பக்கங்கள்

வெள்ளி, 27 நவம்பர், 2015

நீதிக்கட்சி தமிழுக்கு என்ன செய்தது?


 திராவிடர் இயக்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் தமிழுக்கு என்ன செய்துவிட்டது என்று கேள்வி எழுப்பு வோர்க்கூட நாட்டில் முளைத்திருக்கிறார்கள். ஒன்று அறியாமையாக இருக்கவேண்டும் அல்லது கெட்ட நோக்கம் இருக்கவேண்டும்.
1857 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சென்னைப் பல் கலைக் கழகத்தில் தமிழுக்கு இடம் கிடைக்கச் செய் வதற்குக்கூட திராவிடர் இயக்கம்தான் காரணம் என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால், பி.ஏ. படிப்பதாக இருந்தாலும், இண்டர்மீடியட் படிப்பதாக இருந்தாலும், ஒரு செம்மொழி கட்டாயம் படித்திருக்கவேண்டும் என்ற போர்வையில் சமஸ்கிருதம் கட்டாயப் படிப்பாகி விட்டது.
தமிழ் - சமஸ்கிருதம் என்பதை மய்யப்படுத்தி சென்னைப் பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமே நீண்ட காலம் நடந்து வந்தது.
இதுபற்றி கு.நம்பி ஆரூரான் எழுதிய தமிழ் மறு மலர்ச்சியும் திராவிடத் தேசியமும் (மொழி பெயர்ப்பு, க.திருநாவுக்கரசு, ப.ஆனைமுத்து கிருஷ்ணன்) எனும் ஆய்வு நூல் அரிய தகவல்களைத் திரட்டித் தந்துள்ளது.
இந்த 1916-1917 காலகட்டத்தில்தான் சென்னை மாநகரில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் முளைத் தெழுந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே மொழியியல் அடிப்படையில் தொடர்ந்து பேசப்பட்டு வந்ததால், மூண்டெழுந்த திராவிட இன உணர்வை ஒருமுகப்படுத்தி வெளிப்படுத்த இது ஒரு வாய்க்காலாகப் பயன்பட்டது. சமஸ்கிருத ஆதரவாளர்களுக்கும், தாய் மொழிப் போராளிகளுக்கும் இடையே எழுந்த கருத்து மோதல்கள் - ஜாதி இனப் பூசல்களாக அடையாளப் படுத்தப்பட்டன.
பார்ப்பனர்கள் சமஸ்கிருத மொழியுடனும், பார்ப்பனர் அல்லாதார் தமிழ், பிற மாநிலத் தாய் மொழிகளுடனும் இணைத்துப் பேசப்பட்டார்கள்.
பி.ஏ. பட்டப் படிப்பில் கட்டுரைப் பாடமும், பி.ஏ. ஆனர்ஸ் படிப்புத் தொகுதியில் திராவிட மொழிகளைப் பயிலும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தரவேண்டும் என வேண்டி, வைஸ்ராய்க்கு ஒரு விண்ணப்பம் எழுதி அளிக்கவேண்டும் என்று 1918 இல் சென்னைத் திராவிட சங்கம் ஏற்பாடு செய்தது. அய்.சி.எஸ். தேர்விற்கான பாடத் திட்டத்தில் சமஸ்கிருதமும் ஒரு பாடமாக வைக்கப்பட வேண்டுமென்று இலண்டனில் உள்ள இம்பீரியல் கவுன்சில் நிர்வாகத்திற்கு வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி அளிக்க இருக்கும் விண்ணப் பத்தில் திராவிட மொழிகளையும் சேர்க்கவேண்டும் என்று சென்னைத் திராவிட சங்கம் வைஸ்ராய்மூலம் ஒரு கோரிக்கை வைத்ததாகவும் செய்திகள் வந்தன. பின் னாளில் பனகல் அரசர் என்று அறியப்பட்ட பி.இராமராய நிங்கர் திராவிட சங்கத்தின் அந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டு பேசுகையில், பார்ப்பனர் அல்லாத மக்களுக்குத் திராவிட மொழிகள்தான் முதன்மையானவை. சமஸ் கிருதத்தை ஏற்பதில் பல வகையான சமயம் சமூகம் சார்ந்த சங்கடங்களும், சிக்கல்களும் உள்ளன (மேற்கண்ட நூல் பக்கம் 138).
சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பி.ஆர்.சுந்தரம் அய்யர் இண்டர் மீடியட் தேர்வில் இரண்டாம் மொழி பாடத்துக்கான (தாய் மொழியில் - அதாவது தமிழில்) கட்டுரைத் தாளை நீக்கிவிடவேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு ஆதரவாக 22  வாக்குகளும், எதிர்த்து 15 வாக்குகளும் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேறியது. பல்கலைக் கழகம் அமைத்த ஆய்வுக் குழுவின் அறிக் கையைக் குறிப்பிட்டு, சமஸ்கிருதக் கல்வியை ஊக்குவிப் பதற்காக இண்டர்மீடியட் வகுப்பில் தாய்மொழிக் கட்டு ரைத் தாளைத் தேர்விலிருந்து நீக்கவேண்டும் என்று கடுமையாக வாதிட்டார்.
தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய சி.ஜோதிராவ் இந்தியாவின் இலக்கியம், தத்துவம், சமயம் ஆகிய எல்லாமே சமஸ்கிருதத்தோடு பின்னிப் பிணைந்து கிடக் கின்றன. சமஸ்கிருத மொழியறிவு இல்லாமல் இவற்றை யெல்லாம் எப்படிக் கற்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
இப்படிப் பச்சையாக தமிழ் - சமஸ்கிருதப் போராட்டம் - பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமாக அந்தக் காலத்தில் நடந்து வந்திருக்கிறது.
நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு - தமிழின் கை ஓங்கியது.
1923 இல் நீதிக்கட்சி ஆட்சி இயற்றிய சென்னைப் பல்கலைக் கழகச் சட்டம் - சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் அமைப்பையே புரட்டிப் போட்டு, பல்கலைக் கழக சிண்டிகேட்டின் நடவடிக்கைகளை மேலாய்வு செய்யும் அதிகாரத்தையும் வழங்கியது. உண்மையில் இதுதான் திருப்புமுனையாகும்.
நீதிக்கட்சித் தலைவர்கள் ஆர்.வெங்கட் ரத்தினம் நாயுடு, என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் இப்படிப் பல பார்ப்பனர் அல்லாத அறிஞர் பெருமக்கள் போராடிப் போராடித்தான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இடம்பெற வழிவகுத்தார்கள்.
தமிழில் வித்வான் பட்டம் பெறுவதற்குக்கூட சமஸ் கிருதம் படிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது என்றால், அக்கால நிலையைப் புரிந்துகொள்ளலாமே!
மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300. தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயம் முதலியாருக்கோ மாதச் சம்பளம் ரூ.81. என்ன கொடுமை இது! இதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் - மாற்றி அமைத்தவர் நீதிக்கட்சி முதலமைச்சர் பனகல் அரசர்.
இந்த வரலாறுகளை எல்லாம் தெரிந்துகொள்ளாமல் தமிழுக்கு நீதிக்கட்சி என்ன செய்தது - திராவிடர் இயக்கம் என்ன செய்தது - பெரியார் என்ன செய்தார் என்று கேட்பது அறியாமை அல்லது அழுக்காறாகத்தான் இருக்க முடியும்.
-விடுதலை,25.11.15

ஞாயிறு, 22 நவம்பர், 2015

தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்தும் நாடு

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது


உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.
அது மொரீசியசு  மட்டுமே. (தமிழ் எண்கள் 0, -1, - 2,- 3, -4, -5, -6,7, -8, -9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் (ரூ.10 தமிழில்) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண் களை பயன்படுத்துவது பெருமைக் குரியதே. மொரீசியசில் 30,000_க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
-விடுதலை ஞா.ம.12.1.13

உலகச் செவ்வியல் மொழிகள்


கீழ்க்காணும் ஆறு மொழி கள் செவ்வியல் இலக்கியம் கொண்ட மொழிகளாக அறி ஞர்களால் பேசப்படுகின்றன.
1. கிரேக்கம், 2. இலத்தீன், 3. வடமொழி, 4. தமிழ், 5. ஹீப்ரு, 6. சீனம்
தமிழைப் பொறுத்தவரை, பத்துப்பாட்டு, எட்டுத் தொகையைக் கொண்ட சங்க இலக்கியம் செவ்வியல் இலக் கியமாகக் கருதப்படுகிறது. கி.மு. இரண்டாவது நூற்றாண்டு முதல், கி.பி. மூன்றாவது நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான காலப் பகுதி செவ் வியல்  காலமாகக் கணிக்கப் படலாம். எனினும், பிற்பகுதி பற்றிய தெளிவான கருத்து இல்லை. இது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
டாக்டர் கமில் ஸ்வல பில், டாக்டர் ஜார்ஜ் ஹார்ட், டாக்டர் ராமானுஜன், டாக்டர் ஆஷர் போன்ற பல அறிஞர்களால் பண்டைத் தமிழ், செவ்வியல் மொழி என மதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே உள்ள இந்த உலக அங்கீகாரத்துக்கு மகுடமாக, இந்திய அரசு அதன் 12.10.2004 நாளிட்ட ஆணையில் தமிழின் செவ்வியல் தன்மையை அரசு மட்டத்தில் அங்கீகரிப்பதாக அறிவித்தது. அகில உலக அளவில், தேசிய அளவில், தமி ழன் தகுதிநிலை பின்வருமாறு:
உலகில் ஏறத்தாழ 6000 மொழிகள் இருக்கின்றன. அவற்றில், ஆறு மொழிகள் மட்டுமே செவ்வியல் மொழி கள் எனும் தகுதிக்குரியவை. அவற்றுள் தமிழும் ஒன்று.
இந்திய அரசமைப்பில் இன்று (2005) இருபத்து இரண்டு மொழிகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் செவ்வியல் மொழி எனும் தகுதியுடையவை இரண்டு, அவற்றுள் தமிழும் ஒன்று; மற்றொன்று வடமொழி.
இவ்வகைச் சிறப்புகட்குரிய தமிழ் நம் தாய் மொழி. நாம் நியாயமாகப் பெருமைப்படத் தக்க பாரம்பரியச் சொத்து.
(டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் தமிழ்வளர்ச்சி மேம்பாடு + பயன்பாடு = வளர்ச்சி ஒரு தமிழ் வளர்ச்சிப் பனுவல்).
-விடுதலை ஞா.ம.,12.1.13

தமிழர் பண்பாடு

தமிழர் பண்பாடு கால அமை வில் மாற்றங்கள் அடைந்துள்ளதா எனும் வினாவிற்கும், மாற்றம்  அத்துணை அடைந்துவிட வில்லை; ஆனால் வளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறுதல் வேண்டும். வட ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்த காலத்திலும், சமணர், ஐரோப்பியர் ஆகிய பிற நாட்டார் செல்வாக்கடைந்த காலத்திலும் தமிழர் பண்பாடு அடிப்படைக் கொள்கைகளில் அவ்வளவு மாற்றம் அடைய வில்லை. பிற சமயங்களைப் போதித்த பார்ப்பனரும்,  சமணரும், புத்தரும், ஐரோப்பியக் கிறிஸ் தவரும், மகமதியரும் தமிழர் பண்பாட்டைத் தழுவ முயன்றனர். இந்து சமயத்தின் வழிபாட்டு  முறையும், இலக்கியங்களும் தென்னாட்டுத் தத்துவங்களால் வளம் பெற்றன. வடமொழியில் உள்ள சமய இலக்கியங்கள் பல, சங்கரர், இராமாநுசர், மாதவர் போன்ற தென்னாட்டவரின் மூல மாகத் தென்னாட்டுத் தத்துவங்கள் வடமொழியில் இடம் பெற்றன. சுநீதிகுமார் சட்டர்ஜி, இந்தியப் பண்பாட்டின் எழுபத்தைந்து விழுக்காடு - _ திராவிடப் பண்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். சாத் தனாரியற்றிய  மணிமேகலையை யும், வீரமாமுனவரியற்றிய தேம் பாவணியையும், உமறுப்புலவர் இயற்றிய சீறாப் புராணத்தையும் ஆராயும் காலை, இவர்கள் தம் சமயங்களின் கோட்பாடுகளைக் கூறினாலும், தமிழர் பண்பாட்டை எங்ஙனம் விளக்கியுளாரென்பதும் புலனா கின்றது.
- மறைத்திரு தனிநாயகர் அடிகளார்
-விடுதலை ஞா.ம.12.1.13

திருவள்ளுவர் ஆண்டு


- மறைமலையடிகளார்
வள்ளுவனார் இற்றைக்குக் குறைந்தது 1900 ஆண்டுகட்கு முன் பிறந்தவர் என்பது பற்றி யான் விரி வான ஆராய்ச்சி செய்து, திருக் குறளாராய்ச்சி என்று முன்னர் எழு திய முற்பகுதியிலும், மாணிக்க வாசகர் காலமும் வரலாறும் என்ற நூலிலும் எழுதியுள்ளேன். அவற்றிற் குறித்துள்ள சான்றுகளை எல்லாம் ஈண்டெடுத்துக் கூறி விளக்கக் காலம் போதாது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதி கார ஆசிரியராகிய இளங்கோவடிகள் காலத்திலேயே எழுதப்பட்ட நூலாகும் என்பது சிலப்பதிகாரத்தின் இறுதியில் ஆசிரியர் மணிமேகலை மேலுரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் என்பதனால் அறியப்படும் நூலொன்றை இயற்ற எண்ணங் கொண்டவராய் ஆசிரியர் கோவலன் கதையைக்கூறி, அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதும் உரைசால் பத்தினிக் குயர்ந்தோரேத்தலும், ஊழ் வினை யுருத்துவந்தூட்டு மென்பதூஉஞ், சூழ் வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதிகாரமென் னும் பெயரானாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென, முடிகெழு வேந்தர் மூவர்க்குமுரிய தடி கணீரே யருளுக என உரைசால் அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன், என் பது உற்று நோக்கற்பாலது.
சாத்தனார் பாண்டியன் அவைக் களப் புலவர்; அவர் சிலப்பதிகாரம் இயற்றப்புகுவராயின் பாண்டியனைக் குறைத்துப் பேச நேருமாதலால் அதற்கு உளமிசையாராய், இளங் கோவடிகளைப் பாடச் சொன்னார் என்பதும், துறவிக்கு வேந்தன் துரும் பாதலின், துறவியாகிய அடிகட்கு அஃது எளிதாம் என்பதும் உய்த் துணரற் பாலனவாம். வேந்தர் மூவர்க்குமுரிய தடிகணீரே யருளு கென்றாற்கு என்பதற்குரை கூற வந்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தான் பாடக் கருதி வினாவின் சாத்தற்கு அங்ஙனங் கூறாது இங்ஙனக் கூறினாரென்க என் சொல்லியவாறோவெனின் இச்செய் கின்ற காப்பியம் மூவேந்தர்க்குமுரிய தென்பதனால் ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின், யாம் காப்பியஞ் செய்யக் கடவேமென்பது கருதி, நீரே, அருளுகென ஏகார வினாப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடம்பட்டாரென் பதாயிற்று என ஊரை எழுதிப் போந்தமையுங் குறிப்பிடற்பாற்று.
இளங்கோவடிகள் சேர நாட்டில் வஞ்சி நகரத்திலிருந்து அரசு புரிந்த சேரலாதனென்னும் அரசனுடைய இளைய மகனார்; சேரன் செங்குட் டுவனின் இளவல் ஒரு நாள் அரச வையில் இவர் தம் தந்தையுடனும் தமையனுடனும்  வீற்றிருந்த காலை ஒரு நிமித்தகன் வந்து இவரை அடி முதல் முடி வ ரை நெடிது நோக்கி, அரசு வீற்றிருக்கும் இலக்கணம் இவர்க்குண்டென, அதுகேட்ட தமையன் செங்குட்டுவன் அழுக்காறு மிகுந்த கண்ணெரி தவழ அண்ணலை, நோக்குவதைக் கண்ட இவர். உடனே தமையனுக்குத் துன்பம் வராதபடி அரசு துறந்ததைக் கூறிக் குணவாயிலிற் சென்று துறவு பூண்டு.
சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத் தந்தமி லின்பத்தரைசார் வேந்த ராயினார். இத்தகைய பெரியாராகிய இளங்கோவடிகளும் கூலவாணிகள் சாத்தனாரும் சிலப்பதிகாரக் கதைத் தலைவியாகிய கண்ணகிக்குக் கல் நாட்டு விழா நடைபெறுங் காலை இலங்கைக் கயவாகு முதலாவன் வந்திருந்தான் என்று குறிப்பிடப்பட் டுள்ளது.
அவனுடைய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று இலங்கை மகா  வமிசத்தினாலும் பிற ஆராய்ச்சியினாலும் கணிக்கப் பட்டுள்ளது. எனவே, சிலப்  பதிகார காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது பெறப்படும்.
அக்காலத்தே சாத்தனார் பாத்திரமாகிய மணிமேகலை யுமாகும். அம்மணி மேக லையில், தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுதெழு வாள். பெய்யெனப் பெய்யும் பெருமழை  யென்றப் பொய்யில் புலவன் பொருளுரை என்று திருவள்ளுவரையும் அவர் நூலாகிய திருக்குறளையும் ஆசிரியர் சுட்டிக் கூறியுள்ளார்.
எனவே, திருவள்ளுவனார் காலம் 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பது எளிதிற் பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 31ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான்  ஆராய்ந்து கண்ட முடிவாகும்.
-விடுதலை ஞா.ம.,12.1.13
இந்த 60 ஆண்டு  சுழல் முறை யால் தமிழ்மொழி, மரபு, மாண்பு, பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும், இழிவும் எண்ணிப் பார்த்து, சிந்தித்து, உணர்ந்து, தெளிந்த தமிழ்  அறி ஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச் சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலைஅடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
திருவள்ளுவர் பெயரில் தொடர்  ஆண்டு  பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.
இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்று முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களை வினவினேன். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும் என்று விளக்கம் தந்தார்.
இந்த முடிவு செய்தவர்கள் தலைமையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் கா. நமச்சிவாயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.
1921ஆம் ஆண்டில்  நடந்த மாநாட்டில் எடுத்த முடிவை 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க் கடல்  மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள் ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்துவ ஆண்டுடன்  31அய்க் கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர்  ஆண் டைத் தொடங்கி வைத்தார்.  1935+31 = 1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம்  மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். புதன் - அறிவன்; சனி - காரி. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2006+31=2037. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு  அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழி லும்  1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டுமுதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்  முதல் நாள் பொங்கல் நன்னாள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்  நாளே தமிழ்ப் புத்தாண்டு
- புரட்சி கவிஞர் பாரதிதாசன்
-விடுதலை ஞா.ம.,12.1.13

புரட்சிப் பொங்கல்! - கவிதை



தமிழ்ப் பண்பாட்டுத் தோட்டத்தில்
தறுதலைக்  கள்ளிகளா?
தமிழினம் என்ன
ஆரியப் பண்பாட்டு
அடுப்பெரிக்கும் சுள்ளிகளா?
அவிழ்த்துவிட்ட நெல்லிகளா?
பயிரிடுதலைப் பாவமென்று
பாரினில் சொன்ன கூட்டம்
பார்ப்பனக் கும்பலின்றி
யாரேனும் உண்டா சொல்வீர்!

பயிரிடுதல் இல்லை யென்றால்
பச்சரிசி ஏது -
பார்ப்பனக் கூட்டமே!
அக்கார அடிசில் ஏது
அக்கிரகார ஆட்டமே!
சுரண்டுகின்ற தொழிலாலே
சுருக்கு மாட்டி
திராவிடத்தைத் தின்னவந்த
தீவட்டிக் கொள்ளைக்காரன்
தை முதல் நாள்
பொங்கல் என்றால்
தை தையென்று
குதிக்கின்றான்
தணல் முகத்தால்
தமிழனைத் தகிக்கின்றான்
சித்திரையென்று சொல்லி
சிறு புத்தி காட்டுகின்றான்
நாரதன் என்ற
தடியனுக்கும்
கிருஷ்ணன் என்ற - பெண்
கிறுக்கனுக்கும்
பிறந்த பிள்ளை அறுபதாம் - சுத்த
புராணப் பிதற்றல்!

தமிழ் வருடம் என்று - நம்
தலையில் கட்டுகிறான்
தன்மானம் உமக்கேதென்று
தலையிலும் குட்டுகிறான்
தமிழ் ஆண்டாம் - ஆனால்
மருந்துக்கும் ஒரு பெயர்
தமிழில் இல்லை,
தடிப் போத்தா தமிழனெல்லாம்?
நம்மைக் கிறுக்கன்
என்றா நினைத்தான்?
நாடு நமது
நாவின் தேரில் நடன மாடுவது - நமது
தேன் தமிழ் தென்றலன்றோ!

செத்துப்போன
சவமாம் சமஸ்கிருதத்தை
ஜிகினா தேரில் ஏற்றி
சித்து வேலை காட்டுகின்றான்
எட்டப்பன்களும்
எம்மினத்தில் பிறந்த
மட்டப்பன் களாம்
வீடணர்களும்
தோளினை இரவல் தந்து
தொழும்பனாய்க் கிடக்கின்றானே!

ஏடா, தமிழா!
எழு கதிர் நீ!
ஈரோட்டுச் சாணையில்
எழுந்த பெருந் தீ
போர்ச் சங்கு ஊது!
புரோகிதக் கூட்டம்
புற முதுகிட்டு ஓட
புதுநானூறு படைப்போம்!

தை முதல் நாள்
தமிழன் ஆண்டுக்கு
முதலெழுத்து!
உழவன் விழாவிற்கு
உயிர் எழுத்து!
தமிழர் வாழ்வுக்கோ
மெய்யெழுத்து!
புரட்சிப் போருக்கோ
ஆயுத எழுத்து!

பொங் கட்டும்
புது வெள்ளம்!
தங்கட்டும் நெஞ்சில்
தமிழ்வெல்லம்!
பொங்கலோ பொங்கல்
புரட்சிப் பொங்கல்!
- கவிஞர் கலி. பூங்குன்றன்
-விடுதலை ஞா.ம.,12.1.13

திங்கள், 16 நவம்பர், 2015

தாலி பல்கோணப் பகுத்தாய்வு



    தந்தை பெரியார் அவர்கள் தன்மதிப்பு இயக்கத்தை உருவாக்கி, வளர்த்து, இந்த மண்ணில் புரட்சி செய்தவர். அவர் சீர்திருத்தக்காரர் அல்லர்; புரட்சிக்காரர்.
    தன்மான உந்தலினால் உருவாக்கப்பட்டதே தன்மதிப்பு (சுயமரியாதை) இயக்கம். தன்மானம், தன்மதிப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும் என்பது அதன் பொருள்.
    ஒரு மனிதர்க்குள்ள உணர்வுகள் மற்ற மனிதர்க்கும் உண்டு என்பது அதன் அடிப்படை. மனிதன் என்னும்போது ஆண், பெண், மதம், ஜாதி, இனம் என்ற பிரிவுகளில் இன்று தொகுக்கப்படுகிறான்.
    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த ஜாதியினராக இருந்தாலும், எந்த இனத்தவராக இருந்தாலும், அவர்கள் மனிதர்கள். அவர்களுள் இந்த வேற்றுமைகள் கற்பிக்கப்பட்டாலும் உணர்வால் ஒரே இயல்புடையவர்கள் என்ற உண்மையை ஏற்று உருவாக்கப்பட்டதே திராவிடர் கழகம் என்னும் தன்மதிப்பு இயக்கம்.
    பிறர் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அப்படி நீங்கள் பிறரிடம் நடந்துகொள்ளுங்கள் என்ற பெரியாரின் வாழ்க்கை நெறி இதனடிப்படையில் அவரால் சொல்லப்பட்டதாகும்.
    இதன்படி, ஒருவருக்குள்ள உரிமை மற்றவர்க்கு உண்டு, ஒருவருக்குள்ள உணர்வு, எதிர்பார்ப்பு மற்றவர்க்கு உண்டு. மனிதர்கள் அனைவரும் சமம். இதில் ஒருவருக்கொருவர் இழிவு செய்வது, ஏற்றத்தாழ்வு கற்பிப்பது, ஆதிக்கம் செலுத்துவது, அடிமைப்படுத்துவது, அடக்கி ஆள முயல்வது எல்லாம் மனித எதிர் செயல் மட்டுமல்ல, மாபெரும் அநீதி.
    இந்த அடிப்படைதான் எதுவும் சரியா? தப்பா? வேண்டுமா? வேண்டாமா? ஏற்றதா? ஏற்கத்தகாததா? கொள்ளத்தக்கதா? தள்ளத்தக்கதா? செய்யலாமா? செய்யக்கூடாதா? என்பனவற்றைத் தீர்மானிக்கிறது.
    அப்படி அணுகிப் பார்க்கின் தாலி என்பது பெண்ணுக்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதும் பரிசீலிக்கப்பட, விவாதிக்கப்பட வேண்டும்.
    ஆனால், தாலி பெண்ணின் பக்திக்குரியதாக, புனிதமாக, அஞ்சத்தக்கதாக மூளைச் சலவை செய்யப்பட்டு, திருமண நிகழ்வோடு, ஆணின் ஆயுளோடு முடியப்பட்டு விட்டதால், அதை அகற்றுதல் என்ற முடிவு வரும்போது பல்வேறு கோணங்களிலிருந்து மறுப்பு எதிர்ப்பு, கண்டனம் வருகிறது.
    குறிப்பாக இது புனிதம்; மரபு; அடையாளம்; பரிசு என்று பலவாறு குறிக்கப்பட்டு, எனவே, அது கட்டாயம்; அதை அகற்றுவது கூடாது என்ற கண்டனங்கள் எழுகின்றன.
    எனவே, இவை அனைத்துக்கும் விடைகண்டு, விளக்கப் பெற்று, தாலி வேண்டுமா என்பதில் முடிவு காண வேண்டும் என்பதாய் அந்த வகையில் இந்த ஆய்வு அமைகிறது.
    தாலி கட்டுவது தமிழர் மரபா?
    தாலி தமிழர்க்கு ஆதிகாலந்தொட்டு வழக்கில் உள்ளதா? அல்லது பாதியில் வந்த பழக்கமா? என்ற கேள்விக்கு விடைகாண வேண்டுமானால் அதற்கு இலக்கிய ஆய்வே துணை நிற்கிறது.
    எதற்கெடுத்தாலும் இது மரபு; இது எங்கள் கலாச்சாரம், எங்கள் வழக்கம் என்று வரிந்துவந்து நிற்கின்றனர். ஆனால், அப்படிப் பேசும் எவர்க்கும் வரலாறும் தெரியாது, இலக்கியமும் தெரியாது. ஆனால், தப்புத்தப்பாய்ச் சொல்லி மக்களை நம்பச் செய்வர்.
    எனவே, இதுபோன்ற உண்மைக்கு மாறான கருத்துப் பரப்பல், மூளைச் சலவை செய்தல் போன்றவற்றை முறியடித்து முற்றுப் புள்ளி வைக்க சரியான, முறையான, ஆதாரப்பூர்வமான ஆய்வும், விளக்கமும் கட்டாயத் தேவை என்பதால், அந்த அடிப்படையில் இச்சிக்கலுக்கு இங்கு விளக்கமும் விடையும் அளிக்கப்படுகிறது.
    தாலிபற்றி வாதமும் எதிர்வாதமும்:
    தாலிபற்றிய விவாதம் இன்றைக்கு வந்ததல்ல. 1954லே இது சூடுபறக்க விவாதிக்கப்பட்ட பொருள்.
    தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார் அவர்கள், மதுரைத் திருவள்ளுவர் தமிழ்க் கழகத்தில், 1954ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தென்னிந்திய வரலாறும் தமிழிலக்கியமும் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகையில், சங்க காலத்தில் கி.பி.10ஆம் நூற்றாண்டு வரையில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இல்லையென்றும்,
    அதன் பின்னரே தாலிகட்டும் வழக்கம் வந்தது என்றும் இதற்கு இலக்கியத்தில் வலுவான சான்றுகள் உள்ளன என்றும் கூறினார். இச்செய்தி தினத்தந்தியில் வெளிவர, ம.பொ.சிவஞானம் அவர்கள், இது உண்மைக்கு மாறானது என்று மறுத்து, 25.10.1954 தினத்தந்தி தீபாவளி மலரில் கட்டுரை எழுதினார். ம.பொ.சி.யின் கட்டுரையைக் கண்ட கண்ணதாசன் தென்றல் ஏட்டில் மறுப்புக் கட்டுரை எழுதினார்.
    ம.பொ.சி.க்கு கண்ணதாசன் மறுப்பு
    ம.பொ.சி எப்போதும் ஆரியப் பார்ப்பனர்களின் ஆதரவாளர். திரிபுவாதங்கள் செய்வதில் வல்லவர். ஆனால், இவரது சூழ்ச்சி வாதம் கண்ணதாசனிடம் எடுபடவில்லை. கிடுக்கிப்பிடி போட்டு, ம.பொ.சி.யை மடக்கி, மறுப்பு எழுதுகிறார் கவிஞர் கண்ணதாசன்.
    தமிழர்க்குத் தாலியுண்டு, அதற்கு இலக்கியச் சான்று உண்டு என்ற ம.பொ.சி.யின் கருத்துக்கு, அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன், தமிழர்க்குத் தாலியில்லை, அதற்கு இலக்கியத்தில் சான்றே இல்லை, ம.பொ.சி. முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார் என்று தனது கடுமையான, விளக்கமான மறுப்பை வைக்கிறார். கண்ணதாசனின் மறுப்பு இதோ:
    தோழர் சிவஞானமும் தமிழன் தாலியும்
    தமிழ்ப் பண்பாட்டில் தாலிகட்டும் வழக்கம் உண்டா? இதுபற்றி பல பெரும்புலவர்கள் ஆராய்ந்தனர். மிகப் பெரும்பாலோரின் முடிவு, தாலிகட்டும் வழக்கம், தமிழ் வழக்கம் அல்ல என்பதே.
    தமிழன், தாலி கட்டியதாகவோ, திருமணத்தின் புனிதத் தன்மைக்கு அது நீங்காத சின்னம் என்பதாகவோ தமிழ் வரலாறு எதுவும் குறிப்பிடவில்லை. இதனையே, அண்மையில், மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராயிருக்கும் தோழர், டாக்டர் ராசமாணிக்கனார் அவர்கள் உறுதிப்-படுத்தினார்கள்.
    அதாவது, பழங்காலத்தில் தமிழர்களிடையே தாலி கட்டும் வழக்கம் இல்லை என்றும், எட்டாம் நூற்றாண்டிற்கூட, தமிழர் திருமணமுறையில், சடங்குகள் சில இருந்தன என்றும், தாலி கட்டும் வழக்கம் இல்லையென்றும் உரைத்தார்கள்.
    இதனை எதிர்த்து தாலியின் சார்பில் வழக்காட விரும்பிய தமிழரசுப் பெருந்தகையாளர் தோழர் ம.பொ.சிவஞானம் அவர்கள், தாலி கட்டும் வழக்கம் இருந்தது என்பதற்கு ஆதாரமாக, சிலம்பு முதல், கம்பனின் புலம்பல் வரை உள்ள இலக்கியங்களில் இரண்டு மூன்றிலிருந்து ஆதாரம் காட்டியுள்ளார்கள். (இது 25.10.54 தினத்தந்தியில் வந்துள்ளது.)
    அந்த ஆராய்ச்சி எவ்வளவு வழுவுள்ளது _ எவ்வளவு குறைபட்ட ஆராய்ச்சி என்பதைக் கூறுமுன், அவர் ராசமாணிக்கனார் பற்றிக் கூறிய முதற் கருத்தையும் ஆய்தல் வேண்டும். முதன்முதலாக அவர், தமிழினத்தின் வாழ்வை ஒட்டிய பழக்க வழக்கங்கள் பற்றி, தெளிவாக எழுதப்பட்ட வரலாற்று நூல் நம்மிடம் இல்லை.
    இதனால் பெரும்புலவர்கள் கூட சிலசமயம், உண்மைக்கு மாறான கருத்துகளை வெளியிடுவதைக் காண்கிறோம் என்கிறார்.
    இதில் அவர், பெரும்புலவர்கள் என்ற வார்த்தையில் உள்ளடக்கியவர்களில், தோழர் ராசமாணிக்கனாரும் ஒருவர் என்பது அவர்தம் உரையால் அறியக் கிடக்கின்றது. அத்தகைய பெரும்புலவர், ராசமாணிக்கனார் உண்மைக்கு மாறான கருத்தை வெளியிட்டு விட்டார் என சிவஞானம் கூறுகிறார்.
    ஏதோ, தெளிவான உண்மை என்று ஒன்று முடிபு கண்டு இருத்தல் போலவும், அதனின் நீங்கி, ராசமாணிக்கனார், அறியாமையால் பேசிவிட்டதாகவும் அவர் கருத்து! முதல் வரியில் சிவஞானம் கூறுகிறார், தெளிவாக எழுதப்பட்ட வரலாற்று நூல் இல்லை என்று. மறுவரியில், உண்மைக்கு மாறானதைச் சொல்கிறார்கள் என்று கூறுகிறார்.
    தெளிவான நூல் இல்லாதபோது, முடிபு கட்டிய உண்மை எங்கிருந்து புலனாயிற்றோ, நாம் அறியோம்!
    இது இப்படி இருந்திருக்கலாம் என ஒருவர் ஆராய்வதில் தவறில்லை. தெளிவான வரலாறு காணமுடியாத விஷயத்தில், இது போன்ற யூகங்களே கூற முடியும். இதுதான் உண்மை என்று முடிபு கட்டுதற்கு மறுத்தளிக்கப்பட முடியாத ஆதாரங்கள் வேண்டும்.
    சகஜமாக சிவஞானம் செய்கிற தவறுகளில் இப்படி சுலபமாக முடிபு கட்டிவிடுதலும் ஒன்று. ஆராய்ச்சியாளன், முழுவிபரமும் கிடைக்காதவரை, யூகந்தான் கூறமுடியும். எந்த விஷயத்திற்கும் அதாரிட்டி ஆக முடியாது.
    தெளிவு இல்லாத வரலாற்றில், அவர் உண்மை கண்டதாகக் கூறி, ராசமாணிக்கனார், அதற்குமாறான கருத்தை வெளியிடுவதாகக் கூறுவது, முதற்பெரும் பேதமை! நிற்க.
    தாலிகட்டும் வழக்கம் இருந்தது என்பதற்கு எவ்வெவற்றிலிருந்து ஆதாரம் காண்கிறார் சிவஞானம்? சங்ககாலம் தொட்டு இருந்தது என்கிறார்! முதலில் சிலப்பதிகாரத்தை ஆதாரமாக்குகிறார்.
    சிலப்பதிகாரத்தில், கண்ணகி-_கோவலன் திருமணத்திற்கு முன்பு, மங்கல அணி புகார் நகர வீதிகளை வலம் வந்ததாகக் கூறுகிறார், இளங்கோவடிகள். இந்த மங்கலஅணி என்பதற்கு மாங்கல்ய சூத்திரம் என்று பொருள் கூறுகிறார் அரும்பத உரை ஆசிரியர்.
    _ இது சிவஞானம் எழுதியிருப்பது மங்கல அணி புகார் நகரை வலம் வந்ததாக சிலப்பதிகாரத்தில் உள்ள பாடலைக் குறிப்பிடவில்லையேனும் அதன் பொருளைக் குறிப்பிடுகிறார். பாடல் இதுதான்:
    முரசியம்பின; முருடதிர்ந்தன;
    முறை எழுந்தன பணிலம் வெண்நடை
    அரசெழுந்ததோர் படியெழுந்தன
    வகலுண் மங்கல அணி எழுந்தது!
    _ இது சிலப்பதிகாரப் பாடல். இதில் வருகிற மங்கல அணி என்பதற்கு மாங்கல்ய சூத்திரம் என அரும்பத உரையாசிரியர் உரை கூறியிருப்பதை, தமது கூற்றுக்கு ஆதாரமாக்குகிறார், சிவஞானம். உண்மையில் இவ்விடத்தில் மங்கல அணி என்பது மாங்கல்ய சூத்திரம் என்ற பொருளோடு இயங்குகிறதா?
    முரசு இயம்பின _ முரசு முதலியன ஒலித்தன.
    முருடு அதிர்ந்தன_மத்தளம் முதலியன அதிர்ந்தன.
    முறை எழுந்தன பணிலம் _ சங்கம் முதலியன முறையே முழங்கின.
    வெண்குடை அரசு எழுந்ததோர் படி எழுந்தன _ வெண்குடைகள் அரசன் உலா எழுந்தபடியாக எழுந்தன.
    _ இதுவரை சொன்ன உரையிலிருந்து ஊருக்குள்ளிருந்த உற்சாகம் _ புகாரின் உள் நிலை விளக்கப்படுகிறது. ஊர் ஜேஜே என்றிருந்தது என்பது போல, உற்சாகத்தை விளக்குகிறார் இளங்கோ அடிகள். அகலுண் மங்கல அணி எழுந்தது என முடிக்கிறார்.
    இதற்கு, மாங்கல்ய சூத்திரம் வலஞ்செய்தது எனப் பொருள் கொள்வது தவறு. அரும்பத உரையாசிரியர்தான் இதற்கு அப்படிப் பொருள் கொண்டுள்ளார். அடியார்க்கு நல்லார் தன் உரையில் மங்கல அணி _ மங்கல அணி என்று மட்டுமே கூறிவிட்டார்.
    இதிலிருந்தே, அரும்பத உரையாசிரியரின் கருத்தில் அடியார்க்கு நல்லார் அய்யப்பாடு கொண்டார் என்பதும் அப்பெரியாருக்குப் பின் மாற்றுப் பொருளான எதிர் பொருளைக் கூற அஞ்சி விடுத்தார் என்பதும் அறியக் கிடக்கின்றன.
    ஊரிலே முரசு, மத்தளம், சங்கம் ஆகியவற்றின் ஒலியோடு இயற்கை அழகும் எழுந்தது எனக்கொள்வதே முறை. மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்பதே  பொருள் _ இந்த இடத்தில்! அத்தனையோடும், ஊரில் இயற்கை அழகும் எங்கும் எழுந்தது என்பதுதான் இளங்கோவடிகள் கருத்து.
    மங்கல அணியை, வேறு பொருளின்றி, மங்கல அணி என்றே கூறிப்போந்த அடியார்க்குநல்லார், அதற்குத் தனிப்பொருள் கூறவில்லையே தவிர, பொதுப்பொருளில் தம் கருத்தை வெளியிடுகிறார். அதாவது மங்கல அணி எங்கும் எழுந்தது என அடியார்க்குநல்லார் கூறுகிறார்.
    எங்கும் எழுந்தது! ஆம்; வலஞ்செய்யவில்லை| எங்கும் ஒரே பொருள் திடீரென்று எழுவதற்கும், ஒரு பொருளே ஊரைச்சுற்றி வலம் வருவதற்கும் ஏராளமான வேறுபாடு_முரண்பாடு உண்டு. ஆகவே இயற்கை அழகு எங்கும் எழுந்தது என, சிறப்புரையாகத்தான் இளங்கோவடிகள் கூறியுள்ளார்.
    இந்த மங்கல அணியை மங்கல நாணாக_மாங்கல்ய சூத்திரமாகக் கொள்ள முடியாது என்பதற்கு இன்னும் சிலப்பதிகாரமே சான்று காட்டுகிறது.
    மாங்கல்ய சூத்திரம் வலம் வந்தது என்னும் பொருளில் இதை இளங்கோவடிகள் கூறியிருந்தால், திருமணம் நடப்பதைக் குறிக்கும் இடத்தில் அதை மறந்தா போயிருப்பார்? மாங்கல்யம் வலம் வந்தது என்று கூறியிருந்தால், தாலி கட்டப்பட்டதை மறைத்தா இருப்பார்? அல்லது மறந்தா இருப்பார்? திருமணக் கூற்றில், தாலி கட்டப்பட்டால்_அதைக் கூறாது விடுவதுண்டா?
    (தொடரும்)
    -உண்மை இதழ்,16-31.5.15
    தாலி பல்கோணப் பகுத்தாய்வு (2)
    தமிழர்க்குத் தாலியில்லை!
    ம.பொ.சி.க்கு கண்ணதாசன் மறுப்பு
    - மஞ்சை வசந்தன்
    சாலியொருமீன் தகையாளைக் கோவலன்
    மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத்
    தீவலம் செய்வது காண்பார்.....
    என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். பார்ப்பான் மறைவழி காட்டியது, தீவலம் செய்தது, அருந்ததி பார்த்தது எல்லாம் குறிப்பிடுகிறார். தாலிகட்டியது அல்லது அரும்பத உரையாசிரியர் கருத்துப்படியும் அதைத்தழுவிய சிவஞானம் கருத்துப்படியும் மாங்கல்ய சூத்திரம் கட்டியது இதிலே இல்லை. இதிலிருந்து மங்கல அணி மாங்கல்ய சூத்திரம் ஆக முடியாது என்பது புலனாகும்.
    அதுவுமன்றி, எல்லாச் சடங்குகளையும் புகுத்திய பார்ப்பனர், அந்நாளில் தாலி கட்டும் பழக்கத்தைப் புகுத்தவில்லை என்பதும் அறியக் கிடக்கும். அதற்குப் பின்னரே, அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துவான் வேண்டிப் புகுத்தியிருக்கலாம். ஆய்விலே காணும் முடிபு, இளங்கோ அடிகளும் அவருக்கு முந்திய சங்க இலக்கியகர்த்தர்களும் தாலிகட்டும் முறை இருந்ததாகவே குறிப்பிடவில்லை என்பதுதான்.
    இந்த அரும்பத உரையாசிரியன் உரை, பொருந்தா உரை என, தமிழ்ப்புலவர் கு.மதுரை முதலியார் அவர்களால் ஒருமுறை எடுத்துக்காட்டப் பெற்றிருக்கிறது. மேலும் மங்கல அணி என்பது இயற்கை அழகு என்ற பொருளிலேயே சிலப்பதிகாரத்தின் மற்றோர் பகுதியில் கையாளப்படுகிறது. மனையறம் படுத்த காதையில் அறுபத்தி மூன்றாவது வரியில் மங்கல அணி பற்றிக் குறிப்பிடுகிறார், சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள்.
    நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர் மறுவின் மங்கல அணியே யன்றியும்
    பிறிதணி அணியப்பெற்றதை யெவன் கொல்
    என்கிறார். இதன் பொருள்:
    நறுமலரணிந்த கோதையே! நின்னைப் புனைந்து அழகு செய்யும் மகளிர், குற்றமற்ற உனது இயற்கை அழகு இருக்கும்போது வேறு நகைகளையும் அணிந்ததனால் பெற்றது யாது கொல்?
    _ ஆமாம்; இயற்கையழகாகிய மங்கல அணி இருக்கும்போது வேறு அணிகள் எதற்கு என்று கேட்கிறார் இளங்கோ அடிகள். இதே உரையைத்தான் பெரும்புலவர், நாவலர் ந.மு.வெங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறிப்போந்தார். சிவஞானம் பாராட்டுகிற கம்பன்கூட ஒரு இடத்தில்,
    உமிழ் சுடர்க்கலன்கள் நங்கையுருவினை
    மறைப்பதோரார்
    என்கிறான். இயற்கையான மங்கல அணியை நகைகள் மறைக்கின்றன என்கிறான், கம்பன். ஆகவே அணிகள் யாவினும் பெரிது, மங்கல அணி _ அதாவது இயற்கை அழகு என்னும் பொருளையே இளங்கோவடிகள் வலியுறுத்தியுள்ளார் என்பது யாவர்க்கும் புலனாகும்.
    _ மங்கல அணி, தாலிதான் என்பதற்கு சிலப்பதிகாரத்தில் துளிக்கூட இடமில்லை. முழுதும் ஆராயாத தோழர் சிவஞானத்தின் குறைபட்ட ஆராய்ச்சி தாலிதான் மங்கல அணி என்று கூறுகிறது. மங்கல அணியை இயற்கை யழகு என்ற பொருளில் மங்கல வாழ்த்துப் பகுதியிலும், மனையறம் படுத்த காதையிலும், முறையே அகலுண் மங்கல அணி எழுந்தது என்றும், மறுவின் மங்கல அணியே என்றும் கூறியிருப்பதைப் பார்த்துவிட்டு, அந்திமாலை சிறப்புச் செய்காதைக்கு வருவோமானால் இங்கேயும் அதே பொருளைக் காண முடியும்!
    சிவஞானம் இப்படிக் கூறுகிறார்:
    மற்றும், அந்திமாலை சிறப்புச் செய்காதையில், கோவலனைப் பிரிந்த வருத்தத்தால் வாடியிருக்கும் கண்ணகியின் தோற்றத்தைக் கூறுமிடத்து,
    அஞ்செஞ்சீரடி அணிசிலம் பொழிய
    கொங்கை முற்றிற் குங்குமம் எழுதாள்
    மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்
    என்ற வரிகளால், சிலம்பிழந்த சீரடி, குங்குமத் தொய்யில் எழுதாக் கொங்கை என, அங்கங்களின் அணிகளை அல்லது அலங்காரத்தைத் துறந்ததைக் கூறுகிறார். மார்புக்கு மேலிடமான கழுத்து வரும்போது மங்கல அணி என்று குறிப்பிட்டிருப்பதால் அவ்வணி தாலியே என்பது உறுதிப்படுகின்றது.
    _ இது சிவஞானத்தின் சீரிய கருத்து. இதுவரை பார்ப்போம். இதில்கூட இளங்கோவடிகளின் ஒரு வரியை நண்பர் விட்டுவிட்டார். அந்த வரியைச் சொன்னால் எங்கே ஆபாசம் என்று மற்றவர்கள் கூறி விடுவார்களோ என்ற பயத்தில் இளங்கோவடிகளைக் காப்பாற்ற ஆசைப்பட்டு, விட்டுவிட்டார் போலும்! தோழர் பயப்பட வேண்டியதில்லை! இந்த இடத்தில் அந்த வரி வருவது இலக்கியத்துக்குப் புறம்பும் அல்ல; ஆபாசமும் அல்ல. மேலும் இது மனிதக்கதை. அந்த வரி இதுதான்: மென்துகில் அல்குல்மேகலை நீங்க... மறைவிடத்தே மேகலை அணிதலும் ஒழிந்தாள் என்பது பொருள்.
    சிவஞானத்தின் பெருந்தவறான ஆராய்ச்சி, உண்மையாக முடியாமல், அவர் வரிகளும் அவரைக் காட்டிக் கொடுக்கின்றன! இளங்கோவடிகள், கண்ணகியின் தோற்றத்தை, உள்ளங்கால்முதல் உச்சிவரையில் கூறுவதாகவும், ஒவ்வொரு அங்கத்தின் நகைகளையும் கூறும்போது கழுத்தருகில் வந்து மங்கல அணி என்பதாகக் குறிப்பிடுவதாகவும் ஆகவே அது தாலிதான் என்றும் சாதிக்கிறார். ஒவ்வொரு அங்கத்தின் அணிகளை அல்லது அலங்காரத்தைத் துறந்தாள் என சிவஞானம் கூறுகிறார். அதன்படி இளங்கோவடிகள் முழுதும் அணிகளையே கூறவில்லை; அலங்காரத்தைச் சில அங்கங்களுக்கும் கூறுகிறார் என்கிற உண்மை அறியக் கிடக்கிறது. உதாரணமாக, கால் சிலம்பு இல்லை _ இது நகை. கொங்கைக்கு தொய்யில் எழுதவில்லை  இது அலங்காரம்! நகையல்ல! எழுதுவிக்கும் ஒரு செயற்கை அலங்காரம்  அவ்வளவுதான்! அதேபோல, தொடர்ந்து போகும்போதும் இளங்கோவடிகள்,
    மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்
    கொடுங்குழைதுறந்து வடிவந்துவீழ்காதினள்!
    திங்கள்வாண் முகம் சிறுவியர் பிரியச்
    செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
    பவள வாணுதல் திலகம் இழப்பத்
    தவள வாணகை கோவலன் இழப்ப
    மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
    கையறு நெஞ்சத்துக் கண்ணணி...
    _ என்கிறார்.
    இந்த வரிகள், இளங்கோவடிகள் வெறும் அணிகளைப் பற்றி மட்டும் கூறவில்லை என்பதும், ஒவ்வொரு அங்கத்தின் செயற்கை அழகையும் துறந்தாள் என்று சொல்ல வந்து, அணிபூட்டக் கூடியவற்றிற்கு அணிகளையும், அது முடியாத, நெற்றி, கண் முதலியவற்றிற்கு அலங்காரத்தையும் துறந்தாள் என்று கூறுகிறார். காலில் சிலம்பு இல்லை; மேகலை இல்லை; கொங்கைக்கு அலங்காரம் இல்லை; எனக் கூறி, கழுத்தில் ஒரு அணியும் இல்லை என்பதை _ இயங்கை அழகன்றி வேறு அணிகள் சூடவில்லை என்பதை _ வேறு அழகு செய்யாமல் இயற்கை அழகோடு இருந்தாள் என்பதை _ மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் என்று கூறுகிறார். கழுத்தில் ஒரு அணியும் இல்லை என்பதே பொருள். தாலி கட்டப்பட்டிருந்தால் அதைக் கழற்றக் கூடாது என்கிற புனிதத் தன்மைப்படி, கழற்றியிருக்க முடியாது. ஆகவே தாலி கட்டப்படவில்லை _ ஒன்று!
    மங்கல அணியைத் தவிர வேறு அணி இல்லை _ தாலி தவிர வேறு இல்லை என்ற சிவஞானக் கருத்துப்படி பார்த்தால், ஏதோ நூற்று எட்டு நகைகளைக் கழுத்தில் அணிந்தாள்; தாலியைத் தவிர மற்றவற்றைக் கழற்றி விட்டாள் என்று வலிந்து பொருள் கொள்ளவேண்டும்! இது தவறு! ஆகவே, பெரும்புலவர் வேங்கடசாமி நாட்டார் கருத்துப்படி, இயற்கை அழகன்றி செயற்கை அழகு செய்யாள் எனப் பொருள் கொள்வதே முறை. அடிமுதல் நுனிவரை முழுதும் அணிபற்றிக் கூறியிருந்தால் சிவஞானம் கருத்துச் சரிதான்! ஆனால் அப்படி இல்லையே! பின்பும், காதிற்குழையில்லை; முகத்தில் காதலில் வரும் சிறுவியர்வுஇல்லை; கண்களில் அஞ்சனம் இல்லை; நெற்றியில் பொட்டு இல்லை என்று அலங்காரத்தை _ அணியல்லாத அலங்காரத்தை அடுக்கி வைத்துள்ளாரே! அதுபோன்றே, கழுத்தில் இயற்கை அழகன்றி செயற்கை அழகில்லை என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த இடத்திலும் மங்கல அணி தாலி அல்ல!
    அப்படி அது, தாலிதான் என்றால், கணவன் இறந்ததும் அலங்காரங்களைச் சிதைக்கிற கண்ணகி தாலியையும் கழற்றினாள் என்று இளங்கோவடிகள் கூறியிருக்க வேண்டும். அவர் அப்படிக் கூறவில்லை. கட்டுரை காதையில்
    கருத்துறு கணவற் கண்டபின் அல்லது
    இருத்தலும் இல்லேன்; நிற்றலும் இலனெனக்
    கொற்றவை வாயிற்பொற்றொடி தகர்த்து...!
    _ என்கிறார்.
    இதில், கண்ணகி, துர்க்கை கோயிலில், தன் வளையல்களை உடைத்து, தன் கணவனைக் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இல்லேன் என்கிறாள். கொலைச் செய்திக்குப்பின், இச்செய்தி வருகிறது. தாலி கட்டப்பட்டிருந்தால், கண்ணகி தாலியைக் கழற்றினாள் என, இளங்கோவடிகள் குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. கண்ணகியும் தாலியைக் கழற்றாமல் முடியாது! இங்கேயும் கண்ணகி, வளையல்களை உடைக்கிறாளே தவிர, தாலி கழற்றவில்லை, காரணம் தாலி இல்லை!
    கோவலனுக்கும் கண்ணகிக்கும்; திருமணம் நிகழ்ந்த பின்னர், சில தோழியர், அவர்களை அமளியில் ஏற்றுவித்து, பின்வருமாறு வாழ்த்துகிறார்கள்.
    காதலற்பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்
    தீதறுக!
    _ அதாவது, கண்ணகி, தன் இன்னுயிர்க் காதலனை கண்ணிலும் நெஞ்சிலும் பிரியாமல் வாழ்க! கோவலனும் தன் துணையாகிய கண்ணகியைத் தழுவியகை நெகிழாமல் எக்காலத்திலும் வாழ்வதாக! என்பதாகும். இதிலும் தாலிக் கயிறு தங்கவேணும் என்கிற நவீன ஒப்பாரி இல்லை!
    ஆகவே, நன்று, முறையே கற்றுத் தேர்ந்து ஆராய்ந்த, வெங்கடசாமி நாட்டார், மதுரை முதலியார், ராசமாணிக்கனார் முதலியோர் கருத்துப்படி, சிலப்பதிகாரத்திலும் சங்க இலக்கியங்களிலும் தாலி குறிப்பிடப்படவே இல்லை என்னும் சரியான ஆராய்ச்சி முடிவுக்கு நாம் வரலாம்.
    தோழர் சிவஞானம், சிலம்புச் செல்வன் என்றெல்லாம் புகழ் வாங்கிக் கொண்டவர்; அதிலே தேர்ந்த அறிவாளி என்று தமைத்தாமே பாராட்டிக் கொள்பவர். நாமும் அவருக்குத் தெரிந்தது அது ஒன்றுதான் என்று கருதிக் கொண்டிருந்தோம். இப்போது அதுவும் பூஜ்யமா அவருக்கு என்ற ஆயாசம் பிறக்கிறது!
    மேலும் தோழர் சிவஞானம் தாலி உண்டு என்ற கூற்றுக்கு, புறநானூற்றுப் பாடல்களிலிருந்தும் ஆதாரம் தேடுகிறார். சான்றாக, ஒரு புறநானூற்றுப் பாடலிலிருந்து இந்த வரியைக் கூறுகிறார்:
    ஈகையரிய இழையணிமாதர் _ அதாவது, கொடுத்தற்கரிய தாலி (மங்கல அணி!)யை அணிந்த பெண்கள் என்று உரையாசிரியர் கூற்றையும் சேர்த்துக் காட்டுகிறார். தாலி, கொடுத்தற்கு அரியது என்பது ஆரிய வழக்குப்படி ஏற்பட்ட புனித எண்ணம். இதை, வாதத்துக்காக சரி என்று வைத்துக் கொண்டாலும், வெறும் இழையணி என்றாலே, கொடுத்தற்கரியது என்னும் பொருள் வந்துவிடும். மனிதன் என்று சொன்னாலே, சாப்பிடாமல் வாழமுடியாதவன்; சாகாமல் இருக்க முடியாதவன் என்கிற பொருள்கள்_ மனிதனுக்கு இயற்கையாக உள்ள நிலைகள் தோன்றிவிடும்! சாப்பிடாமல் வாழுதற்கரிய மனிதன்; சாகாமல் இருத்தற்கரிய மனிதன்; சாகாமல் இருத்தற்கரிய மனிதன் என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அதிலும் புறம்பாடியவர்களில் ஒரு சிறந்த புலவர் இந்தக் குற்றத்திற்கு ஆட்படமாட்டார். ஆகவே, இழையணி என்பதற்கு ஆபரணங்கள் என்ற பொதுப் பொருளைத்தான் கொள்ள முடியும். தாலிஎன்கிற ஸ்பெஷல் பொருள் கொள்ள முடியாது! ஈகையரிய என்றால், கொடுத்தற்கரிய விலையுயர்ந்த என்னும் பொருள் சுலபமாக வந்து நிற்கிறது. ஆகவே, பொதுவாக, விலையுயர்ந்த நகைகளை (தாலி அல்ல!) அணிந்த பெண்கள் என்று கொள்வதே அறிவுடமை!
    இதற்கு எடுத்துக்காட்டாக, புறநானூற்றிலேயே வேறு பாடலைக் காணலாம்! முள்ளை முள்ளால்தானே எடுக்கமுடியும்!
    (தொடரும்)
    -உண்மை இதழ்,1-15.6.15
தாலி பல்கோணப் பகுத்தாய்வு (3)

ம.பொ.சி.க்கு கண்ணதாசன் மறுப்பு

- மஞ்சை வசந்தன்
சோழன் கரிகாற் பெருவளத்தான் உயிர் நீத்தகாலை, அவன் பிரிவாற்றாது வருந்திய கருங்குளவாதனார் என்னும் புலவர் அவனைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்று, புறநானூற்றில் 224_வது பாடலாக நிற்கிறது. அதில், கரிகாற் பெருவளத்தான் இறந்ததும் அவனது உரிமை மகளிர் நின்ற கோலத்தைப் புலவர் கூறுகிறார்.

பூவாட் கோவலர் பூவுடனுதிரக் கொய் கட்டதுழித்த வேங்கையின் மெல்லியன் மகளிரும் இழைகளைந்தனரே!,
_ அதாவது, ஆடு மாடுகளுக்கு இரைபோடுவான வேண்டி, மேய்ப்போர், வேங்கை மரத்தின் இலைகளைக் கொய்து விடுகிறார்கள். அந்த மரம் மொட்டையாக நிற்கின்றது. அதுபோன்று மங்கையரும் எல்லா அணிகளையும் களைந்துவிட்டு நிற்கின்றனர்... _இதுதான் பொருள். இதில் இழை களைத்னர் என்பதற்கு ஒவை துரைசாமி பிள்ளை சொல்லும் பொருள். அருங்கலஅணி முதலாய அணிகளை ஒழித்தனர் என்பதாகும்.
இதில் அருங்கலம் என்பதற்கு, ஆபரணம், அழகு செய்யும் பொருள் என்ற இரண்டு பொருள்கள் உண்டு. அதைத் தவிர தாலி என்கிற பொருள் கிடையவே கிடையாது.
ஆகவே, அழகு செய்யும் ஆபரணங்களோட நகைகளோடு, மற்ற அணிகளையும் _ அதாவது அழகுகளையும் (தொய்யில்எழுதல் போன்ற அழகுகள் _ அலங்காரங்கள்) துறந்தனர் என்பதே பொருள். இதிலும், மங்கல அணி _தாலி _ வரவே இல்லை! மரத்திலிருந்து சகலஇலைகளையும் பறித்துப் போட்ட மாதிரி சகல நகைகளையும் பறித்துப் போட்டு, மொட்டை மரம் மாதிரி _ எவ்விதச் செயற்கை அழகும் அணியும், அலங்காரமும் இன்றியிருந்தார்கள் என்பதே பொருள். இதிலும், இழை வந்திருக்கிறது, பொதுப்பொருளில்! _ தாலி என்கிற ஸ்பெஷல் பொருளில் அல்ல! ஆகவே, ஈகையரிய இழையணி என்பதற்கு விலையுயர்ந்த _ கொடுக்க முடியாத _ நகைகள் என்ற பொதுப் பொருள் கொள்ளலாமே அன்றி தாலி என்று தனிப் பொருள் கொள்வது இமய மலையளவு மடமையாகும்.
224வது பாட்டில், இழை களைந்தனர் என்று வருகிறதே தவிர கழற்றினர் என்று வரவில்லை. தாலி அந்நாளில் இருந்திருந்தால், கணவனை இழந்த பெண்கள்பற்றிக் கூறும்போது அதக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மேலும் வெறும் நகை பற்றி மட்டுமே கருங்குளவாதனார் கூறியிருந்தால், துறந்தனர் என்றோ, கழற்றினர் என்றோ கூறியிருக்கலாம். இலக்கணம் தப்பாமலேயே இவ்வார்த்தைகளில் ஒன்றைப் போட்டிருக்க முடியும். களைந்தனர் என்று வருவதால், எல்லா அலங்காரங்களையும் அணிகளையும் களைந்தனர் என்பதே பொருள். ஆகவே புறப்பாட்டின் 400 பாடல்களிலும் ஒரு இடத்தில்கூட தாலி (மங்கல அணி!) குறிப்பிடப்படவில்லை.
வேண்டுமானால், நான்கு கால் இருப்பதால் ஆடு; ஒரு வாலிருப்பதால் மாடு என்கிற மாதிரி, வாதத்துக்காக வலிந்து பொருள் கொள்ளலாம். அது, ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்க வேண்டிய அறிவுடமைக்கு எடுத்துக்காட்டாக முடியாது.
இவற்றை நோக்குமிடத்து சில உண்மைகள் புலனாகும். சிவஞானம் எடுத்துச் சொன்ன சங்க காலப் பாடல்களில் எங்கும் மங்கல அணி, இழையணி, என்று அணி அணி, இழையணி என்று அணி அணியாக வருகிறதே அன்றி, தாலி என்கிற பதத்தைக் காணோம். அப்படியானால் தாலி என்கிற பதமே சங்க காலத்தில் இல்லையா? இருந்தது! அப்படியானால் அதை ஏன் ஒரு இலக்கிய கர்த்தனும் தொடவே இல்லை. எல்லோரும், தாலியை அணி என்றே அழைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஒரு இடத்தில் ஒரு கவிஞனாவது தாலிஎன்கிற பதத்தை, உபயோகித்திருக்க வேண்டாமா? மங்கலஅணி தாலிதான் என்றால், ஒருவன்கூட அதை அப்பெயரிட்டே அழைக்காதது ஏன்? உண்மை இதுதான்; மங்கல அணிக்கு தாலி என்ற பொருளே அந்நாளில் கிடையாது.
சங்க காலத்தில் தாலி என்று வரும் வார்த்தை, மணமகன் மணமகளுக்குச் சூடிய மாங்கல்ய சூத்திரமாக வரவில்லை. உதாரணமாக புறநானூற்றில் காணப்படும் 374வது பாடலில், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர், ஆய் அண்டிரன் என்ற வேளைப்பற்றிப் பாடியதாக உள்ள பூவை நிலைப்பாட்டில், ஒன்பதாவது வரியில்.
புலிப் பற்றாலிப் புற்றலைச் சிறா அர்...
என்று வருகிறது. அதாவது, சிறுவர்களுக்கு புலிப் பல்லாற் கோர்க்கப்பட்ட தாலி அணிதலைக் குறிக்கிறது. மணமகளுக்கு மணமகன் சூட்டியது! அது தான் தாலி என்று அழைக்கப்படுகிறது. (இதில் ஐம்படைத் தாலி, முப்படைத் தாலி எனப் பலவகை உண்டு.) இந்தப் பாடலில், சிவஞானம் கருதுகிற தாலியின் பொருள் சுக்கு நூறாக உடைபட்டுப் போகிறது.
புலிப்பல் கொண்டுவந்து திருமணம் செய்து கொள்வது கூட இலக்கிய வழக்காக இல்லை. வெறும் சமீபகால வாய் வழக்காகவேதான் இருக்கிறது. ஆகவே தாலி அணிதல் _ மணமகன் மணமகளுக்குப் புனிதச் சின்னமாக அணிதல் _தமிழ்ப் பண்பாட்டில்அறவே இல்லை எனத் துணிந்து கூறலாம். திருமணமான பிறகு, வேட்டைக்குப் போகும் கணவன், புலியைக் கொன்று அதை மாலையாக்கி தன் பெருமையை மனைவிக்குக் காட்டி மனைவியின் கழுத்தில் ஜம்மென்று வேடிக்கையாகப் போட்டிருக்கிறான். அதாவது திருமணமெல்லாம் முடிந்து, எல்லாம் ஆன பிறகு!
ஆகவே, அறுதியிட்டு உறுதியாக தமிழ்ப் பண்பாட்டில் _ சங்க இலக்கியத்தில் _ திருமணத்தில் தாலி அணிதல் இல்லவே இல்லை என்று கூறலாம்.
மற்றுமொரு கருத்தைக் கூறுகிறார் சிவஞானம். இதில்தான் மடமையின் சிகரத்துக்கு ஏறிவிடுகிறார்! ஆண்டாள் பாடல்களில் நாச்சியார் திருமொழியில் _ திருமண சம்பந்தமாக வருகிற வாரணம் ஆயிரம் என்ற பாடலில், கோபி உடுத்தி மணமாலை சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான் என்று வருகிறது. இதில் மணமாலை என்பது தாலிதான் என்று உடும்புப் பிடியாகப் பிடிக்கிறார்! மண என்பதற்கு நேரடியாக தாலி என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை! இப்படி யாரும் கூறிவிடுவார்களே என்ற பயத்தில், மணமாலை என்ற சொல்லில் தாலியைக் குறிப்பிடுவது இன்றளவும் வழக்கமாகவும் இருந்திருக்கிறது என்கிறார். ஆமாம்; வழக்கமாக இருந்திருக்கிறது என்றுதான் கூறுகிறார். அந்தப் பொருள் வெறும் வாய் வழக்கு என்பதைத்தான் குறிப்பிடுகிறார்.
வாய் வழக்கை வைத்து இலக்கியச் சொற்களை எடைபோடுவது என்ன ஆராச்சியோ நமக்குப் புரியவில்லை! பொருள் காணமுடியாத பதங்களுக்கு, வழக்குத் தேடுவதுதான் அறிவுடையோர் வழக்கம்! மணமாலை என்ற பதத்துக்கு மணம் தரும் பூமாலை என்கிற பொருள் அழகாக _ தெளிவாக இருக்கிறது! அப்படிப் பொருள் உள்ள சொல்லை வாய் வழக்கை வைத்துக்கொண்டு ஆராய்வது, மடமையை வெளிப்படுத்திக் கொள்வதாகும்! இதிலிருந்து ஆண்டாளின் மண மாலைத் தாலியும் சிவஞானத்தைக் கைவிடுகிற பரிதாபத்தைப் பார்க்கிறோம். மணமாலை என்ற சொல்லுக்கு மலர்மாலை என்ற பொருளே, சரியாக அழகாக நிற்பதைக் காண்கிறோம். அங்கே, தாலி இல்லவே இல்லை என்பதையும் புரிந்து கொள்கிறோம்.
இப்படி எல்லா இலக்கியங்களிலும் நுனிப்புல் மேய்ந்து, தனக்குப் புரியாததைப் போட்டுக் குழப்புகிறார், சிவஞானம். இதன் மூலம், டாக்டர் ராசமாணிக்கனாரோடு, தி.மு.கழகத்தின் கருத்தையும் ஆராய்ச்சியையும், வெற்றிகரமாக நொறுக்கி விட்டதாகப் பகல்கனவு கண்டு தன் கதையை முடிக்கிறார்.
புறநானூற்றுப் பாடல் (127) கூறும், ஈகையரிய இழையணி என்பதற்கு உரையாசிரியர் இருவர் (உ.வே.சாமிநாதையர், ஔவை சு.துரைசாமி பிள்ளை) மாங்கல்ய சூத்திரம் என்றே பொருள் கூறியுள்ளனர். இந்த உரைகளில் ஒன்றைத்தான் தோழர் சிவஞானம் தன் முடிவுக்கு ஆதாரமாக்கியுள்ளார். இந்த உரையாசிரியர்கள் புறநானூற்றுப் பாடல் தாலியைத்தான் குறிக்கிறது என வலிந்துபொருள் கொண்டுள்ளனர். அதாவது, கொடுத்ததற்கரிய இழையணி என்று வருவதால் அது தாலியாகத்தான் இருக்க முடியும் என்று யூகித்துப் பொருள் கூறியுள்ளனர். ஆமாம்; வெறும் யூகத்தையே இவர்கள் உரையாக்கி முடிவு கட்டியுள்ளனர். மறுக்க முடியாத உரையாக அதைக் கொள்ள நியாயமே இல்லை. கொடுத்தற்கரியது தாலி மட்டும்தான் என்பது என்ன முடிவோ தெரியவில்லை! (மங்கையர் தம் இடையணியாம் மேகலை கூட ஈகையரியதுதான்!) ஈகையரிய இழையணி என்பதற்கு, கற்பு என்று பொருள் கொள்கிறார் மற்றொரு புலவர். இது சரியாக இருக்க முடியும். சிவஞானம் விரும்புவதாகச் சொல்லிக்கொள்ளும் தமிழன் பண்பாட்டுக்கு அது மிகவும் பொருந்த முடியும். அத்தனையும் பாடல் வல்ல பாணருக்குக் கொடுத்த பின், ஈகையறிய கற்பினொடுங் கூடிய மாதரோடு, ஆய் கோயில் இருந்ததெனவும் கொள்ள முடியும். சென்ற இதழில் நான் கூறியதுபோல, விலையுயர்ந்த ஆபரணங்கள் என்றோ, கற்பு என்றோ கொள்ளல் சாலும். ஏணிச்சேரி முடமோசியாரே பாடியதாக உள்ள அந்தப் பாடலில், களிறு அனைத்தையும் கொடுத்த பின் என்று வருகிறதே தவிர, நகைகள் அணிகள் பற்றிய பேச்சே இல்லை. அப்படியிருந்தாற்றான், மற்ற நகைகளை _ அணிகளை ஈந்து, ஈகையறிய இழையணியோடிருந்த மாதர் என்று கொள்ள முடியும், அப்போது, மற்ற நகைகளிலிருந்து இதற்கு தனி மதிப்பு ஏற்படுவதால் இது தாலியாக இருக்கலாம் என்கிற யூகம் புலப்படும். இப்போது, பாடல் காட்டும் முடிவு, அது தாலி என்பதற்குச் சிறிதுகூட உதவவில்லை. ஔவைப் பிள்ளை, சாமிநாதையரின் முறையிலேயே அப்பொருளைக் கூறியுள்ளார். இதனைப் பொருந்தா உரை என சுலபமாகக் கூறிவிடலாம்.
புறம் 374_வது பாடலில் தாலி என்கிற பதத்தை உபயோகித்திருக்கும் முடமோசியார், (குறச்சிறுவர்க்கு அணியப்படும் தாலி) நமக்குத், தாலிஅன்றையத் தமிழகத்தில் எந்த நோக்கத்தோடு இருந்தது என்பதை அறிய வசதி தந்துள்ளார்.
முடிவாக, சங்ககால இலக்கியங்களைக் கொண்டு, தாலி இருந்தது என்பதற்கு ஆதாரம் தேடுகிறவர்கள், இழையணி, மங்கல அணி, மண்ணாங்கட்டி அணி தெருப்புழுதி அணி என்றெல்லாம் வார்த்தைகளைக் கண்டு தாலி என்று மயங்குகிறார்களே தவிர, அசல் தாலி எனும் பதம் தனித்தமிழ்ப் பதமாக இருந்தும், அதுநேரடியாக ஒரு இடத்தில்கூட தாலி என்றே வரவில்லை. அதாவது திருமணத்தில் கட்டப்படும் புனிதப் பொருளில்!
ஆகவே, சுலபத்தில் சங்ககாலத்தில் தாலி கட்டப்படும் பழக்கம் இல்லையெனும் முடிவுக்கு வரலாம். அது தமிழ் வழக்கம் அல்ல என்பதுதான் உண்மையாகவும் இருக்க முடியும்.
பிறகு ஒரு பெரிய ஆதாரத்தைத் தோழர் சிவஞானம் காட்டுகிறார். அதாவது கம்பன் தாலி பற்றிக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார். இதை ஒப்புக்கொள்ள நமக்குத் தடை இல்லை! கம்பன் காலம் மிகவும் பிற்பட்ட காலம்! அதாவது 12-ஆம் நூற்றாண்டு-_ சுமார் எழுநூறு ஆண்டுகட்கு முன்புதான் கம்பன் வாழ்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகினறனர்! அந்த நாளில் தாலி கட்டும் வழக்கம் புகுத்தப்பட்டிருக்கலாம். ஆரியம், கோயில் கோயிலாக உருவான காலம் கம்பன் காலம். தாலி பற்றிக் கம்பன் கூறியதாகக் கூறுவது, முந்தா நாள் முத்தைய செட்டி வீட்டில் தாலி கட்டினார்கள் என்று ஆதாரம் காட்டுவது போலாகும்! சங்க காலத்தில் உண்டா? என்று கேள்வி, இல்லை என்கிற பதிலோடு முடிகிறது.
(தொடரும்)
-உண்மை இதழ்,16-30.6.15

தாலி பல்கோணப் பகுத்தாய்வு (4)


கணவன் இறந்தபின் வளையல் மட்டுமே உடைக்கப்பட்டது

- மஞ்சை வசந்தன்
இதுவரை கண்ணதாசன் அவர்கள் தமிழுக்கு தாலியில்லையென்று விளக்கி உறுதி செய்தவற்றைப் பார்த்தோம். இனி தாலி சார்ந்த சில கருத்துகளை ஆய்ந்து இதனை நிறைவு செய்வோம். கணவன் இறந்த பின் பெண் (மனைவி) கைவளையல் உடைப்பதே வழக்கிலிருந்தது. வெளிமான் என்ற வள்ளல் இறந்த பின் அவன் உரிமை மகளிர் தொடிகழிக்கப்பட்டார்
தொடிகழிமகளிர் (புறம்_238) என்பது ஈண்டு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.
ஆக, கணவன் இறந்த பின் வளையல் உடைத்தல் மட்டுமே வழக்கிலிருந்தது என்பதால், தாலி அணியும் வழக்கம் இல்லையென்பது உறுதியாகிறது. தாலியிருந்தால் தாலியல்லவா முதன்மையாக அகற்றப்பட்டிருக்கும்? என்ற அறிவார்ந்த கேள்வியைக் கேட்டு கண்ணகிக் காலத்திலும் தாலியில்லை. பார்ப்பனர் நடத்தி தீவலம் வந்தநிலையில்கூட தாலி இல்லை. தாலி மிகப் பின்னாளில் வந்த வழக்கம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார் மா.இராசமாணிக்கனார் அவர்கள்.
ஊகங்களின் அடிப்படையில் உண்டென்பதா?
சங்கத் தமிழர் திருமணங்களில் தாலியுண்டு என்பதைக் காட்டமுடியாத மதவாதிகள், ஊகங்களின் அடிப்படையில் இது தாலியைத்தான் குறிக்கிறது என்று வாதிட வருகின்றனர். ஆனால், அதையும் தமிழ்ச் சான்றோர் தக்க விளக்கங்கள் மூலம் தகர்த்தெறிந்துள்ளனர்.
ஈகையரிய இழையணி என்பது என்ன?
புறநானூறு 127_ஆம் பாடலில், ஆய் வள்ளல்தான் கொடுக்கத் தகுந்த எல்லாப் பொருளையும் பரிசிலர்க்குக் கொடுத்துப் பின் கொடுத்தற்குரிய பொருள் ஏதுமின்றி வறியவனானான். அந்நிலையில் அவன் மனைவியரிடம் ஈகையரிய இழை அணிமட்டும் எஞ்சி நிற்கிறது.
இப்பாடலுக்கு உரை எழுதிய உரையாசியர், கொடுத்தற்கரிய மாங்கலிய சூத்திரம் என்று பொருள் கூறுகிறார். ஆனால், இதே உரையாசியர், புறநானூறு 224ஆம் பாடலான,
இறந்தோன் தானே அளித்திவ் வுலகம்
மெல்லியல் மகளிரும் இழை களைந்தனரே என்ற பாடலுக்கு இழை என்பதற்கு அருங்கல அணி என்று பொருள் கூறுகிறார்.
மாங்கலியத் தத்துவப்படி மாங்கல்யம் என்பது அணிகளில் வராது. அது திருமணத்தின் பந்தமாகக் கொள்ளப்படுகிறது. அதை கொடையாகக் கொடுப்பது என்ற நிலைக்கோ, அணிதல் என்ற வகைக்கோ கொண்டு வருதல்தகுவதன்று. எனவே, ஈகைக்கரிய இழை என்பது, கொடுக்க இயலாத அணி என்பதே பொருள். அதாவது இருக்கும் அணிகளுள் பலவற்றை ஈகையாகத் தரலாம், ஈகையாகத் தரஇயலாத முதன்மையுடைய, தங்களுடனே வைத்துக்கொள்ளக்கூடிய அணிகளைத் தர இயலாது என்பதே இதன் பொருள். மாறாக, ஈயமுடியாத அணி தாலியைக் குறிக்கும் என்பது சரியன்று. காரணம், மாங்கலியம் அணி அல்ல. அணியென்பது அணியப்படுவது. மாங்கலியம் அணியப்படுவது அல்ல.
அணி யென்பது வேண்டும்போது அணியப்படுவது; தேவையில்லாதபோது கழற்றி வைக்கப்படுவது. ஆனால், மாங்கலியம் கட்டப்படுவது. அது கணவன் உயிருள்ளவரை மனைவி கழுத்தில் இருக்க வேண்டியது. இந்த வேறுபாடு உணரப்பட்டால் இதுபோன்ற பொருள் கொள்ளவோ, ஊகங்களோ வராது.
தமிழ் இலக்கியங்களில் வருவதாயினும், தமிழர் கட்டியதாயினும் அது அணி வகையே! ஆனால், மந்திரம் சொல்லி அணியப்படுவது மாங்கலியம் ஆகும். அதைத் தாலியென்பதே  தவறு. தாலியென்பது தமிழ்ச் சொல். தாலி என்றால் தொங்கல் என்றே பொருள். தொங்கும் அணிகலனே தாலி. ஆனால், மாங்கலியம் அணியல்ல. நான் முன்னர் கூறியதுபோல, மந்திர மகத்துவம் ஏற்றப்பட்டு திருமணத்தின்போது கட்டப்பட்டு, கணவன் ஆயுளுக்கும் கழுத்தில் இருப்பது. எனவே, மாங்கலியத்தைத் தாலியென்பதே சரியல்ல. சுருங்கச் சொன்னால் தாலி யென்பது அணிகலன். மாங்கலியம் என்பது புனிதம்.
மந்திரம் ஓதி தாயத்து கட்டுகிறான் என்றால் அது அணிகலனா? இல்லையே! அப்படித்தான் மாங்கலியமும். ஆக, தாயத்தும் மாங்கலியமும் அறியாமையின் அடையாளம் என்பதே உண்மை! மாங்கலியத்திற்கு தமிழில் சொல் இல்லை. காரணம் மாங்கலியம் தமிழர் மரபன்று. அது புரோகிதம் புகுந்த பின் மிகப் பிற்காலத்தில் வந்தது.
ஆக, தமிழில் தாலிஎன்று சொல்லப்படுவது அணிகலனே தவிர அது மாங்கலியம் அல்ல. இலக்கியங்களில் சுட்டப்படும் தாலிகள் அனைத்துமே அணி மட்டுமே. எனவேதான் அது சிறு பிள்ளை பருவம் முதற்கொண்டு, ஆண் பெண் வேறுபாடு இன்றி அணியப்பட்டது.
தாலி எத்தனை தாலியடி!
(அ) ஐம்படைத்தாலி: இது குழந்தைகளுக்கு அணியப்பட்ட அணிகலன். ஆண் குழந்தை பெண் குழந்தை இருபாலருக்கும் அது அணிவிக்கப்பட்டதால், இது திருமண அடையாளமான மாங்கல்யம் அல்ல.
(ஆ) புலிப்பல் தாலி: இதுவும் சிறுவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. வீரர் தான் கொன்ற புலியின் பல்லைக் கோர்த்து தன் பிள்ளைகளுக்கு அணிவித்தது.
புலிப்பல் தாலி புன்றலைச் சிறார் (புறம்_374)
இப்புலிப்பல் தாலி ஆண் குழந்தைகளுக்கேயன்றி பெண் குழந்தைகளுக்கும் அணிவிக்கப்பட்டது.
-...--..--............................................... பொன்னோடு
புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி ....................
கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே
(அகம்_7)
(இ) குதிரைத்தாலி: மனிதர்களேயன்றி குதிரைக்கும் தாலி அணிவிக்கப்பட்டதை கீழ்க்கண்ட வரிகள் குறிக்கின்றன.
கலினங் கவவிக் கான்றுநுரை தெவிட்டும்
வலியுடை யுரத்தின் வான்பொற் றாலி
(கோயில் வேவு வரி 12_13)
உதயணன் ஏறிய குதிரை தாலி என்னும் ஒரு நகையை அணிந்திருந்தமையை இவ்வரிகள் சுட்டுகின்றன.
(ஈ) கண்ணன் இளம்வயதில் தாலியணிந்தமை கீழ்க்கண்ட வரிகள் மூலம் அறயிப்படுகிறது.
கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான பெரியாழ்வார் பாடிய திருவாய் மொழியில் ஆமைவடிவத் தாலியை பிள்ளைப் பருவத் திருமால் அணிந்திருந்ததாகக் கூறுகிறது.
அக்கு வடமுடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயன்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ
திருவாய்மொழி (1.7.2)
கண்ணன் பிள்ளைப் பருவத்தில் தாலிக் கொழுந்து என்ற கழுத்தணியை அணிந்திருந்தமையை கீழ்க்கண்ட பெரியாழ்வார் செய்யுள் வரி செப்புகிறது.
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்தில் பூண்டு (2.6.1)
இந்த இரண்டு தாலியும் பனங் குருத்தில் செய்யப்பட்ட தாலிகள் என்று பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி கூறுவதாய் மா.இராசமாணிக்கனார் கூறுகிறார்.
ஆக இவையெல்லாம் புனிதத்தாலிகள் அல்ல. இவை வழக்கமான அணிகலன்களுள் ஒன்று. தமிழர்கள் அணிந்தவை எல்லாம் இப்படிப்பட்ட தாலிகள்தான். திருமணத்தில் தாலி தமிழர்கள் அணிந்ததில்லை.
மேலும் ஆரியர் வழக்கினும் தாலி இல்லை. ஆரியர்களின் எண்வகைத் திருமணங்களிலும் தாலி சுட்டப்படவில்லை.
யார் யாரோ தாலிகட்டுவாரோ!
தாலி கட்டப்படும் முறையைக் கூர்ந்து நோக்கின் இது ஒரு புனிதம் அல்ல என்பதும், மந்திரத்தால் மகிமை ஏற்றுவதெல்லாம் பின்னாளில் வந்த செயல் என்பதும் துலங்கும். உண்மையிலே மந்திரத் தத்துவப்படி, தாலித் தத்துவப்படி மணமகன் மட்டுமே கட்ட வேண்டும். ஆனால், நடப்பில் அது இல்லை.
பெரும்பாலான குடும்பங்களில், அவர்கள் வழக்கத்தைப் பொறுத்து, நாத்தி (மணமகளின் உடன்பிறந்தவள்) மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறாள். நாத்தி இல்லையென்றால், மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண் கட்டுவாள்.
சில குடும்பத்தில் தாய்மாமன் மணமகளுக்குத் தாலி கட்டுகிறான்.
சில மரபில் தாய்மாமன் மனைவி தாலி கட்டுகிறார்.
சில குடும்பத்தில் கணவனுக்குப் பதில் அவன் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஆண் கட்டுகிறான்.
சிலர் மரபுப்படி மணமகளின் தந்தையே தாலி கட்டுவது வழக்கில் உள்ளது.
சிலர் மரபில் குடும்பத் தலைவன், அல்லது அக்குலத் தலைவன் தாலி கட்டுகிறான்.
சிலர் திருமணங்களில் புரோகிதரே தாலி கட்டுவதுண்டு. (இது எப்படி!)
ஆதாரம்: (தமிழர் திருமணத்தில் தாலி. மா.இராசமாணிக்கனார்)
சட்டப்படி தாலி தேவையில்லை:
திருமணச் சட்டமே தாலி தேவையில்லை என்பதை அறிவித்தபின், தாலியை பிடித்துக்கொண்டு தொங்க நினைப்பதும், காலித்தனம் செய்வதும் கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல, தண்டிக்கத் தக்கதுமாகும்.
சட்டமும், நீதிமன்றத் தீர்ப்பும் என்ன சொல்கின்றன?
சுயமரியாதை அல்லது சீர்திருத்தத் திருமணங்களைச் செல்லுபடியாக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக இந்தச் சட்டம், 1958 இந்து திருமணச் சட்டம் 7 செக்ஷனுக்கு ஒரு புதிய செக்ஷன் 7ஏ சேர்க்கப்படுகிறது.
உறவினர்கள், நண்பர்கள் அல்லது வேறு நபர்களின் முன்னிலையில் நடத்தப்பெற்ற சுயமரியாதைத் திருமணம் அல்லது வேறு எந்தப் பெயரில் குறிப்பிட்ட திருமணமாயினும் அதற்கு இந்த செக்ஷன் உரியதாகும்.
இந்தத் திருமணம் நடத்தப்பட வேண்டிய முறைகள் அல்லது நடத்தப்பட்டிருக்க வேண்டிய முறைகள்:
(அ) திருமணத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரும் அவர்களுக்குப் புரியும் மொழியில் அவரை என் மனைவியாக என்று ஆணும் அல்லது அவரை என் கணவராக என்று பெண்ணும் அறிவிப்பதன் மூலம்
(ஆ) திருமணத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரும் மற்றவருக்கு மாலையணிவிக்க வேண்டும் அல்லது எந்த விரலிலாவது மோதிரம் அணிவிப்பது அல்லது
(இ) தாலி கட்டுவதன்மூலம்
இத்திருமணம் நடத்தப்பட வேண்டும்.
தாலி கட்டவேண்டிய கட்டாயம் இல்லை!
உறுதிமொழி படித்துத் திருமணம் அல்லது மாலை அல்லது மோதிரம் அல்லது தாலி அணிவித்துத் திருமணம் செல்லும் என்பதால் தாலி கட்டாயம் கட்ட வேண்டியது இல்லை என்று சட்டமும் அதை ஒட்டியே தீர்ப்பு கூறியுள்ளன.
மாநில அரசுக்கு உரிமையுண்டு!
எப்படித் திருமணம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டபோது நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.
திருமணம் இந்திய அரசியல் சட்டப் பொதுப்பட்டியலில் உள்ள ஒரு விஷயம் என்பதால், மாநில அரசுக்கும் இதில் சட்டம் இயற்ற உரிமையுண்டு. அதன்படி தமிழ்நாட்டில் மாநில அரசு நிறைவேற்றிய சுயமரியாதைத் திருமணச் சட்டம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
எனவே, தாலி என்பது புனிதம் அல்ல. தாலி கணவனோடு கட்டிப்போட்டு அடிமையாக்கும் கருவியல்ல. கணவன் இருக்கும்வரை மனைவி கழுத்தில் சுமக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணவன் மனைவி விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் அகற்றிக் கொள்ளலாம். உண்மை இப்படியிருக்க விருப்பப்பட்டு தாலி அகற்றிக் கொள்வதை எதிர்த்து காலித்தனம் செய்பவர்களைக் குண்டர் சட்டத்தில் தண்டிக்க வேண்டும்! என்று கூறி இந்த ஆய்வை நிறைவு செய்கிறோம்.
-உண்மை இதழ்,1-15.7.15