பக்கங்கள்

சனி, 24 பிப்ரவரி, 2018

“தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்” எனும் கருத்துக்கு ஒப்புரவளிக்கும் வள்ளலார்

ஓர் ஆண்டினை வடபுலம், தென்புலம் என இரண்டு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.

வடபுலம் (உத்தராயனம்) - தை முதல் ஆறு மாதங்கள் பகற்பொழுது அதிகம். தென்புலம் (தட்சிணாயனம்) - ஆடி முதல் ஆறு மாதங்கள் இராப்பொழுது அதிகம்.

இதனை ஒளிப்பக்கம், இருட்பக்கம் என்பர். ஒளி-அறிவுடைமை, ஞானம்; இருள் - அறியாமை, அஞ்ஞானம்; ஒளி- சுவர்க்கம்; இருள் - நரகம்,

இருளினின்றும் நாம் ஒளிக்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானத்தினின்றும் ஞானத்திற்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானம் நீங்கி ஞானம் உதிக்க வேண்டும். அறியாமை அகன்று அறிவுடைமை வரவேண்டும். எனவே, அறிவுடைமைக்குச் சான்றாக விளங்கும் ஒளிப்பக்கத் தொடக்க நாள், தை மாதத் தொடக்க நாளே!

இதனை வலியுறுத்தியவர் வள்ளலார். “புரட்சித் துறவி வள்ளலார்” எனும் நூலில் இக் கருத்து விளக்கப்பட்டுள்ளது.
"தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்"
உலகப் பரிந்துரை மாநாடு, கோலாலம்பூர். 6.1.2001

- விடுதலை ஞா.ம., 13.1.18

தமிழ் இலக்கியத்தில் திராவிட இயக்கத்தின் ஆளுமை


இலக்கிய பரிசளிப்புவிழாவில் கலந்து கொண்டு பேசிய எழுத்தாளர் இமயம், அரசியல் இயக்கத்தை தொடங்கியவர்கள் எழுத்தாளர்கள்தான். மக்களுக்காக அவர் கள் எழுதினார்கள் என்று  குறிப்பிட்டார்.

இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனை யாளர் விருது பெற்ற எழுத்தாளர் இமயம் கூறுகையில், தமிழ் இலக்கியத்தை மக்களுக் குரியதாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்தையே சாரும் என்று கூறியுள்ளார்.

திராவிட இயக்கத்தை விமர்சிப்பவர்கள் முதலில் திராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் பங்கு பணிகளை எழுத்தாளர் களிலேயே அறிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே, அவர் களைப்போன்ற எழுத்தாளர்கள் தனி நபர்களை முன்னிறுத்தியே விமர்சித்து எழுதிவருகிறார்கள். சமூகத்தினுடனான உறவே அவரை எழுதுவதற்கு தள்ளியதாக திமுக நிறுவனர் அண்ணா குறிப்பிட்டு உள்ளார். இதுதான் அனைத்து எழுத்தாளர்க ளுக்கும் பொருந்தும்’’ என்றார்.

திராவிட இயக்கத்தில் இலக்கியங்கள் எழுத்தாளர்களால் மட்டுமே புகழ்பெறுவ தில்லை. எவ்வளவு பெரிய இலக்கியமாக இருந்தாலும், இலக்கியங்களில் உள்ள கருத்து சென்றடைய வேண்டுமானால் பிரச்சாரம் அவசியமாகும்.

எல்லா எழுத்துகளுமே பிரச்சாரங்கள் தான். நம்முடைய கருத்துகளை நாம் எழுத் துகள்வாயிலாக கூறுகிறோம். மற்றவர்கள் அதை கவனிக்கிறார்கள். இது பிரச்சாரம் இல்லையா? அதுபோலவே, திராவிட இயக் கத்தைப் பொறுத்தவரையில் எழுத்தாளர் கள் சமூக மற்றும் அரசியல் இயக்கமாக தொடங்கினார்கள்.

எழுத்துப்பணியில் முன்பு உள்ளடக் கமாக இருந்துவந்த பிற மொழிகளின்றி சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் வகை யில், அவர்கள்தான் புத்தகங்கள் மற்றும் செயல்பாடுகளின்மூலமாக கருத்துகள் பொதுமக்களை சென்றடையச் செய்தார் கள்’’ என்றார்.
ஜாதியின் அருவருப்புகளை தோலுரித்து, தாழ்த்தப்பட்டவர்களுக்காக இலக்கியப் பணிகளை ஆற்றிவருபவராவார் எழுத்தா ளர் இமயம்.

- எழுத்தாளர் இமயம்
தி இந்து ஆங்கிலம், 8.1.2018

- விடுதலை ஞாயிறு மலர், 3.2.18

பார்ப்பனர்கள் எப்படி?

அகில பாரத பிராமணர் சங்கத்தின் (ABBA)  மண்டல மாநாடு கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் பார்ப்பனர்கள் நலன், மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், தீர்வு என பல கோணங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

தென்இந்திய பார்ப்பனர்களின்

முக்கிய பிரச்சினைகள்

கடந்த 2016ஆம் ஆண்டு அம்பத்தூரில் நடைபெற்ற மாநாட்டில் திருமண இணையதளத்தை நடத்தி வருபவரான சுந்தரராஜன் என்பவர் பேசுகையில்,

“தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் பிராமண சமூக பெண்கள் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது. இதனால் தென்இந்தியாவில் லட்சக்கணக்கான பிராமண ஆண்கள் திருமணம் ஆகாமல் உள்ளனர்.

இதற்காக பிராமணர்கள் மக்கள் தொகை அதிகம் உள்ள வடமாநிலங்களான உத்திரப்பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிராமண அமைப்புடன் இணைந்து அதற்கான தீர்வுகான முயற்சி மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த செயல்பாட்டிற்கு கர்நாடகா மாநில மடத்தின் ஆசிர்வாதமும், இருப்பதால் இந்த முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக எடுத்துவரும் இந்த முயற்சியால், 9 திருமணங்கள் இதுவரை நடந்துள்ளன. ராமர் இருக்கும் இடமே அயோத்தி என்று நினைக்கும் பெண்கள். இவர்கள் மிக சீக்கிரத்தில் தமிழை கற்றுக் கொள்வார்கள். உ.பி பிராமண சங்கம் மற்றும் கர்நாடக பிராமணர் சங்க சந்திப்பு நடக்க உள்ளது. இதில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்’’ என தெரிவித்தார். 
- சுதேசியின் குரல், டிசம்பர் 7, 2016

பார்ப்பனர்களில் பெண் கிடைக்கவில்லையாம், வருணாசிரமத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற முடிவில் ஜாதியை, ஜாதி ஆதிக்கத்தைக் காத்திட துடிக்கின்ற பார்ப்பனர்களை அடையாளம் காண்பீர்.

பார்ப்பனர்களும் தமிழர்களே என்றும், இந்துக்கள் அனைவரும் ஒன்றுதான் என்றும் தவறாக எண்ணி கூறிவருவோர் சிந்திப்பார்களா?

- விடுதலை ஞாயிறு மலர், 3.2.18

வியாழன், 22 பிப்ரவரி, 2018

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டில் நினைவில் கொள்ள வேண்டியவை


1. நமஸ்காரம், வணக்கம் ஆனது யாரால்?

2. வந்தனம், நன்றி ஆனது யாரால்?

3. அக்ரசானாதிபதி, தலைவர் ஆனது யாரால்?

4. காரியதரிசி, செயலாளர் ஆனது யாரால்?

5. விவாக சுபமுகூர்த்தப் பத்திரிக்கை, திருமண அழைப்பிதழ் ஆனது யாரால்?

6. கிரகப்பிரவேசம், புதுமனை புகுவிழா ஆனது யாரால்?

7. சேமம், என்பது நலம் ஆனது யாரால்?

8. பஸ், பேருந்து ஆனது யாரால்?

9. ஆட்டோ, தானி ஆனது யாரால்?

10. லோக்சபா, மக்களவை ஆனது யாரால்?

11. ராஜ்யசபா, மாநிலங்களவை ஆனது யாரால்?

12. அபேட்சகர், வேட்பாளர் ஆனது யாரால்?

13. ஓட்டு, வாக்குரிமையானது யாரால்?

14. சட்டசபை, சட்டமன்றம் ஆனது யாரால்?

15. கவுன்சில் சபை, சட்ட மேலவை ஆனது யாரால்?

16. காரியாலயம், அலுவலகம் ஆனது யாரால்?

17. சாதம், சோறு ஆனது யாரால்?

18. போஜனம், சாப்பாடு ஆனது யாரால்?

19. திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் நாள் நாட்டில் நடைமுறைப்படுத்தி வருவது யாரால்?

20. சனாதிபதி, குடிரயரசுத்தலைவர் ஆனது யாரால்?

21. பிரதம மந்திரி தலைமை அமைச்சர் ஆனது யாரால்?

22. பஞ்சாயத்து, ஊராட்சி மன்றமாகவும், நகர சபை நகராட்சி மன்றமாகவும், மாநகர சபை மாநகராட்சி

மன்றமாகவும் ஆனது யாரால்?

23. அஞ்சலி, வணங்குகை, தொழுகை இவை நினைவேந்தல் ஆனது யாரால்?

24. ஆசீர்வாதம், வாழ்த்து ஆனது யாரால்?

26. பதவிப் பிரமாணம், பதவி உறுதிமொழி ஆனது யாரால்?

27. இரகசியக் காப்பு பிரமாணம், கமுக்க உறுதிமொழி ஆனது யாரால்?

28. பிரச்சாரம், பரப்புரை ஆனது யாரால்?

29. பிரசங்கம், சொற்பொழிவு ஆனது யாரால்?

30. பிரச்சினை, சிக்கல் உறழ்வு ஆனது யாரால்?

31. பிரசுரம், வெளியீடு ஆனது யாரால்?

32. பிரபஞ்சம், உலகம் ஆனது யாரால்?

33. பிரதிநிதி, நிகராளி, பகராளி ஆனது யாரால்?

34. ஜாமீன், பிணை ஆனது யாரால்?

35. ஆயுசு, வாழ்நாள், அகவை என்பவை ஆயுள் ஆனது யாரால்?

36. ஆரம்பம், தொடக்கம் ஆனது யாரால்?

37. அனுமதி, இசைவு ஆனது யாரால்?

38. அனுபவம், பட்டறிவு ஆனது யாரால்?

39. அவசரம், விரைவு இவை முடுக்கம் ஆனது யாரால்?

40. ஆச்சரியம், வியப்பு ஆனது யாரால்?

41. பத்திரிகை, தாளிகை ஆனது யாரால்?

42. நிருபர், செய்தியாளர் ஆனது யாரால்?

43. ஜெபம், வழிபாடு ஆனது யாரால்?

44. விஷயம், செய்தி ஆனது யாரால்?

45. கஷ்டம், துயரம் இவை வருத்தம் ஆனது யாரால்?

46. கஜானா, கருவூலம் ஆனது யாரால்?

47. குமாஸ்தா, எழுத்தர் ஆனது யாரால்?

48. குமாரன் என்பது குமரன், செல்வன் ஆனது யாரால்?

49. குமரி என்பது செல்வி ஆனது யாரால்?

50 ஜெயந்தி என்பது பிறந்த நாள் ஆனது யாரால்?

தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரால், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரால், அரசியல் ஆசான் அறிஞர் அண்ணாவால், புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனால், பாவலரேறு பெருஞ்சித்திரனாரால், பாவாணரால், திராவிட இயக்கத்தால், தனித்தமிழ் இயக்கத்தால்; தமிழா எண்ணிப்பார்! “நன்றி மறப்பது நன்று அன்று?” என்பது வான்புகழ் வள்ளுவர் வாய்மொழி.)

- கல்பாக்கம் வ.வேம்பையன்
திருவள்ளுவர் மன்றம் - மறைமலை நகர்
- விடுதலை ஞாயிறு மலர், 10.2.18

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

தமிழை உயர்த்திப் பிடித்த தந்தை பெரியார்

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (7)

நேயன்

 



 

தமிழிலும், தமிழ்ப் புலவர்களிடமும் உள்ள குறைகளைச் சுட்டி, மேம்படுத்த கடுமையாகப் பேசிய பெரியார் தமிழை உயர்த்திப் பேசத் தவறவில்லை.

1.    “தமிழ்மொழி செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியை விடவும், இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியையும் வெல்லக்கூடியது’’ என்று வின்ஸ்ஸோ கூறுகிறார்.

2.    கால்டுவெல், “தமிழ்மொழி பண்டையது, நலஞ்சிறந்தது, உயர்நிலையில் உள்ளது, இதைப் போன்ற திராவிட மொழி வேறெதுவும் இல்லை’’ என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

3.    சிலேட்டர் என்பவர், “திராவிட மொழி எல்லாவற்றுள்ளும் மக்கள் பேசும் மொழிக்கு உரிய தன்மையைப் பெற்றுள்ள மொழி தமிழ் மொழியே; தக்க அமைப்புடையதும் தமிழ்மொழியே’’ என்கிறார்.

4.    மர்டாக் என்பவர், “துராணிய மொழிகள் பலவற்றுள்ளும் மிகச் சீரிய மொழியாயும், அழகிய இலக்கியங்களைப் பொருந்தப் பெற்றதாயும் விளங்குவது தமிழே’’ என்றும்     கூறியுள்ளார்.

தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்களுக்குத் தாய்நாட்டின் மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ் மாணவனும் தமிழ் கற்க வேண்டும்.

ஜாதிபேதம் தமிழரிடம் இல்லை. எகிப்து, கிரேக்கம், ரோம் முதலிய நாடுகளோடு அன்றைக்கே வணிகத் தொடர்பு கொண்டவர்கள் தமிழர்கள்.

தமிழ்ப் பெண்களும் கல்வியில் புலமை பெற்று விளங்கினர்.

தமிழ் மன்னர்கள் நீதியோடு ஆண்டனர்.

தமிழர்கள் அஞ்சாது வீரப்போர் புரியும் ஆற்றல் உள்ளவர்கள்.

நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்று சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய் நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.                                                

(‘குடிஅரசு’ - 18.12.1943)

என்று தமிழ் தமிழர் மேன்மையை எடுத்தியம்பும் கட்டுரையைக் குடிஅரசு இதழில் வெளியிட்ட பெரியாரா தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரானவர்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல, தமிழுணர்ச்சியைத் தமிழைப் பரப்ப வழிகளையெல்லாம் குடிஅரசில் வெளியிட்டார்.

1.    தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.

2.    தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.

3.    வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.    தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.

5.    தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

6.    கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.

7.    தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும். என்று சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் வெளியிட்டு தமிழைத் தூக்கி நிறுத்த முயன்றார்.

சென்னை சாந்தோம் சாலையில் அமைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அமைத்த ‘முத்தமிழ் நிலையம்’ அழைப்பை ஏற்றுச் சென்ற பெரியார் ஆற்றிய உரையில்,

“நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்த அமைப்பிற்கு தமிழனிடத்தில் உண்மைப் பற்றும், தமிழும் தமிழரும் மேன்மை அடைய வேண்டும் என்ற உண்மை கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவர் ஆவார்கள்.

உங்களுக்கு நண்பர் பாரதிதாசன் அவர்கள் கிடைத்திருப்பது உங்கள் நல்வாய்ப்பிற்கும் உங்கள் வெற்றிக்கும் அறிகுறியாய் இருக்கும். இன்று இந்த நாட்டில் தமிழும், தமிழ்க் கல்வியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்திற்கும், தன்மானத்திற்கும் பயன்படும்படி மக்கள் உணர உழைக்க ஏற்ற கவிகள் செய்து மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில் நம் வெற்றித் தன்மையிருக்கிறது.

உங்கள் கழகம் வெற்றியடைய தளராத முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு, ஒழுக்கம், நாணயம் என்பவைகளும் தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரி பணிகளுக்கு என்னாலான உதவியைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டு இளைஞர்களும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப் பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமையாகும்’’ என்று பேசினார் பெரியார்.
(‘குடிஅரசு’ -  08.01.1944)

தமிழன் தலை நிமிர்ந்து தன்மானத்தோடும், கல்வியும், அறிவும், உயர்வும் பெற்று வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தட்டியெழுப்பிக் கொண்டேயிருந்தார்.

“ஏ தமிழா! உன்னுடைய நாட்டில் நீ தாசி மகனா? உனது செல்வத்தாலும், உழைப்பாலும் கட்டப்பட்ட பொது இடங்களில் உனக்கு உரிமை இல்லையா? உனது நாட்டில் உன்னை நம்பி வைத்திருக்கும் உணவுச் சாலையில் நீ தீண்டப்படாதவன் என்று உனக்கொரு தனியிடம் ஒதுக்கி வைப்பதா? என்று அடிக்கடி உணர்வூட்டினார். (குடிஅரசு  04.12.1943)

தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழர் தழைக்கவும் பெரியார் பாடுபட்டார். திராவிடர் இயக்கம் பாடுபட்டது. கே.பி. சுந்தராம்பாள் என்ற கீழ் ஜாதிப் பெண் புகழ் பெறுவது விரும்பாத ஆரிய கூட்டமும், ஆரியப் பத்திரிகைகளும், அவரது இசைப் புலமையை இழித்துப் பேசியபோது, அந்த அம்மையாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் பெரியார். இத்தனைக்கும் அந்த அம்மையார் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்.

“தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்; தமிழில் இசை இருக்க வேண்டும் என்று கூறுபவர்களை முட்டாள்கள் எனக் கூறுவோருக்குத் தமிழ்நாடு இடங் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழர் களிடையில் தமிழ்நாட்டில் தமிழ் இசைக்கு எதிராக இருப்பவர்கள், எதிராக வேலை செய்பவர்கள், தமிழில் பாட மறுப்பவர்கள், தமிழர்களின் இக்கோரிக்கையை ஏளனம் செய்பவர்கள் யார்? ஆரியர்கள்தானே. இவர்களைத் தவிர, இத்துணிவுடன் தமிழர்களின் உப்பைத் தின்றுவிட்டு, தமிழ் நாட்டில் வாழ இடம் பெற்று, தமிழர்களின் உழைப்பால் உடலை வளர்த்துக் கொண்டு, தமிழர்களையும் அடிமைப்படுத்தி, தாழ்ந்தவர் களாக்கி, தமிழ் கலைகளுக்கு ஆரிய மேற்பூச்சிட்டு, தமிழோடு வடமொழியைக் கலந்து கெடுத்து, தமிழர்களின் வாழ்வைச் சீர்குலைத்து, தமிழ்நாட்டைத் தங்களுடைய அடிமை நாடாக ஆக்கி வைத்துக் கொள்வதற்கு (பன்னூற்றாண்டு காலமாக) பெரும் துணிவு ஆரியர்களைத் தவிர்த்து வேறு யாருக்கு இருக்க முடியும்?
(தொடரும்...)

தமிழர் திருநாள் - தந்தை பெரியார்

திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர் களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது.

இதன் காரணம் என்னவென்றால் கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களை தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக தமிழ்நாட்டின் தமிழன் கலாசாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து, மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாசாரம் எது என்று அறிவதுகூட மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாசாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல் தமிழனுக்கு வரலாறு (சரித்திரம்) என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன.

எனவே, இன்று தமிழன் கலாசாரம், பண்பு, வரலாறு அற்ற ஒருஅடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் நடக்கும் கலாசாரப் பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.

தமிழனுக்குள்ள கலைகள் என்பனவெல்லாம் தமிழனை அடிமையாக்குவதாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமற் போய்விட்டது எனலாம். மக்களுக்கு விழா மிக முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல் கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல் அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவைகள் ஏற்படுவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.

அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருஷப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூசை, தீபாவளி முதலியனவும் விடுமுறை இல்லாத பண்டிகைகள். பிள்ளையார் சதுர்த்தி, கார்த்திகை தீபம், பங்குனி உத்தரம், தைப்பூசம் இந்தப்படியான இன்னும் பல உள.

இவைகளில் தமிழனுக்கு தமிழ் சமுதாயத்திற்கு தமிழன் பண்பிற்கு தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்ற விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?

தமிழனின் இழிவுக்கு மறக்க முடியாத, முக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் ஒரு எடுத்துக்காட்டைக் கூறவேண்டுமானால் தமிழனுக்கு காலத்தைக் காட்டக் கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லை என்றே கூறலாம்.

கிருஸ்துவர்கள், காலத்தைக் காட்ட இருப்பது கிருஸ்து ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் காலத்தைக் காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல் தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?

இப்படியேதான் மற்றும் தமிழனுக்கு  ‘கடவுள்’, சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல, எதுவும் காண மிக மிகக் கஷ்டமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்?

ஏதாவது ஒன்று வேண்டுமே, அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் பண்டிகை என்பதை தமிழன் விழாவாகக் கொண்டா டலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன் மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.

இந்தப் பண்டிகையும் (பிணீக்ஷீஸ்மீst திமீstவீஸ்ணீறீ) அறுவடைத் திருவிழா என்ற கருத்தில்தானே யொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.

இதை (இந்தப் பொங்கல் பண்டிகையை) தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும். இதுதான் பொங்கலுக்கு எனது சேதி என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

(“கலை’’ பொங்கல் மலர், 14.1.1959)

 - உண்மை இதழ், 16-31.1.18


சங்க கால மக்கள் வாழ்விடம் கண்டுபிடிப்பு


சென்னை, பிப்.16   விழுப் புரம் மாவட்டம், ரிசிவந்தியம் பகுதியில், சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாள பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

தென்னக தொல்லியல் வர லாற்று ஆய்வு நடுவத் தலை வர், பிரியா கிருஷ்ணன், தொல் லியல் ஆர்வலர்கள், பழனி சாமி, கோவிந்தன், மாணவர் சுபாஷ் ஆகியோர், ரிசிவந்தியம் பகுதியில் கள ஆய்வு நடத் தினர். அப்போது, சங்க காலம், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய, அடை யாளப் பொருட்களை கண்டு பிடித்தனர். இது குறித்து, பிரியா கிருஷ்ணன் கூறியதா வது: ரிசிவந்தியம் விவசாயிகள், வயல்களை உழுத போது, கறுப்பு மற்றும் சிவப்பு நிற மண்பானை ஓடுகளை கண்டெடுத்து, வரப்பு பகுதி களில் குவித்திருந்தனர். அவை, சங்க காலத்தை சேர்ந்தவை.

அவற்றை ஆய்வு செய்த போது, இரண்டு ஓடுகளில், மேல்நோக்கிய இரண்டு அம் புக்குறிகள் இருப்பதை கண் டறிந்தோம். இந்த குறிகள், வெவ்வேறு இனக்குழுக்கள் கலந்ததற்கான அடையாளமாக இருக்கலாம்.

மேலும், அப்பகுதியில், இரும்பு உருக்கு ஆலைக்கு பயன்படுத்தும், ஊது குழலும் கிடைத்தது. அந்த மக்கள், இரும்பு உருக்கும் தொழில்நுட் பம் அறிந்திருந்தனர் என்பதை காட்டுகிறது. ரிசிவந்தியம், பாசார் பகுதியில், பெருங்கற் கால மக்களுக்கான, எட்டு கல்வட்டங்கள் இருந்ததையும் கண்டுபிடித்தோம். அங்கு, முதுமக்கள் தாழிகள் வைக்கப் பட்ட ஈமக்காட்டையும், அதன் எதிரில், இறந்தோரைப் புதைத்து, அதைச் சுற்றி, சிறிதும், பெரிது மான எட்டு கல்வட்டங்கள் இருந்ததையும் கண்டு பிடித்தோம்.

வரலாற்று சிறப்புமிக்க இப் பகுதிகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவ தோடு, இப்பகுதியில் ஆய்வு செய்ய, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-  விடுதலை நாளேடு,16.2.18

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

வடமொழி ஆரியரின் வஞ்சகப் பார்வை

“பண்டைய ஈரானியர்களும் (பாரசீகர்) பண்டைய இந்திய ஆரியர்களும் ஒரு காலத்தில் ஒன்றாக வாழ்ந்து 'இந்தோ ஈரானியச் சமுதாயமாக உருவானார்கள் என்பதை மொழியியல் ஒப்புமையும் பிற அறிவியல் தடயங்களும் காட்டுகின்றன. பண்டைய ஈரானியர்களின் வேதமாகிய ‘அவெஸ்தாவும்’, பண்டைய இந்திய ஆரியர்களின் வேதமாகிய ‘இருக்கும்’, (ரிக் வேதம்) ஒன்றுக்கொன்று நெருங்கியவை களாக இருப்பதும், அவ்விரு சாராரின் மத நம்பிக்கைகளிலும் பழக்க வழக்கங்களிலும் மிகுந்த ஒப்புமை  காணப்படுவதும் இக் கருத்துக்கு வலு சேர்க்கின்றன. இவ்விரண்டு இனத்தவரின் மூதாதையர் சேர்ந்து வாழ்ந்த நிலப்பரப்பு ‘நடு ஆசியா' என்று அறிஞர் சிலரும், ‘தெற்கு உருசியா’வில் உள்ள புல்வெளி நிலம் என்று வேறு பிற அறிஞரும் கூறுவர்.

இவ்விடங்களில் இருந்து புறப்பட்ட இவ்விரு சாரரில் ஈரானியர்கள் மட்டும் ஈரானில் தங்கினர். அவருடன் புறப்பட்டு வந்த இந்திய ஆரியர் ஈரான் வழியாக வந்து அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவுக்குள் குடியேறினர். வேறு சில ஆரியக் குழுவினர்' ஆப்கானித்தான் வழியாக வந்து இந்தியாவுக்குள் குடியேறினர். இக்காலம் கி.மு. 2000 ஆண்டாக இருக்கலாம் என்று அறிஞர் அனைவரும் கருதுகின்றனர். இவ்வாறு தங்கள் கால்கடைகளுக்கு வேண்டிய மேய்ச்சல் நிலங்களைத் தேடி இந்தியாவுக்குள் நுழைந்த பண்டைய ஆரியர்கள் அப்போது சிந்து வெளியில் வளமாக வாழ்ந்து கொண் டிருந்த பழங்குடி மக்களுடனும் திராவிட மக்களுடனும் இடைவிடாது போரிட்டு அவர்களை வென்றனர். அம்மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டும் காட்டிக் கொடுப்பவர்களுக்குத் தரவேண்டி யதைத் தந்து, சேர்த்துக்கொண்டும் அம் மக்களுக்குள்ளே கலகமூட்டிப் பிளவு படுத்தியும், தம் வெற்றியை எளிதாக்கிக் கொண்டனர். பிறகு அவர்களுடன் கலந்துற வாடியும் அடிமைப்படுத்தியும், அவர்களின் அளவற்ற செல்வங்களைக் கொள்ளை யடித்தும், அவர்களின் கோட்டைக் கொத் தளங்களை இடித்துத் தரைமட்டமாக்கியும் அவர்களின் நகரங்களைத் தீயிட்டு எரித்தும், அவர்களின் அணைக் கட்டுகளை இடித்தும், பாழ்படுத்திய ஆரிய வெறியர்கள் தங்கள் மேலாதிக்கத்தை ஆரியவர்த்தம் என்னும் வட இந்தியா முழுவதிலும் விரிவுபடுத்தினர்.

‘ஆரிய’ என்னும் சொல், அரி என்னும் சொல்லுடன் தொடர்புடையது. வேத காலத்தில் அந்தச் சொல்லுக்கு வெளி நாட்டான், ‘வேற்றான்’ என்று பொருள் கூறப் பட்டது. வேற்றாருடன் இணைந்தவன், அவர்களுக்கு இணக்கமானவன் என்றும் பொருள் கூறப்பட்டது. பிற்காலத்தில்தான் ‘நற்குடியில் பிறந்தவன்’ என்று அச்சொல் லுக்குப் பொருள் காணப்பட்டது என்றும் ‘கி.மா.போன்காரத்லேவின்’ என்னும் உருசிய நாட்டு அறிஞர் தம்நூலில் கூறியுள்ளார். இந்தியாவில் நுழைந்த ஆரியர் அப்பொழுது அவர்கள் பேசிவந்த அரைகுறைத் தாய் மொழியுடன், இந்தியப் பழங்குடி மக்கள் பேசிவந்த ‘பிராகிருதம்’ என்னும் மொழியைக் கலந்து தங்களின் ‘வேதகால’ மொழியை உருவாக்கினர். அம்மொழியில் தான் அவர்கள், தங்கள் போர்க்கால நிகழ்ச்சிகளையும் மத சம்பந்தமான செய்திகளையும் பல்லாயிரக் கணக்கான பாடல்களாகப் பாடிவைத்தனர். அப்பாடல்களை மிகுதியாகப் பாடியவர்கள்.

1.பரத்வாசர் 2. காசியபர் 3. கோதமர் 4. அத்திரி 5. விசுவாமித்திரர் 6. சமதக்கினி 7. வசிட்டர்

என்னும் ஏழு முனிவர்களே. இவர்களைச் ‘சப்தரிஷிகள்’ என்று வழங்குவர். பிறகு அப்பாடல்களை நால்வேதங்களாகத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இத்தொகுப்பு முயற்சியை மேற்கொண்டவர் பிற்காலத்தில் ‘பாரதம்’ பாடிய ‘வியாச முனிவர்’ என்று கூறுவர். இப்பாடல்கள் ‘சம்கிதை’ என்றும் வழங்கப்படும். அப்பாடல்களுள்

1028 பாடல்கள் அடங்கிய ‘இருக்கு வேதம்’ 10 மண்டலங்களாகத் தொகுக்கப் பட்டது.

1975 பாடல்கள் அடங்கிய ‘எசுர் வேதம்’ 40 அத்தியாயங்களாக வகுக்கப்பட்டது.

1875 பாடல்கள் இசையமைப்பைக் கொண்ட ‘சாம வேதம்’ எனப்பட்டது.

5987 பாடல்கள் அடங்கிய ‘அதர்வண வேதம்’ 20 காண்டங்களைக் கொண்டது.

இத்தொகுப்பு வேலை ஏறக்குறைய கி.மு. 1200 ஆண்டு அளவில் முடிந்திருக்கலாம் என்றே ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

இவர்களின் வேதப் பாடல்களில் பழங்குடி மக்களையும் திராவிட மக்களையும் தானவர்கள், தஸ்யூக்கள், தாசர்கள், அசுரர்கள், அரக்கர்கள் முதலிய பெயர்களால் இழித்தும் பழித்தும் எழுதப்பட்டுள்ளன.

நாளடைவில் பழங்குடி மக்களின் பிராகிருத மொழியைக் கொண்டு தங்களின் வேத மொழியை  உருவாக்கிய ஆரியர்கள் அப்பொழுது வடஇந்தியாவில் வழங்கிவந்த பழந்தமிழின் திரிபான திராவிட மொழிச்சொற் களையும் இலக்கண அமைப்பையும் பயன் படுத்தித் தங்களின் இலக்கிய மொழியாகிய ‘சமற்கிருதத்தை உருவாக்கினர். ‘பிராகிருதம்’ என்றால் பழையது அல்லது முன்பு இருந்தது என்று பொருள்படும். ‘சமற்கிருதம்’ என்றால் புதிதாகச் செய்யப்பட்டது அல்லது கலந்து செய்யப்பட்டது என்று பொருள்படும். சமற்கிருதத்தைச் செம்மைப்படுத்தியபின் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘பாணினி’ என்னும் பெயர் கொண்ட முனிவர் தமக்கு முன் வழங்கிய சமற்கிருத இலக்கணங்கள் சிலவற்றைப் பயன்படுத்தி ‘அட்டாத்யாயி’ என்னும் பெயர் கொண்ட பேரிலக்கணத்தை இயற்றினார். எனினும் இது எழுத்து சொல் இலக்கணங்களை மட்டுமே கொண்டது. இதனைப் ‘பாணினியம்’ என்றும் வழங்குவர். இதற்குப்பின் ‘காத்தியாயனர்’ என்பார் இந் நூலுக்கு விளக்கவுரை எழுதி வளப்படுத் தினார் என்பர்.

இந்த இலக்கணம் சுமார் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் தோன்றிச் சமற்கிருதத்தைச் செம்மைப்படுத்திய பிறகுதான், புகழ்பெற்ற இராமாயணக் காவியத்தை வான்மீகி முனிவரும் பாரதக்காவியத்தை வியாச முனிவரும் எழுதினர் என்பர். இதற்குப் பிறகு தான் சமற்கிருத மொழியில் புராணங்களும் காவியங்களும் இலக்கணங் களும் பெருகத் தொடங்கின. எனினும் இம்மொழி எக் காலத்தும் இலக்கிய மொழியாக இருந்து வந்துள்ளதன்றி மக்கள் பேசும் மொழியாக இருந்ததில்லை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவ்வாறு வந்த ஆரியர்கள் தங்கள் வாழ்வையும் மொழியையும் வளப் படுத்திக் கொண்டபின் வட நாட்டிலிருந்து தென் தமிழ் நாட்டுக்குத் தங்கள் பண்பாட்டு மேலாதிக்கத்தைப் பரப்பிட விரும்பி அகத்தியர் நாரதர் முதலிய முனிவர்களின் தலைமையில் ஆரியப் பூசாரிகளையும் பாணர்களையும் முனிவர்களையும் ஆசிரியர் களையும் சாரி சாரியாக அனுப்பி வைத்தனர். அப்படி வந்தவர்கள் ‘மன்னர் எவ்வழியோ, அவ்வழியே குடிமக்களும்’ என்னும் வழக்கை அறிந்து முதலில் மன்னர்களையே அணு கினர்.

அவர்கள் தங்களின் வெள்ளைத் தோலையும் வெடிப்பொலி மொழியையும் காட்டித் தாங்களே நிலத்தேவர் என்றும் தாங்கள் பேசும் மொழியே தெய்வமொழி என்றும் பசப்பினர். ஆரியரின் வேள்வி முறையை அரசர்களும் மக்களும் பின்பற்ற வேண்டும் என்றும், அப்பொழுது தான் அவர்கள் இறந்தபின் சொர்க்கம் என்னும் அழியாத சுகவாழ்வு கிடைக்கும் என்றும் இறைவனே தங்களை மேலான பிறவியில் படைத்தான் என்றும், இறைவன் வாழும் கோயில்களில் வடமொழி அர்ச்சனையும் வடமொழிப் பூசாரியின் வழிபாட்டையும் நடத்தினால் தான் வையத்தில் பருவ மழை தவறாது பெய்து வளம் பெருகும் என்றும், இறைவனே பல்வேறு வருணத்தார்களையும், சாதியார்களையும் படைத்தான் என்றும், முற்பிறவியில் அவரவர்கள் செய்த வினை களுக்கேற்றவாறே இப்பிறவியில் அவர்கள் பல்வேறு சாதியார்களாகப் பிறப்பெடுத்தனர் என்றும், வேதங்களும் சாத்திரங்களும் இறைவன் அருளியவை என்றும், அவற்றைப் பரப்பவே தாங்கள் வந்ததாகவும் அதனால் மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனருக்குப் பணிந்து ஏவல் செய்து வாழ வேண்டும் என்றும் கூறிப் பொய்க்கதை களையும் புளுகு மூட்டைகளையும் அவிழ்த்து விட்டு அவற்றை நம்பும்படி நயம்படக் கூறியும் நரக - மோட்சத்தைக் காட்டிப் பயமுறக்கூறியும் தங்களின் நச்சுக் கருத்துக்களை விதைத்தனர்.

அவற்றை நம்பிய மூவேந்தரும், ஆரியப் பார்ப்பனர் கூறியபடி பலவகை வேள்விகள் செய்யத் தலைப்பட்டனர். பார்ப்பனர்களுக்கு விளைவு மிக்க மருத நில ஊர்களைக் கொடுத்து அவர்கள் வளமாகத் தங்கி வாழ்வதற்குரிய அகரங்களை (அக்ரகாரம்) அமைத்துக் கொடுத்தனர். தமிழ்ப் பூசாரிகள் விலக்கப்பட்டுக் கோயில்களில் வடமொழிப் பூசாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அரசர்களுக்குக் குருக்களாகவும் அமர்ந்து ஆட்டிப் படைத்தனர். அதுவரை அப் பதவிகளில் இருந்த தமிழ் வள்ளுவக் குருமார்கள் விலக்கப்பட்டனர். வேத பாடசாலைகள் பெருகின. அங்குப் பயிலும் பார்ப்பன மாணவர்களுக்கு விடுதி வசதிகள் செய்யப்பட்டன. நாடுதோறும் பார்ப்பனர்கள் உண்பதற்கே ஊட்டுப்புரைகள் என்னும் சத்திரங்கள் அமைக்கப்பட்டன.

தமிழ் மக்களுள் செல்வர்களும் அரசர் களைப் பின்பற்றி ஆரியப் பூசாரிகளுக்கு அடிபணிந்து அவர் களுக்குத் தானங்களும் தட்சினைகளும் தருவதில் பெருமைப் பட்டுக்கொண்டனர். திருமணச் சடங்கு, கோயில் வழிபாடு, பள்ளிக்கல்வி முதலிய இடங்களிலும் சமற்கிருதம் ஆட்சி செலுத்தத் தொடங்கியது. பொது மக்கள் மத்தியில் இராமாயண பாரதக் கதைகள் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கின. சமற்கிருதம் வேதமொழியென்றும் தமிழும் அது போன்ற பிற மொழிகளும் சமற்கிருதத்தில் இருந்தே தோன்றினவென்றும் தமிழ்ச்சொற்கள் எல்லாம் ஆரியச் சொற்களே என்றும், தமிழ் எழுத்துக்களும் ஆரிய எழுத்துக்களே என்றும் பொய்வழக்கு புனைந்தனர்.

காலந்தோறும் புதுப்புது தாசர்களால் அப்பொய்கள் மெருகுபடுத்தப்பட்டன. இறுதியில் நீசமொழி, பிசாசு மொழி என்றும் இயற்கைத் தமிழ் மொழியை வெறிபிடித்த ஆரியத் துறவிகளே எரிச்சலுடன் வெறுத்துப் பேசினர். சுமார் கி.மு. 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து தொடங்கிய இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு கி.பி. நாலாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வந்தது என்று துணியலாம். அதன்பிறகு தமிழ்நாட்டு மன்னர்களே வடக்கிலிருந்து அவர்களை வரவழைத்தனர்.

இச்சமயத்தில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் பாடிய பாடல் ஒன்றும் நினை வுக்குள் நிழலாடுகிறது. 
தமிழினைப் போல் உயர்ந்த மொழி

தரணியெங்கும் கண்டதில்லை 
தமிழனைப்போல் மொழிக்கொலையில்

தலைசிறந்தார் எவருளரே?

என்பதே அப்பாடல்

இதற்குத் தானே தான் சரியான சான்று என்று காட்டுவது போல ‘சாமிநாத தேசிகர்’ என்பவர் கிளம்பினார். ‘இலக்கணக் கொத்து' என்று அவர் எழுதிய புதிய இலக்கண நூலில் இப்படிக் கூறினார்.

“தமிழுக்கே உரிய எழுத்துக்கள் 5 மட்டுமே, (ற, ன, ழ, எ, ஒ) மற்ற எழுத்தெல்லாம் வடமொழிக்கே உரியவை. (வடமொழியில் இந்த 5 எழுத்துக்களும் அறவே இல்லை) இப்படி ஒரு மொழி (தமிழ்) உள்ளது என்று கூறுவதற்கே வெட்கமாயுள்ளது என்று வெட்கப்படாமலே அவர் எழுதியுள்ளார். இதுபோல் அவர் வழியில் பிள்ளைத் தனம் கொண்ட பெரியவர்கள் சிலரும் கொள்ளி வைப்பது போல் கூசாமல் தமிழ்மொழியைக் குறைத்துக் கூறி வந்துள்ளனர். காலம் மாறும் பொழுது கருத்துக்களும் மாறவேசெய்யும் அறிவியல் வெளிச்சம் பரவும் போது, மொழியியல் ஆராய்ச்சி மோதும் போது இந்த வீண் பழிகள் விலகி மறைந்து உண்மைநிலை என்னும் ஒளி பெருகுவது உறுதியன்றோ?

- கவிஞர் மீனவன்
(புலவர் இர.கு.நாராயணசாமி)

நூல்: பண்டைய தமிழரும் 
பரதவர் வாழ்வும் (பக்கம் 7-13)

- விடுதலை ஞாயிறுமலர்,13.1.18