பக்கங்கள்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்


அய்யாவின் அடிச்சுவட்டில்....137

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
20.8.1978 அன்று தஞ்சையில் தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மண்டலச் செயலாளர் (தற்பொழுது திராவிடர் கழக சட்டத்துறைச் செயலாளர்)  வழக்குரைஞர் இன்பலாதன்_மலர்க்கண்ணி மணவிழா என்னுடைய தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவில் முகவை மாவட்ட தி.க. தலைவர்  ஆர்.சண்முகநாதன்  பி.ஏ., பி.எல்., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில், நான் தலைமை உரையாற்றும் போது, இந்த விழாவானது ராகுகால மணவிழா மணவிழாவிலே எல்லோரும் நேரத்தை மிக முக்கியமாகக் கருதுவார்கள். மணவிழா 4 மணியிலிருந்து 6 மணி வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 6 மணிக்குள் இந்த விழா நடைபெற வேண்டும் என்பதிலே நண்பர் இன்பலாதன் அவர்களும் அய்யா சண்முகநாதன் அவர்களும் மிகுந்த ஆவலாக இருந்தனர்.
இப்படி எல்லாம் புதியதாக நடக்கப் போகும் போது நாம் ஏன் எமகண்டம், ராகுகாலம் பார்க்க வேண்டும்? எல்லா நேரமும் நல்ல நேரம்தானே. இருதயத்தை மாற்றிக்கூட மனிதனை வாழ வைக்கிறார்கள். இக்காட்சியை சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்தோம். இன்றைக்கு மதிப்பிற்குரிய ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு செயற்கை சிறுநீரகத்தின் மூலமாக சிறுநீர் வெளியேறுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நாம் ஏன் நல்லது கெட்டது பார்க்க வேண்டும்.
நாடு புதிது புதிதாக முன்னேறி வந்த காரணமே தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பிரச்சாரம்தான். பெண்களுக்கு இருக்கும் தொல்லை மகப்பேறு தான். இதனால் வெளியேகூட வரமுடியாமல் இருக்கிறார்கள். வெளிவே வராமல் இருப்பதைக் கண்டு எங்கே அவர்கள் என்று கேட்டால் ‘She is Family way’  என்று கூறிவிடுகிறார்கள். காரணம் அவர்கள் மகப்பேறு தொல்லைதான். இவர்களுக்கு மதிப்பும் இல்லையாம். ஆண்களுக்கு வரமுடியாத நிலை உண்டா? இல்லை ஆணும், பெண்ணும் சேர்ந்துதானே வாழ்க்கை நடத்துகிறார்கள் ஆணுக்கு மட்டும் ஏன் ‘Family Way’ இல்லை. இனிமேல் ஆணும் பெண்ணும் இருவரும் வெளியே எப்போதும் வரும் நிலை வரும் என்று குறிப்பிட்டேன்.
``திட்டமிட்டு வாழுங்கள் உறுதி மனப்பான்மையுடன் வாழுங்கள். இப்படி நடக்கும் திருமணங்களில் மணமக்களுக்கு ஒரு குறையும் வராது. பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழுங்கள் என்று குறிப்பிட்டு என்னுரையை நிறைவு செய்தேன்.
விழாவில் கழகப் பொறுப்பாளர் கா.மா. குப்புசாமி, தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ, தஞ்சை நடராசன், முன்னாள் நகரத் தந்தை பெத்தண்ணன், முகவை மாவட்ட தி.க. செயலாளர் என்.ஆர். சாமி, மாரிமுத்து, சிதம்பரம், வக்கீல் சண்முகம், சுப்ரமணியம், ஆகியோர் கலந்து கொண்டார்கள். மணமகன் இன்பலாதன் நன்றியுரை ஆற்ற விழா முடிவடைந்தது. விழாவில் ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியாரின் நூற்றாண்டில் வரலாற்றுப் பிரகடனமாக அய்யா அவர்கள் உருவாக்கிய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, இனி, அரசாங்க அலுவலகங்களில் இந்த எழுத்துச் சீர்திருத்த முறைதான் பின்பற்றப்படும் என்று அறிவித்தது  குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் அவர்கள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசின் கவனத்திற்கு அறிக்கை வாயிலாகவும்,  திராவிடர் கழகம் பலமுறை வலியுறுத்தி வந்ததை முன்பே நாம் பார்த்தோம்.
தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று தமிழ்நாடு அரசு பத்திரிகைகளுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பின் முழுவிவரம் இங்கு தரப்படுகிறது.
தமிழ்நாடு அரசு
பொது (செய்தி, மக்கள்_தொடர்பு)த் துறை
செய்தி வெளியிடு எண்:449 நாள்:19.10.1978
பெரியார் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
தமிழ்நாடு அரசு அமலாக்குகிறது
பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்று, அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்மொழி எழுத்துத் தொகுதி எளிதில் கையாளமுடியாதபடி அதிகமாக உள்ளதால், அச்சிடுதல், தட்டச்சு செய்தல் போன்றவற்றில் அதிக நேரம், விரயம் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ் எழுத்துத் தொகுதிகளில் சீர்திருத்தம் தேவை என பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள், தமது வாழ்நாளில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கையாண்டு வந்ததுடன் அது அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று மிகவும் வலியுறுத்தி வந்தார். அதனை நடைமுறைப்படுத்தத் தக்க ஆணை வெளியிட வேண்டி பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவினர் அரசைக் கேட்டுக் கொண்டனர்.
பெரியார் நூற்றாண்டு விழாவினை 18.9.1978 அன்று ஈரோட்டில் தொடங்கிவைத்து, பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு செயற்படுத்துமென தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும் பெரியார் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பரிந்துரை செய்துள்ளார்.
தமிழக முதல்வர் அறிவிப்பிற்கிணங்கவும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரின் பரிந்துரையை ஏற்றும், சீர்திருத்திய எழுத்துக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சீர்திருத்திய தமிழ் எழுத்து வடிவங்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், உள்ளாட்சித்துறை வரம்பிற்குட்பட்ட நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களிலும், தமிழக அரசின் வரம்பிற்குட்பட்ட வாரியங்கள், கழகங்கள், நிறுவனங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.
தமிழ் மொழியில் வெளிவரும் நாளிதழ்களும் பருவ ஏடுகளும், தமிழ்ப் புத்தகம் வெளியிடுவோரும், அச்சிடுவோரும் சீர்திருத்திய தமிழ் எழுத்து வடிவங்களைக் கையாள வேண்டுமென அரசு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு வெளியீடுகளிலும், அரசிதழ்களிலும் மற்றும் தமிழில் அச்சிடப்படும் எல்லா இனங்களிலும் சீர்திருத்திய எழுத்து வடிவங்கள் கையாளப்படும் என அரசு செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்றைக்கு தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்கும் எழுத்துச் சீர்திருத்த முறையை ஆரம்பகாலம் முதல் நடைமுறைப்படுத்தி வரும் ஒரே ஏடு விடுதலை! விடுதலை ஏடு இந்த இடைவிடாத முயற்சியினால், எழுத்துச் சீர்திருத்த முறை தங்குதடையின்றி இன்று எல்லோரும் எழுதும், படிக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகளிலும் இந்த எழுத்து முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் அந்த நூல்களை வாங்கிப் படித்து வருவதால், இந்த எழுத்துச் சீர்திருத்த முறை தமிழகத்தில் மிகவும் வழக்கமாகிவிட்ட ஒன்றாகிவிட்டது.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் இந்த ஆண்டில், தமிழக அரசின் பாராட்டத்தக்க சாதனையாக, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் கடந்த நாற்பது ஆண்டுகளாகவும் அதற்கு மேலாகவும் உருவாக்கப்பட்டு, கடைபிடித்து நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நூற்றாண்டு விழாவின்போது அறிவித்தபடி, செயல்படுத்த முன்வந்து ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கும் அதன் முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்கட்கும், நமது இயக்கத்தின் சார்பாகவும், லட்சோபலட்சம் பெரியார் தொண்டர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று 30.10.1978 அன்று விடுதலை இதழின் இரண்டாவது பக்கத்தில் எழுதியிருந்தேன், அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகின்றேன்.
``இந்தக் காரியம் மிகப் பெரிய சரித்திர சாதனையாகும். அ.தி.மு.க. ஆட்சியின் கிரீடத்தில் ஜொலிக்கும் ஒரு வரலாற்றுப் புகழ்வாய்ந்த வைரம் ஆகும்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் போன்றே, கலைஞர் கருணாநிதி அவர்களது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கடுமையான சட்டம் போன்றே, இதுவும் திராவிட இயக்க சரித்திரத்திலும், தமிழ்நாட்டு வரலாற்றிலும், தமிழ்மொழியின் வரலாற்றிலும் முக்கிய திருப்பமானதோர் அரிய சரித்திரச் சாதனையாகும்.
தமிழ்மொழியின் வளர்ச்சியில் அக்கறையும் கவலையும், பற்றும் உள்ள எவரும் இதனை இருகரம் நீட்டி வரவேற்கவே செய்திடுவர் என்பது பாராட்டத்தக்கது.
தமிழக அரசு விளம்பர வாசகங்களில் இந்தச் சீர்திருத்த எழுத்து மாற்றங்கள் உடனடியாக இடம் பெற்றது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
பள்ளிப்பாட நூல்களில் இவை உடனடியாக இடம் பெற வேண்டுமென்று ஆணை பிறப்பித்த அரசும் கல்வி அமைச்சரும் பாராட்டத்தக்கவர்கள் ஆவார்கள்.
தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை இம்முறையில் பின்பற்ற வேண்டும் என்று கண்டிப்பாக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
அ.தி.மு.க. நடத்தும் ஏடுகளிலும் இது உடனடியாக இடம்பெற வேண்டும். தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே இம்மாற்றம் நடைபெற்றிருக்க வேண்டும், அது எப்படியோ தவறிவிட்டது! என்றாலும் இப்போது இதை அ.தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது என்பதால் இதனை எவரும் கட்சிக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது என்பது நமது அன்பு வேண்டுகோள்.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும் ஏனைய கட்சித் தலைவர்களும் இதனை வரவேற்பதோடு அவரவர்கள் நடத்தும் ஏடுகளில் இம்முறையை உடனடியாக புகுத்திக் காட்டவேண்டும். அது தந்தை பெரியாருக்கு மரியாதை செய்வது மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக்கும் ஆக்கரீதியான தொண்டாற்றுவதும் ஆகும்.
எல்லா ஏடுகளிலும் கடைபிடிப்பது மிகவும் அவசியம் ஆகும் என எல்லா தலைவர்களையும், எழுத்துத் துறையாளர்களையும், ஏடு நடத்துவோர்களையும் இயக்கத்தின் சார்பில் விரும்பிக் கேட்டுக்கொள்வதுடன் தமிழ்மொழி உள்ளவரை இச்சீர்திருத்தச் சாதனை இருக்கும் என்பதால் அரசும், முதல்வரும் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள், என்றும் நம் இயக்கத்தின் சார்பாக தெரிவித்து அன்று இவ்வாறு எழுதினேன் என்பது குறிப்பிடத்தக்கது.

-       (தொடரும்)
-உண்மை இதழ்,1-15.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக