தியாகராஜ பாகவதர் பாடினார். அவற்றுள் மாதிரிக்கு இரண்டு பாட்டுகளின் தன்மையைப் பாருங்கள்.
ஒரு பாட்டு:
(ராகம்: ஷண்முகப்பிரியா)
பல்லவி
பார்வதி நாயகனே பரமசிவா கருணாகர சம்போ
அனுபல்லவி
சர்வ பௌமனே சங்கரனே கைலாசவாசனேசந்திரசேகரா
என்பதாகும்,
மற்றொரு பாட்டு.
(ராகம்: லதாங்கி)
பல்லவி
ஸ்ரீஜகதாம்பிகையே தீனதயாபரி சங்கரி
அனுபல்லவி
ஒ ஜனநி நீயே அபயம் சாணுன் உபய சரணம் என்பதாகும்.
இப்படியே தான் அங்கு நடந்த 100க்கு 97 பாட்டுகளும் இருந்தன. இந்தப் பாட்டுகளை தெலுங்கிலோ, சமஸ்கிருதத் திலோ, இந்தியிலோ, அல்லது ஜப்பான், ஜெர்மனி மொழியிலோ பாடி, இருந்தால் என்ன குடிமுழுகிப் போய் இருக்கும்?
இந்த மாதிரி பாட்டுகள் பாடச் செய்வதற்கு ஆகவா இருகோடீஸ்வரர்கள் கூடி, உலகத்தைத் திரட்டி பல பதினாயிரக்கணக்கான ரூபாய்கள், பல அறிஞர்களின் அருமையான நேரங்கள், ஊக்கங்கள், செலவழித்து என்றும் கண்டிராத ஓர் உயர்ந்த திருவிழா இராப்பத்து பகல் பத்து போல் நடத்துவது என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
இதுதான் தமிழிசைக் கிளர்ச்சி என்றால் இதற்கு (ஐகோர்ட் ஜட்ஜுகள் முதல் அய்.சி.எஸ். கலெக்டர்கள்)  இத்தனை பெரியவர்கள் விரோதம் தான் இப்பெரியார்களுக்கும் தமிழ் இசை கிளர்ச்சி இயக்கத்திற்கும் எதற்கு ஏற்பட வேண்டும் என்று யோசித்தால் இது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை என்றே தோன்றும்.
(“குடி அரசு” 29.1.1944, தலையங்கம்)
என்று தந்தை பெரியார் அவர்கள் எழுதியுள்ளார்.
நாடகக் கலையிலும் தந்தை பெரியாருக்கு இதே கண் ணோட்டம். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார் தந்தை பெரியார்.
நாம் கொண்டாடும் பண்டிகைகளின் தன்மைகளும் இந்நிலையில்தான் உள்ளன.
பெரும்பாலான பண்டிகைகளின் கதைகள் எல்லாம் தேவர்கள், அசுரர்களை அழித்து ஒழித்தார்கள் என்பதை மய்யப் பொருளைக் கொண்டதாகவே இருக்கும்.
பிரபலமாகக் கொண்டாடப்படும் தீபாவளியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.
தேவர்கள் என்று சொல்லப்படுவோர் எல்லாம் ஆரியப் பார்ப்பனர்கள்தான் என்பதும், அசுரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று சொல்லப்படுவோர் எல்லாம் அவர்களை எதிர்த்த திராவிடர்கள் என்றும், வரலாற்றுப் பேராசிரியர்கள் ஆதாரத்துடன் எழுதியுள்ளனர். (அண்ணாவின் ‘ஆரிய மாயை’ நூலிலும் விரிவாகக் காணலாம்)
தீபாவளியைக் கொண்டாடக் கூடது என்று திராவிட இயக்கம் முழக்கம் கொடுத்ததும் திராவிட இனத்தின் தன் மானங் கருதித்தான்.
தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலை “விடுதலை”ஏடு வெளியிட்டதுண்டு.
தைத் திங்கள் முதல் நாள் வரும் பொங்கல்தான் தமிழர்களின் திருநாள்- தைமுதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு என்பதை திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது.
பொங்கல் விழாவை புதுப்பொலிவுடன், தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தோடு புதுத் திருப்பத்தைக் கொடுத்ததும் நம் இயக்கம்தான். இதன்மூலம் தீபாவளிக்கு என்று இருந்த மகிமை இருளில் தள்ளப்பட்டது.
உலகம் பூராவும் அறுவடைத் திருவிழாக்கள் கொண்டாடப் படுவதுண்டு. அதுபோன்ற தமிழினத்தின் தனிப்பெரும் விழா பொங்கலாகும்.
இதிலும் கூடப்பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான புராண சரக்குகளை வேண்டிய மட்டும் திணித்துள்ளனர்.
தந்தை பெரியார் இதுகுறித்தும் ஆழமான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதனையும் இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
ஒரு பொங்கல் நாளில் (“விடுதலை, 13.11970) தந்தை பெரியார் எழுதியுள்ள அந்தக் கருத்து தமிழர்களின் சிந்தனைக்கு இங்குத் தரப்படுகிறது.
பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக் கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல், தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாகத் தை மாதத்தையும், முதல் தேதியையும் ஆதாரமாகக் கொண்டதாகும்.
இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப்பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.
அறுவடைப் பண்டிகை:
இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்னவென்றால், விவசாயத்தை (வேளாண்மையை) அடிப்படையாகக் கொண்டு அறுவடைப்பண்டிகையென்று சொல்லப்படு வதாகும். ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான். என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வேளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படை யாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும், அதற்குக் காரணம் வேளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால், இந்திரனைக் குறிப்பாய் வைத்து விவசாயத்தில் விளைந்து வெள்ளாண்மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்து படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள்.
இந்தக் கதையை இவ்வளவோடு விட்டுவிடவில்லை.
இம்மாதிரியான இந்திர விழாபற்றி, கிருஷ்ணன் பொறாமைப்பட்டுத் தனக்கும் அந்த விழாவை (பூசையை) நடத்தவேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அதன்படிச் செய்ததாகவும், இந்த இந்திர விழா கிருஷ்ணமூர்த்தி விழாவாக மாறியது கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு, இந்த கிருஷ்ணமூர்த்தி விழா ஈடேறாமல் நடைபெறாமல் போகும் பொருட்டு பெரிய மழையை உண்டாக்கி விழாக் கொண்டாடுவோர் வெள்ளாண்மைக்கு ஆதரவாக இருந்த கால்நடைகள், ஆடு, மாடுகள் அழியும் வண்ணமாகப் பெரும் மழையாகப் பெய்யச் செய்துவிட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ணன் மக்களையும், ஆடு, மாடுகளையும் காக்க ஒரு பெரிய மலை (கோவர்த்தனகிரி)யைத் தூக்கி அதை தன் சுண்டு விரலால் தாங்கிப் பிடித்துக் காத்ததாகவும், இதனால் இந்திரன் வெட்கமடைந்து கிருஷ்ணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கிரங்கி, கிருஷ்ணன், எனக்கு ஒருநாள் பண்டிகை, உனக்கு ஒருநாள் பண்டிகையாக, மக்கள் முதல் நாள் எனக்காக பொங்கல் பண்டிகையாகவும் அதற்கு மறுநாள் உனக்காக மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடும்படியும் ராஜி செய்து கொண்டார்கள் என்றும் சிரிப்பிற்கிடமான - ஆபாச முட்டாள்தனமான கதைகளைக் கட்டிப் பொருத்தி விட்டார்கள்.
இதிலிருந்து தேவர்களுக்கு அரசனான, இந்திரனின் யோக்யதை எப்படிப்பட்டது? மக்களுக்குக் கடவுளான கிருஷ்ணனின் யோக்கியதை எப்படிப் பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மற்றும் இதில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையையும், மறுநாளுக்கு ஒரு கதையையும் போகிப் பண்டிகை என்றும், சங்கராந்திப் பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்று நாள் பண்டிகையாக்கி அதில் ஏராளமான முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையும் புகுத்திவிட்டார்கள். என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் வாழ்வில் தொடுக்கப்பட்ட ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, தமிழர் விழாவாம் பொங்கல் புத்தாண்டை பகுத்தறிவுடன் முன்னிறுத்தி, தமிழ்ப் புத்தாண்டு என்று தைத்திங்கள் முதல்நாளை அரசு ரீதியாக அறிவிக்கச் செய்து தமிழ் - தமிழர் - தமிழர் பண்பாடு இவற்றை காலத்திற்கேற்ப வலிவுடன், பொலிவுடன் முன்னிறுத்திட உறுதி கொள்வோமாக!
- கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
-விடுதலை,14.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக