பக்கங்கள்

சனி, 19 ஆகஸ்ட், 2017

பொன்விழா காணும் “தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம்”



1967ஆம் ஆண்டின் (ஜூலை 18) தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன் அத்தியாயம்  பூத்த நறுமண நாள். முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் தீர்மானம் ஒன்றை சட்டப் பேரவையில் முன்மொழிந்தார்.

“மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அந்தப் பிராந்தியத்தைக் குறிக்கும்போது நமது மாநிலத்துக்கு மட்டும் “தமிழ்நாடு’’ அல்லது “தமிழகம்’’ என்ற பெயரில்லாமல் அதன் தலைநகரின் பெயரைக் குறித்தே வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இதை மாற்றித் தமிழர்கள் வாழும் இடம் என்பதைக் குறிக்கும் வகையில் “தமிழ்நாடு’’ என்று பெயரிடுவதற்குத் தமிழக அரசு முயற்சி செய்து வருகின்றது. இந்தக் காரியம் மத்திய அரசின் அனுமதி பெற்று இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தியாக வேண்டிய காரியம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை உறுதியாகக் கேட்டுக்கொள்வதுடன், அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது.’’

முதல் அமைச்சர் அண்ணா அவர்களால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது மகிழ்ச்சி மணக்கும் செய்தியாகும். முதல் அமைச்சர் அண்ணா முன்னெடுத்துச் சொல்ல அனைவரும் “தமிழ்நாடு வாழ்க!’’ என மும்முறை முழங்கினர். இம்மசோதா நாடாளுமன்றத்தில் (22.11.1968) அன்று நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் விழா 1.12.1968 அன்று அன்றைய பாலர் அரங்கில் (பிற்காலத்தில் கலைவாணர் அரங்கம் என்று பெயர்) வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது. முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு திரும்பிய காலகட்டம் அது. அந்த நிலையிலும் அவ்விழாவில் மகிழ்ச்சி பொங்க பங்கேற்றவர்.

“நான் இந்த மகிழ்ச்சியான விழாவில் கலந்து கொண்டால், அதிக நேரம் பேசினால் உடலுக்கு ஊறு நேரிடுமென்று என் உடல் நலத்தில் அக்கறை உள்ள மருத்துவர்களும், நண்பர்களும் சொன்னார்கள்; ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த வாய்ப்பு ஒருவரது வாழ்க்கையில் ஒருமுறைதான் வரும். பலமுறை வருவதில்லை. நான் பேசுவதால் இந்த உடலுக்கு ஊறு நேரிடுமென்றால் இந்த உடலிருந்தே பயனில்லை’’ என்று முதல்வர் அண்ணா சொன்ன பொழுது கூடியிருந்தோர் அனைவரின் கண்களும் கசிந்தன. தமிழ்நாடு என்ற பெயர் பெற்ற மாநிலமாக இன்று திகழ்கிறது என்கிற போது இந்த நேரத்தில் நினைவிற்குக் கொண்டு வரப்பட வேண்டியவை.

11.9.1938 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் “தமிழ்நாடு தமிழருக்கே!’’ என்று முழங்கியவர் தந்தை பெரியார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். (27.7.1956 முதல் 13.10.1956 வரை).

தமிழ்நாடு பெற்று விட்டோம்! தமிழ், தமிழர் பண்பாடுமீது தொடுக்கப்பட்ட ஆரியப் பண்பாட்டுப் போரை என்று முடிவுக்குக் கொண்டு வரப் போகிறோம்?

உண்மை,16-31.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக