பக்கங்கள்

புதன், 11 ஜூலை, 2018

வள்ளுவரின் திருக்குறளே ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் எதிர்ப்பு அரண்தான்!(1)

மூளையில் மாட்டப்பட்ட ஆரிய விலங்கை உடைக்க ஈரோட்டு சம்மட்டி தேவை!


தஞ்சை: திருக்குறள் பேரவை விழாவில்  தமிழர் தலைவர் உரை




தஞ்சை, ஜூலை 4   வள்ளுவரின் திருக்குறளே ஆரியப் பண் பாட்டுப் படையெடுப்பின் எதிர்ப்பு அரண்தான்! மூளையில் மாட்டப்பட்ட ஆரிய விலங்கை உடைக்க ஈரோட்டு சம்மட்டி தேவை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திருக்குறள் பேரவை சார்பில்...


28.5.2018 அன்று தஞ்சையில் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

முதுமையானவர்களை இளமையாக்குவது எப்படி?


மிகுந்த எழுச்சியோடும், இன உணர்வோடும் சிறப்பாக ஒரு நல்ல தொண்டறத்தை திருக்குறளை பரப்புதல் என்பதன்மூலம் ஒரு புதிய அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குதல் - கட்டுதல் என்ற பணியை உலகத் திருக்குறள் பேரவை என்று தொடங்கி, இந்தப் பெருமைக்குரிய தஞ்சை மாநகரில், தொடர்ந்து அறிஞர் பெருமக்களையெல்லாம் அழைத்து, சிறப்பான எல்லா வகையிலும் மூதறிஞர்களாக, முதிர்ந்தவர்களாக இருக்கக்கூடிய அறிஞர்களையெல்லாம், ஓய்வு பெற்று வீட்டிலே அமர்ந்திருக்கிறோமா, எப்படி பொழுது போகிறது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவர்களை - முதுமை யானவர்களை இளமையாக்குவது எப்படி? என்பதற்கு அடையாளமாக இந்த உலகத் திருக்குறள் பேரவையை இங்கே அமைத்து, பல்லாண்டுகாலமாக தொடர்ந்து நடத்தி, நிகழ்ச்சிகளைத் சரியான நேரத்தில் தொடங்கி, சரியான நேரத்தில் முடியும் என்று நம்முடைய விழா செயலாளர் அவர்கள் தெளிவாக சொன்னதைப்போல, இந்த முயற்சியே சரியான நேரத்தில் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி. ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில், ஒரு பெரிய பண்பாட்டுப் படையெடுப்பில், பெரியவர்கள், படித்தவர்கள், ஆழ்ந்தவர்கள் என்பவர்கள் எல்லாம் மூழ்கி இருக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில், அந்த மயக்கத்திலிருந்து அவர்களை வெளியே கொண்டு வருவதற்காக செய்த பாராட்டத்தகுந்த அரிய முயற்சியான உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில், இங்கே உரையாற்றுவதற்குரிய அரிய வாய்ப்பை வழங்கி யமைக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய அய்யா குறள்நெறிச் செல்வர் பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியனார் அவர்கள் ஒரு சிறந்த ஆய்வுரையை முன்னுரையை வழங்கினார்கள்.

பாராட்டுகளைக் கேட்பதைவிட ஒரு மனிதனுக்குத் தண்டனை வேறு கிடையாது!


ஒரே ஒரு சங்கடம்தான் எனக்கு. என்ன சங்கடம் என்று சொன்னால், பாராட்டுகளைக் கேட்பதைவிட ஒரு மனிதனுக்குத் தண்டனை - குறிப்பாக, பெரியார் தொண்டர்களுக்கு- வேறெதுவும்  கிடையாது. நாங்கள் வசவுகளையே அதிகம் கேட்டுக் கேட்டு பழக்கப்பட்ட காதுகளைக் கொண்டவர்கள்.

எனவே, இந்தப் பாராட்டுகளைக் கேட்கின்றபொழுது என்ன சிக்கல் என்று சொன்னால், நிமிர்ந்து இருக்கிற தலை -  நிமிர்ந்து இருக்க வேண்டிய தலை - கொஞ்சம் குனிய வேண்டிய அவசியத்திற்கு ஆளாகிறது! எங்கள் தலை எப்பொழுதும் பாராட்டுக்குக் குனியும்; எதிர்ப்புக்கு நிமிரும். எதிர்ப்பு வர, வர, வர நிமிர்ந்துகொண்டே இருக்கும். எனவே, அந்த நிமிரக் கூடிய வாய்ப்பைப் பெற்றுத்தரவேண்டும் என்று நாங்கள் எல்லாம் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், மீண்டும் கொஞ்சம் (தலைக்குனிவு அல்ல) தலையை குனிய வைத்து - தலைகுனிவு வேறு; தலையை குனிய வைப்பது வேறு என்கிற அளவில் அய்யா அவர்கள் பல செய்திகளை சொன்னார். அதற்கு நான் தகுதியோ, இல்லையோ - அறிவாசான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் அதற்கு முழுத் தகுதி படைத்தவர்.

தலைதாழ்ந்த நன்றியை அவர்களுக்கு நான் உரித்தாக்கிக் கொள்கிறேன்


ஆகவே, அய்யா இன்றைக்கு இல்லை ஆகையால், அய்யாவின் தொண்டர்களையாவது பாராட்டுவோம் என்கிற அளவிற்கு இதை செய்திருக்கிறார்கள். அதற்காக என்னுடைய தலைதாழ்ந்த நன்றியை அவர்களுக்கு நான் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற அய்யா அவர்களே,

வரவேற்புரையாற்றிய குறளகச் சுடர் அய்யா மாறவர்மன் அவர்களே,

இவரை நம்முடைய திருக்குறள் சோமசுந்தரம் அவர்கள் தான் அறிமுகப்படுத்தினார். எனக்குப் பல ஆண்டுகாலமாக நண்பர் சோமசுந்தரம் அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் ஒரு பெரியார் தொண்டர். அவருடைய தந்தையாரை நாம் அறிவோம். பெரியார் அறிவார். அப்படிப்பட்ட ஒரு குடும்ப நட்பு மிகத் தெளிவாக உண்டு. அவர் கொள்கைக் குடும்பத்தவரும் கூட.

நான் உள்ளபடியே எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்!


ஆகவே, பல ஆண்டுகாலம் இந்த அமைப்பிற்கு வரவேண்டும் என்று சொன்னார்கள். ஏற்கெனவே ஒருமுறை இங்கே வந்திருக்கிறேன். மீண்டும் இங்கே வரவேண்டும் என்று அவர்கள் இந்த வாய்ப்பைக் கேட்டபொழுதெல்லாம், அதற்கு வாய்ப்பில்லாமல் நழுவி நழுவி சென்றது. ஆனால், இன்றைக்கு எப்படியும் செல்லவேண்டும் என்று இங்கே வந்தபொழுது, நான் உள்ளபடியே எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

காரணம், இங்கே வந்திருக்கின்ற அறிஞர்கள், அறிவார்ந்த மக்கள். திருக்குறள் எந்த அளவிற்குப் பண்புடையவர்களை உருவாக்கும் என்பதற்கு அடையாளமாக இங்கே வந்திருக் கிறீர்கள்.

இன்னுங்கேட்டால், ஆழமாகத் திருக்குறளைப் பயின்ற அறிஞர்கள். எங்களைப் போன்ற சாதாரணமானவர்கள் அல்ல அவர்கள்.

திருத்துவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள்!


எனவேதான், இந்த அரங்கத்தில் துணிச்சலாக கருத்து களைச் சொல்லலாம் என்கிற எண்ணம் எங்களுக்கு வருகிறது. ஏனென்றால், திருத்துவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். நாங்கள் திருந்துவதற்குத் தேவையானால் - திருத்திக் கொள்வதற்கும் தயாராக இருக்கிறோம். சமுதாயத்தைத் திருத்தக்கூடிய நாங்கள் இந்தப் பணியை செய்துகொண்டிருப்பதை, உற்சாகப் படுத்துகின்ற அளவில், நீங்கள் சில, பல வார்த்தைகளை சொல்லியிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையை நாங்கள் நியாயப்படுத்த முயற்சிப்போம்.

அதேபோல, இங்கே கடவுள் வாழ்த்து என்கிற பெயரால், திரு.புகழேந்தி அவர்கள் மிகச் சிறப்பாகப் பாடினார்கள்.

அதுபோலவே, இறுதியில் நன்றியுரையை புலவர் அய்யா கோபாலகிருஷ்ணன் நிகழ்த்தவிருக்கிறார்.

புலவர் மல்லிகா அவர்கள் நாட்டுப்பண் பாடவிருக் கிறார்கள். ஆக, அத்துணைப் பெருமக்களே, மற்றும் இங்கே திரண்டிருக்கக்கூடிய அறிஞர்களே, சான்றோர்களே, தாய்மார்களே, கழகக் குடும்பத்தவர்களே உங்கள் எல்லோ ருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வள்ளுவருடைய குறளும் - பண்பாட்டுப் படையெடுப்பும்!


தலைப்பை எழுதுங்கள் என்று சொன்னார்கள். வள்ளு வருடைய குறளும் - பண்பாட்டுப் படையெடுப்பும் என்று இந்த உரைக்குத் தலைப்பு கொடுத்தேன்.


காரணம், வள்ளுவருடைய குறளே, பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்த ஒரு போர்க்குரல்; போர்க் குரல்தான் திருக்குறள். அந்தப் பண்பாட்டுப் படை யெடுப்பு இருக்கிறதே மிகமிக ஆபத்தானது, படை யெடுப்புகளிலேயே - காலையில் நடைபெற்ற மண விழாவில்கூட நான் சொன்னேன் - பல மேடைகளில் பெரியாருடைய கருத்தை எடுத்துப் பிரதிபலித்துப் பரப்பிக் கொண்டு வரக்கூடிய ஒரு எளிய தொண்டன். பெரியார் மாணவன், வாழ்நாள் மாணவன்.


அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அய்யா அவர்கள் சொல்வார்கள், அரசியல் படையெடுப்பு இருக்கிறதே, அது காலிலே போட்ட விலங்கு. அது கண்களுக்குப் பளிச்சென்று தெரியும். ஒவ்வொரு முறை எழும்போது விழுவார்கள். அப்பொழுது ஒரு உணர்வு வரும், அந்தத் தடையை அகற்றவேண்டும், அந்த விலங்கை உடைக்கவேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். அது அரசியல் படையெடுப்பு.


எங்களுடைய கைகளில் விலங்கு போட்டுத்தான் அழைத்துப் போவார்கள்


கைகளில் போடப்படுகின்ற விலங்கு இருக்கிறதே - இது பொருளாதாரப் படையெடுப்பு. அதுவும் கண்களுக்குப் பளிச்சென்று தெரியும். ஆகவே, கைகளை நாம் சுதந்திரமாக செயல்படுத்த முடியாது. கைவிலங்கு அனுபவம் நெருக்கடி காலத்தில் எனக்கே உண்டு. சிறைச்சாலையில் அடித்ததால், காயம் ஏற்பட்டதின் காரணமாக, சிறைச்சாலையில் இருக் கின்றமருத்துவமனையால், அதனை குணப்படுத்தமுடி யாது என்று சொன்னதினால், மிசா கைதி'களாக சென்னை பொது மருத்துவமனைக்கு காவல்துறை வாக னத்தில் எங்களை அழைத்துக்கொண்டு சென்றார்கள். அப்படி அழைத்துச் சென்றபொழுது, நாங்கள் எல்லாம் ஓடிவிடுவோமோ என்பதினாலேயோ அல்லது எங்களை அவ மானப்படுத்தவேண்டும், அச்சுறுத்தவேண்டும் என்பதற் காகவோ எங்களுடைய கைகளில் விலங்கு போட்டுத்தான் அழைத்துப் போவார்கள். எங்களுடன் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் கூட வருவார்கள்.

காவல்துறையினர்மீது கோபப்பட்ட மருத்துவர்!


மருத்துவர்கள்தான் எங்களுக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருந்தார்கள். அந்த நேரத்தில், மருத்துவமனையில் இருந்த மருத்துவர் கோபப்பட்டு, காவல்துறையினரிடம், என் னங்க இப்படி கைவிலங்குப் போட்டிருக்கிறீர்களே, அவர்கள் என்ன ஓடிப் போய்விடுவார்களா? என்று கேட்டார்.

அதெல்லாம் எங்களுக்குத் தெரியாதுங்க; மேலே இருந்து உத்தரவு வந்திருக்கிறது. இல்லை என்றால், எங்களுடைய வேலை போய்விடும்'' என்று காவல்துறையினர் சொல்வார்கள்.

அதெல்லாம் முடியாது; கை விலங்கைக் கழற்றிவிட்டு இங்கே அனுப்புங்கள்; அவர் இங்கே நோயாளியாகத்தான் கருதப்படுவாரே தவிர, கைதியாக அல்ல என்றார் அந்த மருத்துவர்.

நான்கூட அவரிடம் சொன்னேன், ஏங்க, டாக்டர் உங்களை வேறு எங்கேயாவது தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றிவிடப் போகிறார்கள்; நீங்கள் இங்கே இருப்பது எங்களுக்குக் கொஞ்சம் உதவியாக இருக்கிறது என்றேன்.

ஆக, கைவிலங்கு போட்டால், பளிச்சென்று நமக்கும் தெரியும், பார்ப்பவர்களுக்கும் தெரியும். ஆகவே, பொருளாதார அடிமைத்தனம் என்பதுதான் கைவிலங்கு.

பண்பாட்டுப் படையெடுப்பினால் ஏற்பட்ட அடிமைத்தனம் இருக்கிறதே, அது மூளையில் போட்ட விலங்காகும். அது கண்களுக்கும் பளிச்சென்று தெரியாது; அது பல பேருக்குத் தெரியாது.

ஈரோட்டு சம்மட்டி!


கைகளிலோ, கால்களிலோ போட்ட விலங்குகளை உடைப்பதற்கு சாதாரண சம்மட்டி போதும். ஆனால், தமிழனுடைய மூளையில், திராவிடனுடைய மூளையில், தமிழ்நாட்டு மக்களுடைய மூளையில், ஏன் இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பெண்கள் உள்பட அவர்களின் மூளையில் போட்ட விலங்கு இருக்கிறதே, அதை உடைப்பதற்கு சாதாரண சம்மட்டியால் முடியாது; ஒரே ஒரு சம்மட்டியால்தான் முடியும் - அதுதான் ஈரோட்டு சம்மட்டியாகும்.

அப்படிப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பு என்பது மிகப் பெரிய ஆபத்தாகும். அந்த விலங்கை உடைக்கும் சம்மட்டிக்கு ஒரு வரலாறு உண்டு. அந்த சம்மட்டி சாதாரண சம்மட்டியல்ல. வள்ளுவர் கையில் இருக்கின்ற சம்மட்டியாகும்.

இன்றைக்குக் கிடைக்கும் மருத்துவ முறைகள் அன்றைக்கு இருந்திருந்தால்...


மனுதர்மத்தைப்பற்றி அவர்கள் பேசும்பொழுது, மனோன் மணியம் சுந்தரனாருடைய அந்த சிறப்பான வரிகளை எடுத்துச் சொல்லும்பொழுதே தெளிவாகத் தெரியும். நம்முடைய கெட்ட வாய்ப்பு, சுந்தரனார் போன்றவர்கள் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்கவேண்டும். அவர் குறைவான வயதிலேயே நம்மைவிட்டுப் பிரிந்தார். இன்றைக்குக் கிடைக்கும் மருத்துவ முறைகள் அன்றைக்கு இருந்திருந்தால், எத்தனையோ அறிஞர் பெருமக்களை நாம் காப்பாற்றியிருப்போம். அன்றைக்கு அந்த வாய்ப்பு இல்லை.

எனவே, இருந்த காலத்தில் அவர்கள் சொன்னதெல்லாம் இன்றைக்கு அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், மறைந் தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக அந்த வாய்ப்பைப் பெற்றிருக் கிறார்கள்.

வள்ளுவத்தை - திருக்குறளை அய்யா அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். எல்லோருமே நீங்கள் கேட்டதுதான். ஆனால், திரும்பத் திரும்ப சில வார்த்தைகளை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.

மறுவற நன்குணர்ந்தோர்!

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்

குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி

மனு என்று சொன்னால், ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று ஒரே வரியில் சொல்லிவிட்டார்.

அதேநேரத்தில், திருவள்ளுவரைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, இன்றைக்குத் திருவள்ளுவரை எல்லோரும் படிக்கிறார்கள்.

திருவள்ளுவரைப்பற்றி நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லும்பொழுது, மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் சொன்னார்கள், மறுவற நன்குணர்ந் தோர் என்று. மறு என்பது குற்றம்; அது ஏராளம் திருக் குறளையும் சுற்றிவந்து விட்டது.

எனவேதான், திருக்குறளைப் படித்தேன் என்று சொல்லாதே - மறுவற படித்தேன் என்று சொல். திருக்குறளை சரிவர படித்தேன் என்று சொல் என்கிறார் சுந்தரனார்.

திருக்குறளை சரிவர படித்தேன் என்று சொல் - மறு என்று சொன்னால், மாசு. திருக்குறளிலும் மாசு சேருகிறது - அண்மையில் அய்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

டாக்டர் நாகசாமி என்கிற பார்ப்பன ஆய்வாளர் ஒருவர். அவர் எல்லாமே சமஸ்கிருதத்திலிருந்துதான் வந்தது என்று சொல் லக்கூடியவர். கல்வெட்டுகளையெல்லாம் புரட்டி புரட்டி அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இப்பொழுதுகூட அய்யா அவர்கள், அதற்கு அருமையான பதில் எழுதிய நூலை எனக்குக் கொடுத்தார்.

நம்முடைய பேராசிரியர் அவர்கள் அதை மறுத்து கருத்துரை எழுதியிருக்கிறார்.

ராஜீவ் மல்கோத்ரா


இப்பொழுது மறுபடியும் பார்த்தீர்களேயானால், அமெரிக் காவில் உள்ள ஒரு வடநாட்டுக்காரர். அவர் ஆர்.எஸ்.எஸ்.சைப் பரப்புவதையே தன்னுடைய தொண்டாக வைத்தி ருக்கிறார். அவருடைய பெயர் ராஜீவ் மல்கோத்ரா. அவர் எப்படிப்பட்டவர் என்பதை சுருக்கமாக நான் சொல்கிறேன்.

சுருக்கமாக அவர் அமெரிக்காவில் இருக்கின்ற ஒரு சுப்பிரமணியசாமி.''

இங்கே சுப்பிரமணியசாமி - அமெரிக்காவில் இருக்கிற ஒரு மல்கோத்ரா. இந்த இரண்டு பேரும் நேசிக்கக்கூடியவர் யார் என்றால், நாகசாமி - புரிந்துகொள்ளுங்கள்.

நவீன கருவிகளை அவர்கள் கையாளுகிறார்கள். திருவள்ளுவர் பெரிய அறிஞர். ஆனால், மனுதர்மம் போன்ற நூல்களில் இருக்கின்ற சாஸ்திரங்கள், தர்மங்கள் இதையெல்லாம் ஒட்டித்தான் அந்தக் கருத்துகளை சொல்லியிருக்கிறார்.'' இது எவ்வளவு பெரிய மோசடி பிரச்சாரம்? ஓராண்டுக்கு முன்பே நம்முடைய பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் அந்த புத்தகத்தைக் கொடுத்தார். அதேபோன்று தருமபுரியில் ஒரு நண்பர் மிகப்பெரிய தத்துவத் தோழர் - அவர் மறுத்து எழுதியபோது, பெரியார் திடலிலேயே ஒரு கூட்டத்தைப் போட்டு சொன்னேன்.

இந்த முன்னுரையை இதோடு நிறுத்திக்கொள்கிறேன் நேரமின்மை காரணத்தினால்.

திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி

மீண்டும் மனுதான் அரசியல் சட்டமாக வேண்டும் என்ற முயற்சிகள் நடைபெறுகின்றன


இன்றைக்கு மீண்டும் மனுதான் அரசியல் சட்டமாக வேண்டும் என்ற முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டி ருக்கின்றன. இலை மறைவு காய் மறைவாக அல்ல. வெளிப் படையாகவே!

முன்பு மதுரையில், வழக்குரைஞர்கள் மாநாடு என்று போட் டார்கள். விசுவ இந்து பரிஷத். ஆர்.எஸ்.எஸ்.சினுடைய பல்வேறு பிரிவுகளில் அதுவும் ஒன்று.

அதில் அவர்கள் சொல்கிறார்கள், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை நாம் தூக்கிப் போட்டுவிடவேண்டும். இது பயனற்றது. எல்லோருக்கும் எல்லாமும் என்ற வாய்ப்பை சொல்வது.

ஆக, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார் அல்லவா! இந்த நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலையல்ல - எனவே, அதனை எடுத்துவிடவேண்டும். மனுதர்மத்தைத்தான் நாம் அந்த இடத்தில் வைக்கவேண்டும் என்று பல ஆண்டு களுக்குமுன்னால், மதுரையில் நடைபெற்ற வழக்குரைஞர் மாநாட்டில் இப்படி ஒரு தீர்மானத்தைப் போட்டார்கள். அப்பொழுது மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரவில்லை. அந்தக் காலகட்டத்திலேயே அந்தத் தீர்மானத்தைப் போட்டார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு பகவத் கீதையை தேசிய நூலாக்கவேண்டும் என்று டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் சொன்னார்கள். இந்திய அரசியல் சட்டத்தின் பெரும்பகுதி மனுதர்மம்தான்; அதிலொன்றும் சந்தேகமேயில்லை. அம்பேத்கர் அவர் களுடைய அறிவாற்றலால் முடிந்த அளவிற்குப் பாடுபட்டு, அவர் நிறுத்தியது முற்பகுதி.

அவரே சொன்னார், என்னை ஒரு வாடகைக் குதிரையாக''ப் பயன்படுத்திக் கொண்டார்கள். நான்தான் செய்தேன், நான்தான் செய்தேன் என்று பழியை என்மீது போடுகிறீர்கள். நீங்கள் என்னை வாடகைக் குதிரையாகப் பயன்படுத்தினீர்களே தவிர, முழு சுதந்திரம் உள்ளவராக ஆக்கவில்லை என்று சொன்னார்.

திருக்குறளையே அழிக்கக்கூடிய அளவிற்கு....


ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழலில், மனுதர்மத் திற்கு இடம் கொடுக்கவேண்டும் என்று சொன்ன நேரத்தில், இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு தமிழனை எந்தப் பாடுபடுத்தி யிருக்கிறது. திருக் குறளையே அழிக்கக்கூடிய அளவிற்கு.


கரையான் இருக்கிறதே, கரையான் எந்த நூலாக இருந்தாலும் அரிக்கும். அதுபோன்று ஆரியக் கரை யான்கள் திருக்குறளையே அழிக்கக் கூடிய அளவிற்கு வந்தார்கள் என்பதற்கு அடையாளம்தான் இந்தச் செய்திகள்.


நண்பர்களே, அய்யா பேராசிரியர் அவர்கள் தலைமை உரையில் ஒன்றைச் சொன்னார்கள்.

திருக்குறளுக்குச் செய்த சிறிய தொண்டு!


எங்களைப் போன்ற பெரியார் தொண்டர்களுக்கு இது போன்ற திருக்குறள் பேரவைகளில் பங்கேற்று பேசக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றால், எங்களுடைய அறிவு, ஆற்றல் என்பது முக்கியமல்ல. திருக்குறளுக்குச் செய்யும் சிறிய தொண்டு. அதுதான் பெரிய தகுதியாக நாங்கள் கருதுகின்றோம்.

அந்த வகையில், அய்யா அவர்கள், 1949 ஆம் ஆண்டு - அதுவரையில் பார்த்தீர்களேயானால், நம் நாட்டில் இன்னமும்கூட ராமாயணத்தைத் தெரிந்த பாமர மக்கள், பாரதத்தை 18 நாள் படிக்கின்ற கிராமத்து மக்கள் - பாரதக் கதையில் இருக்கின்ற பல பாத்திரங்களைப் பற்றி விமர்சிக்கின்றவர்கள் - அல்லது இராமாயணத்தில் இருக்கின்ற பல கருத்துகளைப்பற்றி விமர்சிக்கக்கூடிய அளவிற்கு, அந்தப் பாத்திரங்கள் மக்கள் மத்தியில் புழக்கத்திலே வந்திருக்கக்கூடிய அளவிற்கு, வள்ளுவருடைய குறள் வந்திருக்கிறதா?

நாம் நடந்து வந்திருக்கின்ற பாதை குறைவான தூரம்தான்; இன்னமும் நடக்கவேண்டிய தூரம் மிக அதிகம். நாம் பார்த்து கடக்கவேண்டிய இன்னல்கள் அதைவிட அதிகம். முடக்கவேண்டிய செய்திகள் ஏராளம்! ஏராளம்!!

ஆகவே, கடக்கவேண்டியவை, அதேநேரத்தில், முடக்க வேண்டியவை, தடுக்கவேண்டியவை என்று எல்லாவற்றையும் பயன்படுத்துகின்ற நேரத்தில், இவர்களைப் போன்ற அறிஞர்கள் இங்கே சொல்லுவார்கள், நாங்கள் தெருமுனைகளில் நின்று தடுக்கவேண்டியவர்களைத் தடுப்பதற்குரிய ஒரு படையாக, எந்த விளைவுகளைப்பற்றியும் கவலைப்படாமல், அந்தப் பணியை செய்வோம் என்பதற்கு அடையாளம்தான் முதலில்.

பெரியார்கூட திருக்குறளைப்பற்றி பேசியிருக்கிறாரா? என்று நினைப்பார்கள்!


இன்றைய இளைஞர்களுக்கு இந்தத் தகவலை சொல் லியாகவேண்டும். பெரியார்கூட திருக்குறளைப்பற்றி பேசி யிருக்கிறாரா? என்று நினைப்பார்கள். சில புலவர்கள், பெரியாரை தமிழுக்கு விரோதி - தமிழர்களுக்கு விரோதி போன்று காட்டவேண்டும் என்று திட்டமிட்டு ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் அவர்கள் வெற்றி பெற முடியாது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டார்கள். அதை வேறு மேடைகளில் நான் சொல்கிறேன்.

பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பில் நூல்களை நாங்கள் வெளியிடுவதைப்பற்றி அய்யா இங்கே சொன்னார்களே,

திருவள்ளுவருடைய திருக்குறளைப்பற்றி பெரியார் களஞ்சியம் 37 என்பதில் நாங்கள் அத்தனையையும் தொகுத்து இருக்கிறோம்.

பெரியார் களஞ்சியம் - திருக்குறள் வள்ளுவர்


இதுவரையில் பெரியார் அவர்கள் என்னென்ன கட்டு ரைகளை எழுதியிருக்கிறார்; எந்தெந்த இடங்களில் பேசினார். திருவள்ளுவர் மன்றத்தில் பேசிய உரைகளைத் தொகுத்து, பல இடங்களில் மாறுபட்ட கருத்தையும் சொல்லியிருப்பார். அந்தக் கருத்துகளையெல்லாம் தொகுத்து, பெரியார் களஞ்சியம் - திருக்குறள் வள்ளுவர் என்ற தலைப்பில், இந்த அமைப்பின் சார்பில் நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம்.

அதில் இந்தச் செய்திகளை ஆவணப்படுத்தவேண்டும் என்பதற்காக, இன்றைய தலைமுறையினரும், அடுத்த தலைமுறையினரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, அந்தச் செய்திகளைப் பதிவு செய்திருக்கிறோம்.

1949 ஜனவரி 15, 16, ஆகிய தேதிகளில் தந்தை பெரியார் நடத்திய

குறள் வள்ளுவர் (தமிழர் நெறி விளக்க)


மாநாட்டுச் செய்திகள்!


குறள் மாநாடு


ஜனவரி 15, 16 சனி, ஞாயிறுகளில்


சென்னை பிராட்வே டாக்கீசுக்கு அடுத்த மைதானத்தில் அமைக்கும் மாபெரும் கொட்டகையில் நடைபெறும்.


தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாணசுந்தரனார் வரவேற்புத் தலைமையிலும்,


பன்மொழிப் புலவர் டி.பி.மீனாட்சி சுந்தரனார் எம்.ஏ., பி.எல்., எம்.பி.எல்.


15 ஆம் தேதி தலைமையிலும்,


ராவ்பகதூர் ஏ.சக்ரவர்த்தி நயினார் எம்.ஏ., (இந்திய எஜுகேஷனல் சர்வீஸ்)


16 ஆம் தேதி தலைமையிலும் நடைபெறும்.


நாவலர் எஸ்.சோமசுந்தர பாரதியார் துவக்க விழாவாற்றுவார்.


சாத்தூர் வழக்கறிஞர் தமிழ் புலவர் கந்தசாமி முதலியார் திருவள்ளுவர் படத்தை திறந்து வைப்பார்.


பெரியார் ஈ.வெ.ராமசாமி சொற்பொழிவாற்றுவார்.


குறள் விரிவுரை - குறள் அவதானம் - திருநெல்வேலி தி.பி.சப்பிரமணியதாஸ், அவர் தம் இளவல் சு.ராமதாஸ்


விரிவுரை - அறவுரை ஆற்ற தமிழ்ப் பெரும் புலவர் பெருமான்கள் பல அறிஞர்கள் வேண்டப்பட்டு, பலர் இசைந்தும் இருக்கிறார்கள்.


சந்திரமோகன் (அறிஞர் அண்ணாதுரை நடிப்பது).


இப்படி எல்லாத் தலைவர்களும் கலந்துகொண்ட இந்த மாநாடு 1949 ஆம் ஆண்டுகளிலேயே என்று சொல்லும் பொழுது அதனை பெரியார் களஞ்சியத்தில் பதிவு செய்திருக் கிறோம்.

ஆகவே, இதில் இருக்கக்கூடிய செய்திகளையொட்டி சில கருத்துகளை உங்கள் முன் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

அதற்குமுன் ஓர் அன்பான வேண்டுகோள் - திருக்குறளில் இருக்கின்ற அதே அறிவை - அந்த அறிமுகத்தைத்தான் எல்லா கூட்டங்களிலும் சொல்வார்.

எனக்குப் பட்டதை சொல்கிறேன் - பெரியார் தொண் டர்கள், பகுத்தறிவாதிகள் நீங்கள் கேளுங்கள் - ஆனால், எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அவசி யம் கிடையாது. உங்கள் அறிவு என்ன ஏற்கிறதோ அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றவற்றை நீங்கள் தள்ளிவிடலாம். ஆனால், உங்களுக்குத் தள்ளுவதற்கு உரிமை இருக்கின்ற காரணத்தினால், எனக்கு சொல்வதற்கு உரிமை இருக்கிறது என்று சொல்வார்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

எனவே, ஒரு பொருளை கேட்டுப் புரிந்துகொள்ளலாம், பார்த்து புரிந்துகொள்ளலாம், உய்த்து அறிந்துகொள்ளலாம். ஆகவே, எல்லாத் துறைகளிலும் நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். உங்கள் அறிவு மெய்ப்பொருள் காண்பதுதான் முக்கியம்.

ஆகவேதான், அதையே நான் முன்னுரையாக வைத்து, உங்கள் முன், இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது எப்படி ஆபத்தானது என்பதை நம்முடைய சுந்தரனார் அவர்கள் இங்கே தெளிவாக சொன்னதைப்போலவே,

இந்தக் குறுகிய காலத்தில் விளக்கமாக சொல்லவேண்டு மானால், இரண்டு அற்புதமான கவிதைகளில் சொல்லலாம். பெரியாருடைய சிந்தனைக்கு ஆட்பட்டவர்தான் புரட்சிக் கவிஞர் அவர்கள். சுயமரியாதை உணர்வு படைத்தவர். அதேநேரத்தில் ஆழ்ந்த தமிழ்ப் புலமை உள்ளவர்.

வள்ளுவரைப்பற்றி இதுவரையில் யாரும் சொல்லாத கருத்தை நம்முடைய புரட்சிக்கவிஞர் அவர்கள் சொல்லி யிருக்கிறார்.

இந்த அறிவார்ந்த அவையில் இருக்கக்கூடிய நீங்கள் இதனை தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

இதோ என்னுடைய கைகளில் இருக்கும் இந்த புத்தகம்,  பல நாட்கள் இந்தப் பதிப்பு இல்லை. நான் பாரி நிலையத்தாரிடம் சொன்னேன், அய்யா, இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. நீங்கள் அந்தப் புத்தகப் பதிப்பை வெளியிடுங்கள்; இல்லை யானால், நாங்கள் பதிப்பை வெளியிடுகிறோம் என்று சொன் னேன்.

இல்லை, இல்லை நாங்களே அந்தப் புத்தகத்தை வெளி யிட்டுப் பரப்புகிறோம் என்று சொன்னார்கள்.

இது பாரதிதாசனுடைய திருக்குறள் உரை. திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியிருக்கிறார்கள். ஆனால், புரட்சிக்கவிஞரால் முழுமையாக எழுத முடியவில்லை. ஏனென்றால், அவர் தொடங்கினார், அதற்குப் பிறகு அவர் எழுதியவை நமக்குக் சரியாகக் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றை மட்டும் நூலாக வெளியிட்டு இருப்பதுகூட அறிவார்ந்த மக்கள் மத்தியில் போய்ச் சேரவில்லை என்கிற நிலை இருக்கிறது.

வாசக நேயர்களுக்காக தந்தை பெரியாரின் முழு உரையும் இங்கே கொடுக்கப்படுகிறது.

சென்னை, மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகம் சார் பில் தோழர் சோ.லட்சுமிரதன் பாரதி எம்.ஏ., பி.எல். அவர் கள் தலைமையில் 14.3.1948 இல் நடைபெற்ற 3 ஆவது திருவள்ளுவர் மாநாட்டில் திராவிட நாட்டுத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய அருமை வாய்ந்த சொற் பொழிவின் சாரம் - விடுதலை, 25.3.1948

பேரன்பு மிக்க தலைவர் அவர்களே! தோழர்களே!! தாய்மார்களே!!

இம்மாநாடு திருவள்ளுவர் பேரால் கூட்டப்பட்டி ருப்பதையொட்டி, திருவள்ளுவர் பற்றியும் அவரது குறளைப் பற்றியும் பேசுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும், சிறப்பாக இந்நாட்டுப் பழங்குடிப் பெருமக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய திருக்குறள் ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும், நெறிக்கும் (மதத்துக்கும்), நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல சங்கதிகளை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் நம் பெருமையை, திராவிடரல்லாத மக்களுக்கு உணரச்செய்ய முடிகிறது. நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காவியங்களி லிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியுமாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர்களுக்குத்தான் புரியும்; அவர் களுக்குத் தான் பயன்படும். ஆனால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக்கு ஏற்ற ஆதாரமாய் அமைந் திருக்கிறது.

திருக்குறள் தெய்வீகத் தன்மை பொருந்திய ஒருவரால் எழுதப்பட்டது என்பதற்காகவோ, அல்லது மனிதசக்திக்கு மேம்பட்டவரால் சொல்லப்பட்டது என்பதற்காகவோ நாம் அதைப் போற்றவில்லை; அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த கருத்துகளுக்காகத் தான் நாம் அதைப் போற்றுகிறோம் என்பதை நீங்கள் அனைவரும் உணர்தல் வேண்டும்.

சிறிது காலத்திற்கேனும் மக்கள் தொடர்ச்சியாகத் திருக் குறளைப் படித்து மனத்தில் ஆழப் பதியவைத்து வரு வார்களானால் நம் நாட்டில், நம் மக்கள் வாழ்வில், நம் மக்கள் உள்ளத்தில், ஒரு புதிய உணர்ச்சி உறுதியாக ஏற்படும் என்பதுதான் என் கருத்து.

ஆரியம் இந்நாட்டில் வேகமாகப் பரப்பிவைக்கப்பட்டு வந்த மத்திய காலத்தில் திருக்குறள் மிகச் சாதாரணமாகப் பாவிக்கப் பட்டு விட்டது. சமீப காலமாக, ஒரு கால் நூற்றாண்டுக் காலமாகத்தான் திருக்குறளின் விழுமிய கருத் துகள் சாதாரணமாக மக்களிடையே பழக்க வழக்கத்திலும் பொதுக்கூட்டங்களிலும் பரிமாறும்படியான நிலை ஏற்பட்டு, இன்று அதுவே எதிர்கால ஆசாபாசங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும், நல்வாழ்வுக்கு ஏற்றதான உயர்வான எண்ணங்களைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்துவிட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கருத்துகளை வெளியிட்டதற்காக, திருவள்ளுவரை ஏன் தெய்வீகத்தன்மை பொருந்தியவர் என்று கூறக்கூடாது என நீங்கள் வினவலாம்.

இன்றுள்ள மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தெய் வீகத்தன்மை என்பதாக ஒரு தன்மை மக்களுக்கு இருக்கிற தென்பதையே என்னால் ஒப்புக்கொள்ள முடியாததால்தான் திருக்குறள் ஆசிரியருக்கு அத்தகைய தெய்விகத் தன்மை யைக் கொடுக்க முடியவில்லை.

சாதாரணமாக, அவருக்கு உயர்ந்த அறிவும், ஆராய்ச்சித் தன்மையும், அனுபவமும் இருந்திருக்கவேண்டும் என்பதைத் தான் இக்கருத்துகள் நமக்குத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. திருக்குறளை உண்டாக்கினவர் யார்? அவர் பெயர் என்ன? அவருடைய சரித்திரம் என்ன? என்பதைக் கூட நம்மால் சரியாக அறிந்து கொள்ளத்தக்க ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. திருக்குறளை உண்டாக்கியவர் திருவள்ளுவர் என்று கூறப் படுகிறது. வள்ளுவர் என்பது ஒரு சமூகத்தின் பெயர். ஒரு சமூகத்தின் பெயரே ஒரு தனிப்பட்ட நபரின் பெயராக அமையக்கூடும் என்று என்னால் கருதமுடியவில்லை. அதுவும் தாழ்ந்த ஜாதி எனப்படுமொன்றின் பெயரை, ஒருவர் தம்முடைய பெயராக வைத்துக்கொள்ளக்கூடும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. திருக்குறளை உண்டாக்கியவரின் உண்மைப் பெயர் மறைக்கப்பட்டு விட்டது என்பதுதான் என்னுடைய கருத்து. பழைய சங்க நூல்கள், நீதிநூல்கள் ஆகியவற்றில் கூடப் பெரும்பாலும் ஆசிரியர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கவில்லை. நூலை உண்டாக்கியவரின் பெயர் மறைக்கப்படுவதும் பண்டைக் காலத்திய பழக்கங்களில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.

உண்டாக்கிய மனிதனின் பெயரை மறைத்துவிட்டு கடவுளால் எழுதப்பட்டது. யாரோ ஒரு பெரிய மகானால் எழுதப்பட்டது என்று கூறுவதால் நூலுக்கு அதிகமதிப்பு ஏற்பட்டுவிடும் என்று அன்றைய மக்கள் கருதினர். அத னால்தான் பண்டைய சாஸ்திரங்களும் புராணங்களும், இவையாவும் ஒருவருக்கும் தெரியாத ரிஷிகளின் பெயரால் இன்னமும் வழங்கி வருகின்றன.

பழைய காலத்தில் அறிவுக்கு மரியாதை இருந்திருக்க வில்லை என்பதைத்தான் இப்பழக்கம் காட்டுகிறது. அறிவுக்கு மரியாதை இல்லையென்றால் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் அறிவுக்கும் ஒவ்வாத சங்கதிகளுக்குத்தான் அன்று மரியா தையும் பெருமையும் இருந்திருக்க வேண்டுமென்று ஏற்படுகிறது. அவன் இதைத் தன் கல்வியறிவால் எழுத வில்லை; தன்னுடைய சொந்த அறிவினாலும் எழுதவில்லை; அவனுடைய நாக்கில் சரஸ்வதி கனவில் வந்து ஏதோ கிறுக்கினாளாம். அதனால் தான் இத்தகைய தெய்வீகத் தன்மை வாய்ந்த கவிகளை அவனால் எழுத முடிந்தது என்று கூறினதால்தான் மக்கள் அக்கவிகளுக்கு மரியாதை காட்டி வந்தனர். இந்தக் காலத்தில் சரஸ்வதி வருவதற்கில்லை. இது காட்டுமிராண்டிக் காலமல்ல; அறிவுக்காலம், இக்காலத்தில் அறிவுக்கு மேற்பட்ட தத்துவத்தைக் காட்டி ஒரு காரியமும் சாதித்துக்கொள்ள முடியாது. ரிஷி என்றால் என்னவென்பதும் தற்கால மக்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கிறது.

திருவண்ணாமலை ரமணரிஷியைப்போல்தான் மற்ற ரிஷிகளும் இருந்திருக்க வேண்டுமென்பது இந்தக் காலத்தில் நம் மக்களுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. ரமண ரிஷியின் யோக்கியதையை உணர்ந்து கொண்ட மக்கள் ரிஷிகளின் தகுதியையும் திறமையையும் ஒருவாறு உணர்ந்து கொண்டு விட்டனர்.

ஆகவே, இன்றைய மக்களை ஏமாற்றுவதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, அறிவைப் பலவகைகளிலும் பெருக்கிக் கொள்ள வசதியுள்ள தற்காலத்திலேயே சன்னி யாசி-துறவி வேடம் கொண்ட ஒருவரை ரிஷி என்று, பகவான் என்று கூறவும் விளம்பரப்படுத்தவும் முடிகிற தென்றால், பழங்காலத்தில் அதாவது மக்கள் அறிவைப் பெற - உண்மைகளை உள்ளபடி அறிந்துகொள்ள இன் றுள்ள வசதியில்லாத அந்தக் காட்டு மிராண்டிகாலத்தில், எப்படிப்பட்டவர்களை ரிஷிகளாக்கி இருப்பார்கள் என்பது பற்றிக் கேட்கவா வேண்டும்? அவர்களால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் நூல்களின் ஆபாசத்திற்குத்தான் என்ன நம்மால் அளவு காண முடியுமா?

திருக்குறள் அப்படிப்பட்டதல்ல. அதில் பாவம் என்பதற் காகப் பயப்படும் கோழைத்தனமான கருத்துகளுக்கு இட மில்லை. எத்தகைய பகுத்தறிவுக்குப் புறம்பான ஆபாசக் கருத்துக்கும் அதில் இடமில்லை. அதைக்காட்டி மக்களை ஏய்க்க முடியாது. ஆகவேதான் பெரிய செல்வாக்குப் பெற வசதியோ வாய்ப்போ அதற்கு இல்லாமல் போய்விட்டது. எந்த ஒரு நூலும், எந்த ஒரு நபருக்கும் ஒரு கூட்டத்தவரால் அதாவது  பார்ப்பனக் கூட்டத்தவரால் புகழப்பட்டால்தான் அவற்றிற்கும் புகழ் ஏற்படும். புகழ் வேண்டுமானால் ஒரு பார்ப்பனன்தான் புகழ வேண்டும். இன்றேல் புகழ் கிடையாது. இது தான் இன்றைய நிலை. பழையகால நிலையும் இதுதான்.

இப்பார்ப்பனக் கூட்டத்தைத் தாண்டக் கூடிய சக்தி யிருந்தால் தான் எவனாவது இந்த உலகில் பேரும் புகழும் அடையமுடியும்; அல்லது பார்ப்பனனுக்கு அடிமையாக இருந்தால் ஒருக்கால் ஒருவன் புகழடையக் கூடும். நம்மவன் ஒருவன்  மகா புத்திசாலியாய் இருந்தால் கூட அதைப்பற்றி அந்தக் கூட்டத்தில் பேசச் சந்தர்ப்பம் எழுந்தால் அவர்கள் என்ன கூறிக் கொள்ளுவார்கள் தெரியுமா?

அவன் ஒரு மகா புத்திசாலி என்பதென்னவோ உண்மை தான் ஆனால் அவனுடைய பிறவியில்தான் எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. பிராமண விந்து (பிந்து) சம்பந்தம் ஏதாவது இருக்க வேண்டும்; இன்றேல் இவ்வளவு புத்திசாலியாக இருக்கமுடியாது என்றுதான் பேசிக் கொள்வார்கள்!

நம் பண்டைத் திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் திருவள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரையும் நாம் சிறந்த அறிவாளிகளாகக் குறிப்பிட முடியும். அவர்கள் இரண்டு பேரையுமே பார்ப்பனர்கள், அசல் திராவிடர்களென்று ஒப்புக் கொள்வதில்லை அவர்கள் இருவரையும் ஆதி என்ற பறைச்சிக்கும் பகவன் என்ற  பிராமணனுக்கும் பிறந்த குழந்தைகள் என்றுதான்; அவர்கள் கூறுகிறார்கள். இதை நம் பண்டித சிகாமணிகளும் ஓர் அளவுக்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள். என்னடா ஜாதியில் மகா கேவலமான பறைச்சி வயிற்றில் இவ்வளவு அறிவாளி யான பிள்ளை எப்படிப் பிறந்திருக்கக்கூடும் என்று பார்ப்பனர் நினைப்பதில்லை. அவள் பறைச்சியாயிருந்தாலும் அந்த விந்து பார்ப்பன விந்துதானே என்பது தான் அவர்களுடைய கருத்து!

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 4.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக