பக்கங்கள்

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு



மும்பை, செப்.22  அமெரிக்காவில் அதிகமானவர்களால் பேசப்படும் இந்திய மொழிகளில் தொடர்ந்து இந்தி முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர்ந்து குஜராத்தி, தெலுங்கு, தமிழ் மொழிகள் உள்ளன.

2010ஆம் ஆண்டு புள்ளிவிபரத்துடன் ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டில் தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கும் மேல் வசிப்பவர்களின் எண்ணிக்கை 21.8 சதவீதமாக உள்ளது. ஆங்கிலம் தவிர பிற மொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் 30.5 கோடி பேரில் 6.7 கோடி பேர் வெளிநாட்டு மொழிகள் பேசுபவர்களாக உள்ளனர். இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 8.63 லட்சமாகவும், குஜராத்தி பேசுவோரின் எண்ணிக்கை 4.34 லட்சமாகவும், தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 4.15 லட்சமாகவும் உள்ளது. தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 86 சதவீதமும், இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 42 சதவீதமும், குஜராத்தி பேசுவோரின் எண்ணிக்கை 22 சதவீதமும் அதிகரித்துள்ளது.

பெங்காலி பேசுவோரின் எண்ணிக்கை 57 சதவீதமும், தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி வங்கதேசத்தினரும் பெங்காலி பேசுகிறார்கள். அதே சமயம் தமிழ் மொழி அதிக வெளிநாட்டினரால் பேசப்படும் மொழியாக உள்ளது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாட்டினரும் தமிழ் பேசுகிறார்கள்

ஒலிமாசை கட்டுப்படுத்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளுக்கு தடை நீடிக்கும்

மும்பை, செப்.22 விநாயகர் சதுர்த்தி மற்றும் சில முக்கிய நிகழ்ச்சியின் போது விதிமுறைகளை மீறி அதிக ஒலிமாசு ஏற்படுத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி நிகழ்ச்சிகளின் போது அதிக ஒலி எழுப்பும் டி.ஜெ. உள்ளிட்ட கருவிகளுக்கு தடை விதித்தனர். இதை எதிர்த்து ஒலி மற்றும் ஒளி கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் சாந்தனு கேம்கர் மற்றும் சாரங் கோட்வால் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் “டி.ஜெ. உள்ளிட்ட கருவிகள் 100 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் திறன் கொண்டவை. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் 50 முதல் 75 டெசிபல் ஒலியும், இரவு நேரங்களில் 40 முதல் 70 டெசிபல் ஒலியும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒலி மாசு சட்டங்களை மீறும் இந்த கருவிகளை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது” என கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி நிகழ்ச்சிகளில் அதிக ஒலி எழுப்பும் கருவிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டனர்.

ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக சட்டம், விதிகள் உருவாக்கப்படும்போது, அதை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் மனு மீது விரிவான பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

ரூ 100 அய் தொடப்போகும் பெட்ரோல் விலை

புதுடில்லி, செப்.22 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தினம் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உரிமை அளித்ததில் இருந்து தினமும் விலை உயர்வு ஏற்படுவதால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.   இன்று பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.32 ஆகவும், சென்னையில் ரூ.85.48 ஆகவும் கொல்கத்தாவில் ரூ.84.07 ஆகவும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு டில்லி, மும்பை கொல்கத்தா நகரங்களை விட சென்னையில் அதிகம் இருந்தது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பெட்ரோல் விலை டில்லியில் லிட்டருக்கு ரூ.64.97 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் முடிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல்வாரம் வரை நாடு முழுவதும் தொடர்ந்து விழாக்கள் நடைபெறுவதால் வரும் 5 மாதங்களுக்கு விலை உயருமே தவிர குறைவதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. இதனால் இன்னும் சில வாரங்களில் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100-அய் தொட்டுவிடும்.  சென்னையில் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல்வாரத்தில் ரூ 100 அய்த் தொட்டு விடும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து பொய் பேசிவரும் நிர்மலா சீதாராமன்

ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடில்லி, செப். 22  நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது, மும்பையில் விரைவில் பெட்ரோல் விலை ரூ100-அய் தொட்டுவிடும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடர்ந்து பொய்யான தகவலைக் கூறிவருகிறார். இதற்கு மத்திய  முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நிர்மலா சீதாராமனின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில்  இவ்விலை உயர்வு குறித்து பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பொருட்கள் மீது மாநிலங்கள் தான் அதிக வரி விதிக்கின்றன. இவற்றில் பாதி வரியைத் தான் மத்திய அரசு விதிக்கிறது. எனவே முதலில் விலை குறைப்பில் ஈடுபட வேண்டியவர்கள் மாநில அரசுகள் தான் என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மையா?  வாருங்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

மேலும், கடந்த 2017-&2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ.2,84,442 கோடி வரி வசூல் செய்துள்ளது. அதேசமயம் மாநில அரசு ரூ.2,08,893 கோடி வரி வசூல் செய்துள்ளது. இதில் மத்திய அரசு தான் அதிக லாபம் பார்த்துள்ளது. இதில் மாநிலங்களுக்கு வரி இழப்புத்தான் ஏற்பட்டுள்ளது. புள்ளி விவரங்களைப் பார்த்தாலே தெரியும். அப்படியிருக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படி பேசுவது ஏன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த இரண்டில் எது அதிகம் என்று நீங்களே கூறுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு, 22.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக