மயிலை ஈ.முனிசாமி
(வாசக நேயர்களே,
ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.
இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.
திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)
பழந்தமிழர் இயற்கையையே தெய்வமாக வணங்கி வந்தனர்.
பின்னர் நம் முன்னோர் ஏற்றிப்போற்றிய தமிழ்க் கடவுள் முருகனே எனக் கூறுவாரு முளர். ஏனெனில் முருகன் என்ற தூய தமிழ்ச்சொல் அழகு எனப்பொருள் படுதலான். முரு கனைப் பற்றிய பொய்ப் புராணங்களும், முன் வழக்கி லில்லாத வழிபாட்டு முறைகளும் ஆரியர் வந்த பிறகே புனைந்துரைக்கத் தமிழர் அதை ஆய்ந்து பாராமல் ஏற்றனர் ஏமாந்து . மிகப் பழங்காலத்தில் தமிழ் நாட்டில் ஆலயங்கள் இல்லை. அசோக அரசர் தூபிகள் அமைத்துப் புத்த கோவில்களும், கல்வெட்டு உருவங்களும் நிறுவியதைக் கண்டு நம்மவரும் ஆரியர் தூண்டுதலால், அவரைப் பின் பற்றிக் கோவில்கள் கட்டினர் என்பது நாட்டு வரலாறு அறிந்த அறிஞர் கூறும் முடிபு. ஆரியர் மொழி கேட்டு, தமிழ் அரசர்கள் பல கோவில்கள் உண்டாக்கினர்.
அரசர் எவ்வழி குடிகள் அவ்வழி' என்ற முது மொழிக்கிணங்க பொதுமக்களும் ஆங்காங்கு ஆலயங்கள் கண்டனர். அதனால் மன்னரும் பிறரும் ஆரியர் தம் சூழ்ச்சி வலையில் சிக்கி மீள வழியறியாது, மனம் மாழ்கின்றனர். அதன் பயனாய் தமிழர் அறிவு மங்கியது, மூட நம்பிக்கை என்னும் படுகுழியில் வீழ்ந்தனர். பணம் பகற்கொள்ளை அடிக்கப் படுகிறது. செல்வர் வெளியிடங்களுக்குச் செல்லு வதன் நோக்கம், அவ்வவ்வூர்களின் இயற்கையழகினையும், நிலங் களின் தன்மையையும், மக்களுடன் அளவளாவிப் பழகு தலையும், கோவில்களிலுள்ள சித்திரக்கை வேலைப் பாடுகளையும், கண்டு களித்து அறிவைப் பெருக்கிக் கொள்ளுவதற்காகவே இருத்தல் வேண்டும்.
ஆரியர் கற்பனை
ஆனால் இக்காரணங்களை விளக்காது, தமிழரை ஏய்க்க வைகை, காவிரி முதலிய ஆறுகளில் நீராடல், மதுரை, காஞ்சி முதலிய ஊர்களில் உள்ள கடவுளை வணங்குதல், வீடு பெறற்கு வழி என ஆரியர் எழுதி வைத்தனர். தமிழர் நம்பினர். ஏழைகளும் மூடநம்பிக்கையால் தம் பெண்டு, பிள்ளைகளோடு பிரயாணம் செய்து வெறுங்கையோடு வீடு திரும்புகின்றனர். யாது பலன் பெற்றனரோ? அறிகிலோம்.
கோவில் நுழைவு, கடவுளுக்குக் கற்பூரம் காட்டல், அர்ச்சனை புரிதல் முதலிய முக்கிய மற்ற செயல்கட்கெல்லாம் பார்ப்பனர் காசை அட்டையென உறிஞ்சுகின்றனர். கடவு ளுக்கும் பூணூல் அணிவித்துப் புராணக் கதைகளிலும் கடவுள் பார்ப்பன வடிவுகொண்டு அடியார்க்கு உதவி செய்ததாக வரைந்து வைத்து மக்கள் தம்மை உயர் குலத் தினர் என எண்ணும் வகையில் ஆக்கம் தேடிக்கொண்டனர். நம் நாட்டில் தமிழர், விழா, அபிசேகம், திருப்பணிகள் முதலியவற்றின் பேரால் செலவழிக்கும் பொருளுக்குக் கணக்கே இல்லை. திருமயிலை, பெரிய குளத்தின் கருங் கற்படிகள் புதிதாக அமைத்த காலத்து இவ்வூர் செல்வம் மிகப்படைத்த ஆரியர் உறைவிடமாயிருந்தும், ஒருவராவது இத்திருப்பணிக்கு உதவ முன் வந்தாரில்லை. இதற்குக் குளக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் கல் மேல் எழுத்தே எடுத்துக் காட்டாக இலங்குகின்றது. பொது மக்களுக்குப் பயன்படும் இச்செயலுக்கும் உதவாத ஆரியர் தமிழரை ஏமாற்றிப் புண்ணியமுண்டு, புருடார்த்தமுண்டு எனக்கூறி அறச்சாலைகள் ஆக்கச் செய்கின்றனர். அப்பாவிகள் அவர்களே தங்கவும் உண்ணவும் எழுதி வைத்தாலும் அங்கு அவர்கள் தங்குவதற்கு இடமில்லை. தமிழர் அறம் பல புரிய ஆரியர் நலம் பல துய்க்கின்றனர். எல்லாவிடங் களிலும் அவர்கட்கே உரிமையும், முதன் மரியாதையும் எதற்கு? நம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர்க்கு ஆவன செய்யத் துணிந்து முற்படவேண்டும்.
எது கடவுள் தன்மை?
கடவுள் வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர். மூவாசை துறந்தவர், அவர் அருளுக்குரியவர், என நூல்கள் அறைகின்றன. ஆனால் அவற்றைக் கடந்து நிற்கும் கடவு ளுக்கோ சிற்றூர்கள் பலவுண்டு. ஆண்டு தோறும் திரும ணங்கள் நல்லோரையில் நடைபெறுகின்றன. விலையுயர்ந்த அணிகள் சாத்தப்படுகின்றன. என்னே! அறிவீனம். தமிழகத் தில் உள்ள சித்திர சிற்ப வேலைப்பாடமைந்த கோவில்களைப் போன்று உலகில் வேறெங்கும் கிடையாது. இத்திறன் திரா விடர் சீர்திருத்தத்தையும், நுண்ணறிவையும் தெள்ளென விளக்கும். நம் நாட்டில் உள்ள கோவில்கள் கணக்கிலடங்கா. அவற்றைப் பராமரிக்க முடியாது பாழாயின. பல செல்வர் மேலும் பெரும் பொருட்செலவில் கோவில்கள் ஆக்கு கின்றனர். உள்ள கோவில்கள் போதாதா ஊரைச் சுரண்ட. மக்கள் மனமே ஆண்டவன் கோவில். அன்பே கடவுள். கடவுள் உருவமற்றவர் எனத் தமிழ் நூல்கள் முறையிடு கின்றன. நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சூட் டியே, சுற்றி வந்து மொணமொணென்று சொல்லு மந்திர மேதடா! நட்ட கல்லும் பேசுமோ? நாதனுள்ளிருக்கையில்" எனக் கூறிச் சென்றனர், தமிழ்ச் சித்தர். மக்களுக்கு நல் அறிவூட்டும் பல சித்தர்கள் பாடிய செய்யுட்களைத் தமிழர் படிக்க வேண்டும். அறிவைத் துலக்கி ஆண்மையுடன் நடக்க வேண்டும்.
இந்த மனப்பான்மை ஒழிய வேண்டும்
கடவுள் நம்மிடமிருந்து எதையும் வேண்டுகின்றாரில்லை. நாமே நம் மூடப்பழக்கத்தால் பணத்தைப் பாழாக்குகிறோம்; அறிவை அடகு வைக்கிறோம். தமிழர் கடவுள் இல்லை எனக் கூற வரவில்லை . ஆனால் கடவுளின் பேரால் ஒரு கூட்டத்தார் பல வழிகளிலும் வஞ்சித்துப் பொருளைப் பறிப்பதையும், பாழாக்குவதையுமே வலுவாகக் கண்டிக் கின்றனர் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன? மக்களுள் வேற்றுமை பாராட்டாமை, ஏழைகளைக் காத்தல், உயிர் இரக்கம், வஞ்னையழுக்காறு இன்மை, பிறவும் ஆகும். இவற்றை மக்கள் எண்ணாது, தாம் நாடோறும் புரியும் தீமைகட்குக் கழுவாயாக கடவுளுக்குச் சிறப்புச் செய்து விடுகின்றனர் போலும். இத்தகைய சிறப்புக்களை அவர் எதிர்பார்ப்பதுமில்லை; ஏற்பதுமில்லை. அடியோடு ஒழிய வேண்டும், இம்மனப்பான்மை. நம்நாட்டில் குடிக்கக்கூழின்றி உடுக்க உடையின்றி, படுக்கப் பாயின்றி, இருக்க இல்லிட மின்றி மக்கள் ஏங்கிக்கிடக்க, இவற்றை நீக்க நினையாது, கடவுளுக்குப் பாலும், தேனும், பழமும் சொரிந்து நீராட்டி மகிழ்கின்றனர். திருவிழாக்களில் வாணவேடிக்கைக்குப் பெரும் பணம் செலவழித்து, காசைக்கரியாக்கிக் களிக்கின் றனர். கோவில்களில் கடவுளுக்குத் தளிகையிடும் தமிழர், ஆரியர் வயிறுபுடைக்க உண்பதையும், தமிழர் பார்த்து நிற் பதையும், தவிர வேறு என்ன கண்டனர்? மஞ்சள் ஆடை யுடுத்தித் தெருத்தெருவாகச் சுற்றிக் காசையும் ஆபரணங் களையும் காணிக்கையாக அள்ளி உண்டியலில் இடுகின்ற னர். ஓர் ஆரியராவது இச்சீர்த்திருத்தமற்ற செயலை மேற் கொள்வதைக் கண்டிலோம். தம் வரவுக்கு வழிகோலிக் கொண்டு சமயப்பற்றால் செய்யும் பயனற்ற செலவுகளைச் செய்யாமல் சிக்கன முறையைக் கையாளுவதாற்றான் ஆரியர் செல்வந்தராய் நாளுக்குநாள் உயர்வடைகின்றனர். அஃதில்லாமைபால் தமிழர் சீர்கேடுற்று வறிஞராய் வாடு கின்றனர்.
தரகர் வேண்டாம்
கடவுளுக்கும் நமக்கும் இடையே தரகர் வேண்டுவ தில்லை. கோவில்களில் நம்பிக்கையுள்ளவர் தாமே சென்று தேங்காய் உடைத்துத் தமிழ்ப்பாக்கள் இசைத்துக் கடவுளைத் தொழல் சாலச்சிறந்தமுறை. செத்த மந்திரத்தைச் செப்புவதற் குப் பணத்தைத் தந்து மன நிறைவு கொள்ளுதல் தகாது. இச்சூழ்ச்சியினின்று தப்பி எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும். கோவில்களில் கோடிக்கணக்கான பொற்காசுகள் மதிப்புள்ள நகைகள் ஒரு பயனுமின்றி ஆலய இரும்புப் பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆலய அதிகாரிகள் பல துறைகளில் கிடைக்கும் வருவாயை ஏழை மக்கள் விடுதிச்சாலைகட்கும் தாழ்த்தப்பட்டார் நலனுக்கும், மருத்துவச் சாலைகட்கும் தமிழ்க் கல்விச் சாலைகட்குமாயினும் பயன்படும்படித் திட்டம் வகுக்கின்றனரா? அதுவு மில்லை. தமிழர் அறப்பணத்தில் ஆரியருக்கு மறை பயிலும் பள்ளிகள் உண்டாக்கி, அன்னமிட்டு மேலும் ஆக்கம் அளிக்கின்றனர்; பாம்புக்குப் பால்வார்த்து வளர்ப்பது போல.
பெரியாரைப் பின்பற்றுங்கள்
ஆதலால் தமிழர் தம் அறிவைப் பெருக்கிக் கடவுள் வழிபாடு, அபிசேகம், விழா, வாண வேடிக்கை, தளிகையிடல், வேண்டுதல், செலுத்தல் முதலியவற்றின் செலவை அறவே நீக்கி உயிர்கள் உய்யும் வழியில் பொருனைப் பயன்படுத்தி உதவ வேண்டும். நம்பிக்கை கொண்டவர் மிகமிகக் குறைந்த அளவில் செலவு செய்தேனும் நிலை குன்றாது நிற்றல் வேண்டும்.
தன்னறிவியக்கத் தந்தை மூடப்பழக்க வழக்கத்தையும், மனவிருளையும் ஒழித்து நல்வழியைப் பின்பற்ற வருமின் எனத் தமிழரை அழைக்கின்றார். மக்கட்கு நல்லறிவு தலைப் படின் தம் மதிப்பும், சுரண்டலும் நிலை குன்றிப்போமோ! என ஏக்கமுறும் ஆரியரும், பட்டம், பதவி, பெருமையை விரும்பி, அவர் வால் பற்றித் திரியும் சில தமிழரும், மாசிலாமணிக்கு, நாத்திகப் பட்டம் சூட்டி மக்கள் வெறுக்கும் வகையில் பொய்க் கற்பனைகள் புகல்கின்றனர். அப்புல்லர், வெற்றுரைகளைப் பொருட்படுத்தாது, தமிழர் நலனுக்கா கவே நானிலத்தில் தோன்றி, அல்லும் பகலும் உழைத்துவரும் பெரியார் அறிவு மொழிகளைச் செவியிற்புகுத்தி, அகத்தில் இருத்தி, நன்னெறியில் நின்று, நாட்டைச் செழிக்கச் செய்து, பண்டைப் பெருமையும், செல்வமும் பெற்று எழில் மிக்க வாழ்வை அடை வாராக!
- விடுதலை: 9.4.1940
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக