பக்கங்கள்

புதன், 11 ஜூலை, 2018

திருவள்ளுவரை ஜாதி சிமிழுக்குள் அடைக்காதீர்கள்- மூடநம்பிக்கைக்குள் புதைத்து விடாதீர்கள்! (3)

தஞ்சையில் தமிழர் தலைவர் ஆய்வுரை




தஞ்சை, ஜூலை 6  திருவள்ளுவரை ஜாதி சிமிழுக்குள் அடைக்காதீர்கள் - மூடநம்பிக்கைக்குள் புதைத்துவிடாதீர்கள் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார்.

திருக்குறள் பேரவை சார்பில்...


28.5.2018 அன்று தஞ்சையில் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

புரட்சிக்கவிஞருடன், நாங்கள் எல்லாம் ஒரு திருமணத்தை நடத்தி வைக்க சென்றிருந்தோம்.

புரட்சிக்கவிஞர் அவர்கள் கவிதை எழுதுவதைவிட, நிகழ்ச்சிகளில் பேசும்போது நகைச்சுவையாகப் பேசுவார்.

குறிப்பிட்ட ஜாதியினரை எடுத்துக்கொண்டால், ஜாதியால் பலரை தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பார்ப்பனர்கள் திருமணம் நடத்தி வைக்க செல்லமாட்டார்கள். வள்ளுவன் என்பவர்கள் மட்டும்தான் சோதிடம் பார்க்க வேண்டும், திருமணத்தை நடத்தி வைப்பார்கள்'' என்பார்கள்.

வள்ளுவன் என்பவர் எப்படி திருமணத்தை நடத்தி வைக்கிறார் என்பதைப் பார்க்கவேண்டும் என்று ஒரு திரு மணத்தை சென்று பார்த்தேன், பாரதிதாசன் கூறுகிறார்.

அதைப் பார்த்த எனக்கு வேடிக்கையாக இருந்தது. அந்த வள்ளுவன் என்பவன் வந்தான், அவன் எப்படி மந்திரம் சொன்னான் தெரியுமா?

வாக்குண்டாம் - நல்ல மனமுண்டாம்

அந்தக் குண்டானை எடுத்து இந்தப் பக்கம் வை!

இப்படி ஒரு நான்கு பாட்டை சொல்லி, அதைச் செய், இதை செய் என்று சொன்னதும், எனக்கு சிரிப்பு தாங்க முடிய வில்லை.

ஆனால், அவர் சொல்வதை ஒழுங்காகக் கேட்டு, அந்த சித்தாந்தப்படி நடந்தார்கள் அவர்கள்.

வாக்குண்டாம் - நல்ல மனமுண்டாம் என்ற சொல் பட்ட பாட்டை நான் அங்கேதான் தெரிந்துகொண்டேன்!''

அதுபோன்ற திரிபுகள் பல இடங்களில் வந்தது. அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை சொல்கின்ற நேரத்தில், இரண்டு கருத்துகள் மூலமாக சொல்லியிருக்கிறார்கள் நம்முடைய புரட்சிக்கவிஞர் அவர்கள்.

திருக்குறளுக்குப் பதவுரையையும், பொழிப்புரையையும் எழுதியவர் பரிமேலழகர்.

பரிமேலழகருடைய அறிவை நாம் ஒன்றும் குறை சொல்ல முடியாது. ஆனால், யாருக்குப் பயன்பட்டது? எதற்குப் பயன் பட்டது? எப்படிப் பயன்படுத்தப்பட்டது? என்பதுதான் மிக முக்கியமானது.

திருவள்ளுவர்தாம் இரண்டாயிரம் என்னும் ஆண்டின் முன் குறளை அளித்தார் என்பர். ஆயிரத்து 500 ஆண்டுகள் கழிந்த பின், பரிமேலழகர் உரை செய்துள்ளார் என்பதும் நினைவில் இருத்தல் வேண்டும்.

திருக்குறளுக்கு உரை - கல்வித் திட்டத்தில் பாடத்தில் எழுதினால், பரிமேலழகர் உரையைத் தவிர, மீதி உரையை எழுதினால், நன்றாக எழுதியிருக்கிறார் என்று ஆசிரியர் மனதில் பாராட்டுவார்; ஆனால், மதிப்பெண் போடும்பொழுது பூஜ்ஜியம்தான் போடுவார்.

என்னுடைய ஆசிரியரே சொல்லுவார், ஏம்பா, நீ பொதுக் கூட்டத்தில் கேட்டுவிட்டு, பெரியார், புரட்சிக்கவிஞர் சொல் வதையெல்லாம் எழுதக்கூடாது. பரிமேலழகர் உரையை மட்டும் எழுதினால்தான் நீ மதிப்பெண் வாங்க முடியும் என்பார்.

பரிமேலழகர் வள்ளுவரின் காலத்தைக் கணக்கிடாமல் நூலுக்கு உரை எழுதியது பொருந்தாது!


எனவே, பரிமேலழகர் பாடத் திட்டக் குழுவில் இருக்கிறார். புரட்சிக்கவிஞரோ, பெரியாரோ, புலவர் குழந்தையோ, மற்றவர்களோ உள்ளே போக முடியவில்லை.

திருக்குறளுக்கு உரை வகுத்த பதின்மரில் பரிமேலழகர் சமயச் சார்புடையவர். எனவே. மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின் பொருந்தாது என்று பாரதிதாசன் வாதிடுகிறார். மேலும் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர். அவருக்குப்பின் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள் கழித்துத் தோன்றிய பரிமேலழகர் வள்ளுவரின் காலத்தைக் கணக்கிடாமல் நூலுக்கு உரை எழுதியது பொருந்தாது என்று சுட்டுகிறார்.

பரிமேலழகர் உரையோ வள்ளுவர்

திருவுள்ளத்தின் திரையே ஆனது!

நிறவேறு பாட்டை அறவே ஒதுக்கிய

தமிழ்த்திரு வள்ளுவர் அமிழ்தக் கொள்கையை

நஞ்சென்று நாட்டினர் பரிமேலழகர்

என்று குற்றம் சாட்டுகிறார், மேலும் பாரதிதாசன்,

பழந்தமிழ் நாட்டின் பண்பே பண்பென அன்னார் ஆய்ந்த அறமே அறமென ஒழுக்கமே ஒழுக்க விலக்கணம் ஆமென வள்ளுவர் நாட்டினர், தெள்ளுதமிழர்

கீர்த்தியைத் திறம்பட உரைத்துக்காட்டினார்

பரிமேலழகர் செய்த உரையில்

தமிழரைக் காணுமா றில்லை -தமிழரின்

எதிர்ப்புறத்துள்ள இனத்தார் மேன்மையின்

செருகலே கண்டோம்! செருகலே கண்டோம்!

என்று திண்மையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் பரிமேலழகர் தம்முடைய திருக்குறள் உரையில் வடநூல் கருத்துக்களை வலிந்து புகுத்தி இருப்பதால் திருக்குறள் வடநூலின் தழுவலோ என்ற எண்ணம் ஏற்படும்படி பிழை செய்துவிட்டார் என்றும் சுட்டியுள்ளார் ஒழுக்கமுடைமை குடிமை என்னும். அதிகாரங்களுக்குப் பரிமேலழகர் எழுதிய விளக்கங்களை அதற்குச் சான்றாகக் காட்டுகிறார்.

'ஒழுக்கமுடைமை' அதிகாரம் குறித்துத் தத்தம் வருணத்திற்கும், நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையாராதல் என்னும் பரிமேலழகர் உரையைப் பாரதிதாசன் மறுக்கிறார் உரையா இது? என்று அதைப் பழிக்கிறார் அதற்கு மாறாக ஒழுக்கமுடைமை உயர் தமிழ் குடிகளில் தன்மையுடையராதல் என்று உரை வகுப்பது பொருந்தும் என்கிறார்.

'குடிமை' என்னும் அதிகாரம் பற்றிப் பரிமேலழகர் அஃதாவது உயர்ந்த குடியின் கண் பிறந்தாரது தன்மை . உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதலின், அச் சிறப்புப் பற்றி இது, முன் வைக்கப்பட்டது என்று விளக்குகிறார்.

பாரதிதாசன், பரிமேலழகர் கருத்தை மறுத்து, குடிமை என்பது குடிகளின் தன்மையே என்று குறிப்பிடுகிறார். அதற்கு,

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பின் தலைப்பிரிதல் இல்.

எனப் பகர்ந்ததில், பழங்குடி குறித்த பாங்கும் அறிக! நன்று, நாம் நவில வந்தது என்னெனில், திருவள்ளுவரின் திருக்குறள் தன்னை கசடறக் கற்க.

எப்படிப்பட்ட ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு பரிமேலழகர் உரையிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. நாகசாமியெல்லாம் பின்னாளில் வந்த இந்தக் காலத்து பரிமேலழகரின் ஒரு பகுதி.

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இது வந்தது. ஆனால், அதையேகூட ஒரு தத்துவ ரீதியாக வரும்பொழுது, திருக்குறள் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்த நூல் என்பதற்கு, தெளிவாக ஆதாரங்களை எடுத்துச் சொல் லும்பொழுது, சில செய்திகளைத் தொடர்கிறேன்.

அதற்கும் புரட்சிக்கவிஞர் அவர்கள் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

திருக்குறள் கீதையைவிட பெரிதா? என்று சொல்லுகிறார்கள்.


திருக்குறள் 1330 குறள் அதிகாரங்களைப்பற்றி அய்யா பேசினார் என்று சொன்னார்கள். மிகவும் பாராட்டத்தகுந்த சாதனை அது.

யாராவது கீதையில் உள்ள 700 சுலோகங்கள் அத்த னையையும் பொறுமையாகப் படித்து, புரிந்துகொண்டேன் என்று சொல்லும் அறிஞர்களை அழைத்துப் பாருங்களேன். கிடையவே கிடையாது.

கீதையில் இல்லாததையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

அதில் இல்லாததையே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை சொல்லிவிட்டால், அதை மறுபடியும் சொல்லி விட்டால், அது உறுதியாகி விடுகிறது.

பொய்யுடை ஒருவர் சொல் மெய் போலுமே, மெய் போலுமே! என்பதுபோல்.

எது நன்றாக நடந்ததோ

அது நன்றாகவே நடந்தது

எது சரியாக நடக்கவேண்டுமோ

அது சரியாகவே நடந்தது

என்று போட்டு, கீதையில் சொன்னது என்று அச்சடித்து வீடுகளில் மாட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை சொல்பவர்கள் யாராவது ஒருவரை அழைத்து, இந்த வரிகள் கீதையில் எங்கே இருக்கிறது என்று காட்டுங்கள் என்றால், ஓடிவிடுவர். இதுபோன்று கிடையவே கிடையாது.

சங்கராச்சாரியாரை கைது செய்யும்பொழுது, நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க.வின் தலைவராக இருந் தார். சென்னை லயோலா கல்லூரியில் மனம் என்கிற அடிப்படையில் ஒரே மேடையில் உரையாற்றச் சொன்னார்கள்.

கீதையின் மறுபக்கம்


அவர் சொன்னார், அண்ணன் அவர்கள் நான் சொல்வதை எதிர்த்து சொல்வார். அவர் திராவிடர் கழகம் - பெரியாருடைய ஆட்கள் அவர்கள். அதனால் எதிர்ப்பார். கீதையில் எல்லாமே சரியாக சொல்லியிருக்கிறது அதை எதிர்த்துகூட அவர் கீதையின் மறுபக்கம் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

எது நன்றாக நடந்ததோ

அது நன்றாகவே நடந்தது

எது சரியாக நடக்கவேண்டுமோ

அது சரியாகவே நடந்தது

என்று சொன்னார்.

உடனே நான் சொன்னேன்,

அவர் சொன்ன வரிகள் கீதையில் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால், கீதையை முழுமை யாக ஆய்வு செய்து நான் கீதையின் மறுபக்கம் நூலை எழுதியிருக்கிறேன். நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கீதையை முழுமையாகப் படித்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று, இப்பொழுது நடந்திருக்கிறதே, சங்கராச்சாரியாரை கைது செய்திருப்பது - எது நன்றாக நடந்ததோ - அது நன்றாகவே நடந்தது என்று சொன்னதும், ஆசிரியர்கள் உள்பட மாணவர்கள் அனைவரும் சிரித்துக் கரவொலி எழுப்பினர்.

உடனே சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள், என்னங்க திசை திருப்பி விட்டீர்களே! என்றார்.

திசை திருப்பவில்லை, உண்மையைச் சொன்னேன். நீங்கள் இல்லாத ஒன்றை சொல்லும்பொழுது, இருப்பதை உதாரணமாக சொன்னேன், அவ்வளவுதான்.

பகவற் கீதை பகர்ந்த கண்ணனை  நல்வட மதுரைக் கச்சென நவில்வர்: திருக்குறள் அருளிய திருவள்ளுவரோ  தென் மதுரைக்கோர் அச்செனச் செப்புவர்  இன்னணம் நல்கூர் வேள்வியர் இயம்பினார்

வடக்கே ஒரு நாகரிகம்; தெற்கே மற்றொரு நாகரிகம்; வடக்கே ஒரு பண்பாடு, தெற்கே மற்றொரு பண்பாடு - இவை ஒன்றுக்கு மற்றொன்று முற்றிலும் மாறானது. எதிரானதும்கூட.

இதனால் அறிவதென்னவென்றால் இருவேறு நூல்கள், இருவேறு கொள்கைகள், இருவேறு மொழிகள், இருவேறு பண்பாடு உள என உணர்தல் வேண்டுமன்றோ?

கீதையைக் கண்ணன் தோதுள நான்மறை  அடிப்படை தன்னில் அருளினான் என்க!  அதுபோல் வள்ளுவர் அருமைக் குறளை  எதனடிப் படையில் இயற்றினார் என்றால்,  ஆருயிர்க் கபிலர் அருளிய எண்ணூல்  அடிப்படை தன்னில் அருளினார் என்க!  எண்ணூல் தன்னைச் சாங்கியம் என்று  வடமொழி யாளர் வழங்குகி ன்றார்  பரிமே லழகர் திருக்குற ளுக்குச்   சாங்கியக் கருத்தைத் தாம்மேற் கொண்டே  உரைசெய் தாரா? இல்லை என்றுணர்க!  ஆதலின் அவ்வுரை அமைவில தாகும்!  சமயக் கணக்கர் மதிவழி கூறாது  உலகியல் கூறிப் பொருளிது வென்ற  வள்ளுவன் என்றார் மன்னுகல் லாடனார்!  வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார்!  சாங்கியம் மதமன்று; தத்துவ நூலே!  பரிமே லழகர் பெருவை ணவரே  மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின்  அமைவ தாகுமோ? ஆய்தல் வேண்டும்......

புரட்சிக்கவிஞரின் கருத்துப்படி திருவள்ளுவர் தம் திருக்குறளை கபிலரின்  எண்ணூல் என்ற தத்துவ நூலின் அடிப்படையிலே இயற்றியுள்ளார். எண்ணூல்தான் சாங்கியம் என்ற நூல். கபிலர், ஒரு மிகப்பெரிய ஜாதி எதிர்ப்பாளர்; பார்ப்பன எதிர்ப்பாளர் என்பது கபிலரகவல் பாட்டினைப் படிக்கும் எவருக்கும் புரியும்.

தத்துவம் என்பதை நம் நாட்டில், முழுமையாக அதைக் கொண்டு மதத்தோடு இணைத்துவிட்டார்கள். தத்துவம் என்பது அறிவு. அதனால்தான் பிஎச்.டி. பட்டம் கொடுக்கிறார்கள். ஆனால், அதை மதத்தோடு சேர்த்துவிட்டார்கள்.

இன்றைக்கு ஆன்மிக அரசியல் என்று உள்ளே நுழைகிறது


இன்றைக்கு ஒரு சொல் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது பாருங்கள். ஆன்மிகம் என்ற சொல். அதோடு அரசியலும் சேர்ந்து ஆன்மிக அரசியல் என்று உள்ளே நுழைகிறது.

1330 திருக்குறளில் ஆத்மா என்ற வார்த்தை இருக்கிறதா? இங்கே நிறைய அறிஞர்கள்  இருக்கிறீர்கள், புலவர்கள் இருக்கிறீர்கள். நாங்கள் எல்லாம் அவ்வளவாகப் படித்தவர்கள் இல்லை. சாதாரண பெரியார் தொண்டர்கள்.

ஆத்மா என்ற வார்த்தை திருக்குறளில் இருக்கிறதா? ஆத்மா என்ற சொல்லை தமிழ்ப் படுத்தவேண்டும் என்று நம் புலவர்கள் செய்த வேலை என்னவென்றால், ஆத்மாவை - ஆன்மா என்றாக்கினார்கள். பழசு பழசாகவே இருக்கவேண்டும் என்பதுதான் பெரியாருடைய கருத்தாகும். காபி, காபியாக இருந்தால்தான், அது நம்முடைய சரக்கல்ல, வெளியில் இருந்து வந்தது என்று தெரியும். ஜாதி, ஜாதியாகத்தான் இருக்கவேண்டும். ஜா போட்டால்தான் அது நம்முடைய சரக்கல்ல - வெளியில் இருந்து வந்தது என்று தெரியும். ஜாதியை தமிழ்ப்படுத்தவேண்டும் என்பதற்காக சாதி என்று போட்டால், இது நம்முடைய சரக்கு என்று நிறைய பேர் ஏமாந்து போயிருக்கிறார்கள்.

அதுபோன்று, நம்முடைய புலவர்கள் ஆத்மா - ஆன்மா என்றார்கள். ஆன்மா - ஆன்மிகமாகி - ஆன்மிகம் அரசியல் வரை எட்டிப் பார்க்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

புத்தர் கடவுள் மறுப்பாளர்; ஆத்மா மறுப்பாளர்; பகுத்தறிவாளர். அதற்கு முன்பே, கபிலருடைய தத்துவம் பரவியிருக்கிறது. அதற்கு ஒரு அடையாளம் சொல்லவேண்டுமானால், புத்தர் எங்கே பிறந்தார் என்று நாம் படிக்கின்றோம். கபிலவாஸ்து என்ற ஊரில். கபிலவாஸ்து என்று ஒரு நகரத்திற்குப் பெயர் வைத்திருந்தார்கள் என்றால், வாஸ்து என்றால், இருப்பிடம். கபிலவாஸ்து என்றால், கபிலர் பெயர் அவ்வளவு சிறப்பாக இருந்ததினால்தான், கபிலவாஸ்து என்று வந்திருக்கின்ற வாய்ப்பு இருந்திருக்கலாம்.

ஆகவே, அந்தக் கபிலருடைய கருத்துகள் வந்தவுடன், எண்ணூல் என்று தமிழில் சொன்னார்கள்.

வள்ளுவருக்கு ஒருபோதும் மதம் பிடிக்காது

பெரியாருக்கு மதம் பிடிக்காது

பெரியார் தொண்டர்களுக்கு மதம் பிடிக்காது.

இருபொருளிலும் மதம் பிடிக்காது. ஒரு பொருள் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

பெரியாருடைய உரைக்கு இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் விளக்கம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அம்பேத்கருடைய கருத்துக்கு, அவர்கள் விளக்கம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆகவேதான், இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு எப்படி வந்தது என்பதற்கு அய்யா அவர்கள் தலைமையுரையில் நிறைய சொன்னார்கள்.

அதிலிருந்து ஒன்றை சொல்கிறேன். பிராயசித்தம் - தமிழில் கழுவாய் என்று சொல்வார்கள். இந்தக் கழுவாயை தமிழன் ஏற்றுக்கொண்டதே கிடையாது.

எற்றென்று இரங்குவது செய்யற்க செய்வானேன்

மற்று அன்ன செய்யாமை நன்று (குறள்)

இதுதான் நம் பண்பாடு. தவறு செய்யாதே! அப்படி தவறு செய்தால், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே!

நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், பாவம் செய்யலாம் என்று சொன்னால்,

பெரியார் அதைத்தான் கேட்டார், ஒழுக்கத்தை மதம் சொல்லிக் கொடுக்கவில்லை என்று வரும்பொழுது,

ஒவ்வொரு மதத்திலும் பாவ மன்னிப்பு, பிராயசித்தத்திற்கு இடமிருக்கிறது. பெரியாருடைய பகுத்தறிவு சிந்தனைப்படி ஒரு கேள்வி கேட்டார்.

ஒரு மதக்காரர் வெள்ளிக்கிழமை போங்கள், இந்த வாரம் செய்த பாவம் எல்லாம் போகும்.''

இன்னொரு மதக்காரர் வியாழக்கிழமை போங்கள், அங்கே பாத்தியா ஓதினால், பாவம் போகும்.''

இன்னொருவர் சொல்கிறார், ஞாயிற்றுக்கிழமை காலை யில் சர்ச்சுக்குப் போங்கள்; அங்கே போய் பாவ மன்னிப்பு வாங்கிக் கொள்ளுங்கள்'' என்கிறார்.

பெரியார்தான் கேட்டார்,

பிறகு பாவம் செய்ய ஏன் பயப்படவேண்டும்; இவ்வளவு சுலபமான வழி இருக்கிறதே என்று.

ஞாயிற்றுக்கிழமை பாவ மன்னிப்பு வாங்கும்பொழுது, தைரியமாக இருப்பார்கள்; திங்கள்கிழமை செய்கின்ற பாவம், அடுத்த வாரக் கணக்கில்தான் வரும் என்று!

12 ஆண்டுகள் செய்த பாவம் மகாமகக் குளத்தில்ஒருமுறை குளித்தால் போகுமாம்!


மேலே சொன்னதெல்லாம் ரீடெயில். நம்மாள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? 12 ஆண்டுகாலம் பாவம் செய் தாலும், மகாமகக் குளத்தில் ஒருமுறை குளித்தெழுந்தால், போய்விடும் என்றால்,

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

உயிரைவிட மிக முக்கியமானது ஒழுக்கம்.

ஆனால், மனுதர்ம நூல் இருக்கிறதே, தாய்மார்களை வைத்துக்கொண்டு சொல்லவே முடியாது.

நீ தவறாக நடந்துகொள்ளலாம், யாரிடம் வேண்டுமானாலும், கொஞ்சம் நெய் மட்டும் கைகளில் வைத்துக்கொண்டால் போதுமாம். மிகவும் அசிங்கமான ஒரு பகுதி அது.

அதுமட்டுமல்ல, உறவு முறைகளைப்பற்றி அவன் கவலைப்படவே இல்லை.

வள்ளுவர்செய்  திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி

என்று தெளிவாக எழுதியிருக்கிறார்கள்.

என்ன குற்றம் செய்தாலும், பிராமணர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கக்கூடாது. இது அரசர்கள் காலத்தில் நடைமுறையில் மனுநீதிதான் இருந்தது.

அரசர்கள் காலத்தில், தெருக்கூத்தில் முதல் வசனம் என்ன? மந்திரி வந்து உட்காருவர்; அரசர் வந்து உட்காருவர். மந்திரி வேடம் போட்டவரிடம், அரசர், மந்திரி மாதம் மும்மாரி பொழிகிறதா? என்று கேட்பார்.

தந்தை பெரியார் வேடிக்கையாக சொல்வார்!


தந்தை பெரியார் அவர்கள் கூட்டங்களில் பேசும்போது வேடிக்கையாக சொல்வார், அரசன் எப்படி இருந்திருக்கிறான் பாருங்கள், ஒருமுறை மழை பெய்தபோது தூங்கியிருந்தால் பரவாயில்லை; மூன்று முறை மழை பெய்ததா? என்பதை மந்திரியைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்கிறான் என்றால், அவன் எப்படி ஆண்டிருப்பான்? என்று கேட்பார்.

அடுத்ததாக அரசன் கேட்பது என்னவென்றால், மனுமுறை தவறாமல் ஆட்சி நடக்கிறதா? என்று.

பண்பாட்டுப் படையெடுப்பு எதுவரையில் வந்துவிட்டது என்றால், சாதாரண தெருக்கூத்தை பாமர மக்கள் கேட்டு, சிந்திக்கக்கூடிய ஆபத்து உள்ளே நுழைந்தது என்று சொன்னால், அதுதான். நம்முடைய அடிப்படைத் தன்மையில்.

பிரார்த்தனை என்பது என்ன? கையூட்டுதானே! ஏன் லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை. பூஜை அறையிலிருந்து ஆரம்பிக்கிறது. கடவுளிடம் கேட்கிறான்,  நான் மொட்டை போட்டு விடுகிறேன் என்று, நான் காணிக்கை கொடுக்கிறேன் என்று.

எற்றென்று இரங்குவது செய்யற்க செய்வானேன்

மற்று அன்ன செய்யாமை நன்று

அடுத்த தடவை நீ தவறு செய்யாதே - இந்த தடவை தவறு செய்ததற்கு தண்டனையிலிருந்து தப்புவதற்கு நினைக்காதே!

இதுதான் பண்பாடு - இதுதான் குறள் பண்பாடு!

ஆனால், மனுதர்மம் இருக்கிறதே - இன்னின்னாரை தண்டிக்கவேண்டும்; இன்னின்னாரை மன்னித்துவிடலாம். இதில் கூட ஒரு பிரிவினருக்கே தண்டனை.

இது எல்லாவற்றையும்விட, மிகவும் அடிப்படையானது என்னவென்றால், இந்த பண்பாட்டுப் படையெடுப்பு இருக்கிறதே,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

நானே நான்கு ஜாதியை உண்டாக்கினேன் என்று சொல்வதை, பெரியார் அய்யா அவர்கள் திருக்குறள் மாநாட்டில் தலைமை தாங்கும்பொழுது சொன்னார்.

திருக்குறள், ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச்செய்ய, அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்று தான் நான் கருதுகிறேன்.

உதாரணமாக மனுதர்மம்-வருணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள்- பிராமணன், க்ஷத்திரியன் வைசியன், சூத்திரன்-உண்டு என்று உபதேசிக்கிறது.

பிராஹ்மண க்ஷத்திரியே வைஸ்த: த்ரயோவர்ணாத் விஜரதய; சதுர்த்த ஏகஜ திஸ்து சூத்ரோ நாஸ்திது பஞ்சம்: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என்ற இம்மூவரும் துவிஜர்கள். நான்காவது ஜாதியான சூத்திரன் ஒரே ஜாதி இவனுக்கு உபநயனமில்லாததால் த்விஜாதியாக மாட்டான் என்கிறது மனுதர்மம்.

பிராமணனுக்கு பஞ்சு நூலாலும்,

சத்திரியனுக்கு சணப்ப நூலாலும்,

வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடம் தரிக்க வேண்டியது.

திருக்குறள்-மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (குறள் - 972)

மனுதர்மம் - மாம்சம், மச்சம் சாப்பிட வேண்டும். யாகம் செய்யவேண்டும். அதில் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைப் பலி தரவேண்டும் என்கிறது.

மத்யம் மாம்ஸம் சமீனம் சமுத்ரா, மைதுனமேவச : ஏதே பஞ்சமகாரா: ஸ்யுர் மோக்ஷதா ஹியுகே யுகே.

கள், இறைச்சி, மீன், சமுத்ரா, மைதுனம் இவ்வைந்தும் மோட்சத்திற்குச் சாதனங்கள்.

திருக்குறள்-ஜீவ இம்சையே கூடாது, மாம்சம் சாப்பிடக் கூடாது, யாகம் கூடாது என்கிறது.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (குறள் -260)

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள் - 259)

மனுதர்மம் - பிறவியினாலேயே பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்கிறது.

அனார்யமார்ய கர்மாணம் ஆர்யம் சானார்ய கர்மிணம்; ஸம்ப்ர தார்யா ரவீத் தாதா, நஸமென நாஸமாவிதி

ஆரியன் (பார்ப்பான்) தொழிலைச் செய்கிற அனாரியன் (தமிழன்) ஆரியனும் ஆகப்போவதில்லை. அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனுமாகமாட்டான்.

ஏகமேவது சூத்ரஸ்ய ப்ரபு: கர்மஸமாதிசத்?

எதேஷமேவ வர்ணானாம் சுஸ்ரூஷா மனஸயய

பொறாமையன்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளை இட்டிருக்கிறார்.

திருக்குறள் - ஒழுக்கம் உண்டானால்தான் பார்ப்பான் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளலாம்; ஒழுக்கமற்றவன் பார்ப்பானாயினும் கெட்டவன் என்கிறது.

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (குறள் - 134)

மனுதர்மம் - ஒரு மனிதன் செல்வனாகப் பிறந்து சுக போகத்துடன் வாழ்வதற்குக் கடவுள்தான் காரணம் என்கிறது.

விஸ்ரப்தம் ப்ராஹ்மண சூத்ராத் த்ரவ்யோ பாதான மாசரேத்: நஹிதஸ்பாஸ்தி கிஞ்சித் ஸ்வம் பர்த்ளு ஹார்ய யனாஹிச

சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவன் அடிமையாகப் படைக்கப்பட்டிருத்தலால், அவனுக்கென்று பொருள் சிறிதேனுமில்லை.

படிப்பை பொதுமை ஆக்கியது திருவள்ளுவருடைய குறள். படி, படி என்று சொன்னது - அனைவரும் படிக்க வேண்டும் என்று சொன்னது - அனைவரும் கற்கவேண்டும் என்று சொன்னது திருக்குறள்.

அனைவரும் கற்க அனுமதிக்காதே ஒரு ஜாதி மட்டும்தான் படிக்கவேண்டும்.

இதற்காகத்தானே சமூகநீதி போராட்டம் - நூறாண்டு காலமாக நடக்கின்ற போராட்டம் பண்பாட்டுப் படையெடுப்புதானே! இதற்கு அஸ்திவாரம் எங்கே? இதற்கு அடித்தளம் எங்கே இடப்பட்டது என்று சொன்னால், இந்த இரு வேறு தத்துவங்கள்தானே மிக முக்கியமானது என்பதை அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள்.

இன்னாருக்கு இதுதான் என்று சொல்லி, தலையில் எழுதி வைத்துவிட்டான் என்றார்கள்.

ஆனால், வள்ளுவர் குறள் அப்படியல்ல,

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

என்பதுதான்.

வேதாந்தம் என்று இன்றைக்கு சொல்கிறார்களே - வேதம் என்ற சொல்லுக்குப் பொருள் அறிவு. அந்தம் என்றால், முடிந்து போய்விட்டது என்று அர்த்தம்.

அந்த நூல்கள் வந்துவிட்டாலே, அதற்கு மேலே போவதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னார்கள்.

ஆனால், வள்ளுவருடைய குறள் - தமிழனுடைய பண்பாடு என்னவென்றால், அறிவுக்கு எல்லை கட்டாதே என்பதுதான்!

பெரியார் சொன்னார், இன்றைக்கு என்னை பெரிய புரட்சியாளன்; நான் முற்போக்குக் கருத்துகளை சொல்லி விட்டேன் என்று சொல்கிறீர்கள்; 200 வருஷம் கழித்து ஒருவன் வருவான், இராமசாமி என்ற ஒரு பிற்போக்காளன் இருந்தான் என்பான். ஏனென்றால், அவனுடைய புரட்சிக் கருத்துக்கு முன் இன்றைய என்னுடைய புரட்சிக் கருத்து மிக சாதாரணமாகப் போய்விடும். அது பிற்போக்குக் கருத்தாக இருக்கும். ஒரு காலத்தில் முற்போக்காகக் கருதப்பட்ட கருத்து இருக்கிறதே, அது பிற்காலத்தில் பிற்போக்காக ஆக்கப்படும்.

அந்தக் காலத்தில் சக்கி முக்கி கல்லை உரசி தீயை உண்டாக்கினார்கள். சுடுகாடு நகரத்திற்கு கடைசியில் இருந்ததால், அங்கே சென்று நெருப்பை நாம் தேடிக் கொண்டிருக்க முடியாது. அதற்காக என்ன செய்தார்கள், ஒரு சட்டியில் தவுட்டை போட்டு, இங்கேயே நெருப்பை மூட்டினான். அதைத் தூக்கிக் கொண்டு போகவேண்டும் என்பதற்காக, வாழை மட்டையில் வைத்து கயிற்றைக் கட்டை தூக்கிக் கொண்டு போனான். அவன் அந்தக் காலத்து தாமஸ் ஆல்வா எடிசன், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. அவனுடைய அறிவை குறைத்து சொல்லவே முடியாது.

அன்றைக்கு அது சரி; இன்றைக்கு மின் மயானத்தில் உடலை எரிக்கப் போகிறார்கள். இன்றைக்கும் அந்த சட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறார்கள். ஏன் என்று கேட்டால், என்னுடைய தாத்தா தூக்கினார்; என்னுடைய அப்பா தூக்கினார்; நான் தூக்கினேன்; என்னுடைய பிள்ளையும் தூக்குவான் என்றால், இதுதான் மூடநம்பிக்கை.

அந்த சட்டி அன்றைக்குத் தேவைப்பட்டது; இன்றைக்கு அது தேவைப்படாது. மின்மயானத்தில் உடலை எரியூட்டி, அடுத்த அரை மணிநேரத்தில் சாம்பலைக் கையிலை கொடுத்துவிடுகிறார்கள்.

இவ்வளவு அறிவியல் வளர்ந்திருக்கின்ற காலம் இது.

எனவேதான்,

அறிவு அற்றங்காக்கும் கருவி.

சென்ற இடத்தால் செலவிடா  தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு

அறிவு எப்படி பயன்படவேண்டும் - அதைக்கூட வள்ளுவருடைய பண்பாட்டில் சொல்லியிருக்கிறார்.

அறிவை பொதுமையாக்கினார் திருவள்ளுவர்.

அந்த அறிவும் மனித குலத்தின் நன்மைக்குப் பயன்பட வேண்டும்.

அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்

தன்நோய்போல் போற்றாக் கடை

அதுமட்டுமல்ல, ஆங்கிலத்தில் நான் வியப்பாக அடிக்கடி ஒரு செய்தியை பேசிக்கொள்வது உண்டு.

நீங்கள் எல்லோரும் இந்த அறிவார்ந்த அவையில் அறிவீர்கள்.

ஆங்கிலத்தில், சிம்பதி'' (Sympathy) என்கிற சொல்லுக்கு இரக்கம் என்று பொருள்.

13 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள் என்பது இரக்கம்.

எம்பதி என்கிற சொல்லுக்கு


என்ன பொருள்?


ஆனால், அதைவிட ஒரு சொல்லை ஆங்கிலத்தில் வைத்திருக்கிறார்கள். அதுதான் எம்பதி என்ற சொல்.

எம்பதி''  (Empathy) என்கிற சொல்லுக்கு என்ன பொருள் என்பதை ஆங்கில அகராதியைப் பார்க்கும்பொழுது,

பாதிக்கப்பட்டவராக மாறிவிடுவது என்று அதற்குப் பொருள். பல மருத்துவர்களே அதுபோல் மாறியிருக்கிறார்கள். அதற்குப் பெயர்தான் எம்பதி என்பது.

சிம்பதிக்கு இரங்கல் என்று சொல்கிறோம் தமிழில். எம்பதிக்கு தமிழில் எப்படி சொல்லாம் என்று நண்பர்கள் எல்லாம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபொழுது நிறைய சொல்லை சொன்னார்கள்.

ஆனால், வள்ளுவருடைய குறள் அதற்குக் கைகொடுத்தது.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்

அடுத்தவனுடைய துன்பத்தை பார்க்கும்பொழுது - அவனாகவே மாறிவிடக்கூடியதுதான் ஒத்தது அறிவான் - அவன்தான் மனிதன். இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்.

இதுபோன்ற ஒரு கருத்தை மனுதர்மத்தில் காட்டுங்கள் பார்க்கலாம்; இதுபோன்ற ஒரு கருத்தை பகவத் கீதையில் காட்டுங்கள் பார்க்கலாம்.

உயிரோடு இருப்பவர்கள் எல்லாம் வள்ளுவர் கணக் கில் மனிதர்களே அல்ல. அவர்கள் எல்லாம் உயிரோடு நடமாடு கிறவர்கள், அவ்வளவுதான். அடுத்தவர்களுடைய துன்பத்தை உணராதவன் பிணத்திற்குச் சமம் என்று சொல்கிறார் வள்ளுவர்.

இவ்வளவு நனிநாகரிகம், இவ்வளவு பெரிய பண்பாட்டை நீங்கள் எங்கே தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. மனுதர்மத்தில் தேடி கண்டுபிடிக்க முடியாது.  கீதையில் நீ கொல்! தாராளமாகக் கொல்! நீ உடலைத்தான் கொல்கிறாய்; ஆத்மாவை கொல்லவில்லை. ஆத்மா ஒரு கூட்டை விட்டு அடுத்தக் கூட்டிற்குப் போய்விடுகிறது. ஆகையால், நீ கொலை செய்வதுபோல் இருக்குமே தவிர, அது உண்மையாகக் கொலையாக இருக்காது என்று வியாக்கியானம் சொல்வதுதான் பகவத் கீதை.

ஆனால், பாதிக்கப்பட்டவராகவே மாறிவிடு என்று சொல்வது இருக்கிறதே அந்த உணர்வுதான் ஒத்தது அறிவான். அதற்காக ஒரு சொல்லை நாங்கள் தயார் செய்தோம் - ஒத்தறிவு.

பட்டறிவு - பகுத்தறிவு அதுபோன்று ஒத்தறிவு.

எம்பதி என்பதற்கு தமிழில் சரியான பொருள் என்ன வென்றால், ஒத்தறிவு!

இறுதியாக ஒன்றைச் சொல்லி நான் என்னுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

தந்தை பெரியாருக்குப் பிடித்த திருக்குறள்!


1330 திருக்குறளில் மிகவும் பிடித்த குறள் என்று தந்தை பெரியார் அவர்களைக் கேட்டால்,

குடிசெய்வார்க்கில்லை பருவம் மடி செய்து மானம் கருதக் கெடும்

காலம் அறிதல், இடம் அறிதல் எல்லாவற்றையும்பற்றி சொன்னார்கள். தன்மானத்தை சொல்லிக் கொடுத்த பெரியார், இனமானம் என்று வருகின்றபொழுது உன்னுடைய தன்மானத்தை பின்னால் தள்ளு என்று சொன்னார்.

ஆனால், பொதுத் தொண்டு செய்பவர்கள் காலம், நேரம் பார்க்கக்கூடாது. தொண்டறத்திற்கு காலம், நேரம் பார்க்கக் கூடாது.

நீ மானத்தைப் பார்த்தால், பொதுத் தொண்டு செய்ய முடியாது.

எனக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் என்று யாரிடமாவது நான் கேட்டால், அது பிச்சை. என்னுடைய மானம் போய்விடும். என்னுடைய பள்ளிக்கூடத்திற்கு ஒரு ரூபாய் கொடுங்கள்; நாங்கள் நடத்துகின்ற குழந்தைகள் இல்லத்திற்கு ஒரு ரூபாய் கொடுங்கள் என்று கேட்டால், அங்கு மானப் பிரச்சினையே கிடையாது.

குடிசெய்வார்க்கில்லை பருவம் மடி செய்து மானம் கருதக் கெடும்

இதுபோன்ற கருத்துகள் மனுதர்மத்தில் உண்டா? கீதையில் உண்டா? வேதங்களில் உண்டா? உபநிஷத்துகளில் உண்டா? என்று யாராவது சொல்லட்டும். அப்படி சொன்னால், நாங்கள் தலைகுனிந்து, திருத்தி ஏற்றுக் கொள்கிறோம்.

ஆகவேதான், ஒரு பண்பாடு -ஆழமான பண்பாடு - திராவிடப் பண்பாடு - தமிழ்ப் பண்பாடு - நீண்ட காலமாக இருக்கக்கூடிய ஒரு வரலாற்று பெருமைமிக்க ஒரு பண்பாடு - மனிதநேயம்.

ஏனென்றால், திருக்குறள் போன்று ஒரு நூல் வந்திருக்கிறது என்றால், பண்பாடு இருந்திருந்தால்தான், அப்படிப்பட்ட மனிதர்களால் சிந்தித்திருக்க முடியும். அவ்வளவு பெரிய அறிவாளி, காட்டுமிராண்டி காலத்தில் உருவாகி இருக்க முடியாது.

திருக்குறளை நாம் தூக்கிப் பிடிக்கவேண்டும்!


ஒரு அறிவார்ந்த சமுதாயமாக இருந்த காரணத்தினால்தான், அந்த நூல் வந்திருக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட ஒரு பண்பாட்டு நூலை நாம் தூக்கிப் பிடிக்கவேண்டும்; பரப்பவேண்டும்.

எனவே, எந்த பண்பாடு இந்தத் திருக்குறளை மறைத்ததோ, வள்ளுவரை ஜாதி அடையாளம் காட்டி கெடுத்ததோ, அதுதான் மிக முக்கியம்.

சில நாள்களுக்கு முன்பு ஜாதித் தலைவர்களின் பெயர் களை மாவட்டங்களுக்கு வைத்தார்கள். உடனே அதற்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

எங்கள் ஜாதி பெயரை வைத்த முதலமைச்சருக்கு நன்றி! நன்றி! என்று போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பெயரை வைத்தார் கலைஞர் - அதிலேயும் ஜாதியை வைத்துவிட்டார்கள்.

நான் கலைஞரிடம் சொன்னேன், என்னங்க, சர்.ஏ.டி. பன்னீர் செல்வத்தையே ஜாதிக்குள்ளே கொண்டு வந்துவிட் டார்களே என்றேன்.

என்னய்யா பண்றது என்றார் கலைஞர்.

திருவள்ளுவர் என்ன ஜாதி என்று இன்னும் முடிவு செய்யவில்லை


ஒரே ஒரு மாவட்டத்திற்குத்தான் நன்றி சொல்லவில்லை. அதுதான் பெரம்பலூர் மாவட்டம் - அந்த மாவட்டத்திற்குத் திருவள்ளுவர் பெயரை வைத்தார்கள். ஏனென்றால், திருவள்ளுவர் என்ன ஜாதி என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இராஜராஜனுக்குக்கூட சண்டை நடக்கிறது.

ஆகவே, நல்ல வாய்ப்பாக திருவள்ளுவர் தப்பித்தார். பிறகு கலைஞரிடம் சொன்னோம், மாவட்டங்களுக்கு ஜாதி பெயர் வேண்டாம் என்றோம். அதேபோன்று போக்குவரத்துக் கழகங்களுக்கும் தலைவர்களின் பெயர்கள் வேண்டாம். பெரியார், அண்ணாவும் அடிபட்டாலும் பரவாயில்லை. அவர்களின் புகழ் என்றைக்கும் நிலைக்கும். ஆகவே, அதனை எடுத்துவிடுங்கள் என்றோம் கலைஞரிடம்; எடுத்துவிட்டார்.

வள்ளுவரை ஜாதிச் சிமிழுக்குள் அடைக்காதீர்கள்;


மூடநம்பிக்கைக்குள் அடைக்காதீர்கள்!


எனவேதான், வள்ளுவரை ஜாதிச் சிமிழுக்குள் அடைக்காதீர்கள்; மூடநம்பிக்கைக்குள் அடைக்காதீர்கள். நல்ல வாய்ப்பாக இங்கே வள்ளுவருடைய உருவப் படம் வைக்கப்பட்டு இருக்கிறது. இதில்கூட பூணூல் போட்ட இடம் உண்டு. நல்ல வாய்ப்பாக வேணுகோபால் சர்மா போன்றவர்களை புரட்சிக்கவிஞர் அறிமுகப்படுத்தி, இந்தப் படத்தை எழுதிய பிறகுதான், வள்ளுவருடைய இப்போதைய உருவம் வந்தது.

இன்னுங்கேட்டால், அதிலே கூட மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்

சொல்லக்கூடிய அளவிற்கு வரும்போது, என்ன உதயத்தில் வந்தது என்று நாம் விவாதம் செய்யலாம்.

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க திருக்குறள் தேவை!


ஆகவே நண்பர்களே! இரு வேறு பண்பாடுகள்; ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க திருக்குறள் தேவை!

திருக்குறள் நாகரிகம்

திருக்குறள் பண்பாடு

திராவிடர் பண்பாடு

தமிழர் பண்பாடு

பகுத்தறிவுப் பண்பாடு

மனிதநேய பண்பாடு

வாழ்க! வளர்க! நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-  விடுதலை நாளேடு, 6.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக