பக்கங்கள்

சனி, 3 நவம்பர், 2018

சீரழிவுக்காரர்கள் யார் - துக்ளக்கே?

**கலி. பூங்குன்றன்***


பிரித்தாளும் சூழ்ச்சி என்பது பார்ப்பனர்களின் குருதியிலே கலந்த ஒன்று. இதில் முன் வரிசையில் இருப்பது திருவாளர் குருமூர்த்தி அய்யரின் 'துக்ளக்'.

சீரழிவை ஓரளவு எம்.ஜி.ஆர். தடுத்தார் என்ற தலைப்பில் அவர் துக்ளக்கில் (31.10.2018) ஒரு கட்டுரையைத் தீட்டித் தள்ளியுள்ளார்.

இதோ அந்தப் பகுதி:

"தமிழகத்தின் இன்றைய தரம் தாழ்ந்த அரசியல் நிலைக்கு காரணமாக இருந்தவை எவை? என்று உடுமலைப் பேட்டை யிலிருந்து பி.கே.பிரியா என்ற வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். பெரியாரின் கருத்துக்கள், அதை நடை முறைப்படுத்திய திமுக, குறிப்பாக 1960-70களில் கருணாநிதியின் ஆட்சி இவைதான் காரணம். எவை எவையெல்லாம் காலம் காலமாக தமிழ் சமுதாயத்துக்கு பண்பையும், நன்னெறிகளையும் கொடுத் தனவோ, அவற்றையெல்லாம் இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்களின் மனதில் கேவலப்படுத்தி, கைவிட வைத்தது பெரியாரின் சிந்தனைகள். தமிழ் நூல்களால்தான் தரமான அரசியலைக் கொடுக்கும் பண்பும் அறநெறியும் நாம் பெற முடியும். ஆனால் தமிழ் நூல்கள் கேவலமானவை, தமிழ் புலவர்கள் தரமற்றவர்கள், தமிழே காட்டுமிராண்டி மொழி, கற்பு என்பது பெண்ணடிமை என்றெல்லாம் கூறிய பெரியார், திருவள்ளுவரைக் கூட கேவலப்படுத்தினார்.

திருக்குறள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேல் உலகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மதசம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளை பரப்புகிறது என்று கூறினார் அவர். அதனால் தமிழ் பாரம்பரியத்தை கைவிட்டு, தமிழல்லாத பாரம்பரியங்கள் மேல் கணிசமான தமிழர்களுக்கு மதிப்பும், மோகமும் ஏற்பட பெரியாரின் சிந்தனைகள் முக்கிய காரணம். அதனால்தான் தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் அறநெறி, பண்பு, தரம் குறைய ஆரம்பித்தது. அவருடைய சிந்தனைகளை நடைமுறைப்படுத்திய பெருமை திமுகவைச் சேரும். ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நன்னூல் எல்லாவற்றையும் கருணாநிதி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு இளம் மனதில் நல்லதே படியாமல் செய்தார். அதிமுகவை எம்.ஜி.ஆர். துவக்கி தி.க., தி.மு.க. துவக்கிய இந்தச் சீரழிவை ஓரளவு தடுத்தார். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் நாசமாய் போயிருக்கும்."

இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

எவை எவை எல்லாம் காலம் காலமாக தமிழ் சமுதாயத் துக்குப் பண்பையும், நன்னெறிகளையும் கொடுத்தனவோ, அவற்றையெல்லாம்  இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்களின் மனதில் கேவலப்படுத்தி, கைவிட வைத்தது பெரியாரின் சிந்தனைகள் என்கிறார் திருவாளர் கு. அய்யர்.

இவை உண்மைதானா? பிறப்பின் அடிப்படையில் ஜாதி - தீண்டாமை - இன்னார்தான் படிக்க வேண்டும், மற்றவர்கள் படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், கேட்டால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்ற வேண்டும், படித்து வைத்திருந்தால் அவன் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்கிற பார்ப்பன வைதிகத்தை - இவற்றை கட்டிக் காக்கும் மதத்தை வேதங்களை, ஸ்மிருதிகளை, உபநிஷத்துகளை இதிகாசங்களை, சாஸ்திரங்களை, புராணங்களை எதிர்த்தால் சமுதாயத்தைச் சீரழிப்பதாம்!

மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்னும் இந்த மவுடீகத்தின் மிக மோசமான அமைப்பு முறையை ஒழிக்கப் புறப்பட்டார் ஒருவர் என்றால் அவர்தான் சமுதாயத்தின் மகத்தான தலைவரும், வழிகாட்டியும், ஏன் தந்தையுமாவார். தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகளாகியும் தந்தை பெரியார் மதிக்கப்படுகிறார் - பாராட்டப்படுகிறார் - அவர்தம் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வெளிநாடுகளில் எல்லாம் கொண்டாடப்படுகிறது - இந்தியாவிலும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் பனாரஸ் பல்கலைக் கழகத்திலும்கூட கொண்டாடப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன?

காந்தியார் இந்தியாவின் தந்தை என்றால் பெரியார் தமிழ்நாட்டின் தந்தை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி சொல்லுகிறார் என்றால், இதனை உள் வாங்கிக் கொள்ளும் நல்ல சிந்தனை இல்லாதவர்கள்தான், தந்தை பெரியாரின் சிந்தனைகள் தலைமுறையைக் கெடுத்தன என்று கெட்ட புத்தியோடு சொல்லுவார்கள். தந்தை பெரியாரின் சிந்தனை, தொண்டு இவற்றின் ஆளுமை அய்.நா.வின் யுனெஸ்கோவுக்கு தெரிகிறது - ஆனால் இந்த மயிலாப்பூர்களுக்கும், திருவல்லிக் கேணிகளுக்கும் தெரியவில்லை என்று சொல்ல முடியாது  - தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடாது; இன்னும் ஒருபடி மேலே சென்று தவறான வியாக்கியானங்களையும், தகவல் களையும் சொல்லிக் கொச்சைபடுத்துபவர்கள்தான் தீய சிந்தனைகளை விதைக்கக் கூடியவர்கள்.

பார்ப்பனர்கள் லோகக் குரு ஜெகத்குரு என்று தூக்கி வைத்துக் கொஞ்சுகிறார்களே அவர்கள் யார்?

தீண்டாமையை க்ஷேமகரமானது என்று சொன்னவர் தானே இவர்களின் ஜெகத் குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி (ஸ்ரீஜெகத்குருவின் உபதேசங்கள்).

தீண்டாமை ஒழிப்புக்கு அந்த சங்கராச்சாரியாரின் ஆதர வைக் கேட்டு காந்தியார், பாலக்கோட்டில் முகாமிட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களைச் சந்திக்க சென்றதுண்டே! (16.10.1927).

காந்தியாரிடம் 'அந்த ஜெகத் குரு' என்ன சொன்னார்? ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய பழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நாட்டில் பெரும்பாலோர்  இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகு மென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது என்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார் ("தமிழ்நாட்டில் காந்தி" பக்கம் 575, 576).

தீண்டாமைக் கொடுமையால் மனித உரிமைகளற்று ஒதுக்கப்பட்ட மக்களின் மனம் நோவது பற்றி குருமூர்த்திகள் கூட்டம் கொண்டாடும் சங்கராச்சாரியாரின் மனம் கவலைப் படாது - அக்கறை கொள்ளாது. சக மனிதர்களைத் தீண்டாதவர் என்று கூறும் ஆதிக்க வெறியர்களின் மனம் பற்றியும், சாஸ்திரங்களின் நிலைப்பாடும் குறித்துதான் அவர்கள்தம் பெரியவாளின் மனம் கவலைப்படும்.

இந்தக் கூட்டத்தின் மனம் என்பது சகமனிதனைத் தீண்டாதவன் என்று கூறும் - மனிதநேயமற்ற மரக்கட்டைகள் என்றுதானே சொல்ல வேண்டும்.  பாதிக்கப்பட்டவன் பதறக் கூடாது; கேட்டால் அவாள் அவாள் தலை எழுத்து என்ற தாரக மந்திரம்!

'காகத்தையும் படைத்து கல் நெஞ்ச பார்ப்பானையும் ஏன் படைத்தாய்?' என்ற பாடல் வரிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.

சக மனிதனைத் தீண்டாதவன் என்று கூறும் ஜெகத் குருக்கள் சீரழிவுச் சிந்தனைக்காரர்களா? தீண்டாமையை ஒழிக்க இன்னொரு மாநிலத்துக்கும் கூடச் சென்று போராடி குடும்பத்துடன் சிறை சென்ற வைக்கம் வீரர் தந்தை பெரியார் சீரழிவுக்காரரா?

கடித்த உடனேயே சாகடிக்கிற பாம்புக்கு "நல்ல" பாம்பு என்று பெயர் வைத்திருப்பதுபோல, மனிதனை மனிதன் வெறுக்கச் சொல்லும் மனிதனுக்குப் பெயர் மகா பெரியவாள் ஜெகத் குருவாம் - வெட்கக் கேடு!

பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் என்றும், காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும், சூத்திரன் என்றால் வேசி மகன் உள்ளிட்ட ஏழு வகைத் தன்மை உடைய கீழ் மகன் என்றும் எழுதப்பட்ட மனுதர்மத்தை இன்றுவரை தூக்கிப் பிடிக்கும் 'துக்ளக்'குக்கு எவ்வளவு அசட்டுத் துணிவிருந்தால், ஆணவமிருந்தால் இந்தச் சூத்திரர் மீதான கொடுமையை எதிர்த்துப் போர்க் கொடி பிடித்த - 95 வயதிலும் மூத்திர சட்டியைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றிச் சுற்றி பிரச்சாரம் செய்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய தொண்டு செய்த பழுத்தபழமாம் தந்தை பெரியாரைப் பார்த்து சமுதாயத்தைச் சீரழித்தவர் என்று எழுதும்? தனி வாழ்விலும், பொது வாழ்விலும், ஒழுக்கத்தைக் கடைபிடித்த கண்ணியத்தின் மாக்கடல் தந்தை பெரியார்.

"பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச் சொத்து" என்று சொன்னவர் தந்தை பெரியார் (சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 24-11-1964) ஆனால் இவர் ஜெகத்குரு என்ன சொல்லுகிறது தெரியுமா?

"நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியமில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது" (கல்கி 8.4.1958) இதுதான் ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியாரின் அ(ம)ருள் வாக்கு!

இவர்கள் கூறும் கடவுளிடத்திலேயே ஒழுக்கம் கிடை யாது. தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளின் மனைவி மார்களைக் கற்பழித்தவன் சிவன் என்று வெட்கமில்லாமல் எழுதி வைத்திருப்பவர்கள் இவர்கள். இத்தகைய கடவுளின் அருள் எந்தத்  தகுதியில் இருக்கும்?

மானமிகு கலைஞர் அவர்கள் ஒரு முறை கேட்டாரே 'இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா?' என்று கேட்டாரே,  அந்தக் கேள்விக்கு இதுவரை பதில் உண்டா? கேள்வியின் நியாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கூறிய கலைஞரை இன்று வரைத் தூஷிப்பது எந்த வகையில் அறிவு நாணயம்?

ஒரு ஒழுக்கமான கடவுளைக்கூடப் படைக்கக் யோக்கியதை இல்லாதவர்கள் அந்த ஒழுக்கக் கேடான கடவுளைப்பற்றிப் பேசினால், அது சமூகச் சீரழிவாம்! என்னே இரட்டை அளவுகோல்?

இந்திரன், பிரம்மா, விஷ்ணு தெய்வங்களையும், மறு பிறப்பு, சுவர்க்கம் நரகம், மேல் உலகம் பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கை பரப்புகிறது என்று பெரியார் கூறி விட்டாராம் - அடேயப்பா எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள்!

இவர்கள் கூறும் அந்தப் பிர்மா யார்? பெற்ற மகள் சரஸ்வதியையே பெண்டாட்டியாக்கியவன் தானே. விஷ்ணு யார்? சலந்திரன் மனைவி விருந்தை மீது மோகங் கொண்டு கணவன் சலந்திரனைக் கொன்று, சலந்திரன் போல் உருவங் கொண்டு விருந்தையைக் கற்பழித்தவன் தான் எங்கள் காத்தல் கடவுளான மகாவிஷ்ணு என்று சொல்லுவதற்கு வெட்கப்படாதவர்கள் இந்தக் கேவலம் உடைய ஒருவன்  கடவுளா? என்று கேட்ட பெரியாரை சீரழிவுக்காரர் என்கிறார் என்றால், இவர்களின் யோக்கியதை என்ன? இந்த மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம் எந்தளவு கயவாளித்தனமானது! சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடுவதும், வாலிப வயதில் பெண்ணைத் திருடுவதும்தான் ஒரு கடவுளின் இலட்சணமா?

குளத்தில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்த போது அவர்களின் ஆடைகளைத் திருடி மரத்தில் ஏறிக் கொண்டு பெண்களின் நிர்வாணத்தை ரசித்த காமக் கிறுக்கன் தான், அய்ந்தாவது வேதம் எனும் கீதையை, பாகவதத்தை எழுதியவன் என்று சொல்ல கிஞ்சிற்றும் வெட்கம் இல்லையா?

இந்து மதக் கடவுள்களின் யோக்கியதையை பெரியார் புட்டு வைத்தால் பொத்துக் கொண்டு வருகிறது பொல்லாக் கோபம்! அது சரி, அவர்களின் மூதறிஞர் ராஜாஜி என்ன சொல்கிறார்?

"வியாசர்விருந்து" என்ற தலைப்பிலும், "சக்ரவர்த்தித் திருமகன்" என்ற தலைப்பிலும், மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் 'கல்கி'யில் ராஜாஜி தொடராக எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும் - அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதாசிவம்  தமது யோசனையை ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும்.

"சதாசிவம்! எனக்கு பாகவதத்தை எழுதுவதில் நாட்ட மில்லை,  அதில் பகவானின் லீலைகளும், அற்புதங்களும் மிகுதியாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்" ('கல்கி' 4.10.2009 பக்கம் 72).

இதற்கு என்ன சொல்லப் போகிறது குருமூர்த்திக் கூட்டம்?

இந்திரன் மீதும் குறை கூறிவிட்டாராம் பெரியார்? அபாண்டம்! அபாண்டம்!! இந்திரனுக்கு வக்காலத்து  வாங்குவ திலிருந்தே. இவர்களின் யோக்கியதை உடலில் துண்டுத் துணியில்லாமலேயே நிர்வாணமாகி விடுகிறது.

இந்த இந்திரனை ஆயிரம் கண் உடையவன் என் கிறார்களே - அந்த 'விஷயம்' என்னவென்று தெரியுமா?

கவுதம முனிவரின்  மனைவி அகலிகையை கவுதம முனிவன் போல் வேடம் பூண்டு புணர்ச்சி செய்தவன்தானே தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இந்திரன். இந்திரனின் அயோக்கியத்தனத்தைக் கண்டு  வெகுண்டு கவுதம முனிவர் இந்திரனுக்குக் கொடுத்த சாபம் என்ன தெரியுமா? (தேவநாதன் என்று இந்திரனுக்குப் பெயர் இந்தப் பெயர் கொண்ட காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் அர்ச்சகன், அந்தத் தேவநாத னாகிய இந்திரனைப் பின்பற்றி கோயில் கருவறையில் காம விளையாட்டு மேற்கொண்டதும் பொருத்தம்தான்!)

"தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று சொல்லுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா? குரு பத்தினியாச்சே என்றுகூடக் கருதாமல் மாறு வேடம் பூண்டு புணர்ந்த காமாந்தக்காரனே! எதற்கு ஆசைப்பட்டு இந்தக் காரியத்தை  சூதாக செய்தாயோ, அதுவாகவே உன் உடம்பு முழுவதும் (பெண் குறியாகவே) போகக் கடவது" என்று சாபமிட்டதாக "அர்த்தமுள்ள' இந்துப் புராணம் கூறுகிறதே!

இந்தக் கேவலங்களை எல்லாம் ஆதாரத்துடன் எடுத்துக் கூறினால், அடேயப்பா இந்த அய்யன்மார்களுக்கு ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் கோபம் குமுறி எழுவதைப் பார்த்தால் நல்லாதான் வாயில் வருகிறது....

"மானமுள்ள ஆயிரம் பேர்களுடன் போராடலாம், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்"  (குடிஅரசு 10.5.1936) என்று தந்தை பெரியார் கூறிய அந்த அனுபவ அறிவுமொழியை எண்ணிதான் வியக்க வேண்டியுள்ளது. கடவுள் நம்பிக்கையற்றவரான தந்தை பெரியார் கல்விக் கூடங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லும் பொழுது கடவுள் வாழ்த்து அங்கே பாடப் பெற்றால் எப்படி நடந்து கொள்வார்? தானாகவே எழுந்து நிற்க முடியாத நிலையில், இரு பக்கங்களிலும் இரு தோழர்களின் தோள்களின் கைகளைப் போட்டுக் கொண்டு அந்தப் பாடல் முடியும் வரை தள்ளாத வயதிலும் எழுந்து நின்ற அந்தப் போற்றத் தரும் பண்பாட்டின் சிகரம் தந்தை பெரியார் எங்கே - தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போது குத்துக் கல்லாக உட்கார்ந்து கொண்டு இருக்கும் இந்த ஜெகத்குரு ஜென்மங்கள் எங்கே? தன்னுடைய கழகத் தோழர்களுக்கு அறிவுரை கூறும் போதுகூட என்ன சொல்லுகிறார் அந்தச் சுயமரியாதைச் சூரியன்?  "நமது கழகக் கொள்கை மிக மிகத் தீவிரமானது. கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றாலும் நேரடியாகக் கண்டிக்க எவருக்கும் துணிவே இல்லையே!

நமது கழகத்தினர்கள் இடையேயும் ஒருவருக்கு ஒருவர் குறை கூறித் திரிவதும் இல்லை.

நமது கழகக் கூட்டங்களிலும் காலித் தனம், கலாட்டாக்கள் எதுவும் நடப்பதும் கிடையாது.

நமது கழகம் கடந்த 40 ஆண்டுகளாக இப்படியாக நடத்தி வருகின்றோம்.

1940 முதல் எடுத்துக்கொண்டால் எனது பிறந்தநாள் விழாவானது ஆண்டுக்கு ஆண்டு நம்மைப் பார்த்து பிறர் காப்பியடிக் குமாறு வளர்ந்துகொண்டுதான் வருகின்றது.

பணம், காசு விஷயமாய் எடுத்துக் கொண்டாலும் ஸ்தாபனத்துக்கு வளர்ந்து கொண்டுதான் வருகின்றது.

நாம் எதிர்பார்த்த லட்சியத்தில் எதிலும் தோற்றுவிடவும் இல்லை. பெரிதும் வெற்றி பெற்றுக்கொண்டு மற்றவர்களும் ஏற்கும் படிதான் வளர்த்து வருகின்றோம்.

அரசாங்கமும்கூட நமது தோழர்களை மற்ற கட்சிக் காரர்களைவிட நல்லவண்ணமே மதிக்கின்றது.

இந்த நிலை, பெருமை மாறாமல் இருக்கவேண்டும். இப்படியே இருந்து வரும் நிலையிலேயே நாம் சாகவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றேன்.


நமது தோழர்களும் நாணயமாகவும் கட்டுப்பாடாகவும் இருக்கின்றார்கள்.


நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட பரவாயில்லை. ஆனால், நாண யத்தில் - ஒழுக்கத்தில் தவறு இருக்கக் கூடாது. அதுதான் ஒரு கழகத்துக்கு முக்கியமான பலம்.


(- தந்தை பெரியார்,  'விடுதலை' 11.10.1964)

இப்படி எல்லாம் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் தகுதி சங்கராச்சாரியார்களுக்கு உண்டா?

எழுத்தாளர் அனுராதா ரமணனைக் கேட்டால் இவர்களின் லோகக் குருவின் கதை நாறிப் போய் விடாதா? (ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்க ஆசைப்பட வேண்டாம் - எச்சரிக்கை) அதே நேரத்தில் இவர்களின் 'லோகக் குருக்'களே தந்தை பெரியாரை மனதிற் கொண்டு கணித்துக் கூறியதும் உண்டு.

படித்தால் ஆச்சரியமாக, நம்புவதற்குக் கடினமானதாகக் கூட இருக்கக் கூடும்.  ஆனாலும் இதோ அது:

"ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற எல்லா லீடர் களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்லுவதற் கில்லைதான். சாஸ்த்ர, ஸம்பரதாய விதிகளாகிற ஒழுங்குகளை இவர்களும் விட்டவர்கள்தான் என்பதால் இவர்களை ஸனாதன தர்ம பீடங்களான மடஸ்தாபனங்களிலிருக்கிற நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை என்றாலும், இவர்கள் றிமீக்ஷீஷீஸீணீறீ லிவீயீமீ இல் (தனி வாழ்க்கையில்) ஸத்யம், ஒழுக்கம், தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆக்ஷேபிப்பதற்கில்லை. ஓரளவிற்குப் படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போக வேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்" என்று குறிப்பிட்டுள்ளார் ('தெய்வத்தின் குரல்' மூன்றாம் பகுதி, பக்கம் எண் 336).

சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த தந்தை பெரியாரை மனதிற் கொண்டு தானே இதனைக் கூறியிருக்க வேண்டும்.

(வளரும்)

- விடுதலை நாளேடு, 2.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக