பக்கங்கள்

வெள்ளி, 30 நவம்பர், 2018

தந்தை பெரியார் எழுத்து சீர்திருத்தம் தினமலர்' ஒப்புதல்

ஆர்.நூருல்லா, தலைமை நிருபர், தினமலர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'தமிழ் நாளிதழ்களில் முதல்முறையாக, ஈ.வெ.ரா.,வின் எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியவர், அய்ராவதம் மகாதேவன்' என, தமிழ் நாளிதழ் ஒன்றில், ஒருவர் கட்டுரை எழுதி இருந்தார்; அது, தவறான கருத்து!


நான், 'தினமலர்' நாளிதழில், பல ஆண்டுகள் நிருபராக பணியாற்றி ஓய்வு பெற்றவன். அதன் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியுடன் பழகியவன் என்ற அடிப்படையில், வாசகர்களுடன் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன்...


தமிழக முதல்வராக, எம்.ஜி.ஆர்., இருந்தபோது, 1977 இல், ஈ.வெ.ரா.,வின் எழுத்து சீர்திருத்தத்தை, முதன் முதலில், தினமலர் நாளிதழில் அறிமுகப்படுத்தியவர், இரா.கிருஷ்ணமூர்த்திதான். அப்போது, நான், 'தினமலர்' நாளிதழின் நிருபராக பணிபுரிந்தேன்.


ஆனால், வரலாற்று உண்மை தெரியாமல், 'அய்ராவதம் மகாதேவன்' என தவறாக, அந்த கட்டுரையாளர் கூறியுள்ளார். அய்ராவதம் மகாதேவன், தொல்லியல் துறையிலும், தமிழ் வளர்ச்சித் துறையிலும் சாதித்தவர் என்பதில் மாற்று கருத்து கிடையாது.


ஆனால், தமிழில் முதன்முதலாக, ஈ.வெ.ரா.,வின் எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது, 'தினமலர்' நாளிதழ்தான். அதை, பத்திரிகை வாயிலாக அறிமுகப்படுத்திய பெருமை, அதன் ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தியை சாரும் என்பதை, பெருமிதத்துடன் கூற விரும்புகிறேன்.


தமிழ் எழுத்து சீர்திருத்தம் தொடர்பாக, அந்த கட்டுரையாளர் கூறிய கருத்து, வரலாற்று பிழையாக கருதுகிறேன்!


(தினமலரில் (30.11.2018) வெளிவந்த கடிதம்)
-  விடுதலை நாளேடு, 30.11.18
குறிப்பு:-

தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை, 'தமிழக அரசின் ஆணைக்கு பின் முதலாவதாக இதழில் அறிமுகப்படுத்தியது தினமணி தான் என்று எழுதி இருந்தால் கூட பரவாயில்லை; ஆனால் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அய்ராவதம் மகாதேவன் தான் கண்டுபிடித்தார் என்று கூறுவது மகா மகா அயோக்கியத்தனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக