பக்கங்கள்

ஞாயிறு, 1 ஜூலை, 2018

தமிழ் மொழியை உலகளவில் பரப்ப தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வளர் மய்யம் தொடங்க நடவடிக்கை



தஞ்சாவூர், ஜூலை 1- தமிழ் மொழியை உலக அளவில் பர வலாகக் கொண்டு செல்வதற் காக, தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் தமிழ் வளர் மய்யம் ஜூலை மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.

உலக அளவில் தமிழ் மொழி 16ஆ-வது இடத்தில் உள்ளது. இதை முதல் 10 இடங்களில் இடம்பெறச் செய்வதற்காகத் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளில் இதுவும் ஒன்று. இத்திட்டம், தமிழ்ப் பல் கலைக்கழகம் மூலமாகச் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் க.பாஸ்கரன் கூறியது: இம்மய் யத்துக்குத் தமிழக அரசு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்திருப் பதுடன், ஆண்டுதோறும் ரூ. 2 கோடி வழங்குவதற்கும் வழி வகை செய்துள்ளது. இத்திட் டம் ஜூலை மாதத்தில் நடை முறைக்கு வர உள்ளது.

இதற்காக பிற மாநிலங்களி லும், வெளி நாடுகளிலும் உள்ள தமிழ்க் கல்வி அமைப்புகள், இயக்கங்களுடன் இணைந்து மய்யங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, வெளி மாநிலங்களில் சில இடங்களில் தமிழ்ச் சங்கத்தினர் அல்லது தனி நபர் இதுபோன்ற வகுப்பு களை நடத்தி வருகின்றனர். அவர்களுடனும் இணைந்து பணியாற்ற உள்ளோம்.

எளிய வழியில் கற்பித்தல்: தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத பிற மொழியினர் தமிழைக் கற்க விரும்பினால், அவர்களுடைய தாய் மொழி மூலமாகவே அடிப்படை நிலையில் இருந்து கற்றுக் கொள்ளும் விதத்தில் இத்திட் டம் உருவாக்கப்பட்டுள்ளது. பிற மொழியைத் தாய்மொழி யாகக் கொண்டவர்களுக்கு அவர்களுடைய மொழி மூல மாகவே படக்காட்சிகளை கொண்டு தமிழ் கற்றுத் தரப்படும். இதேபோல, வெளி நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகள் அந்தந்த நாட்டு மொழியில் பேசுவதால், அவர் களுக்குத் தமிழில் பேசுவும், எழுதவும் முடியவில்லை. அவர்களுக்கும் இம்மய்யத்தின் மூலம் எளிய வழியில் தமிழ்க் கற்றுத் தரப்படவுள்ளது.

ஹிந்தி மொழியில் பிராத் மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா உள்பட 8 நிலைகள் உள்ளதைப் போன்று, தமிழ் மொழிக் கற் பித்தலிலும் 9 நிலைகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலை முடித்தவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பாடத்திட்டம் பொதுவாக ஒரே மாதிரியாக அல்லாமல், ஒவ்வொரு நாட் டுக்கும், அந்தந்த மொழி, பண் பாடு, கலாசாரம், பாரம்பரியத் துக்கேற்ப வடிவமைக்கப்படுகி றது. முப்பது நாட்களில் தமிழ்க் கற்கலாம் என்ற நிலையில், பல்வேறு மொழிகளில் எளிய தமிழில் படங்களுடன்கூடிய நூல்கள் தயார் செய்து வழங் கப்படவுள்ளன.

மேலும், காணொலி மூல மும் பாடம் நடத்தப்படும். இதற் காகத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒளி, ஒலி மய்யம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், துறை சார்ந்த வல்லுநர் கள் பாடம் நடத்துவர். பயிற்சி பெறுபவர்கள் தங்களுடைய இல்லத்தில் இருந்தே இணைய வழியாக நேரடியாகக் கற்கலாம் அல்லது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் மூலமும் தமிழைக் கற்றுக் கொள்ளலாம் என்றார் பாஸ்கரன்.

-  விடுதலை நாளேடு, 1.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக