பக்கங்கள்

திங்கள், 22 ஜனவரி, 2018

மூத்த மொழி தமிழ்


டாக்டர் மு.வரதராசனார் அவர்கள், ‘மொழியியற் கட்டுரைகள்’ என்னும் நூலில், "இந்தி முதலிய வடநாட்டு மொழிகள் திராவிட மொழியைப் பின்பற்றி அமைந் திருக்கின்றன” என்றும், “இந்தி முதலிய மொழிகள் வட சொற்பெருக்கம் மிகவாக உடையனவேனும், அவற்றின் அமைப்புக்குக் காரணமான தாய்மொழி, திராவிடமொழியே என்பது நன்கு விளங்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் மு.வ. அவர்கள் ‘மொழிவரலாறு' என்னும் நூலில், ‘வடநாட்டில் பண்டைக் காலத்தில் மக்களின் மொழியாக வளர்ந்த பிராகிருதமொழிகளில், வடமொழிக் கூறுகள் தவிர, திராவிட மொழிக் கூறுகளும் இருந்தன’ என்றும், “ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்தபோது, திராவிட மொழிகளின் செல்வாக்கால், அவர்களின் மொழியில் மாறுதல்கள் பல ஏற்பட்டன என்னும் கொள்கை, மொழி நூலார் பலரும் உடன்பட்ட ஒரு கொள்கையாகும்” என்றும், “வட இந்தியாவில் வாழ்ந்த பழங்காலத்து மக்கள் வழங்கிய பிராகிருதம், சமத்கிருதம், பாலி போன்றவற்றில் திராவிடமொழிச் சொற்கள் பல கலந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம்” என்றும் கூறியுள்ளார்.

மொழிநூல் அறிஞர் அலெக்சாண்டர் கொந்தரத்தோவு என்பார், “உபெய்துமொழி, மெசபொடோமியா மொழி, ஏலம்மொழி, ஆத்திரேலியப் பழங்குடியினர் மொழி போன்றவைகள், திராவிட மொழியின் வேர்ச் சொற்கள் சிலவற்றைப் பெற்றிருக்கின்றன” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆராய்ச்சி அறிஞர் திரு ஞானகிரியார், ‘Latin words of Tamil origin’ ËL½‹ ‘Greek words of Tamil Origin’ 
என்ற நூலிலும் முறையே இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ் மூலத்திலிருந்துதான் பிறந்தவை என்பதற்கான காரணகாரிய விளக்கங்களைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

‘காசுசியன் பல்கலைக்கழகத்தைச்’ சேர்ந்த பேராசிரியர் சுசுமு ஓனோ என்னும் அறிஞரும், தென்கொரியாவின் ‘கேமிப் பல்கலைக்கழகத்தைச்’ சேர்ந்த பேராசிரியர் மத்துபாரா என்னும் அறிஞரும் சப்பானிய மொழித் தோற்றத்திற்குத் திராவிட மொழிகள் அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும் என்னும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள், திராவிட-சப்பானிய மொழிகளுக் கிடையே அமைந்துள்ள இலக்கண ஒற்றுமை யையும், உடலுறுப்புப் பெயர்கள், எண்கள் ஆகியவை இரு மொழிகளிலும் பெற்றுள்ள ஒற்றுமையையும் சிறப்பாக எடுத்துக் காட்டி யுள்ளனர். அறிஞர் பர் குலாம் அலி அல்லானா என்பவர், சிந்தி மொழிக்கும், திராவிட மொழிக்கும் உள்ள ஒப்புமைகளை எடுத்துக் காட்டியுள்ளார்.

திரு மீ.மனோகரன் என்பவர், தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடி மக்களின் மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன என்றும், அவர்களுடைய நாகரிகமாகக் குறிப்பிடப்படும் ‘பெரு’ என்பதே, பெருமைக்குரிய தமிழ்ச்சொல் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

- நாவலர் இரா.நெடுஞ்செழியன்

(திராவிட இயக்க வரலாறு, பக்கம் 99-100)

-விடுதலை ஞா.ம., 13.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக