பக்கங்கள்

சனி, 19 ஆகஸ்ட், 2017

பொன்விழா காணும் “தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம்”



1967ஆம் ஆண்டின் (ஜூலை 18) தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன் அத்தியாயம்  பூத்த நறுமண நாள். முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் தீர்மானம் ஒன்றை சட்டப் பேரவையில் முன்மொழிந்தார்.

“மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அந்தப் பிராந்தியத்தைக் குறிக்கும்போது நமது மாநிலத்துக்கு மட்டும் “தமிழ்நாடு’’ அல்லது “தமிழகம்’’ என்ற பெயரில்லாமல் அதன் தலைநகரின் பெயரைக் குறித்தே வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இதை மாற்றித் தமிழர்கள் வாழும் இடம் என்பதைக் குறிக்கும் வகையில் “தமிழ்நாடு’’ என்று பெயரிடுவதற்குத் தமிழக அரசு முயற்சி செய்து வருகின்றது. இந்தக் காரியம் மத்திய அரசின் அனுமதி பெற்று இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தியாக வேண்டிய காரியம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை உறுதியாகக் கேட்டுக்கொள்வதுடன், அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது.’’

முதல் அமைச்சர் அண்ணா அவர்களால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது மகிழ்ச்சி மணக்கும் செய்தியாகும். முதல் அமைச்சர் அண்ணா முன்னெடுத்துச் சொல்ல அனைவரும் “தமிழ்நாடு வாழ்க!’’ என மும்முறை முழங்கினர். இம்மசோதா நாடாளுமன்றத்தில் (22.11.1968) அன்று நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் விழா 1.12.1968 அன்று அன்றைய பாலர் அரங்கில் (பிற்காலத்தில் கலைவாணர் அரங்கம் என்று பெயர்) வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது. முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு திரும்பிய காலகட்டம் அது. அந்த நிலையிலும் அவ்விழாவில் மகிழ்ச்சி பொங்க பங்கேற்றவர்.

“நான் இந்த மகிழ்ச்சியான விழாவில் கலந்து கொண்டால், அதிக நேரம் பேசினால் உடலுக்கு ஊறு நேரிடுமென்று என் உடல் நலத்தில் அக்கறை உள்ள மருத்துவர்களும், நண்பர்களும் சொன்னார்கள்; ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த வாய்ப்பு ஒருவரது வாழ்க்கையில் ஒருமுறைதான் வரும். பலமுறை வருவதில்லை. நான் பேசுவதால் இந்த உடலுக்கு ஊறு நேரிடுமென்றால் இந்த உடலிருந்தே பயனில்லை’’ என்று முதல்வர் அண்ணா சொன்ன பொழுது கூடியிருந்தோர் அனைவரின் கண்களும் கசிந்தன. தமிழ்நாடு என்ற பெயர் பெற்ற மாநிலமாக இன்று திகழ்கிறது என்கிற போது இந்த நேரத்தில் நினைவிற்குக் கொண்டு வரப்பட வேண்டியவை.

11.9.1938 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் “தமிழ்நாடு தமிழருக்கே!’’ என்று முழங்கியவர் தந்தை பெரியார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். (27.7.1956 முதல் 13.10.1956 வரை).

தமிழ்நாடு பெற்று விட்டோம்! தமிழ், தமிழர் பண்பாடுமீது தொடுக்கப்பட்ட ஆரியப் பண்பாட்டுப் போரை என்று முடிவுக்குக் கொண்டு வரப் போகிறோம்?

உண்மை,16-31.7.17

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

சுமார் 700 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு



எல்லைப்பட்டி, ஆக.14 புதுக் கோட்டை அருகே உள்ள எல் லைப்பட்டி கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டிய தகவல் அடங்கிய பழைமை வாய்ந்த கல்வெட்டு சனிக்கிழமை (ஆக.12 இல்) கண் டெடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள எல் லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு, புதுக் கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினரால் கல்வெட்டு மற் றும் தொன்மை பாதுகாப்பு பயிற் சிகள் வழங்கப்பட்டு வந்தன. அப்போது, சுமார் 700 ஆண்டு களுக்கு முன்பு, குளம் வெட்டப் பட்ட தகவலடங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் தலைவர் மேலப் பனையூர் ராஜேந்திரன், அமைப் பின் நிறுவனர் மங்கனூர் ஆ.  மணிகண்டன், ஒருங்கிணைப் பாளர் முத்துக்குமார் ஆகியோரால் கல்வெட்டு படியெடுக்கப்பட்டது.

இதுகுறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறு வனர் ஆ.மணிகண்டன் மேலும் கூறியதாவது:

எல்லைப்பட்டி பள்ளி சுற் றுச்சுவரின் அருகிலேயே நீர் வரத்து, வடிகால் அமைப்புடன் பழைமையான குடிநீர்க்குளம் உள்ளது.

இது 700 ஆண்டுகளுக்கு முன்பு தென்க வீர நாடன் என்ப வரால் அமைக்கப்பட்டது என் பதை வெளிப்படுத்தும் வகையில் "ஷஸ்....ஸ்ரீ இக்குள(ம்).....(தெ)ன் க..வீர நாடன்" என்று பொறிக் கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்தமைப்பு அடிப்படையில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை அறிய முடிகிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள், பொதுநல நோக்கில், மக்களின் குடிநீர், வேளாண் தேவைக்கென குளங் களையும், நீர்ப்பாசனக் கட்ட மைப்பு ஆகியவைகளை ஏற்படுத் தியுள்ளதை இக்கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

நமது முன்னோர்கள் ஏற்படுத் திய இத்தகைய நீர் மேலாண்மை கட்டுமானங்கள் உள்ளிட்ட வற்றை தற்போதைய இளம் தலைமுறையினர் சிதைத்து விடா மலும், ஆக்கிரமிப்புகளுக்கு உட் படுத்தாமலும் சமூக அக்கறை யோடு பாதுகாக்க வேண்டும். மேலும், இக்கல்வெட்டு ஒரு சமூக வரலாற்று ஆவணமாக உள் ளது என்றார்.
-விடுதலை,17.8.17

650 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை பற்றிய கல்வெட்டு கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி, ஆக.17 கிருஷ்ணகிரி மாவட் டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், சென்னை பற்றிய 650 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஆதாரம் கிடைத் துள்ளதாக 'சென்னை 2000+' அறக்கட்ட ளையின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்தார்.

‘சென்னை 2000+’ அறக்கட்டளை, தொல்லியல் துறை மற்றும் அருங் காட்சியகம் துறை சார்பில், சென்னை மாத நிகழ்ச்சிகளை முன்னிட்டு சொற்பொழி வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில், சென்னை எழும்பூர் தொல்லியல் துறை வளாகத்தில் புதன் கிழமை நடந்த நிகழ்ச்சியில், தொன்மை யான சென்னையை பற்றி, ‘சென்னை 2000+’ அறக்கட்டளையின் தலைவர் ரங்க ராஜன் பேசியதாவது:

சென்னை மிகவும் தொன்மையான பகுதி என்பதற்கு 2 ஆயிரம் ஆண்டு களுக்கான ஓலைச்சுவடிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், வணிகம், மொழி சார்ந்த வரலாற்று ஆவணங்கள் கிடைத்துள்ளன.

இதில் தொண்டை மண்டல பகுதியாக விளங்கும் வடதமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி செய்துள்ளனர். அதற்கு முன்பாக குறும்பர்கள்(பழங்குடியினர்) ஆட்சி செய் துள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்கள் முக்கியமாக ஆடு, மாடுகள் மேய்த்தல் போன்ற பல்வேறு தொழில்களை செய்துள்ளனர். பின்னர் தொண்டை மண் டல பகுதியை இவர்களிடம் இருந்து பல்லவரான இளந்திரையன் கைப்பற்றி 24 மண்டலமாக பிரித்து ஆட்சி செய்துள் ளார்.

அதில், சென்னை மாம்பலம், புலியூர், எழும்பூர், மயிலாப்பூர், திருவான்மியூர், திருவல்லிக்கேணி, தாம்பரம், புழல், திரு வொற்றியூர் உள்ளிட்ட பகுதிகள் அடங் கும். அந்த 24 மண்டலங்களும் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளன. இது 9, 10, 11, 12 ஆகிய நூற்றாண்டுகளில் அந்தந்த பெயர் களில் கல்வெட்டுகள், கோயில் சிற்பங்கள் ஆகியவைகளில் பதிவாகி உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென் பெண்ணை ஆற்றங்கரையில், 650 ஆண்டு களுக்கு முந்தைய அப்போதைய மதராச பட்டினம் குறித்த கல்வெட்டு கிடைத் துள்ளது. அதில், இங்கு துறைமுகம் இருந் ததும், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் நடந்ததற்கான ஆதாரமும் உள்ளது. குறிப் பாக அரசுக்கு எந்தெந்த வகைகளில் வரி செலுத்த வேண்டும் என்கிற விவரமும் அதில் இடம்பெற்றுள்ளது. இது, பல்வேறு வசதிகளுடன் மதராசபட்டினம் இருந்ததற் கான சான்றாகும். எனவே, வெள்ளைக் காரர்கள் வருகையால்தான் மதராசபட்டினம் வளர்ச்சி அடைந்தது என கூறுவதை ஏற்க முடியாது.

மேலும் பல்லாவரம், பழவேற்காடு, பூவிருந்தவல்லி, மாமல்லபுரம் பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடை யாளங்களும் கிடைத்துள்ளன. அப்போது விலங்குகளை எதிர்ப்பதற்காக பயன்படுத் திய கற்களாலான ஆயுதங்களும் கண்டெடுக் கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, 'தமிழகக் கோயில்களில் கட்டடக் கலை' என்ற தலைப் பில் தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநர் சந்திரமூர்த்தி விளக் கவுரை ஆற்றினார். இதில், கல்வெட்டு ஆராய்ச்சி மாணவ, மாணவியர், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

-விடுதலை,17.8.17

சனி, 12 ஆகஸ்ட், 2017

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி மொழி அறிவிப்புப் பலகைகள் அகற்றம் கன்னட மொழி அமைப்பினரின் போராட்டம் வெற்றி

பெங்களூரு, ஆக. 5- கன்னட மொழிப்பற்றாளர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் பொறுத்தப்பட்டிருந்த இந்தி மொழி அறிவிப்பு பலகைகள் முற்றிலும் அகற்றப் பட்டன. தற்போது ரயில் நிலையங்களின் வெளியே உள்ள அறிவிப்பு மற்றும் விளம்பரப் பலகைகளும் தொடர்ந்து அகற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. 
மத்திய அரசின் மூன்று மொழி கொள்கைக்கு கன்னட அமைப்புகள் மற்றும் முதல்வர் சித்தராமையா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மெட்ரோ ரயில் நிலையங் களில் ஆங்கிலம், இந்தி, உள்ளூர் மொழி என 3 மொழி களில் அறிவிப்பு பலகைகள் வைக்கவேண்டும் என்ற கட்டாய உத்தரவை ஏற்க மறுத்தனர்.



இந்தி திணிப்பு

"இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய அறிவிப்பு பலகைகளில் கட்டாயம் இந்தி மொழி அறிவிப்புகள் இடம் பெற வேண்டும்" என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.
அரசியல் கட்சிகளும், கர்நாடக மேம்பாட்டு ஆணை யம், கன்னட அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித் தன. "எந்த அடிப்படையில் மத்திய அரசு இந்தியை 3ஆவது மொழியாக தேர்வு செய்தது. பெங்களூருவில் இந்தி மொழி பேசுபவர்களை விட தமிழ், பேசுபவர்கள் அதிகம் உள்ளனர்" என்று கேள்வி எழுப்பினர்.

தமிழ் - தெலுங்கு மக்கள் அதிகம்

இது தொடர்பாக முதல்வர் சித்தாராமையா கூறு கையில், "கருநாடகாவில் கன்னடர்களுக்கு அடுத்து தமிழ், தெலுங்கு, மக்கள் தான் அதிகம் உள்ளனர். தமிழை மூன்றாவது மொழியாக அறிவிக்காமல் மத்திய அரசு ஏன் இந்தியை அறிவித்தது. இரு மொழிக் கொள் கையில் தான் நம்பிக்கை உள்ளது. அது கன்னடம் மற் றும் ஆங்கிலம் மட்டுமே" என்றார்.

இது தொடர்பாக கடந்த 28ஆம் தேதி முதல்வர் சித்த ராமையா மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதி யிருந்தார். அதில் "இந்தி மொழி இடம்பெற்றுள்ள அறி விப்பு பலகைகளை அகற்ற வேண்டும். கர்நாடகா மக்க ளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்தி இல்லாத தற்காலிக அறிவிப்பு பலகைகளை மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கருப்பு மைபூசி அழிப்பு

இதைதொடர்ந்து  கருநாடகா ரக்ஷனா வேதிக் அமைப் பினர் பெங்களூரு மெட்ரோ மற்றும் அதன் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்த இந்தி அறிவிப்பு பலகைகளில் கருப்பு மை பூசி இந்தி எழுத்துக்களை அழித்தனர்.  மேலும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதை கன்னடர்கள் தவிர்க்கவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
இவர்களின் பிரச்சாரத்திற்கு கைமேல் பலன் கிடைத் தது. கடந்த மாதம் குடியரசுத்தலைவர் பெங்களூரு மெட்ரோ ரயிலைத் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூரு நகரமக்களிடையே மெட்ரோ ரயிலிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தொடர்ந்து கன்னடர்கள் போராட்டம் நடத்தினர்.

மெட்ரோ ரயிலில் கூட்டம் குறைந்தது

மேலும் மெட்ரோ ரயில் பயணத்தை கன்னடர்கள் தவிர்க்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததனால் கடந்த ஜூலை இரண்டாம் வாரத்தில் இருந்து மெட்ரோ ரயில்களில் கூட்டம் குறைய ஆரம்பித்தது.

ஜூலை மாதம் இறுதியில் பெரும்பாலும் காலியா கவே சென்றன. இதனால் மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு நாளொன்றிற்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்தி மொழியை அகற்றத் தொடங்கியுள்ளது, கன்னடர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தொடர் போராட்டம் காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்த மூன்று மொழி அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
-விடுதலை,5.8.17

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சென்னை மெட்ரோவில் ஊடுருவி இருக்கும் இந்தி தமிழக அரசிற்கு கொடுத்த வாக்குறுதியை மீறிய மெட்ரோ நிறுவனம்

சென்னை ஆக. 7 பெங் களூரு மெட்ரோ ரயில் நிலை யங்களில் இந்தியில் வைக்கப் பட்டிருந்த அறிவிப்பு பலகை களை கன்னட மக்களின் ஒருங்கிணைந்த போராட்டம் காரணமாக அங்கிருந்த இந்தி பெயர் அகற்றப்பட்டது.

ஆனால் இருமொழிக் கொள்கை இருக்கும்  தமிழகத் தில் தற்போது இருக்கும் மெட்ரோ மற்றும் இனிவரும் காலத்தில் உருவாகும் மெட்ரோ ரெயில்களில் இருமொழிகள் (தமிழ், ஆங்கிலம்) பயன்படுத் தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்ட நிலையில்   சென்னை மெட்ரோ ரயில் நிலை யங்களில் இந்தியில் வைக்கப் பட்ட அறிவிப்பு பலகைகள் இடம் பெற்று வருகிறது

சென்னையில்  உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிக் கொள்கையில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் 2 மொழிக் கொள்கையே பெயர்ப் பலகையில் இடம் பெறும் என்று தமிழக அரசுக்கு உத்திர வாதம் எழுத்து மூலம் கொடுக் கப்பட்டுள்ளது, அதில் தனியார் விளம்பரங்கள் எந்த மொழியில் இருக்கலாம், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு பொதுவான அறிவிப்புகள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

தமிழ் ஆர்வ லர்கள். ரயில் நிலையத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மட்டுமல்லாது ரயிலின் உள்ளே பயணக் குறிப்புகளில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மை யில், இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கர்நாடகாவில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தியில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளில் அழிக் கப்பட்டது, பெரிய பதாகைகள் அகற்றப்பட்டது. இந்த நிலை யில் இந்தி எதிர்ப்பு போராட் டத்திற்கு பெயர்போன தமிழ கத்தில் இந்தி அறிவிப்புகளுடன் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது தமிழ் மொழி ஆர்வலர்கள் மத் தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

-விடுதலை,7.8.17

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

நெடுஞ்சாலைகளிலுள்ள மைல்கற்களில் இந்தி -மை பூசி அழிப்பு

நெடுஞ்சாலைகளிலுள்ள மைல்கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த ஊர்களின் பெயர்கள் மை பூசி அழிப்பு



மண்டியா, மே 5 மண்டியாவில், நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த ஊர்களின் பெயர்களை கன்னட அமைப்பினர் மை பூசி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நரேந்திர மோடி தலை மையிலான மத்திய அரசு, நாட்டில் இந்தி மொழி அல்லாத மொழி வாரிய மாநிலங்களிலும் இந்தி மொழியைத் திணித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் ஒரு படியாக நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் மைல்கல்லில் இந்தி மொழியில் மட்டுமே ஊரின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு மண்டியா மாவட்டத்தில் உள்ள சிறீரங்கப்பட்டணாபீதர், கனகாபூர் மைசூரு, பெங்களூரு மைசூரு ஆகிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஊர்களின் பெயர்கள் இந்தியில் மட்டும் எழுதப்பட்டன. இதற்கு கன்னட அமைப்பினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டு இருந்த ஊர்களின் பெயர்களை மை பூசி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னட அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், இது கன்னட நாடு. கன்னட மொழி பழைமையான மொழி. கன்னட மொழியைத்தான் அனைவரும் பேச வேண்டும், கன்னடத்தைத்தான் அனைவரும் படிக்க வேண்டும். கன்னட மொழிக்கு எதிரான எந்த ஒரு செயலையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்.
-விடுதலை,5.5.17

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

திருவள்ளுவரைக் கேலி செய்யும் பார்ப்பனர்கள்

ஹரித்துவாரில் திருவள்ளுவர் படும்பாடு என்னும் தலைப்பில் ‘துக்ளக்‘ இதழில் (3.8.2016) கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது.

“ஹரித்துவாரில் ஏற்கெனவே சிலையாக இருக்கிற சங்கராச்சாரியாரைப் போல, திருவள்ளுவரும் ஒரு பெரிய ஞானி, கவிஞர் என்பது ஹரித்துவார் மக்களுக்குத் தெரியவில்லை. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தமிழர்களான நமக்கு மாபெரும் இந்தி கவிஞர்களான காலிப், கபீர், துளசிதாசரைப்பற்றி என்ன தெரியும்? துளசிதாசரின் சிலையையோ, கபீரின் சிலையையோ மெரீனா பீச்சில் வைக்கத் தமிழர்கள் அனுமதிப்பார்களா? அந்த மாதிரித்தான் திருவள்ளுவர் சிலையை வைப்பதற்கும், ஹரித்துவாரில் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது’’ என்று ‘துக்ளக்‘ கட்டுரை சொல்லுகிறது. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை நிறுவிட முயன்றபோது, பிச்சைக்காரன் என்றும், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றும் சங்கர மடத்தைச் சேர்ந்தவர்களும், சாமியார்களும் கேவலப்படுத்தியதற்கு, மறைமுகமாக வக்காலத்து வாங்கும் வேலையில்தான் ‘துக்ளக்’ பார்ப்பனீயம் இறங்கி இருக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

திருவள்ளுவரை இழித்துப் பழித்துப் பேசியவர்கள்பற்றி ஒரு வார்த்தை கண்டித்து எழுதவில்லை. அதேநேரத்தில், அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதுபோல சுற்றி வளைத்து எழுதுகிறது  ‘துக்ளக்’.

ஏதோ நடு நிலையில் இருந்து எழுத்தாணியை ஓட்டுவது போல காட்டிக் கொள்ள முயன்றாலும், அதன் நோக்கம் அதுவல்ல.

‘துக்ளக்’கைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் கோணிப் பைக்குள் முடங்கிக் கிடந்த பெங்களூரு திருவள்ளுவர் சிலை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மானமிகு சுயமரியாதைக்காரரான முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நன்முயற்சியால் திறக்கப்பட்டதல்லவா - அப்பொழுது இதே ‘துக்ளக்’ எப்படி எழுதியது?

கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படு வதன்மூலம் கன்னடர், தமிழர் இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே?

பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே! (‘துக்ளக்’, 19.8.2009).

இந்தப் பதிவின் உள்ளடக்கம், நோக்கம் என்ன என்பதைச் சற்று ஆழமாக நோக்கினால் புரிந்துவிடுமே!

கேட்கப்பட்ட கேள்வி நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனைப் புரிந்துகொண்டு பதில் சொல்லுவதுதானே அறிவார்ந்தது.

ஆனால், எதிர்வினையாக பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தத் திருவள்ளுவர் சிலையை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணம் ‘துக்ளக்’கிடம் இருக்கிறது. அதனால்தான் இப்படிப்பட்ட காழ்ப்புணர்வுப் பதிலாக வெளிப்படுகிறது.

எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் சிலைக்குப் பதிலாக சங்கராச்சாரியார் சிலை திறக்கப்பட்டிருந்தால் இந்த மாதிரியான பதிலை ‘துக்ளக்’கிடம் எதிர்ப்பார்க்க முடியுமா?

பார்ப்பன ஏடான ‘துக்ளக்’ இப்படி பதில் சொல்லிற்று என்றால், இன்னொரு பார்ப்பன நாளேடான ‘தினமலர்’ என்ன எழுதிற்றுத் தெரியுமா?

தமிழகப் பொதுப் பணித்துறை செயலாளர் ராமசுந்தரம்: தமிழகத்திற்குக் கருநாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணை ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கருநாடக அரசு, குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாததால் இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.

டவுட் தனபாலு: அதனால் என்னங்க... பெங்களூருல திருவள்ளுவர் சிலை திறந்துவிட்டோமோ இல்லையா? அதுக்கப்புறம் டெல்டாப் பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன? (‘தினமலர்’, 18.8.2009).

பொதுப்பணித் துறை செயலாளர் அவருக்குள்ள பொறுப் பின்படி ஒரு கருத்தைச் சொன்னார். அதற்குப் பதிலாகக் கேலி யாகப் பேசும் - டவுட் தனபால் என்ற கற்பனைப் பாத்திரத்தின் வாயிலாக இப்படி ஒரு பதில் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

இதே பாணியில் நாம் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ஆயிரம் வினாக்களை எழுப்ப முடியுமே!

மயிலைக் கபாலீசுவரர் கோவிலுக்குக் குடமுழுக்கு நடந்துவிட்டதுல - இனி மாதம் மும்மாரிதான் - அடிசக்கே என்று எழுத முடியாதா?

இந்து ஆன்மிகக் கண்காட்சி நடந்துவிட்டதுல - அப்புறம் என்ன? சம்பா பயிரைப்பற்றி டெல்டா விவசாயிகள் ஏன் விசனிக்க வேண்டும் - வெள்ளம் அபாயம் இல்லாமலும், அதே நேரத்தில் அளவு மானியை வைத்து அளந்தாற்போல கச்சிதமாக மாரியாத்தாள் கொட்டுவார் பாருங்கள் என்று கதைக்கலாமே!

ஒருவர்மீது மனத்தில் என்ன மதிப்பீடு இருக்கிறதோ, அந்த அடிப்படையில்தான் பதிலும், தன்மையும் இருக்கும்.

திருவள்ளுவர் என்ற தமிழ் ஆசான்மீது ஹரித்துவார் பார்ப்பானாக இருந்தாலும் சரி, கூவம் ஓடும் சென்னைவாழ் பார்ப்பனர்களாக இருந்தாலும் ஒரே எண்ணத்தில்தான் இருக்கிறார்கள் - இருப்பார்கள். இந்த ஒன்றை வைத்து மட்டுமல்ல, தமிழ் செம்மொழியாக முதலமைச்சர் கலைஞர் அவர்களின் அரும்முயற்சியால் மத்திய அரசு அறிவித்தபோதுகூட, இதே ‘தினமலர்’ வாரமலர் (13.6.2004) என்ன எழுதிற்றுத் தெரியுமா? காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் என்று எழுதவில்லையா?

தமிழ், தமிழர், தமிழர்களின் தலைவர்கள் என்றால் பார்ப்பனர் களுக்கு எப்பொழுதும் ஒவ்வாமைதான். அவர்களிடத்தில் ஒரே மாதிரி யான சிந்தனை வட்டம் இருப்பதைக் கவனிக்கவும்.

புரிந்துகொள்வீர்கள் பார்ப்பனர்களை!
-கவிஞர் கலி.பூங்குன்றன்(4.8.17)

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

நுட்பவியல் கலைச்சொற்கள்:

மலேசியாவில் நடத்தப் பெற்ற தனித்தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச்சொற்கள்:

WhatsApp - புலனம்
Facebook - முகநூல்
Youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twitter - கீச்சகம்
Telegram - தொலைவரி
Skype - காயலை
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
Battery - மின்கலம்
GPS - தடங்காட்டி
CCTV - மறைகாணி
OCR - எழுத்துணரி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Projector - ஒளிவீச்சி
Printer - அச்சுப்பொறி
Scanner - வருடி
Smartphone - திறன்பேசி
Sim Card - செறிவட்டை
Charger - மின்னூக்கி
Digital - எண்மின்
Cyber - மின்வெளி
Router - திசைவி
Selfie - தம்படம்
Thumbnail - சிறுபடம்
Meme - போன்மி
Print Screen - திரைப்பிடிப்பு
Inkjet - மைவீச்சு
Laser - சீரொளி.