பக்கங்கள்

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

திராவிடமும் தேசியமும்




- புலவர் க.முருகேசன்
வேற்றுமொழிச் சொல்லான வடசொல் ஒலிவடிவிலும், எழுத்துவடிவிலும் மாறுப்-பட்டிருப்பதால் அதைத்தமிழில் கையாளும்-போது தமிழின் ஒலி வடிவம் மாறாமல் கையாள வேண்டுமென்பதற்காக தொல்-காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். எச்சவியல்-- -_ நூற்பா - 401 _- வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ _ -எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே.
வடசொல்லைத் தமிழில் பயிலும்போது வடசொல்லிற்கே உரிய எழுத்தை நீக்கி விட்டு அவ்விடத்தில் இருமொழிக்கும் பொதுவான எழுத்தைச் சேர்த்து வழங்கவேண்டும். தேஷ் _ தேஷம் - இதுவடசொல், இச்சொல்லில் உள்ள ஷ வடவெழுத்தாகும். இதை நீக்கி விட்டு அதற்கு மாற்றாக இரு மொழிக்கும் பொதுவான உயிரெழுத்தான எகரத்தை சேர்த்து தேஎம் என்றெழுத வேண்டும் சொல்ல வேண்டு-மென்கிறார் தொல்காப்பியர். இச்சொல் வழக்கில் தேசம் என்றாகியது.
இந்நால்வகைச் சொல்லில் திராவிடம் என்னும் சொல் தமிழின் திரிசொல்லாகும். திரவிடம் அல்லது-திராவிடம் என்னும் சொல் திரிந்த தமிழ்ச்சொல் என்பதற்கான சான்று-களைக் காண்போம். நாட்டுப்பெயர்களும், மொழிப்பெயர்களும் பண்டைய காலத்தில்  அம் ஈறு பெற்றே வழங்கின என்பதற்கான சான்று வருமாறு
அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம் சிந்து சோனகம் திரவிடம் சிங்களம் மகதம் கோசலம் மராடம் கொங்கணம்   துளுவம் சாவகம் சீனம் காம்போசம்
பருணம் பப்பரமெனப் பதினென்பாடை
-_- எனும் திவாகர நூற்பாவும்,
சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம்
தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கௌடம் கடுங்குகலம்
தங்கும் புகழ்தமிழ்சூழ்பதி னேழ்புவி தாமிவையே
என்னும் பழஞ்செயுளுமாகும். இம்முறை பற்றியே தமிழும் தமிழம் என வழங்கிற்று. தமிழ் என்னும் சொல் முதலாவது வடமொழியில் திரிந்த வடிவம் த்ரமிளம் என்பதே, ழகரம் வடமொழியில் இல்லை-யதலால் உயிர் முதலை மெய் முதலாக்கி ரகரத்தை இடையில் சேர்த்தல் அம்மொழிக்கு இயல்பாதலாலும் அச்சொல் அம்மொழியில் அவ்வடிவை அடைந்தது, திரமிளம் என்னும் சொல்லிற்கே (1) பஞ்ச திராவிட தேசங்கள் (2) தமிழ் என இரு பொருள் கூறும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி.
வடசொல்லால் திரிந்த வரலாறு தமிழம்-த்ரமிளம்-த்ரவிடம்-த்ராவிடம்-திராவிடம்
த்ரமிளம் என்பது த்ரமிடம் எனத்திரிந்தது. திரமிடம் என்பதும் சிறிது காலத்தின் பின்பு த்ரவிடம் எனத் திரியலாயிற்று இவ்விறு திரிந்த வடிவத்தின் நீட்சியே த்ராவிடம் என்பதாகும். இது தமிழில் திராவிடம் என்றாகும். கி.பி. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவுந் திராவிடத்திலே வந்ததாய் விவகரிப்பேன். வல்ல தமிழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியில் வசனங்கள் சிறிது புகல்வேன் என்று பாடியுள்ளார். திரவிடம், தமிழ் இரு சொல்லும் ஒரு பொருளையே குறிக்கின்றன என்பதே இதன் பொருள்.
அய்நூறு ஆண்டுகளுக்கு முன் ஆழ்வார்கள் பாடிய தெய்வப் பாடல்கள் திராவிடவேதம், திராவிடப் பிரபந்தம் எனும் பெயர்களால் வழங்குகின்றன.
பாகவதபுராணத்தில் சத்தியவிரதன் என்னும் பெயரால் குறிப்பிடப்படும் ஒரு தமிழரசன் திராவிடபதி எனப்படுகின்றான். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிலப்பட்டர் ஆந்திர திராவிடபாஷா என்று தெலுங்கைக் குறிக்கிறார். தமிழைத் திராவிடமென்றும் தெலுங்கை ஆந்திரத்தின் திராவிடம் என்றும் கூறுகின்றார்.
மனுதருமநூல் ஆரியரல்லாத பல்வேறு இனத்தாரைக் குறிக்குமிடத்து தமிழரையும் தெலுங்கர் கன்னடர் முதலியோரையும் வேறு-படுத்தாமல் திராவிடர் என்றே குறிப்பிடுகிறது. மனுதருமம் தோன்றிய காலத்தில் திராவிட-மென்னும் தமிழிலிருந்து தெலுங்கு கன்னடமாகிய மொழிகள் தோன்றவில்லை. எனவே அவரனைவரையும் திராவிடர் என்றே குறித்தது. மனுவின் காலம் கி.மு.150 என்பர். .
மகாபாரதத்தில் யுதிட்டிரன் யாகம் செய்தபோது திராவிட மன்னர்களும் அதில் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மகாபாரதக் காலம் கி.மு. 1100 என்கின்றார் தேவநேயப்பாவாணர்.
இதுகாறுங்கூறியவற்றால் தொன்று தொட்டுத் தமிழையே தனிப்படவும் தலைமை-யாகவும் குறித்து வந்த திராவிடம் என்னும் சொல் தமிழம் என்பதன் திரிபே என்பது வரலாற்றறிவுடையோருக்கெல்லாம் தெற்றென விளங்குவது திண்ணம். இதனையேற்றுத்தான் பேராசிரியர் சுந்தரம்-பிள்ளையவர்கள் தம் மனோன்மணிய மெனும் காவியத்தில் தெக்கணமுமதிற் சிறந்த திராவிட நல்திருநாடு என்று பாடினார். வங்கத்துக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், பஞ்சாபசிந்து சிராட்டமராட்டா திராவிட உத்கலவங்கா எனப் பாடியுள்ளார்.
திராவிடமா அப்படி ஒரு இனமே இல்லை. அப்படி ஒரு மொழியே இல்லையென்று பிதற்றுவோர் மேற்கண்ட சான்றுகளை மறுக்கத்தக்கத் தரவுகளை எடுத்துக்காட்ட-வேண்டும்.
தேசம் என்னும் சொல் தேஷம் என்னும் வட சொல்லிலிருந்து திரிந்த வடசொல் என்பதை முன்னமே தொல்காப்பிய நூற்பா 401அய்க் கொண்டு நிறுவியுள்ளோம். எனினும் ஒரு சொல்லாய்வாளர் நாம்தாம் வடபாற் மொழிகளுக்கும் சமற்கிருதத்திற்கும் நம்தேசத்தையே வழங்கினோம் என்கிறார். இவர் கூற்றுப்படித் தேசமென்னும் தமிழ்ச்சொல்தான். சமற்கிருதம் உள்ளிட்ட வடபால் மொழிகளி-லெல்லாம் நாடு என்னும் பொருளில் பங்களாதேஷ், உத்தரப்பிரதேஷ் என்று வழங்கி வருகிறதென்றால் சொல் பிறந்த இந்தத் தமிழ் நிலப்பகுதியை சோழ தேசம், சேர தேசம், பாண்டிய தேசம் என்று வழங்கியிருக்க வேண்டுமல்லவா! அதற்கான சான்றை அந்தச் சொல்லாய்வாளர் காட்டவில்லையே? அவர் கூற்று எப்படியுள்ளதென்றால் தனக்குடுத்தக் கோவணமின்றி நின்று கொண்டிருக்கும் ஒருவன் நான்தான் எல்லோருக்கும் பட்டு-வேட்டிகளைப் பரிசளித்தேன் என்று கூறுவதற்கொப்பாக உள்ளது.
தேசம் தமிழ்ச் சொல்லாயிருந்தால் இந்தத் தமிழ் நிலத்தின் எந்தப்பகுதியையாவது குறித்து எக்காலத்திலாவது வழங்கி வந்திருக்கவேண்டும். அதற்கான சான்றாவணங்கள் வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம் ஆகியனவாகும்.
வரலாற்றைக் காண்போம் கடல் கொண்ட தமிழ் நிலத்தில் ஏழ்தெங்குநாடு, ஏழ்மதுரைநாடு ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு ஏழ்குன்றநாடு, ஏழ்குணக்காரைநாடு, ஏற்பனை-நாடு என்று நாற்பத்தி ஒன்பது நாடுகள் இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் ஒன்றேனும் தேசமென்றிருந்ததாகக் கூறவில்லை.
தமிழ் வழங்குமித்தமிழ் நிலம் செந்தமிழ் பேசும் பகுதியாகவும் கொடுந்தமிழ் பேசும் பகுதியாகவும் இருந்ததென்று ஒரு பழம் பாடல் கூறுகிறது. பாடல் வருமாறு,
தென்பாண்டி குட்டம்குடம் கற்கா வேண்பூமி பன்றி அருவா அதன்வடக்கு -- நன்றாய சீதம் மலாடு புனநாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிரு நாட்டெண்
செந்தமிழிலிருந்து சற்றுத் திரிந்து வழங்கிய பகுதியைக் கொடுந்தமிழ் நாடுகளென்று குறித்ததேயன்றி தேசமென்று குறிக்கவில்லை.
நாடு என்னும் செந்தமிழ்ச் சொல் நந்தமிழ் நிலத்தில் வழக்கேறி வழங்கி வருவதை வரலாற்று வழியில் காண்போம். வடக்கில் வேங்கட-மலையும் தெற்கில் குமரியாறும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்களை எல்லையாகக் கொண்ட இத்தமிழ் நிலம் முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது.
இம்மூவேந்தர்களும் தங்கள் நாடுகளை பல ஆள்நிலப் பகுதிகளாக, இன்றைய மாவட்டம், வட்டங்களைப் போலப் பிரித்து அவற்றிற்கும் நாடுகளென்றே பெயரிட்டு வழங்கி வந்தனர். சோழ நாட்டில் பல ஊர்களைக் கொண்டது நாடு, பல நாடுகளைக் கொண்டது . வளநாடு, பல வளநாடுகளைக் கொண்டது மண்டலம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கின்றன அவை வருமாறு:
சோழ நாட்டில் மங்கலநாடு, மருகல்நாடு, மழநாடு, புலியூர்நாடு, அழுந்தூர்நாடு, ஆக்கூர்-நாடு, அம்பர்நாடு, அதிகைமங்கலநாடு இடையளநாடு, நரையூர்நாடு, தேவூர்நாடு, பொய்கைநாடு, மண்ணிநாடு, நன்மலிநாடு, புறங்கரம்பைநாடு, பனையூர்நாடு, திரைமூர்நாடு, பிரம்பூர்நாடு, குரும்பூர்நாடு, மிழலைநாடு, குறுக்கை-நாடு, விளத்தூர்நாடு, நாங்கூர்நாடு, ஒக்கூர்-நாடு,  உரத்தநாடு, பாப்பாநாடு, அம்பு-நாடு, காசாநாடு, தென்னமநாடு, மீசெங்கிளிநாடு, புறங்கிளியூர்நாடு, குழித்தண்டலைநாடு, நல்லாற்றூர்நாடு, ஊற்றத்தூர்நாடு, மீகோழை-நாடு, வளநாடுகள் அருண்மொழித் தேவவள-நாடு, பாண்டிய குலோசினி வளநாடு, நித்தவினோதவளநாடு, இராசராசவளநாடு, இராசேந்திர வளநாடு, உய்யக் கொண்டான் வளநாடு, சத்திரியசிகாமணி வளநாடு, கேரளாந்த கவளநாடு, செயசிங்க குலகால வளநாடு, இராசாசிரைய வளநாடு, கடலடையாதிலங்கை கொண்டவளநாடு, என்னும் வளநாடுகள் இருந்ததாகக் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.
பாண்டிய நாட்டில் நாடுகள்
மேல்நாடு, சிறுகுடிநாடு, வெள்ளூர்நாடு, மல்லாக்கோட்டைநாடு, பாகநேரிநாடு, கண்டரமாணிக்கநாடு, கண்டதேவிநாடு, புறமலைநாடு, தென்னிலைநாடு, பழையநாடு, நடுநாடு, அஞ்சூர்நாடு, ஆற்றூர்நாடு பட்டமங்கலநாடு, குன்னக்கோட்டைநாடு, பதிநாலுநாடு,  திருவாதவூர்நாடு, கிழக்குடிநாடு, சிலம்பாநாடு இரும்பாநாடு, தேர்போகிநாடு, ஆங்கரைநாடு, ஏழுகோட்டை நாடு, முத்துநாடு, வல்லநாடு, கானநாடு, கல்வாயில்நாடு, தென்வாரிநாடு தளையூர்நாடு.
சேரநாட்டில் நாடுகள்
கொங்குமண்டலத்தில் பூந்துரைநாடு, காங்கேயநாடு, ஆரைநாடு, திருவானக்குடிநாடு, தலையநாடு, பூவாணிநாடு, ஒருவங்குநாடு, கிழங்குநாடு, வாழவந்திநாடு, வெங்காலநாடு, ஆனைமலைநாடு காஞ்சிகோயில்நாடு, தென்கரைநாடு, பொங்கலூர்நாடு, வாரக்கநாடு, மணநாடு, தட்டையநாடு, அரையநாடு, வடகரைநாடு, நல்லுருக்காநாடு, அண்டநாடு, காவடிக்காநாடு, இராசிபுரநாடு, குறும்புநாடு, பருத்திப்பள்ளிநாடு, ஏமூர்நாடு என மேலும் பல நாடுகள் உள்ளன.
(தொடரும்)
....நவம்பர் 01-15 இதழின் தொடர்ச்சி
கல்வெட்டில் நாடுகள்
சோழர் கல்வெட்டு முதற்பராந்தகச் சோழன் கி.பி.(907--957) ஆனைமலை நாசிங்கப்பெருமாள் சபையோர் சாசனம் -- சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு மருதூர்.
தென்னவன் மூவேந்தவேளான் சாசனம் 995--பொய்கைநாடு இராசேந்திரசிங்க வளநாடு, தியாக வல்லி வளநாடு, திரிபுவன முழுதுடைய வளநாடு, திருவாலி நாடு, நித்தவினோத வளநாடு, இராசராசக்கிணறு மன்னன் இராசராசன் (885--1014) வேங்கைநாடு, இராசிபுரத்து நகரத்தார் சாசனம் மன்னன் இராசராசன் வேங்கைநாடு, குடமலை நாடு, சாமுண்டப்பை நிபந்தம் மன்னன் முதலாம் இராசேந்திரன் (1012--1044) பங்கள நாடு, வகைமுகைநாடு இந்த கல்வெட்டில் மன்னனின் வெற்றிச்சிறப்பைக் கூறுமிடத்தில் வங்காள தேசம் ஆரியதேசம் வென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் நிலத்திற்குப் புறத்தே உள்ள நாடுகள் தேசமென்று வழங்கப்-பட்டதால் தன்னாட்டுப் பகுதியை நாடு என்று குறிப்பிடும் கல்வெட்டு பிறநாட்டை அவர்கள் வழங்கியபடியே தேசமென்று குறிப்பிடுகிறது. இதிலிருந்து தேசம் பிறமொழிச்சொல் பிறநாடுகளைக் குறித்து வழங்கிய சொல் என்பது தெளிவாகிறது.
மணிமங்கலம் சபையோர் சாசனம் மன்னன் இரண்டாம் இராசேந்திரன் (கி.பி. 1052---64) செயங்கொண்ட சோழபுரத்து மாகனூர் நாடு.
வில்லவராயன் சாசனம் மன்னன் முதற் குலோத்துங்கன் (1070) கல்வெட்டு உள்ள இடம் திருவானைக்காவல் பாண்டிய குலாசினி வளநாடு, தென்கவிர்நாடு, மணிமங்கலம் கோவில் சாசனம் மன்னன் மூன்றாம் இராசராசன் (1216) குலோத்துங்கசோழ வளநாடு, குன்றத்தூர்நாடு. பாண்டியநாட்டுக் கல்வெட்டு புதுக்கோட்டைச் சீமைக்கல்வெட்டு குலசேகரப்பாண்டியன் (1199---1216) திருமயம் தாலுகாமலைக்கோவில் விருதராசபயங்கரவள-நாடு, கானநாடு இரயிலேசுசாசனம் தென்காசி மன்னன் மாறவன்மன் சுந்தரபாண்டியன் (1219) துருமாநாடு, கானநாடு, என்று பல நூறு ஆதாரங்கள் காட்டமுடியும்!
வீரபாண்டிச் செப்பேடு மாரியம்மன் கோயில் வழிபாட்டிற்கான கொடைபற்றியது. மன்னன் மதுரை விசுவநாத நாயக்கன் (1529) பிறதலை வளநாட்டில் சேர நாட்டு எல்லைக்கும் வருசை நாட்டு மத்தியில் புல்ல நல்லூரான வளநாட்டில் குடியிருக்கிற காமாட்சியம்மன் பக்தராகிய யாகச்சத்திரிய தெலுங்கதேசாதி-பதிகள் வமிசத்தார்கள் தலைமை புல்லன்-செட்டி. புல்லன்செட்டி. மாரியம்மன் கோயிலுக்குக் கொடையளிக்கிறார். புல்லன் செட்டி குடியிருக்கும் தமிழ் நிலப்பகுதியைக் குறிப்பிடும்.
செப்பேடு பிறதலை வளநாடு, சேர நாடு, வருசை நாடு, புல்ல நல்லூர் வளநாடு என்று குறிப்பிடுகிறது. புல்லன்செட்டியின் முன்னோர்கள் வாழ்ந்த இடம் தெலுங்கு மொழி பேசப்படும் தேசமாகும். இதுவும் இராசேந்திரசோழன் செப்பேட்டுக் குறிப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்-நிலத்திற்கு புறத்தேயுள்ள தெலுங்கு நாட்டைத் தேசமென்று குறிப்பிடுகிறது
முசிறிச் செப்பேடு கோயில் பூசகர் தேவரடியார்க்குக்காணி வழங்கியப்பட்டையம் மன்னன் மதுரை முத்துவீர சொக்கநாத நாயக்கன் (கி.பி. 1710) வெற்றிச்சிறப்பைக் குறிக்கிறது. இதில் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதூ.ன் என்று அவனின் வெற்றிச்சிறப்பு குறிப்பிடப்படுகிறது. இதில் வரும் நாடு, இராச வளநாடு ஆமூர்நாடு குறிக்கப்படுகிறது
தஞ்சை கள்ளர் மகாசங்கத்தின் அமைச்சர் திரு.நடராசப்பிள்ளை மூலம் கிடைத்த ஆவணம். -- காசாநாடு, கீழ்வேங்கைநாடு, கோனூர்நாடு, பின்னையூர்நாடு, தென்னமநாடு, கன்னந்தங்குடிநாடு, உரத்தநாடு, ஒக்கூர்நாடு, திருமங்கலக்கோட்டைநாடு, தென்பத்துநாடு, இராசவளநாடு, பைங்காநாடு, வடுகூர்நாடு. கோயில்பத்துநாடு, சுந்தரநாடு, தளநீள்வளநாடு, பாப்பாநாடு, அம்புநாடு, வாகரைநாடு, வடமலைநாடு, கொற்கைநாடு, எரிமங்கலநாடு, செங்களநாடு, மேலைத்துவாகுடிநாடு, மீசெங்கிளி-நாடு, தண்டுகமுண்டநாடு, அடைக்-கலங்காத்தநாடு பிரம்பைநாடு கண்டிவளநாடு, வல்லநாடு வாராப்பூர்நாடு, ஆலங்குடிநாடு, விரக்குடிநாடு, கானாடு, கோனாடு பெருங்களூர்நாடு, கார்போகநாடு, ஊமத்தநாடு, பல்வேறு ஆவணங்களின் திரட்டென்பதால் வந்த நாடுகளையே பல இடங்களில் மீண்டும் வந்துள்ளன. அதை உறுதிப்பாடாக எடுத்துக்கொள்ளவும்.
தேஎம் என்னும் சொல் பத்துப்பாட்டில் பதினைந்திடங்களிலும் எட்டுத்தொகையில் நாற்பத்திநான்கிடங்களிலும் பதினெண்கீழ்க்கணக்கில் மூன்றிடங்களிலுமாக அறுபத்தியிரண்டிடங்களில் பயின்று வருகிறது. இவற்றில் முப்பதிடங்களில் திசை, திக்கு, வழி, இடம் என்று இடப்பொருளில் வருகிறது. மூன்றிடங்களில் தேயம் என்று இடையினயகரம் பெற்று அழிவு, கலக்கம் என்னும் பொருளில் வருகிறது.
தேஎம் என்னும் சொல் நாடு என்னும் பொருளில் முப்பத்தியிரண்டிடங்களில் பயின்று வருகிறது. இவற்றில் ஆறிடங்களில் தன்னாட்சி செல்லாத வேறு பல, அகன்ற இடத்தையுடைய, பணிந்தவருள்ள தேசமென்று வருகிறது. ஒன்பதிடங்களில் பகைவர் தேசமென்றும், ஆறிடங்களில் முன்பின் அறியாத தேசமென்றும் பதினைந்திடங்களில் மொழி வேறாகிய தேசமென்றும் ஓரிடத்தில் வடுகர்தேச-மென்றும் வருகிறதேயன்றி தமிழ் நிலத்தையோ தமிழ் நிலத்தின் எந்த ஒரு பகுதியையோ தேசமென்று குறித்து வரவில்லையே? வடுகர் தேசமென்று வந்திருக்கும்போது தமிழர் தேசம் என்றோ தமிழ்த்தேசமென்றோ குறித்து வரவில்லையே தமிழ்த்தேசியம் என்போர் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அகநானூறு பாடல்---349இல் நன்னனது நாட்டிலுள்ள ஏழில்மலை என்று அவனது ஆட்சிப் பகுதியை நாடு என்று குறிப்பிடுகிறது. தலைவன் சென்றுள்ள இடத்தைக் குறிப்பிடும்-போது சொல்பெயர். தேஎம் என்று குறிப்பிடுவதை நோக்குக. திருக்குறள் கல்வி 397 யாதானும் நாடாம் - -ஊழியல் பத்து குறட்பாக்களிலும் நாடு வருகிறது. பொருள் செயல்வகை 753-ஆம் குறளில் தேயம் இடப்பொருளில் வருகிறது. சிலப்பதிகாரம் - கொடுங்கருநாடர் முத்தொள்ளாயிரம் - வியன்தமிழ்நாடு, காவிரிநீர்நாடு, குடநாடு, புறநானூறு, வாடாயாணர்நாடு, ஒல்லையூர் நாடு, மேலும் பல சங்க இலக்கியத்தில் -- - அகநாடு, இடைகழி-நாடு, ஏறுமாநாடு, கோனாடு, மலையநாடு, மழவர்நாடு, மாறாக்கநாடு, முக்காவனநாடு என்று வருகின்றன.
தேவாரத்தில் நாடு: மருகல் நாடு, கொண்டல் நாடு, குறுகைநாடு, நாங்கூர்நாடு, நறையூர்நாடு, மிழலைநாடு, வெண்ணிநாடு, பொன்னூர்நாடு, புரிசைநாடு, வெள்ளூர்நாடு. விளத்தூர்நாடு, பெரியபுராணத்தில் - நாடு - மேன்மழநாடு, மேற்காநாடு, கோனாடு, மருகல்நாடு என்று வந்துள்ளன.
சங்ககாலந்தொட்டு மன்னர் காலந்-தொடர்ந்து மக்களாட்சிக் காலமான இன்றுவரை தமிழ்நிலமோ, தமிழ்நிலத்தின் எந்த ஒருபகுதியோ தேசமென்று குறித்து வழங்கப்-படவில்லை யென்பதை மேற்கண்ட வரலாறு கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம் ஆகிய சான்றுகள் நிறுவுகின்றன.
எக்காலத்திலும் இத்தமிழ் நிலங்குறித்து வழங்காத ஒருசொல் எப்படித் தமிழ்ச் சொல்லாக இருக்கமுடியும். எனவே தேசம் தமிழ்ச் சொல்லில்லை. தேஷ் என்னும் வடசொல் தமிழர்களால் திரிக்கப்பட்ட வடமொழித் திரிசொல்தான் தேசம். தமிழம் என்னும் தமிழ்ச்சொல்  திரிக்கப்பட்ட தமிழ்த்திரி சொல்தான் திராவிடம். இதுதான் மொழிநூல் காட்டும் வரலாறு.
ஒருபொருள் குறித்துவரும் பல சொல்லும், பலபொருள் குறித்து வரும் ஒரு சொல்லுமென இருவகைப்படுந்திரிசொல் என்றும் உரை சொல்லியுள்ளார் சேனாவரையர். அவர் கூற்றுப்படி தமிழைக் குறித்த இயற்சொல் தமிழம். தமிழைக் குறித்தத் திரிசொல் திராவிடம் இவ்விரு சொல்லும் தமிழென்னும் ஒரு பொருள் குறித்த இருசொற்களாகும்.
வடவேங்கடந்தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம் என்று பனம்பாரனரால் கட்டப்பட்டத் தமிழ் நிலம் இன்றும் உள்ளது. அந்த மண்ணின் மைந்தர்களின் மரபுவழித் தோன்றலான மக்களும் இன்றும் அந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். அவர்-களுடைய - பண்பாடு, கலை நாகரிகத்தில் பெரியளவில் மாற்றமில்லை. ஆரியத்தின் நுழைவால் மொழி - திரிந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தமிழ்பெயர் மாற்றம் பெற்றுள்ளது.  இதைத் தந்தை பெரியாரவர்கள் என்னருந்தமிழே நீயேதான், தெலுங்கு, நீயேதான். கன்னடம், நீயேதான் மலையாளம் என்று சரியாகக் கணித்துச் சொல்லியுள்ளார்.
தமிழிலிருந்து திரிந்த அத்திரிபு மொழி-களுக்கு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பெயராகி அதைப் பேசுவோர் தெலுங்கர், கன்னடர், மலையாளி என்றான பிறகு அவர்களைத் தமிழரென்றும் அவர்கள் பேசும் மொழியைத் தமிழென்றும் ஒரு வரையறைக்குள் கொண்டுவர முடியாது.
அவர்களும் தமிழரென்று குறித்து வழங்கி வந்த காலத்தில் தோன்றிய தமிழின் திரிசொல்லான திராவிடம் என்னும் சொல் அவர்களையும் நம்மையும் ஒருங்கிணைத்துக்  குறித்து வழங்குவதற்கு பயன்பாட்டுச்சொல்லாக அமைந்துள்ளது. இந்த வரலாற்று நோக்கில்-தான் மொழி நூலறிஞர்கள் தமிழோடு தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளையும் சேர்த்து திராவிட-மொழி என்றனர்.
நாம் தமிழர்கள் நம்மோடு அவர்களையும் சேர்த்தால் நாம் திராவிடர், நம்மொழிதமிழ், நம்மொழியோடு அவர்கள் மொழிகளையும் சேர்த்தால் திராவிட மொழி, நம்நாடு தமிழ்நாடு, நம் நாட்டோடு அவர்கள் நாடுகளையும் சேர்த்தால் திராவிடநாடு (அதாவது பனம்பாரனார் கூறிய தமிழுலகம், இதுதான் திராவிடமென்னும் சொல் பிறந்த வரலாறு, பயன்பாடு நம்மிலிருந்து ஆரியத்தை வேறு-படுத்திக் காட்டியது திராவிடம். சாதிச்சகதியில் சாய்ந்து கிடந்தவனை தூக்கி நிறுத்தி துடைத்துக் கழுவித் தமிழனென்று தலை நிமிரவைத்தது. திராவிடம், மதமெனும் மலக்குழியில் மடிந்துகிடந்தவனை இனத்திமிரோடு எழுந்து நிற்க வைத்தது திராவிடம், இந்தமண்ணில் இந்திக்கென்னவேலை என்று எட்டி உதைத்துத் துரத்தியது திராவிடம். இனித்தமிழ் தனித்தமிழ்-தான், தூயதமிழ் பேசுவதால் மற்றவேற்று மொழிச் சொற்களை நீக்கிப்பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவு நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்றார் தந்தை பெரியார்.
அக்ராசனர் அவைத்தலைவரானார், நமஸ்காரம் வணக்கமானது, விவாகசுபமு-கூர்த்தம் திருமண அழைப்பானது. இந்த நிலையைத் தந்தது திராவிடம். இந்தியா ஒரு நாடில்லை எங்கள் நாடு தமிழ்நாடு என்ற எண்ணத்தைத் தந்தது திராவிடம். இந்த மண் இழந்த பெயரை எடுத்துக் சூட்டித்தமிழ் நாடென்றது திராவிடம்.  இவற்றில் ஏதேனும் ஒன்றின் மயிர்க்காலை-யாவது அசைத்துப் பார்த்தது உண்டா தேசியங்கள்? எதையும் செய்யாமல் எழுத்து வணிகம் செய்து திராவிடத்தைக் குறைத்துப் பேசுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு தமிழின் திரிசொல்லான திராவிடம் கசக்கிறது ஆரியத் திரிசொல்லான தேசம் இனிக்கிறது. இல்லாத தேசியத்தைக் கட்டியழுகிறார்கள். இந்தத் தமிழ் மண்ணில் என்றுமே இல்லாத தேசம் அதற்கொரு தேசியமாம். அதற்குத் தமிழ் என்னும் ஒட்டுப்போட்டு தமிழ்த்தேசியமாம். அதற்கொரு தமிழ்த்தேசிய இனமாம். தேசமே இல்லாதபோது தேசியமும் தேசிய இனமும் எங்கிருந்து முளைத்தன.

நல்லதமிழ் நாடிருக்க நீசமொழி தேசம் நமக்கெதற்கு. தேசியம் பேசுவோர் திருந்த வேண்டும். நாடு நாட்டினம் தமிழ்நாடு, தமிழினம் என்று பேசவேண்டும். அதுதான் சரியாகும்.
-உண்மை இதழ்,16-30.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக