பக்கங்கள்

ஞாயிறு, 22 மே, 2016

கம்பன் புலமையில் சிறந்தவனா?


கம்பராமாயண இன்சுவைப் பெரு நாவலரான சிதம்பர நாதர்க்கு கம்பர் கவிகளே இணையில்லா இன்பச் செல்வங் களாகும். அவைகளை அவர் கடவுளின் பமாகவே கண்டா ரென்றால் அது முழு உண்மையாகும். ஆனால், அதற்கு நேர் மாறாக நம் அடிகளோ, கம்பர் பாடல்கள் சிறந்த  நல்லிசைப் புலமையால் எழுந்தன அல்ல வென்றும்,
பண்டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால் கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால், ஆரவாரமான, ஏராளமான - பொருளற்ற -கற்பனைகளால் வரை துறையின்றி யாக்கப்பட்டவை என்றும், கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்ட தென்றும் தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதையால் கம்பர் கெடுத்து விட்டார் என்றும் கருதினார்.
கருதியது மட்டுமின்றித் தாமாக்கிய சாகுந்தல நாடக ஆராய்ச்சி என்ற திறனாய்வு நூலிலும், முற்கால பிற்காலத் தமிழ் புலவோர் என்ற நூலிலும், பிறநூல்களிலும் மேற்காட்டிய கருத்துகளைக் காட்டி கம்பர் ஓர் நல்லிசைப் புலவர் அல்லர் என்றும், அவர் கவிகள் அப்படி ஒன்றுஞ் சிறந்தன அல்ல என்றும் சான்றுகளுடன் எழுதியுள்ளார்.
அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக - சமய - இன உணர்வுக்கு மாறான கம்பராமாயணத்தை பயிலுதலும். அவைக்களங்களில் அதனை விரித்தெடுத்து ஓதிப்பரப்பு தலும், தவறென்று தம் சொற்பொழிவுகளிலும், எழுத்து களிலும் வெளியிட்டும், எழுதியும் வந்தார்.
சைவ, வைணவ, சமய நூல்களின் ஆசிரியர்களும், உரையா சிரியர்களில் எவரும் கம்பர் கவிகளைத் தமது நூல்களில் மேற்கோள்களாகக் கூட எடுத்தாளவில்லை என்றும் எழுதி யுள்ளார்.
அடிகள் சிவநெறியாளரானபடியால் அந்நெறிப் பற்றின் காரணமாக இவ்வாறு கம்பர் கவிகளைப் பழிக்கின்றார் என் றெண்ணுதல் பொருந்தாது.
சைவசமயத்தின் சிறந்த புராணங்களில் ஒன்றாகிய கந்த புராணத்தையே அடிகள் ஒப்பவில்லை. விநாயகரைப் பற்றிய கதைகளையும், ஏனைய பல தலபுராணங்களையும், அவற்றின் கதைகளையும் கருத்தில்லாப் பாடல்களையும் அடிகள் ஒப்பாது மறுத் தெழுதியும், பேசியும் உள்ளார்.
இதனை அடிகளின் “கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா” “பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்” “சாகுந்தல நாடக ஆராய்ச்சி” “முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர்” என்றும் நூல்களிலும், அவற்றின் முன்னுரைகளிலும் விரிவாக காணலாம்.
“மறைமலை அடிகள் வரலாறு”
(மறைமலை அடிகள் மகன் வித்துவான் மறை
திருநாவுக்கரசு எழுதியது) (பக்கம் 661-642)
-விடுதலை,29.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக