சோழநாட்டு எல்லை
கடல்கிழக்குத், தெற்குக் கரைபொரு வெள்ளாறு,
குடதிசையில் கோட்டைக் கரையாம்; - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டு எல்லையெனச் செப்பு.
குடதிசையில் கோட்டைக் கரையாம்; - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டு எல்லையெனச் செப்பு.
சோழ நாட்டிற்கு எல்லையாகக் கிழக்குத் திசையில் கடலும், தெற்குத் திக்கில் நீர் நிரம்பிக் கரைகளைத் தாக்குகின்ற வெள்ளாறும், மேற்குத் திசையில் கோட்டைக் கரையும், வடக்குத் திக்கில் ஏணாட்டின் வயல்களும் உள்ளன. இவற்றிற்கு இடைப்பட்ட இருபத்து நான்கு காத தூரம் உள்ள நிலப் பரப்பே சோழநாடாகும் என்று சொல்வாயாக!
வெள்ளாறு _ புதுக்கோட்டை நகருக்கு அருகில் ஓடும் ஆறு. இதனைத் தென் வெள்ளாறு எனலாம்; குடதிசை _ மேற்குத் திசை; கோட்டைக்கரை குழித்தலைப் பகுதியாக இருக்கலாம். (திருச்சி மாவட்ட கெசட்டியர் ப.28); ஏணாடு _ நடுநாடு (திருக்கோவலூர் வட்டம்); காதம் _ பத்து மைல்கள்.
பாண்டிநாட்டு எல்லை
வெள்ளாறு அதுவடக்காம்; மேற்குப் பெருவழியாம்;
தெள்ளார் புனல்கன்னி தெற்காகும்; - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் அய்ம்பத்து அறுகாதம்
பாண்டிநாட்டு எல்லைப் பதி.
தெள்ளார் புனல்கன்னி தெற்காகும்; - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் அய்ம்பத்து அறுகாதம்
பாண்டிநாட்டு எல்லைப் பதி.
பாண்டிய நாட்டின் எல்லையாவது, வெள்ளாறு வடக்கு எல்லையாகும்; மேற்குத் திசையில் உள்ள பெருவழி (Highway) அத்திக்கில் உள்ள எல்லையாகும்; தெளிந்த நீரையுடைய குமரி ஆறு தெற்கு எல்லையாகும்; மனமார ஆட்சிக்குரிய கடல் கிழக்கு எல்லையாகும். இந்நான்கு எல்லைகளுக்கு உள்ளடக்கிய அய்ம்பத்தாறு காததூரம் உள்ள இடம் பாண்டிய நாடாகும்.
கன்னி ஆறு _ மிகப் பழங்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் குமரிக்கண்டம் என்னும் நிலப்பரப்பு இருந்தது; அங்கே குமரிமலை என்றொரு மலை இருந்தது; அம்மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய ஆற்றிற்குக் குமரி ஆறு என்று பெயர். அவ்வாறு, பாண்டிய நாட்டின் தென் எல்லையாகத் தலைச் சங்க காலத்தில் இருந்தது. கடல் கொந்தளிப்பால் அந்த நிலப்பகுதி கடலுள் மூழ்கி மறைந்தது. பிறகு இன்றைய குமரிமுனை பாண்டிய நாட்டின் தென் எல்லையாக இருந்து வருகிறது. கன்னி _ குமரி.
சேரநாட்டு எல்லை
வடக்குத் திசைபழனி; வான்கீழ் தென்காசி;
குடக்குத் திசைகோழிக் கோடாம்;- கடற்கரையின்
ஓரமோ தெற்காகும்; உள்எண் பதின்காதம்
சேரநாட்டு எல்லையெனச் செப்பு.
குடக்குத் திசைகோழிக் கோடாம்;- கடற்கரையின்
ஓரமோ தெற்காகும்; உள்எண் பதின்காதம்
சேரநாட்டு எல்லையெனச் செப்பு.
வடதிசையில் பழனியையும், பெருமை உடைய தென்காசியைக் கீழ்த் திசையிலும், மேற்குத் திசையில் கோழிக் கோட்டையும் (கள்ளிக்கோட்டை), தெற்கில் கடற்கரையையும் எல்லையாக உடையது சேரநாடு. அதன் பரப்பு எண்பது காத தூரமாகும் என்று கூறுக!
தொண்டைநாட்டு எல்லை
மேற்குப் பவளமலை; வேங்கட நேர்வடக்காம்;
ஆர்க்கும் உவரி அணிகிழக்கு; _ பார்க்குள்உயர்
தெற்குப் பினாகினி திகழிருப தின்காதம்
நல்தொண்டை நாடெனவே நாட்டு.
ஆர்க்கும் உவரி அணிகிழக்கு; _ பார்க்குள்உயர்
தெற்குப் பினாகினி திகழிருப தின்காதம்
நல்தொண்டை நாடெனவே நாட்டு.
மேற்குத் திசையில் பவளமலையும், நேரே வடதிசையில் திருவேங்கட மலையும், அழகிய கிழக்குத் திசையில் ஒலிக்கின்ற கடலையும், தென்திசையில் உலகில் சிறந்த பெண்ணை ஆற்றையும் எல்லையாக உடையது சிறந்த தொண்டைநாடு. அதன் அமைப்பு இருபது காத தூரம் என்று உறுதியாகச் சொல்லுக.
வேங்கடம் _ திருப்பதி; ஆர்க்கும் _ ஒலிக்கும்; உவரி _ கடல்; பார் _ உலகு; பினாகினி _ பெண்ணையாறு, தென்பெண்ணை.
உண்மை இதழ்,1-15.6.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக