பக்கங்கள்

சனி, 8 பிப்ரவரி, 2020

தமிழில் குடமுழுக்கும் தளபதி ஸ்டாலின் கருத்தும்

தஞ்சாவூர் பெருஉடையார் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் தளபதி மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தது - பக்திக்கு அப்பாற்பட்ட முறையில் வரவேற்கத்தக்கதே.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோயில், தமிழ் மன்னனால் - தமிழர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட கோயில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் வழிபாட்டுக்குச் செல்லக் கூடிய ஒரு கோயிலில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்பதும், குடமுழுக்கும் தமிழில்தான் நடத்தப்பட வேண்டும் என்பதும் இயல்பான ஒன்றுதானே.

இதனையும் கூட சிலர் எதிர்க்கின்றனர் என்றால் அத்தகைய வர்களைத் தமிழர்கள் அடையாளம் காணத் தவறக் கூடாது.

சில தொலைக்காட்சிகளில் இதுகுறித்து விவாதம் நடத்தப் பட்டதைக் கண்ணுற்றபோது தமிழில் கூடாது, சமஸ்கிருதத்தில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்று சொல்லுபவர்கள் எல்லாம் பார்ப்பனர்களாகவும், தமிழில்தான் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லுபவர்கள் எல்லாம் தமிழர்களாகவும் இருப்பதைப் பார்க்கும் பொழுது - கேட்கும் பொழுது, பார்ப்பனர்கள் தமிழர்களல்லர் என்று திராவிடர் கழகம் சொல்லி வந்ததும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றோர் சொல்லிவந்ததும் நூற்றுக்கு நூறு உண்மை என்பது பட்டவர்த்தனமாக எளிதாகவே விளங்கி விட்டது.

அறிஞர் அண்ணா சொன்னதை இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமாகவே இருக்கும்.

"தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக்கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்!" ("திராவிட நாடு" 2.11.1947 பக்கம் 18) என்கிறார் அண்ணா!

இது - மிக அருமையானதோர் படப்பிடிப்பு! 73 ஆண்டுகளுக்கு முன் அறிஞர் அண்ணா கூறியது இன்றைக்கும் பொருந்துகிறதா இல்லையா?

கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்க் குடிமகன் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார்.

'இனிக் கோயில்களில் தமிழில்தான் அர்ச்சனை; விரும்பிக் கேட்டால் சமஸ்கிருதத்திலும் செய்யப்படும்' என்று அறிவித்தார்.

அவ்வளவுதான்! ஹிந்துக் கோயில் பாதுகாப்புக் கமிட்டியின் தலைவர் வி.எஸ். சிறீகுமார் என்ற பார்ப்பனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.

"ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில்கள் உள்ளன; கோயில்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை மாற்ற அறநிலையத்துறையின் செயலாளருக்கோ, ஆணையருக்கோ அதிகாரம் கிடையாது.

அர்ச்சகர்களும், குருக்களும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். கும்பாபிஷேகத்தின் போது வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் பாசுரங்களைச் சொல்லுமாறு கூறுகின்றனர். இது சட்ட விரோதமானது.

சமஸ்கிருதம் மூலமாகக் கடவுளிடம் தொடர்பு கொள்ள முடியும். இந்நிலையில் தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கூறுவது ஹிந்து மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும்.

நான்கு வேளை பூஜை நடந்த கோயில்களில், இனி ஆறு வேளை பூஜை நடத்துமாறு ஹிந்து அற நிலையத் துறை ஆணையர் கூறியுள்ளார். வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு உத்தர விடப்பட்டுள்ளது. கோயில்களில் நடக்கும் பூஜையில் தலையிடக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று வி.எஸ். சிறீகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவழக்கில்குறிப்பிட்டுள்ளார்.

1961ஆம் ஆண்டு முதலே தமிழகக் கோயில்களில் தமிழிலும் வழிபாடு செய்யலாம் என்பது சட்ட ரீதியான நிலைப்பாடு - அந்த நிலை தொடரலாம் என்பதே உச்சநீதிமன்ற தீர்ப்பாகும்.

"சைவ, வைஷ்ணவ ஆகமங்களுக்குக் கட்டுப்படாத கோயில்களில் வேண்டுமானால் அவர்கள் விரும்புகிற மொழிகளில் அர்ச்சனை செய்யட்டும்" என்று திமிர்வாதமாக, பார்ப்பன வெறியோடு அதே சிறீதர் பார்ப்பனர் 'இந்து' ஏட்டில் கடிதமாக எழுதியிருந்தார் (14.10.1980).

ஏதோ சிறீதர் என்ற ஒரு பார்ப்பனரின் கருத்து மட்டும்தான் இது என்று கருதிட வேண்டாம். ஜெகத் குரு  என்று பார்ப்பனர்களால் ஏற்றிப் போற்றப்படும் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் கருத்தும் இதேதான்.

"பக்தர்கள் ஆத்மார்த்தமாக எந்த மொழியிலும் கும்பிடட்டுமே! ஆனா எப்படி ஒரு தொழிற்சாலைன்னா அதுக்கு ஒரு விதி இருக்கோ, ஒரு பள்ளிக் கூடம்னா அதுக்கு ஒரு விதி இருக்கோ, அதுபோல ஒரு கோயிலுக்குன்னு ஒரு விதியிருக்கு; ஒரு முறை இருக்கு. பக்தர்கள் பக்தர்களாயிருக்கட்டும். எத்தனையோ கோயில்கள்ல நைவேத்தியம் கிடையாது - சுவாமிக்குச் சார்த்த துணி கிடையாது, வருமானம் கிடையாது.  அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாம, அதைப்பற்றி எல்லாம் அக்கறை இல்லாதவர்கள் அர்ச்சனை மட்டுமே தமிழ்ல நடக்கனும்னு பேசறது நியாயம் தானா?" என்று கேட்கிறார் ஜெகத்குரு என்ற நிலையில் உள்ளவர் ('குமுதம்' பேட்டி 10.12.1998).

திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் "தஞ்சைக் கோயில் குட முழுக்கு தமிழில் நடைபெற வேண்டும்" என்பதில் உள்ள தமிழ் உணர்வும், இனவுணர்வும் எத்தகைய முக்கியமானது என்பதை சங்கராச்சாரியார் வரை கூறும் கருத்திலிருந்தே புரிந்து கொள்ளலாமே!

- விடுதலை நாளேடு 24 1 20

தமிழில் குடமுழுக்கும் தளபதி ஸ்டாலின் கருத்தும் (2)

தமிழ் மன்னர்களால், தமிழர்களின் உழைப்பால் உருவாக் கப்பட்ட கோயில்களில் தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழியான தமிழில் வழிபாடு நடத்தக் கூடாது, குட முழுக்குகள் தமிழில் நடத்தப்படக் கூடாது என்ற நிலை தொடர்வது - தமிழ் நாட்டு மக்களின் தன்மானத்துக்கும் மொழி மானத்துக்கும் எதிரானது,  அறைகூவலானது என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.

கோவில்களில் பெண்களைப் பொட்டுக் கட்டி விட்டது, பார்ப்பன அர்ச்சகர்கள், வடமொழி அர்ச்சனை இவையெல்லாம் சோழவேந்தன் ராஜராஜன் காலத்தில் நடைபெற்ற மாபெரும் வீழ்ச்சியாகும்.

19.01.1958இல் திருச்சிராப்பள்ளியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கவனிக்கத்தக்கதாகும்.

"தமிழ்நாட்டு ஆலயங்களில் பார்ப்பனர்கள் தங்களுக்கு உயர்வு தேடிக் கொள்ளவும், தாங்களே அதில் ஏகபோகவுரிமை கொண்டாடவும் சாதகமாக வடமெழியையே ஆலயங்களில் உபயோகித்து வருவதும், பார்ப்பனர்களையே அர்ச்சகராகப் போட்டு வரும் சூழ்ச்சியைக் கண்டிப்பதோடு, இனி தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலேயே வழிபாடு - அர்ச்சனை நடக்க வேண்டுமென உத்தரவிட வேண்டுமெனவும், பார்ப்பனரல்லாத மக்களையும், அர்ச்சகர்களாக நியமித்து  சம உரிமை வழங்க வேண்டுமெனவும் அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது" ('விடுதலை' 21.1.1958).

6.1.1962இல் சென்னையில் தந்தை பெரியார் கூட்டிய திராவிடர் கழக மாநாட்டிலும் இது குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"தமிழர் சமுதாயத்தின் சுயமரியாதையை முன்னிட்டு இன்று கோவிலிலிருக்கும் முறைகள் தமிழர்களது இன சுயமரியாதைக்கும், மொழி சுயமரியாதைக்கும், உணர்வுக்கும் மாறான வகையில் கேடு விளைவிப்பவைகளாய் இருப்பதால் இம்முறையை மாற்றி, தமிழர்கள் கர்ப்பக்கிரகம் என்பதற்குள்ளும் செல்லும் உரிமை பெறவும்; தமிழர்கள் பூசாரிகளாக (அர்ச்சகர்களாக) இருக்க வேண்டிய உரிமையையும்; தமிழில் வழிபாடு செய்யும் உரிமையையும் பெற வேண்டியும், அதற்காக அவ்வுரிமைகளை அடையத் தேவையான கிளர்ச்சிகளைச்செய்ய வேண்டுமெனவும், இம்மாநாடு கருதுகிறது" என்று 1962இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி 25.12.1980 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ் வழிபாட்டு உரிமை மாநாடு சென்னை பெரியார் திடலில் நடத்தப்பட்டது.

மாநாட்டுத் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகள், திறப்பாளர் ஆட்சிமொழிக் காவலர் கி. இராமலிங்கனார், பாவாணர், திருக்குறளார் வீ. முனுசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம், பாவலரேறு பெருஞ்சித்திரனார், புலவர் புலமைப்பித்தன், சத்தியவாணிமுத்து எம்.பி.,  கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, புலவர் ந.இராமநாதன், புலவர்

மா. நன்னன், முனைவர் எம். சுந்தரம், முனைவர் சி. பாலசுப்பிர மணியம், நாரண - துரைக்கண்ணன் ஆகியோர் அம்மாநாட்டில் தமிழ் வழிபாட்டு உரிமையின் அவசியத்தை விளக்கினார்கள்.

அம்மாநாட்டில் ஒரு வேண்டுகோள் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

"தமிழில் அர்ச்சனை செய்யாத, விரும்பாத திருக்கோயில்களில் தமிழர்கள் சமஸ்கிருத அர்ச்சனையைச் செய்யாது, தாமே வழிபாடு செய்துகொண்டு வந்துவிட வேண்டும்" என்பதுதான் அந்த வேண்டுகோள் தீர்மானமாகும்.

இப்படி திராவிடர் இயக்கம் தமிழ் வழிபாட்டு உரிமைக்குக் குரல் கொடுத்து வந்துள்ளது.

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இப்பொழுது தஞ்சைப் பெருவுடையார்  கோவில் குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என்று வைத்துள்ள கோரிக்கை திராவிடர் இயக்கம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கையின் தொடர்ச்சியே!

ஆனால் தொடக்க முதல் காஞ்சி சங்கராச்சாரியாரிலிருந்து 'துக்ளக்' சோ, ராமசாமி வரை தமிழில் வழிபாடு நடத்துவதற்கு எதிர் நிலையிலேயே இருந்து வருகிறார்கள்.

கோயில்களில் தமிழ் வழிபாடு என்பது மொழி ஆர்வமில்லை; மத துவேஷம் என்று தலையங்கம் தீட்டினார் சோ ('துக்ளக்' 18.11.1998). தமிழில் வழிபாடு செய்தால் அர்த்தம் இருக்கும் - அருள் இருக்காது என்று அந்தத்தலையங்கத்தில் கூறியிருக்கிறார்.

கரூர் மாவட்டம் திருமலை முத்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கில் 9.9.2002 அன்று தமிழில் திருமுறைகள் ஓதி குடமுழுக்குச் செய்யப் பட்டது.

அவ்வளவுதான் கோயில் தீட்டுப்பட்டு விட்டது என்று கோயில் நடையை மூன்று நாள் சார்த்தி தீட்டுக் கழிக்கப்படவில்லையா?

காஞ்சி சங்கராச்சாரியார் தமிழில் குட முழுக்குச் செய்தது தவறு என்று வக்காலத்து வாங்கவில்லையா?

நாத்திகர்கள் இதில் தலையிடலாமா என்று கேட்டார். அப்படிப் பார்க்கப் போனால் இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டு என்று சொல்லப்படவில்லையா?

பிரச்சினையைத் திசை திருப்புபவர்தான் ஜெகத் குருவா? என்னதான் திசை திருப்பினாலும், சமாதானம் சொல்லப்பட்டாலும் வழிபாட்டு உரிமைப் பிரச்சினை என்றாலும், குடமுழுக்குப் பிரச்சினை என்றாலும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றாலும் இவற்றின் அடிப்படை பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பது இமயமலை போன்ற உண்மையாகும்.

தமிழ்த் தேசியவாதிகள் முதலில் இதை உணரட்டும்!

- விடுதலை நாளேடு 27. 1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக