11-1-1942 ஞாயிற்றுக்கிழமை
திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள்
செய்த பிரசங்கத்தின் சாராம்சம்
தலைவர் அவர்களே! தோழர்களே!
இன்று இங்குத் “தமிழர்” என்பது பற்றிப் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நன்னெறிக் கழகத்தில் வகுப்பு சம்பந்தமாகவும், அரசியல் சம்பந்தமாகவும் பேசக்கூடாது என்ற நிபந்தனை இருப்பதாகத் தலைவரும், காரியதரிசியும் தெரிவித்தார்கள். வகுப்புப் பேச்சும், அரசியல் பேச்சும் அவ்வளவு கெட்டுப்போச்சு என்று அவர்கள் கருதி இருக்கிறார்களோ அல்லது இது இரண்டும் நன்னெறிக்குச் சம்பந்தமில்லாதது என்று கருதி இருக்கின்றார்களோ தெரியவில்லை. அன்றியும், வகுப்புப்பேச்சும், அரசியல் பேச்சும் இல்லாததால்தான் இந்த நன்னெறிக் கழகம் இந்தப் பதினோரு வருஷங்களாக உயிர் வைத்துக்கொண்டு இருக்கிறதோ என்றும் தெரியவில்லை.
ஆனால், இன்று நாட்டில் எங்குப் பார்த்தாலும் வகுப்புப் பேச்சாகவும் அரசியல் பேச்சாகவும்தான் இருக்கிறது. அதிலும் சமீபகாலம் தொட்டு அரசியலைவிட வகுப்புப் பேச்சே எங்கும் தீவிரமாய் நடைபெறுகிறது. நானோ வகுப்புப் பேச்சிலும், அரசியல் பேச்சிலும் பெரிதும் ஈடுபட்டிருப்பவன். இந்நிலையில் நான் இந்த நிபந்தனையில் சொற்பொழிவாற்றுவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்றாலும், நான் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்ட விஷயமும், நான் ஒப்புக்கொண்ட விஷயமும் “தமிழர்கள்” என்பதுபற்றி ஆதலால், அந்தத் தலைப்பே வகுப்புச் சம்பந்தமான தாயிருக்கிறது என்பதோடு, இப்போது ஆண்டு விழாத் துவக்கத்தில், தமிழர் வணக்கம் கூறிய தோழர், “ஆரியம்போல், உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீர் இளமைத் திறம் வியந்து” என்று கூறினார்.
அன்றியும், காரியதரிசி அவர்கள் படித்த வருடாந்திர அறிக்கையில், தமிழர்கள், தமிழ்மொழி, தமிழர் கலை, தமிழ் இசை, தமிழ் வாழ்க்கை முதலியவைகளைப் பற்றி இச்சங்கத்தில் சுமார் பத்து, இருபது சொற்பொழிவு இந்த ஒரு வருஷத்தில் பல அறிஞர்களால் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிந்தது.
தலைவர் அவர்களும், நான் “தமிழர்கள்” என்பதுபற்றிப் பேசுவேன் என்று சொன்னார். ஆகவே இவற்றிலிருந்து தமிழர், ஆரியர், மற்றவர் அவர்களது தன்மை என்று பேசுவது வகுப்புச் சம்பந்தமான பேச்சு அல்ல என்பதாகத் தெரிகிறது.
குறிப்பிட்ட விஷயத்தைப்ற்றி எனக்குப்பட்டதைச் சில சொல்லுகிறேன்.
“திரு இடம்” - “திராவிட”மாக மாறியது!
தோழர்களே! நான் “தமிழர்கள்” என்பதுபற்றிப் பேசுவது, திராவிடர்கள் என்பது பற்றியேயாகும். திராவிடம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான்! இது சரித்திர ஆராய்ச்சிக்காரர் முடிவாகும். திராவிடம் என்கின்ற பேச்சே தமிழ் வார்த்தையாகும். எப்படி எனில், திரு இடம் என்பதுதான் திருவிடமாகி, திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் திரு என்கின்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக ஒவ்வொன்றுக்கும் உபயோகிப்பது வழக்கம்.
வடவர்கள் எப்படி ஸ்ரீ என்பதை ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் உபயோகிக்கிறார்களோ அதுபோல் தென்னவர்கள் திரு என்பதை உபயோகிக்கிறார்கள். திருப்பதியைத் திருமலை என்கிறோம். ஆரூரைத் திருவாரூர் என்கிறோம்; ஐயாறை திருவையாறு என்கிறோம். அதுபோல் தமிழர் வாழ் இடம் முழுமையும் திருஇடம் - திருவிடம் என்கிறோம். இது வடமொழி உச்சரிப்பால் திராவிடமாகிவிட்டது. தமிழ் என்றால் இனிமை; இனிமைக்கு மேன்மை தருவது இயற்கையல்லவா! ஆதலால், நான் யோசித்தவரை இதைத்தவிர திராவிடம் என்கின்ற வார்த்தைக்குக் காரணம் எனக்குத் தோன்றவில்லை.
நமது பண்டிதர்கள், “தமிழ் என்பது த்ரமிளமாகி, திரமிழமாகி, திராவிடமாகி விட்டது” என்று சொல்லுவதுண்டு. ஆனால், ஒரு வார்த்தையானது 4, 5 தடவை மாறி இருக்கும் என்பதைவிட, சொல்கிறபடி ஒரே மாற்றம் தான் ஆகியிருக்கலாம் என்பது மிகப் பொருத்தமாக இல்லையா? அது எப்படி இருந்தாலும் சரி திராவிட நாடு, திராவிட மொழி, திராவிட மக்கள் என்பவற்றைத் தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்மக்கள் என்ற கருத்தில்தான் வழங்குகிறார்கள். ஆதலால், திராவிடர் என்பவர் தமிழரே ஆவார்கள். அதனாலேயே திராவிடர்கள் என்று பேசுகிறேன்.
திராவிட நாட்டின் எல்லை - சரித்திரம் கூறும் உண்மை
திராவிடர் என்பது நாட்டைப் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும். ஒவ்வொரு மக்களுக்கும் நாட்டைப் பொறுத்தும் மொழியைப் பொறுத்தும்தான் பெயர் வருகிறது. மலையாளிகளுக்கு மலைப்பாங்கைப் பொறுத்தே அந்தப் பெயர் வந்தது. இந்த முறையில் பார்த்தோமானால், திராவிட நாடு, தமிழ்நாடு என்பது மேன்மையையும், இனிமையையும் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும். ஆனால், நம் திராவிட நாடானது நாம் இன்று கூறும் எல்லையை மாத்திரம் கொண்டதல்ல! இட்லர் சொல்லுகிறபடி நாட்டு எல்லை, கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதல்ல, மக்களால் சிருஷ்டிக்கப்படுவது, திராவிட மக்கள் ஒரு காலத்தில், திராவிட நாட்டு விஸ்தீரணமாக இன்றைய இந்தியா முழுவதையும் கொண்டு இருந்தார்கள். திராவிட நாட்டுக்கு வட எல்லை இமயமலை! மற்ற மூன்று புறத்து எல்லை பெரிதும் சமுத்திரம்!! இப்படி இருந்ததற்கு ஆதாரம், *இதோ பாருங்கள், இந்த இந்திய சரித்திர பூகோள படப்புத்தகத்தில்!! இன்றுள்ள இந்தியா படத்தைப் போட்டு இதற்குத் திராவிடம் என்ற பெயர் கொடுத்திருக்கிறார்கள்!! இது கிறிஸ்து பிறப்பதற்கு 2,500 வருஷங்களுக்கு முன் வரையில் இருந்து வந்த பெயராகும்.
சரித்திரக்காரர்கள் இன்றைக்கு 8,000 வருடத்துக் காலம்வரைதான் சரித்திரம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதில் கிறிஸ்து பிறப்பதற்கு 2000 வருடத்துக்கு முன் முதல் கி.மு. 6000 வருடம்வரை கண்டுபிடித்த சரித்திரப்படி, “இந்தியா” திராவிட நாடாக இருந்திருக்கிறது. இதில் இருந்த மக்கள் திராவிடர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதே ஆராச்சியாளர் குறிப்புப் பாருங்கள், மற்றும் ஹரப்பா மகஞ்சோதாரோ முதலிய இடங்களில் ஏற்பட்ட, புதிய கண்டு பிடிப்புகள் மூலமும், இந்தியா முழுவதும் திராவிட எல்லைக்கு உள்பட்ட விஸ்தீரணம் என்பது கல்லுப்போல் உறுதியாகிவிட்டது.
“திராவிடம்” அழிந்த அநீதி
இப்படிப்பட்ட இந்தத் திராவிடம் அன்னியர்கள் பிரவேசத்தால், சிறிது சிறிதாக மாற்றமடைந்து குறுகி வந்திருக்கிறது. அதுவும் இதோ இந்தச் சரித்திரம் பார்த்தால் தெரியும்.
முதலில் திராவிட நாட்டில் புகுந்த அன்னியர் ஆரியர்களே ஆவார்கள். இதை நான் என் உத்தேசப்படிச் சொல்லவில்லை. இன்று எல்லோராலும் ஒப்புக் கொண்டதும், ஆரியர்களாலேயே எழுதப்பட்டதுமான அனேக ஆதாரங்களைக் கொண்டே சொல்லுகிறேன்.
சரித்திரம்
நீங்கள், இன்று உலக சரித்திரம் அல்லது இந்திய தேச சரித்திரம் என்கின்ற எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது அய்ரோப்பியன் எழுதியிருந்தாலும் சரி, இந்தியன் எழுதியிருந்தாலும் சரி, அல்லது ஆரியன் எழுதியிருந்தாலும் சரி, திராவிடன் எழுதியிருந்தாலும் சரி, *இதோ உங்கள் முன் இந்த 5, 6 சரித்திர புத்தகங்களை வைக்கிறேன்; இவை அய்ரோப்பாவிலும், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பிரசுரிக்கப்பட்ட வைகளாகும். இவற்றுள் பாதிக்குமேல் ஆரியர்களே எழுதி, சர்க்கார் ஒப்புக்கொண்டு, ஆரியர்கள் பெரிதும் கொண்ட “டெக்ஸ்ட்புக் கமிட்டி” யினரால் அனுமதிக்கப்பட்டு 1-ஆவது வகுப்பு முதல் எம்.ஏ. வகுப்புவரை பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாட புத்தகங்களாக வைக்கப்பட்டவை களாகும்.
இவற்றில் எதை எடுத்துக் கொண்டாலும் சரி, இந்தியா என்றால், முதல் பக்கத்தில் அல்லது முதல் பாகத்தில் “திராவிடர்” என்றும், 2-ஆவது பக்கத்தில் அல்லது 2-ஆவது பாகத்தில் “ஆரியர்” என்றும் எழுதியிருப்பதைப் பாருங்கள். இது எதற்காக எழுதப்படுகிறது? ஒரு நாட்டுச் சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், அதன் பூர்வ குடிகள்தான் முதலில் குறிக்கப்படுவார்கள்.
எனவே, இந்தியா என்பது முதலில் திராவிடமாய் இருந்தது. அதில் பூர்வ குடிகள் என்பவர்கள் திராவிடர்களாய் இருந்தார்கள் என்பதைக் குறிக்கின்றது.
இந்தியா என்கின்ற பெயர்
பிறகு இதற்கு இந்தியா என்றும், இந்தியர்கள் என்றும் பெயர் எப்படி வந்தது? என்பதைப் பாருங்கள்.
இந்தச் சரித்திரத்தின் அடுத்த பக்கத்தில் பாருங்கள்; “ஆரியர்களும் அன்னியர்களும் திராவிடத்திற்கு ஆப்கானிஸ்தானத்தின் வழியாகவும், பிரம்மபுத்திரா நதியைக் கடந்தும் வந்தார்கள்” என்றும், அதனால் அவர்கள் சிந்தியர்கள் என்று அழைக்கப்பட்டுப் பிறகு, அது இந்தியர்கள் என்று ஆகிவிட்டதென்றும், அதிலிருந்து அவர்கள் இருக்கும் நாடு இந்தியா என்று சொல்லப்பட்டு விட்டதென்றும், இந்தப் பெயர்கள் ஆரியரல்லாதவர்களால் கொடுக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.
“பிறகு ஆரியர்கள், திராவிடர்களைப் பலவிதத்தில் தொல்லை கொடுத்து, அவர்களை வடக்கே இருந்து, தெற்குப் பக்கமாகத் துரத்தினார்கள்” என்றும், திராவிடத்தின் வடபாகம் எல்லாம் ஆரியர்கள் குடியேறிவிட்டார்கள் என்றும், அங்கு எஞ்சியிருந்த திராவிடர்களையும், ஆரியர்களுக்குக் கட்டுப்படும்படி செய்து விட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் பெரிதும் இந்திய சரித்திரமாக கலாசாலைப் பாடப் புத்தகமாக இருக்கின்ற புத்தகங்களேயாகும்.
சைவக் கடவுள்வெற்றி கொண்டதாம்!!
இதோ, இந்த இந்திய சரித்திரப் புத்தகத்தைப் பாருங்கள், “முதல் போர்” என்ற தலைப்பில், “கந்தபுராணம் ஆரியர் திராவிடர் சண்டையைச் சித்தரித்து எழுதிய கதையாகும்” என்றும், “ஆரியர் திராவிடர் முதல் போரானது” சிவனார் என்கின்ற இமயமலையில் இருந்த ஒருவர், தனது மகன் சுப்பிரமணியன் என்பவனை இலங்கைக்கு நெடுந்தூரத்தில் இருந்த ஒரு தீவில் இருந்த ஒரு சூரன் என்பவனுடனும், அவன் தம்பி தாரகன் என்பவனோடும் சண்டை செய்யச் செய்தார் என்றும், “சுப்பிரமணியன் வேல் முதலிய ஆயுதங்களால் வெற்றிபெற்றான்” என்றும் எழுதி இருப்பதைப் பாருங்கள்.
வைணவக் கடவுள் வெற்றி கொண்டதாம்!
அதற்கு அடுத்தாற்போல் இராமாயணப் போரைப்பற்றியும் இதே மாதிரி எழுதியிருக்கிறது. ராமன் என்பவன் ராவணன் என்பவனை வெற்றி கொண்டானாம். இவற்றால் கடைசியாகத் தென்பாகந்தான் மீதியாகித் தாங்கள் திராவிடரென்றும், “”தமிழரென்றும் தங்கள் நாடு திராவிட நாடென்றும் அறிந்த மக்கள் இன்னமும் சிலர் இருக்கிறார்கள்; இந்தச் சிறுபாகம்தான் இன்று திராவிட நாட்டையும், திராவிட மக்களையும் நினைவூட்ட அடையாளமாக இருக்கிறது. ஆனால், நாம்தான், நம்மைப் பற்றிய சரித்திரமும், யோக்கியதையும் அறியாமல் நாம் எதிரிகளைக் குருமார்களாகவும், தலைவர்களாகவும், கடவுள்களாகவும் கருதிக் கொண்டு, நமக்கும் நம் நாட்டுக்கும் எதிரிகளாயிருந்தவர்கள் இருப்பவர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஈனத்தனமாய் நடந்துகொண்டு வருகிறோம். அதாவது நம்நாட்டுக்குப் பெயர் பாரதநாடு என்றும், நமக்குப் பெயர் பாரத மக்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். இது நம் எதிரிகள் வைத்துக்கொண்ட பெயராகும்.
இப்படிப்பட்ட மூடமக்கள், உலகில் வேறு எங்கும் இருக்கமாட்டார்கள். இன்று கூட இவைகளையெல்லாம் படித்தும் தெரிந்தும் உள்ள மக்கள் ஆகிய தமிழர்கள் தங்கள் நாட்டைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ மொழியைப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ போதிய கவலை இல்லாமல் பெரிய தேசாபிமானிகள் போல் நடக்கிறார்கள்.
மனிதர்களுக்கு முன்னேற்ற உணர்ச்சி, சுதந்திர உணர்ச்சி வேண்டுமானால், அவர்களுக்குத் தங்கள் நாடு, சமுதாயம், மொழி, கலை முதலிய உணர்ச்சி இருந்தால்தான் ஏற்படும். அவை ஒன்றும் தமிழனுக்கு இல்லை. தமிழனது நாடு இன்று தமிழ்நாடு ஆகும். தமிழனது சமுதாயம், தமிழர் சமுதாயமாகும். தமிழனது மொழி தமிழாகும். அப்படி இருக்கத் தமிழ்நாடு என்பது இன்று சித்திரத்தில் இல்லாமல் செய்யப்பட்டாய் விட்டது. தமிழ் நாளுக்கு நாள் மறைந்துகொண்டே வருகிறது. தமிழர் சமுதாயமோ அடியோடு ஆரியமயமாகி வருகிறது.
“பாரதநாடு” என்றோம்!
“மரபு” சிறப்பை மறந்தோம்!!
இந்நிலையில் தமிழர் கதி எப்படி இருக்கிறது? என்று பாருங்கள், சமுதாயத்தில் தமிழன் சூத்திரனாக, வேசி மகனாக ஆகிவிட்டான். அது மாத்திரமல்லாமல் தமிழன் ஆரியனால் தீண்டப்படாதவனாக, நடத்தப்பட்டு வருகிறான்.
கோவில்களில், ஓட்டல்களில் தமிழனுக்கு சம உரிமை இல்லை. பல தமிழர்களுக்குப் பிரவேசமே இல்லை. இது எந்தத் தமிழனுக்குத் தெரியாது? எந்தத் தமிழனாவது இதைப்பற்றிக் கவனிக்கிறானா? என்று பாருங்கள். “பாரத நாடு சுயராஜ்யம் பெறவேண்டும். பாரத மக்கள் விடுதலை பெறவேண்டும்” என்று கூப்பாடு போடுகிறானே ஒழிய, தமிழன் மனிதனாக வாழ வேண்டாமா? மானத்தோடு வாழ வேண்டாமா? என்கின்ற கவலை இல்லவே இல்லை. தமிழ் மொழியை ஆரியர் தாழ்த்தி அழுத்திவிட்டார்கள். ஆனால் தமிழ்மொழி வல்லுநர்களில் பலர் ஆரியக் கூலிகளாக இருக்கிறார்கள்.
பாரதநாடு, பாரத மக்கள், பாரத பாஷை என்பதற்கும் தமிழருக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? எங்காவது சம்பந்த ஆதாரமிருக்கிறதா? தன்னைப்பற்றியோ தனது மரபைப்பற்றியோ, தனது மொழியைப் பற்றியோ, மானாபிமானத்தைப் பற்றியோ கவலை இல்லாத சமுதாயம் எப்படி முன்னுக்கு வரும்?
ஐரோப்பியனைப் பாருங்கள்!
ஆற்றல் உணர்ச்சி கொள்ளுங்கள்!
இந்தியா என்று பேசுகிறோம், இந்தியர் என்று பாடுபடுகிறோம். அய்ரோப்பியனைப் பாருங்கள். அய்ரோப்பாவைப் பற்றி எந்த ஐரோப்பியனுக்காவது கவலை இருக்கிறதா? ஜெர்மனியைப் பாருங்கள், ஆங்கிலேயரைப் பாருங்கள், மற்றும் ஐரோப்பிய சிறிய நாட்டாரையும் பாருங்கள். அவர்களில், எவன் வாயிலாவது ஐரோப்பா, ஐரோப்பியன் என்கின்ற பேச்சோ, உணர்ச்சியோ வந்ததாகக் காட்டுங்கள் பார்ப்போம்! ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு என்றுதான் நாட்டுப் பேச்சும், மொழிப் பேச்சும், மக்கள்பேச்சும் பேசுவார்கள். அந்த மாதிரி உணர்ச்சிதான் கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் அந்த நாடுகள் இவ்வளவு பிரசித்தமாகவும், இவ்வளவு மேன்மையாகவும் இருந்து வருகின்றன. அவர்கள் தங்கள் நாட்டில் சுதந்தரத்தோடு இருந்துகொண்டு நம்மை ஆட்கொள்ள ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டு மடிகிறார்கள். அப்படிப்பட்ட உணர்ச்சி இல்லாமல் இருந்தால், அவர்கள் நம்மைப்போல் மற்ற நாடுகளுக்குள் ஐக்கியப்பட்டு படத்தில்கூட உருவில்லாமல் போய்விட்டிருப்பார்கள்.
இன்று நடக்கும் பெரிய போர், எதற்காக நடக்கின்றது? தன் தன் நாட்டையும், சமுதாயத்தையும், மொழியையும் காப்பாற்றுவதற்கும் விஸ்தரிப்பதற்குமே ஒழிய வேறென்ன? ஐரோப்பாவைக் காப்பாற்றவா?
எனவே ஒரே மதம், ஒரே பழக்க வழக்க, நடை, உடை, பாவனை, உணவு உள்ள ஐரோப்பிய மக்கள், இன்று தங்கள் தங்கள் நாட்டின் மொழியின் பேரால், அடியோடு ஒழிந்து போனாலும் சரி என்று போராடித் தங்கள் நாட்டை சமுதாயத்தைக் காப்பாற்றவும், மேன்மைப்படுத்தவும் தங்களைச் சுரண்டுகிறவர்களையும், தங்களை அடக்கி ஒடுக்கி இழிவுபடுத்துகிறவர்களையும் ஒழிப்பதற்குப் போராடுகிறார்களே ஒழிய ஐரோப்பியனாயிற்றே, கிறிஸ்தவனாயிற்றே என்று ஐரோப்பியர் எந்த ஐரோப்பிய நாட்டாரிடமாவது இணங்கி இருக்கிறார்களா?
ஜெர்மனியர்களின் வீரத்துக்குக் காரணம், ஜெர்மனி என்கின்ற தேசிய மொழி உணர்ச்சியும், ஜெர்மனியர் என்கின்ற சமுதாய உணர்ச்சியும்தானே? தமிழனுக்கு எங்காவது அந்த உணர்ச்சி இருக்கின்றதா?
ஜெர்மனி என்றால் - ஜெர்மனி பாஷையைத் தவிர
வேறு என்ன அடையாளம்?
தமிழன் என்ன செய்கிறான்?
தமிழர் தமது ஆரிய எதிரிகளையும் தங்கள் சமுதாயத்தை அழித்து ஒழித்து ஈனப்படுத்தியவர்களையும் கோவில் கட்டிக் கடவுளாக வணங்குகிறார்கள்.
ஜெர்மனியன் தனது சமுதாயத்தை அடக்கி ஒடுக்கியவனை, உலகத்தில் இல்லாமல் செய்வது, அல்லது அடிமை கொள்ளுவது அல்லது தானாவது ஒழிந்துபோவது என்று போராட்டம் செய்கிறான். தமிழனை அன்னியன் செய்ததுபோல் ஜெர்மனியரை, ஐரோப்பியரில் யாரும் அப்படிச் செய்யவில்லை. ஆனால், அவனுக்கு வேண்டிய சவுகரியமில்லை என்றும், ஐரோப்பியரில், மற்றவர்களுக்கு உள்ள சுதந்தரம் தனக்கு இல்லை என்றும் கருதிக்கொண்டு அதற்காக இவ்வளவு செய்கிறான். ஆனால், தமிழன் தன் நாட்டிலே வந்து குடியேறின அன்னியனுக்கு உள்ள உரிமையும், சவுகரியமும் தனக்கு இல்லையே என்கின்ற ரோஷமும், மானமும் கூட இல்லாமல், எதிரிக்கு “அனுமாராக” இருக்கிறான்.
அன்னியன் சுரண்டிச் செல்லும் நாடு
“தற்குறி” தன்மை வாய்ந்த நாடு தமிழ்நாடு!
தமிழன், ஏன் சமுதாயத்தில் 4-ஆவது 5-ஆவது ஜாதியாக இருக்க வேண்டும்? தமிழ் மகள் ஏன் சூத்திரச்சியாய், தாசியாய், அன்னியனுக்கு வைப்பாட்டியாய் இருக்கவேண்டும்? தமிழன் ஏன் 100-க்கு 90 பேர் தற்குறிகளாக இருக்கவேண்டும்? தமிழன் ஏன் பியூன் உத்தியோகத்திலும், தெருக்கூட்டும் வேலையிலும், கக்கூசு எடுக்கும் வேலையிலும் 100-க்கு 100 பேர் தமிழர்களாகவே இருக்கவேண்டும்? தமிழ்நாட்டில் எல்லாச் செல்வங்களும் இருந்தும் தமிழன், ஏன் இந்தநாட்டில் பிழைப்பு இல்லாமல் வெளிநாட்டுக்குக் கூலிகளாகப் போகவேண்டும்? தமிழ்நாடு ஏன் மற்ற எல்லா நாட்டாலும் வந்து சுரண்டிக் கொண்டு போகும் கேள்வி கேட்பாரற்ற மடமக்கள் நாடாக இருக்கவேண்டும்?
இந்த நிலை உள்ள நாடு உலகத்தில் எங்காவது இருக்கிறதா? இந்தியாவில் எங்காவது இருக்கிறதா? தமிழர்களுக்கு இது தெரியவில்லை என்றால், தமிழ்த் “தேசிய” வாதிகளுக்கும் இது தெரியவில்லை என்றால், தமிழனுக்கு மானம், அறிவு, தேசாபிமானம் சமூகாபிமானம், மொழி அபிமானம் இருப்பதாக எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்?
கடவுள், மதம் என்று கருத்தை இழந்தோம்!!
எல்லாவற்றையும்விடக் கேவலமானது, தமிழனுடைய சமய அபிமானமும், கடவுள் அபிமானமுமேயாகும். தமிழனின் சமய அபிமானம், தமிழனை இழிவுபடுத்திய கதைகளே சமய வேதங்களாகும். தமிழ்ப் பண்டிதர்கள் வெட்கமில்லாமல் நாலாயிரப் பிரபந்தம், தேவாரம், கந்தபுராணம், ராமாயணம் முதலிய ஆரியர் - திராவிடர் போர்க் கதைகளைத் தமிழர் வேதங்கள், தமிழர் சமய ஆதாரங்கள் என்கிறார்கள். ஜெர்மனி யுத்தங்களையும், ஜெர்மனியன் இங்கிலாந்தை வெடிகுண்டு போட்டுச் சின்னாபின்னப்படுத்தியதையும், ஆங்கிலேயரையும் ஆங்கிலேயர் தலைவர்களையும் வைததையும் சரித்திரமாக எழுதி வைத்ததை, ஆங்கிலேயர் வேதமாகக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஹிட்லருக்குக் கோவில் கட்டி வணங்குவார்களா, நாயன்மார்களாகக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? ஆனால், தமிழர்கள் என்ன செய்கிறார்கள்? இன்று தமிழனுக்கு அப்படிப்பட்ட கதைகள், சரித்திரங்கள்தானே மத ஆதாரங்களாக இருக்கின்றன. அவற்றில் வந்தவர்கள்தானே கடவுள்களாக இருக்கின்றனர்? அல்லது ஒற்றர்கள் - அடிமைகள்தானே ஆழ்வார்களாக நாயன்மார்களாக இருக்கின்றார்கள்? இதுவா தமிழர் சமயப்பற்று - கடவுள்பற்று - இனப்பற்று - மொழிப்பற்று? மானப்பற்று?
இப்டிப்பட்ட கடவுள்களுக்குக் கோவில் கட்டினவர்கள் யார்? எல்லாம், தமிழர்கள்! அக்கோவில்கள், அதன் சித்திரங்கள், சிற்பங்கள், அதன் பூசை உற்சவங்கள் எல்லாம் ஆரியர்களுடைய கதைகளும், ஆரியர்களின் மேன்மைக்கு ஏற்றவைகளுமாய் இருப்பதல்லாமல் வேறு என்ன இருக்கிறது? இதற்காகச் செய்ப்பட்ட செலவுகளும், செய்யப்படுகிற செலவுகளும், தமிழனுடையதல்லாமல் வேறு யாருடையதாவது ஒரு காசு இருக்கிறதா? தமிழனை ஆரியன் குத்துகிறதும், வெட்டுகிறதும், காலில் மிதிக்கிறதுமான அந்தச் சித்திர உருவங்கள் தமிழ்க் கடவுள் உருவமாக வீரமாக வணங்கப்படுகின்றன.
தமிழர்
தமிழர் மதமானது, தமிழன் ஈன ஜாதி, தொடக்கூடாதவன் என்று செய்திருப்பதல்லாமல், வேறு என்ன செய்திருக்கிறது? தமிழன் இன்று வணங்கும் கடவுள்கள், தமிழனிடத்திலிருந்தே எல்லாச் செலவுகளையும், சவுகரியங்களையும் பெற்றுக்கொண்டு, தமிழன் உள்ளே வரக்கூடாது, கிட்ட வரக்கூடாது, பூசை செய்யக்கூடாது.
தமிழ்மொழியில் தோத்திரம் கூடாது என்று செய்திருக்கிறதல் லாமல் வேறு என்ன செய்திருக்கிறது? இவைகளை எல்லாம் தமிழ்மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டாமா? தமிழர் என்ற தலைப்பில் இதைத்தவிர வேறு என்ன பேசுவது, முந்தைய பெருமையை நினைக்காதே; இன்றைய இழிவைப்பார், என்ற முதுமொழியைக் கவனியுங்கள்.
தமிழனைத் தமிழனே இழிவுபடுத்துகிறான்!
சமுதாயத்தில் தமிழன் ஒரு வகுப்பாக இல்லையே, இதற்கு என்ன காரணம்? தமிழனே, தமிழனை இழிவுபடுத்துகிறான்; ஒருவர் தொட்டதை ஒருவர் சாப்பிடுவதில்லை; ஆசாரி வீட்டில் செட்டியார் சாப்பிடுவதில்லை; செட்டியார் வீட்டில் ஆசாரி சாப்பிடுவதில்லை, வாணியச் செட்டியார் வீட்டில் மேல்கண்ட மூவரும் சாப்பிடுவதில்லை. இவர்கள் நால்வர்களும் முதலியார், பிள்ளை, நாயக்கர் வீட்டில் சாப்பிடுவதில்லை. அவர்களும் இந்த நால்வர் வீட்டில் சாப்பிடுவதில்லை. அன்றியும் இவர்கள் இத்தனை பேரும் ஒருவருக்கொருவர் கீழ் ஜாதி - மேல் ஜாதி என்று பேசிக் கொள்ளப்படுகிறார்கள். தமிழர்களில் பாடுபடும் மக்கள் எல்லாம் கீழ் ஜாதியாக மதிக்கப்படுகிறார்கள். பழந்தமிழர்கள் பறையர், பள்ளர், சக்கிலியர், சண்டாளர்களாக இருக்கிறார்கள்.
இப்படி நூற்றுக்கணக்கான ஜாதியாய்த் தமிழர்கள் பிரிந்து ஒருவரை ஒருவர் இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே ஐரோப்பியனுக்கோ - ஆரியனுக்கோ - முஸ்லிமுக்கோ இருக்கும் சமுதாயப்பற்றும், ஒற்றுமையும் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இல்லை. இதை எல்லாம் தமிழர்கள் இன்று சிந்திக்க வேண்டாமா?
இழிநிலை போகவேண்டும்!
சிந்தனா சக்தி அடையவேண்டும்!!
உலக சரித்திரத்தில் முதன்மை ஸ்தானம் பெற்ற திராவிடமும், திராவிடர்களும், திராவிட மொழியும், திராவிட மானமும் இன்று எக்கதியில் இருக்கின்றன? இதற்கு என்ன காரணம்? என்பதை யோசிக்காவிட்டால் என்றைக்காவது திராவிடர் இன்றைய இழிநிலையில் இருந்து மாற்றமடைய முடியுமா? அதற்குத் தக்கபடி நடந்துகொள்ள வேண்டாமா? என்பவனவாகியவைகளைச் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொண்டு, காலம் அதிகமானபடியால், எனது சிற்றுரையை முடித்துக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: ஸ்டார் போட்டுள்ள இடங்களில் ‘இதோ பாருங்கள் என்று சொன்னதானது அநேக அறிஞர்களால் எழுதப்பட்ட பூகோளப் பாடப் புத்தகங்களையும், இந்துதேச சரித்திரப் பாடப் புத்தகங்களையும் ஆதாரங்களாக எடுத்து நேரில் காட்டிப் பேசினார் என்பது கருத்தாகும்.’
நூல் :
தமிழர்
தமிழ்நாடு
தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக