தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.
ஆங்கிலத்துக்கு ஆதரவு
ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும், முயற்சித்தும் வந்து இருக்கின்றேன்.
அக்காலத்திலெல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100-க்கு சுமார் 5 முதல் 10 பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் நூற்றுக்கு 75 பேர்கள் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆனதால் அவர்களிலும் 100க்கு 90 பேர்கள் போல் பகுத்தறிவற்ற மக்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு மதப்பற்று, கடவுள் பற்று, பழைய பழக்கவழக்கப் பற்று, குறிபற்று எப்படி முரட்டுத்தனமான பற்றாக இருந்து வந்ததோ - வருகிறதோ அதுபோன்றே தமிழ் மொழிப் பற்றும் முரட்டுத்தனமாக இருந்து வந்தது; வருகிறது.
தமிழ்ப் புலவர்கள் நிலை
அதிலும் தமிழ்ப் படித்த தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100-க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.
புலவர்களின் மூடநம்பிக்கையும் பிடிவாதமும்
மற்றும் புலவர், வித்துவான் என்ற பெயரால் யார் வாழ்ந்தவராக, வாழ்பவராக இருந்தாலும் அவர்கள் பெரிய மதப்பற்றுள்ளவர்களாகவும், மதவாதிகளாகவுமே இருந்து வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதால் புலவர், வித்துவான் என்றால் மேலும் மூட நம்பிக்கைக்காரர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவுமே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.
பகுத்தறியும் தத்துவ விசாரணை
அறவே இல்லாதவர்கள்
அதிலும் கொஞ்ச காலத்திற்கு முன்வரையில் புலவர்கள், வித்வான்கள் என்றால் 100-க்கு 90 பிச்சை எடுத்தே அதாவது இச்சகம் பேசி பிச்சை வாங்கும் தொழிலுடையவர் என்று ஆகிவிட்டதால் பொய்யோ, புளுகோ, கற்பனையோ ஏதேதோபேசி பணம் பெறுவதிலேயே கவலை யுள்ளவர்களாகவே வாழ்ந்ததால் தத்துவ விசாரணை என்பது அவர்களுக்கு வெகுதூரமாகவே இருக்க வேண்டியதாகி விட்டது.
ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100-க்கு 90 பேர்கள் வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்ப தற்கல்லாமல், மற்றெதற்கும் பயன்படுவதற் கில்லாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
ஆசிரியர், மாணவர் நிலையும் பகுத்தறிவைத் தரவில்லை
புலவர்களை நீக்கிவிட்டால் மற்ற ஆசிரியர்கள் 100-க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாகவே சமீப காலம் வரை அமர்ந்திருக்கும் படியாக நம்நாடு இருந்து வந்ததால், அவர்களிடம் பயின்ற எந்த மாணவனுக்கும் பகுத்தறிவு என்றால் எத்தனை படி? என்று கேட்கும் நிலைதான் மாணவர்களது நிலையாக ஆகிவிட்டது.
விஞ்ஞானம் பயிற்றுவிக்கும் ஆசிரியனும், விஞ்ஞானம் பயிலும் மாணவனும் அதில் முதல் வகுப்பாக பா° பெற்ற மாணவனும்கூட நெற்றியில் முக்கோடு சாம்பல் பட்டை அணிந்தவனாக இருந்து கொண்டுதான் பயிலுவான். “என்னையா அக்கிரமம் நீ சயன்சு படிக்கிறாய்; தத்துவ சா°திரம் படிக்கின்றாய்; நெற்றியில் சாம்பல் பட்டை போட்டிருக்கிறாயே” என்றால் சிறிதும் வெட்கமில்லாமல் “அதற்கும் இதற்கும் என்னய்யா சம்பந்தம்? நீ என்ன நாத்திகனா?” என்று கேட்பான்.
இந்த நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர் களுக்கும் குறிப்பாக புலவர், வித்துவான்களுக்கும் இவருடன் உழல்வோருக்கும் தமிழை, தமிழ் மொழியைப் பற்றி அறிவு எவ்வளவு இருக்க முடியும்?
மக்கள் சிந்தனைக்கு முட்டுக்கட்டை
“அயோக்கியர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு கடைசி மார்க்கம் அரசியல் துறை” என்பது ஆக ஒரு மேல்நாட்டு அறிஞன் சொன்னதுபோல் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள் மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய் அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தமிழ் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம் மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.
சிந்திக்காத எதிர்ப்புப் பேச்சுக்கள்
இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்லுகிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வம்பு வளர்ப்போம்” என்பதைத் தவிர அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக் காமலே பேசி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் “தமிழ்மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி” என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள்.
நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்லுகின்றேன்.
அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனா கட்டும், அக°தியனாகட்டும், பாணினியாகட்டும் மற்றும் எவன்தானாகட்டும் இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால் நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?
(Primitive) பிரிமிட்டிவ் என்றால் அதன் தத்துவமென்ன? (Barbarian) பார்பேரியன்,
(Barbarism) பார்பேரிசம் என்றால் அதன் பொருள் என்ன?
3000.... 4000... ஆண்டுகளுக்கு முன் என்பதற்கு பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பேரிசம் என்பதற்கும் அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பவற்றிற்கும் என்ன பேதம் கற்பிக்க முடியும்?
பழமையில் பிடிப்பு இன்னும் நீங்கவில்லையே?
இன்று நமது வாழ்வு, மதம், கடவுள், மொழி, இலட்சியம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தன்மை பொருந்தியவை தவிர வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம்? எதைக் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
நான் நாற்பதாண்டுகளுக்கு மேலாகவே சொல்லி வருகிறேன், எழுதி வருகிறேன் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் பரப்பினவன் அயோக்கியன் வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று! அதற்காக கோபப்படாத அரசியல்வாதிகள் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றால் கோபப்படுகிறார்கள். இவனுக்கு என்ன பெயர் இடுவது என்பதே நமக்கு புரியவில்லை.
தமிழைச் சீர்திருத்தி வளர்க்க எவனும் முன்வரவில்லையே?
தமிழை, தமிழ் எழுத்துக்களைத் திருத்த வேண்டும் என்று 1927 வாக்கில் கருத்து கொடுத்தேன்; வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்கவில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள்; நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்கவில்லை.
பிறகு தமிழ் மொழிக்கு (கமால் பாட்சா செய்தது போல்) ஆங்கில எழுத்துக்களை எடுத்துக் கொண்டு காட்டு மிராண்டிக் கால எழுத்துகளைத் தள்ளிவிடு என்றேன். இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாகச் சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்? கூலிக்கு மாரடிக்கும் அழுகைத் தொழிலில் வாழ்பவர்கள் போல ஏன் அடித்துக் கொள்ளுகிறாய்?
வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?
தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன?
இங்கிலீஷினால் சிறுமை என்ன?
தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?
நமது நாட்டுக்கு கமால் பாட்சா போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவனும் இல்லை என்பதால் பலமுண்டங்கள் பலவிதமாய் பேச முடிகிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது? என்று கேட்கிறேன்.
நம் மக்கள் வளர்ச்சியில் நாட்டம் வேண்டும்?
நம் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டிய நிலை இன்னும் வெகுதூரம் இருக்கிறது. அதனால் வேகமாய்ச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?
புலவர்களுக்கு (தமிழ் படித்து, தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கின்ற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?
இத்தனை காலமும் தமிழ் தோன்றிய 3000, 4000 ஆண்டுகாலமாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும் தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழர் சமுதாயத்திற்கு என்ன நன்மை என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால், இதுவரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.
முக்கியப் புலவர்களும் மத உணர்வுள்ள ஆரிய அடிமைகளே!
இன்று தமிழ் உலகில் தமிழ்ப் புலவர்களில் இரண்டு, மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் (1) தொல்காப்பியன், (2) திருவள்ளுவன், (3) கம்பன்.
இம்மூவரில்,
1. தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கண மாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.
2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.
3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள், தேச பக்தர்கள் பலர் போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான்! முழுப் பொய்யன்! முழுப் பித்தலாட்டக்காரன்! தன்னை பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூட சொல்லப் பயப்படும் கருத்துக்களையெல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்!
சாதியை, சாதித் தொழிலை ஆதரித்தவர்கள்
இம்மூவர்களும் சாதியையும், சாதித் தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் களே ஆவார்கள்.
சந்தர்ப்பம் நேரும்போது இக்கருத்தை நல்ல வண்ணம் விளக்கக் காத்திருக்கிறேன். இவர்களை விட்டுவிட்டு தமிழர்கள் இனி எந்தப் புலவனை, எந்த இலக்கியத்தை தமிழன் நன்மைக்கு ஆதாரமாக எடுத்துக் காட்ட தமிழபிமானிகள் என்பவர்கள் முன்வரப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்.
கம்பனுக்கு சிலை வைத்து மானம் கெடுவதா?
உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் இருக்கிறது என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.
இன்று நம் நாட்டில் சமதர்மம் என்பது, சாதியில் சமதர்மம், செல்வத்தில்; பொருளில் சமதர்மம் என்பது மாத்திரமல்லாமல், குணத்திலும் சமதர்மம் என்பதாகக் கருதப்படுகிறது.
பார்ப்பானும், “பறையனும்” சமம்; முதலாளியும், பிச்சைக் காரனும் சமம் என்பதோடு யோக்கியனும், அயோக்கியனும் சமம்; தமிழர் சமுதாயத்திற்கு நன்மை செய்தவனும் - கேடு செய்து கூலி வாங்கிப் பிழைப்பவனும் சமம்; சாணியும் சவ்வாதும் சமம் என்ற அளவுக்கு இன்று நம் நாட்டில் சமதர்மம் தாண்டவமாடுகின்றது.
மக்களிடம் சமத்துவம் ஏற்படுத்துவதற்கு
முட்டுக்கட்டை போடுவதா?
இது ஒரு புறமிருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக கீழ்மைப்படுத்தப்பட்டு இழி நிலையில் இருத்தப்பட்ட தமிழன் விடுதலை பெற்ற, மனிதத் தன்மை அடைந்த மற்ற உலக மக்களுடன் சரிசமமாய் வாழ வேண்டுமென்று உயிரைக் கொடுத்து சிலர் பாடுபடுகிறபோது இந்த தமிழ்ப் புலவர் கூட்டமும், அவர்களால் முட்டாள்களாக்கப்பட்ட தமிழர் கூட்டமும், தமிழ், தமிழ்மொழி, தமிழர் சமுதாயம் என்னும் பேரால் முட்டுக்கட்டை போடுவது என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றைக்குத்தான் தன்மான உணர்ச்சி வந்து மனிதத்தன்மை ஏற்படப் போகிறது?
பார்ப்பான் உன் தமிழை ஏற்கிறானா? ஏன்?
அடமுட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சா°திரங்களில் எழுதி வைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமல்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டாதவனாக ஆக்கி வைத்திருக்கிறானே!
இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டு விட்டு என்னிடம் வந்து மோதிக் கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? “நீ யாருக்குப் பிறந்தவன்?” என்று என்னைக் கேட்கிறாய். நான் கேட்கிறேன், உன் தமிழையும் உன்னையும் உள்ளே விடாமல், இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.
தமிழ்ப் படித்தவன் பலன் இதுதான்
புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொரு வனையும் பார்த்து, “நீ யாருக்குப் பிறந்தவன்” என்று கேட்கும் படி செய்கிறாயே; இதுதானா உன் தமிழின், தமிழர் சமுதாயத்தின் பெருமை?
தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானதெப்படி?
தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சா°திரம் எழுதி வைத்து, ‘கீதை’ வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பெண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றி சிறிதாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.
எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்னையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.
மனிதனுக்கு மானமே தேவை
யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.
அதையும் விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்குத் தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி.
ஈன சாதியாக்கிய முட்டாளை வணங்குவது ஈனமல்லவா?
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்கு பொத்துக் கொண்டது. ஆனால், தமிழன் ஈன ஜாதிப்பயல் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அதுமாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்ற வர்கள் காலில் விழுகிறீர்கள்; அவனை சாமி என்று கூறுகிறீர்கள்; பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்!
சிந்தித்துப் பார், நீ, நீங்கள் யார் என்று!
“வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் “இரு வருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவ சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும், அன்புச் சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப் பாருங்கள்.
உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாயிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ்சாதியார் என்பவர்களுக்கு சம சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலை பெற்று சுதந்தரமாய் வாழ வேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும், நமது சகோதரிகள் விஷயத்திலும், நம் பெண் குழந்தைகள் விஷயத் திலும் கவனிக்க வேண்டாமா?
- தந்தை பெரியார்
நூல் : தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?
ஆசிரியர் -தந்தை பெரியார்
- பெரியாரியம் blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக