பக்கங்கள்

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு எது?

தமிழ்ப் புத்தாண்டு எது ??அன்பு உறவுகளே கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள் ...!! அனைவருக்கும் பகிருங்கள் .....

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய, அறிந்து பின்பற்ற வேண்டிய உண்மை இது.

காரணம், உலகுக்கு எல்லாவற்றையும் கொடுத்த தமிழன், இடையில் எல்லாவற்றையும் இழந்து, இன்று எல்லாவற்றையும் இரவல் பெற்று வாழ்கிறான். அவற்றுள் ஒன்றுதான் ஆண்டு.
தமிழன் கோயிலில் சமற்கிருத மந்திரம், தமிழன் திருமணத்தில் சமற்கிருத மந்திரம் என்பதுபோல, தமிழன் ஆண்டையும் சமற்கிருதமாக்கிய ஆதிக்க நிலையே இது.
தமிழிலே பெயரில்லாத, சமற்கிருதத்தில் பெயருள்ள ஆண்டு எப்படித் தமிழாண்டாகும்? என்று சிந்தித்தாலே இங்கு உண்மை வெளிப்படும்.

உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு எது?

தமிழர்கள் வாழ்வே இயற்கையை அடிப்படையாய் வைத்தது. அவ்வகையில், ஆண்டு மட்டுமல்ல, மாதம், நாள் இவற்றையும் இயற்கையின் அடிப்படையிலே கணித்தனர்.

நாள்: நாள் என்பது சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு.

மாதம்: மாதம் என்பதற்கு திங்கள் என்ற பெயருண்டு. திங்கள் என்பது நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்பட்ட காலம் என்பதால் அது திங்கள் (மாதம்) எனப்பட்டது.

ஆண்டு: சூரியன் ஆண்டின் எல்லா நாள்களிலும் தலைக்கு நேர் இருப்பதில்லை. ஒரு காலத்தில் தென்கோடியில் இருக்கும்; அடுத்து தலைக்கு நேர் வரும்; அடுத்து வடகோடிக்குச் செல்லும். மீண்டும் தலைக்கு நேர் வரும். அதன்பின் மீண்டும் தென்கோடிக்குச் செல்லும்.

சூரியன் தென்கோடியிலிருந்து, வடக்கு நோக்கத் தொடங்கும் நாளை, ஆண்டின் முதல் நாளாகக் கொண்டு தமிழர்கள் ஆண்டைக் கணக்கிட்டனர். அதன்படி தை முதல் நாள் சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கும் - சித்திரை மாதம் தலைக்கு நேர் இருக்கும். ஆனி மாதக் கடைசியில் வடகோடிக்குச் செல்லும்; புரட்டாசி மாதக் கடைசியில் தலைக்கு நேர் மீண்டும் வரும்; மார்கழி கடைசியில் தென் கோடிக்குச் செல்லும்.

ஆக, சூரியன் தென்கோடியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கி, மீண்டும் தென்கோடியைச் சென்றடைய எடுத்துக் கொள்ள ஆகும் காலம் ஓர் ஆண்டு.

மீண்டும் தை முதல் நாள் வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கும். எனவே, தை முதல் நாள் தமிழ் ஆண்டின் தொடக்க நாளாகத் தமிழர்கள் கொண்டனர்.

இதை அடிப்படையாக வைத்தே ஆங்கில ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்து இருப்பது நமக்கு 6000 மைல்களுக்கு அப்பால் வடமேற்கில் தள்ளியிருப்பதால் 13 நாள்கள் முன்னமே அவர்கள் கணக்கீடு வந்து ஜனவரி 1 ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்படுகிறது.

மற்றபடி ஏசு பிறப்பை வைத்து ஜனவரி 1 என்று உருவாக்கப்படவில்லை. 2012 என்பது ஏசு பிறந்து அத்தனை ஆண்டுகள் என்பதுதானேயன்றி, அவர் பிறந்ததிலிருந்து ஜனவரி 1 என்று கொள்ளப்படவில்லை.

அவர் பிறப்புதான் ஆங்கில ஆண்டின் தொடக்கம் என்றால், டிசம்பர் 25ஆம் தேதிதான் அவர் பிறந்தது. டிசம்பர் 25 ஆண்டில் தொடக்கம் அல்லவே!

எனவே, தமிழாண்டை ஒட்டியே ஆங்கில ஆண்டும் சூரியன் இருப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

ஆனால், சித்திரையை ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் நாரதருக்கும் கிருஷ்ணனுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று புராணக்கதை கூறி, அறிவிற்கு ஒவ்வாத, அறுவறுப்பான ஆண்டைத் தமிழாண்டு என்று சூடும், சொரணையும், மானமும் உள்ள தமிழன் ஏற்கலாமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாரதரும் கிருஷ்ணனும் ஆண்கள். ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்குமா? அதுவும் ஆண்டு பிறக்குமா? ஆண்டு என்பது கால அளவு. அது எப்படி குழந்தையாய்ப் பிறக்கும்?

எனவே, இழிவை விலக்கி உண்மையை உணர்ந்து தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டியது தமிழன் ஒவ்வொருவனின் கடமை! மாறாக சித்திரை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டாக, தமிழனாய்ப் பிறந்தவர்கள் கொண்டாடக் கூடாது.

நன்றி :குமரன் வெற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக