பக்கங்கள்

செவ்வாய், 2 ஜனவரி, 2018

ஆபிரகாம் பண்டிதர்

பிரபல தமிழிசைக் கலைஞரும் சித்த மருத்துவருமான ஆபிரகாம் பண்டிதர் திருநெல்வேலி மாவட்டத்தில் சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில் பிறந்தார்(1859). ஆசிரியர் பயிற்சி முடித்து, தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ் மருத்துவத்தில் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்ததால், தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பெரிய மூலிகைப் பண்ணையை உருவாக்கினார். உள்ளூர் மக்களிடையே அது பண்டிதர் தோட்டம் எனப் பிரபலமடைந்தது.

மூலிகைகளைப் பயன்படுத்தி பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். இவர் தயாரித்த கோரசனை மாத்திரை இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரிட்டிஷ் அரசு இவரது சேவையைப் பாராட்டி ராவ் பகதூர் பட்டம் வழங்கியது.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்னாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இதன்மூலம் தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்தார்.

பழந்தமிழ் இசை வடிவமே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் இசைக்கப் படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார். 1912ஆம் ஆண்டு சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார்.

தனது பல்லாண்டு கால தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற இசை நூலாகத் தொகுத்து 1917இல் வெளியிட்டார். தமிழிசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் குறித்த ஒரு கலைக்களஞ்சியமாக இது போற்றப்படுகிறது. சுமார் 1,400 பக்கங்கள் கொண்ட இந்நூல் இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கான மூலநூலாக அமைந்துள்ளது.

ஆசிரியர், தமிழிசைக் கலைஞர், படைப்பாளி, சித்த மருத்துவர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த ஆபிரகாம் பண்டிதர் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் நாள் தமது 60ஆவது வயதில் மறைந்தார்.     


 - உண்மை இதழ்,16-31.8.17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக