பக்கங்கள்

புதன், 18 ஜூலை, 2018

தமிழ் நாடு’ என்று பெயர் சூட்டியது


சென்னை மாகாணம் (Madras State) எனும் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறிவந்தார், 11.9.38 கடற்கரை கூட்டத்தில் "தமிழ்நாடு தமிழருக்கே!"  என முழங்கினார். "தமிழ் நாடு" என அழைக்கவேண்டும் என மா.பொ.சிக்கு கடிதம் எழுதினார். இதேபோல் கோரிக்கை வைத்து சங்கரலிங்கனார் விருதுநகர் தேசபந்து திடலில் ஜூலைஎ 27, 1956இல் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார்.

அண்ணா, ம.பொ.சி.,  ஜீவா, கக்கன் போன்றவர்கள் தியாகி சங்கரலிங்கனார்  சந்தித்து, உண்ணா நோன்பைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் தம் உண்ணாவிரத்தில் உறுதியாக இருந்தார். 76 நாட்கள் கடந்த நிலையில், அக்டோபர் 13, 1956 ல் உயிர் துறந்தார். தன்னுடைய உடலை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மாயாண்டி பாரதியிடம் இறுதி அடக்கத்திற்கு ஒப்படைக்க கூறினார்.

இதையொட்டி தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டுமென்று சட்டமன்றத்தில் நுழைந்த திமுக மே 7, 1957இல் தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகள் கிடைத்தன. இதை எதிர்த்து 127 வாக்குகள் பதிவானது. எனவே திமுகவின் முதல் தீர்மானம் தோல்வியடைந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ்நாடு கோரிக்கையை திமுக முன்னெடுத்துச் சென்றது.

சோசலிஷ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சின்னதுரை ஜனவரி 30, 1961இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு சிலம்புச் செல்வர் மா.பொ.சி., தலைமையில் தமிழரசுக் கட்சியினர் ஆதரித்து பல்வேறு அடையாளப் போராட்டங்களை நடத்தினார்கள். அதன் விளைவாக அன்றைய முதல்வர் காமராஜர், சின்னதுரையின் தீர்மானத்தின் மீதான விவாதத்தை சட்டமன்றத்தில் ஒரு மாதம் தள்ளி வைக்க கேட்டுக் கொண்டார். ஆனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அரசுக் கடிதப் போக்குவரத்தில் மட்டும் தமிழ்நாடு என்று குறிப்பிடலாம் என்பதற்கு மட்டும் காமராஜர் சம்மதித்தார். இந்த முடிவை யாரும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் புபேஷ் குப்தா, தமிழ்நாடு என பெயர் மாற்றம் வேண்டி தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். புபேஷ் குப்தா, மாநில அரசு இதற்கான சட்டத்தினை நிறைவேற்றாவிட்டாலும் மத்திய அரசு இதற்கான ஒப்புதலைத் தரலாம் என்று வாதாடினார். புபேஷ் குப்தாவோடு அந்த அவையில் உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டு வரலாற்றுத் தரவுகளிலிருந்தும் பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் என்று எடுத்துச் சொல்லி தமிழ்நாடு என்று பெயரிட வேண்டுமென்று புபேஷ் குப்தாவின் மசோதாவை ஆதரித்து பேசினார்.

பார்லிமென்டை லோக்சபா என்றும் கவுன்சில் ஆப் ஸ்டேட்சை ராஜ்யசபா என்றும் மாற்றிக் கொண்டீர்களே, அதே போல மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்பதை மாற்ற உங்களுக்கு என்ன சிரமம் என்று காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்து நேரடியாக கேட்டார் அண்ணா. ஆனால் புபேஷ் குப்தாவின் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் திரும்பவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் இராம அரங்கண்ணல் ஜுலை 23, 1963இல் தமிழகப் பெயர் மாற்றத்திற்கு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது காமராஜர் பதவி விலகி பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தார். அரங்கண்ணலின் தீர்மானத்தின் மீது பதிலளித்த காங்கிரசின் மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் மெட்ராஸ் என்றால் தான் வெளியுலகத்திற்கு தெரியும் என்றும், மாகாண அரசு போட்ட ஒப்பந்தங்களை எல்லாம் மாற்ற வேண்டியது சிரமம் என்றார். அதற்கு திமுக கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று மாற்றப்பட்ட போது இந்த பிரச்சனை எல்லாம் எழவில்லை என்று கூறினர். திரும்பவும் அரங்கண்ணல் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலை 18, 1967 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் “‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானத்தை அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்தார். தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்திலும் சென்னை மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டுவதற்கான சட்ட முன்வடிவு நவம்பர் 23, 1968 அன்று நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பெயர் சூட்டு விழா டிசம்பர் 1, 1968 இல் பாலர் அரங்கத்தில் (இன்றைய கலைவாணர் அரங்கம் அமைந்த இடம் ) நடைபெற்றபோது, உடல் நலிவுற்ற நிலையிலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த வரலாற்று நிகழ்வில் உரை நிகழ்த்தினார்.

தமிழ்நாட்டில் குமரி, செங்கோட்டை, திருத்தணி இணைந்த இன்றைய எல்லைகள் வரையறுத்த போராட்டங்களையும், தமிழ்நாடு பெயர் சூட்டும் போராட்டத்தையும் குறிப்பிடுகின்றனர். அது வேறு காலக்கட்டம். இது வேறு காலக்கட்டம் என்று தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

சங்கரலிங்கனார் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் போராடினார். மா.பொ.சி., நேசமணி, என்.எஸ்.மணி, குஞ்சநாடார், மங்கலக்கிழார், விநாயகம், கரையாளர், ரசாக் போன்றோர்களெல்லாம் தமிழ்நாடு எல்லைப் போராட்டத்திற்காக போராடியவர்கள். எனவே அது வேறு. இது வேறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக