தமிழைச் சரியாய் எழுத
ஒற்று மிகாத இடங்கள்
அ, ஆ, இ ஆகியவற்றைக் கடைசியில் உடைய சொற்களின் முன் வரும் வல் லெழுத்து மிகாத இடங்கள் இன்னின்னவை என இதுவரைக்கும் எடுத்துக் காட்டப் பட்டன.
சென்ற குயிலில் இகர ஈற்றுச் சொற் களின் முன் வரும் வல்லெழுத்து மிகாமல் இயல்பாகும் இடங்கள் - குறிக்கப்பட்டன.
அவை அனைத்தும் உங்கள் நினைவில் இடம் பெற்றனவா என்பதை அறிய இங்கே பயிற்சிக் கேள்விகளும் அவற்றிற்கான விடையும் தரப்படுகின்றன.
கண்ட + போது = கண்டபோது
காண்கின்ற + கண் = காண்கின்ற கண்
சிரித்த + பெண் = சிரித்த பெண்
தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வல்லெழுத்து இயல்பாயிற்று.
பெரிய + குதிரை = பெரிய குதிரை
சிறிய + பன்றி = சிறிய பன்றி
வலிய + சொக்கன் = வலிய சொக்கன்
மெலிய + கயிறு = மெலிய கயிறு
உள்ள + பணம் = உள்ள பணம்
குறிப்புப் பெயரெச்சத்தின் முன் வலி இயல்பாயிற்று.
வந்தன + குதிரைகள் = வந்தன குதிரைகள்
வருவன + பறவைகள் = வருவன பறவைகள்
எரிந்தன + கொள்ளிகள் = எரிந்தன கொள்ளிகள்
எரிகின்றன + கட்டைகள் = எரிகின்றன கட்டைகள்
தெரிநிலை வினைமுற்றுக்களின் முன் வலி இயல் பாயிற்று.
பெரியன + குதிரைகள் = பெரியன குதிரைகள்
வலியன + கழுகுகள் + வலியன கழுகுகள்
குறிப்பு வினைமுற்றுக்களின் முன் வலி இயல்பாயிற்று.
வருக + தமிழரே = வருக தமிழரே
செல்க + பொன்னா = செல்க பொன்னா
வாழிய + செந்தமிழ் = வாழிய செந்தமிழ்
வியங்கோள் வினைமுற்றின் முன் வந்த வலி இயல்பாயிற்று.
பல + குதிரைகள் = பல குதிரைகள்
சில + குதிரைகள் = சில குதிரைகள்
அஃறிணைப் பலவின்பால் பெயர் முன் வலி இயல் பாயிற்று
- குயில்: சென்னை 16-6-62
பாட்டு எழுதுவோர்க்கு!
பாட்டு எழுதுவோரிற் பலர், இன்னும் குற்றியலுகரத் தின் முன் வரும் உயிரைப் புணர்க்காமலே பாட்டின் அடி அளவை நிரப்பி வருகின்றார்கள்.
எடுத்துக்காட்டு
“கண்டு அவனைக் கயல்விழிதான் காதலித்தாள்” என்பது வெண்பாவின் ஓரடி.
கண்டு மென்றொடர்க் குற்றியலுகரச் சொல். இதன் முன் அவனை என்ற உயிர் முதற்சொல் வந்தால் கண்ட வனை என்று புணர வேண்டும். அவ்வாறு கண்டவனை என்று புணர்ந்தாலோ தளை தட்டும்.
அதனால் கண்டு என்பதைக் கண்டே என்றும் ஆக்கிக் கொண்டால் அது குற்றி யலுகரமும் ஆகாது; ஓசையும் கெடாது.
வெண்பாவுக்கு மட்டும் அன்று; எந்தப் பாட்டிலும் இது கருதப்பட வேண்டும்.
ஆனந்தக் களிப்பு
நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - அவன்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி (நந்த)
இதே மெட்டில் ஒருவர் கீழ்வருமாறு பாட்டு எழுது கின்றார். அது வருமாறு:
நாட்டை அடுத்தொரு காடு - அதில்
நாவலின் பொந்து அதிலொரு பாம்பு
போட்டது ஒன்று ஐயப்பன் - கீழ்ப்
பொத்தென்று வீழ்ந்தான்; செத்து மடிந்தான்
என்பது.
இதன் முதலடியில் காடு + அதில் என்பன காடதில் என்று புணர வேண்டும். புணர்த்துப் பாடிப் பாருங்கள். ஓர் எழுத்துக் குறைவது தெரியும்.
இனி,
இரண்டாம் அடியில், பொந்து + அதில் என்பன பொந்ததில் எனப் புணர வேண்டும். ஓர் எழுத்துக் குறைவதால் பாட்டின் ஓசையைக் கெடுக்கவில்லையா?
மூன்றாம் அடியில், போட்டது, ஒன்று என்பன போட்டதொன்று எனப் புணர வேண்டும். இதுவும் அப்படியே. பிறகு,
ஒன்று ஐயப்பன், ஒன்றையப்பன் எனச் சேர்த்தல் வேண்டும். இப்படிச் சேரவே ஒன்றும் கெடவில்லையா?
இந்தத் தொல்லையெல்லாம் இல்லாது இருக்க இதைத் திருத்திப் பார்ப்போம்.
“நாவலின் பொந்தாகும் அதிலொரு பாம்பு” என்றால் பிழை நேராது.
‘நாட்டை அடுத்தொரு காடு - அதில்’
மேற்கூறிய வரியை “நாட்டை அடுத்தொரு காடே” என்று ஆக்கிக் கொள்ளலாம்.
போட்டது ஒன்று ஐயப்பன் என்பதைப் போட்டதுவே ஒன்றையப்பன் என்றாக் கினால் எப் பிழையும் நேர வில்லை .
இதிற் சிலருக்கு அய்யப்பாடு ஒன்று எழலாம். ‘வண்டு இருந்து பாடு அரங்கு’ எனக் குற்றியலுகரத்தை உயிரோடு புணர்க் காமல் அச்சடித்துள்ளார்களே என்று அவர் கள் அய்யுறலாம்.
அது படிப்போருக்குப் பொருள் விளங் குவதற்காகப் பிரித்து அச்சடித்திருக்கின் றார்கள். அதைப் புணர்த்திப் பாடும்போது கெடுகிறதா? இல்லையே.
‘வண்டிருந்து பாடரங்கு’
ஓட்டம் தடைப்படவில்லை; தளை தட்டவில்லை; இசை கெடவில்லை . இந்த வகையில் பிரித்து எழுதலாம்.
- குயில் குரல் - 2 இசை - 10. 15.9.1959
- விடுதலை ஞாயிறு மலர், 23.6.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக