பக்கங்கள்

செவ்வாய், 3 ஜூலை, 2018

பிழைஇன்றி எழுதுவீர்! தமிழைச் சரியாய் எழுத வல்லெழுத்து மிகாத இடங்கள் (2)

அகர ஈற்றுச் சொல்லின் முன்னும், ஆகார ஈற்றுச் சொல்லின் முன்னும் வல்லெழுத்து வந்தால் மிகாத இடங்கள் காட்டப்பட்டன.

இனி இகர ஈற்றுச் சொல்லின் முன் வல்லெழுத்து மிகாத இடங்கள் காட்டப்படும்.

புலி, எலி, சாணி, துணி, ஆணி, ஏரி ஆகிய இவைகள் இகர ஈற்றுச் சொற்கள் கடைசியில் இகரம் இருப்பதால்,

இந்த இகர ஈற்றுச் சொற்களின் முன் வல்லெ ழுத்து வந்தால் மிகுமா மிகாதா என்பது விளக்கப் படும். புலி போனது, எலி தின்றது, துணி கிழிந் தது. ஆணி பெரிது என்பன எழுவாய்த் தொடர் என்று சொல்லப்படும். புலி போனது என்றால் புலியானது போனது என்று தானே பொருள். எலி தின்றது என்றால் எலியானது தின்றது என்றுதானே பொருள். ஆணி பெரிது என்றால் ஆணியானது பெரிது என்று பொருள்படவில்லையா? இப்படிப் பொருள்பட வருவதுதான் எழுவாய்த் தொடர் என்பது. எழுவாய்த் தொடராயிருந்தால் இகர ஈற்றின்முன் வல்லெழுத்து மிகாது.

எலி + தின்றது = எலி தின்றது

சாணி + குறைந்தது = சாணி குறைந்தது

புலி + பாய்ந்தது = புலி பாய்ந்தது.

உம்மைத் தொகைநிலைத் தொடர் என ஒன்று இருக்கிறது.

புலி, கரடி என்பது உம்மைத் தொகை நிலைத் தொடர். புலியும் கரடியும் என்று பொருள்படும்போது நடுவில் உம் என்பது குறைந்து வந்தது அல்லவா?

புலி + கரடி = புலி கரடி

புலி இகர வீற்றுச் சொல். அதன்முன் க என்ற வல்லெழுத்து வந்தது. மிகவில்லை.

இதை எப்படிச் சொல்ல வேண்டுமென்றால் இகரத்தின் முன் உம்மைத் தொகையில் வல்லெழுத்து வந்தால் இயல்பாகும். அதுபோலவே,

ஏரிகுளம், இதற்கு ஏரியும் குளமும் என்பது பொருள். ஆதலால், இது உம்மைத் தொகையில் இகரத்தின்முன் வல்லெழுத்து வந்து இயல்பாயிற்று.

ஏரி + குளம் = ஏரிகுளம் இயல்பாயிற்று. ஏரிக்குளம் என்பது பிழை.

மந்தி + கடுவன் = மந்தி கடுவன். மந்தியும் கடுவனும் என்று பொருள்.

இனி, இகர ஈற்றுச் சொல் உயர்திணையாய் இருந் தால், வரும் வல்லெழுத்து மிகாது. கூனி உயர்தி ணைச் சொல். இதன் முன் வல்லெழுத்து வந்தால்,

கூனி + பேசினாள் = கூனி பேசினாள் என்று இயல்பாகும். கூனிப் பேசினாள் என்பது பிழை.

அண்ணி + சென்றாள் = அண்ணி சென்றாள்.

குழலி + கண்டாள் = குழலி கண்டாள்.

இனி எறிபந்து என்பதன் இடையில் ஒற்று மிகாது.

எறி + பந்து = எறிபந்து.

அதுபோலவே,

விரி + பசும்பொன் = விரிபசும்பொன் என இயல்பே ஆகும். மிகாது. ஏன்?

எறி என்பதும், விரி என்பதும் வினைத் தொகைகள். எப்படி?

எறி என்பது எறிந்த என்று இறந்த காலத்தையும் காட்டவில்லை. எறிகின்ற என்று நிகழ்காலத்தையும் காட்டவில்லை. எறியும் என்று எதிர்காலத்தையும் காட்டவில்லை. இப்படி வரு கின்றவைகள் வினைத் தொகைகள் என்பார்கள்.

எறி, விரி, பிரி, திரி இவைகள் வினைத் தொகைகளே. பிரி + பொருள் = பிரிகின்ற, பிரிந்த, பிரியும் என மூன்று காலத்துக்கும் பொது வாய் நிற்பதால், திரி + புலி = திரிபுலி = திரிந்த புலி, திரிகின்ற புலி, திரியும் புலி என்று பொருள்படுதல் காண்க. இனி,

வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான். மிகவில்லை . இயல்பாயிற்று.

வரும்படி என்ற தொடரை நோக்குக. இதை வினையை அடுத்தபடி என்பார்கள். ஏன்? வரும் என்பது வினைச்சொல். அதை அடுத்து வந்ததால் வினையை அடுத்தபடி என்பதாயிற்று. இது போலவே,

போகும்படி + சொன்னான் = போகும்படி சொன்னான். இயல்பாயிற்று. போகும்படிச் சொன்னான் என்பது பிழை. மறுபடி + சொன்னான் = மறுபடி சொன்னான். மறு என்பதை அடுத்து வந்தபடி முன்னும் வல்லெழுத்து இயல்பாயிற்று. இனி,

வா ஏடி, போ ஏடி என்பன வாடி போடி என வழங்கும். இந்த வாடி போடி என்பவற்றின் முன் வரும் வல்லெழுத்து மிகாது இயல்பேயாகும்.

வாடி + பொண்ணே = வாடி பொண்ணே

போடி + கண்ணே = போடி கண்ணே

இனி,

வாழி + பொன்னா = வாழி பொன்னா

வாழி + தோழி = வாழி தோழி

என இயல்பாகும். ஏன்?

வாழி என்பது வியங்கோள் வினைமுற்று. அதற்கு முன் வரும் வல்லெழுத்து மிகாது. இயல்பாகும்.

இனி, படிப்பாய், நடிப்பாய், அடிப்பாய், ஒடிப்பாய் என்பன படி, நடி, அடி, ஒடி என்று நிற்கும். இவற்றின் முன் வல்லெழுத்து மிகாது.

படி + கண்ணா = படி கண்ணா

நடி + பாப்பா = நடி பாப்பா

அடி + பார்ப்போம் - அடி பார்ப்போம்

ஒடி + சுள்ளியை = ஒடி சுள்ளியை

இந்தப் படி, நடி, அடி, ஒடி அனைத்தும் ஆய் குறைந்து வந்த ஏவல் ஒருமை வினைமுற்றுக்கள் என்று சொல்லப்படும்.

பயிற்சிக் கேள்வி:

குன்றி சிதைந்தது எப்படி ஆகும்?

குன்றி + சிதைந்தது = குன்றி சிதைந்தது என இயல்பாகும். ஏன்?

குன்றி என்பது குண்டுமணிக்குப் பெயர். எனவே குன்றியானது சிதைந்தது என்று பொருள்படுகின்ற எழுவாய்த் தொடரால் இயல்பாயிற்று.

- குயில்: சென்னை 15-5-62

-  விடுதலை ஞாயிறு மலர், 2.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக