கலி. பூங்குன்றன்
காஞ்சி சங்கராச்சாரியார் தந்தை பெரியாரை மனதிற் கொண்டு பெருமைப்பட கூறுவதற்குக் காரணமும் உண்டு; அதற்கான எடுத்துக்காட்டும் இதோ:
பெரியாரும், பெரியவாளும் காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லட்சுமிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். 'சக்தி விகடனில்' காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர்பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்குப் புதிராக இருந்தது. காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங் களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்று கொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள் கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.
பெரியவர் புன்னகைக்கிறார். ஏன் வீணா பயப் படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா! என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக் திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்பு!
அந்த நேரத்தில், ஈ.வெ.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண் டியது உங்க பொறுப்பு! என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும், அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா! என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார்.
பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லட்சுமி நாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது.
இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் 'மேனா' என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப்படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.
ஒருமுறை, பெரியவர் அதுபோல் 'மேனா'வில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்று பெரியார் முழங்கிக் கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது.
அவ்வளவுதான், மேனாவை அங்கேயே தரையி றக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்!என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள். இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக் காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த 'மேனா' வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன் என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர். கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன.
நன்றி: 'சக்தி விகடன்' பொறுப்பாசிரியர் திரு. ரவி பிரகாஷ் அவர்கள் எழுதிய கட்டுரை.
போதுமா குருமூர்த்தி கூட்டமே - 'துக்ளக்' கூடாரமே!
நீங்கள் சொல்லும் பெரியவாளையே மனமாற்றம் செய்தவர் தந்தை பெரியார்தான்.
கடைசியில் 'துக்ளக்'கில் எம்.ஜி.ஆரை தூக்கிப் பிடித்து திராவிடர் கழகத்தையும், திமுகவையும் தாக்கி எழுதியுள்ள திருவாளர் குருமூர்த்தி, அதிமுகவை எம்.ஜி.ஆர் துவக்கி தி.க., திமுக துவக்கிய இந்தச் சீரழிவை ஓரளவு தடுத்தார் என்று மங்களம்பாடி கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது 'துக்ளக்'கில்.
தந்தை பெரியார் அவர்களையும், அண்ணா அவர் களையும் எந்தளவு எம்.ஜி.ஆர். மதித்தார் என்பதை நாடறியும்.
தந்தை பெரியார் அவர்கள் எழுத்துச் சீர்திருத்தத்தை சட்டமாக்கினார்.
தந்தை பெரியார் அவர்களின் அறிவு மொழிகளை மாவட்டத் தலைநகரங்களில் எல்லாம் பொறித்தார்.
அஇஅதிமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலம் அருகே தந்தை பெரியார் முழு உருவச் சிலையைத் திறந்தாரே! 49 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவீத மாகவும் உயர்த்தினாரே! சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருந்த 4 நீதிபதிகள் பதவிக்கு அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த எம்.என். சந்துருக்கர் 4 பார்ப்பனர்களை சிபாரிசு செய்திருந்தார் அதனை நாங்கள் நிராகரித்தோம். தமிழ் மண்ணுக்கென்று ஒரு தனிக் குணம் (Soil Psychology) உண்டு என்று பிரதமருக்கு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த சட்ட அமைச்சர் கூறவில்லையா? (12.10.1977) இவை எல்லாம் பெரியார் வழி சீர்தூக்கலா - சீரழிவா?
உடல் நிலை பாதிக்கப்பட்ட ஒரு கால கட்டத்தில் பார்ப்பனர்களின் சுற்றுச்சூழல் என்னும் வட்டத்துக்குள் எம்.ஜி.ஆர். அகப்பட்ட கால கட்டத்தில் வேறு தொனியில் பேசி இருக்கலாம் - நடந்தும் இருக்கலாம்.
மூகாம்பிகை பக்தராகி விட்டதாலேயே 'துக்ளக்' வட்டாரத்துக்கு சீரிழிவைத் தடுத்த செம்மலாகி விட்டாரோ! அதே நேரத்தில் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் - அமைப்பு எத்தகைய அநாகரிகமானது என்பதை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். மூக்கை உடைத்துச் சொன்னதுண்டே! (தனியே காண்க).
தி.க., திமுக, அதிமுக என்பவை திராவிட இயக்கக் கட்சிகள் என்று - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் தலைவர்கள், வழிகாட்டிகள் என்று கருதப் படும் சூழ்நிலையில் பார்ப்பனீயத்துக்கே உரித்தான பிரித்தாளும் தூண்டில் போடும் வேலையில் ஆரியம் குருமூர்த்திகள் உருவில் ஈடுபடுவதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் குறிப்பாக தாய்க் கழகமான திராவிடர் கழகம் இல்லை.
பார்ப்பனர்தம் ஒவ்வொரு அங்குல அசைவையும் துல்லியமாக அறியக் கூடிய ஈரோட்டுக் கண்ணாடி எங்கள் வசம் எப்பொழுதுமே உண்டு என்பதை மற வாதீர், எச்சரிக்கை!
- விடுதலை நாளேடு, 3.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக