ஹரித்துவாரில் திருவள்ளுவர் படும்பாடு என்னும் தலைப்பில் ‘துக்ளக்‘ இதழில் (3.8.2016) கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது.
“ஹரித்துவாரில் ஏற்கெனவே சிலையாக இருக்கிற சங்கராச்சாரியாரைப் போல, திருவள்ளுவரும் ஒரு பெரிய ஞானி, கவிஞர் என்பது ஹரித்துவார் மக்களுக்குத் தெரியவில்லை. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தமிழர்களான நமக்கு மாபெரும் இந்தி கவிஞர்களான காலிப், கபீர், துளசிதாசரைப்பற்றி என்ன தெரியும்? துளசிதாசரின் சிலையையோ, கபீரின் சிலையையோ மெரீனா பீச்சில் வைக்கத் தமிழர்கள் அனுமதிப்பார்களா? அந்த மாதிரித்தான் திருவள்ளுவர் சிலையை வைப்பதற்கும், ஹரித்துவாரில் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது’’ என்று ‘துக்ளக்‘ கட்டுரை சொல்லுகிறது. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை நிறுவிட முயன்றபோது, பிச்சைக்காரன் என்றும், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றும் சங்கர மடத்தைச் சேர்ந்தவர்களும், சாமியார்களும் கேவலப்படுத்தியதற்கு, மறைமுகமாக வக்காலத்து வாங்கும் வேலையில்தான் ‘துக்ளக்’ பார்ப்பனீயம் இறங்கி இருக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
திருவள்ளுவரை இழித்துப் பழித்துப் பேசியவர்கள்பற்றி ஒரு வார்த்தை கண்டித்து எழுதவில்லை. அதேநேரத்தில், அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதுபோல சுற்றி வளைத்து எழுதுகிறது ‘துக்ளக்’.
ஏதோ நடு நிலையில் இருந்து எழுத்தாணியை ஓட்டுவது போல காட்டிக் கொள்ள முயன்றாலும், அதன் நோக்கம் அதுவல்ல.
‘துக்ளக்’கைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் கோணிப் பைக்குள் முடங்கிக் கிடந்த பெங்களூரு திருவள்ளுவர் சிலை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மானமிகு சுயமரியாதைக்காரரான முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நன்முயற்சியால் திறக்கப்பட்டதல்லவா - அப்பொழுது இதே ‘துக்ளக்’ எப்படி எழுதியது?
கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படு வதன்மூலம் கன்னடர், தமிழர் இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே?
பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே! (‘துக்ளக்’, 19.8.2009).
இந்தப் பதிவின் உள்ளடக்கம், நோக்கம் என்ன என்பதைச் சற்று ஆழமாக நோக்கினால் புரிந்துவிடுமே!
கேட்கப்பட்ட கேள்வி நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனைப் புரிந்துகொண்டு பதில் சொல்லுவதுதானே அறிவார்ந்தது.
ஆனால், எதிர்வினையாக பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தத் திருவள்ளுவர் சிலையை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணம் ‘துக்ளக்’கிடம் இருக்கிறது. அதனால்தான் இப்படிப்பட்ட காழ்ப்புணர்வுப் பதிலாக வெளிப்படுகிறது.
எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் சிலைக்குப் பதிலாக சங்கராச்சாரியார் சிலை திறக்கப்பட்டிருந்தால் இந்த மாதிரியான பதிலை ‘துக்ளக்’கிடம் எதிர்ப்பார்க்க முடியுமா?
பார்ப்பன ஏடான ‘துக்ளக்’ இப்படி பதில் சொல்லிற்று என்றால், இன்னொரு பார்ப்பன நாளேடான ‘தினமலர்’ என்ன எழுதிற்றுத் தெரியுமா?
தமிழகப் பொதுப் பணித்துறை செயலாளர் ராமசுந்தரம்: தமிழகத்திற்குக் கருநாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணை ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கருநாடக அரசு, குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாததால் இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.
டவுட் தனபாலு: அதனால் என்னங்க... பெங்களூருல திருவள்ளுவர் சிலை திறந்துவிட்டோமோ இல்லையா? அதுக்கப்புறம் டெல்டாப் பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன? (‘தினமலர்’, 18.8.2009).
பொதுப்பணித் துறை செயலாளர் அவருக்குள்ள பொறுப் பின்படி ஒரு கருத்தைச் சொன்னார். அதற்குப் பதிலாகக் கேலி யாகப் பேசும் - டவுட் தனபால் என்ற கற்பனைப் பாத்திரத்தின் வாயிலாக இப்படி ஒரு பதில் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
இதே பாணியில் நாம் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ஆயிரம் வினாக்களை எழுப்ப முடியுமே!
மயிலைக் கபாலீசுவரர் கோவிலுக்குக் குடமுழுக்கு நடந்துவிட்டதுல - இனி மாதம் மும்மாரிதான் - அடிசக்கே என்று எழுத முடியாதா?
இந்து ஆன்மிகக் கண்காட்சி நடந்துவிட்டதுல - அப்புறம் என்ன? சம்பா பயிரைப்பற்றி டெல்டா விவசாயிகள் ஏன் விசனிக்க வேண்டும் - வெள்ளம் அபாயம் இல்லாமலும், அதே நேரத்தில் அளவு மானியை வைத்து அளந்தாற்போல கச்சிதமாக மாரியாத்தாள் கொட்டுவார் பாருங்கள் என்று கதைக்கலாமே!
ஒருவர்மீது மனத்தில் என்ன மதிப்பீடு இருக்கிறதோ, அந்த அடிப்படையில்தான் பதிலும், தன்மையும் இருக்கும்.
திருவள்ளுவர் என்ற தமிழ் ஆசான்மீது ஹரித்துவார் பார்ப்பானாக இருந்தாலும் சரி, கூவம் ஓடும் சென்னைவாழ் பார்ப்பனர்களாக இருந்தாலும் ஒரே எண்ணத்தில்தான் இருக்கிறார்கள் - இருப்பார்கள். இந்த ஒன்றை வைத்து மட்டுமல்ல, தமிழ் செம்மொழியாக முதலமைச்சர் கலைஞர் அவர்களின் அரும்முயற்சியால் மத்திய அரசு அறிவித்தபோதுகூட, இதே ‘தினமலர்’ வாரமலர் (13.6.2004) என்ன எழுதிற்றுத் தெரியுமா? காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் என்று எழுதவில்லையா?
தமிழ், தமிழர், தமிழர்களின் தலைவர்கள் என்றால் பார்ப்பனர் களுக்கு எப்பொழுதும் ஒவ்வாமைதான். அவர்களிடத்தில் ஒரே மாதிரி யான சிந்தனை வட்டம் இருப்பதைக் கவனிக்கவும்.
புரிந்துகொள்வீர்கள் பார்ப்பனர்களை!
-கவிஞர் கலி.பூங்குன்றன்(4.8.17)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக