நடிப்புக் கலைகள்
தமிழ் இசை நடிப்புக் கலைகள் பற்றி, “இனி என்ன செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சேலம் சென்டிரல் தியேட்டரில் ‘இன்ப இரவு’ என்னும் நாடகத்திலும், சென்னை மாவட்ட நீதிக்கட்சி மாநாட்டிலும், திருச்சி பொதுக்கூட்டத்திலும் பிப்ரவரித் திங்களில் 7, 9, 13, 20 ஆகிய நான்கு நாள்களில்
நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பு:
தமிழ் இசைக்குக் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள். பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும்வரை இந்த உணர்ச்சி வலுத்துக்கொண்டே போகும்.
இனி என்ன செய்யவேண்டும்?
“தமிழ் இசை நமது நல்வாழ்வுக்குப் பயன்படும்படிச் செய்ய வேண்டியது நமது கடமை. இன்று இதுவரை தமிழல்லாத வேறு மொழியில் இருந்த இசை (பாட்டுகள்) தமிழில் பாடவேண்டியதாக ஏற்பட்டதற்குக் காரணம் நமக்கு தமிழினிடம் ஏற்பட்ட உணர்ச்சியேயாகும்” - இதுஒரு பெரிய மாறுதல்தான்.
இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை, ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அவை மனத்தில் பதிய வைப்பதற்கும் அவை வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும், மனத்திற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்துவருகின்றன. அடுத்தபடியாக, இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி இருந்து வருகின்றது. ஆகவே, இசைக்கும், நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும்.
“நம் நாடும் நாமும் எவ்வளவோ குறைபாடுகள் உடையவர்களாக இருக்கிறோம். அக்குறைபாடுகள் ஒழிக்கப்படுவதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்கிறோம். இம்முயற்சியின் மூலம் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் அனுபவித்து வருகிறோம். இவற்றை யாராலும் மறுக்க முடியாது அப்படியிருக்க நம்முடைய கலைகள், நாம் அனுபவிக்கும் நுகரும் சாதனங்கள், இன்பத்தன்மைகள் ஆகியவை எப்படியிருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள், சாதாரணமாகப் பொருள் நட்டமோ, கால நட்டமோ, ஊக்க நட்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள் கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத்தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். அவற்றில் நமக்குப் போதிய கவலை இல்லாததாலேயே, நம்நலத்துக்கு மாறான சேதிகளும் உணர்ச்சிகளும் கொண்ட காரியங்கள் வளர்ந்துவர ஏற்பட்டுவிட்டதுடன், இவைகளையே பொருள் கொடுத்தும், காலத்தையும் ஊக்கத்தையும் செலவழித்தும் நுகர்ந்து அறிவும், மானமும் கெட்டு, முற்போக்கும் தடையும் உற்றுக் கீழ் நிலைக்கு வரவேண்டியவர்களானோம்.
இன்றைய நம் நிலை என்ன முதலாவது சமுதாயத்தில் நாம் கீழான நிலையில் இருக்கிறோமா இல்லையா? இந்தக் கீழான நிலை ஏழைகளுக்கும், கயவர்களுக்கும் இருந்தால் நமக்குக் கவலையில்லை. (ஏனெனில் இது தனி உடைமை நாடு) ஆனால் கோடீசுவரரும், கோணாத கை கொடை வள்ளலும், மிக்க மதிவாணருமான இராஜா சர் அண்ணாமலை அவர்களும், பேரறிஞரும், மலையாடும்படியான வாயாடிகளும், கருத்தாளர்களும் மெச்சும் மதி அரசர் சர் சண்முகம் அவர்களும், நம் சமுதாயத்தில் 4-ஆம், ஜாதி, 5-ஆம் ஜாதியாக மதிக்கப்படவும், அவ்வாறே பெரிதும் நடத்தப்படவும், காரணம் என்ன? ஏன் நடத்தப்பட வேண்டும்? சம மனிதனாய்க் கருதப்படாததற்கு இவர்களிடம் உள்ள குறைகள் என்ன? குற்றம் என்ன? என்று கேட்கிறேன். இந்தக் கொடுமை இன்றா நேற்றா? இந்நிலையில் இவர்களுக்குள்ள பொருள், செல்வாக்கு, மதி, திறமை, ஊக்கம், உணர்ச்சி ஆகியவை உண்மையில் எதற்காகச் செலவிடப்பட்டு வரவேண்டும்? எதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்? இப்படிப்பட்டவர்கள் பிறந்த நாட்டிலே, இவர்கள் காலத்திலே மனித சமுதாயத்துக்கும் (ஏன்) இவர்களுக்குமே, சமுதாயப்பிறவி இழிவும், குறைபாடும் நீக்கப்படவில்லையானால், நீக்கப்பட இவர்கள் உழைக்கவில்லையானால்,
நீக்கப்பட இவர்களது அறிவு, ஆற்றல், உணர்ச்சி, ஊக்கம் செலவழிக்கப்பட வில்லையானால் மற்றும் வேறு யாருடைய காலத்தில் நாம் எதிர்பார்க்க முடியும் என்று கேட்கிறேன்.
சென்ற மாதம் சென்னையில் நடந்த தமிழ் இசை மாநாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 10 நாட்கள் ஒரு பெரிய திருநாள் போல் நடந்தது. பல பதினாயிரம் ரூபா செலவு செய்யப்பட்டுப் பல ஆயிரக்கணக்கான மக்கள் தினம் 4, 5 மணி நேரம் செலவழித்து வந்து அமர்ந்து இருந்துவிட்டுப் போனார்கள். வள்ளல் அண்ணாமலையார் உணர்ச்சியும், ஊக்கமும், ஆழ்ந்த சிந்தனையும், அவர்களது பந்துமித்திரக் குழாங்களும், அறிஞர் சண்முகம் அவர்களது அறிவுரைகளும், ஆற்றல்களும் எல்லையின்றிப் பயன்படுத்தப்பட்டன. எதிரிகளுக்கு ஆணித்தரமான விடை அளித்து, அவர்களது சம்மட்டியால் அறையப்பட்டன. வெற்றிக்கொடி ஆகாயத்தை அளாவிப் பறந்தது. சென்னை நகர் முழுவதுக்கும் ஒரு புத்துணர்ச்சி கிளம்பியது சரி, இவை பாராட்டத்தக்கன, போற்றத்தக்கன.
ஆனால், விளைந்த பயன் என்ன? ஏற்பட்ட படிப்பினை என்ன? இம்மாநாடு பண்டிதர்களைத் தமிழில் பஜனைப் பாட்டுகளைத் தொடுக்க வைத்தது. இசைவாணர்களை (பாட்டுத் தொழில்காரர்களை) வீட்டில் தனிமையில் உட்கார்ந்து, இப்பஜனைப் பாட்டுகளைப் பாடிப்பாடிப் பழக்கம் செய்துகொள்ளச் செய்தது. இந்தப்படியான தமிழ்ப் பஜனைப் பாட்டுப்பாடத் தெரிந்தவனையே இசை விருந்துக்கு அழைக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சியை நமது செல்வவான்கள், பலருக்கு ஊட்டியது, இவை நுகரச் செல்லும் மக்கள் பலருக்கும் (இந்த இசைவாணர்) தமிழ் இசை இசைக்கிறாரா, அல்லது வேறு மொழியில் இசைக்கிறாரா, வேறு மொழியில் இசைத்தால் கலவரம் செய்யலாமா, என்கின்ற சிந்தனையைச் சிலருக்கு ஊட்டியது, ஆகிய இவை ஏற்பட்டன. சரி என்றே வைத்துக் கொள்ளலாம். இவற்றால் கால உயர்வும், தகுதியும் இருந்து ஒரு சிறு கீழ் மக்கள் குழுவால் இழி மக்களாய்க் கருதப்பட்டுச் சுரண்டப்பட்டு மானமற்று நடைப் பிணங்களாய்க் கிடக்கும் தமிழ் மக்களுக்கு இந்த நிலை மாற ஏதாவது ஒரு ஊசி முனை அளவு இவற்றால் பயன் ஏற்பட்டதா என்று வணக்கத்தோடு கேட்கிறேன். நலம் பெறுவதற்கு வழி சிறிதும் இல்லாவிட்டாலும், கேட்டிற்காவது சரிவு வழி ஏற்படாமல் போயிற்றா என்று கேட்கிறேன்.
“என் மீது ஒரு சிலர் முனிவு கொள்ளலாம். ஆத்திரப்பட்டு வஞ்சினம்கூடக் கூறலாம்; அதை நடத்துவிக்கவும் முனையலாம். இவற்றால் பொதுநலம் என்ன ஏறபடக்கூடும்? தனி நலம்தான் என்ன ஏற்படக்கூடும்? இப்பெரியார்களிடத்தில் இந்த விண்ணப்பம் கொடுக்க எனக்கு உரிமை இல்லையா?
“சர் சண்முகம் அவர்கள் ஒரு பெரிய பொருளாதார நிபுணர். இவ்விஷயத்தில் அரசர்களும் மதிக்கத் தகுந்தவர், எதிரிகளும் கண்டஞ்சத் தகுந்தவர்; வள்ளல் அண்ணாமலையார் பொருளாதார நிபுணத்துவத்தையே உருவாய்க் கொண்டவர். இவ்விருவரின் பொருளாதார நிபுணத்துவம் இந்தத் தமிழ் இசை மாநாட்டில், தமிழ் இசைக் கிளர்ச்சியில் எப்படிப் பயன்படுகிறது என்று பாருங்கள்.
தமிழிசைக் கிளர்ச்சிக்காக இவர்கள் செலவழித்த பொருளும், மற்ற தமிழ் மக்கள் செலவழித்த பொருளும் தமிழ் நாட்டுப் பொருளல்லவா, தமிழர்களுடைய பொருளல்லவா? நிலை குலைந்த தரித்திரர்களாய்,
வயிற்றுப்பசிக்கு எச்சிக்கலையைத் தேடித்திரியும் ஈனமக்களாய்க் கருதப்படும் தமிழ் உயிர்களுடைய செல்வமல்லவா? இதற்குச் செலவழித்த உணர்ச்சியும், ஊக்கமும் ஆற்றலும் காலமும்கூட இவர்களுடையது அல்லவா, என்று கேட்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்!
இவ்வளவு பொருளும், ஆற்றலும், மதியும் மற்றதும் செலவழித்ததற்கு நாம் கண்ட பயன் என்ன? நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள். நாட்டிலுள்ள நல்ல, உயர்தர இசைவாணர்களுக்குப் பொருள் தந்து வரவழைத்து ஒரு காலைத்தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் நடராஜ உருவத்தின் முன் தீபதூப நைவேத்தியத்துடன் உட்காரவைத்துப் பல ஆயிரக்கணக்கான மக்களை வரவழைத்துப் பஜனைப் பாட்டுகள் பாடச் செய்வதும், அதன்மூலம் மக்களுக்குப் பக்திபுகட்டுவதும் தானா? இந்தப் பக்திக்கு ஆக ஏற்கனவே நம் நாட்டில் இருந்துவரும் சாதனங்களும் முயற்சிகளும், செலவுகளும் மற்றவையும் போதாதா? இது யார் செய்ய வேண்டிய காரியம்? எதற்காக இவர்களும் இந்தக் காரியம் செய்ய வேண்டும்? இதனால் ஏற்படும் பலன் யாருக்கு நலனைத்தரும்? நிலை குலைந்து, இழிவடைந்து தரித்திரர்களாய், மடையர்களாய், கீழ் மக்களாய், சுரண்டப்பட்டவர்களாய் வாடும் மக்களுக்கு இவை என்ன பலனைத்தரும்? அவர்கள் குறையைப் போக்கிக் கொள்ள ஏதாவது உணர்ச்சி ஏற்படுமா? அல்லது முயற்சியைத் தருமா? மறுமுறையும் சிந்தித்துப் பாருங்கள். இதில் பொருளாதார ஞானம் இருக்கிறதா? சீர்திருத்த ஞானம் இருக்கிறதா என்று! பஜனைப் பாட்டுகள் தமிழில் இருந்தால் என்ன, தெலுங்கில் இருந்தால் என்ன, இந்தியில் இருந்தால் என்ன, அல்லது ஜப்பான், ஜெர்மனி மொழியில் இருந்தால்தான் என்ன? கடவுளுக்கு எந்த மொழி தெரியாது?
ஆகவே, நாட்டினுடைய செல்வம், அறிவு, ஊக்கம், உணர்ச்சி இந்தப் பஜனைக்காகவா இப்படிச் செலவழிக்கப்பட வேண்டும்? இதைக்காணும் அயலான் எவனாவது இந்த நாட்டு மக்களுக்குத் தன்மான உணர்ச்சியோ, இழிவையும் கீழ்மையும் கண்டு உடல் துடிக்கும் சொரணையோ இருக்கிறது என்று கருத முடியுமா? நாட்டு மக்களுக்கு, இதில் பிரவேசித்து இந்தத் தன்மானத்துக்குக் கேடு செய்யும் தன்மையைப்பற்றிச் சிந்திக்கவோ, விளக்கவோ, தடுக்கவோ, உரிமை இல்லையா என்று கேட்கிறேன்.
தமிழிசைக் கிளர்ச்சிக்குச் செலவாகும் பணத்தையும், நேரத்தையும் ஊக்கத்தையும் பார்த்தால், அதன் பயன் இந்தப் பஜனையில் முடிவானதால் மானமும் அறிவும் உள்ள எவனுக்குத்தான் வயிறு எரியாது என்று கேட்கிறேன்.
ஒரு கதை
பல் விளக்கச் சோம்பேறித்தனப்பட்ட மருமகனுக்குச் சொல்ல வெட்கப்பட்டுக் கரும்பு சாப்பிட்டால் பல் வெள்ளையாகும் எனக்கருதி மறைமுகமாய் “மாப்பிள்ளை! இந்த ஊர்க் கரும்பு நல்ல ருசியாக இருக்கும்; ஒரு துட்டுக்குக் கரும்பு வாங்கிச் சாப்பிடுங்கள்” என்று சொல்லிக் காசுக் கொடுத்தால், மாப்பிள்ளை இதை வாங்கிக் கொண்டுபோய் எள்ளுப் பிண்ணாக்கை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுப் பல்லை இன்னும் கேவலமாக்கிக் கொண்டு கரும் எண்ணெய்ப் பசையுடன் வந்தால், மாமியாருக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அதுபோலல்லவா, இந்தத் தமிழிசை நாடகக் கிளர்ச்சிகள் இந்நாட்டில் நடந்து வருகின்றன என்று கருத வேண்டியிருக்கிறது.
சினிமா நாடகம்
இது போலவே நம் தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் மாபெருங்கேடாய் இருந்துவரும் மற்றொரு காரியம் சினிமா, நாடகம் முதலிய நடிப்புக் காட்சிகளாகும். இவை இசையைவிடக் கேடானவையாகும் என்பது என் கருத்து, நம் தமிழ்நாடு மானமுள்ள நாடாக இருந்திருக்குமானால், இந்த நாடகம் சினிமா முதலியவை ஒழிந்து கல்லறைகளுக்குப் போயிருக்கும். இதை நான் வெகு காலமாகச் சொல்லி வருகிறேன். இசையினால், காது மூலம் உடலுக்கு விஷம் பாய்கிறது. நடிப்பினால், காது, கண் ஆகிய இரு கருவிகள் மூலம் உடலுக்குள் விஷம் பரவி இரத்தத்தில் கலந்து போகிறது. இவ்வளவு பெரிய குறைபாடும், இழிவு உள்ள நாட்டுக்கும், மக்களுக்கும் இன்று கடவுள் பஜனையும், கடவுள் திருவிளையாடல் நடிப்பும்தானா விமோசனத்துக்கு வழியாய் இருக்க வேண்டும்?
நாடகம் எதற்கு? அது படிப்பிக்கும் படிப்பினை என்ன? அதற்காக ஏற்படும் செலவுகள் எவ்வளவு? புராணக் கதைகளை நடிப்பதினால் அனுபவிப்பதால் மூடநம்பிக்கை, ஒழுக்க ஈனம், கட்டுத்திட்டமற்ற காம உணர்ச்சி, கண்ட மாத்திரத்தில் காமநீர் சுரக்கும் படியாகப் பெண் மக்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளுதல் முதலியன பிடிபடுவதல்லாமல் வேறு என்ன ஏற்படுகிறது?
இரணியன் நாடகத்தில் விஷ்ணு தூணிலிருந்து வெளிவரும்போது கூத்துப் பார்க்கும் மக்கள் கைகூப்பிக் கும்பிடுகிறார்கள்.
வள்ளித் திருமண நாடகத்தில் வள்ளியைச் சுப்பிரமணியன் காதலித்து காதல் சேட்டை செய்யும்போது, பல ஆண்கள் பெண்கள் பக்கமும், பல பெண்கள் ஆண்கள் பக்கமும் திரும்பிப் பார்த்துக் கண்ணோடு கண்ணை முட்டவைப்பதுபோல் பார்வையை முட்டவைத்துக் கொண்டு அரைமூர்ச்சையாகி விடுகிறார்கள்.
ஒரே கதை, நாடகமும், சினிமாவுமாக ஓர் ஊரில் ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம் நடப்பதற்குக் காரணம் என்ன? முதலிரண்டு மூன்று நாள்களிலேயே பல பெண்களும், ஆண்களும் நாடகக் கொட்டகையை தங்கள் சங்கேத°தலம் (அதாவது பார்வையால், சந்திப்பால் ஓர் அளவு காதலைத் தீர்த்துக் கொள்ளவும், காதல் குறியைக் கண்டு அனுபவிப்பதால், ஓர் அளவு இன்பங்கொள்ளவும் அனுகூலமான இடம்) ஆக ஆக்கிக் கொள்ளுகிறார்கள். வெறும் சாதாரண நிலையில் ஆண், பெண் சந்தித்துக் கொள்வதைவிட நல்ல உடை, நல்ல நடை, நல்ல அலங்கரிப்பு, நல்ல சாயலோடு செல்ல உரிமை இருக்கிற இடங்கள் இவைகளோடு அதற்கேற்ற சைகைகள் நடக்கும் சமயத்தில் சந்திப்பு வைத்துக் கொள்ளுவது, உண்மையிலேயே யாருக்கும் எந்த வயதினருக்கும் ஓர் இன்பத்தையும், குஷாலையும், திருப்தியையும் கொடுத்துத்தான் தீரும். இது இயற்கையே ஆகும். ஆனால், நாம் இதை வளர்க்கச் செய்யலாமா? இளம் வயதாகவும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போதிய சக்தி இல்லாதவர்களாகவும், இருக்கிற சிறுவர் சிறுமிக்கும் மனோ பலமற்றவர்களுக்கும் இதை ஒரு பழக்கமாகச் செய்யலாமா, என்று பாருங்கள். மக்களுக்கு இந்த இன்பம் அவசியம் என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்லக்கூடும். அப்படிச் செய்வதானாலும் அதிலிருந்து சிறிது அறிவும் மானமும் பெறும்படியாகவாவது இந்த நடிப்பைத் திருப்பவேண்டாமா? அதை விட்டு விட்டுக் காட்டுமிராண்டிகள் போல் மூடநம்பிக்கையும், காமமும், காதலுமே நமது கலைகளை நிரப்பி வருவதனால், கலையினால் மனிதன் அறிஞனாவானா? மடையனாவானா? சிந்தித்துப் பாருங்கள்.
நந்தனார் சரித்திரத்தால், தீண்டாமை ஒழியுமா, நிலைக்குமா யோசித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
கிருஷ்ணன் லீலையால், விபசாரித்தனம் வளருமா, குறையுமா சொல்லுங்கள் பார்க்கலாம்.
திருவிளையாடல் புராணச் சிவலீலையால், ஒழுக்க ஈனங்களும், அயோக்கியத்தனங்களும் வளருமா, குறையுமா என்று கூர்ந்து பாருங்கள்.
இராமாயணத்தினால், அடிமைத்தனமும் சூழ்ச்சிகளும் வளருமா, குறையுமா என்று பாருங்கள், இப்படிப்பட்ட புராண சம்பந்தமான கதைகளின் நடிப்பு ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்குப் பயன்படுகிறதா என்று கேட்கிறேன். இப்படியே ஒவ்வொரு புராணக் கதையிலும் கேடு இருப்பதோடு நாட்டுக்குப் பெருமதி நட்டமும், முன்னேற்றத் தடையும் இருந்து வருகின்றன, பொருள் நட்டத்தைப் பாருங்கள்.
பொருளாதாரக் கணக்கு
இந்த நடிப்புக்காக நம் நாட்டில் ஏற்படும் செலவைப் பொருளாதாரக் கண்கொண்டு சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு படம் எடுக்க (சராசரி) ரூ.50,000 செலவாகிறது. இப்படியாகத் தமிழ்நாட்டில் சுமார் 300 படங்கள் ஓடுவதாகக் கணக்கு எடுக்கப்பட்டிருக்கலாம். இதற்கு ரூ.1,50,000,00 ஒன்றரைக் கோடி ரூபா செலவாகி இருக்கலாம் அல்லவா? இவற்றை ஒட்டிக் காட்டுவதற்குத் தமிழ்நாட்டில் கொட்டகைகளும் கூடாரங்களுமாகத் தினமும் சுமார் 300 இடங்களில், தினமும் இரண்டு காட்சிகள் நடப்பதாகவும், ஒவ்வொரு காட்சிக்கும் ரூ.125 மாத்திரமே சராசரி வசூலாவதாகவும் கணக்கு வைத்து, 600 காட்சிகளுக்கு கணக்குப் போட்டால், தினம் ஒன்றுக்கு ரூ. 75,000 (எழுபத்து அய்யாயிரம்) ரூபாய் ஆகிறது. இத்துடன், இந்தச் சினிமா பார்க்கும் ஆண் பெண் குழந்தைகளின் போக்குவரத்துச் செலவு, சில்லறைச் செலவு, வெற்றிலை பாக்கு, சோடா, சிகரெட், தண்ணீர் முதலிய) செலவு மூன்றில் ஒரு பாகம் போட்டாலும் அது ரூ. 25,000 ஆகும். ஆகவே தினம் ஒன்றுக்கு காட்சி பார்க்கப் போகிறவர்கள் செய்யும் செலவு டிக்கட் உள்பட ஒரு லட்ச ரூபா ஆகின்றது. ஆகவே, ஒரு வருடத்தில் மூன்று கோடியே அறுபது லட்ச ரூபாய் ஆகின்றது. இப்பணத்தில் பெரும்பகுதி ஏழை மக்கள், கல்வி அறிவற்ற பாமர மக்களுடையதல்லவா? என்று பொதுவுடைமைக் காரர்களையும் சேர்த்து, பொருளாதார நிபுணர்களையும், சீர்திருத்தம் செய்யப் புறப்பட்டிருக்கும் பெரியோர்களையும் கேட்கின்றேன்.
இனி இதற்காக என்றே கொட்டகை மாதம் 100-க்கு 5-ரூபா முதல் 20 ரூபா வரை வீதம் வட்டி கட்டும்படி இலாபம் சம்பாதிக்கும் கொட்டகை முதலாளிகள் போட்ட கொட்டகை முதலைப் பாருங்கள் கொட்டகை ஒன்றுக்குச் சராசரி ரூ. 25,000 கொள்முதல் போட்டுக் கொண்டாலும், 200 கொட்டகைகளுக்கு 50,000,00 அய்ம்பது லட்சம் ரூபாவும், கூடாரம் (வநவே) 100க்கு இதில் முடங்கிக் கிடக்கின்றது.
3 கோடி கைமுதல் 3.5 கோடி தினச் செலவு
எனவே, முதல் முடக்கம் சுமார் மூன்று கோடியும், நித்தியச் செலவு வருடத்தில் 3.5 கோடி ரூபாவும் எதற்காக செலவழிகின்றன என்று சிந்தித்துப் பாருங்கள். இதற்கு, மேலே நான் எடுத்துச் சொன்ன பலனுக்காகவா இவ்வளவு பொருளைச் செலவழிக்க விட்டுக் கொண்டிருப்பது? இப்படி இருப்பது உங்களுக்கு ஒரு பெரிய ‘கிரிமினல்’ குற்றமாகத் தோன்றவில்லை? என்று கேட்கிறேன்.
ஆகவே, வாலிபர்களே, நீங்கள் ஆண்களும், பெண்களும் முன்வந்து இந்தக்கேட்டை ஒழிக்கவேண்டும். நாடகங்களில் போய் உட்கார்ந்து கொண்டு முன்சொன்ன காதல் வரும் சந்தர்ப்பங்கள் வரும்போது, “வெட்கம், வெட்கம், மானங்கெட்ட பெண்கள் தாம் இதைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள், மானமும் ஒழுக்கமும் உள்ள பெண்கள் இந்த நாடகங்களை எட்டிக்கூடப் பார்க்கமாட்டார்கள்” என்றும், மூடநம்பிக்கை வரும் சந்தர்ப்பங்களில் “வெட்கம் வெட்கம், பகுத்தறிவற்றவர்களும், காட்டுமிராண்டிகளும்தான் இந்தக் காட்சிகளைக் காண வருவார்கள். அறிவும் மானமும் உள்ளவன் இதைத் திருத்தத்தான் முற்படுவான்” என்றும் சொல்ல வேண்டும். அதுபோலவே இசையரங்குகளிலும் பஜனைப் பாட்டுகள் வரும்போது அவை காதுகளில் கேட்காதபடி “யாயாயாயாயா” என்று கூப்பாடுபோட்டு, அந்தச் சப்தம் மற்றவர்கள் காதுகளில் கேட்காமல் இருக்கும்படிச் செய்யவேண்டும். யுத்தத்தின் காரணமாக நமது சர்க்கார் ரேடியோவில் ஜப்பான், ஜெர்மன் பேச்சுகள் வரும்போது, வேறு யாரோ ஒருவர் அப்பேச்சுகள் நம் காதுகளில் விழாமல் இருப்பதற்கு ஆக “யாயாயாயா” என்று சொல்லச் செய்கிறார்கள் அல்லவா, அதுபோலத்தான் நானும் சொல்லுகிறேன்.
நாம் நம் சமுதாய முன்னேற்றத்திற்கு எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுடன், எவ்வளவு நாள்களாக, எவ்வளவு பாடுபட்டு வருகிறோம்? அந்தப் பலன்கள் நாம் செய்த சிறு காரியத்தையும் கெடுக்கவும், யாரோ சுயநலக்காரர் சுரண்டுவதற்கும்தானா பயன்படவேண்டும்? நமக்கு ஒருவர் உதவி செய்யாவிட்டாலும், நம் காரியம் கெட்டுப் போகாமல் இருக்கும்படியாகவாவது பார்த்துக் கொள்ள நமக்கு உரிமை இல்லையா, என்று கேட்கிறேன். இந்தப் பஜனைப் பாட்டும், இந்தப் புராண நாடகமும் இருக்கும்வரை நம் முட்டாள்தனமும் இழிவும், மானமற்ற கீழ்மையும், ஒழுக்க ஈனமும் ஒழிக்கப்பட முடியவே முடியாது என்பேன்.
வாலிபர் கடன்
“இந்த வருடம் ஏப்ரல் விடுமுறையில் நம் வாலிபர்களுக்கு நல்ல வேலை இருக்கிறது. 2, 3 செட்டுகளாகப் பிரிந்து தமிழ்நாட்டில் சுற்றி இந்தப் புராண இசை, நடிப்பு, இலக்கியம் ஆகியவைகளை மக்கள் வெறுக்கும்படிப் பிரசாரம் செய்ய வேண்டும். காலேஜ் மாணவர்கள் ஒரு கூட்டம் வருவதற்கு இசைந்துள்ளார்கள். இளம் பண்டிதர்கள் ஒரு கூட்டம் கிளம்பவேண்டும். இது தக்கதொரு சமயமாகும்.
வாலிபர்களே, இது உங்களால் தான் ஆக வேண்டும். உங்கள் நலனுக்கு ஆகத்தான் இந்த முயற்சி செய்கிறோம். என்காலம் கிட்ட நெருங்கி விட்டது; எதிர்காலப் பெரியார்கள் நீங்கள் தாம். நீங்கள் முயற்சி செய்யவில்லையானால், நாடு மறுபடியும் கீழே போய்விடும். அப்போது நீங்கள் உண்மைச் சூத்திரர்கள் மாத்திரமல்ல, உண்மை இயற்பகை நாயனார்களாக ஆகிவிடத் தக்கவர்களாவீர்கள். ஏன் என்பீர்கள்! கலைப் பிரசாரம், சைவப் பிரசாரம், இராமாயணப் பிரசாரம் பாருங்கள். “தேவ°தான பரிபாலன போர்டார்” பணம் கொடுத்து ஆட்களுக்குச் சம்பளம் ஏற்படுத்தி கிராமம் கிராமமாய்ப் புராணப் பிரசாரம் நடத்துவிக்கிறார்கள். சைவப் பண்டிதர்கள் ஊர் ஊராய்ச் சென்று மதப் பிரசாரம் செய்கிறார்கள். இவை போதாதென்று நம் பெரும் பிரபுக்கள், கலைவாணர்கள், பண்டிதர்கள், அறிஞர்கள் பஜனை இசைப் பிரசாரமும், புராண நாடகப் பிரசாரமும் செய்கிறார்கள். இப்படியே விட்டு விட்டால், இது எங்குப்போய் முடியும் தெரியுமா?
“எனவே, உங்கள் பங்கு என்ன? இந்தச் சமயத்தில் சும்மா இருக்க, வேடிக்கை பார்க்க உங்களுக்கு மனம் வருகிறதா? இப்போது சும்மா இருந்து விட்டுப் பின்னால் நீங்கள் வாழ்ந்து தான் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் சரீரம் பெருத்தால் போதுமா? உங்கள் தனிப்பட்ட வாழ்வு, வாயில் சீட்டி அடித்துக்கொண்டு கைப்பிரம்பைச் சுழற்றிக் கொண்டு உல்லாச நடை நடக்கும்படியாக இருந்தால் போதுமா? நாம் இருக்கும் நிலையை நிர்வாணமான கண்ணைக்கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள்; அப்பொழுது தெரியும், உங்கள் உடைமை என்ன என்பது! வாலிபர்களே, இன்னமும் சில நாள் நான் வேலை செய்ய உற்சாகத்தைக் கொடுக்கிறீர்களா? அல்லது, இந்த அக்கிரமங்களைப் பார்த்து மனமுடைந்து உட்காரச் செய்கிறீர்களா? என முயற்சி, என் உற்சாகம் ஏன்? என் வெற்றிகூட உங்கள் கையில் இருக்கின்றன. இதுவரையிலும்கூட உங்கள் கையில்தான் இருந்து வந்தன. என்ன சொல்லுகிறீர்கள்?
கலை வளர்ச்சி
29-1-44 “குடி அரசு” தலையங்கம்)
தமிழ் மக்களுக்குக் கலை வளர்ச்சியைப் பற்றிய கவலை பண்டிதர்களைத் தவிர, மற்ற கலை உணர்ச்சியே இல்லாத பொது மக்களுக்கும், கலை என்றால் என்ன என்று அறிந்திராத செல்வச் சீமானக்ளுக்கும், கலை இன்னது என்றே உணர்ந்திராமல் கலையின் பேரால் வயிற்றுப்பாட்டுத் தொழில் நடத்தின தொழிலாளிகளுக்கும் இன்று திடீரென்று ஏற்பட்டு, கலை வளர்ப்பு முயற்சியில் இறங்கத் தோன்றின காரணம் என்ன என்பதனை முதலில் யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம். அதாவது இந்தியின் ஆதிக்கத்தை ஒழிக்க மக்கள் ‘தமிழ், தமிழ்’ என்று செய்த தமிழ்க் கிளர்ச்சியேயாகும்.
தமிழ்நாட்டில் ஆரியர் ஆதிக்கம் பெற்று எல்லாத் துறைகளையும் தம் வயப்படுத்திக் கொண்டு தங்கள் இன நலத்துக்கும் சுயநலத்துக்கும் ஏற்றவண்ணம் அவைகளைப் பெருக்கிக் கொண்டார்கள். மேலும், அவற்றின் மூலமே தமிழர் செல்வத்தைக் கொள்ளை கொண்டு வாழ்வதல்லாமல் சமுதாயம், சமயம் ஆகிய துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தையும், தமிழர்களுடைய இழிவையும், அடிமைத்தனத்தையும் பெருக்க முயற்சிக்கிறார்கள். இவை சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழர்களுக்குத் தோன்றி அவர்கள் ஒவ்வொரு துறையிலும் உள்புகுந்து தடவிப் பார்த்து உள் இரகசியங்களை வெளிப்படுத்தியதன் பயனாகவே கலை, இன, மொழி முதலிய இன்றையக் கிளர்ச்சிகள் தோன்ற வேண்டியதாயிற்று. இக்கிளர்ச்சிகளுக்குச் செல்வாக்கு ஏற்பட்டவுடன் பண்டிதர்கள், கலைத்தொழில் வாழ்வுக்காரர்கள், பிரபுக்கள் முதலியவர்கள் இவற்றில் கவனம் செலுத்திப் பயனும், பொது நலத்தொண்டும் புகழும் பெற முயலவேண்டியவர்களானார்கள். இது மிக்க நியாயமும், பாராட்டத்தக்க காரியமும் ஆகும் என்பதில் எள்ளளவும் ஆட்சேபணை இல்லை.
இசைக் கலை
ஆனால், இந்த முயற்சியினால் இம்மாதிரியான கிளர்ச்சி தோன்ற வேண்டிய உட்கருத்து என்ன இருந்ததோ அதற்கு அனுகூலம் ஏற்பட வேண்டாமா என்றும், அனுகூலம் ஏற்படாவிட்டாலும், கேடாவது ஏற்படாமல் இருக்க வேண்டாமா என்றும் கேட்கிறோம். உதாரணமாக “இசை (சங்கீத)க் கலைக்கு மொழி முக்கியமானது குரல் இனிமை, ஒலி இனிமை, தாள இனிமைதான் முக்கியமானது, மொழி இனிமை முக்கியமன்று” என்று இருக்குமேயானால் நமக்கு இந்த இசைக்கலை வளர்ச்சி முயற்சியில் இன்று கலந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் இசையில் மொழி இனிமையே முக்கியமானது. அம்மொழி தமிழ் மொழியாய் இருக்கவேண்டும் என்று நாம் சொல்லுவதானால், அம்மொழிக்குப் பொருள் வேண்டாமா?
அப்பொருளுக்குப் பலன் வேண்டாமா? அப்பலன் நாம் செய்யும் கிளர்ச்சியின் குறிக்கோளுக்கு ஏற்றதாக நலந்தரத் தக்கதாக இருக்க வேண்டாமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுவதாய் வாசகர்களை வேண்டுகிறோம்.
உதாரணமாகச் சென்னைத் தமிழ் இசை மாநாட்டில், இசைவாணர் தியாகராஜ பாகவதர் பாடினார். அவற்றுள் மாதிரிக்கு இரண்டு பாட்டுகளின் தன்மையைப் பாருங்கள்.
ஒரு பாட்டு :
(ராகம் ஷண்முகப்பிரியா)
பல்லவி
‘பார்வதி நாயகனே பரமசிவா கருணாகர சம்போ
அனுபல்லவி
சர்வ பௌமனே சங்கரனே கைலாசனே சந்திரசேகரா’
என்பதாகும்;
மற்றொரு பாட்டு :
(ராகம் : லலிதாங்கி)
பல்லவி
‘ஸ்ரீ ஜகதாம்பிகையே தீனதயாபரி சங்கரி’
அனுபல்லவி
‘ஓ ஜனநி நீயே அபயம் சரணுள் உபய சரணம்’, என்பதாகும்.
இப்படியேதான் அங்கு நடந்த 100-க்கு 97 மற்று பாட்டுகளும் இருந்தன. இந்தப் பாட்டுகளைத் தெலுங்கிலோ, சம°கிருதத்திலோ, இந்தியிலோ, ஜப்பான், ஜெர்மனி மொழியிலோ பாடி இருந்தால், என்ன குடி முழுகிப்போய் இருக்கும்?
இந்த மாதிரிப் பாட்டுகள் பாடச் செய்வதற்கு ஆகவா இரு கோடீசுவரர்கள் கூடி உலகத்தைத் திரட்டிப் பல பதினாயிரக்கணக்கான ரூபாய்கள், பல அறிஞர்களின் அருமையான நேரங்கள், ஊக்கங்கள், செலவழித்து என்றும் கண்டிராத ஓர் உயர் திருவிழா இராப் பத்து பகல் பத்துப் போல் நடத்துவது? என்பதையே யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
இதுதான் தமிழிசைக் கிளர்ச்சி என்றால், இதற்கு பார்ப்பனர்களின் (ஐகோர்ட் ஜட்ஜுகள், ஐ.சி. எ°. கலெக்டர்கள் முதல்) இத்தகை “பெரியவர்கள்” விரோதம் தான் இப்பெரியோர்களுக்கும், தமிழிசை கிளர்ச்சி இயக்கத்திற்கும் எதற்கு ஏற்படவேண்டும், என்று யோசித்தால் இது ஒரு பைத்தியக்காரத் தனமான வேலை என்றே தோன்றும்.
நாடகக் கலை
இசைக் கிளர்ச்சியின் தன்மை இப்படி இருக்க, இனி, நாடக கலையைப் பற்றிச் சிறிது சிந்திப்போம். நாடகக் கலை என்றால் என்ன? “ஆட்டமும் பாட்டும் இராசபாவமும் சுவையும்” என்று மாத்திரம் முடியுமானால், மொழிக் கிளர்ச்சியின் நிழலில் இதைப் புகுத்த வேண்டிய அவசியமே இல்லை. மொழிக் கிளர்ச்சியென்பது மொழியினால் மொழியாளர்களது நற்பழக்கம், வழக்கம், அவர்களது அறிவு மேன்மை, விடுதலை, முற்போக்கு, சுயமரியாதை முதலிய காரியங்களுக்கும் நாடகக் கலையில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அவர்களது மானத்திற்கும், சுதந்திரத்துக்கும் ஏற்பட்டிருந்துவரும் கேடுகள் நீங்குவதற்கும், மொழியைப் பயன்படுத்தவும், அதற்கேற்ற அதற்குப் பயன்படக்கூடிய மொழியை வளர்க்கவுமேயாகும்.
அதைவிட்டு ஒருவன் நம்மை வடமொழியில் இழிவுபடுத்தினால் அல்லது அதற்காக வடமொழியை உபயோகப்படுத்திக் கொண்டால், ‘நீ இழிவுபடுத்துவதைப் பற்றியோ எங்களை அடிமைப்படுத்தி மடையர்கள், இழிமக்கள் அடிமைகொண்டிருப்பதைப் பற்றியோ கவலை இல்லை. ஆனால் அவற்றை கொண்டிருப்பதைப் பற்றியோ கவலை இல்லை. ஆனால் அவற்றை எங்கள் மொழியில் செய்’ என்று சொல்லி அதை அவன் கேட்காமல் போனதன் பின், அவற்றை நாமே நமது மொழியில் செய்துகொண்டோமேயானால் அதற்கு என்ன பெயர் இடுவது, என்பது நமக்கு விளங்கவில்லை.
ஆகையால், இம்மாதிரி நமக்குக் கேடான கருத்துகள் கொண்ட நாடகம், சினிமா ஆகியவைகளை வெறுக்கவேண்டும், அழிக்க வேண்டுமென்பதும், அந்த மாதிரி மக்களுக்கு எந்த வழியிலாவது புத்தி புகட்டி, அவர்களை வேறுவழியில் வயிறு வளர்க்கச் செய்யவேண்டும் என்பதுமே கலை வளர்ச்சியாளர்களின் முக்கிய கடமையாகும்.
அப்படி “குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்தது” என்பதுபோல் நாட்டில் இன்று ஒரு சிலர் தமிழர் சமூகத் துரோகமான முட்டாள்தனமான காரியங்களைச் செய்து மக்களைப் பாழாக்கி பணம் சம்பாதித்ததுமல்லாமல் இதற்காக - இந்தப் பிழைப்பை வளர்ப்பதற்காக ஒரு கலை வளர்ச்சி மாநாடா என்று நினைத்ததால், யாருக்குத்தான் இரத்தம் குமுறாமல் இருக்கும்?
நாடகக் கலையைப் பற்றிப் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் இன்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாடகத்தில் தலைமை வகித்தபோது, தமிழ் மக்களுக்குக் கொடுத்த ஓர் எச்சரிக்கைப் பேச்சைக் கீழே குறிப்பிட்டு இதை முடிக்கின்றோம்.
அதாவது,
“ஆரியப் புராணங்களில், அநேகம் முத்தமிழ்க் கலை இலக்கியம் ஆகியவைகளுக்குள் புகுந்து நமக்குச் செய்திருக்கும் கேட்டை ஒழிக்க.... மானத்தில் கவலையுள்ள நாம் எதைப் பலி கொடுத்தாவது இந்த நிலையை மாற்றியாக வேண்டும். அடியோடு ஒழித்தும் ஆக வேண்டும்.
ஏனெனில், இப்படிப்பட்ட முன்னேற்றமான காலத்திலும் கூடத் தமிழர்கள் மனித்தன்மை, பெறாததற்கும், அதைப்பற்றிச் சரியான கவலை கொள்ளாததற்கும் இந்தப் புராண இதிகாசக் கதைகளின் தத்துவர்கள் நமது கலைகளுக்குள் வந்து புகுந்து கொண்டிருக்கும் சேதிகளை அறியாத மூடநம்பிக்கையே முதற்காரணம்.
கலையின் மூலம் புகுத்தப்பட்ட இந்த மூட நம்பிக்கைகளேதான் தமிழர்களாகிய நமக்கு மதமாகவும், பக்தியாகவும், கடவுளாகவும் இருப்பதோடு மாத்திரமல்லாமல், இவைகளே கலையாகவும், நாடகமாகவும், சங்கீதமாகவும், சினிமாவாகவும், இலக்கியங்களாகவும், மக்களை மேன்மையாகவும் கீழ்மையாகவும் கருதவும், வாழ்க்கை நடப்பதற்கு நீதியாகவும், உபமான உபமேயமாக எடுத்துச் சொல்லுவதற்கு ஆதாரமாகவும் இருக்கின்றன.
அன்றியும் அறிவாளிகள், கவிகள், பண்டிதர்கள், மேதாவிகள், மகாத்மாக்கள், மகான்கள் என்பவர்களுக்கும் அவர்களது வாழ்வுக்கும், மேன்மைக்கும், விளம்பரத்துக்கும் மூலப்பொருள் பொக்கிஷங் களாகவும் இவைகளே இருக்கின்றன.
ஆதலால் மொழி, சமுதாயம் ஆகிய துறைகளிலும் அறிவு, கலை, இலக்கியம் சமயம் முதலாகிய துறைகளிலும் நம் மக்களுக்கு இன்று இருந்துவரும் இழிவுகள் ஒழிந்து மேன்மைகள் ஏற்பட வேண்டும் என்று உண்மையாய்க் கருதுகிறவர்கள் இதுபோன்ற பெருத்ததொரு புரட்சிகரமான முயற்சிகள் செய்ய வேண்டும்.
உண்மையாகச் சொல்லுகிறேன், வடமொழி சா°திர புராண இதிகாசங்கள் (தமிழர்களாலேயே ஆனவைகளானாலும்) அவை எந்த ரூபத்தில் நுழைக்கப்பட்டு இருந்தாலும், அல்லது தானாகவே நுழைந்திருந்தாலும் அவையாவும் அடியோடு ஒழிக்கப்பட்டால் ஒழிய, தமிழன் மனித உரிமையோடும், மானத்தோடும் வாழ்ந்து சமநிலை அடைய முடியவே முடியாது என்பதை உணருங்கள்.
.......மற்றும் அவைகள் வடமொழியில் இருப்பதைவிடத் தமிழில் இருப்பவைகளே நமக்கு மிகுதியும் கேடு செய்யக் கூடியவையாகும். அன்றியும் அவை வெறும் கதை, காவியம், புராணம் ஆகிய உருவில் இருப்பவைகளைவிடக் கலை உருவில் இருப்பதும், இலக்கியம், நாடகம், இசை (சங்கீதம்) ஆகியவற்றின் உருவில் இருப்பதும் மிகமிகக் கேடு செய்பவையாகும் என்பதே எனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டிய முடிந்த முடிவாகும்.
......எப்படியாவது அந்தப் புராண, இதிகாச, தேவாரப் பிரபந்தம் ஆகியவை கூறும் இராமன், கிருஷ்ணன், சிவன், சுப்பிரமணியன், ஷண்முகன், காளி, கௌரி முதலிய கடவுள்களையும் அவர்களைப்பற்றிய கலை, இலக்கியம், நாடகம், சினிமா, சங்கீதம், பஜனைப் பாட்டுகள் முதலானவைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே நமது முக்கியமும் முதன்மையும் ஆன கடமையாகும் என்று உறுதி கொள்ளுங்கள்.
இக்காரியங்களில் சமய, புராண, இதிகாசப் பண்டிதர்களையும், சமயாச்சாரிகளையும், கலைவாணர்களையும் துச்சமாகக் கருதுங்கள்.
உங்கள் மனோ வேகம் கொண்ட மட்டும் அவர்களை வெறுத்துத் தள்ளுங்கள்.
இவர்களை, ஆரியர்களைவிட மோசமான உங்கள் விரோதிகளாகக் கருதுங்கள்.”
என்று அந்த காலத்திலேயே பெரியார் பேசியிருப்பதை நினைவு கொள்ள வேண்டுகிறோம்; இப்போதாவது உங்கள் கடமை என்ன என்பதை உணருங்கள்.
* An Atlas of Indian History என்னும் பூகோளப் பாடப் புத்தகம்
* Indian Historical Readers என்னும் புத்தகம்
* இந்துதேச சரித்திரப் பாட புத்தகங்கள் 5, 6-அய் ஆதாரமாகக் காட்டினார்.
நூல் :
தமிழர்
தமிழ்நாடு
தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக