தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களை அறிந்து கொள்ளக் குகைக் கல்வெட்டுகள் பெரிதும் உதவுகின்றன. இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்று குறிப்பிடுகின்றனர். வேறு சிலர் தமிழ்-பிராமி என்று குறிப்பிடுகின்றனர்.
• தமிழின் தனித்தன்மை
தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்திய பிராமி எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு "தமிழி" என்று தனிப்பெயர் இடுதலே சிறப்புடைத்து என்பார் கல்வெட்டு "அறிஞர் நாகசாமி". இவர் தம் கருத்துக்கு அரணாக இரு சான்றுகளை எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.
கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த "சமவயங்க சுத்த" என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் "தமிழி" என்பதும் ஒன்று.
பிராகிருத மொழியினர் தமிழ் எழுத்துகளைத் தமிழி, திராவிடி என்று குறிப்பிடுகின்றனர். திராவிடி என்பது பிற்காலப் பெயர். இப்பெயர் கி.பி.5,6 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய நூலாகக் கருதப் பெறுகின்ற லலித விஸ்தாரம் என்னும் நூலிலேயே இடம் பெற்றுள்ளது.
எனவே குகைக் கல்வெட்டு எழுத்துகளைத் தமிழி என்றே குறிப்பிடுவோம். தமிழி எழுத்து வடிவங்களைக் கீழே இடம் பெற்றுள்ள படத்தில் காணலாம்.
காண்க : (தமிழ் இணைய பல்கலைக்கழகம்) http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051414.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக