பக்கங்கள்

வியாழன், 12 ஜூலை, 2018

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் மனுதர்மம் சார்ந்து பார்ப்பனத்தனத்தோடு எழுதினார் (2)

எடுத்துக்காட்டுகளுடன் தமிழர் தலைவர் விளக்கவுரை




தஞ்சை, ஜூலை 5  திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் மனுதர்மம் சார்ந்து பார்ப்பனத்தனத்தோடு எழுதினார் என்று எடுத்துக்காட்டுகளுடன்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

திருக்குறள் பேரவை சார்பில்...


28.5.2018 அன்று தஞ்சையில் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நாதியற்றவர்களாக-சொந்தச்சக்தியில்நிற்க முடியாதவர் களாக-திராவிட மக்களாகிய நாம் இருந்து வருவதால்தான், திருக்குறள் கருத்துகள் கூட ஆரிய நூல்களிலிருந்து எடுத்து எழுதப்பட்ட தர்மங்கள் தான் என்று கூறுவதற்குக்கூட அந்தப் பார்ப்பனர்கள் துணிந்து விட்டார்கள். இத்தகைய மிகக் கஷ்டமான, கடினமான நாதியற்றநிலையில் நாம் இருக்கிறோம். எவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் 100-இல் 1 பங்கு பெருமைகூட நமது திருக்குற ளுக்குக் கொடுக்கப் படுவதில்லை. சாதாரணமாகப் பெரிய அறிவாளிகள் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொள்பவர் களும். அந்தப்படியே மக்களால் கருதப்பட்டு வருபவர்களும் மேலான தர்மங்களுக்கும் மேலான தத்துவார்த்தங்களுக்கும், கீதையைத்தான் ஆதாரமாக எடுத்துக் கொள்வார்கள்.

அதிலிருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டுவதைத்தான் அவர்கள் பெருமையாகக் கொள்வார்கள். என்னவோ பிறந்தாய், ஏதோ பெருமையோடு உத்தியோகம் பார்த்தாய், ஏதோ போதுமான பணமும் தேடிக்கொண்டுவிட்டாய், இனி என்ன செய்யப்போகிறாய்? ஏதோ காலாகாலத்தில் குளித்து முழுகி விட்டுக் கொஞ்சம் கீதையைப் பாராயணம் பண்ணிக் கொண்டு வா என்று தான் தங்களைப் பெரியவர்களென விளம்பரப்படுத்திக்கொண்டு திரிபவர்கள் அறிவுரை கூறுவது வழக்கமாக இருந்துவருகிறது.

கீதையைப் பாராயணம் செய்தவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள்? கற்றுக்கொள்வதற்குத்தான் அதிலென்ன இருக் கிறது? என்று மட்டும் யாரும் கூறமாட்டார்கள். அதிலிருந்து இரண்டொன்றை எடுத்துச் சொல்லித்தான் காந்தியார் கூடப் பார்ப்பனரல்லாதாரின் அன்பையும், நம்பிக்கையையும் இழக்க நேர்ந்தது. அவர் சத்தியத்தையும் அகிம்சையையும் போதித்து வந்தவர். ஒரு தன்னலமற்ற பொதுநலத் தொண்டர் என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதம் இல்லை என்றாலும் அவரிடம் சில அறிஞர்களுக்கு வெறுப்பேற்பட்டு விட்டது. காரணம் அவர் கிருஷ்ணன் கூறிய வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரித்து, தப்பட்டை அடிப்பவனுடைய மகன் தப்பட்டை அடிக்க வேண்டுமென்றும் தேவடியாள் மகள் பொட்டுக்கட்டிக் கொண்டே ஆகவேண்டுமென்றும், பார்ப்பான் மகனே மோட்சத்திற்கு டிக்கெட்டுக் கொடுக்க உரிமை உடையவன் என்றும் கூறியது அதுதான்  தர்மம், சுதர்மம் என்று காந்தியார் கூறியதோடு மட்டுமல்ல, அதுதான் இயற்கைக்கு ஒத்தது-விஞ்ஞானத்துக்கு ஒத்தது-என்று கூட அவர் கூறினார். அதாவது பார்ப்பான் தப்பட்டை அடித்தால் அது காதுக்கு இனிமையாக இராதென்றும், தேவடியாள் மகளல்லாத குடியானப் பெண் பொட்டுக்கட்டிக் கொண்டால் அவளால் சரியான சிற்றின்பச் சுவையை அளிக்க முடியாதென்றும், பார்ப்பானுக்குப் பதிலாக ஒரு பறையன் மோட்சத்திற்கு டிக்கட் கொடுக்க ஆரம்பித்தால், அந்த மோட்ச லோகம் போகும் எக்ஸ்பிரஸ் ரயில் சரியாக ஓடாதென்றும், கருத்துப்பட, அதாவது அவனவன் அவனவன் ஜாதித் தொழிலையே செய்யவேண்டுமென்று கூறினார். கீதையைப் படிப்பதையும் அதை உபதேசிப்பதையும் காந்தியார் பெருமையாக நினைத்து வந்தார். அதைத் தமது பேச்சில் எப்படியேனும் புகுத்திக் கூறித்தான் பார்ப்பன மக்களின் மரியாதையைப் பெற்றார்.

உதாரணமாக, அன்னி பெசண்ட் அம்மையார் கூட, கீதைக்கு வியாக்கியானம் எழுதித்தான் பெரிய ஞானியானார். வியாக்கியானம் எழுதியதோடு மட்டுமல்ல, கிருஷ்ணனோடு அன்றாடம் பேசுவதாகவும் கூறிப்பெருமை பெற்றுக் கொண்டார்.

நம் அதிகாரிகளும் மந்திரிகளும் கீதையைப் புகழ்ந்து கூறித் தான் தம் பதவிகளை நிலைக்க வைத்துக் கொள்ளுகிறார்கள்.

வாழ்க்கையில் எந்த அளவுக்கும் உபயோகப்படாத மிகச் சாதாரண அந்த நூலுக்கு அவ்வளவு பெருமை இருக்கக் காரணம் அது ஓர் ஆரிய நூல். ஆரிய தர்மத்தை அதாவது ஆரிய உயர்வை வலியுறுத்தும் நூல் என்பதால்தான். இதை நீங்கள் உணரவேண்டும். திருக்குறளுக்கு அத்தகைய பெருமை இல்லாமற் போனதற்குக் காரணம் இது ஒரு திராவிடநூல் என்பதுதான். இதனையும் நீங்கள் நன்றாக உணரவேண்டும்.

நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது திருக்குறள்தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள். உணர்வது மட்டுமல்ல, நன்றாக மனத்தில் பதிய வையுங்கள்!

மேலும் திருக்குறள் ஆரிய தர்மத்தை-மனுதர்மத்தை-அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணரவேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க என்பதற்காகவே எழுதப்பட்ட ஒரு நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை.

மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு, ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகத்தான் என்னால் கருத முடிகிறது.

திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச்செய்ய, அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்று தான் நான் கருதுகிறேன்.

உதாரணமாக மனுதர்மம்-வருணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள்- பிராமணன், க்ஷத்திரியன் வைசியன், சூத்திரன்-உண்டு என்று உபதேசிக்கிறது.

பிராஹ்மண க்ஷத்திரியே வைஸ்த: த்ரயோவர்ணாத் விஜரதய; சதுர்த்த ஏகஜ திஸ்து சூத்ரோ நாஸ்திது பஞ்சம்: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என்ற இம்மூவரும் துவிஜர்கள். நான்காவது ஜாதியான சூத்திரன் ஒரே ஜாதி இவனுக்கு உபநயனமில்லாததால் த்விஜாதியாக மாட்டான் என்கிறது மனுதர்மம்.

திருக்குறள்-மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (குறள் - 972)

மனுதர்மம் - மாம்சம், மச்சம் சாப்பிட வேண்டும். யாகம் செய்யவேண்டும். அதில் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைப் பலி தரவேண்டும் என்கிறது.

மத்யம் மாம்ஸம் சமீனம் சமுத்ரா, மைதுனமேவச : ஏதே பஞ்சமகாரா: ஸ்யுர் மோக்ஷதா ஹியுகே யுகே.

கள், இறைச்சி, மீன், சமுத்ரா, மைதுனம் இவ்வைந்தும் மோட்சத்திற்குச் சாதனங்கள்.

திருக்குறள்-ஜீவ இம்சையே கூடாது, மாம்சம் சாப்பிடக் கூடாது, யாகம் கூடாது என்கிறது. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (குறள் -260)

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள் - 259)

மனுதர்மம் - பிறவியினாலேயே பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்கிறது.

அனார்யமார்ய கர்மாணம் ஆர்யம் சானார்ய கர்மிணம்; ஸம்ப்ர தார்யா ரவீத் தாதா, நஸமென நாஸமாவிதி''

ஆரியன் (பார்ப்பான்) தொழிலைச் செய்கிற அனாரியன் (தமிழன்) ஆரியனும் ஆகப்போவதில்லை. அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனுமாகமாட்டான்.

ஏகமேவது சூத்ரஸ்ய ப்ரபு: கர்மஸமாதிசத்?

எதேஷமேவ வர்ணானாம் சுஸ்ரூஷா மனஸயய

பொறாமையன்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளை இட்டிருக்கிறார்.

திருக்குறள் - ஒழுக்கம் உண்டானால்தான் பார்ப்பான் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளலாம்; ஒழுக்கமற்றவன் பார்ப்பானாயினும் கெட்டவன் என்கிறது.

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (குறள் - 134)

மனுதர்மம் - ஒரு மனிதன் செல்வனாகப் பிறந்து சுக போகத்துடன் வாழ்வதற்குக் கடவுள்தான் காரணம் என்கிறது.

விஸ்ரப்தம் ப்ராஹ்மண சூத்ராத் த்ரவ்யோ பாதான மாசரேத்: நஹிதஸ்பாஸ்தி கிஞ்சித் ஸ்வம் பர்த்ளு ஹார்யயனாஹிச

சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவன் அடி மையாகப் படைக்கப்பட்டிருத்தலால், அவனுக்கென்று பொருள் சிறிதேனுமில்லை.

திருக்குறள் - ஒரு மனிதனை ஏழையாகப் பிறப்பித்து வருந்த வைப்பது கடவுளானால் அக்கடவுள் ஒழியவேண்டும் என்கிறது.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக இவ்வுலகியற்றி யான் (குறள் - 1062)

மனுதர்மத்தில் - பிராமணன் சூத்திரன் என்று மக்களைப் பல ஜாதியினராகப் பிரித்துப் பல இடங்களில் வருணாச்சிரம தர்மம் கூறப்பட்டிருக்கிறது.

வேதத்தில் 180 ஜாதிகள் கூறப்பட்டிருக்கின்றன. மனுஸ்மிருதி யிலும் சூத்திரரினும் தாழ்ந்த ஜாதிகள் பல கூறப்பட்டிருக்கின்றன.

திருக்குறளில் - ஒரு இடத்தில் கூட பிராமணன் சூத்திரன்'' என்கிற வார்த்தைகள் இல்லை. பார்ப்பான் என்றுதான் கூறப் பட்டிருக்கிறது - வர்ணாச்சிரம தர்ம வாடையே கிடையாது.

இப்படி அநேக கருத்துகள் ஆரிய தர்மத்துக்கு மாறாகக் கூறப்பட்டிருக்கின்றன. சுருங்கக் கூறினால் - புத்தர் செய்த வேலையைத்தான் திருக்குறள் செய்திருக்கிறது. புத்த தர்மமும் ஆரியத்திற்கு மாறான தர்மம்தான். அதனால்தான் அது இந்நாட்டு ஆரியர்களால் அழிக்கப்பட்டது. ஆரிய தர்மத்தை எதிர்த்து அழித்து ஒழிப்பதற்காகத்தான் திருக்குறள் பாடப்பட்டதென்பது அதை ஆராய்ச்சி செய்வோர் எவருக்கும் விளங்காமற் போகாது. நமது தலைவரின் (லட்சுமிரதன் பாரதி) தந்தையாரான தோழர் எஸ்.சோமசுந்தர பாரதியார் அவர்களைப் போன்ற பெரும் புலவர்கள் திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் - தமிழர் வேறுபாடுகளை விளக்கமாக எடுத்துக் கூறுவார்களானால், பல அறிவுக்கியைந்த அற்புதங்கள் வெளிப்படும். அவரைப் போன்ற அறிஞர்கள் பேசக் கேட்டுத்தான் எனக்கும் திருக்குறளின் பெருமை தெரிய வந்தது.

என்னைப் பொறுத்த வரையில் திருக்குறளைச் சிறிதாவது ஆராய்ச்சி செய்தவன் என்று என்னால் கூறிக் கொள்ள முடியா விட்டாலும், அதன் பெருமையை நான் ஓர் அளவுக்காவது உணர்ந்திருக்கிறேனென்பதையும், அதன் மீது எனக்கு அளவற்ற பற்றுண்டு என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

இருக்கலாமென்றாலும், அதையே முடிந்த முடிவென்றோ அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளே எல்லாக் காலத்திற்கும் பொருந்துமென்றோ, மதவாதிகள் வேதத்துக்குச் சொல்வது போல நான் கூறவில்லை. இன்றைய கருத்துக்கேற்ப சில மாற்றங்கள் திருக்குறளில் செய்ய வேண்டியது அவசியமாய் இருக்கலாமென்றாலும், திருக்குறள் ஆரியக்கருத்துக்கு நேர் மாறானது; மனுதர்மத்துக்கு நேர்மாறானது; திராவிடர்களுக்குப் பெரிதும் ஏற்றது என்று மட்டும் நான் நிச்சயமாகக் கூறுவேன்.

பண்டிதர்கள் சிலர் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு திருக்குறளின் கருத்தையும் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து இதைப்பற்றி மனுதர்மத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதையும் கவனித்துப் பார்ப்பார்களேயானால் இந்தக் குறள் மனுதர்மத்தின் இந்தச் சூத்திரத்திற்கு நேர்மாறானதாக இருக்கிறது என்று புள்ளி போட முடியும். 100-க்கு 75 பாட்டுகள் இப்படியே அமைந்திருக்கும் என்று நான் துணிந்து கூறுவேன். ஒன்றிரண்டை எடுத்துக்காட்டாகக் கவனிப்போம்.

மனுதர்மத்தில் கூறப்படுகிறது: பார்ப்பான் பிரம்மாவின் தலையிலிருந்து உதித்தான் என்று; சூத்திரன் பிரம்மாவின் பாதத்திலிருந்து உதித்தான் என்று.

பிறவியில் பேதா பேதம் இல்லை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இப்படி ஒவ்வொன்றும் மனுதர்மத்தின் கருத்துக்கு மாறு பாடாகத்தான் இருக்கும். அதே காரணத்தால் தான் அது மக்களிடையே பெறவேண்டிய பெருமதிப்பைப் பெற முடியாமல் போய்விட்டது.

ஆரியத்திற்கு விரோதமாக எழுதப்பட வேண்டும் என்பதற்காகவே திருக்குறள் எழுதப்படவில்லை என்றாலும் ஆரியதர்மம் நீதிக்குக் கேடானது, சமதர்மத்திற்குக் கேடானது, சத்தியத்திற்குக் கேடானது. முன்னேற்றத்திற்குக் கேடானது என்பதை நன்கு அறிந்துதான் ஒரு பெரியார் இயற்கையோடு இயைந்து நின்று தாம் கண்டுபிடித்த கருத்துகளை வைத்துத் திருக்குறளை இயற்றியிருக்க வேண்டும். இயற்கைக்கு இயைந்த கருத்து விஞ்ஞானத்திற்கும் இயைந்த கருத்தாக இருக்கும், இன்ன பொருள்களை இன்ன விதத்தில் சேர்த்தால் இன்னது உண்டாகும் என்பதுதான் விஞ்ஞானமாகும்.

இன்ன காரண காரியங்களாக இன்ன வஸ்துக்கு இன்ன குணம் ஏற்படும் என்று கூறுவதுதான் விஞ்ஞானம்; விஞ்ஞானத்திற்கு ஏற்ற கருத்துத்தான் பிரத்யட்ச அனுபவத்திற்கும் பின்விளைவுக்கும் ஏற்றதாக அமையக் கூடியது. தத்துவார்த்தம் கூறத் தேவையில்லாத கருத்துத்தான் விஞ்ஞானத்திற்கேற்ற கருத்தாகும். தத்துவார்த்தம் பேசுவதெல்லாம் பெரிதும் தம்முடைய சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளச் சிலர் செய்யும் பித்தலாட்டம் என்றுதான் நான் கூறுவேன். திருக்குறளில் அத்தகைய தத்துவார்த்தப் பித்தலாட்டத்திற்கு இடமேயில்லை.

திருக்குறளில் இப்படிக் கூறப்பட்டிருக்கிறது என்று கூறினால் போதும். அதுவே உண்மை என்று ஒப்புக் கொள்ளலாம். அதில் யாவருக்கும் எந்தக் காரியத்திற்கும் பொருந்தக்கூடிய கொள்கைகள் பல இருக்கின்றன. அதில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நாம் பொது நெறியாகக் கொள்வது அவசியம். பொது நெறி என்று ஏன் கூற வேண்டும்? மதம் என்று ஏன் கூறக்கூடாது? என்று நீங்கள் கேட்கலாம். மதம் என்று கூறினால் மதத்திலுள்ள நெறியெல்லாம் மாய்ந்து அதிலுள்ள பூச்சாண்டிப் பழக்க வழக்கங்கள் தான் மிஞ்சுகின்றன. உதாரணமாக சைவ மெய்யன்பர்கள் சிலரை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் ஒரு சைவ மெய்யன்பர் கணக்காக விபூதி பட்டை அடித்துக் கொள்வார்; ருத்ராட்சமும் கணக்காக அணிந்திருப்பார். கணக் காகப் பஞ்சாட்சரம் கூட ஓதி வருவார், ஆனால் அவருடைய நாணயமோ நடத்தையோ சற்றேனும் சைவ நெறிக்கு ஏற்றதாக இராது; அதே போல்தான் மற்ற எல்லா மத வாதிகளும்.

மதம் என்ற வார்த்தையில் எனக்கு வெறுப்பு ஒன்றும் கிடையாது. மதம் என்றதும் அதில் கூறப்படும் நெறிகள் மறைந்து விடுகின்றனவே என்பதுதான் என்னுடைய கவலை. அதற்காகத் தான் நெறி என்று கூறுகிறேன். மதம் மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்கக் கூடிய மார்க்கம் - சாதனம் என்கின்ற கருத்தில்தான் மதத்தை மக்கள் மதிக்க வேண்டும்.

இன்று நீதிமன்றத்துக்கு வரும் கொலை, சூது, களவு, மோசடி, பிளாக் மார்க்கட், வஞ்சகம் ஆகிய குற்றங்களுக்குரிய வழக்குகளில் குற்றவாளியாக இருப்பவர்கள் அத்தனை பேரும் மதவாதிகளே.

நான் கொஞ்சம் வெளியில் போய்வருகிறேன். அதுவரை இந்த அறையைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். இதோ சாவி என்று ஒருவனிடம் நாம் கூறிச் செல்வதாக வைத்துக் கொள்வோம். நாம் திரும்ப வரும்போது இந்தப்பூட்டும் அப்படியே பூட்டப்பட்டிருக்க, அந்த அறையின் சுவரைப் பின்பக்கத்தில் இடித்துவிட்டு அதிலுள்ள சாமான்களை யாரோ ஒரு திருடன் களவாடிச் சென்றிருப்பதாக வைத்துக் கொள்வோம். ஏனப்பா நீ காவலிருந்தாயே, எப்படியப்பா இத்திருட்டு நடந்ததென்று கேட்டால், அதற்கு நான் பொறுப் பாளியல்ல. நான் பூட்டை ஜாக்கிரதையாகத்தான் வேறு ஒரு வரும் திறக்காமல் பாதுகாத்து வந்தேன் என்று கூறினால் அதை ஒழுங்கென்று ஒப்புக்கொள்வீர்களா? அதேபோல் மதத் தலைவர்கள் எங்கள் மதம் என்னமோ ஒழுங்கானது தான். அதன் அடையாளத்தை ஒழுங்காகத்தான் நாங்களும் அணிந்து வருகிறோம் என்று கூறினால் நாம் எப்படி அதை ஒப்புக் கொள்வது? ஆகவேதான் ஒழுக்கத்தைக் கவனிக்க முடியாததும், வேஷத்தை மாத்திரம் கொண்டதும், அறிவுக்குப் பொருந்தாததுமான மதம் எதுவானாலும் அந்த மதங்கள் மீது எனக்கு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.

நம்முடைய இன்றைய முக்கியமான மதக்கருத்து ஒன்றாவது நமது பிரத்தியட்ச அனுபவத்திற்கு ஏற்றதாக இருக்கவில்லை. அக்கருத்துகளும் யாரோ நமக்குத் தெரியாத பராசரராலும், நாரதராலும் மற்றும் பல கடவுளர்களாலும் தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களாலும் கூறப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே ஒழிய, ஒன்றேனும் ஏதாயினுமொரு மனிதனால் கூறப்பட்டதாக இல்லை. அவற்றை நாம் எப்படி ஒப்புக்கொள்வது?

கடவுள்தான் என்னைச் சூத்திரனாக - இழி ஜாதி மகனாகப் படைத்தார் என்றால், அவரே கூறட்டுமே என்னிடம் நான் தான் உன்னைச் சூத்திரனாகப் படைத்தேன் என்று. கடவுள் என்னிடம் இப்படிச் சொன்னால் விடுவேனா அவரை! திருக்குறளில் காணப்படுகிறதா இப்படிப்பட்ட கருத்து ஒன்றாவது? அதில் எவ்வளவு அதிசயமான கருத்துகள் அடங்கியிருக்கின்றன பாருங்கள்.

திருக்குறளின் பெருமையைச் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எடுத்துக் காட்டியவர் காலஞ்சென்ற தோழர் என்ஜினியர் பா.வே.மாணிக்க நாயக்கர் ஆவார். அவரும் நானும் அடிக்கடி வேடிக்கையாகவும் விதண்டாவாதமாகவும் பேசிக்கொண்டிருப்பது வழக்கம், அந்தச் சமயங்களிலெல்லாம் அவர் திருக்குறள் கருத்துகளைத்தான் மேற்கோளாக எடுத்துக் கூறி என்னை மடக்குவார். அவருடைய விளக்க உரைகளால் திருக்குறளில் அடங்கியிருக்கும் பல அற்புத அதிசயக் கருத்துகளை என்னால் அன்று அறிய முடிந்தது.

திருவள்ளுவர் நூல் ஒன்றே போதும் - இந்நாட்டு மக்களுக் கெல்லாம் அறிவை உண்டாக்க.

திருக்குறளை மட்டுமே எடுத்துக் கொண்டு அதிலுள்ள எல்லாத் தலைப்புகளின் கீழ் வருவனவற்றையும் இரண்டு மூன்று பிரிவுகளாக, அதாவது படித்த மாத்திரத்தில் எளிதில் பொருள் விளங்குவனவற்றைக் கீழ் வகுப்புகளுக்கும் சற்றுக் கடினமாக குறள்களை நடுத்தர வகுப்புக்கும் மிகுந்த புதை பொருள் கொண்டு, கூட்டிப் பொருள் காண வேண்டியவற்றை மேல் வகுப்புக்கும் வைத்தால் பள்ளிகளில் மதப்படிப்போ ஒழுக்கப்படிப்போ தனியாக வைக்கவேண்டிய அவசியமே இராது.

ஒரு மாணவன் தன்னுடைய பரீட்சைக்குள் திருக்குறள் முழுமையையும் உணரும்படி செய்யப்பட்டால் அது எவ்வ ளவோ நன்மை. அதாவது ஒரு பி.ஏ. படித்தவனுடைய உலக ஞானத்துக்கு மேற்பட்ட அறிவு அனுபவத்துடன் பயப்பதாக அமையும்.

இராமாயணத்தில் 100 பாட்டும், பெரிய புராணத்தில் 200 பாட்டும், பாரதத்தில் 100 பாட்டும், பாகவதத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளைப் படிப்பது எவ்வளவோ மேலாக இருக்கும். பொருளை வீணாக்கிக் காலத்தை வீணாக்கி, பி.ஏ. பட்டமும் எம்.ஏ. பட்டமும், பெறுவதைக் காட்டிலும் திருக்குறளை முற்றும் உணர்ந்து பட்டம் பெறுவது எவ்வளவோ மேலாக இருக்கும். பி.ஏ. படிப்பதாலும், எம்.ஏ. படிப்பதாலும் அனுபவ அறிவொன்றும் வாழ்க்கைக்கு உபயோகப்படக் கூடிய அறிவொன்றும் நாம் பெற்று விடுவதில்லை. உத்தியோகம் பெற ஒரு தகுதியாகத்தான், அதுவும் பார்ப்பனருடன் உத்தி யோகத்துக்கு நம்மைப் போட்டிபோட முடியாமல் செய்யத்தான் பயன்படுகிறதே ஒழிய உத்தியோகத்திற்கு அந்தப் படிப்பு ஒன்றும் பயன்படுவதில்லை. ஆனால், திருக்குறளின் ஒவ்வொரு கருத்தும் ஒருவன் வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படக் கூடியதாக யிருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு துறையும் நன்றாக அதில் விளக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் ஒரு தோழரோடு திருக்குறளின் பெருமையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அதன் பெருமையை எடுத்துக்கூற அவர் ஒரு தேனீக்குடிக்கீரனார் என்னும் புலவரால் பாடப்பெற்ற சாற்றுகவி ஒன்றை எனக்கு மேற்கோளாக எடுத்துக் காட்டினார். அதாவது, பொய்ப்பால் பொய்யேயாய்ப் போயின பொய் அல்லாத மெய்ப்பாலே மெய்யாய் விளங்கினவே - முப்பாலில் தெய்வத் திருவள்ளுவர் செப்பிய குறளால் வையத்து வாழ்வார் மனத்து என்ற கவியை மேற்கோளாகக் கூறினார். அதன் பொருளாவது திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் எந்தெந்தப் பொய்க் கருத்துகள் மெய்யாகப் பரப்பப்பட்டனவோ அவைகளின் வண்டவாளம் விளங்கும்படியும், எந்தெந்த மெய்க்கருத்துகள் பொய்யாகக் கருதப்பட்டிருந்தனவோ அவையெல்லாம் மெய்யாகவும் திருக்குறளில் எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன என்பதாகும்.

அதாவது, திருக்குறளில் பொய் மெய்யாகவோ அல்லது மெய் பொய்யாகவோ கூறப்பட்டிருக்கவில்லை என்பதுதான் அதன் கருத்து. அதுதான் உண்மையுங்கூட. திருக்குறளை எழுதியவர் இதை எழுதினால் எங்குப் பார்ப்பனர்கள் எதிர்ப்பார்களோ என்றோ எங்கு பார்ப்பனர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்றோ, கவலைப்படாமல் எழுதியிருக்கிறார். ஆகவேதான் அது ஒழுக்கத்திற்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. அவருக்குப் பின்னர் வந்த எழுத்தாளர்கள் யாவரும் பார்ப்பனர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கக் கூடாது என்பதற்காகவே பல உண்மைகளை மறைத்ததோடு அல்லாமல் பல பொய்களையும் புனைந்து எழுதியிருக்கின்றனர்.

உதாரணமாக, திருக்குறளுக்கு உரை எழுதப் புகுந்த பரிமேலழகர் திருக்குறளில் அறம் என்று இருந்தால் அதற்கு மனு தர்மம் என்று தான் பொருட்படுத்தி உரை எழுதியிருக்கிறார். அதையறிந்தும் சில பண்டிதர்கள் இன்னும் அவ்வுரையைப் பெருமைப்படுத்தி வருவது வருந்தத்தக்கது. நல்ல பண்டிதர் களைக் கொண்டு திருக்குறள் கருத்துகளை அமைத்து நல்ல பாட புத்தகங்களை எழுதி அதைப் படிக்கச் செய்தால் இன்றுள்ள பல கஷ்டங்கள் நமக்கிருக்காது. பல கஷ்டங்கள் நீங்கும் என்பதோடு நமக்குப் பல பலன்களும் ஏற்படும்.

திருக்குறளில் - ஒரு அரசன், ஒரு விவசாயி, ஒரு வியாபாரி, ஒரு துறவி, ஒரு பொதுநலத் தொண்டர், ஒரு மந்திரி, ஒரு காதலன், ஒரு காதலி, ஒரு தலைவன், ஒரு தலைவி சகலருக்கும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்றில் கூட மூட நம்பிக்கை புகுத்தப்பட்டிருக்கவில்லை.

அந்தக்காலத்திய மக்களின் தாட்சண்யத்திற்காகக் கூட ஆசிரியர் எதையும் கண்டிக்காமல் விட்டுவிடவில்லை.

நாகரிகம் என்பது பற்றி ஆசிரியர் கூறியிருப்பதைக்  கவனி யுங்கள்!

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்     (குறள்: 580)

என்ற குறளில் நாகரிகத்தின் தன்மை விளக்கப்பட்டிருக்கிறது. நாகரிகம் என்கிற வார்த்தையின் அர்த்தமே பலருக்குப் புரிவ தில்லை. தாட்சண்யத்தைத்தான், அதாவது மற்றவர்களை எந்தக் காரணம் கொண்டும் மனம் நோகாமல் இருக்கச் செய்வதைத்தான் ஆசிரியர் நாகரிகத்திற்கு அறிகுறியென்று கூறியிருக்கிறார். அதாவது எவ்வளவு தான் ஒருவன் அயோக்கியனாயிருந்தாலும் கூட அவன் மீதும் பரிவுகொள்வதுதான் ஒரு நாகரிக மனிதனுக்கு அடையாளம் என்கிறார். நமக்குத் தீங்கு செய்த ஒருவனுக்குக்கூட நம்மைக் கண்டால் வருத்தம் ஏற்படக்கூடாத மாதிரியில் நடந்து கொள்வதுதான் நாகரிகம் என்று கூறுகிறார். சாதாரணமாக நாம் ஒரு அத்யந்தத் (நெருங்கிய) தோழர் யாருக்காவது கடனாகப் பணம் கொடுத்திருந்தால், எங்கு நம்மைப் பார்க்கும் போது அவர் நம் கடனைத் திருப்பிக் கேட்கப் போகிறானோ என்று கருதிவிடுவானோ என்று எண்ணித் தாமே மறைந்து கொள்வது என்பது சிலரிடம் உண்டு. அதாவது எங்கு அவருடைய மனம் பொக்கென்று திக்கென்று ஆகிவிடுமோ என்று நான்கூடச் சில சமயங்களில் கவலைப்படுவதுண்டு. இதற்குத் தான் தாட்சண்யம் என்று பெயர். மேற்படி திருக்குறளில் காட்டப்பட்டுள்ள உதாரணமோ இதைவிடச் சாலச் சிறந்தது.

ஒருவன் நமக்கு விஷம் கொடுக்கிறான் என்பதை நாம் அறிந்து கொண்டதாகக் காட்டிக்கொண்டால், அவன் மனம் என்ன வேதனைக் குள்ளாகுமோ என்று ஒருவன் தாட்சண் யப்படுவது தான் நாகரிகம் என்கிறார். இதற்கொப்ப வேறு ஏதாயினும் நம்மால் நாகரிகத்திற்கு அடையாளம் காட்ட முடியுமா?

பொதுத் தொண்டர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மற்றோர் குறளைப் பாருங்கள்!

குடிசெய் வார்க்கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும் (குறள் - 1028)

என்று கூறியிருக்கிறார். அதாவது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று ஒருவன் நினைத்தால் அதற்கு காலமோ நேரமோ பார்ப்பது தவறு. மானம் மரியாதை இவற்றைப் பற்றி பார்ப்பது கூடத் தவறு என்று கூறியுள்ளார். அவற்றைப் பற்றிச்  சிந்திக்க ஆரம்பித்தால் அந்தக் காரியமே கெட்டுப்போகும் என்றுகூடக் கூறியிருக்கிறார்.

ஆனால் அவரே மற்றோர் அத்தியாயத்தில், காலம் பார்த்துச் செய்தால் ஞால முங்கைகூடும் என்றும் வேறோர் அத்தி யாயத்தில் மானம்போய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் மாய்வதே மேல் என்றும் கூறியிருக்கிறார். இவற்றின் அர்த்தம் என்ன?

பொதுமக்களுக்குத் தொண்டு செய்பவனுக்குத்தான் காலம் பார்ப்பது சோம்பேறித்தனம் என்று கூறியுள்ளார். இதைச் செய்தால் நம் மானம் போய் விடுமே அப்புறம் நம் நிலை என்னவாகும். கொஞ்சம் பொறுத்துத்தான் சமயம் பார்த்து செய்வோமே என்போர் பொதுநலத்தொண்டுக்கு அரு கதையற்றவர்கள் என்று திடமாக கூறியுள்ளார்.

அப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? மானமும் பெருமையும் அவனவன் சொந்தத்திற்கு உரிய சங்கதிகள். சொந்தச் சங்கதிகளைப் பற்றிக் கவலை உடையவர்கள் காலம் பார்ப்பதும் மான அவமானத்தைப் பற்றிச் சிந்திப்பதும் சரி. ஆனால் ஒரு பொதுநலத் தொண்டனைப் பொறுத்த வரையில் அவனுக்குச் சொந்தமானது ஒன்றுமில்லை. அவன் தன்னைத்தான் மறக்க வேண்டும் தன்னைத்தான் மறந்தவனுக்கு மானமேது? அவமானமேது? எந்தப் பொதுநலக் காரியவாதியும் அப்படித்தான் இருப்பார். பொதுக் காரியத்தில் ஈடுபடுபவர் யாராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால் அவர் பொதுக் காரியவாதியாக மாட்டார் தன் சொந்தக் கவுரவத்திற்காக பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக் கொள்பவராகத் தான் நாம் அவரைக் கருதவேண்டும். அத்தகைய போலிப் பொதுக் காரியவாதிகள் தான் இன்று நாட்டில் மலிந்துக் கிடக்கிறார்கள். அவர்களால் நீங்கள் ஏமாந்து போகக்கூடாது என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.

அடுத்தபடியாக, திருக்குறள் ஆசிரியருக்கு கடவுளைப் பற்றிக்கூட நம்பிக்கையில்லை. ஒரு கடவுள் இருந்தால் அது இப்படி இருக்க வேண்டும். இல்லையானால் அது ஒழிய வேண்டும் என்றும் தான் அவர் கூறியுள்ளார். கடவுள் இல்லை என்று நினைத்துக்கொண்டு காரியத்தை ஒழுங்காக நடத்தி வருவது குற்றமாகாது என்று தான் அவர் கூறியிருப்பதாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. இருப்பதாய் நினைத்தால் அது உன்னைக் காப்பாற்றுவதாய் இருக்கட்டும் என்றுதான் அவர் கூறியுள்ளார்.

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக இவ்வுலகியற்றி யான் என்று கூறியுள்ளார்.

ஒருவன் மற்றவனை இரந்து பிச்சை எடுத்துத்தான் பிழைக்க வேண்டும் என்கிற நிலை வருமானால் அந்நிலைக்குக் காரண மான கடவுள் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இன்றைய தொழிலாளர்களின் பட்டினிக்கு முதலாளிகள் காரணம் என்றால் அம்முதலாளியை ஒழிக்கப் பாடுபடுவது நல்ல பயன் அளிக்காது; அவனைக் காப்பாற்றி பாதுகாப்பு அளித்து வரும் கடவுளை முதலில் ஒழி. கடவுள் கெடட்டும் என்றுதான் அவர் கூறியுள்ளார். ஆலாப் பறக்கட்டும் அப்படிப் பட்ட கடவுள் என்று தான் கூறியுள்ளார்.

இதன் உண்மை - பாடுபடும் பாட்டாளி மக்களுக்குத்தான் புரியும். பாடுபடாது, தொழிலாளிகளின் சந்தாத்தொகையால்  வாழ்வு வாழும் இந்நாட்டுப் பொது உடைமைவாதிகளுக்குப் புரியாது, திருக்குறள் கூறும் ஞானம் இதனால்தான் இவர்கள் (பார்ப்பனப் பொதுவுடைமைவாதிகள்) தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று போலிக் கூப்பாடு போட்டுத் திரிகின்றனர். ஜெகத்தை இவர்களால் ஒழிக்க முடியுமா? ஒழித்துவிட்டபிறகு இவர்கள் மட்டும் வேறு எந்த ஜெகத்தில் வாழப் போகிறார்கள் என்று கேட்டால் விழிப்பார்கள் மிரள மிரள, ஜெகத்தை ஒழிப்பது என்பது தற்கொலை செய்து கொள்ளுவது அல்லது துறவி ஆகி விடுவது ஆகியவை தான். பாட்டாளி மக்களின் புரட்சியைத் தடுத்து அவர்களை வேறு பக்கம் திருப்பப் பித்தலாட்டக் கூப்பாடுகள் இவை. ஒரு தொழிலாளி தனது பட்டினிக்கு ஜெகத்தைக் காரணமாக நினைப்பதில்லை. கடவுள் தான் அவனை அப்படிப் பாடு பட்டும் பட்டினி கிடக்கும்படி உற்பத்தி செய்து விட்டார் என்று நினைக்கிறான். அவனுக்கு போடா போ கடவுளாவது வெங்காய மாவது, பாடுபடும் நாமெல்லாம் பட்டினி பாடுபடாத அவனெல்லாம் வயிறு வீங்க உண்பது. இது தான் கடவுள் நீதியா? இப்படி ஒரு கடவுள் இருக்குமா? இருந்தால் அந்தக் கடவுள் நமக்கு வேண்டாம்; வேண்டவே வேண்டாம் என்று கூறினால் கடவுள் ஒழிந்துவிடும் அப்புறம் உலகப் பொருள் யாவருக்கும் சரி பங்கு என்ற உணர்ச்சி ஏற்படும் அதனால் அவன் உணரமுடியும். தான் பட்டினி இருக்க தன் முட்டாள்தனம் தான் காரணம் என்று, இதைத்தான் கூறியிருக்கிறார் திருக்குறள் ஆசிரியர்.

பிராமணன்'' என்ற வார்த்தையைத் திருக்குறள் ஆசிரியர் எங்குமே உபயோகிக்கவே இல்லை. உயர்வான குணங் களுடைய மனிதனைக் குறிப்பிடும் போதும் துறவியையும் பெரியோரையும் குறிப்பிடும் போதும் வேறு வார்த்தை கூறிவிட்டுப் பார்ப்பனர்களைப் பார்ப்பான் என்றே கூறியிருக்கிறார். அதுவும் வேதம் ஓதுபவனையே பார்ப்பான் என்று கூறிவிட்டு அவனும் இன்னபடி நடந்தால்தான் இப்படி இருந்தால்தான் அவனைப் பார்ப்பான் என்று கூறமுடியும் என்று கூடக் கூறியிருக்கிறார். ஒரு பார்ப்பானும் யோக்கியனாக இருக்க மாட்டான் என்று கூடக் கூறியிருக்கிறார்.

நம்மவர் கவலை எடுத்துக் கொண்டு இத்திருக்குறளைப் பாடமாக வைப்பார்களானால் அப்புறம் இந்நாட்டில் ஒரு மனிதன் கூட தன்னை பிராமணன் என்று கூறிக்கொண்டு இருக்க முடியாது.

நாம்கூட எவனையும் பிராமணன் என்று அழைப்பது நமக்கே இழிவைத் தருவதாகும். நாம் ஒருவனை பிராமணன் என்று அழைத்தால் அப்போது நாம் யாராகிறோம்? சூத்திரன் என்றுதானே அர்த்தம்! நாமே அதற்கு இடம் கொடுக்கலாமா? அவர்கள் பிராமணர்கள் என்றால் நாமெல்லோரும் சூத்திரர்கள் தானே. எப்படி ஒரு கக்கூஸ்காரனுக்கு, பழக்கத்தால் மலத்தின் நாற்றம் தோன்றுவதில்லையோ அதுபோல் நமக்குப் பழக்கத் தால் நமது இழிவு, நமக்குத் தோன்றாமல், நாம் சூத்திரன் என்ற கருத்துத் தரும் பிராமணன் என்ற சொல்லைச் சொல்லி வருகிறோம். அப்படி நாம் சொல்லி வருவதாலேயே நாம் சூத்திரனாய் - இழிமகனாய் - கருதப்பட்டு வருவதோடு அதனாலேயே பல இன்னல்களை நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம். இல்லையா? பார்ப்பான் என்று கூறினால் கூடச் சிலர் நம்மவர்களே குற்றம் கூறுகிறார்கள் டே அவன் பிராமணன்டா; அவனைப் பார்ப்பான் என்று கூறாதடா; அது தவறு என்று சொன்னால் நீங்கள் கேட்க வேண்டும் அப்போது நீ யாருடா? என்று இந்த ஞானமெல்லாம் 3-அணாத் திருக்குறளில் இருக்கிறது வாங்கிப் படியுங்கள்!

100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் டெக்ஸ்ட் புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்களாவதைவிட 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்று தான் நான் கூறுகிறேன். திருக்குறள் ஒன்றே போதும். உனக்கு அறிவு உண்டாக்க, ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்க; உலக ஞானம் ஏற்பட. அப்படிப்பட்ட குறளைத் தான் நாம் இதுவரை அலட்சியப்படுத்தி வந்திருக்கிறோம். ஒரு தாசில்தார், ஒரு மாஜிஸ்ட்ரேட், ஒரு நீதிபதி, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களுக்குக் கூடத் திருக்குறள் ஒன்றே போதும், தமது வேலையைச் சரியாகச் செய்ய, அவர்களை உத்தியோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பரீட்சை வைக்கும்போது கூடத் திருக்குறளிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். திருக்குறளை நன்கு உணர்ந்திருந்தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும். அவர்கள் உத்தியோகத்திற்கு அவர்கள் படிக்கும் பூகோள சாஸ்திரமோ, வானசாஸ்திரமோ, திரிகணிதமோ, சரித்திரமோ பயன்படுவதில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

ஒரு திருடன் களவாடினான் என்றால் அவன் எந்த நட்சத் திரத்தில் களவாடினான் என்பது சப்-இன்ஸ்பெக்டருக்குத் தெரிய வேண்டியதில்லை. அல்லது இமயமலையின் உயரம் என்னவென்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கோ ஒரு தாசில்தார் வேலைக்கோ ரெவின்யூ இன்ஸ்பெக்டர்  வேலைக்கோ பி.ஏ. பட்டம் எம்.ஏ. பட்டம் தேவையில்லை. குறள் படிப்பே போதுமானது.

பி.ஏ. பட்டம் எம்.ஏ., பட்டம் பெற வேண்டும் என்பதெல்லாம் அந்தத் தகுதியின் காரணமாகச் சகல உத்தியோகங்களையும் தாமே அடையப் பார்ப்பனர் செய்து கொண்ட சூழ்ச்சிதான் என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். பார்ப்பனர் தகுதி திறமை என்று கூறுவதெல்லாம் உருப்போட்டு ஒப்புவிக்கும் திறனைத்தானே ஒழியச் செயலாற்றும் திறனை அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.

அனைவரும் திருக்குறளைப் படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று தந்தை பெரியார் அவர்கள் மாநாட்டு உரை நிகழ்த்தினார்.

பெரியாருடைய சிந்தனைக்கு ஆதாரத்தை சொல்வது போன்று, புரட்சிக்கவிஞர் அவர்கள் வள்ளுவம் என்பது இருக்கிறதே அது மிகப்பெரிய பதவி - பொறுப்பு. சாதாரணமான பொறுப்பல்ல. வள்ளுவர் என்று சொல்லும்பொழுது, மிக ஆழமான கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

வள்ளுவரைப்பற்றி புரட்சிக்கவிஞர்!


வள்ளுவருடைய குறள், அவருடைய பெயர் எப்படிப் பட்டது என்பதை புரட்சிக்கவிஞர் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் கேளுங்கள்:

தமிழர்கள் ஆண்ட நாளில் அரசியல் ஆறு துறையாய் வகுத்து ஆட்சி நடத்தப்பட்டது , அவை, உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு, வரைவு என்பன.

உழவும் தொழில் என்னும் துறையில் அடங்குமேனும், சிறப்புக் கருதி உழவுத் தொழிலைத் தனித்துறையாக வைத்துத் கருத்தூன்றிக் காத்து வந்தார்கள், உழவும் தச்சும் (சிற்பம்) நீங்கிய பிற வேலை அனைத்தும் தொழிற்றுறையில் அடங்கியவை.

எழுத்து, சொல், பொருள் என்பனவும் கோள் நிலை யறிதல், மருத்துவம் முதலியனவும் போர்ப்பயிற்சியும் கல்வி என்ற துறையில் அடங்கும்.

வரைவு என்னும் துறையாவது யாது? - எல்லைப் பிரிவை உறுதி செய்தல், கோட்டை கட்டுதல் முதல் குளம் வெட்டுதல் வரைக்குமுள்ள இடங்களை வரையறுத்தலும் அளவு செய்தலும் முதலியவை.

இந்த ஆறு துறைக்கும் அக்காலத்தில் ஆறு அமைச் சர்களை அமைத்துத் திறம்பட நாட்டைக் காத்து வந்தான் தமிழரசன்!

ஆறு துறையே அன்றிப் போர்த்துறை ஒன்று தனியே. இருந்து வந்ததோ எனில் அவ்வாறில்லை. கல்வி என்னும் துறையில் போர்ப்பயிற்சியும் அடங்கியது என்று முன்னமே சொன்னேன். ஒரு துறைக்கு ஓர் அமைச்சனே அன்றிப் பல அமைச்சரை அமைத்தலும் உண்டு.

இந்த ஆறு துறையின் ஆறு அமைச்சர்களுக்கும் அலுவலகம் ஒன்றே; அது இந்நாளைய செக்ரடேரியேட் போன்றது. அந்த அலுவலகத்தில் கருமத் தலைவன் ஒரு வனிருப்பான். அவன் எல்லாத் துறையிலும் வல்லவன். அவனுடைய அலுவற் பெயர் வள்ளுவன் என்பது..

”வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு

உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும”

என்னும் பிங்கலந்தைச் செய்யுள் இங்குக் கருதத்தக்கது. உள்படு கருமத் தலைமை என்பது வள்ளுவன் என்ற அலுவற் பெயரையே குறித்து நின்றது காண்க.

பின் நாளில் வள்ளுவன் என்ற சொல் சாதியைக் குறிப்பதாகக் கருதும் நிலை உண்டாயிற்று. இப்படிப் பல, அகம்பட்டன் என்ற சொல் அரசனின் அகச் சுற்றம் ஆறில் - மருத்துவப் புலவன் பெயர். இதைப் பண்டிதச் சொல்லாலும் வழங்கி வந்ததுண்டு. இந் நாளில் இழிந்த சாதிக்காரர் என்று எண்ணும்படி  ஆக்கப்பட்டிருக்கிறது.

வள்ளுவன்' என்ற சொல், வண்மையினடியாகப் பிறந்தது. வண்மை என்றது அறிவு வளத்தை. (நம் திரு வள்ளுவர் இயற்பெயர் தேவர் என்பதும், அவரின் அலுவற் பெயரே வள்ளுவர் என்பதும் இங்கு நாம் அறிந்து இன்புறுவோமாக).

அந்நாளில் அரசியல் பொறி என்ன அழகாக, எவ்வ ளவு திட்டவட்டமாக இயங்கி வந்தது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும் இதை விவரிக்க இங்கு இடம் போதவில்லை.

கோனாட்சி, குடியாட்சி, குடிக்கோனாட்சி என்ற அரசியல் முறைகளில் அந்நாளைய ஆட்சியைக் குடிக் கோனாட்சி எனல் வேண்டும். இந்நாள் சில நாடுகள் நல்லதோர் ஆட்சி முறையில் நடந்து வருவன என்று நாம் எண்ணுகின்றோம் இருக்கலாம். அது மட்டுமல்ல, இன்னும் சிறந்த வகையில், ஆட்சி முறை வகுக்கப்படலாம். அவை அனைத்தும் பண்டைய தமிழர் வகுத்த

குடிக்கோனாட்சியில் தான் வந்து முடியும் என்பது மறுக்க முடியாது.

குடிக்கோனாட்சி ஒன்றுதான் சனநாயகம் - குடியாட்சி என்பதெல்லாம். மக்களின் நன்மையை - அவர்களின் முழுதுரிமையை முன்னின்று நடத்த என்றைக்கும் எங்கும் ஓர் ஆள் வேண்டும். மக்களே நேரிலிருந்து தமக்கு வேண்டியவற்றைச் செய்து கொள்வதென்பது முடியாதது.

முடுக்கிவிட்டால், அரசியற் பொறி (எந்திரம்) தன்னி லையில் சுழன்று கொண்டு போகுமே, அதற்கு அரசன் எதற்கு என்று கேட்கலாம். இது அறிவற்ற கேள்வி. பொறி இயக்கு வோனின் அன்புள்ளம், அப்பொறி இயங்க இன்றி யமையாத ஓர் மின்னாற்றல்.

அரசன் தன் காத்தற்றொழிலைச் செவ்வனம் செய் யான் எனில் ஆறு துறையும் நடவா. நாட்டுக்கு ஆகிக் கொண்டுவந்த பயன் ஆகாமலே அளவிற் குன்றிவிடும்.

இவற்றை எல்லாம் வள்ளுவர் நமக்கு ஒரே குறளில் காட்டுகின்றார். பழந்தமிழ் நாட்டின் படப்பிடிப்பை நாம் - அறிந்து கூத்தாட வேண்டும்

என்ன? ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.

கொடுங்கோன்மை அதிகாரத்தில் 10-ம் செய்யுள் அது. காவலன் காவான் எனின் ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர் என்று மொழி மாற்றிப் பொருள் கொள்க.

ஆபயன் என்பதற்குப் பரிமேலழகர் பசுவின் பயன் (பால்) குறையும் என்று பொருள் கொண்டார். அவர் ஆபயன் என்றதை ஆவினது பயன் என ஆறாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டார். அவ்வாறு கொண் டால் ஆப்பயன் என ஒற்று மிக வேண்டும், ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் என்ற சிலப்பதிகாரத்திற் போல!

எனவே, ஆபயன் என்பது வினைத்தொகை நிலைத் தொடர் என்க, காலங்கரந்த பெயரெச்சம் வினைக்குறை என்பது வினைத் தொகை இலக்கணம்.

ஆபயன் என்பது ஆனபயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் என முக்காலத்துக்கும் விரியும். இங்கு ஆனபயன் என்ற இறந்த காலத்துக்கு விரிக்க, ஆபயன் (ஆன்பயன்) என்றால் அரசன் நல்லபடி ஆண்டு வந்த போது ஆனபயன் என்பது பொருள் அவையாவன: பகையரசர் அஞ்சிக் கப்பம் கட்டுதல் வரி வரவு முதலியவை.

இனி, அறுதொழிலோர் என்பது உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு, வரைவு ஆகிய ஆறு தொழிலுக் குரியோர், அவர்தாம் ஆறு அமைச்சர். நூல் மறப்பர் - தம் கொள்கையை விடுவர். நூல் -கொள்கை, மறத்தல்- கைவிடுதல்.

இனிப், பரிமேலழகர் அறுதொழில் என்பது ஆரிய மறையோதுதல், ஒதுவித்தல், வேட்டல் (கொலை வேள்வி முதலியவை), வேட்பித்தல், அறிவு தால், பிச்சைபுகல் ஆகிய ஆறுதொழில் என்றார், பொருந்துமா? ஆரியர், தீயொ ழுக்கம் தமிழர் பால் தலைநீட்டத் தொடங்கக் கண்டருளிய வள்ளுவர் அவற்றை மறுத்துத் தமிழரை தமிழர் நெறியில் நிறுத்த அருளிய திருக்குறளில், ஆரியர் அறுதொழில் இந்நாட்டில் நடவாது ஒழிந்து விடுமே என்றா அழுவார்? எனவே பரிமேலழகர் கொண்ட பொருள் பொய்ப் பொருள் என விடுக்க.

- தென்றல்: மலர் 2: இதழ் 21 (5.11.1955)

ஆகவே, வள்ளுவருடையப் பெயரைப்பற்றி பெரியார் சொன்னார். அதற்கு ஆதாரம் என்ன கண்டுபிடிக்க முடிய வில்லையே என்றார். அது ஒரு ஜாதி என்றாக்கினார்கள்.

- (தொடரும்)

-  விடுதலை நாளேடு, 5.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக