ஒரு விதையை மண்ணுக்குள் எத்தனை ஆண்டுகள் உயிர்த்தன்மையுடன் புதைத்து வைத்திருக்க முடியும்? கீழடியில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து கிடந்த தமிழர் வரலாற்று விதை இப்போது இலை விட்டு, கிளைவிட்டு விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இன்னொரு பக்கம் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளிவர விடாமல் தடுக்கும் வேலைகள் அரங்கேறு வதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்!
அதை உறுதிப்படுத்துவது போலவேதான் இருக்கின்றன நாளும் வரும் செய்திகள், இரண்டுகட்ட அகழாய்வுகளை சிறப்பாக செய்த அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றி மூன்றாம் கட்ட அகழாய்வுகளை நடக்க விடாமல் முடக்கப் பார்த்தது. அதன்பின்னர் தமிழகமே ஒருமித்து கீழடி அகழாய்வுகளை தொடர் குரல் எழுப்பியதும் வேறுவழியே இன்றி மூன்றாம் கட்ட அகழாய்வுகளை செய்தது. அதுவும் பெயரளவுக்கு சில குழிகளை அரைகுறையாக தோண்டி இறுதியாக தொடர்ச்சியான தொன்ம சான்றுகள் கிடைக்கவில்லை என்றுகூறி அத்துடன் மத்திய தொல்லியல்துறை கீழடி ஆய்வுகளை நிறுத்தியது. அதன்பின்னர் அரசியல் கட்சிகள், அமைப்புகள், மக்களின் தொடர் கோரிக்கை களை ஏற்று தமிழக அரசின் தொல்லியல்துறை கீழடியில் நான்காம் கட்ட ஆய்வுகளை செய்தது. இந்த ஆய்வின் முடிவில் மூன்றாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தங்க ஆபரணங்கள் உட்பட சுமார் 7 ஆயிரம் பொருட்கள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், முதல் இரண்டு கட்ட ஆய்வுகளை செய்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அதற்கான அறிக்கைகளை வழங்கக்கூடாது என்று மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது தமிழ் ஆர்வலர் களிடையே அதிர்வலைகளை உருவாக்கி யுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சு.வெங் கடேசனிடம் பேசினோம், ''கீழடியில் முதல் இரண்டு கட்ட ஆய்வினை அமர்நாத் ராமகிருஷ்ணன்தான் செய்துள்ளார். அவர்தான் இடைக்கால அறிக்கையையும் கொடுத்துள்ளார். அதன்பின்னர் மூன்றாம் ஆண்டு சிறீராமன் என்பவர் ஆய்வு செய்தார். மூன்றாம் ஆண்டு அறிக்கையை சிறீராமன் என்பவர்தான் கொடுக்கப் போகிறார் அதில் சிக்கல் இல்லை. அது போல நான்காம் ஆண்டு தமிழக அரசின் ஆய்வை சிவானந்தம் என்பவர் செய்தார். அதற்கான அறிக்கையை அவர்தான் கொடுக்கப்போகிறார். ஆனால், முதல் இரண்டுகட்ட ஆய்வுகளை செய்த அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு பதிலாக வேறு ஒருவரை அதற்கான அறிக்கையை கொடுக்க சொல்கிறார்கள். அதுபோல அமர்நாத்தின் கண்காணிப்பில் இருக்கும் பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறு இப்போதுள்ள அதிகாரியிடம் கூறியுள்ள உத்தரவும் அதிர்ச்சி அளிக்கிறது
அமர்நாத் அறிக்கையை எழுதவேண் டாம் என்று சொல்வது 1959ஆம் ஆண்டின் தொல்லியல் துறை விதிகளுக்கே எதிரானது. யார் ஆய்வு செய்தாரோ அவர்தான் ஆய் வறிக்கையை எழுத முடியும். ஆய்வுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் எப்படி ஆய்வறிக்கையை எழுத முடியும்?
கீழடியில் கிடைத்த தொன்ம சான்றுகள் பாஜகவின் கருத்தியலுக்கு எதிராக இருப்பதால்தான் இவ்வளவு நெருக்கடியும். அது போல ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டு களுக்கு முன்பு முடிந்த ஆய்வின் அறிக் கையை கொடுக்காமல் அந்த ஆய்வின் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி காலம் தாழ்த்தி வருகிறார். அவர் ஓய்வுபெற்றே பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த அறிக்கையை அவர் விரைந்து கொடுக்க அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
மூன்றாம் கட்ட அகழாய்வில் ஆய்வின் பொறுப் பாளராக இருந்த அமர்நாத்தை மாற்றிவிட்டு சிறீராமனை நியமித்தார்கள். அவர் பெயருக்கு பத்து குழிகளை தோண்டி ஆய்வை நடத்தி ஏற்கெனவே இருந்த தொன்மங்களின் தொடர்ச்சி இல்லை; எனவே ஆய்வை தொடரவேண்டிய அவசியம் இல்லை என்ற அறிக்கையை கொடுத்தார். ஆனால், நான்காம் ஆண்டாக தமிழக அரசு தொடர்ந்து 34 குழிகளை தோண்டி ஆய்வு செய்து சுமார் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பொருட்களை எடுத் துள்ளது. அப்படியானால் இங்கு எதுவும் இல்லை என்று மத்திய அரசு சொன்னது ஏமாற்றுதானே?" என்று கேள்வி எழுப்பு கிறார்.
மத்திய தொல்லியல் துறை இப்போது மட்டுமல்ல நூறாண்டுக்கும் மேலாகவே தமிழகத்தை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டு கிறார் வரலாற்று ஆய்வாளர் வெள்உவன், "இந்திய தொல்லியல்துறை எதற்காக கீழடிக்கு இவ்வளவு நெருக்கடிகளை செய்கிறது ? அதன் பொறுப்பாளராக இருந்த அமர்நாத்தை ஏன் இவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள் என்று யோசித்தாலே இதில் உள்ள அரசியல் புரியும்.
இப்போதுள்ள மதுரை என்பது பழைய மதுரை இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. இப்போதுள்ள மதுரையில் பெரிய அளவில் தொன்மையான வரலாற்று சான்றுகள் கிடைப்பதில்லை. அதனால் பழைய மதுரை இப்போது கீழடி ஆய்வு நடந்த பகுதியில்தான் இருந்திருக்கலாம் என்று அங்கு அகழாய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தெரியவருகிறது. இதில் கிடைத்த பொருட்கள், நகர அமைப்புகள், தங்க ஆபரணங்கள் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
இத்தனை நாட்களாக சொல்லப்படும் வரலாறு அனைத்தையுமே இது திருப்பிப் போடும் வகையில் இருப்பதால் இது மத்திய அரசை கலக்கத்திற்கு உள்ளாக்கி இருக்கலாம். கீழடி போல வே ஆதிச்சநல்லூரில் 2004-ஆம் ஆண்டில் நிறைவுற்ற ஆய்வின் அறிக்கைகள் இதுவரை வெளிவரவே இல்லை. அதன் பொறுப்பாளராக இருந்த சத்தியமூர்த்தி இதுவரை அந்த ஆய்வின் அறிக்கையை கொடுக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்வது ஏன் ?
கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், பூம்புகார் என்று நடத்தப்படும் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையான வரலாற்றுக் கான ஆவணங்களை வழங்குகின்றன. இந்த தரவுகள் வடமொழிதான் உயர்வானது என்ற கருத்தை உடைத்தெறிகிறது.
இந்த ஆய்வுகளின் அறிக்கைகள் வெளிவந்தால் இந்திய, உலக வரலாறே திருத்தப்பட வாய்ப்புள்ளது. பாஜக என்று இல்லை, காங்கிரஸ் இருந்தபோதும் தமிழர் களின் வரலாறு வெளிவரக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. நூறாண்டுகளாகவே இந்த மறைக்கப்படும் வேலை நடக்கிறது. 1920ஆம் ஆண்டுதான் சிந்துசமவெளி ஆய்வுகளே நடக்கின்றன. அதற்கு அய்ம்பது ஆண்டு களுக்கு முன்னரே ஆதிச்சநல்லூரில் ஜெர்மானிய அறிஞர் ஒருவரால் ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த அகழாய்வு பொருட்கள் ஜெர்மனியில் உள்ளன. அதனைப் பற்றி யாரும் பேசவே இல்லை . அது அப்படியே மூடி மறைக்கப்பட்டது. மேலும், சிந்துவெளி நாகரிகமே தமிழர்களின் நாகரிகத்துடன் தொடர்புடையதுதான். அங்கேயே காளை உருவத்திற்கு பதிலாக குதிரை உருவமாக மாற்ற முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஆதிச்சநல்லூரில் இரும்பு கிடைத்துள்ளது. ஆனால், சிந்துவெளி நாகரிகத்தில் இரும்பு கிடைக்கவில்லை. ஆதிச்சநல்லூரில் இரும்பு கிடைத்ததை மத்திய அரசு ஒப்புக்கொண்டால் இரும்புக்காலம் பற்றிய வரலாறு, அதன் காலகட்டம் அனைத்தும் மாறும். ஆதிச்ச நல்லூர் ஒரு ஈமச்சடங்கு நடத்தும் இடம்தான்; கொடுமணல் ஒரு வியாபார மய்யம்தான் என்று சொல்லி தமிழர்களின் நகர அமைப்புக்கு, குடியிருப்புக்கு சான்றுகள் எதுவும் இல்லை என்று குறை சொல்லி வந்தார்கள். ஆனால், கீழடி ஆய்வுகளில் சிறப்பான நகர அமைப்புகள் கிடைத் துள்ளது. அதனால், தமிழகத்தில் நடந்த அகழாய்வு களிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்தது கீழடி ஆய்வு. அதனால்தான் அதற்கு எதிர்ப்பும் உள்ளது. கீழடியை நிலைநிறுத்த, வெளிக்கொணர நாம் எப்படி முயற்சி செய்கிறோமோ, அதேபோல கீழடியை மறைக்க, ஒன்றுமில்லாமல் ஆக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
தமிழர்களின் தொன்மையை, தனித் துவத்தை வடக்கில் உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. அதனால்தான், இந்த போக்கு இருக்கிறது. ஆதிச்சநல்லூர் ஆய்வின்போது ஒரு பானை ஓட்டில் கரி அரவ என்ற பெயர் எழுதியுள்ளதாக சொன் னார்கள், அது பற்றிய செய்திகள் பத்திரி கைகளில்கூட வெளிவந்தன. ஆனால், "அதன்பின்னர் அது எழுத்தே இல்லை, கரையான் அரித்த தடம் என்று மாற்றி விட்டார்கள். நான் ஒருமுறை ஆதிச்சநல்லூர் பொறுப்பாளர் சத்தியமூர்த்தியிடம் இதுபற்றி கேட்டபோது அவர் மழுப்பலான பதிலையே சொன்னார். ஆய்வாளர்களுக்கே பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இல்லையென்றால் அமர்நாத் போல தூக்கி அடிக்கப்படுவார்கள் என்பதுதான் உண்மை .
பூம்புகாரில் கடலுக்குள் மூழ்கிய மிகப்பெரிய - நகரம் இருப்பதாக கிரகாம் குக் என்ற அறிஞர் மிக சிறப்பான ஆய்வை செய்தார். அதனையே வெளியிட முடியாத அளவு வைத்திருக்கிறார்கள். அது 10 ஆயிரம் ஆண்டுகால தொன்மையான நகரம் என்று அவர் சொல்கிறார். இப்படி எல்லாவகையிலும் நமது அகழாய்வுகள் முடக்கப்படு கின்றன என்று வேதனைப்படுகிறார் வெள் உவன்.
இதன் பின்னாலுள்ள அரசியல் பற்றி பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் துணைச்செயலாளர் சி, மகேந்திரன், தமிழர்கள் வரலாற்று ரீதியாக தொன்மை யானவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் அதிகம் உள்ளன.
ஹரப்பா, மொஹஞ்சதரோ கண்டுபிடிக்கப் பட்ட காலத்திலேயே அதில் தமிழ்ப் பண் பாட்டின் கூறுகள் இருப்பதான குரல்கள் எழுந்தன. ஆனால், அதை மறைத்து சமஸ்கிருதம்தான் இந்தியாவின் தாய்மொழி என்பதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சி காலம்காலமாக நடக்கிறது. இந்த மூடி மறைப்பு முயற்சியையும் தாண்டி தமிழ், தமிழர்களின் அடையாளங்கள் இப்போது எல்லா இடங்களிலும் கிடைக் கின்றன. ஆப்கானிஸ்தான் தொடங்கி வட இந்தியா முழுவதும் தமிழர்களின் வரலாற்றுத் தடங்கள் இருப்பதாக ஒடிசாவின் கூடுதல் தலைமை செயலாளர் பாலகிருஷ்ணன் தனது ஆய்வுப் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
சமஸ்கிருதத்தை, இந்துத்துவத்தை நிலைநிறுத்தத் தான் தமிழர்களின் வரலாறு இப்படி மறைக்கப்படுகிறது என்கிறார்.
- சு.வீரமணி
(நன்றி: புதிய தலைமுறை, 25.10.2018)
- விடுதலை ஞாயிறுமலர், 27.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக