இந்தியாவில் தமிழன் இன்னும் பிரதமராக முடியவில்லை, ஆனால் கயானாவில் நடந்தேறிவிட்டது. உலகின் முதல் தமிழ்ப் பிரதமர் அந்நாட்டிற்கு கிடைத்துள்ளார். தென் அமெரிக்க நாடான கயானாவின் பிரதமராக அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்-பட்டிருக்கிறார் வீராச்சாமி நாகமுத்து. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர். 1860களில் ஆயிரக்கணக்கான தமிழர்களை பிரிட்டிஷார் பல்வேறு கூலி வேலைகளுக்காக அழைத்துச் சென்றார்கள். அதில் நாகமுத்துவின் மூதாதையர்களும் அடங்குவர். அவர்களின் வம்சா வழியினர் இப்போதும் தமிழ் பெயர்களுடன் கயானிஸிந்தியன் என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
கயானாவின் பிரதமராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழர் நாகமுத்து, துணை ஜனாதிபதியாகவும் இருக்கிறார். இவரது அமைச்சரவையில் 25 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
பல நாட்டுத் தமிழர்களும் வாழ்த்திக் கொண்டிருக்கும் சூழலில்... டெல்லித் தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான ராம்சங்கர், கயானாவுக்குச் சென்று பிரதமர் நாகமுத்துவைச் சந்தித்தார். இது பற்றி ராம்சங்கர் கூறியதாவது நான் தமிழன் என்று அறிந்த மாத்திரத்தில் என்னை கட்டிப் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரதமர் நாகமுத்து. திருக்குறள், சிலப்பதிகாரம், பாரதிதாசன் கவிதை தொகுப்புகள் உள்ளிட்ட நூல்களை நான் பரிசளிக்க, புதிய உலகில் மதராஸியின் (தமிழன்) வாழ்க்கை என அவர் எழுதிய புத்தகத்தையும் கயானா நாட்டின் பரிசையும் எனக்களித்து சந்தோசப்பட்டார்.
கயானாவின் விடுதலைக்காகவும் கருப்பின மக்களின் உரிமைக்காகவும் போராடியதை அவர் என்னிடம் நினைவு கூர்ந்தபோது, அந்தப் போராட்டத்தின் வலியை உணர முடிந்தது. தீண்டாமை, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு பிரச்சாரம் செய்வதையும் அவர் விவரித்தார். தமிழகத்தில் தனது மூதாதையர்கள் எங்கு பிறந்தனர் என்பது அவருக்குத் தெரியவில்ல. அதைக் கண்டறிந்து தருமாறு இந்தியத் தூதரகத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியவர், மூதாதையர்கள் பிறந்த கிராமத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டுமென்பதே எனது நீண்டநாள் கனவு என்றார்.
தனது நாட்டின் காவல்துறைக்கு, இந்திய தண்டனைச் சட்டங்கள், சைபர் க்ரைம் பற்றி உரை நிகழ்த்துமாறும் அதற்கான அழைப்பு அரசு முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என்றும் தவறாமல் வரவேண்டும் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டார். 10 நிமிடம் தான் எனக்கு நேரம் தரப்பட்டிருந்தது. அதை நான் நினைவூட்டியபோது, ஒரு தமிழனைப் பார்க்க 30 மணி நேரம் செலவு செய்து வந்திருக்கிறாய். உன்னோடு 1 மணி நேரம் கூட நான் செலவழிக்கவில்லையெனில் தமிழன் என சொல்வதில் அர்த்தம் கிடையாது என்றுகூறி நீண்ட நேரம் பேசினார் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். டெல்லித் தமிழ் வழக்கறிஞர்கள் நடத்தும் பாராட்டுவிழாவில் கலந்துகொள்ள இந்தியா வர சம்மதித்திருக்கிறாராம் கயானா பிரதமர் நாகமுத்து என்று கூடுதல் செய்தியையும் கூறினார்.
-உண்மை இதழ்,16-30.11.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக